Monday, 17 February 2020

பறவையின் நிழல் _ கவிஞர் பிருந்தா சாரதி

#பறவையின்_நிழல்
#கவிதைத்தொகுப்பு
#கவிஞர் Brindha Sarathy

தன்னிலை மறந்து பேரின்பத்தை உணர்ந்து கொண்டிருக்கும் உன்னத நிலையே காதல். என்னிலை வந்தாலும் அவளேதான் வேண்டும் அவள் மடியில் உயிர்மடிய வேண்டுமென உச்சநிலைக்குச் சென்று ஒப்படைப்பது காதல்.
வெயிலின் வெம்மை குளிரும்.. குளிரைக் கூட மழையில் நனைவதைப்போல சிலாகிக்கும் மனதை உண்டு பண்ணக் கூடியது காதல். உயிரின் கடைசி அணுவைக் கூட அசைய வைத்து ஆதியின் அந்தத்தைத் தேட வைக்கும். ஏகாந்தத்தைச் சுமந்து கொண்டு பேரண்டப் பெருவெளியில் மிதக்கும் உணர்வில் வாழ்பவர்களே காதலர்கள். அவர்களுக்கு கவிதை என்பது உறைக் கிணறு போன்றது. அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போன்றது. வானத்தில் எப்போதோ தோன்றும் வானவில்லும் காதலிக்குப் போட்டியாக வந்துவிடும். இப்படி பிரபஞ்சத்தின் முதல் மொழியான காதலைப் பற்றிய நூறு கவிதைகளை கவிஞரும், தித்திக்குதே திரைப்படத்தின் இயக்குனரும், ஆனந்தம், பையா, வேட்டை, அஞ்சான் போன்ற திரைப்படங்களின் வசனகர்த்தாவுமான தோழர் Brindha Sarathy எழுதியிருப்பது அவரின் காதல் உணர்வைப் படம்பிடிப்பதாக இருக்கிறது

"அதுவரை
போட்டியே இல்லாமல்
ஜெயித்துக் கொண்டிருந்த வானவில்
நீ பிறந்த பிறகு
பொறாமைப்படத் தொடங்கியது"
என்ற கவிதையில் இயற்கையை விட என்னவள் பேரழகியே என்கிறார் கவிஞர்.

"என் உள்ளங்கை நெல்மணிகளை
நீ கொத்திக் கொத்தித் தின்றபோது
உன் கூரிய அலகுகள் தந்த வலி சுகமாயிருந்தது
இன்று கைநிறைய தானியங்கள்
நீ வராத வெறுமைதான்
வலிக்கிறது"
இந்தக் கவிதையில் கூரிய அலகுகள் கொடுத்த வலியின் சுகத்தையும், பிரிவின் வலியில் துடிக்கும் அவலத்தையும் ஒரே நேர்கோட்டில் காணமுடிகிறது. பறவையையும் காதலையும் ஒருங்கிணைத்து வரிகளைப் படைத்திருக்கிறார்.

பிற உயிரினங்களின் மீது பரிவைக் காட்டும் காதலி அதனோடு கொஞ்சி விளையாடும் குழந்தைத் தனத்தை காதலன் தன்னை அங்கு முன்னிறுத்தி அந்த உயிரினமாக மாறிவிடும் நேரத்தை
"உன் வீட்டுத் தொட்டி மீன்களிடம்
நீ காட்டும் கரிசனத்தைப் பார்த்தபோது
அந்தக் குட்டி மீன்களில்
ஒன்றாகி விட்டேன் நான்" என்கிறார்.

