Tuesday, 14 April 2020

வயது வந்தவர்களுக்கு மட்டும் #கி.ராஜநாராயணன்

வயது வந்தவர்களுக்கு மட்டும்
(நாட்டுப்புறப் பாலியல் கதைகள்)

கி. ராஜநாராயணன்

அகரம் வெளியீடு
தஞ்சாவூர்

248 பக்கங்கள்

பாலியல் கதைகள் என்றவுடன் மேற்படி கதைகள் என்ற நினைவு வந்து போகும். காதலையும் காமத்தையும் கொண்டாடும் ஒரு சமூகம் தான் அன்பு என்ற சொல்லைக் கரம் பிடித்து அழைத்துச் செல்வதற்கு தகுதியை உடையதாயிருக்கும். பாலியல் கதைகள் என்றால் காதை மூடிக்கொண்டு கடக்கும் மனிதர்கள் தன்னைப் பற்றிய ஒரு பிம்பத்தை வலிய கொண்டு வர முயற்சி செய்கிறார்கள் என்பதைத் தவிர வேறொரு சுவாரஸ்யமும் இருக்கப் போவதில்லை. அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா நீயும் தான் பொறக்க முடியுமா... என்ற வார்த்தை காதல் என்பது பொது உடைமை என்ற பாடலில் வரும். இந்த வார்த்தை வெறும் காதலால் மட்டும் நிரப்பப் பட்டிருக்குமா என்பது ஆய்ந்து உணரப்படவேண்டிய ஒன்று.

மஞ்சள் பத்திரிக்கைகள், சரோஜா தேவி கதைகள் என்று எண்ணற்றவை புழங்கிய மண் இது. அது செக்சு படங்கள் என்ற பெயரில் திரைப்படமாக வந்து மனித மனத்தை தேடலின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அதில் வெறுப்புத் தட்டிய ஒரு பொழுதில் அதே திரைப்படத்தில் பிட் சீன்ஸ் வைத்து அதனால் திருப்தி காண வைத்தது. என்னதான் ஷகிலா படம் என்றாலும் பிட் இல்லாமல் படம் முழுமையடையாது என்ற கால கட்டம் கடந்த பின்னர் அதீத தொழில் நுட்பம்! முழுக்க முழுக்க ஆபாச படங்களை குறுந்தகடு, தொடர்ந்து அலைபேசியின் மூலமாக கைக்குள் கொண்டுவந்து திணித்தது. இன்று காமம் என்பது உடலின் வேலை என்பதாக மட்டும் மாறிப் போனது எதனால்... காமம் என்பது இதுதானா...

நண்பர்கள், தோழிகள், காதலர்கள், கணவன் மனைவி, முறைமைக்காரர்கள் என பலரும் பலவிடத்தில் பகிர்ந்த ஒன்று தான் பாலியல் கதைகள், இரட்டை அர்த்த வார்த்தைகள். அது ஆழ் மனதில் எப்பொழுதும் போல் பூத்துக் கிடக்கிறது. அதை வெளிப்படுத்தும் விதத்தில் அது அர்த்தப் படுகிறது. அது எதற்காக ஒவ்வொரு மனிதனால் வெளிக்கொணரப்படுகிறது என்பதும் உணரவேண்டிய ஒன்று.

கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்பது கணவன் மனைவியாக உறவுக்குள் வந்த பின்னர் சமூகம் மாற்றம் பெற்றது. அந்த சுதந்திரம் ஆண் பெண் இரு பாலருக்கும் சமத்துவத்தைப் பெற்றுத் தந்து விட்டதா என்றால் நாம் வாழும் சமூகத்தில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆண் பாலியல் குறித்து பேசினால் அவனின் தனித்திறன் என்றும் பெண்  பேசினால் அவளை வேறொரு கோணத்தில் பார்ப்பதையும் பார்க்கிறோம். பசி உணர்வு போலவே பால் உணர்வு. அது ஆணுக்கும் பெண்ணும் பொது என்பதை உணரத்தக்க பல கதைகள். இந்த நூலானது நாட்டுப்புறப்பகுதிகளில் வழங்கி வந்த பாலியல் கதைகள்.

இதில் அரசர்கள் காலம், குருகுல காலம் முதல் தற்போது வழங்கி வரும் கதைகள் வரை சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதைக்கும் பின்னால் உள்ள அரசியலை நாம் முடிச்சிட்டு பார்ப்பதில் நமது அறிவினை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லலாம். அரச சாம்ராஜ்யம் எப்படி அழிந்தது, பாலியலில் பெண் என்பவள் எப்படி பயன்படுத்தப் படுகிறாள், ஓர் ஆண் ஒருத்தியை சேர்த்துக்கொள்ளும் கதைகளும் உண்டு. ஒரு பெண் ஓர் ஆணைச் சேர்த்துக்கொள்ளும் கதைகளும் உண்டு.  கையாலாகதவள் என்று பெண்ணைக் குற்றம் சாட்டுவது போல கையாலாகாதவன் என்று ஆணைக் குற்றம் சாட்டவும் கதைகள் உண்டு.

மாமனார் மருமகள், மாமியார் மருமகள் இவர்கள் இடையே தேவைப்படும் இடைவெளி எங்கிருந்து தொடங்கியது அதற்காக வழங்கப்பட்ட கதைகள் என்ன,
அலைகளில் ஆண் அலை, பெண் அலை என்று ஏன் வழங்கப்படுகின்றன, அந்த அலைகள் ஏன் ஒன்று சேர்வதில்லை, தந்தை மகள் உறவு என்பது என்ன, சுரைக்காய் என்பது எதன் குறியீடு இப்படி பல கதைகள். நாம் தற்போது பேசிவரும் கதைகள் அல்லாத புதிய கதைகள் பல உண்டு. நாம் பேசி வரும் கதைகளும் சில உண்டு.

கி.ரா. அவர்கள் இது போன்ற பாலியல் கதைகளை சேகரிப்பதற்கு யாரும் இல்லாததால் நான் இந்த வேலையைச் செய்கிறேன் என்கிறார். பேச்சு வழக்கில், ஒரு கதை சொல்லியின் இடத்தில் நின்று தன்னால் இயன்ற அளவுக்கு பாலியல் கதைகளை எழுத்தில் கொண்டு வந்துள்ளார். வயது வந்தவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய கதைகள். வயது வந்தும் வயதுக்கு தேவையான முதிர்ச்சியை அடையாமல் இருப்பவர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

யாழ் தண்விகா

Saturday, 11 April 2020

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை #அம்பை

#சிவப்புக்_கழுத்துடன்_ஒரு_பச்சைப்_பறவை

சிறுகதைத் தொகுப்பு

 #அம்பை

காலச்சுவடு பதிப்பகம்

நீண்ட நாள் வாசித்த ஒரு சிறுகதைத் தொகுப்பு. 167பக்கங்கள். 13 சிறுகதைகள்.

