சீமையில் இல்லாத புத்தகம்
தேனி சுந்தர்
பாரதி புத்தகாலயம்
112 பக்கங்கள்
100 ரூபாய்
குழந்தைமையில் தூளி கட்டிக்கொண்ட உலகம்
தோழர் Visagan Theni தன்னுடைய முகநூலில் பகிர்ந்திருந்த ஒரு கவிதையைப் பார்த்தேன், சீமையில் இல்லாத புத்தகம் என்ற புத்தகத்திற்கு வாசிப்பனுபவம் தயார் செய்ய எத்தனிக்கும்போது. மகேஷ் சிபி எழுதிய அக்கவிதை பின்வருமாறு.
“மின்கம்பியில் வரிசையாய் குருவிகள்
கவிதை வேண்டுமென்பவர்கள்
ஒருமுறை கை தட்டுங்கள்”.
எவ்வளவு எவ்வளவு கற்பனைகளை, கதவுகளை, காட்சியை மனதிற்குள் கொண்டுவந்தது தெரியுமா இவ்வரிகள். இதே காலகட்டத்தில்தான் மதுரையைச் சேர்ந்த பெற்றோர் இருவர், தன்னுடைய 4 வயது குழந்தையைப் பள்ளியில் சேர்த்துவிட்டு அவனைக் கண்டித்து வளர்க்க, படிக்க வைக்க 4 அடி பிரம்புக் கம்பு ஒன்றைப் பள்ளி ஆசிரியரிடம் கொடுத்து அதனைப் புகைப்படமாக எடுத்து ஊடகங்களில் பகிர்ந்து வருவதும். இருவர் அன்பில் ஒருவராக வாழ்தல் வாழ்க்கை. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்றெல்லாம் அன்பை மையப்படுத்தி வாழ்ந்த வாழ்வைச் சுக்குநூறாக்கும் விதமாக 4 வயது மகனும் 4 அடி பிரம்புக் கம்பும் என்ற வார்த்தைகள் என்னுடைய மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. இங்கே சைக்கோத்தனத்தில் ஒருமித்த கருத்துடன் குழந்தையை அடிக்க பிரம்புக்கம்பு என்ற ஆயுதம். எப்படி அந்தக் குழந்தை வீட்டில் வசிக்கப்போகிறதோ என்ற அச்சம் தான் மீண்டும் மீண்டும் மேலெழுகிறது. இப்போதெல்லாம் அடியாத பிள்ளை படியாது, ஆடுற மாட்ட ஆடித்தான் கறக்கணும், பாடுற மாட்ட பாடித்தான் கறக்கணும், முருங்கைக்காய ஒடிச்சு வளக்கணும் பிள்ளைகள அடிச்சு வளக்கணும் என்பது போன்ற பழமொழிகளுக்கு வரவேற்பு அதிகம்.
இந்த இடத்தில்தான் மேற்சொன்ன கவிதையைப் பார்க்கிறேன் நான். மின்கம்பியில் வரிசையாய் குருவிகள் என்பதனை பள்ளிக்கூடத்தில் வரிசை வரிசையாய் குழந்தைகள் எனப் பொருள் கொள்ளலாம். கவிதை வேண்டுமென்பவர்கள் ஒருமுறை கை தட்டுங்கள் என்பதற்கு மாணவர்களின் திறன் அறியவேண்டுமென்பவர்கள் ஒருமுறை மெதுவாகக் கை தட்டுங்கள் என்பதே பொருளாக இருக்கவேண்டும் என்று நான் பார்க்கிறேன். மெதுவாகக் கைதட்டுதல் என்பது ஆசிரியர்கள். மெதுவாகக் கை தட்டுதல் என்பதற்குப் பதிலாக ஓங்கி என்றிருக்கலாம். ஒரு வெடிகுண்டை வெடிக்கச் செய்யலாம். ஆனால் குழந்தைகளின் மனநிலை என்னாவது? குழந்தைகளின் மனம், மகிழ்வில் சிறகடித்துப் பறக்கும்போது எல்லாம் சிறப்பாகும், கல்வி, கலை எதுவாயினும். இதனையே நான் கவிதையில் காண்கிறேன். சீமையில் இல்லாத புத்தகம் தொகுப்பைப் பொருத்தமட்டிலும் இங்கு பறவைகளாக டார்வின், புகழ்மதி, கீர்த்தி இருக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது வரிசையாகவோ, கலைத்துப்போட்டோ அமர்கிறார்கள். அவர்களுக்கென யாரும் கை தட்டவில்லை. அவர்களாக பறக்கிறார்கள். இதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் கலைஞனாக மட்டும் தோழர் தேனி சுந்தர் இருக்கிறார். அதை தனது நூலில் பதிவு செய்திருக்கிறார். அவ்வளவும் அவ்வளவு சுவாரசியத்தைத் தூண்டும் வண்ணம் அமைந்திருக்கிறது.
