Sunday, 22 October 2023

மகள் - கவிதைத் தொகுப்பு - கவிஞர் கபிலன்

 


#நூல்_விமர்சனம்


மகள்

கபிலன்

கவிதைகள்

தூரிகை வெளியீடு

பக்கங்கள் : 128

விலை : 150


தந்தை மகளுக்கெழுதிய இரங்கற்பா


இருபது வயதுகளில் மகளைப் பறிகொடுக்கும் ஒரு மனிதனால் எழுப்பப்படும் பேரோலம் எப்படிப்பட்டதாக இருக்கும்? அதைச் சொல்ல வாய்த்த மனிதன் இங்கு கவிஞனாகவும் இருப்பது பேரவலம். தொகுப்பில் ஆரம்பத்திலேயே கவிஞர் கபிலன் எழுதிய உரையே கண்ணீரை உகுக்க பாதை தந்துவிடுகிறது. ஒரு பக்கம் தூரிகையின் ஒளிப்படங்களும் மறுபுறம் கவிஞரின் எழுத்துகளும் போட்டி போட்டு துயரைத் தருகிறது. தூரிகை” கவிஞர் தன் மகளுக்குச் சூட்டிய ஓவியப் பெயர். கதறுகிறார் எல்லாப் பக்கங்களிலும். சொல்ல முடிந்த வரிகள் இவ்வளவுதான். சொல்லாத வலி எவ்வளவோ...? 

“இமைகளைத்

துண்டித்துக்கொண்டு 

போவதற்கா

தூரிகை என்று

பெயர் வைத்தேன்...?”

கனக்கிறது மனம்.

பகுத்தறிவுக் கொள்கைகளைப் பேசி, பகுத்தறிவு மேடைகளில் ஏறி அதனை ஒரு பிரச்சாரமாக வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தன்னுடைய வரிகளில் பயன்படுத்திவரும் கவிஞர், மகளுக்கான வரிகளிலும் அதனைப் பதியமிட்டுள்ளார். அன்பு கொள்ளும் மனிதர்களும், உதவும் மனிதர்களும் கடவுள் நிலையை மனித மனங்களில் உண்டுபண்ணுதல் இயற்கை. இங்கு மகள் கடவுளாகிறாள். மகளின் இழப்பால் அன்பைத் தொலைத்தவராகி விடுகிறார். அன்பை இழந்தவராகிவிடுகிறார். வாழ்வின் வெறுமையை அபத்தத்தை தன்னோடு பொருத்திக் கொள்பவராகிறார்.

“பகுத்தறிவாளன்

ஒரு கடவுளைப் 

புதைத்துவிட்டான்”


இயல்பாக குடும்பத்தில் எல்லோரோடும் பேசுபவள், குடும்பத்தில் ஒருத்தி, வளரும் தலைமுறை, இன்றைய காலகட்ட நவீனத்துவம் அனைத்தையும் தன்னோடு பிணைத்துக்கொண்டும் இயங்கிக்கொண்டும் வருபவள், முக்கியமாக தற்கொலை குறித்த எண்ணத்தை மாற்றி ஊடகவெளியில் கருத்திட்டவள் திடீரென தனது அறையில் பிணமாகத் தொங்குகிறாள் என்பதை எப்படி ஏற்கமுடியும்? அந்த அறையை அவளின் அறையாக எப்படிச் சொல்வது? அவளின் வார்த்தைகளே இங்கு மீண்டும்... இப்படி எழுதியவள்தான் இறந்துபோனாள் என்றால் எந்தத் தகப்பன் தாங்குவான்... அவளின் அறிவாண்மையை கவிஞர் குறிப்பிட்டுள்ளமையை ஒப்பிட்டுப் பார்க்கிறேன்... 

“குடும்பத்தோடு

தூங்கியவள்

தனியாக

இரவு முழுக்க

பிணவறையில்”

தற்கொலைக்கு எதிராகப் பதிவிட்டவள் தற்கொலை செய்துகொள்ளும் காரணத்தை என்னவென்று சொல்வது?