பெண்களை மையப்படுத்திய கதைகள் அனைத்தும். கதைகளை சுவாரஸ்யப்படுத்த எதையும் செய்யாமல் அனைத்தையும் அதனதன் போக்கில் இயங்க வைத்திருப்பது இவரின் தனித்துவம் போல. முதல் கதையான தொண்டை புடைத்த காகம் ஒன்று என்பதில் வயது முதிர்ந்த தந்தையுடனான வாழ்வை, சமையலறை வழியாகக் காணும் காகம், சாலையில் பைக்கின் சக்கரங்களின் கீழ் அடிபட்டு சாகும் காகத்தின் கண்களில் இருந்து வழியும் நீர் என்பதாக நகர்த்தியிருக்கிறார். கழுத்தேறி இதயம் இறங்குகிறது வலி.

சாம்பல் மேல் எழும் நகரம் கதையானது வீடு இடம் பெயரும் வலியை அதுவும் வயதானவர்கள் உடன் வாழும்போது அவர்களைப் பராமரித்தல், அவர்களை உடனழைத்துச் செல்லுதல் என்பது உள்ளிட்ட வலிகள் எதை நோக்கி வாழ்வை இழுத்துச் செல்லும் என்பதைப் பேசுகிறது.

வீழ்தல் கதை நோயில் வீழ்ந்த தந்தைக்கு செலவழிக்க யோசிக்கும் வெளிநாட்டு வாழ் மகனின் மன நிலையையும் அதனால் தாய் எடுக்கும் முடிவையும் வலியோடு பதிவு செய்திருக்கிறது.

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை   ஒரு நீள் கதை. வாழ்தல் பற்றிய எண்ணங்கள் காலப்போக்கில் எப்படி மாறுகிறது, அதற்கேற்றாற்போல் வாழ்பவர்கள் தங்களை என்ன மனநிலைக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை வசந்தன் மைதிலி தேன்மொழி கதாபாத்திரங்கள் மூலமாக கதாசிரியர் கூறுகிறார்.

1984 கதை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இறந்த பொழுது உண்டான கலவரங்கள் குறித்த பின்னணியில் செல்கிறது.

வில் முறியாத சுயம்வரங்கள் கதையானது பணி ஓய்வு பெறும் காலத்தில் ஒரு பெண் தேடிக் கொள்ளும் உறவு குறித்துப் பேசுகிறது.

இன்னும் சில கதைகளும்
பயணம் 21, 22, 23 குறித்த கதைகளும்....

பொய்கை கதையும்
சிங்கத்தின் வால் கதையும் புனைவின் வழி செல்கிறது.

வாசிப்பில் ஒரு புதிய அனுபவம் அம்பையின் கதைகளை வாசிக்கும்போது அடைய முடிகிறது. மனதை ஊடுருவும் வரிகள், மனதைப் படம் பிடித்திருக்கும் வரிகள் என இரு நிலைகளையும் வாசிப்பவர் அடைவர்  என்பதில் மாற்றமில்லை...

யாழ் தண்விகா

Saturday, 4 April 2020

மியாவ் # சி.சரவணகார்த்திகேயன்

#மியாவ்

சிறுகதைத் தொகுப்பு

Saravanakaryhikeyan Chinnadurai.

உயிர்மை பதிப்பகம்

#அணங்கு

மியாவ் தொகுப்பில் கடைசி. நவீன தொழில் நுட்ப கண்டுபிடிப்பு சார்ந்தே இருக்கும் என்று கடைசி வரை எதிர்பார்த்தேன். ஆனால் தொடக்கம் முதல் நீட் தேர்வின் வலிகளுடன் பயணிக்கிறது. அப்பா மகள் இருவரும் தமிழகத்திலிருந்து கேரளம் பயணித்து தேர்வெழுத வேண்டும். நீதிமன்றங்களின் கைவிரிப்பு, மாணவ மாணவிகளின் மன உளைச்சலை அருமையாக கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். பயணத்தால் திடீரென்று ஆன மாதவிடாய், அதற்காக அப்பாவிடம் நாப்கின் வாங்கச் சொல்லுமிடம், அவர் இல்லையென்று திரும்புதல், அதனால் அவள் துணியைப் பயன்படுத்துதல், தேர்விடத்தில் நடக்கும் சோதனைகள் என ஒவ்வொன்றும் கண்முன் நடப்பதுபோல. வாசிக்க வாசிக்க கண்ணில் நீர் கட்டிக்கொண்டது. அங்கு நடக்கும் சோதனைகள் வலிகளின் உச்சம். இப்படி சொந்த நாட்டு மக்களை சோதனைக்கு உள்ளாக்கியவர்கள்தான் Corono கொண்டு வந்தவர்களை நாடு முழுக்க நடமாடவிட்டவர்கள் என்றெண்ணம் வந்துபோனது. வயதுக்கு வரும் முன்னரே சற்றே பெரிய மார்பகங்களைக் கொண்டிருத்தல், அதுவும் வறுமை தொற்றியிருக்கும் நிலையில் வாழும் ஒரு பெண்ணின் அசூயையான உணர்வு இதனை எவ்வித பூச்சும் இன்றி வடித்திருக்கிரார். கதையின் இறுதி நீட்டின் மேல் குருதியை உமிழ்வது போலிருந்தது. மேலும் தேர்வெழுதும் மாணவியின் பெயர் கதைக்கு அவ்வளவு பொருத்தம்...

#மோகினியாட்டம்

Facebook மூலமாக அறிமுகம் இருவர். நாளாக நாளாக காதலாகிறது. ஒருநாள் ரமணி தன் காதலை சுஜாவிடம் சொல்கிறான். சுஜா கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்கிறாள். ரமணியின் பிறந்தநாள் அன்று தான் ஒரு பெண் அல்ல ஆண் என்றும் fake id என்றும் கூறுகிறான் சுஜா. இதை யாரிடமும் கூறவேண்டாம் என்ற புரிதலின் படி பிரிக்கின்றனர். சுஜா ஒரு fb பிரபலம். மேலும் ரமணி மெசஞ்சரில் அனுப்பிய பல தகவல்கள் சுஜாவிடம் இருப்பதும் ஒரு காரணம். சுஜா ஆண் என்று சொன்னாலும் தான் ஒரு பெண் தான் எனச் சொல்லிவிட மாட்டாளா என ஏங்குகிறது ரமணியின் மனது. ஆனால் ரமணி யார்...? ஆணா பெண்ணா...? அது ரமணிக்குத்தானே தெரியும்... அந்த முடிச்சின் சுவாரஸ்யம் கதையைப் படித்தால் புரியும்...

#பெட்டை

சாதி மறுப்புத் திருமணம் செய்யத் துணிந்தவளின் காதலனை மிரட்டிப் பிரித்து விடுகின்றனர். அதன்பின் அவளை அதே சாதிக்காரன் ஒருவன் திருமணம் முடிக்கிறான். உடலெங்கும் விசம் அவனுக்கு. அவ்வப்போது வார்த்தைகளால் கொல்கிறான். ஆனாலும் வீட்டிலேயே இருக்க இயலாமல் கணவனிடம் அனுமதி பெற்று ஒரு அடகுக் கடையில் சேர்கிறாள். மேலாளராக இருப்பவனால் வரும் தொந்தரவு காரணமாக அங்கு செல்லவில்லை என்று கணவனிடம் கூறுகிறாள். அதற்கு அவன் என்ன பதில் அளித்திருப்பான்... அவள் வாழும் தெருவில் உள்ள ஒரு பெட்டை நாயைச் சுற்றி ஆண் நாய்க் கூட்டம். ஆனால் கணவனாக உள்ளவன் எந்த நாயைப் பலிகடா ஆக்குகிறான்... இந்த இரண்டையும் முடிச்சிட்டு முடிகிறது கதை. மாதவியின் முடிவும் பெட்டைத் தனமாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்வதா... அல்லது இவர்கள் முன் வாழ்வதற்கு இதுதான் இவர்களுக்கு அளிக்கும் தண்டனை என மாதவி முடிவெடுத்துவிட்டாளா என யோசிக்க வைக்கிறது கதை...

