#ரூஹ்
ஏழையிடமிருந்து அவனுடைய ரட்சகனுக்கு...
நாவல்
லஷ்மி சரவணகுமார்
வாழ்வின் பாதை யாராலும் நிர்ணயிக்க முடியாத ஒன்று. பூரணத்துவம் நோக்கியே இங்கு பெரும்பான்மை பயணம். ஆனால் நினைப்பது நடக்கிறதா என்பது அவரவர் மனத்தை அறிந்தால் மட்டுமே உணர இயலும். ரூஹ் என்பதற்கு ஆன்மா அல்லது உயிர் என்று பொருள். ஆன்மா எந்தக் கணம் எதை நோக்கிப் பிரயாணிக்கும்? ஆன்மா என்பதை உணரும் கணம் எது? ஆன்மாவைத் தேட வலிகள் முக்கியமா? அதீத இன்பம் முக்கியமா? விடையை சிற்சில பாத்திரங்கள் மூலம் தன்னுடைய நாவலில் கூறியிருக்கிறார் நாவலாசிரியர் லஷ்மி சரவணகுமார்.
முன்னூறு வருடங்களுக்கு முந்தைய காலத்து ரகசிய மரப்பேழை
காலச் சுழற்சியின் விளைமாக பேரையூரில் வாழும் ஜோதிலிங்கத்தின் தந்தை விட்டல் ராவ் கைகளில் கிடைக்கிறது. விட்டல் ராவ் தோல்பாவை கூத்துக் கலைஞர். ஐம்பதுகளைத் தொட்ட வயது. தன்னைத் தொடர்ந்து தன்னுடைய மகன் ஜோதிலிங்கம் அந்த கலையைத் தொடர்வான் என நினைத்தால் அவனுக்கு பெண் நளினம் வாய்த்திருக்கிறது. பெண் குரல். பலராலும் இகழ்ச்சிக்கு உள்ளாகிறான். நண்பர்களுடன் கிட்டிப்புல் விளையாடும்போது கில்லி கண்ணில் தாக்கி வீக்கமும் வலியும் உண்டாகிறது. மருத்துவமனை சென்றும் சரியாகாத நிலையில் ராபியா என்ற பெண் பள்ளிவாசல் பக்கம் மந்திரிப்பதாகக் கேள்விப்பட்டு ஜோதிலிங்கத்தை அழைத்துச் செல்கிறாள் அவள் தாய் ரத்னா. ஒரு சில நாட்களில் கண்கள் குணமாகிறது. அக்கா என்று அன்பைப் பொழியும் ஜோதிலிங்கத்தை ராபியாவிற்கும் பிடித்துப் போகிறது. ராபியா திருமானமானவள். கணவன் அன்வர். இரு குழந்தைகள். பால்ய வயதின் தடுமாற்றத்தால் ராபியாவை தவறான கண்ணோட்டத்துடன் ஜோதிலிங்கம் பார்க்கிறான். குற்ற உணர்வால் தவிக்கவும் செய்கிறான். தனது உடன்பிறந்த தங்கை தேவியையும் அதே எண்ணத்தில் பார்க்க, தேவி ராபியாவிடம் சென்று முறையிடுகிறாள். ராபியா அவனைக் கண்டிப்பதற்காக வரச் சொன்ன தருணத்திலும் மனநிலை பாதித்த ஒரு பெண்ணை காமத்துடன் பார்க்க, வெறுத்து ஒதுக்குகிறாள் ராபியா. தனது தவறுணர்ந்து, குற்ற உணர்வால் வெறுத்து வெளியூருக்கு வேலைக்குச் சென்று விடுகிறான் ஜோதிலிங்கம். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் ராபியா கடிதம் கண்ட பின்னர் ஊருக்கு வருகிறான். ராபியாவைச் சந்தித்து அவளுக்கும் குழந்தைகளுக்கும் தான் வாங்கி வந்த பொருட்களைக் கொடுத்துவிட்டுப் பேசிக் கொண்டிருக்கும்பொழுது ராபியாவின் வீட்டிற்கு கடன்காரன் வந்து சத்தம் போடுகிறான். யார் நன்றாக இருக்கவேண்டும் என வாழ்நாள் முழுதும் கனவு கண்டானோ அந்த உறவின் வீட்டிற்கு இப்படி ஒரு நிலையா என நிலைகுலைந்து போகிறான் ஜோதிலிங்கம். இந்தச் சூழலில் திருப்பூருக்கு வேலைக்குச் சென்ற ஜோதிலிங்கத்தின் தங்கை தேவி அங்கேயே நைஜீரியர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு வருகிறாள். தந்தைக்கு முதுமை காரணமாக இயலாத சூழலில் உள்ளூரில் வேலை செய்யத் தொடங்குகிறான். மாரியம்மன் கோவிலுக்கு தீச்சட்டி எடுக்கிறான். குழப்பங்கள் பலவற்றிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ள எவ்வளவோ முயற்சி செய்கிறான். தன்னால் ராபியாவின் குடும்பத்திற்கு என்ன செய்ய இயலும் என்றெல்லாம் யோசிக்கிறான். கடனால் குடிக்கு அடிமையான ராபியாவின் கணவர் அன்வர் ஒரு கட்டத்தில் திருந்தி கடன்காரர்களை நேராகச் சந்தித்து வெகு விரைவில் தன்னுடைய கடன்களை திருப்பி அளிப்பதாக உறுதி அளிக்கிறான்.
ஜோதிலிங்கம் பல தலைமுறைகளாக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் மரப்பேழையை எடுத்து அதில் உள்ள பொருள் மூலமாக அன்வரின் கடன்களை முடிப்பதற்கு அன்வரோடு இணைந்து முயற்சிக்கிறான். அந்த முடிவு அவர்களுக்கு சாதகமாக அமைந்ததா? அன்வர் ராபியா வாழ்க்கை அடுத்த கட்டம் வளர்ச்சிப் பாதையை எட்டியதா? அதன் பின் ஜோதிலிங்கம் என்னவானான்? எனபதே நாவலின் கதை.
நாவல் குறித்து லஷ்மி சரவணக்குமார்
தனிப்பட்ட வாழ்வில் எதிர்கொண்ட தோல்விகளால் தற்கொலை எண்ணங்களில் உழன்று, மாதக்கணக்கில் உறங்க முடியாமல் தவித்து, கடுமையான மன உளைச்சல்களால் மன நல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்ட சமயம் சில நண்பர்களால் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் இயக்குனர் வசந்தபாலன் கடப்பாவிலிலுள்ள அமீன் பீர் தர்காவுக்கு லஷ்மி சரவணகுமாரை அழைத்துச் செல்கிறார். அங்கும், அஜ்மீரிலும், ஏர்வாடியிலும் கேட்ட, பார்த்த, உணர்ந்த பலவும் தான் ரூஹ் எழுதுவதற்கான துவக்கப்புள்ளி என்கிறார் நாவலாசிரியர்.
பாத்திரப் படைப்பு:
தேவதையின் குணம் ராபியாவிற்கு.
