Sunday, 9 November 2025

பெறுநர், தேவதை, வானவில் வீதி - 143 #துளசி வேந்தன்


பெறுநர், தேவதை, வானவில் வீதி – 143

துளசி வேந்தன் 

படைப்பு பதிப்பகம்

விலை : 100

பக்கங்கள் : 116


காதலாகிப் போன கவிஞனின் கவிதைகள்...


நாடி, நரம்பு, எலும்பு, தசை அத்தனையிலும் காதலால் ஆன மனிதரால் தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும் என்றெண்ணும் வகைக் கவிதைகள். தபூ சங்கரை வாசிக்கும்போது உண்டான வியப்பையும் கடந்து நிற்க வைத்துவிட்டன கவிதைகள். பதிப்பாளரும் கவிஞருமான Mohamed Ali Jinna தோழர் அவர்கள் தன்னுடைய பதிப்புரையில் ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராகப் பணி புரிவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனக்கென்னமோ காதல் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறாரோ என்று தோன்றுகிறது. கவிஞர், தன்னுடைய நூலை மனைவிகளையும் காதலிகளையும் தேவதைகளாய் கொண்டாடித் தீர்க்கும் மொத்த ஆடவர் உலகத்திற்கும் சமர்ப்பணம் செய்துள்ளார். அது, மனைவிகளையும் காதலிகளையும் “தேவைதைகளாய்” கொண்டாடித் தீர்க்கும் மொத்த ஆடவர் உலகத்திற்கும் சமர்ப்பணம் என்று உள்ளது. பிழையாக இதைக் கருத முடியவில்லை. மனைவியோ காதலியோ இல்லாமல் அது ஒரு வாழ்வா... காதலுக்கும் காதலிக்கவும் அவர்கள் இல்லாமல் எப்படி... இவை போன்ற கவிதைகளை உடனிருந்து ரசிக்கக் கிடைத்த மனைவிகள், காதலிகள் கொடுத்து வைத்தவர்கள். மனித வாழ்வு சுபிட்சம் பெறத் “தேவை” தேவதைகள்...!


தபூவின் கவிதை ஒன்று...

“பல நூற்றாண்டுகள் ஆகுமாமே

ஒரு வைரம் உருவாக

நீ மட்டும் எப்படி

பத்தே மாதத்தில் உருவானாய்” தேவதைகளின் தேவதை விகடனில் வெளிவந்த காலத்தில் படித்தவுடன் சிலிர்த்த காலம் அது. கவிஞர் துளசி வேந்தன் தொகுப்பின் முதல் கவிதையாக கீழ்க்கண்ட கவிதையை வைத்துள்ளார்.

“நீ சிசேரியன்

செய்துதான் பிறந்தாயாமே?

என்ன செய்வது,


வெட்டித்தானே 

எடுக்கவேண்டும் வைரத்தை!” மிரண்டுட்டேன் கவிஞரே. சிசேரியனை இப்படியெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா... காதலி கொடுத்து வைத்தவர். (காதலியின் அம்மா ஓரமாக நின்று தனக்கு செய்யப்பட்ட சிசேரியனையும் சிசேரியனுக்கான காரணத்தையும் மருமகன் எழுதிய கவிதையை வைத்து (மகளுக்காக) ரசித்துக்கொள்ளவும்!)


“உன் அரை மணி நேர அலங்காரம்

நான் அரை நொடியில் 

கலைக்கத்தானே...” 

என்கிறது ஒரு கவிதை.

கொஞ்சம் பொறுமையும் கொஞ்சும் கால அவகாச நீட்டிப்பும் காதல் கேட்கிறது கவிஞரே. செவி மடுக்கவும்.


காவல் நிலையமா? காதல் நிலையமா? குழப்பம் தந்துவிட்டது ஒரு கவிதை. ஆனால் விழும் அடி ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று உயிரைக் கேட்க வைக்கிறது. 

“விசாரணை என்று

காதல் நிலையம் அழைத்துவந்து


வெட்கத்தால் அடிக்கிறாய் நீ!”

வலிக்குமா என்ன வெட்க அடிகள்...!


மச்சம் என்றால் என்ன? என்பதற்கு விளக்கம் தருகிறது ஒரு கவிதை. மச்சமே விழித்துப் பார்க்கும் கணம் அது.

“உன் அழகில்

பிரம்மன் மெய்மறந்த 

இடமெல்லாம்,


“மச்சங்கள்”.


தொகுப்பெங்கும் துணுக்குகள் போலிருக்கும் ஒவ்வொன்றும் கூட மின்மினிகளாய் கவிதை வாசம் பரப்புகிறது.