#நீதிக்கதை

தற்கொலை விளையாட்டான ப்ளூவேல் கேமை மையப்படுத்திய கதை. சாக விரும்புபவன் மற்றும் அவனுக்கான டாஸ்க் கொடுக்கும் நபர் இருவருக்கும் இடையே நடக்கும் அன்பு யுத்தம். ஆனால் கடைசியில் என்ன நடக்கிறது என்பதை பதட்டத்தோடு நகர்த்திக்கொண்டு சென்று சொல்கிறது கதை. நீலத் திமிங்கல விளையாட்டு என்பதன் சுருக்கம் நீதிக்கத்தை என்று வைத்துக்கொண்டாலும் விளையாட்டின் நீதியையும் காப்பாற்றுகிறது கதை. வேற லெவல்...

#அழியாக்கோலம்

டிவிட்டர்ல டி எம்மில் பகிர்ந்துகொண்ட டாப்லெஸ் செல்ஃபி திருமணத்திற்கு முன் ஒருத்தியின் வாழ்வை எப்படிப் பதம் பார்க்கிறது என்பது கதை. ஆனால் அது யாரால் எப்படி லீக் ஆனது என்பதுதான் திருப்பம்...

#மியாவ்...

ஆண் பெண்ணிடையே நிகழும் ரசவாதம்  தான் மையம். இளமையை எப்படிக் களிப்போடு வைப்பது என்பதை பெண்களுடனான சுவாரஸ்யத் தொடர்புகளுடன் கோர்த்து கோர்வையாக்கிக் காட்டியிருக்கிறது கதை. வசியம் என்பதை எல்லோரும் கைக்கொண்டுவிட்டால் வசியத்திற்கு மதிப்பில்லாமல் போய்விடும் போல. அத்தகைய வசியம் எழுத்தாக கதாசிரியருக்கு வாய்த்திருக்கிறது...

#நியூட்டனின்_மூன்றாம்_விதி

இயந்திரத்திற்கும் பூக்கும் காதலை கிரகம் விட்டு கிரகம் கொண்டு சென்று காட்சிப்படுத்தியிருக்கிறார்...

#காமத்தாழி...

யதேச்சையாக ஒரு ticket 100000 ரூபாயில். தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை அதனால் கலந்துகொள்ள முடியாது என 85000 ரூபாய்க்கு கொடுக்கிறான் ஒருவன் அந்த டிக்கெட்டை.... அது புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஒரு தம்பதியர் வேறொரு தம்பதியரோடு குலுக்கல் முறையில் கூடுதல்,  அறைச் செலவு, மது என திளைக்க வாய்ப்பு. பார்த்திபன், சில்வியா இருவரும் அதில் கலக்க முடிவெடுக்கிறார்கள். அதற்கான சம்மதம் கோருதல், சம்மதிக்க வைத்தல் என பார்த்திபன் வேலைகள், அதன்பின் சில்வியா ஆயத்தம் அழகு நிலையம் செல்லுதல், சுயநாவிதம் என நீள்கிறது அதற்கே சில ஆயிரங்கள் செலவு என்பதாக. கொண்டாட்டத்தில் கலக்க செல்லும் நாளில் அவளை பார்த்திபன் வெகு ரசனையுடன் உற்று நோக்கல், தகுந்தாற்போல் அவளும் வசீகரத்தை அழகில் கொண்டு வருதல்... நிகழ்வு நடைபெறும் இடத்தில் பார்த்தி வேறொருத்தியுடன், சில்வியா வேறொருவனுடன்... புத்தாண்டு புதுமையாக விடிகிறது... சில்வியா பார்த்திபனுக்கு good morning மெசேஜை அனுப்புகிறாள். அப்பொழுது அவள் காணும் ஒரு செய்தி அவளை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அது என்ன என்பதாக கதை முடிகிறது. இது போன்ற கதைகள் எல்லாம் மஞ்சள் பத்திரிக்கைகளில் வெறும் ஆபாச சொற்களால் நிரம்பியிருக்கும். ஆனால் இக்கதை எழுத்தின் உணர்ச்சிகளால் அன்பின் உரையாடல்களில் நிரம்பியிருக்கிறது. தோழர் ஒருவரிடம் இந்த கதை பற்றி பகிர்ந்தால் அவர் கார் key யை வாங்கி மொத்தமாகப் போட்டு குலுக்கி எடுத்து இணையாக வரும் நபர்களை தேர்வு செய்வார்களாம். கேள்விப்பட்டிருக்கிறேன் என்றார். ஆச்சரியமாக இருந்தது.

#நான்காவது_தோட்டா

காந்தி இறப்பின்போது அவரின் மேல் பாய்ந்த நான்காவது புல்லட் என்பது உண்மைதானா என்ற தற்போதைய தேடல், மற்றும் காந்தி இறப்பதற்கு முன் வாழ்ந்த கடைசி நாட்களில் அவர் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் அவரை நோக்கி நெருங்கி வந்த இறப்பை அவர் உணர்ந்தே இருக்கிறார் என்ற இரண்டையும் வைத்து பின்னப்பட்ட கதை. நேரு, இந்திரா, ராஜிவ், கோட்சே, வல்லபாய் பட்டேல் என பலரும் கதைக்குள் இருக்கிறார்கள். அன்பால் மட்டுமே இந்த உலகை மீட்டெடுக்க முடியும் என உணர்ந்த காந்தி இவ்வாறுதான் பேசியிருப்பார் என்பதை அவர் கூறுவதாக உள்ள உரையாடல்கள் அனைத்திலும் காணலாம்... மரணத்தின் வாசத்தை உணர்ந்து வாழ்ந்த காந்தியின்   அந்திமக் காலத்தை கண்முன்னே நிறுத்துகிறது கதை.

ஒவ்வொரு கதையும் அலுப்புத் தட்டாமல் நவீன கால பிரச்சனைகள், வாழ்க்கைச் சூழல், தொழில்நுட்பம் இவற்றோடு செல்வது மிகப் பிடித்திருக்கிறது...

தொடருங்கள் தோழர்
வாழ்த்துகளும் பேரன்பும்...

