Friday, 3 October 2025

நீ காதல் நான் கஸல்


நீ காதல் நான் கஸல்


தி.கலையரசி

Kalaiarasi Thirunavukkarasu 


கவிதைகள்


படைப்பு குழுமம் வெளியீடு

விலை : 120

பக்கங்கள் : 130


காதல் மீது உள்ள காதலால் நான் தொடர்ந்து எழுத முயற்சி செய்ததன் வெளிப்பாடாக வந்திருக்கிறது இக்கவிதைத் தொகுப்பு என என்னுரையில் கூறுகிறார் கவிஞர். போதாதா தொகுப்பில் என்ன இருக்கும் என்று அறிய. காதல் என்பது பரிசுத்தம். ஞானம். மகிழ்ச்சி. துயரம். தேடல். மயக்கம். இன்னும் என்னென்னமோ பொருளுக்குப் பொருந்தும் உன்னதம்.


வாசிக்கும் ஒவ்வொருவரும் தன் காதலோடு, மனதோடு பொருத்திப் பார்க்கத் தூண்டும் கவிதைகள். சொல்லாடலின் சிறப்பாக கவிதைகள் அத்தனையும் மிளிர்கின்றன. எளிய மொழியில் வலிய காதல். அழுத்தமான கவிதை நயம்.

"நீரை விலகாது ஈரம்

நெருப்பை விலகாது வெப்பம்

நான் உன் நீர்

நீ என் வெப்பம்".

யாதுமாகி நின்றாய் என்று சொல்லிக் கடத்தலை சொல்லில் கடக்கும் வித்தை கவிதை. அதனை இக்கவிதை நன்றாகவே செய்கிறது.


எனக்கு நீதான் வேண்டும். நீதான் எல்லாம். நீயில்லாத வாழ்க்கையை என்னால் கற்பனை கூட செய்ய முடியாது இப்படியெல்லாம் சொல்லிக்கொள்ளும் காதலின் அவஸ்தையை காதல் எப்படிச் சொல்லும்? அது எப்படி கவிதையாக அமையும்?

"நீ கடல்

நான் அலை

என்னை நீ கரையேற்றினாலும்

நான் உன்னிடம் தான் 

திரும்புவேன்".

கடல், அலையை தன்னிலிருந்து வெளியேற்ற நினைக்கிறது என்பதைச் சுட்டும் கரையேற்றினாலும் என்ற சொல்லுக்குள்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்... என்ன இருந்தாலும் நான் உன்னிடம் தான் திரும்புவேன் என்பது அர்த்தத்திற்கும் மேலான அன்பு.


காதல் சுழிக்குள் மாட்டுவது சூழலா? திணித்தலா? எதுவானாலும் அங்கு எதுவும் திட்டமிடப் படுவதுபோல் நடப்பதில்லை. அது ஒரு மகிழ்ச்சிப் பிரவாகம். அங்கு இன்பமும் துன்பமும் பேராழியின் ஆழமென நீளும். குறையும். அது தரும் மயக்கம் என்பதை உயிர் வேண்டிப் பெறும். இந்தக் கவிதை அவ்வாறான மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். துயராகவும் இருக்கலாம். எது என்பது இங்கு அவசியமில்லை. அதைத் துய்ப்பது மட்டுமே இக்கவிதை.

"எப்போதும் காதலில்

நீந்திக்கொண்டே இருக்கிறேன்

கரையே

தென்படாமல் இரு".

கடலில் மிதந்தபடி

கண்கள் ஒருமுறை இல்லாத கரை தேடும் சூழலை உண்டுபண்ணச் செய்திடும் வல்லமை சொற்களில்.


மென் சோகம், ஓரளவு சோகமா? இல்லை. சோகத்தில் ஏது கொஞ்சம், நிறைய? வலி என்பது வலி தான். அப்படிக் கவிதைகள் தொகுப்பில் நிறைய. 

"காதலும் பிரிவும்

தராசுத் தட்டுகளில் அமரும்போது

உயிரின் முள் தள்ளாடுகிறது".

ஒரு பக்கம் காதல், மறு பக்கம் பிரிவு. இரண்டும் தராசுத் தட்டுகளில் இருக்கும்போது காதல் கீழ்நோக்கி இழுக்க வேண்டும். அல்லது பிரிவு கீழ் நோக்கி இழுக்க வேண்டும். எது மகிழ்வானது? எது துயரானது? இரண்டும் எப்படி சமமாக, முன்னே பின்னே ஆடி தன்னைச் சமப்படுத்திக்கொள்ள முடியும்? வாசிக்கும் நாம் அந்த உணர்வைப் பெறுவது, கவிதை நமக்குள் செய்யும் மாயம். 


கண்ணீர், காதல், பிரிவு, கடல், மழை இவைகள் போன்று நாம் தரிசித்த பொருண்மைகளை  வைத்துக்கொண்டு காதலைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார். நாம் காதலிலும் கவிதைகளிலும் மூழ்கிக்கொண்டே இருக்கிறோம்.

"உன் கடலில் கலந்துவிட்ட

நீர்த்துளி நான்.

ஆவியாய் கரையும் விதியை

நீதான் எழுதவேண்டும்".

கவிதை, கவிஞரால் தன்னை எழுதிக்கொண்டுவிட்டது.  வாசிப்பவர்களுக்கு, ஆவியாய் கரையும் விதியை ஆகிருதியாய் உள்ளவர் எழுதுவார். அந்த ஆகிருதி என்பவர் நமக்குள் காதலாக மூழ்கிக் கிடப்பவர் தான். ஆவியாக மாறுவதா? கரைந்தே கிடப்பதா? கடலே ஆவியாவதா? காதலை சாட்சியாக வைத்து யோசித்துக் கிடப்போம்.


கடலுக்குள் சில முத்துகள், கண்ணீர்த்துளியின் சிறு அணுக்கள், மகிழ்வின் ஒற்றைச் சிறு சீனிக் கட்டி போலத்தான் நான் சொன்னவை. வாசியுங்கள். காதலின் உயரம் அடையலாம்.


கஸல் கவி Mohamed Ali Jinna தோழரின் பதிப்புரை, ந.சிவநேசன் தோழரின் அணிந்துரை, கோ. பாரதிமோகன் தோழரின் வாழ்த்துரை நூலாய்வைச் செய்திருக்கிறது தொடக்கத்திலேயே. அருமை.


வாழ்த்துகள் தோழர் தி.கலையரசி


யாழ் தண்விகா 


❣️

No comments:

Post a Comment