ஒரு வீடு ஒரு தொழில் ஒரு கிழவன்
சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதான தோரணை
வாயில் எப்போதும் சிகரெட் புகைந்துகொண்டிருக்கும்
இரவு பகல்
மழை வெயில் பனி
எல்லாக் காலமும் வேலைக் காலம்
நோகாமல் நொங்கு தின்பது போலில்லை
நுட்பம் தெரிந்திருக்க வேண்டும்
முக்கியமாக வீட்டார் ஒத்துக்கொள்ளவேண்டும்
சொந்த வீட்டை ஒதுக்கித் தள்ளுங்கள்
பக்கத்துவீட்டுக்காரன் ஒத்துக்கொள்ளவேண்டும்
பகையாளியாக என்றும் மாறிவிடக்கூடாது
இதயத்திற்கு தான் பிணமில்லை என்றுணர்த்த
மெயின் வீதிக்குச் செல்லாமல்
கொஞ்சநேர நடை வீடுகளுக்கு இடையேயே நடப்பார்
முத்துச் சந்தின் பக்கத்திலேயே வீடு
போலீஸ் அது இது என்றால் தப்பித்து ஓடவேண்டும்
பெரும்பாலும் அதற்கு வாய்ப்பு வந்ததே இல்லை
ஒருநாளும் சத்தம் அதிகம் வந்ததேயில்லை அவ்வீட்டில்
கஸ்டமர்கள் கேட்கும் சரக்கு இருக்கும்
இல்லையென்றாலும் வேறொன்றை வாங்கிக்கொள்ளும்
கஸ்டமர்கள் வரம்தானே.
போதை தான் அங்கு கதாநாயகன்.
எதிலிருந்து வந்தால் என்ன?
எப்படிச் சரக்கு வருகிறது என்பது
தெரியவே தெரியாது
தீர்வது பற்றிச் சொல்லிவிடலாம்
பெரும்பாலும் நாற்பது கடந்தவர்கள்தான்
நிரந்தர கஸ்டமர்கள்
அதிலும் பலர் நடந்தும் சைக்கிளிலும் வருவார்கள்
சரக்கை வாங்கி இடுப்பில் சொருகிக் கொள்வார்கள்
கிளம்பி விடுவார்கள்
விற்பவரின் சொந்தமென யாரையும் வீட்டிற்குள் பார்த்ததில்லை
எம்ஜியார் பாடல்கள் மிகப்பிடித்தம் விற்பவருக்கு.
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே...
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை...
அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்... போன்ற பாடல்கள்
சுற்று வீட்டின் காதுகளை அடைக்குமாறு மாலை ஏழு மணிக்கு மேல் ஒலிக்கத் தொடங்கும்.
விக்கிறது சாராயம். இதுல தத்துவப் பாட்டு வேற
என்ற முணுமுணுப்பு எழுந்து அடங்கும்.
ஆனாலும் நேரடியாக யாரும் கேட்டு சண்டை பிடிப்பதில்லை.
அதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.
விடிந்தும் திறக்காத கதவைத் தட்டி
எட்டிப்பார்த்த முதல் குடிகாரன்தான்
கிழவன் இறந்துகிடந்ததை முதலில் பார்த்தவன்.
பக்கத்து வீட்டுக்காரர்களைக் கூப்பிட்டும்
யாரும் வீட்டிற்குள் வரவில்லை
குடிகாரன்தான் கிழவன் பக்கத்தில் சென்று
மேலும் கீழுமாக ஏறி இறங்கிக் கிடந்த கிழவனின்
கைலியைச் சரி செய்தான்
பாயில் நேராகப் படுக்க வைத்தான்
தலையணையைத் தலைக்கு அண்டக் கொடுத்தான்
கிழவன் எப்போதும் சரக்கெடுத்துத் தரும் இடத்தில்
தனக்கான சரக்கை முதன்முதலாக
அவனே எடுத்துக்கொண்டான்
கிழவனின் தலைமாட்டில் சரக்குக்கான பணத்தை
எண்ணி வைத்தான்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்கொண்டான்
வீட்டின் வெளியில் வேடிக்கை பார்ப்பவர்களிடம்
ஏழு மணிக்கெல்லாம் சரக்கு அடிக்கலைன்னா
எனக்கு உடம்பெல்லாம் நடுக்கம் கொடுத்திடும்
செத்துடலாம்போல இருக்கும்
போனவுடனே வந்துடுறேன்
ஏதும் உதவின்னா பண்ணுறேன் என்று சொல்லிக்கொண்டே சென்றுகொண்டிருந்தான்
கிழவனின் ரெகுலர் கஸ்டமர்
எவனோ ஒருவனிடமிருந்து ரோஜாப்பூ மாலையொன்று
பாடையில் போகும்போது
நிச்சயமாகக் கிழவனின் கழுத்தில் கிடக்குமென்று
நம்பிக்கை பிறந்துவிட்டது இப்போது.
யாருக்கு?
கிழவனுக்கு.
எப்படி இறந்தவனுக்கு நம்பிக்கை பிறக்கும்?
இறந்தவனுக்கு உள்ளே போய்ப் பார். தெரியும்…
யாழ் தண்விகா
No comments:
Post a Comment