யாழ் தண்விகா

Friday, 27 March 2020

எங் கதெ #இமையம்

எங் கதெ
#இமையம்

43 வயது உடைய விநாயகம் திருமணம் முடிக்காமல் கமலா என்பவரோடு எல்லாமுமாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாகப் பேசும் கமலாவுக்காக எல்லாவற்றையும் விடுத்து அவளே கதி என்றிருக்கிறான். அவள் மேல் இவனுக்கு சந்தேகம். அதற்குத் தகுந்தாற்போல் சிற்சில சம்பவங்கள் நடக்கிறது. ஆனால் அவள் எப்போதும் போல் பேசுகிறாள் எதுவும் நடக்காதது போல. பலமுறை அவளிடம் சண்டை போட்டுத் திரும்புகிறான். இவன் வீட்டில் அம்மா, அப்பா, மூன்று தங்கைகள், இவன் தம்பியாக வரும் அம்பலவாணன் என பலரும் இவன் நிலை குறித்து பெரும் வேதனை கொள்கிறார்கள். ஒரு இளைஞனின் காதல் குறித்துப் பேசும்போது கொண்டாடும் விதத்தையும் அதில் ஏற்படும் பிரிவின் வலியையும் விநாயகத்தின் வழியாக சொல்லி வருகிறார் இமையம். கணவன் இழந்தவள் கமலா, இரு பெண் குழந்தைகள், அவளின் மேலதிகாரி, அவளின் அப்பா, அம்மா என பாத்திரங்கள் இருந்தாலும் மிக குறைவான இடங்களே அவர்களுக்கு. ஒரு கட்டத்தில் கமலா மேல் வெறுப்புக் கொண்டு அவளைக் கொலை செய்து தானும் இறந்துவிட முடிவெடுத்து அவளிடம் நோக்கிச் செல்கிறான் விநாயகம். என்ன முடிவாக இருக்கும் என்பதை வாசித்து உணருங்கள்.

ஆசிரியர் தன் கதை கூறுவது போல அவ்வளவு இயல்பாக வந்திருக்கிறது நாவல். பாமா எழுதிய கருக்கு நாவல் போல இது ஒரு எழுத்து நடை. கிராமத்து சொல்லாடல் அப்படியே. பல வார்த்தைகள் அப்படியே நம்மை கிராமத்துக்குள் இழுத்துச் செல்வது போல இருக்கின்றன.

பாலு குடிச்சிக்கிட்டு இருக்கும்போதே தூங்கிப்போற குழந்தை மாரி பாய விரிச்சதுமே அவ தூங்கிட்டா.
வெதய வெதச்சவன் தூங்குனாலும் அவன் வெதச்ச வெத தூங்காதில்லையா? அந்தமாரிதான் நான் தூங்கல.

கூரயிலிருந்து தண்ணி எறங்குற மாரி எங் கண்ணுல தண்ணி எறங்குச்சி.

பொங்கக் காசி கொடு மாமான்னு மூணு தங்கச்சிப் புள்ளைங்களும் என்னெச் சுத்திக்கிச்சி. வெறும் மூணு ரூபாதான் இருந்திச்சி. எதிரில ஏழெட்டுப் புள்ளைங்க. அதுகளப் பாத்ததும் துணியில்லாம நிக்குற மாரி இருந்திச்சி.

வெலக்கி வாங்குனவன் இயித்துக்கிட்டுப் போற ஆடு மாரி நான் வூட்ட வுட்டு வெளியே நடந்தன். ஆட்டுக்காரி மாரி எங்கம்மா வாசல்ல நின்னு என்னயே பார்த்துக்கிட்டு இருந்திச்சி...

இப்படிப் பல இடங்கள்.
வாசியுங்கள்
நீங்கள் வினாயகமாக மாறலாம்...
கமலாவாக மாறலாம்.
அல்லது இவர்களை வேடிக்கை பார்க்கும் ஊர்க்காரர்களாக மாறலாம்.

வாழ்த்துகள் தோழர் இமையம்...
க்ரியா பதிப்பகம்.

யாழ் தண்விகா

Monday, 17 February 2020

பறவையின் நிழல் _ கவிஞர் பிருந்தா சாரதி

#பறவையின்_நிழல்
#கவிதைத்தொகுப்பு
#கவிஞர் Brindha Sarathy

தன்னிலை மறந்து பேரின்பத்தை உணர்ந்து கொண்டிருக்கும் உன்னத நிலையே காதல். என்னிலை வந்தாலும் அவளேதான் வேண்டும் அவள் மடியில் உயிர்மடிய வேண்டுமென உச்சநிலைக்குச் சென்று ஒப்படைப்பது காதல்.
வெயிலின் வெம்மை குளிரும்.. குளிரைக் கூட மழையில் நனைவதைப்போல சிலாகிக்கும் மனதை உண்டு பண்ணக் கூடியது காதல். உயிரின் கடைசி அணுவைக் கூட அசைய வைத்து ஆதியின் அந்தத்தைத் தேட வைக்கும். ஏகாந்தத்தைச் சுமந்து கொண்டு பேரண்டப் பெருவெளியில் மிதக்கும் உணர்வில் வாழ்பவர்களே காதலர்கள். அவர்களுக்கு கவிதை என்பது உறைக் கிணறு போன்றது. அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போன்றது. வானத்தில் எப்போதோ தோன்றும் வானவில்லும் காதலிக்குப் போட்டியாக வந்துவிடும். இப்படி பிரபஞ்சத்தின் முதல் மொழியான காதலைப் பற்றிய நூறு கவிதைகளை கவிஞரும், தித்திக்குதே திரைப்படத்தின் இயக்குனரும், ஆனந்தம், பையா, வேட்டை, அஞ்சான் போன்ற திரைப்படங்களின் வசனகர்த்தாவுமான தோழர் Brindha Sarathy எழுதியிருப்பது அவரின் காதல் உணர்வைப் படம்பிடிப்பதாக இருக்கிறது

"அதுவரை
போட்டியே இல்லாமல்
ஜெயித்துக் கொண்டிருந்த வானவில்
நீ பிறந்த பிறகு
பொறாமைப்படத் தொடங்கியது"
என்ற கவிதையில் இயற்கையை விட என்னவள் பேரழகியே என்கிறார் கவிஞர்.

"என் உள்ளங்கை நெல்மணிகளை
நீ கொத்திக் கொத்தித் தின்றபோது
உன் கூரிய அலகுகள் தந்த வலி சுகமாயிருந்தது
இன்று கைநிறைய தானியங்கள்
நீ வராத வெறுமைதான்
வலிக்கிறது"
இந்தக் கவிதையில் கூரிய அலகுகள் கொடுத்த வலியின் சுகத்தையும், பிரிவின் வலியில் துடிக்கும் அவலத்தையும் ஒரே நேர்கோட்டில் காணமுடிகிறது. பறவையையும் காதலையும் ஒருங்கிணைத்து வரிகளைப் படைத்திருக்கிறார்.

பிற உயிரினங்களின் மீது பரிவைக் காட்டும் காதலி அதனோடு கொஞ்சி விளையாடும் குழந்தைத் தனத்தை காதலன் தன்னை அங்கு முன்னிறுத்தி அந்த உயிரினமாக மாறிவிடும் நேரத்தை
"உன் வீட்டுத் தொட்டி மீன்களிடம்
நீ காட்டும் கரிசனத்தைப் பார்த்தபோது
அந்தக் குட்டி மீன்களில்
ஒன்றாகி விட்டேன் நான்" என்கிறார்.