பிறக்கும்போது மருத்துவமனையில் குழந்தையை வாங்கும் கைகள், அவளின் பிணவுடலை வாங்க கையெழுத்திட முனையும் கைகள்... உயிர் கதற ஒரு தகப்பனுக்கு இப்படியொரு சாபத்தைத் தந்துசென்றிருக்க வேண்டாம் தான். “எவ்வளவோ நேரங்களில் உனக்காக நான் அவளுடைய அப்பா என்று சொல்லி கையெழுத்திட்டிருக்கிறேன். இப்பொழுது முதன்முதலாக அவளின் உயிரற்ற உடலைப் பெற தகப்பன் என்ற முறையில் கையெழுத்திடுகிறேன்” என்பதைச் சொல்லும்போது கண்முன் காணும் காட்சியில் பொங்கிப் பெருகும் கண்ணீர்...

“கொரியர் இளைஞனிடம்

உனக்காக

கையொப்பமிட்டிருக்கிறேன்

கடைசியில்

உன்னையே

கையொப்பமிட்டுதான்

வாங்கினேன்”


ஒரு வகையில் சொல்வதானால் தொகுப்பின் நினைவுகள் அனைத்தும் தகப்பனின் ஒப்பாரி தான். அவர் மட்டும் கண்ணீர் வடிக்கவில்லை. குழந்தைகளைப் பெற்ற எல்லோருக்குமான வலி இவைகள். அன்பின் இழப்பை உணரத் தலைப்பட்ட மனிதர்களுக்கான வலி. எனக்கென்ன என்பதுபோல, அது உனதுயிர் என்பதுபோல, உன்மீது அன்பு செலுத்தும் எல்லோரையும் போல நினைத்து என்னையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் சென்றுவிட்டாய். எல்லோரும்போல் எல்லாம் மறந்து திரிய அவர்களா நான், நான் உன் தகப்பன், தோழன், எல்லாவற்றிற்கும் மேல்... என்பதை எப்படி வார்த்தைகளாக மாற்ற முடியும்...

"எல்லா 

தூக்க மாத்திரைகளையும்

நீயே

போட்டுக்கொண்டால்

நான் எப்படி

உறங்குவது?"

என் அன்பைத் துயரத்தில் தள்ளிவிட்டு நீ மட்டும் உறங்குகிறாயே... என் அன்பான உன்னைத் தொலைத்து நான் எப்படி வாழ்வேன்...? எனக்கும் கொடு / கொடுத்திருக்க வேண்டாமா அந்தத் தூக்க மாத்திரைகளை? எனத் தகப்பன் தவிப்பது சாதாரணமா என்ன? உயிர் போகும் ரணம்.


இல்லாமல் போனாய் என்று சொல்ல என்னால் இயலாது. ஆனாலும் அருகாமை என்றொன்று உள்ளதல்லவா? ஒரு பெண்ணைத் தத்தெடுக்க வேண்டும். உன்னைப்போல் அவளைப் பார்த்துக்கொள்ள வேண்டும். உனக்கான அன்பு முழுமையையும் அவளிடம் கைமாற்ற வேண்டும். யாரிடம் அளிப்பது? யார் அந்த அளப்பரிய அன்பிற்குப் பொருத்தம்? யார் தாங்கிக்கொள்ளும் தன்மையவள்? என்று யோசிக்கும்போது யாரைத் தத்தெடுப்பது? என்ற கேள்வி முன் நிற்கிறது. கவியீர மனதின் பார்வை இப்படி எழுத வைக்கிறது... 

"எல்லாப்

பெண் குழந்தையிலும்

உன் முகம்

யாரைத்

தத்தெடுப்பது"


வாழும்போதே சாகும் சாபத்தை அளித்துவிட்டுச் சென்ற மகளுக்கு கேட்கும் திறனிருந்தால் இந்த எளிய சொற்களின் வலி புரியும்.

"செத்துப் பிழைக்க

நான் ஒன்றும் 

ஏசு அல்ல"


இழப்பின் கண்ணீருக்குப் பொருள் சொல்ல அவசியமில்லை. எல்லாம் வாழ்ந்த வாழ்க்கை. எல்லாம் வாழ நினைத்த வாழ்க்கை. இரண்டின் சாரெடுத்து மகளாக நம் கைகளில் தந்திருக்கிறார் கவிஞர். மருத்துவ ஆய்வு முடித்து கைகளில் அளிக்கப்படும் மகளின் உடலைப் பெறும் மனநிலையில் /நூலை வாசித்து முடிக்கும்போது/ கைகளில் உள்ள இந்நூல் இருப்பதாக உயிருணர்கிறது.   

