குழந்தைமையைக் காவு கேட்கும் பள்ளிக்கூடம்
எதை நோக்கிக் கல்வித்துறை செல்கிறது என்றே தெரியவில்லை. பள்ளியையும், பயிலும் குழந்தைச் செல்வங்களையும் விரட்டி விரட்டி அடிக்கத் தொடங்கிவிட்டது அரசின் கொடுங்கரங்கள். புதிய கல்விக் கொள்கை / தேசிய கல்விக் கொள்கை இதெல்லாம் இல்லை என்று சொல்லிக்கொண்டே என்னென்ன வகையில் குழந்தைகளை கொடுமை செய்யலாம் என்றெல்லாம் பயிற்சி எடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட வினா போல இருக்கிறது மூன்றாம் வகுப்பிற்கு இணைய வழித் தேர்வில் கொடுக்கப்பட்ட வளரறி மதிப்பீடு வினாத்தாள். ஒரு பானை சோற்றுக்கான ஒரு உதாரணம் மட்டும். என்னது மூன்றாம் வகுப்பிற்கா? வாயைப் பிளக்காதீர்கள். ஒன்றாம் வகுப்பிலிருந்து தொடங்கிவிடுகிறது அந்தத் தேர்வுகள்.
என்ன கவலை பெற்றோருக்கு? அவர்கள் உயர்தர கல்வியைப் பெற பள்ளியில் சேர்ந்து இருக்கிறார்கள். அதைக் கற்றுக் கொடுப்பது தானே ஆசிரியர் கடமை? ஆமாம். கற்றுக் கொடுப்பது தான் கடமை. அதையும் வழிகாட்டும் வகையில். திணிப்பதை கல்வி என்று சொல்வது அநியாயம் அல்லவா? அதையல்லவா இந்த சமூகம் எதிர்பார்க்கிறது...! சரி. சொல்லிக் கொடுத்துவிடலாம் என்றால் கற்பிக்கும் பணி மட்டும்தான் ஆசிரியருக்கு இன்றைய காலகட்டத்தில் அரசு வழங்குகிறதா? காலை முதல் மாலை வரை மட்டுமல்ல. விடுமுறையிலும் எப்படியெல்லாம் ஆசிரியர்களுக்கு வேலை தரலாம் என்பதைச் சொல்ல ஒரு குழுவே இருக்கும்போல. எண்ணும் எழுத்தும் திட்டம் வந்தபிறகு இன்னும் கொடூரம். ஒருபுறம் ஆசிரியர் கையேடு. மாணவனிடம் பயிற்சி நூல். மேலும் பொதுவாக பாடநூல். மூன்றின் நடுவில் நின்று தலையைச் சுழல விடுவது எவ்வளவு பெரிய பராக்கிரமம் தெரிந்த ஆசிரியராலும் இயலாத காரியம். கடந்த வாரம் பள்ளியில் வைத்த மூன்றாம் வகுப்பு தேர்வு வினாக்கள்.
Class 3 Mathematics Chitra M
(985987629790)
SKIP TO NEXT STUDENT
Q 1
Q1(0)
மூலை விட்டங்கள் கொண்ட இரு பரிமாண வடிவங்களைத் தேர்ந்தெடு
O சதுரம் & செவ்வகம்
O செவ்வகம் & வட்டம்
O முக்கோணம் & வட்டம்
O சதுரம் O வட்டம்
Q1(1)
மூலை விட்டங்கள் இல்லாத இரு பரிமாண வடிவங்களைத் தேர்ந்தெடு
சதுரம் & செவ்வகம்
செவ்வகம் & வட்டம்
முக்கோணம் & வட்டம்
சதுரம் & வட்டம்
Q2
Q2(0)
கொடுக்கப்பட்டுள்ள முப்பரிமாண உருவத்தில் உள்ள முகங்கள், விளிம்புகள் மற்றும் முனைகளின் எண்ணிக்கையைக் கூறுக
(கனச்செவ்வக வடிவம்)
8 முகங்கள் 12 விளிம்புகள் மற்றும் 6 முனைகள்
6 முகங்கள் 12 விளிம்புகள் மற்றும் 8 முனைகள்
12 முகங்கள் 8 விளிம்புகள் மற்றும் 6 முனைகள்
1 முகம் 0 விளிம்புகள் மற்றும் 0 முனைகள்
Q2(1)
விளிம்புகள் மற்றும் முனைகள் அற்ற, ஒரு வளைதள முகம் மட்டும் கொண்ட முப்பரிமாண உருவம் எது?
