Thursday, 12 March 2026

நாயகன் அம்பேத்கர் #அஜயன் பாலா


 நாயகன் அம்பேத்கர்

அஜயன் பாலா

56 பக்கங்கள்

20 ரூபாய்

நன்செய் பிரசுரம்


புரட்சியாளர் என்ற பட்டத்திற்குப் பொருத்தமான தலைவர் அம்பேத்கர் என்பதற்கு ஆயிரம் காரணங்களைக் கூறலாம். இந்நூல் மிகக் குறைந்த பக்கங்களில் அம்பேத்கரின் வரலாற்றை அடைக்க முற்பட்டிருக்கிறது என்றாலும் தொடக்கநிலை வாசிப்பாளர்களுக்கு மிகச் சிறப்பான ஒரு நூலாகவே அடையாளம் காணும் வகையில் உள்ளது. படிக்கும்போதும் பணிபுரியும் போதும் தான் அனுபவித்த தீண்டாமைக் கொடுமைகளை தன் மக்களும் அனுபவிக்கக் கூடாது என்று கடும் உழைப்பால் போராடி அவர்களை மீட்ட மாமனிதர் அம்பேத்கர். வாசிப்பில் சுணக்கம் ஏற்படாதவாறு எழுத்தின் லாவகம் முழுக்க வாசிக்க வைத்து விடுகிறது. மெல்ல மெல்ல ஒரு திரைப்படம் உச்சம் செல்வதுபோல் அம்பேத்கருக்கு நேர் எதிரில் கொள்கையால் செயல்பாட்டால் நிறுத்தப்பட்டிருக்கும் ஒருவராக காந்தியை முன்வைத்து கடைசி அத்தியாயங்கள் நகர்வது சுவாரஸ்யம். எழுத்தாளர் சொல்வது போல அம்பேத்கர், காந்தியால் பரிதாபகரமாக ஆக்கப்பட்டாலும், காந்தியின் மறுபக்கத்தை பூசி மெழுகாமல் நேரடியாக எழுதியுள்ளது சிறப்பு. நாயகன் அம்பேத்கர் என்பதற்கான அனைத்து கதாநாயக தன்மை நிறைந்தவராக அம்பேத்கரை சுருக்கமாகக் கூற முற்பட்டிருந்தாலும் அவர் பொதுத் தலைவராக அறியப்படுவதற்கான எந்தக் கருத்தும் காட்சியும் நூலில் இல்லை என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா அல்லது அம்பேத்கரை வாசிக்கும் நபர்களுக்கு இது போதும் என்ற மனநிலையை வைத்துக்கொண்டு எழுத்தாளர் எழுதினாரா என்ற கேள்வி எழாமல் இல்லை. அம்பேத்கர் பெயர்க்காரணம், அம்பேத்கர் தன்னுடைய சகோதரன், அக்காள் மகனுடன் தந்தையைப் பார்க்க வண்டியில் செல்லும்போது அவர்கள் மகர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்று அறிந்தவுடன் வண்டிக்காரர் வண்டியைக் கவிழ்த்து விட்டார் என்ற செய்திகள் இதற்கு முன்னர் வாசித்த நூல்களுக்கு (கழுவப்படும் பெயரழுக்கு / விசாவுக்காகக் காத்திருக்கிறேன்) முரணாக உள்ளதையும் மறுக்க முடியாது. வாசிக்க வேண்டிய நூல்.


யாழ் தண்விகா 


❣️

பொன்னி #அகரன்


 பொன்னி

(நீள் கதைகள் இரண்டு)

அகரன் 

பன்முக மேடை பதிப்பகம்

92 பக்கங்கள்

120 ரூபாய்


கிராமத்துச் செம்மண் வீட்டு வாசமும் சில குழந்தைகளும்...