இன்னொரு இடத்தில் உயிரற்ற பொருளின்மீது அவளிட்ட முத்தத்தைச் சொல்கிறார்
"நிலைவாசல் கதவுக்கு
நீ தந்த முத்தம்
இன்னமும்
அங்கேயேதான் இருக்கிறது"

இன்னுமொரு கவிதையில் நினைவுகளைச் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கும் காதல்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றன. அலைந்து அவதியுறும் அலாதியான இன்பமும் துன்பமும் சுகந்த மனநிலையுமே காதலின் பித்து நிலை. தன்னிலை மறந்து தானாக அவளுள் வாழ்வது அப்படி வாழ்வதற்கான சாத்தியங்களை காதல் உருவாக்கும் அல்லது காதலர்கள் கொள்வார்கள் என்கிறார்.
"வார்த்தைகளை
இறைத்து இறைத்துத்
தோற்றுக் கொண்டிருக்கிறேன் நான்
மௌனத்தை
நீட்டித்து நீட்டித்து
ஜெயித்துக் கொண்டிருக்கிறாய் நீ"
என்ற கவிதையின் மூலம் அதனை நிறுவுகிறார்.

கொடூரத்தின் சொற்களை விட பன்மடங்கு வலியையும் வேதனையையும் ஏற்படுத்தும் மௌனம். காலமும் நேரமும் காதலை காவு வாங்கும். வெறுமையை உண்டு பண்ணும். மௌனமும் வெறுமையும் காதலை ஓட ஓட விரட்டிக் கொல்லும். காதலர்கள் இறப்பார்கள் தவிர காதலும் அதன் நினைவும் அழியாமல் தொடரும். சுவடைப் போல படிந்திருக்கும்.

இப்படிப் பறவையின் நிழல் தொகுப்பைப் படிக்கும்போது
காதல் உலகில் பறந்து கொண்டே இருக்கலாம். நிழல் தேடி ஒதுங்கிக் கொள்வது போலவே காதலில் மூழ்கி அவ்வப்போது இளைப்பாற மட்டுமல்லாது நினைவில் ஊறித் திளைக்க கவிதை பேரின்ப உலகம். கவிஞர் பிருந்தா சாரதியின் கவிதைத் தொகுப்பும் அப்படியே. காதலின் பேரின்பம்,உச்சநிலை,பிரிவு,கோவம், போன்றவற்றை பேசும் இத்தொகுப்பின் கவிதைகள் எல்லோர் வாழ்விலும் கடந்து வந்த காதல்களை நினைவுபடுத்துவதாக உள்ளது. கடந்த காதல்களை மீட்டுணரும் அதே சமயம் அதன்மேல் சுவாரசியங்களை அள்ளித் தெளிப்பதாகவும் உள்ளது.

வாழ்த்துகள் தோழர் Brindha Sarathy.

Wednesday, 29 January 2020

தனித்திருக்கும் அரளிகளின் மதியம்

#தனித்திருக்கும்_அரளிகளின்_மதியம்
#கவிஞர்_ப_காளிமுத்து
#கவிதைத்தொகுப்பு

கவிதை எப்போதும் ஒரு வழிப்பாதையாக அமைந்துவிட்டால் அது எத்தகைய அனுபவத்தையும் கடத்தும் வேலையைச் செய்யாது. அதே கவிதை இருவழிப் பாதையாக அமையும் பொழுது ஒரு வாசகன் கவிதையை கண்டடைகிறான். ஒரு கவிதை ஒரு நல்ல அனுபவத்தை கடத்தும் பணியை செய்து விடுகிறது. புத்தகம் வாசகன் இரண்டுக்குமான செயல் இங்கு ஒரு ஆத்மார்த்தமான எண்ண ஓட்டத்தை இருதரப்பிலும் கடத்தும் பணியை செய்ய வேண்டும். அத்தகைய அதிசயத்தக்க ஒரு பணியை தனித்திருக்கும் அரளிகளின் மதியம் என்ற இக்கவிதைத்தொகுப்பு அனாயசமாக செய்து முடித்திருக்கிறது.

ஒரு கவிதை நம்மைப் பேச வைக்க வேண்டும். ஒரு கவிதையோடு நாம் பேசவேண்டும். இந்தக் கவிதை நூல் நம்மைப்பேச வைக்கிறது. நாமும் கவிதையோடு பேசுகிறோம். இதற்கும் மேலாக கவிதை நம் குரலை காது கொடுத்துக் கேட்கிறது. இதனை எப்படி நாம் உணர்வது.
ஒரு கவிதை...

சிறு நிலம்
கொஞ்சம் தீனி
பரிவு நிழல்
பசி தீர்க்க அவகாசம்
ஒரு வேடனும்

மற்றும் ஒரு கவிதை...

அது வேடன் வீடு தான்
எனக்கும் தெரியும்
அந்தப் பறவைக்கும் தெரியும்
பிறகு கீச்சிடுவதெதற்கென்றுதான் தெரியவில்லை...

கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முடிப்பினைக் கைவசம் வைத்திருக்கின்றன. அந்த முடிப்பு என்பது நாம் அறியாத ஒன்றாக இருப்பதுதான் கவிதையின் சிறப்பு எனக் கருத வேண்டியிருக்கிறது
"மாதக் காலண்டரில் இத்தேதி அடிக்கோடிடப்படவில்லை
மகிழ் தினங்களின் வரிசையிலும் இல்லை
ஒரு மழை
காதல் செடிக்குத் தூறாத
ஒரு நாளை
எவரின் சபித்தலுக்கும்
ஆட்படாத ஒரு நாளை
வேண்டுமானால்
பிறந்த தேதியே அறியாத ஒருத்தியின்
பிறந்தநாளை
இன்றைக்குக்
கொண்டாடினால் என்ன?"
சொற்களில் காணப்படும் வித்தகத் தன்மை ஒரு புறம் இருந்தாலும் அதனுள் பொதிந்து கிடக்கும் அன்பிற்கு சொற்கள் தன்னை ஒப்புக்கொடுக்கும் வித்தை மிகவும் இலகுவாக கைகூடியிருக்கிறது கவிஞருக்கு. எவரின் சபித்தலுக்கும் ஆட்படாத ஒரு நாளை என்ற வார்த்தையும் பிறந்த தேதியே அறியாத ஒருத்தியின் பிறந்தநாளை இன்றைக்குக் கொண்டாடினால் என்ன என்ற வார்த்தையும் கவிதையின் தளத்தை மிகச் சிறப்பாக வேறொரு இடத்தில் நிறுத்துகிறது...

காதல் கவிதைகளும் தொகுப்பில் காணக் கிடைக்கின்றன
"ஒரு மரத்தின்
எப்போதும்
உதிர்க்காத இலையை
உன் பெயர் எழுதித் தந்து செல்கிறாய்
அவ்விலை
என்னுள் ஒரு பெரும் மரமானது
எக்கிளை காணினும்
உதிரவே உதிரா இலைகள்..."

"காத்திருத்தலைச் சுவையூட்ட
ஒரு மழையை அனுப்பினாய்
அது வேடிக்கை பார்த்தபடி இருந்த
நிலத்தை துள்ளல் இசைக்கு ஆடச் செய்தது
ஓர் உடலின் ஒட்டுமொத்த சூட்டையும்
ஒரு கோப்பையில் இறக்கித் தந்தது
காலிக் கோப்பையை நிரப்பத் தொடங்கினேன்
வழியும் முன்னமே வருகிறாய்
பிறகு
அந்த மழையை
சுமந்தபடி பயணமானோம்..."

