எந்த திட்டமானாலும்
எனக்கான உரிமையானாலும்
நீள்சதுர டப்பாவில்
அடர் ஊதா மையில் பெருவிரல் அழுத்தி
சொல்லும் இடத்தில் அச்சுப்பதிக்கவேண்டும்
சில நேரங்களில் அதற்கும் வாய்ப்பற்று
என் விரலைப் பிடித்து
எதிரில் நிற்பவர்
அவர் விரும்பும் இடத்தில்
முன்னும் பின்னுமாக உருட்டி
விரலை அச்செடுப்பார்கள்
அது விரல் அச்சல்ல
என் அறியாமையின் மேல்
விழுந்து கிடந்த
அவல அடையாளம் கல்லாமையினால் பூத்திருந்த கண்ணீர்ப் படிமங்கள்
என் வாழ்க்கைக்கு,
நீங்கள் சொல்லும் அறிவுரை.
என் வயலுக்கும்,
நீங்கள் சொல்லும் உரம்.
என் வயிற்றுக்குக் கூட,
நீங்கள் கைகாட்டும் அரிசி.
எல்லாம் கிடைத்தது,
என் விருப்பம் தான்
எங்கும் இல்லாமல் போனது.
கீறல் என்று எழுதி
என் பெயரை
என் கைநாட்டுக்குப் பின்
யாரோ ஒருவர் எழுதிக் கொள்ள எப்படிச் சம்மதித்தது மனது?
யாரோ ஒருவரின் குரலில்
தன்மானம் கூசச் செய்யாமல்
எப்படி என் காதுகள் கேட்டன செய்தித்தாளின் வரிகளை புத்தகத்தின் வரிகளை அழைப்பிதழ்களின் வரிகளை...?
புதிய பாரத எழுத்தறிவு திட்ட அழைப்பு
வெட்கம் பூக்கப் பூக்கத்தான்
களம் செல்ல எத்தனித்தேன்
தயக்கம் அழுத்த அழுத்தத்தான் வேண்டாம் எனத் தயங்கியும் நின்றேன்
காலம் போன கடைசியில் என்ற பரிகாசம் கேட்க கேட்கத்தான் கொஞ்சம் பம்மிக் கொள்ளவும் செய்தேன்
வாழ்வின் அந்திமக்காலத்திற்குள் முடிந்தளவு
என்னை நான் எழுத படிக்க
உங்களை நான் எழுத படிக்க
இதை விட்டால் வேறு கதி என்ன...?
மெல்ல மெல்ல அறியாமைப் படிகளைக் கடந்தேன் தன்னார்வலர்களும்
கல்வித்துறைப் பெருமக்களும் கத்தியின்றி இரத்தம் இன்றி புத்தியில் செய்த பெரும் புரட்சி
சீரியதோர் சிகிச்சை
கல்விக்கண்ணைத் திறந்து வைத்தது
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கரங்களை
இன்னும் ஆதுரமாகப் பற்றிக் கொண்டேன்
வாசிக்க வாசிக்க
உணர உணர
கல்வி சுகம்
கடல் சுகம்
வானம் சுகம்
பூமி சுகம்
இயற்கை சுகம்
ஆறறிவு சுகம்
மனிதம் சுகம்
இரு கண்ணின் ஒளியுடன்
இன்று மூன்றாவது கண்ணும்
பிறந்து விட்டது
எதிர்ப்படும்
எல்லோரிடமும் சொல்கிறேன் உலகைப் படிக்க
உன்னைப் படிக்க
முதலில் படி
படிக்கும் வயதில் படி
பாதைகள் திறக்கும்
வாழ்வு சிறக்கும்
வாய்ப்பிற்கு நன்றி
இப்படிக்கு
நேற்று வரை ஏய் பெருசு
என்று அழைக்கப்பட்ட
அமரர் கதிர்வேல் மகன்
திரு. கா. பெரியசாமி.
இளமையிலேயே கற்று இருந்தால் இன்னும் கெத்தாகச் சொல்லி இருக்கலாம்
இப்படிக்கு
உயர்திரு கா. பெரியசாமி
மாவட்ட ஆட்சியர் என்று கூட...
///புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட மண்டல அளவிலான போட்டியில் "வாசிக்க" எழுதிச் செல்லப்பட்ட கவிதை வரிகள். கற்போரும் கற்பிப்போரும் ஆர்வ மிகுதியால் மேடையை ஆக்கிரமிக்க, அவர்களுக்கு வழிவிட்டு... இந்த வரிகள் இந்தப் பக்கத்தில்...///
பெ.விஜயராஜ் காந்தி
@ யாழ் தண்விகா
பெரியகுளம்.
❣️