“அவளை 

மின்தகனத்திற்கு அனுப்பவில்லை

ஒரு 

பட்டாம்பூச்சி

தீக்குளிப்பதை

கவிஞனால்

தாங்கமுடியாது”


பூப்போல பார்த்து வளர்த்த குழந்தையை சிறு எறும்பு தீண்டினாலும் பெற்றமனம் பதறிவிடும்.

காயங்கள் ஆறினாலும் தழும்புகள் நிலைத்திடுவதுபோல சில இழப்புகள் எவ்வளவு கண்ணீரைச் சிந்தினாலும் மாறாது. அது நிலைத்திருக்கும். காரணம் ஒன்றே ஒன்றுதான். எல்லா அன்பையும் கொட்டித் தீர்க்க ஓர் உறவு வாய்த்திருக்கும். அவ்வுயிரின் பிரிவு / இழப்பு தாங்கவியலாத் துயர் தரும். 

“கண்ணீரின் வெளிச்சம் 

வீடு முழுக்க

நிரம்பியிருக்க

இருந்தாலும் இருக்கிறது

இருட்டு”


மீண்டு வாருங்கள் தோழர்.

யாழ் தண்விகா



Monday, 2 October 2023

சரக்கொன்றை நிழற்சாலை


 சரக்கொன்றை நிழற்சாலை

ஹைக்கூ கவிதைத் தொகுப்பு

ஷாஜிலா பர்வீன் யாகூப்

Mohamad Sarjila Yakoop 

படைப்பு பதிப்பகம்

விலை ரூ: 100க்

பக்கங்கள் : 112


ஹைக்கூ ஒளியில் வாழ்வின் நிழல்...


மூன்று வரிகளில் எடுத்துக்கொண்ட கருவை கவிதையாக்கும் வித்தகம் ஹைக்கூ... மிஷ்கின் மொழிபெயர்த்த ஹைக்கூ ஒன்று. "நத்தை போன

பாதையில்

வெயிலடித்தது".

மிக இயல்பாக வாசித்துக் கடக்கும் ஒரு கவிதை. ஆனால் உள்ளே பொதிந்திருக்கும் வரலாற்றைத் தோண்டிப் பார்க்க மெனக்கெட வைக்கும் சூட்சுமம் கவிதையில் இருக்கிறது. அவ்வாறு வாசிக்க வைப்பதுதான் ஹைக்கூவின் சாமர்த்தியம் மற்றும் சாகசம். தோழர் ஷர்ஜிலா அவர்களின் ஹைக்கூக்கள் பல அவ்வாறான தேடலை உண்டுபண்ணும் கவிதைகள். வாசிக்க வாசிக்க இயற்கையின் உள்ளார்ந்த அதிசயங்களில் நம்மை மூழ்கடிக்கிறார் தோழர்.


இயற்கையை அழித்தல் என்பது வெறும் அழித்தல் என்பதோடு முடிந்து விடுகிறதா... அது சூழலை அழித்தல், உயிர்களை அழித்தல், உயிர்களுக்கிடையேயான சங்கிலியை உடைத்தல். அதனை மனிதனுக்குக் கடத்தும் வரிகள் இவை.

தன்கூட்டைப் பின்தொடரும் பறவை

ஜேசிபியில் செல்கிறது

வேருடன் மரம்.

ஏனோ நம் குழந்தையை யாரோ பறித்துப் போக நாம் பின்னால் ஓடுவது போலான வலி.


இயற்கைப் பேரழிவுகள் பெரும்பாலானவை மனிதன் தனக்குத்தானே உண்டாக்கிக் கொண்டவையோ என்றெண்ணும் வண்ணம் அவ்வப்போது வெள்ளம், புயல் உள்ளிட்ட பாதிப்புகளைக் காணும்போது ஏற்படும். சென்னையில் முழுதும் நிடம்பியபின் நள்ளிரவில் திறக்கப்பட்ட நீர்த்தேக்கம் உண்டாக்கிய பாதிப்புகள் சொல்லி மாளாது. அலையாத்திக்காடுகளை கடற்கரை ஓரங்களில் அமைக்காததால் ஊருக்குள் சுனாமி பாய்ந்து கொத்துக்கொத்தாக கடலுக்குள் இழுத்துச் சென்ற உயிர்கள் பல லட்சங்கள். இது போன்ற சம்பவங்கள் நடந்து முடிந்தபின் காணும் காட்சிகள் போர் முடிவுற்றபிறகு காணும் ஓலங்கள் போலவிருக்கும். அது போன்ற ஒரு காட்சி.