பெயர் எழுதி தந்து செல்லக்கூடிய இலை மனதில் பெரும் மரமாகி நிற்கிறது. கிளைகள் எங்கும் உதிரவே உதிரா இலைகள்! காதலின் தனித்துவம் சொல்லும் அற்புத வரிகள்.

 ஒரு மழையை காதலி அனுப்புகிறாள். மழையால் நிலமாடுகிறது. உடலின் ஒட்டுமொத்த சூட்டையும்  கோப்பையில் நிரப்புகிறது.  தொடர்ந்து காலி கோப்பையை மழையால் நிரப்ப தொடங்குகிறார் கவிஞர். ஆனால்  காலி கோப்பை நிரம்புவதற்கு முன்னரே காதலி வருகிறாள். காலி கோப்பை அப்படியே இருக்கிறது. இன்னும் வழியவில்லை மழை காலிக் கோப்பையில். மழையை என்னசெய்ய... அந்த மழையை சுமந்தபடி பயணம் ஆகின்றனர் காதலர்கள். ஒரு அற்புத உணர்வை காதல் கொடுக்கிறது. அந்த உணர்வை கவிதையும் கொடுக்கும் என்று நிரூபித்துள்ளார் கவிஞர்.

தொகுப்பெங்கிலும் மென் ரசனைக் கவிதைகளே அதிகளவில் இருக்கின்றன. சில கவிதைகளில் ரசனையின் உச்சம் வெளிப்படுகிறது. கவிதையை கவிதையாக கண்டறியும் வாகு இவருடைய கவிதை எனலாம்.
அப்படி ஒரு கவிதை இது.
"பறத்தலில் சற்று குறைபாடுள்ள பறவை மேல் செல்கிறது
சக பறவைகளின் விரைவைப் பொருட்படுத்துவதில்லை
சின்னஞ்சிறு பறவைகள் முந்திச் செல்கையில்
சுருக்கமாய் தேற்றிக்கொள்கிறது மழைக்காலங்களில் சிறகுதற்றும் பறவைகளை நேசிக்கிறது உடன்பிறப்பு பறவைகளின் கவனிப்புகளை விரும்புவதில்லை
வழக்கமான இடங்களில் இருக்கும் தீனிகளே போதுமானதாகிறது 
யார் மீதும் புகார்கள்அற்ற அந்தப் பறவைக்கு
உயரப் பறத்தல் இல்லை பறத்தலின் பொருட்டே திருப்தியுறுகிறது"

ஒரு கவிதையை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாசித்தல் என்பது புரியாமல் வாசித்தல் ஒன்று. ரசனையின் பால் மீண்டும் மீண்டும் வாசித்தல் மற்றொன்று. காளிமுத்து அவர்களின் கவிதை ரசனையின் பால் வாசிக்கத் தூண்டும் கவிதை. மேலும் கவிதையின் பால் நம்மை இழுத்துச் செல்லக்கூடிய வகைமை.
"அம் மேசையிலிருந்து
இடறி விழுந்த
இரு குவளைகளில்
ஒன்று என்னுடையது"
அவ்வளவுதான் கவிதை. மேஜையில் பார்வை விழுதல், அந்த பார்வையின் திசை அடுத்து இடறி விழும் குவளையின் பக்கம் செல்லுதல், அடுத்து விழுந்த குவளை தன்னுடையது என்று அறிதல், அந்த மற்றொரு குவளை யாருடையது என்று வினவுதல், ஏன் விழுந்தது என்று கேள்வி எழும்புதல், எந்த மாதிரியான சூழலில் இந்த விழுதல் சாத்தியம் என்ற வினா தோன்றுதல், யார் யார் சந்தித்துக் கொண்டது என்று எண்ண வைத்தல், இப்படியான எண்ணத்தை உருவாக்கி விடுவது இவர் திட்டமிட்டு அமைத்ததா அல்லது கவிதை அமைக்கிறதா என்பதுதான் மீண்டும் மீண்டும் படிக்கச் செய்தலில் காணக்கிடைக்கும் லாவகம்...

கவிதைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான கரு, கவிதைக்கான சொற்கள் பிரயோகம் என்பது ஒரு தேர்ந்த அனுபவசாலியான கவிஞன் கையாள்வது போல அவ்வளவு நேர்த்தி, என் கவிதைகள் இப்படித்தான் இருக்கும் என்பது போலான உத்தியை கையாளுதல், இயற்கையை பாடுதல் என தன்னுடைய முதல் தொகுப்பிலேயே கவிதையை கொண்டாடித் தீர்த்திருக்கிறார் கவிஞர். அவரோடு சேர்ந்து நாம் கொண்டாடும் அதே கணம் ஆச்சரியத்தையும் முன்வைத்து கொண்டாடித் தீர்க்கிறோம்.

இறுதியாக ஒரு கவிதை...

"இந்நேரமாகியும்
ஒளிரும் அவ்வீட்டை
கடப்பவளின் கைகளுக்குள்
ஒரு மெல்லிய பகை
சிணுங்கிக் கொண்டிருந்தது"
இந்நேரம்  என்பது எவ்வளவு நேரம், ஒளிரும் வீடு யார் வீடு, கடப்பவள் என்பவள் யார், அவளுக்குள் எதற்கான பகை சிணுங்கிக் கொண்டிருந்தது, எப்பொழுது வீரியமாகும்...

கவிஞர் அம்சப்ரியா கூறுவது போல
"கவிஞன் தனக்குள் இடைவிடாமல் கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற வேளையில் தனக்கான பாதிப்பை வெளிப்படுத்துகிற போது அது தனக்கான வடிவத்தை தேர்ந்தெடுக்கிறது. அது ஒரு சிறந்த கவிதையும் ஆகிறது..." அப்படித்தான் கவி காளிமுத்துவின் கவிதைகளும்.

வாழ்த்துகள் தோழர் Kavi Kalimuthu
9629446203
இருவாட்சி பதிப்பகம்...

Wednesday, 22 January 2020

கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள்

தோழர் சேலம் ராஜா எழுதிய #கோழிக்கறி_வாங்குபவனின்_சித்திரக்குறிப்புகள் என்ற கவிதை நூலை தபாலில் கிடைக்கப் பெற்றவுடன் வாசித்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது அதில் உள்ள முதல் கவிதையை படித்த உடனே.

ஒரு ஊரின் சாதியப் பாகுபாட்டை
ஒரு ஊரின் வர்க்க பாகுபாட்டை
ஒரு ஊரின் மனிதர்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை
ஊரை குறித்த ஒரு சித்திரத்தை இதைவிட அற்புதமாக எளிய வரிகளில் கூறிவிட முடியுமா என்றால் என்னால் வேறு எந்த கவிதையையும் மேற்கோள் காட்டி விட முடியுமா என்று தோன்றவில்லை அந்தக் கவிதை "அழகிய
கோபுரத்தில் தொடங்கி
அம்பேத்கர் சிலையோடு
முடிந்து விடுகிறது
எங்கள் ஊர்" என்பதுதான்.
ஆச்சரியமாக இருக்கிறது. அவ்வளவு எளிமையாக ஆனால் ஒரு மூர்க்கம் இதற்குள் இருக்கிறது. அந்த முகம் தான் கோபுரமும் அம்பேத்கரும் என காண்பிக்கப்பட்டுள்ளது.  அற்புதமான முதல் கவிதை. இந்த ஒரு கவிதைக்காகவே சேலம் ராஜாவின் கைவிரல்களில் படிந்துள்ள சித்திரக் குறிப்புகளுக்கு ஆயிரம் ஆயிரம் முத்தங்களைத் தரலாம்...