மீண்டும் அக்கவிதையை வாசியுங்கள்.
“மின்கம்பியில் வரிசையாய் குருவிகள்
கவிதை வேண்டுமென்பவர்கள்
ஒருமுறை கை தட்டுங்கள்”
-மகேஷ் சிபி
சீமையில் இல்லாத புத்தகம், முழுக்க குழந்தைமையைக் கொண்டாடும் புத்தகம். கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்குத் தெரியும், ‘ஊர்ல இல்லாத அருவமா பிள்ளையப் பெத்து வச்சிருக்கா, என்னமோ சீமையில இல்லாத பிள்ள மாதிரி இப்படி கொஞ்சிட்டிருக்கா, இதெல்லாம் எங்க போயி முடியப்போகுதோ” என்றெல்லாம் ஒரு தரப்பு அங்கலாய்ப்பதையும் அதைக் கண்டுகொள்ளாமல் தாயானவள் குழந்தையைக் கொஞ்சுவதையும் பார்த்திருக்கலாம். தாயானவள் கொஞ்சும் சீமையிலில்லாத குழந்தை போல, நாம் கொண்டாடக் கிடைத்த சீமையில் இல்லாத புத்தகம் இது. இது குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்க்கு மட்டுமல்ல, குழந்தைகள் பெற்று பேரன், பேத்தி பார்த்தவர்களும் படிக்கலாம். பதின் பருவத்தினரும் படிக்கலாம். குழந்தையைக் கொஞ்சும் யாவரும் படிக்கலாம் என்பது இந்நூலிற்கான சிறப்பம்சம். வளரும் சமுதாயம் இது போன்ற நூல்களைப் படிக்கும்போது குழந்தைகளின்மேலான வன்முறை என்பது தவிர்க்கப்படும், தடுக்கப்படும் என்பது திண்ணம்.
பள்ளியில் குழந்தைகளிடம் அந்தந்தப் பருவத்திருக்குரிய பாடப் புத்தகங்களைக் கொடுத்தவுடன் செய்யும் செயல் என்ன தெரியுமா? புத்தகத்தில் முதலில் அவங்கவங்க பேர எழுதுங்க என்று ஏற்கனவே சொல்லியிருப்பார் ஆசிரியர். அந்த பணியை முடித்தவுடன் குழந்தைகள் ஒவ்வொரு பக்கமாக எடுத்து படங்களைப் பார்த்து முடித்துவிடுவார்கள். புத்தகத்தையே படித்து முடித்த அயர்ச்சி தோன்ற புத்தகத்தை மூடி வைத்துவிடுவார்கள். இதனைப் போன்றதொரு பதிவை கீழ்க்கண்டவாறு பதிவு செய்திருப்பார் தோழர்.
“அறுபது பக்க புத்தகத்த
அஞ்சே நிமிசத்துல
படிக்க முடியுமா?
