தேவதை புராணம்
சி.சரவண கார்த்திகேயன்
Saravanakarthikeyan Chinnadurai
எழுத்து பிரசுரம்
78 பக்கங்கள் 90 ரூபாய்
காதல் என்பது வரம். யோசித்துப் பார்த்தால் காதல் கிடைப்பதற்காக, கிடைத்த காதலை தக்க வைப்பதற்காக, விலகிப்போன காதலை நினைப்பதற்காக நாம் செய்யும் எல்லாம் அபத்தம்தான். ஆனபோதிலும் காதல் என்பது சுனையில் ஊறும் ஊற்று. காதல் வழக்கமாகப் பொழியும் மழையின் ஊடே வந்து விழும் ஆலங்கட்டி. காதல் உயிரைப் பூக்கவைக்கும் அற்புதச் செடி என்று சொல்லிக்கொண்டே இருக்கிறோம். அது கணநேரத்தில் பிரசவிக்கப்படும் மாய தேவதையும் தான். உடனிருக்கும். கிச்சுக்கிச்சு மூட்டும். மயக்கம் உண்டாக்கும். அழவைக்கும். அச மந்தமாகத் திரியவைக்கும். எப்படி நாம் அதனோடு இதயம் கோர்த்துத் திரியவேண்டும் என்றுணர்தல் பெரும் கலை. அதைச் செய்யத் தெரிந்தால் எப்போதும் காதலோடு திரியலாம்.
தேவதை புராணம் கவிதைத் தொகுப்பு என்பதை விட காதலால், காதல் சொற்களால், காதல் செயல்களால் நிரம்பிய தொகுப்பு. காதலித்துக் கைத்தலம் பற்றிய தன் மனைவிக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார் கவிஞர். காலம் முழுக்க செய்த, செய்யும், செய்யப்போகும் காதலுக்குச் செய்திருக்கும் ஆகப்பெரும் மரியாதையாகக் கொள்ளலாம் தொகுப்பை. முன்னுரையில் இத்தொகுப்பு பற்றிக் கூறும்போது சங்ககாலத் தலைவி கூற்று போல இது சம காலத் தலைவி கூற்று என்கிறார் கவிஞர். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, மற்றும் பேரிளம் பெண் ஆகிய ஏழு பருவங்களிலும் ஒரு பெண்ணில் உண்டாகும் மனத்தின் பேராசையைக் கவிதை என்ற கட்டுக்குள் நிறுத்தி வார்த்திருக்கிறார். பெண்ணின் இடத்தில் நின்று பெண்ணின் வலியைப் பேசுதல் தான் சிறப்பாக இருக்கும் என்பார்கள். இங்கு கவிஞர் ஆணாக இருப்பினும் பெண்ணின் ஆசைகளை, விருப்பை, ஏக்கத்தினைப் பதிவு செய்திருக்கிறார் அற்புதமாக.
பெண்ணின் பார்வை அனைத்தும் மிக நாசூக்காக இருக்கும். அவர்கள் பார்க்காத கோணங்களைக் கூட கவிஞர் என் பேதையின் விருப்பம் இப்படிப்பட்டதாக இருக்கும், இப்படியும் இருக்கும் என்கிறார்.
“தெருவோரம் நின்ற வாக்கில்
சுவற்றோவியம் வரைந்தபடி
வெளிர் மஞ்சள் நிறச் சிறுநீர்
கழிக்குமுந்தன் சௌகரியம்
பொறாமை தருகிறதெனக்கு”
இந்த வரிகள் வெறுமனே காதலை மட்டுமா சொல்கிறது? பெண்ணின் விருப்பம் என்பதற்குள் தொனிக்கும் சுதந்திரம் என்பதையும் தான் சொல்கிறது.
“நீயும் நானும்
சேர்ந்து நடக்கையில்
சில சமயம் விரலுரச,
பரஸ்பரம் புன்னகைப்போம்-
அதற்கு என்ன அர்த்தம்?”
