💝
உடனடியாக ஒரு கவிதை சொல்
என யாரோ கேட்டால்
பரவாயில்லை
நீ கேட்டால்
என்ன செய்வேன்...
உடனடியாகச் சொல்லி
உன் இதயம் கவர
ஒரு முத்தம் மட்டுமே
தர முடியும்.
தந்துவிட்டேன்...
கவிதை குறித்து
நீ இன்னும்
வாய் திறக்கவில்லை.
அது
இதழுள் புகுந்து
உயிரைச் சேரும்
உயர் கவிதை தான் போல...
💝
தேன் சேகரிக்கும் கிண்ணம்
உன்னில்
இதழ்கள் வடிவத்தில்
இருக்கின்றன...
💝
காதலிக்கப்படுதல் என்பது
காதலித்தலைவிட
புனிதமானது...
💝
உன் பாதங்கள்
உள்ளங்கைகள்
நிலாவின்
மாற்று வடிவங்கள்...
💝
யார் நீ
என்னை கொல்லவும் செய்கிறாய்
என்னை மீட்கவும் செய்கிறாய்
💝
புனிதம் என்பது
அடிமைப்படுத்த அல்ல...
என்னை ஆண்டுகொள்ள
நான் அளிக்கும்
ஒப்புதல் சாசனத்தின்
முதல் வரி...
என் புனிதம் நீ...
💝
என் கண்ணே
உன்னைக் கண் வைத்து
திருஷ்டி உண்டாக்கி விடக்கூடாது
என்பதற்காக
காமம் தோற்றுவித்த ரகசிய சுழிகள்
மச்சங்கள்...
💝
ரொம்பக் கிறக்கமா இருக்கிறது
என்பாய்
அது முத்தம் கேட்டலின்
மாற்று மொழி
என அறியும்
காதல்...
💝
பூமியைத் தொட்டுக்கொண்டிருக்கிறது
உன் பாதங்கள்...
நீ நடமாடும் பூவாக இருக்கிறாய்...
💝
நாட்பட்ட பழச்சாறு
நொதிக்கப்பட்ட மதுவாக
மாற்றம் பெறுகிறது...
நாட்பட்ட இதழ்த்தேன்
மதிப்புக்கூட்டப்பட்ட சுவையாக
ஏற்றம் பெறுகிறது...
யாழ் தண்விகா
No comments:
Post a Comment