புகழ்மதி படிச்சுட்டாங்க
ஒவ்வொரு பக்கமா புரட்டுவாங்க
படம் இருக்கும்
பக்கத்த மட்டும் பாப்பாங்க
இது அம்மா
இது அண்ணன்
இது அக்கா
இது அப்பா
இது போனு
இது வீடு
இது டிவி
இது மரம்
இது போனு
இது குருவி
இது கண்ணாடி
இது காரு
இது பாட்டில் தண்ணீ
நான் படிச்சு முடிச்சிட்டேன்ப்பா
இன்னொரு தடவ படிக்கவா?
புகழ்மதியின் இந்தக் கேள்விக்கு போதும் படிச்சது என்றால் இன்னும் நாம் குழந்தைமையை ரசிக்கத் தொடங்கவில்லை என்று பொருள். தோழரின் பதில் என்ன தெரியுமா?
ம்ம்... சூப்பர் பாப்பா.
குழந்தைமையைக் கொண்டாடும் ஒருவரின் பதில் இப்படித்தான் இருக்கும். குழந்தைமை இன்னும் சிறக்க விரும்பும் ஒருவரின் பதிலும் இப்படித்தான் இருக்கும். இந்த பதிலுக்காக தோழருக்கு நானும் சொல்லிக்கொள்கிறேன் “சூப்பர் தோழர்....”
அங்கொன்றும் இங்கொன்றுமாக குறித்து வைத்துக்கொண்டு கொண்டாட இத்தொகுப்பல்ல. அங்கிங்கெனாதபடி எல்லாம் சிறப்பாக அமையப்பெற்ற ஒரு குழந்தைமையைக் கொண்டாடும் தொகுப்பாக இப்புத்தகம். குழந்தைகளின் ஏக்கம் தீர்க்கும் தகப்பன் தான் கடவுள். இயலாத ஒன்றைச் சொல்லும் குழந்தையிடம் சொல்லிப் புரியவைக்கும் தகப்பன் கடவுளுக்கும் கடவுள். ஒரு குழந்தை தன்னுடைய அப்பாவிடம் தன்னைத் தூக்கச் சொல்கிறாள். அப்பா அமர்ந்தவாறே ம் என்கிறார். குழந்தை எந்திரிச்சு நிண்டு தூக்குப்பா என்கிறாள். தூக்கியவுடன் மேலே தூக்கிப் போடுப்பா என்கிறாள். அதனையும் செய்தாயிற்று. முத்தம் கொடுப்பா என்று கேட்கிறாள். அதனையும் செய்தாயிற்று. கடைசியாக இனிமேல் நீயும் அம்மாவும் என்னய மட்டுந்தான் தூக்கணும் என்கிறாள். அதற்கும் சரி பாப்பா என்று அப்பா சொல்கிறார். இதையெல்லாம் எதற்காக குழந்தை சொல்கிறாள் என்றால் ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கு. அதனால்தான் குழந்தை இதனை ஒரு ப்ரோட்டோகால் போல செய்யச் சொல்லி கடைசியாக இனிமே நீயும் அம்மாவும் என்னைய மட்டுந்தான் தூக்கணும் என்று கட்டளையும் விதிக்கிறாள். இதைப் புரிந்த அப்பா, சம்பந்தப்பட்ட பாப்பாவுக்கு நாளைக்கு இருக்கு பதிலடி என்று முடிக்கிறார்.
“யாரோ ஒரு அப்பா
யாரோ ஒரு பாப்பா
கொஞ்சல் நடந்திருக்கணும்
இல்ல கிண்டல் நடந்திருக்கணும்
அதான் இந்த ரியாக்சன்.
