கமலி
நாவல்
சி.மோகன்
பக்கம் 144
விலை ரூ.150/=
ரகு கமலி இருவரும் கணவன் மனைவி. கமலியின் அப்பா, கமலியின் ஜாதகத்தை ஆய்ந்து அறிந்து கண்டறிந்த மாப்பிள்ளை ரகு. இவர்களுக்கு நந்திதா என்ற பெண். இவர்களின் வாழ்வில் புதிதாக நுழைகிறார் கண்ணன். கொஞ்சம் கொஞ்சமாக கமலியின் மனதில் பதியத் தொடங்குகிறார் நல்ல மனிதராக, ரசனைக்குரியவராக, படிப்பாளியாக, வார்த்தைகளில் வசியம் செய்பவராக, கமலியின் மனம் கவர்ந்தவராக... கமலியின் எண்ணத்தில் உண்டான மாற்றத்தை கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்குகிறான் ரகு. ஒரு சில கட்டத்திற்குப் பின்னர் கண்ணனுடன் உள்ள தொடர்பு முற்றிலுமாக தடைபடுகிறது ரகுவின் கட்டளையின் பேரில். ஆனாலும் கமலி கண்ணன் இடையே உள்ள காதலுக்கும் காமத்திற்கும் முற்றுப்புள்ளி இல்லாமல் தங்கு தடையின்றி அது தொடர்கிறது. இடையில் கமலியின் அப்பா இறந்துபோகிறார். அம்மாவிற்கு உடல் நலமில்லாமல் போய்விடுகிறது. அம்மாவைக் கவனிக்க சென்னைக்கு கமலி புறப்படுகிறாள். செல்லும் வழியில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. கண்ணனும் கமலியும் ஒரே பேருந்தில், படுக்கும் வசதியுள்ள இருக்கையில். கமலி எப்படி கண்ணனுடன் இந்த வாழ்வை வாழ்கிறாள்? ரகு கண்ணனுடன் பேசினானா, நந்திதாவுக்கு ஒரு தம்பிப் பாப்பாவோ தங்கச்சிப் பாப்பாவோ கிடைத்ததா என்பதை அறிய வாசிக்கவேண்டும் இந்த நாவலை. சரியோ தவறோ என்ற ஊசலாட்டம் கமலியின் எண்ணத்தில் புகவில்லை. அவள் மெல்ல கண்ணனின் வசியத்திற்குள் சிக்குகிறாள். கண்ணனும் நல்ல மனிதர். ஒரு இடத்திலும் கமலியின் பாத்திரமோ கண்ணனின் பாத்திரமோ குற்ற உணர்ச்சி என்று காலம் காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கும் விடயத்தில் சிக்குவதாகக் கதையில் சொல்லாமல், ரகுவிடம் தோன்றும் மனக் கிலேசத்தை எப்படி கச்சிதமாக கமலி தீர்க்கிறாள், கமலியும் கண்ணனும் இந்த வாழ்க்கையை எவ்வளவு கவனமாகக் கடத்துகிறார்கள் என்பதை கிளர்ச்சியைத் தூண்டும் மொழிநடையில் படைத்துள்ளார் நூலாசிரியர். முக்கியமாக கதையின் இறுதி.
சம காலத்தில் பரவலாக காணக் கிடைக்கும் கதை
இன்றைய உலகில் இல்லாத ஒன்றினை நாவல் எடுத்துரைப்பதாக கூறிவிட இயலாது. பரவலாக தினம்தோறும் பத்திரிக்கைகளில், ஊடகங்களில் இடம்பெறும் ஒரு செய்தியாக இந்த முறை மீறிய, முறை தவறிய காதலைச் சொல்லலாம். கூடுதலாக ஒரு தகவலாகச் சொல்ல வேண்டுமெனில் ஊர் அறிய, உலகம் அறிய முடித்த திருமணத்தைக் காட்டிலும் இது போன்ற காதலும், காமமும் வீரியமாக, கொலைக்கும் அஞ்சாத ஒன்றாக மாறிக் கொண்டிருப்பதை நடக்கும் சம்பவங்கள் மூலம் அறியலாம். குன்றத்தூர் என்ற ஊரில் பிரியாணி கொண்டு வந்து கொடுக்கும் உணவகப் பணியாளர் மீது அபிராமி என்ற பெண்ணிற்கு ஏற்பட்ட ஈர்ப்பு, தனக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற சம்பவத்தை இதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.