வெள்ளம் வடிந்த வீதி

வீட்டுக் கூரையின் மேல்

தரைதட்டி நிற்கும் படகு.


இனி எப்போது பெங்குவின்களைப் பார்த்தாலும் இக்கவிதையே கண்முன் விரியும். ஆச்சர்யப்பட வைத்த ஒப்பீடு.

கருப்பு மேலங்கி

கழட்டாத வழக்கறிஞர்களா

கடற்கரை பெங்குவின்கள்...!


பால்யங்களைக் கண்முன் நிறுத்தும் பல ஹைக்கூக்கள் தொகுப்பெங்கும். அதற்குள் நம்மைப் புகுத்தி விளையாட வைத்த ஒரு ஹைக்கூ...

மணல்வீடு கட்டும் அண்ணனுக்கு

காத்திருக்கும்

பாப்பாவின் சிரட்டைமண் இட்டிலி... 

சிறுவயது அன்பின் நேர்த்தி எவ்வளவு சுவாரஸ்யமானது... அருமை.


குழந்தைகள் பள்ளிக்குச் சென்றபின் வீடு அனுபவிக்கும் கொடுமை என்பது பேரவலம் தான். அப்படி வீடு என்ன கொடுமை அனுபவித்து விடப் போகிறது... தோழர் சொல்கிறார்.

பள்ளி சென்ற குழந்தைகள்

தனித்துக் கேட்கும்

நகரும் கடிகார முட்கள்.

வீடு யாருக்கு? கடிகார ஒலிகள் யாருக்கு? என்ற கேள்விகள் உதிக்கும் அதே நேரத்தில் பள்ளியிலிருந்து குழந்தைகள் திரும்பும் நேரத்தைக் கணக்கிட்டு காத்திருக்கிறதோ கடிகாரம் என ஆறுதல் கொள்கிறது மனம்.


நத்தையாகிறேன்

நிழலெல்லாம் பூக்களுடன்

சரக்கொன்றை நிழற்சாலை...

பூ வீதி எதுவென்றாலும் அது உண்டாக்கும் சலனம் மனித மனத்தை ஒரு பாடுபடுத்த் வேண்டும். உதிர்ந்த பூ என்று அவ்வளவு வேகமாக மிதித்து விடுகிறதா நமது காலடிகள்? அவற்றை மிதிப்பதால் என்ன பாதகம் இந்த மண்ணுக்கு நேர்ந்துவிடப் போகிறது... ஆயினும் நாம் யோசிப்பதால் தான் மனிதம் ஒவ்வொரு உயிருக்குள்ளும் தன் வேர்களை ஆழப் பாய்ச்சுகிறது. அதுவே இந்த பூமி இன்னும் வாழ காரணமாக இருக்கிறது. உதிர்ந்துகிடக்கும் சரக்கொன்றைப் பூக்கள்... கடக்க நத்தையாகும் மனிதம்... நிழலெல்லாம் பூக்கள்... நத்தை சுரக்கும் திரவம்... இதுபோன்ற காரணிகளுக்குள் ஒளிந்து கிடக்கும் ஏதோவொன்று உண்டாக்கும் கிளர்ச்சி கவிதையின் சிறப்பை மிளிரச் செய்கிறது. 


பதிப்பாளர் Mohamed Ali Jinna தோழரின் பதிப்புரை, Surulipatti Si Vaji அண்ணன் அவர்களின் அணிந்துரை, இந்து தமிழ் திசை மு.முருகேஷ் தோழரின் தொகுப்பு குறித்த ஹைக்கூப் பார்வை ஆரணி இரா. தயாளன் தோழர் கூறும் தறி வீட்டுப் பூனைகள், ஷர்ஜிலா தோழரின் என்னுரை இவையே ஒரு ஹைக்கூ வகுப்பைப் பார்த்த பெரும் திருப்தி அளிக்கிறது.


நிறைய கவிதைகள். நிறைவான பார்வை. 


வாசிப்போம், ஹைக்கூ மிளிர.


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️