குட்டிப்பிள்ளையார் முதல் கதை. வளவன், சரவணன் இருவரும் நண்பர்கள். கிராமத்திற்கான அத்தனை விளையாட்டுகளை, சேட்டைகளைச் செய்யும் சிறுவர்கள். அம்மா வைக்கும் புளிச்சோறு தின்ன செய்யும் களவாணித்தனம், மீன் சுட்டுத் தின்னுதல் என எல்லாம் அடடா. இவர்கள் ஊருக்கு வருகை தரும் பார்வதி அத்தை மகள் பரிமளா, வளவனுக்குப் பிடித்தவள். அவளோடு கூட்டணி போட்டுக்கொண்டு திருவிழா நாட்களைக் கடக்கிறார்கள். நம்மூரில் சிறு வயதில் இளம் பிராயத்தில் வாழ்ந்த நினைவுகளை மீட்கொணர்வது போல திருவிழாக் காட்சிகளைக் கூறுவதில் அகரன் சிறக்கிறார். வளவன், சரவணன் இருவரும் குட்டிப் பிள்ளையாருக்கு ஒரு கோயில் கட்டியிருக்கிறார்கள். அங்கு பரிமளாவை அழைத்துச் செல்கிறார்கள். அங்கு அவள் வேண்டியது என்ன? அதை வளவன் பெற்றுத் தந்தானா? என்பதை பரிமளா பெரிய மனுஷி ஆகும் காலத்தின் வழி கவிதை போலச் சொல்லி நிறைவாகிறது கதை. அறியாத வயசு, புரியாத மனசு பாடலின் சிறிசுகள் போல பச்சக் என மனதில் பதிகிறார்கள் வளவனும் பரிமளாவும். காரணம் கதை சொல்லும் பாங்கும் கிராமச் சொல்லாடலும். 


பொன்னி, இரண்டாவது கதை. பவித்ரா வளர்க்கும் கோழியின் பெயர் தான் பொன்னி. பொன்னி அரிசி தின்று வளர்பவள். பவித்ராவின் செல்லம். தாத்தா வீட்டில் வளரும் பவித்ரா வீட்டிற்கு அவளின் பெரியப்பா குடும்பம் வருகிறது. அப்போது கோழி அடித்து குழம்பு வைக்கலாம் என்ற யோசனை முன்வரும்போது பவித்ராவுக்காக அந்த யோசனையைப் புறந்தள்ளி கடன் வாங்கி ஆட்டுக்கறி வாங்கிச் சமைக்க ஏற்பாடு செய்கிறார் முத்தையன் தாத்தா. பவித்ராவின் தாத்தா வீட்டுக்கு வந்த பெரியப்பா வீட்டுக்கு அவள் செல்லும் சமயம் எதிர்பாராத விதமாக முத்தையன் தாத்தா இறந்து விடுகிறார். அதன்பின்னர் அந்த பொன்னி என்னானது என்பது கதை. நம்மால் யூகிக்க முடியும் என்றாலும் பவித்ராவின் கேள்விக்கென்ன பதில் நம்மிடம் இருக்கிறது? முதல் கதை போலவே இதுவும் கிராமத்தை கண்முன் கொண்டுவரும் கதை. குழந்தைகள், சக உயிர்களிடம் எவ்வளவு அன்பு செலுத்துகிறார்கள் என்பதெல்லாம் காண இன்று நம்முன் என்ன இருக்கிறது? கோழி என்றால் பிராய்லர் கோழிகள் கண்ணுக்குத் தெரிய நாட்டுக்கோழிகள் கண்கள் பார்க்கும் தூரம் வரை தெரியாத காலமாக மாறிவிட்டது நவீன காலம். வாசிக்க வாசிக்க கதையும் காட்சியும் ஒருசேர கண்முன் நாம் காண்பது போல அமைவது தோழர் அகரனின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி. கிராமத்து மண்ணின் மொழியையும், மக்களையும் காண்பது தொலைத்த காலங்களை மீட்டுணர்வது போல இருக்கிறது.


தேனி மாவட்டம் தனது படைப்பாளர்கள் பட்டியலில் புதிதாக ஒரு பெயரைச் சேர்த்துக்கொள்ளும் என்பதோடு அவர் நட்சத்திரப் படைப்பாளராக வரும் வல்லமை உடையவராக அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. தொடர்ந்து எழுதுங்கள். இன்னும் பல தளங்கள், உயரம் தொட இப்புத்தகம் தொடக்கப்புள்ளியாக இருக்கட்டும். 


