என் காட்டில் அடைமழை
ராஜிலா ரிஜ்வான்
வேரல் பதிப்பகம்
90 பக்கங்கள்
120 ரூபாய்
உலகில் சலிக்காதது எது என்று கேட்டால் அது காதல் மட்டும்தான் என்பேன். அதுதான் மழையின் ஒவ்வொரு துளியையும் ரசிக்க வைக்கும். அதுதான் பூவின் ஒவ்வொரு இதழ்களையும் தொட்டு ரசிக்க வைக்கும். நட்சத்திரங்களை எண்ணி வானத்திடமே சொல்லி சரியா எனக் கேட்க வைக்கும். உறங்கும் நேரம் விழிக்க வைக்கும். விழிக்கும் நேரம் உறங்க வைக்கும். கனவு காண வைக்கும். முட்டாள்தனத்தில் மூழ்கவைக்கும். கற்பனையைக் கவிதையாக்கும். இருவருக்கு மட்டுமான உலகம் உருவாக்க வைக்கும். ஓரிணை இறக்கையில் இருவரையும் பறக்கவைக்கும். என் காட்டில் அடைமழை தொகுப்பை வாசிக்கும்போது இவை அத்தனையையும் உயரலாம்.. ஹைக்கூ கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ள தோழர் ராஜிலா காதல் கவிதைத் தொகுப்பை எழுதி அதனை ரிஜ்வான் தோழருக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். தொகுப்பு, ஒட்டுமொத்த காதலர்களும் தங்களுக்கு எழுதியது என நினைத்துக்கொள்வதையும் சமர்ப்பணம் என்றுதானே எடுத்துக்கொள்ள முடியும்... எடுத்துக்கொள்ளட்டும். அது காதலின் வெற்றி. தொகுப்பின் வெற்றி. வாழ்த்துகள் தோழர்.
திரைப்பட இயக்குநரும் பாடலாசிரியருமான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் அணிந்துரை வழங்கியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் டைட்டில் சாங் கதையை சுருக்கமாகச் சொல்லி படத்திற்கு உள்ளே இழுத்துச் செல்வது போல அணிந்துரையும் அழகாக நம்மை தொகுப்பின் உள்ளே இழுத்துச் செல்கிறது.
“வீடு முழுவதும் தனிமை
நீயில்லாத வீட்டில்
எதைச் சாப்பிடுவது
எப்பொழுது தூங்குவது
எப்படிச் சிரிப்பது
இதை எழுதிக் கொண்டிருக்கும்
இந்நேரத்தில் தோளில் ஆறுதலாய்
கை போடுகிறது
சுவரில் தொங்கும் உன் சட்டை”
கண்ணுறங்கும் நேரத்தில் திடீரென விழித்துப் பார்க்கும் குழந்தை அருகில் தாய் இல்லையென்றால் என்ன அழுகை அழும்... எதையெதையோ காட்டி ஏமாற்றினாலும் அதற்கு தாயின் தேவை, அவளின் அருகாமை எது குறித்தும் எந்தப் புரிதலும் இல்லாத வயதிலும் அந்த இடத்திலிருந்து பூக்கும் அழுகைக்கு என்ன பதில் இருக்கும் ஆறுதல் சொல்பவர்களுக்கு... குழந்தையைப் பொறுத்தமட்டில் தாய் இல்லாத அந்த இடத்தின் தனிமை போலான உணர்வு மட்டுமே. இக்கவிதையில் காதலன் இல்லாத இடத்தின் தனிமை என்பது காதலிக்கு. எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் காதலன் (அருகில் இல்லையென்றாலே அது தொலை தூரம் தானே) அவளின் தனிமையைப் போக்க வேண்டும். என்ன செய்வது இத்துயரைக் களைய... அவன் உடுத்திய சுவரில் தொங்கும் சட்டை ஆறுதலாகத் தோளில் கைபோடுகிறது என்ற சித்திரம் கற்பனை என்றபோதிலும் நம் தோளில் விழும்\விழுந்த கையை நாம் இறுக்கமாகப் பற்றிக்கொள்ள எத்தனிக்கிறோமே அதுதான் காதல். அதுவும் தனிமையின்போது வந்து விழும் கைகள் எத்தனை தேவை என்பதை வரிகள் உணர்த்துகின்றன.
“முன்பைவிட என் கவிதைகளில்
அதிகம் காதல்ரசம் சொட்டுவதாகக்
கூறிக்கொள்கிறார்கள்.
