#குட்டிக்கதை
உன்னைப்போல் மூவர்
-------------------------------------------
"வாங்க தோழர். எப்படியிருக்கீங்க?" என்றார் ஓவியர் சேகர் சிரித்தபடியே.
"நலம் தோழர், நீங்க எப்படியிருக்கீங்க?" என பதிலுக்குக் கேட்டார் பாண்டியன்.
"நல்லாருக்கேன் தோழர். உங்க கவிதையெல்லாம் வாசிக்கிறேன் தோழர். மனசக் கிளறி விடுது ஒவ்வொன்னும். எழுதுங்க தோழர் இன்னும் நெறய" என்றார் ஓவியர் சேகர்.
"கவிதை ஊற்றெடுக்கும் நேரம்தான் ஆச்சர்யம். தோணும்போது எழுதிட்டு அடுத்த வேலையைப் பார்க்க கிளம்பிடுவேன். அவ்ளோதான் தோழர். அதுக்குள்ளயே கிடந்தா பொழப்ப பாக்க முடியாமப் போயிரும். காதலுக்கு எதிரா பேசுறதா அர்த்தம் பண்ணிக்காதீங்க தோழர். காதல் போல மனுசனுக்கு நல்ல மருந்தில்லை தோழர்" என்று சொன்னார் பாண்டியன். அதில் காதலுக்கு ஆதரவும் இருந்தது. கவிதை குறித்த பெருமிதமும் இருந்தது.
"அப்படியெல்லாம் நினைக்கமாட்டேன் தோழர். மாமன்னன் படம் குறித்து பதிவு போட்டிருந்தீங்க. பாத்தேன். நான்தான் படத்துக்கு போக முடியல. மகங்கிட்ட சொன்னாலும் தேவையில்லாத வேலையப் பாக்காதீங்கப்பா என்கிறான். கூட்டிட்டு போக மாட்டீங்குறான்" என்று அங்கலாய்த்தார் சேகர். "ஏன் தோழர், பக்கம்தானே தியேட்டர். ஒரு எட்டு போயிட்டு வரவேண்டியது தான. படம் இப்போ வரை ஹவுஸ் புல்லாத்தான் ஓடிட்டு இருக்கு. பார்க்கலாம் தோழர். நல்லாத்தான் இருக்கு. இதுபோன்ற படங்களின் வரவு ஒரே நாளில் இந்த சமூகத்தை மாத்திடாதுன்னாலும் ஆதரிப்பது நமது கடமை தோழர்" என்று பாண்டியன் விரிவாகவே பேசினார்.
"அதெல்லாம் பரியேறும் பெருமாள் படத்தோட முடிஞ்சிடுச்சு தோழர். அந்தப் படம் பாக்குறப்ப என்ன நடந்தது தெரியுமா தோழர்?" என்றபடியே பாண்டியனைப் பார்த்தார் சேகர். தனக்குத் தெரியாது என்பதை இருபுறமும் தலையாட்டி பாண்டியன் சொன்னார். பார்வைப் பிரச்சனைக்காக போட்டிருந்த கண்ணாடியின் வழியாகத்தெரிந்த சேகரின் கண்கள் புதுமழைக்கு வேகவேகமாக கண்மாய் வழியாக வந்து நிறையும் தண்ணீர் போல நிரம்பத் தொடங்கியது. எதுவும் புரியாது திகைத்தபடி அக்கண்களைப் பார்த்தபடி இருந்தார் பாண்டியன். "அந்தப் படம் பார்க்கும்போதுதான் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தது தோழர். என் பக்கத்தில் உக்காந்திருந்த என் மகன் தான் என்னப்பா பண்ணுதுன்னு கேட்டான். என்னன்னு தெரியல. திடீர்னு வேர்க்குதுடா என்றேன். வாங்கப்பா போவோம்னு சொல்லி ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனான். இப்பவும் மறக்க முடியல. படத்தையும் என் வாழ்க்கையையும். அந்தப் படம் என்னோட வாழ்க்கை தோழர்" என்று சொல்லி அவர் நிறுத்தியபோது பெருமழை நனைத்து முடிந்த நிலத்தின் அமைதி சேகரிடம் இருந்தது.