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

வித்தியாசம் தான் அழகு #ச.மாடசாமி


 நூல் விமர்சனம் 


வித்தியாசம்தான் அழகு

(குழந்தைகளுக்கான கதைகளும் பெரியவர்களுக்கான நீதிகளும்) 

ச.மாடசாமி 

பாரதி புத்தகாலயம் 

112 பக்கங்கள்

120 ரூபாய்


குழந்தைகள் உலகம் வித்தியாசமானது. அங்கு அவர்கள் தான் எல்லாம். வருத்தம் கோபம் சந்தோஷம் என்று அனைத்து விதமான கலவையான உணர்வுகள் பெருகிக் கிடக்கும். குழந்தைகளிடம் காணப்படும் உணர்வுகள் அவர்களாக நாம் மாறினால் ஒழிய அறிய முடியாது. இந்த புத்தகம் குழந்தைகள் படிப்பதற்கும் பயன்படும். பெரியவர்களுக்கு நீதியை போதிக்கவும் பயன்படும். 20 தலைப்புகளின் கீழ் தோழர் ச.மாடசாமி அவர்கள் கதைகளை படைத்துள்ளார். இந்த கதைகளை படிக்கும் பொழுது குழந்தைகள் உலகம் எவ்வளவு பரந்துபட்டு இருக்கிறது என்பதை அறிய முடியும். இந்த உலகம் எங்கும் வியாபித்து கிடக்கிறது என்ற எண்ணம் நாம் அறிய முடியும். எல்லா உலகத்திலும் குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். பெரியவர்கள் தான் வளர்ந்து விட்ட காரணத்திற்காக தன்நிலை மாறி தனக்கான அறிவோடு வளரத் தொடங்கி விடுகிறார்கள். அந்த அறிவுக்கு ஏற்ற சந்தோசம், வெறுப்பு, குரோதம் முதலானவை தன்னுடைய அறிவு நிலையில் இருந்து வளரத் தொடங்கி விடுகிறது. அறநெறி ஒன்று, அது தொடர்பான கதை ஒன்று என்று இந்த நூலின் முழுவதும் நம் கைபிடித்து அழைத்துச் செல்கிறார் தோழர் அவர்கள். 


மிகச் சமீபமாக இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் நடந்தது. அந்த போரின்போது மழலைகளின் கருத்துக்கள் எங்கும் பகிரப்பட்டு வந்தது. அதுபோன்ற பேரழிவு சம்பந்தமான கதையும் உண்டு. ஆனால் அந்தக் கதையானது மழலைகள் புரிந்து கொள்ளும் அளவில் உள்ளது சிறப்பம்சமாகும். காலில் மிதிபடும் பட்டாம்பூச்சிகள், நஸ்ரின் படித்த ரகசியப் பள்ளி போன்ற கதைகள் போருக்கு எதிரான கதைகளாக இருக்கிறது. மேலும் அதன் மூலம் பெரியவர்களும் உணர வேண்டிய அறநெறி ஒன்றும் உள்ளது. 


ஒரு கால் ஒரு கதாநாயகன் கதையின் மூலம் முயற்சி என்பது எவ்வளவு முக்கியம் என்பது கதையில் கூறப்பட்டுள்ளது. பரிவு கோரல் என்பதை மறுத்து அதிலிருந்து விடுபட்டு முயற்சி என்பதன் மூலம் இந்த உலகில் தானும் வாழ்வதற்கு பிறந்தவன் என்பதை அழகாக கூறுகிறார்.


 

கொரோனா காலகட்டத்தில் உலகமே ஸ்தம்பித்துப் போன நிலையில் பள்ளியின் நிலை பற்றி சொல்லவா வேண்டும்? இதுபோல் வேறு ஒரு சூழல். கல்வி என்பது இல்லாத சூழலில் கழுதைகளை ஓட்டிக்கொண்டு கையில் கிடைக்கக்கூடிய ஒரு 50 நூல்களைக் கொண்டு அந்தப் பகுதிகளில் பயணம் செய்கிறார். ஒரு ஆசிரியர் மிகவும் குறைவான சம்பளம் இருந்த போதும் அங்கு செல்கிறார். அந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு கதைகளை சொல்லித் தருகிறார். மாணவர்களை படிக்கச் சொல்கிறார். அதன் பின் கல்வி கற்றுத் தருகிறார். ஒருநாள் யானை மறுநாள் சிங்கம் நரி போன்ற கதைகளை எல்லாம் சொல்கிறார். ஒரு சிறுமி கேட்கிறாள், கழுதையைப் பற்றி ஒரு கதை சொல்லுங்கள் என்று. யானை குதிரை நரி போன்ற கதையை நான் கூறினேன் நீ எழுத வேண்டியது தானே கழுதைகளைப் பற்றி. உனக்கும் கதை எழுதத் தெரியும் தானே என்று கூற அவளும் கதை எழுதுகிறாள். இப்பொழுது அந்த கதை பலரும் படிக்க கூடிய அளவிற்கு ஆசிரியரிடம் சென்று சேருகிறது. அந்தக் கதை தான்