இன்னொரு இடத்தில் உயிரற்ற பொருளின்மீது அவளிட்ட முத்தத்தைச் சொல்கிறார்
"நிலைவாசல் கதவுக்கு
நீ தந்த முத்தம்
இன்னமும்
அங்கேயேதான் இருக்கிறது"

இன்னுமொரு கவிதையில் நினைவுகளைச் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கும் காதல்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றன. அலைந்து அவதியுறும் அலாதியான இன்பமும் துன்பமும் சுகந்த மனநிலையுமே காதலின் பித்து நிலை. தன்னிலை மறந்து தானாக அவளுள் வாழ்வது அப்படி வாழ்வதற்கான சாத்தியங்களை காதல் உருவாக்கும் அல்லது காதலர்கள் கொள்வார்கள் என்கிறார்.
"வார்த்தைகளை
இறைத்து இறைத்துத்
தோற்றுக் கொண்டிருக்கிறேன் நான்
மௌனத்தை
நீட்டித்து நீட்டித்து
ஜெயித்துக் கொண்டிருக்கிறாய் நீ"
என்ற கவிதையின் மூலம் அதனை நிறுவுகிறார்.

கொடூரத்தின் சொற்களை விட பன்மடங்கு வலியையும் வேதனையையும் ஏற்படுத்தும் மௌனம். காலமும் நேரமும் காதலை காவு வாங்கும். வெறுமையை உண்டு பண்ணும். மௌனமும் வெறுமையும் காதலை ஓட ஓட விரட்டிக் கொல்லும். காதலர்கள் இறப்பார்கள் தவிர காதலும் அதன் நினைவும் அழியாமல் தொடரும். சுவடைப் போல படிந்திருக்கும்.

இப்படிப் பறவையின் நிழல் தொகுப்பைப் படிக்கும்போது
காதல் உலகில் பறந்து கொண்டே இருக்கலாம். நிழல் தேடி ஒதுங்கிக் கொள்வது போலவே காதலில் மூழ்கி அவ்வப்போது இளைப்பாற மட்டுமல்லாது நினைவில் ஊறித் திளைக்க கவிதை பேரின்ப உலகம். கவிஞர் பிருந்தா சாரதியின் கவிதைத் தொகுப்பும் அப்படியே. காதலின் பேரின்பம்,உச்சநிலை,பிரிவு,கோவம், போன்றவற்றை பேசும் இத்தொகுப்பின் கவிதைகள் எல்லோர் வாழ்விலும் கடந்து வந்த காதல்களை நினைவுபடுத்துவதாக உள்ளது. கடந்த காதல்களை மீட்டுணரும் அதே சமயம் அதன்மேல் சுவாரசியங்களை அள்ளித் தெளிப்பதாகவும் உள்ளது.

வாழ்த்துகள் தோழர் Brindha Sarathy.

Wednesday, 29 January 2020

தனித்திருக்கும் அரளிகளின் மதியம்

#தனித்திருக்கும்_அரளிகளின்_மதியம்
#கவிஞர்_ப_காளிமுத்து
#கவிதைத்தொகுப்பு

கவிதை எப்போதும் ஒரு வழிப்பாதையாக அமைந்துவிட்டால் அது எத்தகைய அனுபவத்தையும் கடத்தும் வேலையைச் செய்யாது. அதே கவிதை இருவழிப் பாதையாக அமையும் பொழுது ஒரு வாசகன் கவிதையை கண்டடைகிறான். ஒரு கவிதை ஒரு நல்ல அனுபவத்தை கடத்தும் பணியை செய்து விடுகிறது. புத்தகம் வாசகன் இரண்டுக்குமான செயல் இங்கு ஒரு ஆத்மார்த்தமான எண்ண ஓட்டத்தை இருதரப்பிலும் கடத்தும் பணியை செய்ய வேண்டும். அத்தகைய அதிசயத்தக்க ஒரு பணியை தனித்திருக்கும் அரளிகளின் மதியம் என்ற இக்கவிதைத்தொகுப்பு அனாயசமாக செய்து முடித்திருக்கிறது.