கவிதை என்றால் என்ன
கவிதை என்பது எதைக் குறித்து பேசவேண்டும்
கவிதை என்ன செய்யும்
என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலாக இத்தொகுப்பை அடையாளம் காட்டலாம் கவிதை என்பது எளிமையாக இருக்கவேண்டும்
கவிதை என்பது மனிதர்களை குறித்துப் பேச வேண்டும்
கவிதை என்பது நாம் பார்க்காத உலகத்தை காட்ட வேண்டும்
பார்த்த உலகத்திலுள்ள வேறுபாடுகளை மனிதத்தை நமக்கு அடையாளம் காட்ட வேண்டும். அதனை இந்தத் தொகுப்பு நிறைவேற்றி இருப்பதாகவே நம்புகிறேன். நட்பை மையப்படுத்தி ஒரு கவிதை கருப்பி என்ற தலைப்பில்...
தனக்குள் கிடைக்கும் உள்ளக்கிடக்கையை எந்தவித சங்கோஜமும் இல்லாமல் நண்பனிடம் தெரிவிக்கும் ஒருத்தி பற்றியது இந்தக் கவிதை. கவிதையின் நிறைவில்
"இன்று பேருந்தில் ஏறி என்னருகே அமர்ந்ததுமே
"பீரியட்ஸ் டைம்டா வயிறு வலி முடியல
நாப்கினே நனஞ்சிடுச்சு"
 எந்தவித சங்கோஜமுமின்றி சொல்லிவிட்டுத் தோள் சாய்ந்தாள். எனக்குள் தாய்மை பூக்கும் முன் வேர்த்த நொடி
பாறை இடுக்கில் விதை முட்டும் தருணம் போலிருந்தது"
 நட்பு என்பது என்ன செய்யும்? இதைப் போன்ற சொற்களை கேட்கும்பொழுது தோளில் சாய்த்து ஆறுதல் அளிக்கும் ஒரு தாயின் அன்பை போல அந்த தோள்கள் ஆக ஒவ்வொரு ஆண்களின் தோள்களும் மாறினால் எவ்வளவு அற்புதமான ஒரு வாழ்வாக இருக்கும் நட்பு பாராட்டும் தோழிகளுக்கு...

எல்லா இடங்களிலும் கொட்டிக் கிடப்பதை கவிதை என ஒவ்வொருவரும் எழுதி வைத்து விடுகிறோம். ஆனால் சேலம் ராஜாவின் பார்வை கவிதையை மட்டுமே கவிதையாக்கி வைத்திருக்கிறது. அந்த கவிதை அலங்கோலத்தில் இருந்தும் பிறந்திருக்கிறது. அழகியலில் இருந்தும் பிறந்திருக்கிறது. விடுதலை வேண்டி ஒரு யாசகம் என்றொரு கவிதை. அந்த கவிதையில் அரசு கட்டி கொடுத்திருக்கும் கழிப்பறைகளில் தனியார் கழிப்பறைகளில் சுவர்களில் எழுதி உள்ள வாசகங்கள் சுவரில் வடித்து வைத்துள்ள ஓவியங்கள் சுவரில் குறித்து வைக்கப்பட்டுள்ள அலைபேசி எண்கள் இதனை மையமாக வைத்து எழுதப்பட்ட அந்த கவிதையில் ஆண்களின் கழிவறை என்பது எவ்வளவு வக்கிரபுத்தி இருக்கக்கூடிய ஒன்று என்பதனை காட்சிப்படுத்தி இருக்கிறது. ஒவ்வொன்றையும் சொல்லிவிட்டு அந்த கவிதையின் முடிவில் இவ்வாறு முடிக்கிறார்
"எட்டிப் பார்க்க விருப்பமில்லை
வெட்கம் இன்றி கேட்கிறேன்.
 நீ புழங்கும் கழிவறைக்கு
என்னை அழைத்துச் செல் சினேகி..." இதுபோன்ற வக்கிரங்களை காண சகிக்கவில்லை. இதுபோன்ற வக்கிரங்களுக்கு அப்பாற்பட்ட இடங்களை காண விரும்புகிறேன்.
இது போன்ற மனிதர்கள் உங்களிடம் இருக்கிறார்களா என்ன
இது போல உங்களில்  இவ்வளவு அதிகமாக தோழியர் இருக்க மாட்டார்கள் என்று நம்பிக்கையுடன் எட்டிப் பார்க்க வருகிறேன் என்ற பல கோணங்களில் கவிஞரின் எண்ண ஓட்டத்தை நான் காண்கிறேன் இக்கவிதையில்...

அரசியலற்ற எதுவும் முழுமையான கவிதை ஆகிவிடாது என்பது உண்மைதான். அதற்காக எல்லாவற்றிலும் அரசியல் இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. ஆனால் இத்தொகுப்பில் அழகியலை காட்சிப்படுத்திய அதேநேரத்தில் வாழ்க்கையை காட்சிப்படுத்திய அதே நேரத்தில் காதலை காட்சிப்படுத்திய அதே நேரத்தில் வயல் வெளியை காட்சிப்படுத்திய அதேநேரத்தில் அரசியலின் அவலத்தையும் காட்சிப்படுத்தியிருக்கிறார். எட்டு வழி சாலை எவ்வளவு கொடூரமானது?
 எட்டு வழிச் சாலை ஏழைகளின், வயல்வெளிகளின், உழைக்கும் மக்களின் முகத்தை எவ்வாறு கசக்கிப் எறிகிறது. எவ்வாறு இந்த மண்ணிலிருந்து அப்புறப்படுத்துகிறது என்பதனை புரட்சிகரமான வார்த்தைகளின் மூலமாக சேலத்திற்கும் எடப்பாடிக்கும் தூரமில்லை என்ற கவிதையில் வடித்திருக்கிறார் கவிஞர். "எங்கள் நிலம் கேட்டு
எங்கள் உரிமை கேட்டு
எங்கள் வாழ்வாதாரம் கேட்டு எதற்கெடுத்தாலும் போராட்டம் எதுவாகினும் போராட்டம்
நாங்கள் எல்லாம் சமூக விரோதிகள் நீங்களெல்லாம்...?"
என்ற கேள்வியை முன்வைக்கிறார் அரசியல்வாதிகளை நோக்கி. தலைப்பே சொல்லும் இது யாரை நோக்கிய கேள்வி என்று...
தாமரை மயிரிலும் மலராது என்று மிக அதிகமாக தமிழகத்தில் புழங்கிய ஒரு வார்த்தையை எடுத்துக்காட்டும் விதமான ஒரு கவிதையும் உண்டு தொகுப்பில்...