கழுதைகள் கொண்ட வந்த கதைகள்.


ஆட்டிசம் வந்த குழந்தை எவ்வாறு கற்றலில் மேம்பாடு அடைகிறது என்பதனை ஒரு கதையில் கூறுகிறார். ஹிரோஷிமா நாகசாகி குறித்த கதை ஒன்று உள்ளது. குழந்தைகளுக்கு பிடித்தமான விலங்குகள் பற்றிய கதைகள் உண்டு. இப்படி எங்கெங்கோ உள்ள கதைகளை நாம் படிக்கும் வண்ணம் நூலில் கொடுத்துள்ளார் தோழர் அவர்கள். வித்தியாசம்தான் அழகு. வித்தியாசம்தான் தோழர் அவர்கள் கதைகளும்.


வாசியுங்கள் அனைவரும்.


யாழ் தண்விகா

அய்! உருகாத மாம்பழ ஐஸ்கிரீம்


 நூல் விமர்சனம்


அய்! உருகாத மாம்பழ ஐஸ்கிரீம்!

ராஜிலா ரிஜ்வான்  

பாரதி புத்தகாலயம் வெளியீடு 

80 பக்கங்கள் 

80 ரூபாய்


குழந்தைகளின் உலகத்திற்குள் போய்விட்டோம் என்றால் நேரம் காலம் தெரியாது. அங்கு அவர்கள் ஆடலாம், பாடலாம், உட்கார்ந்து இருக்கலாம், விளையாடலாம், தூங்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். தோழர் ராஜிலா ரிஜ்வானின் படைப்புலகத்திற்குள் குழந்தைகள் எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருக்கின்றனர். இந்த புத்தகத்தில் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு. ஆம், ஒவ்வொரு கதைகளிலும் பாடல் வருகிறது. அந்த பாடலும் நடனமாடி, மகிழ்ந்து கொண்டாடும் பாடல்கள்.


சிறுசேமிப்பிற்கு என்று ஒரு கதை, காய்கறி தின்னாமல் ஓரமாக எடுத்து வைத்துவிட்டு சாப்பிடும் குழந்தைகளுக்கான ஒரு கதை. கடலுக்குள் உள்ள உயிரினங்கள் என்னென்ன என்று அறிய ஒரு கதை, பள்ளிக்கூடத்தில் பாடம் மட்டுமே படிக்கும் குழந்தைகள் பாடல் கதை என்று எதுவும் தெரியாமல் வேதனையான மனநிலையில் வாழும் குழந்தைகளின் கதை. ஒவ்வொரு கதைகளும் அட்டகாசமாக அமைந்திருக்கின்றன. கிரீடம் சூடிய அழகி, ட்டொயான் டொஸ்க் வனிதா, அய்!உருகாத மாம்பழ ஐஸ்கிரீம், நூலகம் சென்ற பட்டாம்பூச்சி, டம் டம் டம் பேய் வருது, மியாமியும் பவ்வியும் என்பன போன்ற கதைகளின் தலைப்பும் நம்மை உள்ளுக்குள் இழுத்து விடும் வண்ணம் அமைந்திருக்கின்றன. கரு கரு கரு கரு கட்டெறும்பு, டிங்கர டப்பா டிங்கர டப்பா டிங்கர டப்பா டோய், ஏலேலோ ஐலசா ஏலேலோ ஏலேலோ ஐலசா ஏலேலோ என்பவையெல்லாம் பாடலின் துவக்க வரிகள். இன்னும் பாடல்கள் இருக்கின்றன. புத்தகத்தை வாங்கிப் பாருங்கள். குழந்தையாக மாறி, குழந்தையாக கதை கேட்டு, குழந்தையாக பாடல் பாடி, குழந்தையாக நடனம் ஆட ஒரு புத்தகம். 