ஒரு கவிதை நம்மைப் பேச வைக்க வேண்டும். ஒரு கவிதையோடு நாம் பேசவேண்டும். இந்தக் கவிதை நூல் நம்மைப்பேச வைக்கிறது. நாமும் கவிதையோடு பேசுகிறோம். இதற்கும் மேலாக கவிதை நம் குரலை காது கொடுத்துக் கேட்கிறது. இதனை எப்படி நாம் உணர்வது.
ஒரு கவிதை...

சிறு நிலம்
கொஞ்சம் தீனி
பரிவு நிழல்
பசி தீர்க்க அவகாசம்
ஒரு வேடனும்

மற்றும் ஒரு கவிதை...

அது வேடன் வீடு தான்
எனக்கும் தெரியும்
அந்தப் பறவைக்கும் தெரியும்
பிறகு கீச்சிடுவதெதற்கென்றுதான் தெரியவில்லை...

கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முடிப்பினைக் கைவசம் வைத்திருக்கின்றன. அந்த முடிப்பு என்பது நாம் அறியாத ஒன்றாக இருப்பதுதான் கவிதையின் சிறப்பு எனக் கருத வேண்டியிருக்கிறது
"மாதக் காலண்டரில் இத்தேதி அடிக்கோடிடப்படவில்லை
மகிழ் தினங்களின் வரிசையிலும் இல்லை
ஒரு மழை
காதல் செடிக்குத் தூறாத
ஒரு நாளை
எவரின் சபித்தலுக்கும்
ஆட்படாத ஒரு நாளை
வேண்டுமானால்
பிறந்த தேதியே அறியாத ஒருத்தியின்
பிறந்தநாளை
இன்றைக்குக்
கொண்டாடினால் என்ன?"
சொற்களில் காணப்படும் வித்தகத் தன்மை ஒரு புறம் இருந்தாலும் அதனுள் பொதிந்து கிடக்கும் அன்பிற்கு சொற்கள் தன்னை ஒப்புக்கொடுக்கும் வித்தை மிகவும் இலகுவாக கைகூடியிருக்கிறது கவிஞருக்கு. எவரின் சபித்தலுக்கும் ஆட்படாத ஒரு நாளை என்ற வார்த்தையும் பிறந்த தேதியே அறியாத ஒருத்தியின் பிறந்தநாளை இன்றைக்குக் கொண்டாடினால் என்ன என்ற வார்த்தையும் கவிதையின் தளத்தை மிகச் சிறப்பாக வேறொரு இடத்தில் நிறுத்துகிறது...

காதல் கவிதைகளும் தொகுப்பில் காணக் கிடைக்கின்றன
"ஒரு மரத்தின்
எப்போதும்
உதிர்க்காத இலையை
உன் பெயர் எழுதித் தந்து செல்கிறாய்
அவ்விலை
என்னுள் ஒரு பெரும் மரமானது
எக்கிளை காணினும்
உதிரவே உதிரா இலைகள்..."

"காத்திருத்தலைச் சுவையூட்ட
ஒரு மழையை அனுப்பினாய்
அது வேடிக்கை பார்த்தபடி இருந்த
நிலத்தை துள்ளல் இசைக்கு ஆடச் செய்தது
ஓர் உடலின் ஒட்டுமொத்த சூட்டையும்
ஒரு கோப்பையில் இறக்கித் தந்தது
காலிக் கோப்பையை நிரப்பத் தொடங்கினேன்
வழியும் முன்னமே வருகிறாய்
பிறகு
அந்த மழையை
சுமந்தபடி பயணமானோம்..."

பெயர் எழுதி தந்து செல்லக்கூடிய இலை மனதில் பெரும் மரமாகி நிற்கிறது. கிளைகள் எங்கும் உதிரவே உதிரா இலைகள்! காதலின் தனித்துவம் சொல்லும் அற்புத வரிகள்.