அவர்களுக்குத் தெரியாது
நாம் தற்சமயம் பிரிந்திருப்பது”
பிரிவென்பது காதல் கூட்டும். இக்கவிதையும் அதைத்தான் சொல்கிறது. காதலின் ஒவ்வொரு நொடியையும் ரசிக்கக் கற்ற ஒருவனுக்கு பிரிவின் ஒவ்வொரு நொடியின் வலியும் புரியும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலரைக் கொண்டாடும் நாம் நம்மைச் சுற்றிப் பூத்திருக்கும் எத்தனை மரங்களை பார்த்துக் கொண்டாடியிருக்கிறோம்... காதல் என்பது நொடிதோறும் பூத்துக்கொண்டிருக்கும் ஒரு ரகசியம். அதன் சூட்சுமம் உணர்ந்தவர்களுக்கு மட்டும்தான் சேர்தல் பிரிதல் இரண்டின் வலியும் புரியும்.
வாங்கியதை மீண்டும் கொடுத்து ஈடு கட்டிக் கொள்ளுதல் என்பது ஒரு காதலின் வேலையல்ல. கொடுப்பதும் வாங்குவதும் இயல்பாக அதனதன் போக்கில் நடக்கும் ஒரு வித்தை.
“கொடுத்தது
திரும்பக் கிடைத்துவிடுகிறது
வட்டியுடன்
உன்னிடமிருந்து மட்டும்.
முத்தமில்லை என்று சொன்னால்
நம்பவா போகிறீர்கள்...”
காதலைப் பொறுத்தவரை சேமிப்புக்கு அதிக வட்டி தரும் தனியார் வங்கி போலத்தான். வட்டியுடன் திரும்பக் கிடப்பது முத்தம் மட்டுமில்லை என்பதும் வாழ்ந்த, வாழும் காதலர்களுக்குப் புரியும். காதலில் வாழ்பவர்களுக்கும் புரியும்.
தனது இணையரை சிறப்பாகக் கவனிக்க நினைத்து மொக்கைச் செயல்களைச் செய்யும் பலர் இருக்கிறார்கள். அதற்காக அதனைப் புறம் தள்ளிவிடுமா மனம்... அதற்குள்ளும் ஆனந்தம் கண்டு ஆர்ப்பரிக்கும் காதல். சிறப்பான கவனிப்பு உள்ளபடியே சிறப்பாக அமைந்தால் அப்போது நமக்கு நாமே “நான் கொடுத்து வைத்தவள் / ன்” என்று உள்ளுக்குள் சொல்லிக் கொள்வோமே... அப்பேரதிசயம் பூக்கும். மிக மிக இயல்பான கவிதைதான். மிக மிக எளிய சூழல் தான். மல்லிகைப்பூ காலம் காலமாக வெள்ளை நிறத்தில்தான் பூக்கிறது. அதற்கு வண்ணமடித்துப் பார்ப்பதில்லை நாம். அதன் இயல்பில் வைத்தே நாம் மணம் நுகர்கிறோம்.. அதுவும் நிறம் மாற்றாமல் நம்மை ஈர்க்கிறது. இக்கவிதையும் அப்படித்தான்.
“வழக்கத்தைவிட
சுவை கொஞ்சம் கூடுதலாக உள்ளதாக
வீட்டில் சொல்கிறார்கள்.
அவர்களுக்குத் தெரியாது
இன்று உனக்காகச் சமைத்தேன்”
கவிப் பேரரசு வைரமுத்து சொல்லும் காதலித்துப் பார் உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும். உலகம் அர்த்தப்படும். உனக்கும் கவிதை வரும்... என நீளும் வரும் வரிகளை மூன்று வரிகளில் ஹைக்கூவாக மாற்றித் தந்திருக்கிறார் தோழர் ராஜிலா. தன்னுடைய இணையர் ஊடலுக்காகவோ பகடிக்காகவோ அல்லது சோதிப்பதற்காகவோ “காதல் என்ன செய்யும்” எனக் கேட்கிறார். காதல் மனம் படைத்தவர்கள், அதில் மூழ்கித் திளைத்தவர்கள் என்ன இப்படிக் கேட்டுட்டீங்க என்பதை தோழர், “ஐயோ” எனச் சுருக்கி, அது ஒரு மாயம் செய்யும் செயல். அதன் வீரியம் அதனை உணர்பவர்களுக்கு விளங்கும். வெறுமனே அதனைப் பார்த்துவிட்டு நீங்குபவர்களுக்கு அதன் முழு சக்தி புரியாது, தெரியாது. அதனை அறிய காதலித்துப்பார் என்பதை, “எல்லாமே செய்யும்ப்பா. காதலித்துப்பார்” என்னும்போது அதன்மீது ஒரு தெய்வாம்சத்தன்மை வந்துவிடுகிறது. காதல் எதைத்தான் செய்யாமல் விடுகிறது... எல்லாம் செய்யும். அக்கவிதை,
“காதல் என்ன செய்யும்
ஐயோ
எல்லாமே செய்யும்ப்பா
காதலித்துப்பார்”.