எங்க அப்பாவுந்தான் என்னய தூக்குச்சு
தூக்கிப்போட்டுப் புடிச்சுச்சு
எங்க அப்பாவுந்தான்
எனக்கு முத்தங்கொடுத்துச்சு
எங்க அப்பாவுந்தான் ஏங்கூட வெளையாடுனாரு” என்று பாப்பா மறுநாள் சம்பந்தப்பட்ட பாப்பாவிடம் சொல்வாள் என்றால், இது தோழரின் பாப்பாவிற்கு இன்னும் தேவை. குழந்தையை இன்னும் அதிகமாக தூக்கணும், தூக்கிப் போட்டுப் பிடிக்கணும், முத்தம் கொடுக்கணும் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆதலால் தோழர் இதனையும் செய்யுங்கள். குழந்தைகளோடு பயணித்து அவர்கள் மொழியில் தொகுப்புமேல் தொகுப்பை அவர்கள் மொழியிலேயே கொண்டுவந்து சிறப்பித்தாலும் குழந்தையின் ஏக்கம் இக்குறிப்பில் எப்படி இருக்கிறது பாருங்கள்.
வீட்டில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடக்கும் ஊடலைத் தீர்க்கும் ஒரு துருப்புச்சீட்டாக குழந்தைகள் பல வீடுகளில் இருப்பார்கள். சொல்லி அதன்மூலம் அடுத்தடுத்த வேலைகள் நடக்கும். அப்படியான ஒரு குறிப்பு. டார்வின், புகழ்மதி இருவரும் செய்யும் சேட்டைகள் பொறுக்காமல் அம்மா, இப்படியே சேட்டை பண்ணிட்டு இருந்தா உங்கள விட்டுப்புட்டு நான் அம்மாச்சி வீட்டுக்குப் போயிடுவேன், ஹாஸ்டலுக்குப் போயிடுவேன், ஆபீஸ்லயே இருந்துக்கிறேன் என்று சொல்கிறார். எல்லாவற்றுக்கும் புகழ்மதி போவக்கூடாது என்று சொல்லி தனதன்பை வெளிக்காட்டுகிறாள். இடையில் புகுந்த அப்பா, அம்மா போகும்போது பாப்பா தான் டிப்பன எடுத்து நல்லாக் கழுவி சாப்பாடு போட்டுக் கொடுக்குமாம், அப்புறம் டிரஸ் எல்லாம் எடுத்து பையில வச்சு அம்மா கிட்ட கொடுக்குமாம் என்றவுடன், புகழ்மதி ம்ம் சரிப்பா. எப்பம்மா போவ சொல்லும்மா எப்பம்மா போவ என சுட்டி மாற்றி கேட்கத் தொடங்கிவிடுகிறாள். இந்த கணத்தை உணராத குடும்பம் இருக்குமா என்ன... இதற்குப் பின் தலைவி பார்க்கும் பார்வையும் தலைவன் பார்க்கும் பார்வையும் முட்டிக்கொள்ளும் இடத்தில் பூக்கும் கூடலுக்கு குழந்தைகளின் நிரத்தைச் சூடி அழகு பார்க்கலாம். எந்த இடத்திலும் கூடுதலான வார்த்தைகளைச் சேர்க்காமல் குழந்தைகளை அவர்களின் இயல்பில் காட்சிப்ப்டுத்தியிருப்பதில் முழுதாகத் தேர்ச்சி பெற்றிருக்கிறார் தோழர்.
அறிவியலைக் குழந்தைகள் கற்றுக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதும், பதிலைப் பெறுவதும் ஒரு கலை தான். அப்படியான குறிப்புகள் நாய்க்கும் அறிவு இருக்கு என்ற பதிலை டார்வின் கண்டுபிடிப்பது. செத்துப்போன பூச்சி எப்படிப்பா வந்து மனுசனைத் திங்கும் என்று கேள்வி கேட்பது. குழந்தைகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தப்பிக்கும் அப்பாவையும் பல பக்கங்களில் காணலாம். அதற்குக் காரணம் பதில் தெரியவில்லை என்பதால் அல்ல. குழந்தைகளுக்கு புரியும் காலம் வரவில்லை, வரட்டும் என்ற தெளிவு அப்பாவிடம் இருப்பதால் தான்.