 ஒரு மழையை காதலி அனுப்புகிறாள். மழையால் நிலமாடுகிறது. உடலின் ஒட்டுமொத்த சூட்டையும்  கோப்பையில் நிரப்புகிறது.  தொடர்ந்து காலி கோப்பையை மழையால் நிரப்ப தொடங்குகிறார் கவிஞர். ஆனால்  காலி கோப்பை நிரம்புவதற்கு முன்னரே காதலி வருகிறாள். காலி கோப்பை அப்படியே இருக்கிறது. இன்னும் வழியவில்லை மழை காலிக் கோப்பையில். மழையை என்னசெய்ய... அந்த மழையை சுமந்தபடி பயணம் ஆகின்றனர் காதலர்கள். ஒரு அற்புத உணர்வை காதல் கொடுக்கிறது. அந்த உணர்வை கவிதையும் கொடுக்கும் என்று நிரூபித்துள்ளார் கவிஞர்.

தொகுப்பெங்கிலும் மென் ரசனைக் கவிதைகளே அதிகளவில் இருக்கின்றன. சில கவிதைகளில் ரசனையின் உச்சம் வெளிப்படுகிறது. கவிதையை கவிதையாக கண்டறியும் வாகு இவருடைய கவிதை எனலாம்.
அப்படி ஒரு கவிதை இது.
"பறத்தலில் சற்று குறைபாடுள்ள பறவை மேல் செல்கிறது
சக பறவைகளின் விரைவைப் பொருட்படுத்துவதில்லை
சின்னஞ்சிறு பறவைகள் முந்திச் செல்கையில்
சுருக்கமாய் தேற்றிக்கொள்கிறது மழைக்காலங்களில் சிறகுதற்றும் பறவைகளை நேசிக்கிறது உடன்பிறப்பு பறவைகளின் கவனிப்புகளை விரும்புவதில்லை
வழக்கமான இடங்களில் இருக்கும் தீனிகளே போதுமானதாகிறது 
யார் மீதும் புகார்கள்அற்ற அந்தப் பறவைக்கு
உயரப் பறத்தல் இல்லை பறத்தலின் பொருட்டே திருப்தியுறுகிறது"

ஒரு கவிதையை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாசித்தல் என்பது புரியாமல் வாசித்தல் ஒன்று. ரசனையின் பால் மீண்டும் மீண்டும் வாசித்தல் மற்றொன்று. காளிமுத்து அவர்களின் கவிதை ரசனையின் பால் வாசிக்கத் தூண்டும் கவிதை. மேலும் கவிதையின் பால் நம்மை இழுத்துச் செல்லக்கூடிய வகைமை.
"அம் மேசையிலிருந்து
இடறி விழுந்த
இரு குவளைகளில்
ஒன்று என்னுடையது"
அவ்வளவுதான் கவிதை. மேஜையில் பார்வை விழுதல், அந்த பார்வையின் திசை அடுத்து இடறி விழும் குவளையின் பக்கம் செல்லுதல், அடுத்து விழுந்த குவளை தன்னுடையது என்று அறிதல், அந்த மற்றொரு குவளை யாருடையது என்று வினவுதல், ஏன் விழுந்தது என்று கேள்வி எழும்புதல், எந்த மாதிரியான சூழலில் இந்த விழுதல் சாத்தியம் என்ற வினா தோன்றுதல், யார் யார் சந்தித்துக் கொண்டது என்று எண்ண வைத்தல், இப்படியான எண்ணத்தை உருவாக்கி விடுவது இவர் திட்டமிட்டு அமைத்ததா அல்லது கவிதை அமைக்கிறதா என்பதுதான் மீண்டும் மீண்டும் படிக்கச் செய்தலில் காணக்கிடைக்கும் லாவகம்...

கவிதைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான கரு, கவிதைக்கான சொற்கள் பிரயோகம் என்பது ஒரு தேர்ந்த அனுபவசாலியான கவிஞன் கையாள்வது போல அவ்வளவு நேர்த்தி, என் கவிதைகள் இப்படித்தான் இருக்கும் என்பது போலான உத்தியை கையாளுதல், இயற்கையை பாடுதல் என தன்னுடைய முதல் தொகுப்பிலேயே கவிதையை கொண்டாடித் தீர்த்திருக்கிறார் கவிஞர். அவரோடு சேர்ந்து நாம் கொண்டாடும் அதே கணம் ஆச்சரியத்தையும் முன்வைத்து கொண்டாடித் தீர்க்கிறோம்.