வாழ்வின் பல சூழலில் இது போன்று பலருக்கு நிகழ்ந்திருக்கலாம். பருவங்களைப் பிரித்து இதனை பெதும்பை பருவத்தில் வரும் கவிதையாக கவிஞர் வைத்திருக்கிறார். 8 முதல் 11 வயதின் நினைவை மீட்டுக் கொடுக்கிறது வரிகள். புன்னகையை விட அங்கு வேறொன்றும் அடையாளம் காணப்பட்டிருக்காது எனினும் அந்த மகிழ்வு அட்டகாசமாக இருக்கிறதில்லையா...
12 முதல் 13 வயதுப் பருவம். பருவத்திற்கான பருவம். முதல் கவிதை இப்படித் தொடங்குகிறது.
“நான் பூப்படைந்த கணத்தில்
என்ன செய்து கொண்டிருந்தாய்
நீ”
ஒரு விசாரணை போல் இருக்கும் வரிக்குள் அப்பெண் தனக்குப் பிடித்தவனிடம் கேட்பது அதற்காக அல்ல. அந்தக் கணத்தில் அவன் என்ன செய்தான் என்பதைத் தெரிந்து அடையும் சிறு பூரிப்புக்காக, சிறு மகிழ்வுக்காக. சிறு குறுகுறுப்பிற்காக. எனக்கு இப்படி ஆச்சு தெரியுமா... அப்ப நீ என்ன பண்ணிட்டிருந்த என பூப்படைந்த ஒரு பெண் தனக்குப் பிடித்தவனிடம் கேட்பதுபோல் கேட்டுப் பாருங்கள். அந்த வரிக்குள் இருக்கும் பருவத் தேடலின் ஆதி அந்தம் உணரலாம்.
“நீ அழுந்தப் பார்த்தாலே
தள்ளிப் போகிறதென்
மாத விலக்கு நாட்கள்”
“தீட்டுக் கழியும் நாட்களில்
தனியாயுன்னிடம் மாட்டி
அவஸ்தைப்படுவேன் – சுகம்”
இப்படியான கவிதைகள் மத்தியில், நின்று நிதானித்து அந்தச் சூழலுக்குள் சென்று ஒரு பொழுதைப் பார்க்கும் வண்ணம் ஒரு கவிதை. அதனை கொண்டாடுதல் என்பதா? வலியைத் தாங்கும் இளம் குருத்துகள் மனம் அறிந்து கலங்குவதா? அல்லது பிடித்தவன் முன்னால் இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது என்பதை அறிந்து உள்மகிழ்வதா...? எனப் பல எண்ணங்கள்.
“உன்னிடம் சொல்லியதில்லை இதுவரை-
உன்னைப் பார்த்துக்கொண்டிருந்த போதே
வகுப்பிலொரு சமயத்தில் விலக்கானதை”
இப்படி மாத விலக்கு குறித்த கவிதைகள் தொடர்ந்து அந்தப் பருவத்தின் பார்வைகள் எப்படியிருக்கும் என்பதாக நீள்கிறது கவிதைகள். காதல் பெருக்கெடுத்து ஓடுவது தெரியாமலே ஓடும் தருணம்.
‘என்னிடம் எதை ரசிப்பதென
விவஸ்தையே கிடையாது-
போடா, காதல் பொறுக்கி!
மடந்தைப் பருவத்தின் சேட்டைகள் வெட்கம், கள்ளத்தனம், முத்தம், காதல் அறிதல், பகிர்தல் எனப் புதுப் பாதையில் பயணிக்கிறது.
“யாரோ தூரக்குரலழைக்க
நமைத் தனியே விடுத்து
உனதன்னை விலகிய
சிறு இடைவெளியில்
எனைக் கதவடைத்துக்
கலைத்தவன்தானே நீ”
செய்வான் அவன் எனினும் எதிர்பார்த்துக் காத்திருப்பவள் அல்லது எதிர்ப்பைக் காட்டாது ஏற்றுக்கொள்பவள் என மடந்தை இருப்பாள் என்பதை வரிகள் சொல்கிறது. இல்லறத்திற்குள் கண்டாடும் சுகங்கள் கவிதைகள் என்றும் சொல்லலாம் காட்சிப் படுத்துதல் என்றும் சொல்லலாம் எனுமளவு சிறப்பு.
