❤️
காதல்
ஒரு சொல் கவிதை...
❤️
வைரம் பாய்ந்த மரம்
உறுதியாய் இருக்கும்
காதல் பாய்ந்த மனம்
மென்மையாய் இருக்கும்.
எனக்குள் பாய்ந்த
காதல் நீ.
❤️
அவ்வப்போது கேட்பாய்
ப்பா
என்னைப் பிடிக்கும்ல எப்போதும்...
அன்பின் அழகும்
காதல் அழகும்
உன்னில் கூடும்போது
திகட்டி விடுவாயா என்ன...
❤️
அங்கங்களை
இதழ்களால் வர்ணிக்கும்போது
போங்கப்பா எனச் சொல்லும்
நீதான்
எழுத்தால் வர்ணிக்கும்போது
வெட்கத்தால்
சொற்களை
மேலும் வசீகரிக்கிறாய்...
❤️
ஒரு நாளில்
ஒரு பொழுதேனும்
உன் குரல் கேட்டுவிட வேண்டும்
காதல் மயக்கம்
பொல்லாதது...
❤️
தோளில் கை போட்டு
நடந்து வருகிறேன்
உன்னோடு...
என் கையை எடுத்து
உன் இடையில் வைத்து
நடக்கிறாய்
பேச்சு பேச்சாக
இருந்தபோதும்...
இது எப்படா நடந்துச்சு...
இனி நடக்கும்ல...
இன்னும் நிறைய நாளாகுமா...
வா இப்பொழுதே நடப்போம்...
❤️
உன் சட்டையில்
நம் வாசனை
நீ மட்டும் உள்ள சட்டை
தாயேன்
புதுச் சட்டையின் காலர்ல
மஞ்சள் படுதோ இல்லையோ
உன் மஞ்சத்தின் மஞ்சள்
பட்டு விடுகிறது.
பிறகெப்படி
நான் மட்டுமிருப்பேன்...
❤️
கைகளுக்குள் ஊர்கிறது
சிலை தடவிய நுட்பம்
உன்னோடு வாழ்ந்த பின்...
❤️
உங்களோட வாழ்ந்த சந்தோசம்
போதும்ப்பா
இனி நான் செத்தாலும்
கவலையில்ல
உன்னோட வாழ்ந்த சந்தோசம்
பத்தாதுப்பா
இன்னமும் நான் வாழவேண்டும்
உன்னோட
❤️
கூந்தல் கலைந்து
முகம் காம நிறம் போர்த்தி
கண்கள் செருகும் மயக்கத்தில்
எதுவும் பேசாமல்
வெட்கத்தில்
தோள் இழுத்து நெருங்கிப் படுத்து
உடலை சரணாகதியாக்கித் தந்து
மெல்லக் கண்கள் மூடுகிறாய்
காதல் மகுடம் மின்னத் தொடங்குகிறது.
❤️
அந்த நேரத்துக் கவிதைகளை
இதழ்ச் சொற்களால்
மீளாய்வு செய்யத் தலைப்படுவேன்
வேண்டாம் என்று
இரு கரங்களாலும்
என்னிதழ் மூடுவாய்
மீண்டும் இதழ் திறப்பேன்
உன்னிதழால் என்னிதழ் மூடுவாய்
அந்த நேரத்துக் கவிதைகள்
மீண்டும் புதிதாய் பூக்கும்...
யாழ் தண்விகா
அழகான காதல் கவிதை. கவிஞரின் வரிகள் காதலின் ஆழத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது..காதலும் காமமும் ஒன்றாக ஒத்திசைந்துள்ளது
ReplyDeleteகாதல் பாய்ந்த மனம் மென்மையாக இருக்கும்.
உண்மை..
அன்பின் அழகும். காதலின் அழகும் கூடி விட திகட்டி விடுவாயா என்ன..
சரிதானே.. உண்மைக்காதல் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் நரைகூடி தோல் சுருங்கிப் போனாலும் நிலைத்து நிற்கும்
காதலுக்கு அழிவுண்டோ இப்பேரண்டத்தில்
என்பதை கவிஞரின் வரிகள் காதல் சமைத்துக் தருகின்றன.
காதலின் நீட்சியானகாமத்தின் பேராட்சியை இனிக்க இனிக்க வழங்குகிறது கவிஞரின் காதலிஸம்.
மொத்தத்தில் வரிகள் காதலின் காதலி..
காமத்தின் மனைவி..
வாழ்த்துகள்..