இறுதியாக ஒரு கவிதை...

"இந்நேரமாகியும்
ஒளிரும் அவ்வீட்டை
கடப்பவளின் கைகளுக்குள்
ஒரு மெல்லிய பகை
சிணுங்கிக் கொண்டிருந்தது"
இந்நேரம்  என்பது எவ்வளவு நேரம், ஒளிரும் வீடு யார் வீடு, கடப்பவள் என்பவள் யார், அவளுக்குள் எதற்கான பகை சிணுங்கிக் கொண்டிருந்தது, எப்பொழுது வீரியமாகும்...

கவிஞர் அம்சப்ரியா கூறுவது போல
"கவிஞன் தனக்குள் இடைவிடாமல் கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற வேளையில் தனக்கான பாதிப்பை வெளிப்படுத்துகிற போது அது தனக்கான வடிவத்தை தேர்ந்தெடுக்கிறது. அது ஒரு சிறந்த கவிதையும் ஆகிறது..." அப்படித்தான் கவி காளிமுத்துவின் கவிதைகளும்.

வாழ்த்துகள் தோழர் Kavi Kalimuthu
9629446203
இருவாட்சி பதிப்பகம்...

Wednesday, 22 January 2020

கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள்

தோழர் சேலம் ராஜா எழுதிய #கோழிக்கறி_வாங்குபவனின்_சித்திரக்குறிப்புகள் என்ற கவிதை நூலை தபாலில் கிடைக்கப் பெற்றவுடன் வாசித்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது அதில் உள்ள முதல் கவிதையை படித்த உடனே.

ஒரு ஊரின் சாதியப் பாகுபாட்டை
ஒரு ஊரின் வர்க்க பாகுபாட்டை
ஒரு ஊரின் மனிதர்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை
ஊரை குறித்த ஒரு சித்திரத்தை இதைவிட அற்புதமாக எளிய வரிகளில் கூறிவிட முடியுமா என்றால் என்னால் வேறு எந்த கவிதையையும் மேற்கோள் காட்டி விட முடியுமா என்று தோன்றவில்லை அந்தக் கவிதை "அழகிய
கோபுரத்தில் தொடங்கி
அம்பேத்கர் சிலையோடு
முடிந்து விடுகிறது
எங்கள் ஊர்" என்பதுதான்.
ஆச்சரியமாக இருக்கிறது. அவ்வளவு எளிமையாக ஆனால் ஒரு மூர்க்கம் இதற்குள் இருக்கிறது. அந்த முகம் தான் கோபுரமும் அம்பேத்கரும் என காண்பிக்கப்பட்டுள்ளது.  அற்புதமான முதல் கவிதை. இந்த ஒரு கவிதைக்காகவே சேலம் ராஜாவின் கைவிரல்களில் படிந்துள்ள சித்திரக் குறிப்புகளுக்கு ஆயிரம் ஆயிரம் முத்தங்களைத் தரலாம்...

