இருள் எனப்படுவது யாதெனில்...
ஏகாதசி Kavi Ekadasi Ekadasi
படைப்பு பதிப்பகம்
பக்கங்கள் : 128
விலை : 120
இருட்டில் ஒளிரும் தரிசனம்
தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்...? இந்தப் பாடல் வரிகள் உருவாக்கிய நிஜத்தின் முன்னால் மற்றுமொரு நிஜத்தைப் பார்க்கிறேன். அது தண்ணீரின் வலி என்ற ஒன்றாக ஏன் இருக்கக்கூடாது என்பதே. இருளில் அழும் மனிதர்கள், இரவின் மர்மம், இருளின் குணாம்சம் என பல தகவல்களை அறிந்திருப்போம். இருளைக் கிழித்து, இருளில் கவிதையெழுதி, இருள் தாள்களைக் கசக்கித் தூக்கியெறிந்து, இருளுக்குள் அவற்றைக் கண்டடையுங்கள் என்றால் இதென்ன அபத்த இருள் என்ற எண்ணம் தோன்ற வாய்ப்பாகுதல் இயல்பு. எனினும் அது போன்றதொரு சிலிர்ப்புண்டாக்கும் இருளை தான் கண்ட ஐந்து நாள் இருளின் வாயிலாக கண்டடைந்திருக்கிறார் அதைக் கவிதையில் கொண்டு வந்திருக்கிறார் கவிஞர் ஏகாதசி.
100 இருள். ஒவ்வொன்றுக்கும் எத்தனை கண்கள் இருக்கும் என்பது முடிவிலி. எப்போதோ எழுதிய வரிகள் “இரவுக்கு ஆயிரம் கண்கள்” என்பது. அது நட்சத்திரம் மட்டுமா? கண்கள் என்பது ஏன் கண்களாகவே இருக்கக்கூடாது? தொகுப்பில் என்னை உலுக்கிய கவிதை இந்தக் கேள்வியை இப்போதுவரை எனக்குள் எழுப்பிக்கொண்டே இருக்கிறது.
“எங்காவது செல்லும்போது
விளக்கை அணைத்து
வீடு பூட்டுகிறீர்கள்
யாரும் அறிந்திருக்கவில்லை
உள்ளே இருட்டிருப்பதை...”
பூட்டிய வீடுதான் என்றபோதும் வெளியில் நாம் வந்தபின், கதவு திறக்காமல் நம்மை நாம் உள்ளே அனுப்பி எல்லாம் சரியாக பூட்டியாகிவிட்டதா? மூடி வைத்துவிட்டோமா? என வேவு பார்க்கும் வேலையையும் நாம்தானே செய்கிறோம்! கவிஞரின் கேள்வியில் நங்கூரமிட்டு அமர்ந்திருப்பது இருள் என்னும் மாயப் பிசாசு.
இருட்டை வைத்து ஒருசில விளையாட்டுகளையும் நகைப்பாக நம்முன் எடுத்துவைக்கிறார் கவிஞர். வாசிக்கும்போதே நமது கால்களும் இருட்டை மிதிக்காமல் செல்லும் லாவகத்தைக் கற்றுவிடுகிறது.
“காலடியில் கிடக்கும்
இருட்டையெல்லாம் மிதித்து விடாமல்
தாண்டித் தாண்டிச் செல்கிறான்
ஒரு குடிகாரன்”
வெறும் குடிகாரன் மட்டும் என்று எடுத்துக்கொள்வதா? மனித மனங்களில் எப்போதும் தனக்கே தனக்கேயான ஒரு பாதுகாப்பு உணர்வு தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும். அது வாழ்தலின் நிமித்தம் நமக்குள் நாம் தோற்றுவித்துக்கொள்வது. அதனை நாமிங்கு குடிகாரனில் புகுந்துகொள்வதன் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.
என்னுரையில் கவிஞர் சொல்கிறார், “இருட்டை நம் அன்பிற்குரிய ஒன்றென பழகியிருந்திருந்தால் மரணம் என்கிற ஒன்றுகூட நம் அஞ்சறைப் பெட்டிக்குள் இருந்திருக்கும் என்று என்னுரையில் கவிஞர் குறிப்பிடுவதை ஒவ்வொரு கவிதையையும் வாசிக்கும்போது உணரமுடியும்.