திடீர் என்று உள்ளுக்குள் உண்டாகும் மனமாற்றம் தான் இது போன்ற பிரச்சனைகளுக்குக் காரணம் என்று கூறிவிட இயலாது. ஒவ்வொரு பெண்ணின் மனதின் உள்ளே இருக்கும் அபிலாசைகளைப் புரிந்து, அதற்கேற்ப இங்கு வாழ்க்கைத்துணை கிடைப்பதில்லை. சொத்துக்களைப் பாதுகாக்க, சமூகம், சாதி, மதம் இவற்றைக் காக்கும் எண்ணம் இவையெல்லாம் அகமணத் திருமண ஏற்பாட்டில் இருக்கிறது. அதற்காக இவற்றில் எல்லா திருமணங்களும் மகிழ்வில்லாமல் இருப்பதாகக் கூறல் தவறாகிவிடும். மனதின் அடி ஆழத்தில் கிடக்கும் ஆசைகள் மேலெழும்போது தவறுக்கான காரணங்கள் பூக்கிறது. சந்தர்ப்பம் அமையும்போது தவறுகள் செயல் வடிவம் பெறுகிறது. தவறுகளை மறைக்க இயலா வண்ணம் போகும்போது குற்றம் வெளிப்படுகிறது. எல்லாம் புரிந்து, காதல் மணம் புரியும் தம்பதியர் கூட இதுபோன்ற சல்லாபங்களில் ஈடுபடும்போது மனித மனதின் ஆசை தான் என்ன என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடிவதில்லை.
கமலி – கண்ணன் – ரகு
ரசனையின் மறுவடிவம் கமலி. படிப்பு ஆர்வம் மிக்கவள். மந்திரங்கள், ஸ்லோகங்கள், பக்திப் பாடல்கள் அறிந்தவள். ஆங்கில இலக்கியம் முதுகலையில் முடித்தவள். அயல் நாட்டு வர்த்தக நிறுவனத்தில் ரிசப்சனிஸ்டாக பணி புரிந்தவள். ரகுவை பெற்றோர் பார்த்து மணம் முடித்து வைக்கின்றனர். திருமணம் முடிந்து ஆறாம் வருடம் நந்திதா பிறக்கிறாள். கமலி தன்னுடைய 37வது வயதில் கண்ணனுடன் காதல் வயப்படுகிறாள். எதற்காகவும் கண்ணனை இழந்துவிடக்கூடாது என்று என்னும் அளவு காதல். இத்தனைக்கும் ஆரம்ப கட்டத்தில் அதிகமாக தொலைபேசியில் மட்டுமே வளர்ந்த காதல். ரகு மீது எந்தப் புகாரும் இல்லாத ஒருத்திதான் கமலி. ஆனாலும் அவளால் கண்ணனைத் தவிர்க்க இயலவில்லை. ரகுவிற்கும் கண்ணனுக்கும் மனக் கசப்பு வந்தபோதும் அவனுடனான உறவை கமலி முறித்துக்கொள்ளவே இல்லை. வீட்டிற்குள் சந்தேகம் பூத்த போதும் ரகுவை காமத்தால், அன்பால், ஸ்பரிசம் தீண்டும் பேச்சால் கட்டிப் போட்டு கவனித்துக்கொண்டாள் கமலி. அதே சமயம் இதுபோன்ற சூழலை கண்ணனிடம் பகிர்ந்துகொள்கிறாள் கமலி. கண்ணனோடு ரகு மீண்டும் பேசும் சூழல் உருவாக வேண்டும் என எதிர்பார்க்கிறாள் கமலி. அந்தச் சூழல் அமைகிறது. தனக்கு கண்ணனால் ஒரு குழந்தை வேண்டும் என்ற அதீத ஆசை ஏற்படுகிறது. அந்த ஆசைக்காக கமலியும் கண்ணனும் தீட்டிய திட்டங்கள் எல்லாம் அறிவியல். அந்த ஆசை நிறைவேறுகிறதா? ரகுவின் நிலை என்ன? ஒரு முக்கோணக் கதை தான். ஆபாசம் பூத்தூவிக் கிடக்கிறது தான் நாவலில். ஆனாலும் கத்தி மேல் நடக்கும் பயணத்தை, முறையாக இல்லாத ஒன்றை வாசிக்க வைத்து வெற்றிப் பயணமாக்கிவிடுகிறார் நாவலாசிரியர்.
நாவலிலிருந்து...
கண்ணன், காதலை மிகச் சாதாரணமாக எவ்விதத் தயக்கமுமின்றிச் சொன்னபோது, கமலி விதிர்விதிர்த்துத்தான் போனாள். அவள் உடலும் மனமும் படபடத்து நடுங்கியது. ஆனால் அந்தப் படபடப்பில் பயமில்லை. மாறாக, பரவசமிருந்தது. அன்று இரவு வெகுநேரம் தூக்கம் பிடிக்காமல் மனம் ஏதோ ஒரு கிறக்கத்தில் கிறுகிறுத்துக் கொண்டிருந்தது.
பதிப்பக விபரம்:
புலம் வெளியீடு
178, F, அனுதீப் அபார்ட்மெண்ட்ஸ்,
3வது பிரதான சாலை,
நடேசன் நகர்,
சென்னை – 600092
தொலைபேசி : 9840603499
Email: pulam2017@gmail.com
யாழ் தண்விகா
No comments:
Post a Comment