காதலில் தன்னைக் கரைத்தல், ஒப்புக் கொடுத்தல், சரணாகதி அடைதலைப்போல் பூரணத்துவம் எதுவும் இருப்பதில்லை. அதற்கு சண்டையும் ஒன்றுதான். சமாதானமும் ஒன்றுதான். இதோ இந்தக் கவிதையை வாசிக்கும்போது காதலை யாசிக்கும் வனம், மழையில் மட்டுமல்ல, வெயிலிலும் தன் பச்சையத்தால் தன்னைச் சுற்றிய பிரபஞ்சத்தை அழக்கூட்டவே செய்யும் என்பதைக் காட்டுகிறது.
“அத்தனைப் பூக்களையும்
நீயே எடுத்துக்கொள்
நான் பூரிக்க
உன்னிடமிருந்து
ஒரு முள் போதும்”
வெண்ணிலா கபடிக்குழு என்னும் திரைப்படத்தில் பரோட்டா உண்ணும் போட்டியில் கலந்துகொள்ளும் திரைக் கலைஞர் சூரி, போட்டி நடத்துபவனின் கள்ள ஆட்டத்தில் கலங்கியும், தனது நேர்மையான உண்ணுதலுக்குப் பங்கம் வந்துவிடக்கூடாது என்றும் நடத்தும் நேர்மைப் போராட்டம் இங்கு முத்தத்திற்காக நடக்கிறது.
“எல்லாக் கோட்டையும்
அழித்துவிட்டு
முதலிலிருந்து வா
முதல் முத்தத்தில் துவங்கி
மீண்டும் காதலித்துத் தொலைவோம்”
முத்தமோ, காதலோ காதலர்களுக்கு இடையில் நிகழும்போது அதற்கு எல்லைக்கோடு வைத்துக்கொண்டா இயங்குகிறது... இவையெல்லாம் காதல் வளர்வதற்கான காற்றல்லவா...!
யெம்மா ஏய் கேட்டுச்சா... நீயும்தான் இருக்கியே, ஒருநாள் ஒருபொழுதாவது இப்படியெல்லாம் சொல்லிருக்கியா... என தன்னோட காதலிகிட்ட கேட்டுப் பெறவேண்டிய நிலையில்தான் ஆண்கள் இருக்கிறார்கள், “நீ என் ஆண் தேவதை” என்பது போலான வார்த்தையை. காதல் பற்றாக்குறையா... கவிதை பற்றாக்குறையா... “இதெல்லாம் மனசுக்குள் இருக்கு. சொல்லித்தான் தெரியணுமா” என்ற மன நிலையா... ஆண்களின் குணம் கண்டு வெதும்பிப்போய் “சொல்லிட்டாலும் கிளுகிளுன்னு இருக்கும்” என்ற நினைப்பா... தெரியவில்லை. ஆண்களும் மனுசாள் தானே. அவர்களும் தனதிணையர் புகழ்தலை விரும்புவார்கள் தானே...
“தேவதை எனும் சொல்லின்
அத்தனை அம்சமும்
உனக்கும் பொருந்திப் போகிறது
நீ என் ஆண் தேவதை”
காதல் குறித்து எழுதுவதென்றால், பேசுவதென்றால் அது முடிவிலியாக நீண்டுகொண்டே செல்லும். காதலின் ஆயுள் என்பது பூமி பிறந்த காலம் முதல் தொடங்குகிறது. காதலைப்போல் இப்பூமியை வாழவைக்கும் ஆகச்சிறந்த செயல் ஏதுமில்லை.
“நீ முறைக்கிறாய்
நானும் முறைக்கிறேன்
நீ சிரிக்கிறாய்
நானும் சிரிக்கிறேன்
நீ அழுகிறாய்
நான் உன்னை அணைக்கிறேன்”
முதல் நான்கு வரிகள் உலகப் பொது உணர்வு. கடைசி இருவரிகள் காதல் பொது. முன்னது ஊடல். பின்னது ஆறுதல். தேற்றுதல். காப்பாற்றுதல். அரவணைத்தல். எல்லாவற்றுக்கும் மேலாக நானிருக்கிறேன் என்று சொல்லும் அணைத்தலின் மூலம் ஆசீர்வதித்தல்.
தொகுப்பெங்கும் காதல். இவை மட்டும் தான் பிடித்த நட்சத்திரம் என்று நிலவோ வானமோ என்றாவது சொல்லியிருக்கிறதா... எல்லாம் காதல் பேசுபவை. எல்லாம் காதலர்கள் பேசுபவை. எல்லாம் காதலுக்காகப் பேசுபவை. காதலைக் கொண்டாட வாய்த்த மனம் உலகை நேசிக்கத் தொடங்கும். இவை உலகை நேசிப்பதற்கான சொற்கள். வார்த்தைகள். இன்னும் பல தொகுப்புகள் காதல் / Mohamed Rizwan தோழர்/ புகழ் பாடவும் கவிஞர் தோழரின் மனம் உதிர்க்கட்டும். காதல் சிறக்கட்டும்.
வாழ்த்துகள் தோழர்.
யாழ் தண்விகா
❣️
No comments:
Post a Comment