வாழ்த்துக்கள் தோழர் 

ராஜிலா ரிஜ்வான்.


யாழ் தண்விகா 


❤️

Sunday, 22 February 2026

அலைவரிசை #ம. காமுத்துரை

 

#அலைவரிசை நாவல்

அகரம் வெளியீடு, தஞ்சாவூர்.


Kamuthurai MA


MA Kamuthurai


இரு தலைமுறைகளின் வாழ்க்கையை கிராமத்துப் பின்னணியில், தான் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய பகுதிகளின் இயல்பு மாறாத வண்ணம், அம்மக்களின் மொழி, கலாச்சாரம் இதனை கிஞ்சித்தும் மாறுபட்ட வண்ணம் கூறிடாது, வழக்கமான தன்னுடைய பாணியில் அலைவரிசை நாவலை வழங்கியுள்ளார் காமுத்துரை தோழர் அவர்கள். 


மொத்தம் 8 பகுதிகளாக நாவல். ஒவ்வொன்றுக்கும் இடையில் வருடங்களின் நீளம் கால இடைவெளியாக இருக்கிறது. 


ஒரு பெண் குழந்தை பிறப்பில் நாவலின் தொடக்கம். சிறுவயதில் அந்த குழந்தையை கொஞ்சி மகிழும் அந்த சந்தோசம் குழந்தையை பள்ளியில் சேர்த்த சில நாட்களில் எவ்வாறு மாறிப்போகிறது... பெண் குழந்தைகளின் மேல் அக்கறை எடுத்துக் கொள்வதை போல பாவிக்கும் அந்த கிராமத்து மனநிலையானது அவர்கள் அறிந்தும் அறியாமலும் அடிமைத்தனத்தை பெண்களின் மேல் திணிப்பதை அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளார் நாவலாசிரியர். பெண் குழந்தைகள் பள்ளிப்படிப்பு என்பதை வண்ணாங்கணக்கு எழுதும் அளவிற்கு தெரிந்தால் போதும் என்று சொல்லும் அம்மாச்சி மூலமாக காலம் காலமாக இருந்து வரும் பெண்ணடிமைத்தனம் எவ்வாறு வேரூன்றியுள்ளது என்பதைக் காண ஓர் இடம். அதே பெண் குழந்தை தன் வயதொத்த சிறுவர்களுடன் விளையாட ஆசைப்படுகிறாள். ஆனால் அந்த ஆசையையும் ஆண் பெண் பாகுபாட்டை காண்பித்து ஒரு பெண் எப்படி ஆண்களுடன் சேர்ந்து விளையாடலாம் என அவளை அடித்து வீட்டிற்குள் இழுத்துச்செல்லும் பெற்ற தகப்பனின் எண்ணத்தின் மூலமாக வெளிக்காட்டி இருக்கிறார். ஆக ஆணும் பெண்ணும் பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை வரையறுத்து அதற்குள்தான் அவர்களின் வாழ்க்கை என விரும்புவதை கிராமத்துச் சூழலில் இருந்து காட்டுகிறது நாவல். 


14 வயதில் கதை நாயகிக்கு திருமணம் முடிகிறது. மிகக்குறுகிய காலத்திலேயே ராணுவத்திற்கு சென்ற அவன் இறக்கிறான். அப்பொழுது அவள் கர்ப்பமாக இருக்கிறாள் அவளுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. 16வது வயதில் மறுமணம் நடக்கிறது. மறுமணம் என்பது அவளுடைய வாழ்வில் வெளிச்சத்தை பாய்ச்சுவதற்கு பதிலாக வலியை கொடுக்கிறது. முதல் கணவனுக்கு குழந்தை பெற்று தந்தாலும் இரண்டாவது கணவனால் இவளுக்கு குழந்தை உண்டாகவில்லை. ஆனால் அவன் இவள் மேல் குறை இருப்பதாக கூறி இவளுடைய தங்கையையும் மணமுடித்துக் கொடுக்க மீண்டும் மீண்டும் தூண்டுகிறான். ஆனால் அவள் மறுக்கிறாள். 