“ஆயுள் சந்தா கட்டி

படிக்கவேண்டிய இதழ்

உன்னுடையது”

“அடிக்கும் பறை நானுனக்கு

அதிர்வுகள் நீயெனக்கு”

“குழந்தை போல

பேசுமுனக்கு

முப்பத்தி இரண்டும் 

பால் பற்கள்”

“உன் நிழலுக்கு

நெத்திச் சுட்டியாய்,

உதிர்ந்த பூவொன்று...” (22 & 28 இரு பக்கங்களில் உள்ளது)


மதங்கள் நிறைய இருந்தாலும் மும்மதம் மட்டுமே பிரதானமாக சொல்லக் கேட்டிருக்கிறோம். தொகுப்பில் மூன்று மதம் சார்ந்த கவிதைகள் சொல்லி, காதலின் மதச் சார்பின்மையைக் காட்டுகிறார் கவிஞர். காணும் காட்சி யாவும் காதல் என்றால் மதமும் காதலாதல் சரிதான்.

“அய்யர் உன் தலையில்

சடாரி வைக்கும்போது

அனிச்சையாய் குனிகிறார்

பெருமாள்”

(சடாரி என்றால் பெருமாளின் திருப்பாதமாகப் பாவித்து தலையில் வைக்கப்படும் கிரீடமாம். கூகுள் சொன்ன தகவல். இன்னைக்குத்தான் தெரியும்)

“நீ சொல்லும்

ஸ்தோத்திரங்கள்


சிலுவையில் அறையுண்ட

இயேசுவுக்கு ஒத்தடங்கள்”


உசைன் பாய்

சாம்பிராணி தூவி

தூபமிட்டுப் போவது போலவே

நீயுன் வெட்கத்தைத் தூவி

காதலிட்டுப் போகிறாய்...”

சநாதனத்திற்கு எதிராக, எல்லா மதத்தையும் சமமாகப் பாவித்து காதலிட்ட கவிதைகள் படைத்திட்ட கவிஞருக்கு வாழ்த்துகள்...


ஒன்றிரண்டு கவிதைகள் ஒரே சாயலில் இருக்கிறது கவிஞரே.

“புயலுக்குப் பெயர் சூட்டும்

வழக்கத்தைக் கண்டுபிடித்தது

உன் அப்பன் தான்...”

“நான் மட்டும் 

வானிலை ஆய்வுத்துறையில்

இருந்திருந்தால்

உன் செல்லப் பெயர்களைத்தான்

புயல்களுக்குச் சூட்டிக் கொண்டிருப்பேன்...”

(போலவே 28 ம் பக்க பிள்ளையார் கவிதையும் 110 ம் பக்க கண்ணாடிக் கவிதையும்...) கூறியது கூறல் ஒரு குற்றம் என்பார்கள். காதலில், காதல் கவிதைகளில் குற்றம் காண்பது தவறு என்றாலும் சொல்லி வைக்கிறேன்.


அறிவியலைக் காட்சிப்படுத்துவது போல பல கவிதைகள். கற்பனை எண்ணத்தை ஓடவிட்டு காதலை ரசிக்க வைக்கிறது வரிகள்.

“இரவும் 

மழையும்

சன்னலும்

மின்னலும்

உன் முகமும்

ஒரே நேர்கோட்டில்

சந்திக்கிற நிகழ்வுதான்

எனக்குக் காதல் கிரகணம்”

எப்படியெல்லாம் மனுஷன் யோசிக்கிறார் என யோசிக்க வைக்கிறார் கவிஞர். இப்படித்தான் போகிற போக்கில் பெரும் ஏக்கமொன்றையும் கவிதையாக்கி வைத்திருக்கிறார் கவிஞர்.

கனவில் கூட 

கதவடைத்துக்கொண்டுதான்,

ஆடை மாற்றுகிறாய்

நீ...”


காதலில் நனைந்து, மூழ்கி, திளைத்து, அதற்குள்ளேயே மூர்ச்சையாக்குவதுபோல கவிதைகள். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பது போல காண்பவை யாவும் காதலாகவே தெரிவது கவிஞருக்கு கிடைத்த வரம்தான். அட, ஆமால்ல… அடடா... ப்ச் என்னா மனுஷன்யா... கவிஞன்யா... என்று வாசிக்கும்போது நம்மை உச்சரிக்க வைத்த சொற்கள் அனைத்தும் கவிஞருக்கான மகுடங்கள். அவை எப்போதும் கவிஞருக்குக் கிடைக்கும். கவிஞரின் பார்வைக்கு பேரன்பு.

“சிவாஜிகணேசன் நடிக்குமளவு

இல்லையென்றாலும்

ஓரளவு காதலிக்கத் தெரியும் உன்னை” என்கிறார் கவிஞர். ஓரளவில்லை. மிகச் சிறப்பாகவே காதலிக்கிறீர்கள். இலக்கிய உலகிலும், சமூகத்திலும் காதல் பரவ, காதலைக் கொண்டாட கவிதைகள் படைத்துக் கொண்டேயிருங்கள். அட்டைப்படம் சிறப்பு. வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

No comments:

Post a Comment