Wednesday, 25 May 2022

உயிர் மீளாத நாட்கள்



 ❣️

கடைசியாய் நீ எதிர்பார்த்தது நடந்தேறிவிட்டது 

எப்பொழுதும்போல் காத்திருக்க 

மனது சொல்கிறது காத்துக்கொண்டிருக்கிறேன் 

அதே வலிகளுடன் 

அதே காதலுடன் 

அதே காமத்துடன் 


❣️

நீ இல்லாத நாட்கள் 

உயிர் மீளாத நாட்கள்


❣️

என்னை நான் எப்படி 

மீட்டெடுக்கப் போகிறேன் 

தெரியவில்லை 

ஆனால் நான் உன்னில் 

உரையாடிக் கொண்டிருக்கிறேன் உனக்குத் தெரியாமல் 

உன் காதலுக்குத் தெரியாமல் 

உன் உயிருக்குத் தெரியாமல் 

உன் உணர்வுகளுக்குத் தெரியாமல் 

என் காதல் எப்பொழுதும்போல் உன்னோடு இருக்கிறது 

என்னை நான் எப்படி 

மீட்டெடுக்கப் போகிறேன் 

தெரியவில்லை


❣️

உன் உறவற்ற நேரங்களில் 

உயிர் தொலைந்து போனால் என்ன


❣️

என் ரேகைகள் எல்லாம் 

உன் ஸ்பரிசம் என மாறிக் கிடக்கிறது

நான் நானாகப் புறத்திலும் இல்லை

அகத்திலும் இல்லை


❣️

கோட்டை சிதிலமடைந்து போகும் முன்பு உயிர் பிரிந்துவிட வேண்டும்

கோட்டையில் வாழ்வதும் 

கோட்டை சிதிலமடைந்து போனபோது வாழ்வதும் 

இனி கோட்டையில் வாழ்ந்த வாழ்வு

கிடைக்குமா என வாழ்வதும் 

எப்படி ஒரு வாழ்வாக இருக்கும்...

உன்னோடு நான் மீண்டும் கூடுவேனா...


❣️

எனக்கென்று எந்தத் தனிமையும்

வாய்க்கவில்லை நேற்று 

தனிமைக்கென்று வாய்த்திருக்கிறேன் இன்று...


❣️

எரியாத அடுப்புக்குள் பூனை படுத்திருப்பது போல 

நீயிருந்த இடத்தில் உன் நினைவை வைத்து அதன்மேல் என் கைகளைப் படரவிட்டுள்ளேன்...


❣️

நீயும் நானும் வாழ்ந்த ஏகாந்த உலகத்தில்

காதலும் காமமும் பிரதானமாகக் கிடந்தது 

இன்று நீயும் நானும் உடலாக மட்டும் கிடக்கிறோம் 

காதலும் காமமும்

பரிதவித்துக் கிடக்கிறது...


❣️

இந்தக் காலத்திற்காகவா 

நாம் காதலித்துக் கிடந்தோம்...


யாழ் தண்விகா

No comments:

Post a Comment