அந்த வலியிலிருந்து மீள அவ்வப்போது தன்னுடைய தாய் வீட்டிற்கு வருகிறாள். அவள் மறு மணம் முடித்ததால் மற்ற மூன்று தங்கைகளுக்கும் திருமணம் நடக்காமல் தள்ளிப் போவதாக கூறுகிறாள் தாய். ஒருபுறம் கணவனின் கொடுமை. மறுபுறம் தாய் இப்படி கூறியதால் உண்டான வலி. இரண்டிலிருந்தும் அவள் எப்படி மீள்கிறாள்... முடிவு திரைப்படத்தில் ஒரு பாடலில் பெரு மாற்றம் உண்டாவது போல, கதையிலிருந்து ஒரு பெருத்த இடைவெளியை உண்டாக்குவது போல வலியத் திணிக்கப்பட்டது போல இருக்கிறது. ஒரு பெண்ணின் வளர்ச்சி இப்படியாகவும் இருக்கலாம், அவள் அடிமைப்படுத்தும் ஆண்களின் சிந்தனையை பொடிப்பொடியாக சிதைக்க வல்லவள் என்பதாக நாவலின் அணிந்துரையில் இப்போக்கை எழுத்தாளர் போப்பு அவர்கள் பாராட்டி இருக்கிறார். 


தோழர் காமுத்துரை அவர்கள் ஒரு வயதான பாட்டியை முதன்மைப்படுத்தி எழுதிய கோட்டை வீடு நாவலின் இயல்புப்போக்கு இந்நாவலில் இல்லையோ என நினைக்க வைக்கிறது. ஆனாலும் நான் பார்த்த இடங்கள், அவற்றில் நான் பார்க்காத மனிதர்களின் வாழ்வை, எளிய மக்களின் வாழ்வியலை தனக்கேயுரிய எள்ளல், வலி, அன்பு, ஆணாதிக்க சிந்தனை இவற்றை உறவுகளோடு தொடர்புபடுத்தி மண்ணின் மணம் மாறாமல் காட்சிப்படுத்திய விதத்தில் நாவலில் எப்போதும் தான் கைதேர்ந்தவர் என நிரூபித்துள்ளார் தோழர் காமுத்துரை. 


பேரன்பும் வாழ்த்துகளும் தோழர்...


யாழ் தண்விகா

Saturday, 21 February 2026

நேச அலைகள் #மொசைக் குமார்


 நேச அலைகள் 

சிறுகதைத்தொகுப்பு 

ஆசிரியர் மொசைக்குமார்

பாரதி புத்தகாலயம் வெளியீடு 

விலை ரூபாய் 150


தொகுப்பில் மொத்தம் 25 சிறுகதைகள். ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு நிகழ்வை பேசுகிறது.


சிறு கதைக்காக மெனக்கெடல் என்பது அவசியமில்லை என்பது போன்ற ஒரு தோற்றத்தை வாசித்தவுடன் ஒவ்வொரு கதையும் ஏற்படுத்திவிடுகிறது. ஆனால் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு கதையை கொண்டிருக்கிறது. ஆனால் அதனை நாம் பதிவாக மாற்றாமல் அல்லது அதனை ஒரு விஷயமாக கருதாமல் கடந்து வந்துவிடுவதால் அந்த நிகழ்வு குறித்து பிறருக்கு நம் பகிர்தல் சென்று சேராமல் போய்விடுகிறது. தொகுப்பில் ஒவ்வொரு கதையும் இட்டுக்கட்டி கூறாமல் தான் சந்தித்த ஒவ்வொரு நிகழ்வையும் கதை ஆக்கியிருக்கிறார் மொசைக்குமார். 


பிறநாட்டு கதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள், புனைவுக் கதைகள் என நம்முடைய அறிவுத் தளத்தை விரிவுபடுத்திக் கொண்டே செல்லக்கூடிய சூழலில் நேச அலைகள் நமக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் கதையை, நாம் வாழவேண்டிய கதையை அறிய ஒரு வாய்ப்பு அளித்து இருக்கிறது என்றே கூறலாம்.