"என்ன தோழர் சொல்றீங்க? லவ் பண்ணுனீங்களா? தோழரும் நீங்களும் வேற வேற சமூகமா? எதனால பிரச்சனை?" என அடுத்தடுத்த கேள்வியைக் கேட்டார் பாண்டியன். "என்மேல படத்துல வாறது போல ஒண்ணுக்கு இருக்கல. மற்றபடி எல்லாம் எனக்கு நடந்தது. படம் பார்க்கும்போதே என்னால் என்னை கட்டுப்படுத்த முடியல. நானும் அவளும் சமூகப் பார்வைப்படி வேற வேற சாதி. பரிச்சை சமயம். அவள் தன் வீட்டுல போய் சேகர் நல்லவன். அவன் திறமையானவன். நல்லா படிப்பான் என்றெல்லாம் சொல்லியிருக்கிறாள். வீடே அவ பேச்சை உத்துக் கவனிச்சு இது நல்லதுக்கில்லயேன்னு நெனச்சுக்கிட்டு நாலே நாளில் நிச்சயதார்த்தம். அவளின் மாமா பையன் கூட. அடுத்த ஒரு வாரத்தில் அவளுக்குத் திருமணம். எப்படி இருக்கும்? எல்லாம் டக்குடக்குன்னு முடிவாகுது. இடைல என் வீட்டுக்கு வந்து கல்யாணத்துக்கு வந்திடச் சொல்லி பத்திரிக்கை கொடுத்தாங்க அவங்க வீட்டு ஆட்கள். என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கவே முடியல. அவ கைய இப்படி நான் தொட்டதுகூடக் கிடையாது தோழர்" என்றபடி பாண்டியாவின் கையில் தன்னுடைய விரலால் வைத்துக் காட்டுகிறார் சேகர்.
"கல்யாணத்துக்கு முன்னால அவ வீட்டுக்கு நான் போனேன். அங்கு அவங்க வீட்டாளுங்க எல்லாருமே இருந்தாங்க. பார்வையே மிரட்டுறதுபோல பார்த்தாங்க. நான் எதுக்குப் பயக்கணும்? பயக்காம சொன்னேன். கல்யாணத்துக்கு என்னால வர முடியாது. நான் ஒரு கவிதையை எழுதி, படமும் வரைந்து வாழ்த்து மடலாக ரெடிபண்ணி கொண்டுட்டுப் போனத அவங்ககிட்ட கொடுத்தேன். வாழ்த்து மடலே அவங்களுக்கு இன்னும் பயத்தைக் கொடுத்துருக்கும் போல. எந்தப் பேச்சும் இல்லை. அவ அம்மா தான் தம்பிக்கு டீ போடும்மா என்று அவ தங்கச்சிகிட்ட சொன்னாங்க. கல்யாண வேலையை நல்லபடியாப் பாருங்க. நான் வாரேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். கல்யாணம் நடக்குற அன்னிக்கு நான் கல்லாத்துப்பக்கம் போய் ஓடுற தண்ணீரை வேடிக்கை பார்த்துட்டே உக்காந்துட்டு சாயங்காலம் வீடுவந்து சேந்தேன். என் கண்ணீரெல்லாம் ஆறாப் போச்சு. மனசுதான் ஆறாம இன்னமும் அப்படியே கெடக்குது" என்ற சேகரின் சொற்களில் இன்னும் வலி தீரவில்லை என்று தெளிவாகத் தெரிந்தது. ஒற்றைப் பெருமூச்சில் காதல் நினைவுகள் மேலெழும்பி அடங்கிவிடுமா என்ன?