“நெடுஞ்சாலையில் போற வார
லாரிகளுக்கு கைபோட்டபடி
நின்றிருப்பவளின் இருட்டு நேரத்திற்கு
சோறு என்று பொருள்”
என்ற கவிதையில் உள்ள மூன்றாம் வரி அவளின் முக்காலத்தையும் உணர்த்துவது. அதை இருள் என்றுமட்டும் கடந்துவிட முடியுமா? அது அவளின் வாழ்வு. அதனை நீட்டி முழக்கிச் சொல்லாமல் சோறு என்று பொருள் என்று முடித்துவைப்பதிலிருக்கிறது கவிஞரின் சொல்லாட்சி. வெளிச்சத்தை மட்டும் நேசிப்பவர்களுக்கும், கோடிட்டுக் காட்டுபவர்களுக்கும் பிறிதொரு கவிதையில் இருட்டின் தேவை குறித்து நான்கு வரிகளில் நச்சென்று கூறுகிறார் கவிஞர்,
“பிளாட்பாரவாசிகள்
உண்பதற்கும் மலம் கழிப்பதற்கும்
மற்றும் புணர்வதற்கும்
ஒரே சுவர் இருட்டு”
இருட்டு என்பது இங்கு அரசியல், பொருளாதாரம், சமூகம் எல்லாமுமாகத்தான் இந்தக் கவிதையிலிருக்கிறது.
ஒவ்வொரு இருளும் பார்க்கும் கோணத்தில் பரவசப்படுத்திவிடுகிறது. மூடியிருக்கும் அறைக்குள் வரும் வெளிச்சத்தை உணராதோர் யார்? அது கவிஞரின் பார்வைக்கு அகதியாகத் தெரிவது ஆச்சர்யம். அகதியும் இங்கு வெளிச்ச அகதியாகத் தெரிவது பேராச்சர்யம். அவர்களை அகதியாக, நிர்க்கதியாக இப்படி நிற்கவைத்து, இந்த நிலைக்குக் காரணமாக கையாலாகாத நிலையில் இருந்து இப்போது குடியுரிமை வழங்கினால் எல்லாம் சரியாகிவிடுமா? ஆகவேதான் இந்த வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிடுகிறது... “குடியுரிமை வழங்குகின்றது இருள்...”
“வெளியிலிருந்து வரும்
வெளிச்ச அகதிகளுக்கெல்லாம்
குடியுரிமை வழங்குகின்றது
இருள்”
சிறுவனின் சிறுநீர் இரவு, உச்சி வெயில் நிழல், நாய்களின் இரவு, கரும்பலகை இருட்டு, சேவல் உண்ணும் வெளிச்சம் என நீளும் இரவும், இருளும் பல வெளிச்சக் கீற்றுக்களை நமக்குள் உண்டுபண்ணுகின்றன. பார்க்கத் தவறிய அவற்றை இருள் எனப்படுவது யாதெனில் என்ற தலைப்பில் 100 கவிதைப் பார்வையை அளித்திருக்கிறார் கவிஞர் ஏகாதசி. கவிதை வழியாக ஓர் ஆய்வுரையை வழங்கியிருக்கிறார் மா.காளிதாஸ் தோழர். கவிதையை இப்படியெல்லாம் ஆராயமுடியுமா என்றெண்ணும் வண்ணம் அணிந்துரை. அருமை. “புற அழகைப் புகழ்வதைவிட அக அழகை ஆராதிப்பதே ஆன்ம தரிசனம். அப்படியெனில் அகம் என்பது அழகிய இருளின் ஞான வெளிச்சம்” என பதிப்புரையில் வழக்க முத்திரை பதிக்கிறார் பதிப்பாளரும் கவிஞருமான Mohamed Ali Jinna தோழர். அட்டைப்படம் அடடா...!
நிறைவாக,
“ஓர் அழகிய கண்ணையோ
ஓர் அழகியின் கண்ணையோ
வரைந்துவிட முடியாது
இருட்டு வண்ணம் கொஞ்சம்
எடுத்துக்கொள்ளாமல்”
காதலுக்கான, காதலிக்கான இருட்டு எப்போதும் வெளிச்சம்தான். மேற்சொன்ன கவிதையைப் போல.
எழுத்துப்பணி தொடரட்டும்.
வாழ்த்துகள் தோழர்.
யாழ் தண்விகா
❣️
No comments:
Post a Comment