கட்டுமான தொழில் செய்து வரும் மொசைக்குமார் அவர்கள் தன் பணி சார்ந்த பல கதைகளை இத்தொகுப்பில் கூறியுள்ளார். இவர் கதை கூறும் பாணி கொஞ்சம் வித்தியாசமானது. ஒவ்வொரு கதையும் ஒரு நிகழ்வை பேசத் தொடங்குகிறது. பின்னர் அந்த நிகழ்வின் பின்னணியில் உள்ள அரசியலைப் பேசி வளர்கிறது. தொடர்ந்து முடிவாக கதையின் ஆரம்பத்தில் கூறிய நிகழ்வின் தொடர்ச்சியைக்கூறி கதை முற்றுப்பெறுகிறது.


உதாரணமாக மணியாசுக்கட்டை என்ற கதை. இக்கதையில் சிறுவன் பள்ளிக்குச் செல்லும் சிறுவன் அடிக்கடி பென்சில் ரப்பர் இவற்றை தொலைத்து விடுகிறான். இவன் இப்படி செய்வான் என்பதை அறிந்த தந்தை மொத்தமாக பென்சில்களை, ரப்பர்களையும் வாங்கி வைத்திருக்கிறார். ஒவ்வொரு முறை மகன் தொலைத்த பொழுதும் அவனைத் திட்டிக் கொண்டே தான் வாங்கி வைத்திருக்கும் பென்சிலை, ரப்பரை அவனுக்கு கொடுக்கிறார். வீட்டில் உள்ள அம்மா தன் பங்குக்கு அவனை திட்டுகிறார். இருந்தாலும் இந்தப் பழக்கம் நீடிக்க கூடாது என்பதற்காக தந்தை இனிமேல் நீ பென்சிலை தொலைத்தால் திரும்ப நான் வாங்கித் தர மாட்டேன். இதுதான் கடைசி எனக்கு ஒரு பென்சிலை தருகிறார். இதனைத்தொடர்ந்து வேலைக்குச் செல்லும் பகுதிக்கு தந்தை கிளம்பிவிடுகிறார். அங்கு சென்று கட்டிடம் கட்டும் பணிக்குத் தேவையான பொருள்களை எடுத்து வைத்துவிட்டு பணிகளை தொடங்குகிறார். அந்த சமயம்தான் பணிக்குத் தேவையான மணியாசுக்கட்டை இல்லை என்பது தெரிய வருகிறது. வீட்டிலிருந்து வரும் பொழுது அதனை எடுத்து வந்தோமா அல்லது கடந்த முறை பணியாற்றிய இடத்திலேயே மணியாசு கட்டையை வைத்துவிட்டு வந்து விட்டோமா அல்லது வரும் வழியில் எங்கேயாவது விழுந்து இருக்குமா என்ற குழப்பம். இந்தக் குழப்பத்தின் வாயிலாக ஒரு ஞானம் பிறக்கிறது தந்தைக்கு. அது என்னவென்றால் இவ்வளவு வயதான தனக்கு பணிக்குத் தேவையான பொருளை எங்கே வைத்தோம் எங்கே தொலைத்தோம் என்பது குறித்த ஞாபகம் இல்லாத பொழுது பள்ளிக்குச் செல்லும் சிறுவன் பென்சில், ரப்பரை எப்படி தொலைத்தோம் என்பதை எப்படி நினைவில் வைத்திருப்பான் என்ற எண்ணம் தோன்றுகிறது. அதன்பின் மகனிடம் பென்சிலை தொலைத்ததற்காக திட்டியது குறித்து தன்னுடைய வருத்தத்தை தெரிவிக்கிறார் தந்தை என்பதாக கதை முடிகிறது.


சின்னச் சின்ன சில்லறை வேலைகளுக்கு மட்டும் தம்மைப் பயன்படுத்திக்கொண்டு பெரிய வேலைகளுக்கு வெளியூர் ஆட்களைப்போட்டு கட்டிட வேலைகள் பார்க்கும் முதலாளிகளைத் தோலுரிக்கிறது ஒரு கதை.


தன்னிடம் வேலை பார்த்த ஒருவன் பெரிய கொத்தனார் ஆன பின் அவனிடம் வேலைக்குச் செல்லுதல் பற்றிய ஒரு கதை.