"விடுங்க தோழர். அதையே நெனச்சு மனச வருத்திக்காதீங்க. இப்போ அவங்க நல்லாருக்காங்கல்ல?" என்றார் பாண்டியன். "நல்லாருக்கா. 3 குழந்தைக. அவ வீட்டுக்காரர் உடம்புக்கு முடியாம தவறிட்டார். இப்போதான் போன் வந்திருச்சுல்ல. அப்பப்போ பேசுவா. எங்கெங்கோ தேடி அலைய வாய்ப்பில்லாமப் போக நான் எங்கயும் போகல. பிறந்தப்ப முதலா, அவள லவ் பண்ணுண காலம். இப்புடி எல்லாம் இதே இடம். இதே வீடு. வயசுதான் கூடிட்டே போகுது. வேற வித்தியாசம் இல்ல. அவ மேல வச்சுருக்க அன்பு முதற்கொண்டு. ஒரு சமயம் அவமேல அவ வீட்டுக்காரன் சந்தேகப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டப்பக் கூட நான்தான் பணம் கொடுத்து அனுப்பிவச்சேன். இதுக்குக்கூட அவ அண்ணைங்க சத்தம் போட்டாய்ங்க. ஆனா அவ அம்மா தான் அந்தத் தம்பி நல்லதுதான் பண்ணிருக்கு. நீங்க உங்க வேலையப் பாருங்கடான்னு சத்தம் போட்டாங்க. நல்லாருக்கா. ஒன்னும் பிரச்சனை இல்ல" என்றபோது சேகரிடம் பாண்டியன் ஒரு கேள்வி கேட்டார், ஏன் தோழர் அவங்ககூட சேர்ந்து வாழ கொடுத்து வைக்கலன்னு என்னைக்காவது வருத்தப்பட்டிருக்கீங்களா?...
கொஞ்சம் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்து
"சேச்சே... அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. ரொம்ப காலத்துக்கு அப்புறம் என் போன் நம்பரை எப்படியோ வாங்கி என்கிட்ட பேசத் தொடங்கிய புதிதில் தான் அவ வீட்டுக்காரர் இறந்த தகவலைச் சொன்னா. அவ்வளவு வேதனை உண்டாச்சு. என் வருத்தம் அவளைப் பாதிக்கும்னு தெரியும். வருத்தமும் வேதனையும் எனக்கு இருந்ததை அவளும் தெரிஞ்சுதான் வச்சிருந்தா. பேச்சை மாத்த அவளும் எதையாவது கேட்பாள். நானும் சொல்லுவேன். அப்படி ஒருநாள் அவ பேசும்போது பிள்ளைங்க என்ன பண்றாங்கன்னு கேட்கவேயில்ல என்றாள். கேட்டுருக்கணும். கேட்கல. உன் வாழ்க்கைய இந்த நிலைல இருக்குறப்ப என்ன கேட்க? எதுவும் தோணல. ம்ம்ம்... என்ன பண்றாங்க என்றேன். மூத்தவ பாடகி. அடுத்தவன் டான்சர். மூன்றாவது ஆள் ஓவியர் என்றாள். இப்போ இந்தக் கண்ணில் நீர் கோர்க்குது பாருங்க. அப்பவும் இப்படித்தான். கண்ணீர் கோர்த்தது. ஒரு நிமிஷம் பேசவே இல்லை. ஹலோ, என்ன பதிலைக் காணோம் என்றவள் உன்னைப்போலவே வளர்த்திருக்கேனா என்றாள். அவளுக்குக் கேட்காத மாதிரி போனை முகத்துக்கு நேராக வைத்து கண்மணி... எப்பவும் ஐ லவ் யூ என்று சொன்னேன். அடுத்து போனில் என்னை அப்படியெல்லாம் வளர்த்ததே நீதான் என்று அவளிடம் நான் சொன்னதில் பொய் எதுவும் இல்லை. அவ்வளவும் உண்மை. என்னைக் கண்டுபிடித்து என்னிடம் ஒப்படைத்துப் போனவள் அவ. ரெண்டு தெரு கடந்து தான் அவ அம்மா வீடு. எப்ப வந்தாலும் என்னைப் பாக்காமப் போகமாட்டா. மதுரைல இருக்கா. வாழ்க்கை என்பதில்தான் எத்தனை சுவாரஸ்யம். இல்லையா தோழர்...! என்று தன்னை ஆசுவாசப்படுத்தும் வார்த்தையில் சிரித்தது அவரின் காதல் நினைவுகள் மட்டுமல்ல. நிறைவேறாமல்போன காதலும் தான்.
யாழ் தண்விகா
///நேற்று மாலை தோழர் ஒருவரிடம் உரையாடியபோது அறிந்தவை கதையாக...///
⚫
No comments:
Post a Comment