கன சதுரம்
கன செவ்வகம்
கோளம்
கூம்பு
வாசித்து யோசித்து சரியான பதில் சொல்லும் அனைவரும் இது குழந்தைகளுக்கு ஏற்றதா என்பதைச் சொல்லுங்கள். பதில் அளிக்கத் தவறும் நபர்கள் நாமே இவ்வளவு திணறும்போது குழந்தைகள் என்ன செய்வார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். எளிமையான வினாக்கள் கேட்கலாம். அதை விடுத்து ஒரே கேள்விக்குள் மூன்று, நான்கு கேள்விகள் வைப்பது எதற்காக? இது அனைத்து வகைக் குழந்தைகளுக்கும் சரியானதாக எப்படி இருக்கும்? குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் தேர்வு அனைவரும் முடிக்காவிட்டால் எந்தப் பள்ளி முடிக்கவில்லை என்றும் ஒரு சில வகுப்புகள் தேர்வுகள் முடித்து சில வகுப்புகள் தேர்வு முடிக்காவிட்டால் அந்தந்த வகுப்பைக் குறிப்பிட்டு தலைமை ஆசிரியர் குழுவில் தகவல் வரும். அலைபேசியில் அழைப்பு வரும் விரைவாக முடிக்கச் சொல்லி. எங்கே செல்லும் இந்த பாதை என்று தெரியாத நிலையில் கற்பித்தலைத் திறம்படச் செய்ய இயலாத நிலையில் கற்பித்தலோடு தொடர்பு இல்லாத ஆயிரமாயிரம் வேலைகளுக்கு மத்தியில் செல்கிறது பள்ளியில் கடக்கும் காலங்கள்.
பள்ளியில் குழந்தைகளிடம் நடந்த உரையாடலில் ஒருநாள் ஒவ்வொருவரிடமும் வருங்காலத்தில் என்ன வேலைக்குச் செல்ல ஆசை? என்ற வினாவை முன்வைத்தபோது வழக்கம்போல டாக்டர், என்ஜினீயர், டீச்சர், டிரைவர், கலெக்டர் என்றெல்லாம் போய்க் கொண்டிருக்கிறது பதில்கள். ஒருத்தி எழுந்து சொன்னாள். "நான் நெத்துப் பெறக்க போவேன் சார்" நெத்துப் பெறக்கவா? அப்படின்னா என்ற கேள்வியை மீண்டும் கேட்கிறேன் அவளிடம். அதே பதில் தான் வந்தது. ஒலக நெத்து என்பது காய்ந்த இலவங்காய். அதுதான் பார்க்கப்போகும் வேலை என்று அவள் சொல்கிறாள் என்றால் பள்ளியில் கற்கும் கல்வியைக் கடந்து அவள் வீட்டில் உள்ள சூழல்தான் அவளை அப்படிச் சொல்ல வைத்திருக்கும். கற்றலின் இலக்கு என்ன என்று தெரியாத வயதாக இருக்கும். அடுத்து அப்பா என்ன வேலை பார்க்கிறார் என்ற கேள்விக்கு சீட்டு வெள்ளாட (அதை ஒரு வேலையென்றும், முழுநாளும் அந்த வேலையை மட்டுமே செய்து வருகிறார் என்று அவள் மனதில் நினைத்திருக்கிறாள்)சார் என்றாள். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு என்ன வழி சொல்லும் இந்த வினாத்திட்டம்? விரட்டி அடிக்கும். மன உளைச்சலை அளிக்கும். மாணவர்களுக்காக ஆசிரியரே எல்லாம் செய்து விடும் நேர விரயத்தை மேற்கொள்ளும். கற்பித்தல் நேரத்தை கபளிகரம் செய்யும். நட்பு வட்டாரத்தில் விசாரித்த வரையில் தொடக்கப்பள்ளியில் வரும் இந்த மாதிரியான ஆன்லைன் வினாக்கள் அறவே நீக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. குழந்தைகளை வருங்கால வேலைக்கான எந்திரமாக மாற்றும் முன்னர் அவர்களின் குழந்தைத் தன்மையைக் குலைக்காத கல்வியே தற்கால அவசியத் தேவை.
பெ.விஜயராஜ் காந்தி
❣️
No comments:
Post a Comment