“உச்சம் ஒரே கணம்
உனக்கு – எனக்கோ
ஒவ்வொரு கணமும்”
“காதோரம்
கழுத்தோரம்
உதட்டோரம்
உயிரோரம்
பரவும் தீ – நீ”
“உன் காமம் பிடிக்கும்;
அதைவிடப் பிடிக்கும்
அதற்கும் முந்தைய...”
காதல் வாழ்வின் உச்ச காலத்தில் (வயது 31-40) இல்லறத்தின் மேல் பூக்கத் தொடங்கும் ஆசுவாசம், நம்பிக்கை, வாழ்ந்த காலத்தினால் உயிரில் உண்டாகிக் கிடக்கும் கிளர்ச்சியால் மந்தகாசம் உண்டுபண்ணும் சுகம் இத்தருணங்கள் கண்ணீரையும் வரவழைக்கும் போல. ஏற்கனவே சொல்லியிருந்தாலும் “பெண்ணின் மொழியில்” இக்கவிதைகளை வாசித்துப் பாருங்கள். எத்தனை சுகம்...
“உனக்கெந்தன் தாய்மையின்
கருவறைக் கதகதப்புத் தராத
துக்கமுண்டு என்றுமெனக்கு”
இருக்கும் பேரன்பு எல்லாவற்றையும் உனக்குத் தந்துவிட்டேன். தராத மிச்சம் இதுதான் எனமளவு காதல் சொல்லும் வரிகள்.
“உனக்கு முன்னர் நானெனில்
எனக்கு நீ நீராட்ட வேண்டும்
எனக்கு முன்னால் நீயெனில்
உனக்கு நான் தீமூட்ட வேண்டும்”
இறப்பு நேருமிடத்திலும் காதலின் ஆசை எப்படிப்பட்டதாக இருக்கிறது...? கண்ணீரோடும் வாசிக்க கவிதைக் காதல் வழி சொல்லுகிறது.
இன்னும் மின்னும் பல கவிதைகள் தொகுப்பெங்கும். காதலைக் காதலிக்கும் ஒவ்வொரு ஜீவனும் வாசிக்கவேண்டிய தொகுப்பு. கூடு விட்டுக் கூடு பாய்ந்து ஒரு ஆண் பெண்ணின் இடத்தில் நின்று எழுதியதன் மூலம் காதலனின் விருப்பம் இதுவெனவும் அறியலாம். ஒரு பெண் ஆணுக்கு அளிக்க வேண்டிய காதலையும் அறியலாம். சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை. சில பல இடங்களில் சொல்லித் தெரிந்துகொண்டால் / கேட்டு/ வாசித்துத் தெரிந்துகொண்டால் இன்னும் சிறக்கும் மன்மதக் காதல் கலை. முக்கியமாக கவிஞரை வாசித்தால் இன்னும் சிறக்கச் செய்யலாம்.
வாழ்த்துகள் தோழர்.
யாழ் தண்விகா
சிறப்பான பார்வை.
ReplyDeleteகாதலின் உயிர்ப்பைச் சுமக்கிறது நூலாசிரியரின் வரிகள். அதை பக்குவமாக பதப்படுத்தி படையலிட்டிருப்பது வாசகரின் சிறப்பு. எந்த நூலை வாசித்தாலும் ஏதொரு பதிவை உண்டாலும் அவற்றைப் பற்றிய இரண்டு வரியேனும் எழுதி வழுங்குவது வாசகக் கடமையும் கௌரவமும். வாசகர் அதைச் சிறப்பாகச் செய்துமுடித்துள்ளார். வாழ்த்துகள்.