கவிதை என்றால் என்ன
கவிதை என்பது எதைக் குறித்து பேசவேண்டும்
கவிதை என்ன செய்யும்
என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலாக இத்தொகுப்பை அடையாளம் காட்டலாம் கவிதை என்பது எளிமையாக இருக்கவேண்டும்
கவிதை என்பது மனிதர்களை குறித்துப் பேச வேண்டும்
கவிதை என்பது நாம் பார்க்காத உலகத்தை காட்ட வேண்டும்
பார்த்த உலகத்திலுள்ள வேறுபாடுகளை மனிதத்தை நமக்கு அடையாளம் காட்ட வேண்டும். அதனை இந்தத் தொகுப்பு நிறைவேற்றி இருப்பதாகவே நம்புகிறேன். நட்பை மையப்படுத்தி ஒரு கவிதை கருப்பி என்ற தலைப்பில்...
தனக்குள் கிடைக்கும் உள்ளக்கிடக்கையை எந்தவித சங்கோஜமும் இல்லாமல் நண்பனிடம் தெரிவிக்கும் ஒருத்தி பற்றியது இந்தக் கவிதை. கவிதையின் நிறைவில்
"இன்று பேருந்தில் ஏறி என்னருகே அமர்ந்ததுமே
"பீரியட்ஸ் டைம்டா வயிறு வலி முடியல
நாப்கினே நனஞ்சிடுச்சு"
 எந்தவித சங்கோஜமுமின்றி சொல்லிவிட்டுத் தோள் சாய்ந்தாள். எனக்குள் தாய்மை பூக்கும் முன் வேர்த்த நொடி
பாறை இடுக்கில் விதை முட்டும் தருணம் போலிருந்தது"
 நட்பு என்பது என்ன செய்யும்? இதைப் போன்ற சொற்களை கேட்கும்பொழுது தோளில் சாய்த்து ஆறுதல் அளிக்கும் ஒரு தாயின் அன்பை போல அந்த தோள்கள் ஆக ஒவ்வொரு ஆண்களின் தோள்களும் மாறினால் எவ்வளவு அற்புதமான ஒரு வாழ்வாக இருக்கும் நட்பு பாராட்டும் தோழிகளுக்கு...

எல்லா இடங்களிலும் கொட்டிக் கிடப்பதை கவிதை என ஒவ்வொருவரும் எழுதி வைத்து விடுகிறோம். ஆனால் சேலம் ராஜாவின் பார்வை கவிதையை மட்டுமே கவிதையாக்கி வைத்திருக்கிறது. அந்த கவிதை அலங்கோலத்தில் இருந்தும் பிறந்திருக்கிறது. அழகியலில் இருந்தும் பிறந்திருக்கிறது. விடுதலை வேண்டி ஒரு யாசகம் என்றொரு கவிதை. அந்த கவிதையில் அரசு கட்டி கொடுத்திருக்கும் கழிப்பறைகளில் தனியார் கழிப்பறைகளில் சுவர்களில் எழுதி உள்ள வாசகங்கள் சுவரில் வடித்து வைத்துள்ள ஓவியங்கள் சுவரில் குறித்து வைக்கப்பட்டுள்ள அலைபேசி எண்கள் இதனை மையமாக வைத்து எழுதப்பட்ட அந்த கவிதையில் ஆண்களின் கழிவறை என்பது எவ்வளவு வக்கிரபுத்தி இருக்கக்கூடிய ஒன்று என்பதனை காட்சிப்படுத்தி இருக்கிறது. ஒவ்வொன்றையும் சொல்லிவிட்டு அந்த கவிதையின் முடிவில் இவ்வாறு முடிக்கிறார்
"எட்டிப் பார்க்க விருப்பமில்லை
வெட்கம் இன்றி கேட்கிறேன்.
 நீ புழங்கும் கழிவறைக்கு
என்னை அழைத்துச் செல் சினேகி..." இதுபோன்ற வக்கிரங்களை காண சகிக்கவில்லை. இதுபோன்ற வக்கிரங்களுக்கு அப்பாற்பட்ட இடங்களை காண விரும்புகிறேன்.
இது போன்ற மனிதர்கள் உங்களிடம் இருக்கிறார்களா என்ன
இது போல உங்களில்  இவ்வளவு அதிகமாக தோழியர் இருக்க மாட்டார்கள் என்று நம்பிக்கையுடன் எட்டிப் பார்க்க வருகிறேன் என்ற பல கோணங்களில் கவிஞரின் எண்ண ஓட்டத்தை நான் காண்கிறேன் இக்கவிதையில்...