தீமை செய்பவனுக்கும் நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணம் படைத்தவள். பத்து வயதிலேயே குர்ரானை முழுவதும் ஓதும் திறன் பெற்றவள். தன்னுடைய திருமணம் ஆடம்பரமாக நடத்த அன்வர் குடும்பம் முற்படும் சமயம் கூட எதற்காக இவ்வளவு செலவு செய்யவேண்டும் என ஆதங்கப் படும் எண்ணம். மனிதர்களின் காயங்களை தனது வேண்டுதலால் குணம் செய்பவள். ஜோதிலிங்கம் கண்ணில் காயத்துடன் வரும்போது தம்பி என்று அன்பைப் பொழிந்தவள். அவனின் தவறான பார்வையைத் திருத்திவிட முயற்சித்தவள். அன்வரின் ஹோட்டல் தொடங்கவேண்டும் என்ற ஆசையால் கடனாளி ஆன போதும் எல்லையில்லா அன்பைத் தனது கணவனுக்குப் பரிசளித்தவள். எல்லையில்லா, நிபந்தனையற்ற அன்பை தனக்குள் எப்போதும் கொண்டிருப்பவள்
உணர்ச்சிகளின் நீரில் மிதப்பவன் ஜோதிலிங்கம்
தனக்குள் எழும் பெண் தன்மையை கட்டுப்படுத்திக்கொண்டு சராசரி ஆணாக வாழ எத்தனித்தாலும் அதனை வாழ இயலாமல் வாழும் பாத்திரம் ஜோதிலிங்கம். கண்ணில் காயம் என்ற சூழலில் சந்திக்கும் ராபியாவை அன்போடு அக்கா என்று விளித்தவன். காலப்போக்கில் உள்ளூரக் கிடக்கும் உணர்வுகள் மேலெழ ராபியாவை, தேவியை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து குற்ற உணர்ச்சிக்கு ஆளானவன். தன்னுடைய தவறுகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிக்கொண்டே இருப்பவன். அன்வரின் கடன்களை அடைக்கவேண்டும். ராபியாவின் வாழ்க்கை சிறக்கவேண்டும் என்ற எண்ணத்தை கடைசிவரை கொண்டிருப்பவன். காலத்தின் கைகளில் தன்னை ஒப்படைத்து ஜோதிலிங்கம் என்ற மனிதனைத் தூக்கித் தூர எறிந்தவன்.
தவறுகளில் இருந்து பாடம் கற்பவன் அன்வர்
ஹோட்டல் பணியை உடன் பிறந்த ஒரு அண்ணனிடம், இரும்புத் தொழிலை இன்னொரு அண்ணனிடம் இருந்து கற்றவன். அதிக பாரம் இல்லாமல் அடுத்த கட்டம் நோக்கி முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணம் உடையவன். சிறப்பாக இண்டீரியர் பணியைச் செய்துகொண்டிருக்கும் காலத்தில் கூடுதலாக ஹோட்டல் தொழிலையும் பார்க்க ஆசைப்பட்டு கடன் வாங்குகிறான் அன்வர். அந்த பணத்தை தொழில் பங்குதாரரிடம் கொடுக்க அவன் ஏமாற்றிவிடுகிறான். கடனிலிருந்து மீள படாத பாடு படுகிறான். மாறாத சூழலால் குடிக்கிறான். தீராத மது மயக்கத்திலும் தன்னுடைய மனைவியை ஒருவன் தரக்குறைவாக பேசும்போது அவனிடம் சண்டையிடுபவன். திருந்தி வாழ முற்படுபவன்.
மதம் சார்ந்த நாவலா? மனிதம் சார்ந்த நாவலா?
இரண்டும் இருந்தாலும் இந்நாவல் பேசும் தன்மையிலிருந்து வாழ்வின் அதீதத்தை யாராலும் யூகிக்க முடியாது என்பதை உணர்த்தும் நாவல் என்று கூறலாம். அன்வரின் தந்தை காலம் முதல், அவர்களின் வீடு, தெருக்கள், அவர்கள் பார்க்கும் தொழில்கள், இஸ்லாம் மக்களது விழாக்கால நடைமுறைகள் என விரிவாக நாவலில் கதையையொட்டியே கூறப்பட்டுள்ளது. ஜோதிலிங்கத்தின் உடல் ரீதியிலான பிரச்சனைகள், அவனின் பாலுணர்வு, தோல்பாவைத் தொழில், விட்டல் ராவ் பரம்பரையின் கூத்து வரலாறு இன்னொருபுறம் கூறப்பட்டுள்ளது. இயல்பான மனிதர்களின் பாடுகள் சொல்லில் அடங்காது. அவர்களின் உணர்ச்சிகளில் போலித்தனம் இருக்காது. எந்த உணர்ச்சியையும் கட்டி வைக்கத் தெரியாதவர்கள். அதனை பாசாங்கு அற்ற மொழியில் காட்சிப்படுத்தியுள்ளார் நாவலாசிரியர்.
