Thursday, 26 May 2022

ஆதலினால்...




 ஒரு பைத்தியத்திற்கான

அத்தனை தகுதியும் 

எனக்கிருப்பதாகச் சொல்கிறாய்

ஆம் என்பதைத் தவிர

வேறு வழியில்லை 

என்றில்லை

குற்றம் சாட்டுவது என்றபின்

சமாதானங்கள் என்ன 

செய்துவிடப் போகிறது

பைத்தியம் காதலிக்கும்

பைத்தியத்தின் காதல் 

பைத்தியக்காரத்தனம் தான்

பைத்தியத்தின் ஏகாந்தம்

யாருக்கும் எந்த சலனத்தையும்

உண்டாக்காது

பைத்தியத்தின் சொற்கள்

யாருக்கும் புரிய அவசியமில்லை

பைத்தியத்தின் சுவாசம் குறித்து

யாரும் கவலைப்பட அவசியமில்லை

பைத்தியத்தின் உணவு குறித்தும்

அவசியமில்லை

பசித்தால் கையேந்தப் போகிறான்

பைத்தியத்தின் இருப்பை

யாரும் பார்த்துக் கொண்டேயிருக்க

என்னவிருக்கிறது

காணாமல் போனால் 

பைத்தியம் எங்காவது போயிருக்கும்

என்று சொல்லிக் கடக்கலாம்

பைத்தியத்தின் பார்வைக்கு இரங்கி 

யாரும் கண்ணீர் துடைத்து

வீட்டில் சேர்த்துக் கொள்ளப் போகிறார்களா

பைத்தியத்தின் பாடலுக்கு

யாரும் தலையாட்ட வேண்டியதில்லை

பைத்தியத்தின் வேண்டுகோள்

ஒன்றே ஒன்றுதான்

அதன் காதுபட

பைத்தியம் என்றழைக்க வேண்டாம்

என்பது மட்டுமே.


இனியொரு போதும்

பைத்தியம் என்றழைக்காதே

என் காதல் 

இன்னும் பைத்தியமாகிவிடும்...


யாழ் தண்விகா

No comments:

Post a Comment