சிறு வயதில் தெருக்குழாயில் பெண்கள் உதிர்க்கும் வசவுச்சொற்கள் காதில் விழாதவாறு கதவு, ஜன்னல்களை அடைத்து டேப் ரெக்கார்டரில் பாடலை எனது தாயார் ஒலிக்கவிடுவார். அந்தக் காலம் மலையேறிவிட்டது. இன்று தொலைக்காட்சி, சினிமா, அலைபேசி என எல்லாம் வீட்டுக்குள் குப்பைகளைக் கொண்டுவந்து கொட்டத் தொடங்கிவிட்டது. கதாநாயகன், கதாநாயகி நெருக்கமாக வரும் காட்சியை மாற்றத் துடிக்கும் அப்பாவிற்கு வேலை வைக்காமல் அந்த இடம் வரும்போது டார்வின் ரிமோட்டில் வேறு சேனலுக்குத் தாவுகிறான். நம்மைக் கடந்து அவர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் குறிப்பு அது.
பதிலளிக்காமல் தப்பிப்பது தவறல்ல. அந்த இடத்தில் தப்பிக்கும் நுணுக்கம் கைவருதல் ஒரு கலைதான். ஆனால் தவறான ஒன்றைச் சொல்லி கடத்தல் என்பது சரியாக இருக்காது. அப்படித்தான் ஒரு குழந்தை பதின்ம வயதை அடைவதை ஒட்டிச் செய்யும் சடங்கு நிகழ்வுக்கு டார்வினும், புகழ்மதியும் செல்கிறார்கள். அங்கு புகழ்மதி எதற்காக மஞ்சத் தண்ணி ஊற்றுகிறார்கள் என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்புகிறாள். ஒருகட்டத்தில் டிரஸ்லயே ஆய் இருந்திட்டா மஞ்சத்தண்ணி ஊத்துவாங்களா? என்ற கேள்வியைக் கேட்கிறாள். யாரோ நமக்கு முன்னாடி சிக்கி, தப்பிச்சிருக்காங்க என்று அக்குறிப்பை முடிக்கிறார் தோழர். அந்த யாரோவிற்கு வன்மையான கண்டனங்கள். இதுதான் குழந்தைகளிடம் பதிலளிக்கும் முறையா அன்பரே எனக் கேட்கவேண்டும்.
கையால் துவைப்பதே துவைப்பு மற்றெல்லாம்
வாஷிங்மெஷின்கணக்கில் வரவு வைக்கப்படும் என்றொரு புதுக்குறள் எனக்குத் தோன்ற ஒரு குறிப்பு இருக்கிறது தொகுப்பில். ஏய் எப்புர்ரா என்று கேட்டு வைரல் ஆன தம்பி போல இங்கு டார்வின் யுட்யூப் ஆரம்பித்து கேள்விகேட்கிறான். எங்களைப்போல சட்டை இல்லாமல் பெண்கள் வெளியில் போக முடியுமா என்ற கேள்வி ஒருவனால் கேட்கப்பட்டது. இத்தொகுப்பில் இது போலவே அவர்களுக்கு வேர்க்காதா? என்ற கேள்வியை தான் சார்ந்தோருக்கென டார்வின் கேட்கிறான். பாலின சுதந்திரம் என்பதை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். இதுபோல தொகுப்பில் விடுபட்ட அனைத்தும் முக்கியக் குறிப்புகள் என்பதால் சீமையில் இல்லாத புத்தகம் என்பதைக் குழந்தைமையைக் கொண்டாடும் முக்கியப் புத்தகமாக எல்லோருக்கும் பரிந்துரை செய்யலாம். செய்கிறேன்.
வாழ்த்துகள் தேனி சுந்தர் தோழர்.
யாழ் தண்விகா
No comments:
Post a Comment