வாழ்வற்ற வாழ்வை இறையிடம் பொருத்திக் கொள்பவர்களின் துயர் நிலம்
முன்னூறு வருடங்களுக்கு முன்னர் அரேபியாவில் இருந்து பயணத்தைத் தொடங்கும் கப்பல், அது கொள்ளையடிக்கப்படும் இடம், அதன் கடலோடி அகமது ஒரு கண்ணியில். ராபியா அன்வர் தம்பதியரின் வாழ்க்கை ஒரு கண்ணியில். ஜோதிலிங்கத்தின் வாழ்க்கை வேறொரு கண்ணியில். இம்மூன்றும் முற்றுப்பெறும் இடம் ஏர்வாடி. நல்லவர்களின் வாழ்வைத் தீர்மானிக்க என எதுவும் இருக்கிறதா என்ன? கடலோடி அகமது தன்னுடைய பணியை நிறைவு செய்துவிட்டு வாழும் சூழலில்தான் இந்துஸ்தானப் பகுதிகளுக்கு ஞானிகளையும், துறவிகளையும் கப்பலில் ஏற்றிக்கொண்டு பயணிக்கிறான். அதனை அல்லாவின் கட்டளையாக ஏற்றுக்கொள்கிறான். அந்தக் கப்பல் கொள்ளையடிக்கப்படுகிறது. கனோஜி ஆங்ரே தலைமையிலான மராத்தியப் படை கொள்ளையடிக்கிறது. கொள்ளையடித்த பொருட்களில் ஒரு பொருளை மட்டும் தந்துவிடக் கேட்டும் ஆங்ரே மறுத்துவிடுகிறான். அந்தப் பொருளால் அமைதியை நாடும் ஞானி மனநிலைக்கு ஆங்ரே மாறிவிடுகிறான். அந்தப் பொருளைத் தேடி அலையும் அகமது கடலில் மறைகிறான். அன்வரின் துயர் போக்க உதவட்டும் என்று நினைக்கிறான் ஜோதிலிங்கம். அன்வரின் வாழ்வு சூன்யமாகிறது. அன்வரை ஏமாற்றியவன் நல்வாழ்க்கைக்குள் தன்னை திணித்துக் கொள்கிறான். தேவதையின் அன்பைப் பரிசளிக்கும் நிலையில் உள்ளவள் சாபமிடுகிறாள். நல்லது நடக்கட்டும் என்று நினைப்பவன் தன் இல்லின்பம் துறந்து கடவுளுக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிறான். இங்கு வாழ்வென்பது என்ன? நல்லவர்களுக்கு இங்கு எதுவும் யாராலும் நடப்பதல்ல. அவரவர் மனத்தை எதற்காவது ஒப்புக் கொடுத்துவிட்டு அதில் மட்டும் கவனக் குவிப்பைச் செலுத்திக்கொள்ளவேண்டும். அதனால் பூக்கும் நல்லது கெட்டதுக்கு அவரவரை பொறுப்பாக்கும் சாபம் தான் வாழ்க்கை. சராசரி மனிதர்களின் வாழ்வின் மையத்தின் வழியாக பயணிக்கும் இக்கதை மீள் வாசிப்பில் துயர் கூட்டவே செய்கிறது. கண்ணெதிரே துயர் மிகு வாழ்வைக் கண்டும் உதவுவதற்குக் கையாலாகாத மனநிலையில் நாம் தவிப்பதுபோன்றதான உணர்வைத் தோற்றுவிக்கிறது நாவல்.
ரூஹ் நாவல்
முதல் பதிப்பு 2020
எழுத்து
Zero Degree Publishing
No.55(7), R Block, 6 th Avenue,
Anna Nagar,
Chennai 600 040.
Website: www.zerodegreepublishing.com
E Mail : zerodegreepublishing@gmail.com
Phone : 98400 65000
யாழ் தண்விகா
No comments:
Post a Comment