மனைவியுடன் பயணித்துச் செல்கையில் பேருந்தில் நிகழும் சம்பவம், மனைவி தேர்வெழுத உடன் சென்றிருந்த பொழுது அங்கு மல்லிக்கட்டி வாங்கிய தயிர்சாதம் பற்றிப் பேசும் கதை, பழையன கழிதலும் எனபது எப்படிப்பட்ட வலி என்பதை உணர ஒரு கதை இப்படி எல்லாம் ஒவ்வொருவர் வாழ்விலும் கடந்து போன நிகழ்வை நினைவுபடுத்தி நம்மை கடந்து போன வாழ்வை மீண்டும் வாழவைக்கும் பணியைச் செய்கிறது.


வாசித்து தோழர் மொசைக் குமார் வாழ்வை அறியலாம். அப்படியே அதன் வாயிலாக நமது வாழ்வையும்...


வாழ்த்துகள் தோழர்...

எம்.ஆர்.ராதா கலகக்காரனின் கதை #முகில்

 எம் ஆர் ராதா

கலகக்காரனின் கதை


முகில்


சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்


ராதா குறித்து பல தகவல்கள் நூல் முழுதும். சிறு சிறு தகவல்கள் ஆயினும் வரலாற்றின் போக்கிலும் அது பதியும் வகையிலும் ஆசிரியரின் மொழி நடை.

நாடகத்தை, கலையை உயிராகக் கருதி கடைசி வரை வாழ்ந்த ஓர் அசாத்திய கலைஞனின் வரலாறு.


முற்போக்கு நாடகங்கள், புராணக் குப்பைகளைக் கிண்டலடிக்கும் நாடகம் இவற்றிற்கெல்லாம் எவ்வளவு எதிர்ப்புகள் அதை ராதா கையாண்ட விதம் இன்றைய ஹீரோக்கள் அறியவேண்டிய பாடம். Time to lead என்று துணைத் தலைப்பு கொடுத்துவிட்டு படம் ஓட அரசிடம் மண்டியிட்டு வாழ்ந்த நடிகர்கள் போலில்லை ராதா.


பெரியார், அண்ணா, கலைஞர், எம் ஜி ஆர் என பலர் வந்து போகின்றனர். ரத்தக்கண்ணீர் இவர் தனது ஐம்பதுகளின் தொடக்கத்தில் நடித்த படம் என்பது ஆச்சர்யம். எம் ஜி ஆரைச் சுட்டதற்கான காரணம், அதற்காக அலட்டிக் கொள்ளாமல் அதை சரியென்று சொல்லும் துணிச்சல் ராதாவுக்கு மட்டும் தான் இருந்திருக்கும். காமராஜர், பெரியார், அண்ணா இவர் மேல் வைத்திருக்கும் அன்பு குறித்த பல தகவல்கள். சிவாஜியிடம் ஒருமுறை வீட்டில் சென்று சாப்பாடு எடுத்துவர காரைக் கேட்கிறார் ராதா. சிவாஜி, அண்ணே அது இம்பாலாண்ணே என்று சொல்கிறார் விலை உயர்ந்த கார் என்று சொல்லாமல். சில காலத்திலேயே அதே இம்பாலா காரில் வைக்கோல் ஏற்றி வந்து சிவாஜி முன் நிறுத்த அவர் திகைக்கிறார். அப்போது ராதா அது வெறும் தகரம் தான். வைக்கோல் ஏற்ற வண்டி கிடைக்காததால் இதில் ஏற்றச் சொல்லிவிட்டேன் என்று மனிதம் போதிக்கிறார். நடிகர் அசோகனிடம் பேசும் போது ஹீரோ நடிகர்களின் எண்ணத்தை வெளிப்படையாகச் சொல்கிறார்.


ராதாவின் பேட்டி, மலேசியாவில் பேசிய பேச்சு, நடித்த படங்களின் பட்டியலும் பின் இணைப்பாக தந்திருக்கிறார்.


வாசிக்க வாசிக்க மனதில் இருந்த ராதாவின் பிம்பம் உச்சத்திற்குச் சென்று நிற்பதை மாற்றவே இயலாது.


வாழ்த்துகள் Mugil Siva தோழர்.


யாழ் தண்விகா