Saturday, 23 August 2025

ஒற்றைச் சிறகு ஓவியா


 ஒற்றைச் சிறகு ஓவியா 

விஷ்ணுபுரம் சரவணன் 

பாரதி புத்தகாலயம் 

பக்கங்கள் 120

விலை ரூ. 120


சாவித்திய அகாடமி பால புரஸ்கார் விருது பெற்ற நாவல்


பள்ளி ஆண்டு விழாவுக்காக தயாராகிறார்கள் மாணவர்கள். முகிலன், பவித்ரா, பிரின்சி, சாதிக் மற்றும் ஓவியா இவர்கள் ஐந்து பேரும் நண்பர்கள். இதில் ஓவியா தவிர நால்வரும் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகிறார்கள். பள்ளி பியூன் கதிரேசன் தாத்தா இவர்களுக்கு உதவுகிறார். கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள பொருட்கள் வாங்குவதற்கு ஓவியாவிடம் பணம் இல்லை. அதுவும் இல்லாமல் இனி கலந்து கொள்ளவும் முடியாது. பெயர் கொடுக்கும் நாள் முடிந்து விட்டது. அதனால் நால்வர் வைத்திருக்கும் பொருட்களை வைத்து ஒப்பனை செய்கிறார்கள். இதனால் ஓவியாவின் மனக்கவலை மாறும் என்ற நப்பாசைதான். பிரின்சி தன்னுடைய தேவதை கவுன் மற்றும் இரண்டு சிறகுகளில் ஒரு சிறகை ஓவியாவிற்கு அளிக்கிறாள். பவித்ரா தன்னுடைய கிரீடம் ஒன்றை தலையில் சுற்றி விடுகிறாள். சாதிக் தன்னிடம் இருந்த மேஜிக் கம்பினை அளிக்கிறான். முகிலன் தன் கழுத்தில் இருந்த இலை மாலையை ஓவியாவின் கழுத்தில் அணிவிக்கிறான். கையில் போட்டிருந்த இலை மோதிரத்தையும் மாட்டி விடுகிறான். இத்தனையும் அணிந்திருந்த ஓவியாவிற்கு பறக்கும் சக்தி கிடைக்கிறது. பள்ளியில் உள்ள மணியின் நாக்கை அடித்தவுடன் மஞ்சள் நிற வெளிச்சம் பூக்கிறது. அந்த மஞ்சள் நிற வெளிச்சம் நந்தியாவட்டை மரத்தின் மேல் விழுகிறது. அப்பொழுது மரத்திலிருந்து பூக்கள் உதிர்கின்றன. பூக்களை அவள் புறா வடிவில் அடுக்கியவுடன் புறாவாக உருமாறி திரும்பி வருகிறது. 10 புறாக்கள் வந்தவுடன் அந்த இடமே பறவைகள் சரணாலயம் போல் தெரிகிறது. இந்த மாயாஜாலத்தை கைப்பற்றுபவனாக விகேஷ் இருக்கிறான். மாயாஜாலம் மீண்டும் ஓவியா மற்றும் அவளது நண்பர்களிடம் கிடைக்க கீழ்க்கண்ட படிநிலைகளில் பயணிக்க வேண்டி இருக்கிறது.

O

மண்புழு அழிந்து வருவதன் காரணம்.

மண்புழுவின் அவசியம்.  

O

நிலத்தடி நீர் முழுவதும் மாசுபாடு அடைந்து விட்டது. அதற்கான காரணம். 

O

விளைநிலங்களுக்கு அடியில் எரிபொருள் எடுப்பதற்காக குழாய் பதித்தல்

எரிபொருள் எடுப்பதற்காக விளை நிலங்களுள் குழாய் பதிக்கக் கூடாது என்று போராட்டம்.

ஓவியா மற்றும் அவளது நண்பர்களிடம் மாயாஜாலம் கிடைக்கப்பெற்று ஆண்டு விழாவில் இந்த மாயாஜாலம் அரங்கேற்றம் செய்யப்படுகிறது. இதுதான் நாவலின் சுருக்கம்.


நாவலில் மண்புழுவின் தேவை பற்றி அழகாக கூறப்படுகிறது. விவசாயி /உழவர்களின் நண்பன் என்பதை படிக்கிறோம். ஆனால் எத்தனை மாணவர்கள் அதனை உணர்ந்திருப்பார்கள்? அதுவும் இன்றைய காலகட்டத்தில் மண்புழுவின் தேவை பற்றி அறிய வேண்டியிருக்கிறது. நிலத்தடி நீர் பூமியில் கீழே போய்க் கொண்டே இருக்கிறது. அதுவும் அசுத்தமாக தான் கிடைக்கிறது. நிலத்தடி நீர் மேலாக இருந்த நிலை மாறி அதுவும் அசுத்தமான வேதிப்பொருள் கலந்த நிலத்தடி நீர் தான் கிடைக்கிறது. இதற்கு முடிவு என்ன என்பதையும் நாவலாசிரியர் கூறுகிறார். விளை நிலங்களில் எரிபொருள் எடுப்பதற்காக குழாய்கள் பதிப்பதற்கு அரசு முயற்சிக்கிறது. அதை எதிர்த்து மக்கள் போராடுகிறார்கள். அந்த போராட்டம், அதன் வீச்சு என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கி இருக்கிறார். இந்த செயல்கள் அனைத்தும் கதையோட்டத்தில் வருவதால் நாவல் மிகவும் அழகாக, அருமையாக இருக்கிறது.


ஒற்றைச் சிறகு ஓவியா 

விளைநிலங்களில் பதிக்கப்படும் எண்ணெய்க் குழாய்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நாவல்.


வாழ்த்துக்கள் தோழர்.

No comments:

Post a Comment