பூனைக்கு தெரியாத உலகம் கொத்துக்காரர் கிழவி உள்ளிட்ட  கவிதைகள் வறுமையை பேசுகின்றன. வறுமைக்கும் கார்ப்பரேட்டுக்கும் இடையே உள்ள மேடு பள்ளத்தினை காட்சிப்படுத்தி  இருக்கின்றன. பிரதமரின் செயல்பாடுகளை அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை விமர்சனம் செய்யக்கூடிய முட்டாள் பெட்டி என்ற கவிதை எல்லாவற்றையும் ஒரு பகடி போல கடந்து போகும் மக்களின் மனநிலையைக் காட்டுகிறது...
மேலும் ஊர் நாட்டு வழக்காடு மொழியில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கவிதையும் மனிதர்களின் வெள்ளந்தித்தனத்தையும் அவர்களின் ஆற்றாமையையும் அவர்களின் அன்பையும் ஒரு வாழ்வியலோடு நாம் வாசிப்பதன்மூலம்  அறிய முடிகிறது. அதேசமயம் கிராமத்தில் வாழ்கின்ற அப்பாக்கள் மனைவியை தெரிந்தோ தெரியாமலோ வைத்திருக்கக்கூடிய இடம் ஒரு பெண்ணடிமைத்தனத்தை எப்படி எல்லாம் காலம்காலமாக கடத்திவந்திருக்கிறது என்பதையும் உணர வைக்கிறது. தொகுப்பின் இடையிடையே உள்ள குட்டி குட்டி கவிதைகள் வேதனைகள் தொனிக்கும் கவிதைகளுக்கு ஒத்தடம் வைப்பதுபோல் அழகியலை வெளிப்படுத்தும் வண்ணம் உள்ளன. வார்த்தை என்ற தலைப்பிலான கவிதை
"உன் கீழ் உதட்டின் கீழ்
கிளை போல் என் கைகளை விரிக்கிறேன்
அதில் உன் வார்த்தை மூட்டையை அவிழ்த்து விடு" என்ற கவிதையை வாசிக்கும்போது இயல்பாகவே கைகள் விரிகிறது பிடித்த நபரின் இதழின் கீழ்ப்புறம்...

அழைப்பற்ற வீடு என்ற ஒரு கவிதை தன்னுடைய வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரின் நிலை குறித்தும் வாழ்வாதாரம் குறித்தும் வறுமை குறித்தும் உள்ளதை உள்ளபடி காட்சிப்படுத்திச் சென்று கொண்டிருக்கக்கூடிய இந்த கவிதை கடைசியாக உங்களை நான் என் வீட்டிற்கு அழைக்க வில்லை என்பதற்கு காரணம் கூறுவது போல் முடிகிறது எல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியும் எல்லாம் நீங்கள் பார்த்தவுடன் நீங்கள் எங்கள் மேல் காட்டும் கழிவிரக்கத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது இந்த காலம் எங்களுக்கு சபிக்கப்பட்ட ஒரு வாழ்வு வழங்கியிருக்கிறது என்பது போல் நீங்கள் பரிகாசம் செய்வீர்களா அறிவுரை கூறுவீர்களா தெரியாது ஆனால் அந்த கழிவிரக்கத்தை அந்த பரிதாபத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது நாங்கள் எல்லாவற்றையும் கடக்க பிறந்தவர்கள் நீங்கள் எங்களை நோக்கி பரிகாசம் செய்யும் அந்த பரிதாபத்தை ஒருபோதும் நாங்கள் விரும்புவதில்லை ஆதலால் தான் நான் உங்களை என் வீட்டிற்கு அழைப்பதில்லை என்ற சொற்களோடு அந்த கவிதை முடிந்திருக்கும். அற்புதம் தோழரே.

திரு. செயராமன் என்கிற அப்பாவாகிய புறா மேய்ப்பன் என்றொரு இருபக்க கவிதை ஒரு தந்தையை நாம் எவ்வாறு புரிந்து வைத்திருப்போம். அந்தப் புரிதல் சரியா தவறா என்பது புரிய எவ்வளவு காலம் ஆகும். நாம் நினைத்த நினைப்பு சரி என்று மட்டுமே முழுதும் உணர்ந்து இருக்கிறோமா. நம் நினைப்பு தவறு என்று அறிவதற்கு ஒரு காலமெனும் பூத்து விடுகிறதா. இந்தக் கவிதையில் அதற்கான விடை ஒன்று இருக்கிறது பெயர் என்ற அடையாளம்
அப்பா என்ற அடையாளம்
புறா மேய்ப்பன் என்ற அடையாளம்
இந்த மூன்று அடையாளத்தின் பின்னே  அவருடைய மனிதத்தை
தன் மகன் வாங்கி வந்த புறாவை பாதுகாக்கும் அடையாளத்தை
தன்மகன் வாங்கி வந்த புறா என்பதற்காக அதன் மேல் காட்டும் அன்பை அந்த புறாவை தன் மகனாக பாவிக்கக் கூடிய அந்த அடையாளத்தை அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளார்...

கவிதைக்கான மெனக்கெடல்கள் அதிகமில்லை. ஆனாலும் ஒவ்வொரு கவிதையிலும் ஒரு படிமம் இருக்கிறது. அந்த காட்சி என்பது புரியாத ஒன்றாக இல்லை. அனைத்தும் நாம் பார்க்காத ஒரு வாழ்க்கை, பார்த்த ஒரு வாழ்க்கை எதுவாயினும் அந்த வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே அமைத்திருப்பது இந்த தொகுப்பின் ஒரு ஆகச்சிறந்த சிறப்பாகவே கருதலாம். இன்னும் பல கவிதைகளை கூறலாம் என்றாலும் அது விமர்சனம் என்பதைத் தாண்டிய ஒரு அலுப்பூட்டும் செயலாக மாறி விடக்கூடும் என்பதால் கடைசியாக சகமி என்ற ஒரு கவிதை...
கரம் பிடி
பாதை செய்
அரவணை
அழுது உலர்
அதட்டிடு
அடங்கமறு
தோள் சாய்
துயில் கொள்
மடி கொடு
தவிக்க வை
தேடித் தொலை
தொலைந்து பிற
ஆதுரம்  கேள்
பாகுபாடு களை
சேர்ந்து பயணி
நெருங்கி வா
தூரம் தா
மழை பொழி
என் மேலேறி
எனக்குக் கை கொடு
நாட்கள் சிறியது
பயணிப்போம் வா
என் சகமி"
ஒவ்வொரு வரியிலும் காதல் கையளித்திருக்கும் சொற்கள். கவிஞரோடு ஒரு தோழியாகவும் பயணிக்கலாம். ஒரு தோழனாகவும் பயணிக்கலாம். தோழரோடு ஒரு தோழனாக நானும் பயணிக்கிறேன். கவிதைகளின் சொற்கள் போல. மேலும் மேலும் மேலும் எழுதுங்கள் தோழர். நீங்கள் காணும் உலகம் உண்மையானது அந்த உண்மையை உலகம் விரிவாக அறிந்து கொள்ளட்டும் உங்கள் கவிதைகளின் வாயிலாக...
வாழ்த்துகள் தோழர்...

வெளியீடு:
இடையன் இடைச்சி நூலகம்,. ஈரோடு - 9841208152

கிடைக்கும் இடம்:
வெற்றி மொழி வெளியீட்டகம்
திண்டுக்கல்
9715168794

கவிஞர் சேலம் ராஜா 9159919739