Thursday, 30 June 2022

புடவை கட்டும் பூ...


❣️

பேசிக் கொள்வதில்லை

பார்த்துக் கொள்வதில்லை

ஆனாலும் பேசும்

பார்க்கும்

நினைவில் நின்று கொல்லும்

உன் அழகு...


❣️

விழாவுக்குச் சென்று வந்த புடவையில்

போட்டோ அனுப்பிருக்கேன்

பாருங்க நல்லாருக்கான்னு...


விழாவே நல்லாருக்கு

நீ கலந்திட்டதால...


❣️

புதுப் புடவை கட்டி வந்து

என் முன்னும் பின்னும்

நீ நடந்த சமயம்...


எப்படிப் பேசுவது

நாம்தான் சண்டை போட்டுவிட்டோமே

என மனசு யோசிக்குது

உனக்கு யோசனை வரலையா


யோசிச்சா நீ எதுக்கு என்முன்னால்

நடக்கப்போற...

ஆக...

நானும் யோசிக்கக்கூடாது...


பேசிட்டேன்...

"ரொம்ப அழகாருக்க

இந்தப் புடவை

உன் அழகை இன்னும் மெருகேத்துது

பேசாம நான் போனேன்னா

அது உன்னோட அழகுக்குச் செய்யும் பாவம்

புதுப் புடவை கட்டி

என் முன்னால் பின்னால் நடந்தா மட்டும் போதாது

முத்தமும் கொடுக்கணும்

கொடுத்திருக்கணும்

நாளை மற்றுமொரு நாளே இல்லை.

முத்தம் பெறும் நாளாகவும் இருக்கலாம்.

சம்மதம் தானே..."


❣️

அன்றன்றைக்கு

நீ கட்டும் புடவையின் நிறத்தில் தான்

என் அன்றன்றைய

பொழுதின் நிறங்கள்...


❣️

எப்படியும் என்னை உன்னோடு 

பேச வைக்கும் அழகை

வைத்துக்கொண்டிருக்கிறாய்


எனக்கென்ன வீராப்பு வேண்டிக்கிடக்கிறது...


❣️

பேரழகி என்னும் சொல்லுக்குப்

பொருள் சேர்த்தது

நீ தான்...


❣️

மதுவுக்கு தன்னை போதை என்றுணரும் தருணம் எப்படி வாய்க்காதோ

போலவே

நீ பேசும் சொற்கள்

எனக்குப் போதை தரும் என்றுணரும் தருணம்

உனக்கு வாய்க்கவில்லை போல...


கிறங்குகிறேன் 

மயங்குகிறேன்

உன்னாலே...


❣️

நீயும் நானும் கட்டிப்பிடித்து

கசங்கிய உடைகளின் மடிப்புகள்தான்

காமத்தின் ரேகை...


❣️

ஆடை சூடிய கவிதை நீ...


❣️

எனது ஆடை சூடி

நானாக நடித்த நீ...


ஆடையையே பொக்கிஷம் எனப் பாதுகாத்தால்

எப்படியெல்லாம் பாதுகாக்க வேண்டும் உன்னை...!


❣️

அடுக்கி வைக்கப்பட்ட இதழ்கள் 

மலராகிறது...

அடுக்கிக் கட்டி

புடவையை

தேவதை சூடும்

மலராக்குகிறாய்...


யாழ் தண்விகா

 

No comments:

Post a Comment