அரசியலற்ற எதுவும் முழுமையான கவிதை ஆகிவிடாது என்பது உண்மைதான். அதற்காக எல்லாவற்றிலும் அரசியல் இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. ஆனால் இத்தொகுப்பில் அழகியலை காட்சிப்படுத்திய அதேநேரத்தில் வாழ்க்கையை காட்சிப்படுத்திய அதே நேரத்தில் காதலை காட்சிப்படுத்திய அதே நேரத்தில் வயல் வெளியை காட்சிப்படுத்திய அதேநேரத்தில் அரசியலின் அவலத்தையும் காட்சிப்படுத்தியிருக்கிறார். எட்டு வழி சாலை எவ்வளவு கொடூரமானது?
 எட்டு வழிச் சாலை ஏழைகளின், வயல்வெளிகளின், உழைக்கும் மக்களின் முகத்தை எவ்வாறு கசக்கிப் எறிகிறது. எவ்வாறு இந்த மண்ணிலிருந்து அப்புறப்படுத்துகிறது என்பதனை புரட்சிகரமான வார்த்தைகளின் மூலமாக சேலத்திற்கும் எடப்பாடிக்கும் தூரமில்லை என்ற கவிதையில் வடித்திருக்கிறார் கவிஞர். "எங்கள் நிலம் கேட்டு
எங்கள் உரிமை கேட்டு
எங்கள் வாழ்வாதாரம் கேட்டு எதற்கெடுத்தாலும் போராட்டம் எதுவாகினும் போராட்டம்
நாங்கள் எல்லாம் சமூக விரோதிகள் நீங்களெல்லாம்...?"
என்ற கேள்வியை முன்வைக்கிறார் அரசியல்வாதிகளை நோக்கி. தலைப்பே சொல்லும் இது யாரை நோக்கிய கேள்வி என்று...
தாமரை மயிரிலும் மலராது என்று மிக அதிகமாக தமிழகத்தில் புழங்கிய ஒரு வார்த்தையை எடுத்துக்காட்டும் விதமான ஒரு கவிதையும் உண்டு தொகுப்பில்...

பூனைக்கு தெரியாத உலகம் கொத்துக்காரர் கிழவி உள்ளிட்ட  கவிதைகள் வறுமையை பேசுகின்றன. வறுமைக்கும் கார்ப்பரேட்டுக்கும் இடையே உள்ள மேடு பள்ளத்தினை காட்சிப்படுத்தி  இருக்கின்றன. பிரதமரின் செயல்பாடுகளை அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை விமர்சனம் செய்யக்கூடிய முட்டாள் பெட்டி என்ற கவிதை எல்லாவற்றையும் ஒரு பகடி போல கடந்து போகும் மக்களின் மனநிலையைக் காட்டுகிறது...
மேலும் ஊர் நாட்டு வழக்காடு மொழியில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கவிதையும் மனிதர்களின் வெள்ளந்தித்தனத்தையும் அவர்களின் ஆற்றாமையையும் அவர்களின் அன்பையும் ஒரு வாழ்வியலோடு நாம் வாசிப்பதன்மூலம்  அறிய முடிகிறது. அதேசமயம் கிராமத்தில் வாழ்கின்ற அப்பாக்கள் மனைவியை தெரிந்தோ தெரியாமலோ வைத்திருக்கக்கூடிய இடம் ஒரு பெண்ணடிமைத்தனத்தை எப்படி எல்லாம் காலம்காலமாக கடத்திவந்திருக்கிறது என்பதையும் உணர வைக்கிறது. தொகுப்பின் இடையிடையே உள்ள குட்டி குட்டி கவிதைகள் வேதனைகள் தொனிக்கும் கவிதைகளுக்கு ஒத்தடம் வைப்பதுபோல் அழகியலை வெளிப்படுத்தும் வண்ணம் உள்ளன. வார்த்தை என்ற தலைப்பிலான கவிதை
"உன் கீழ் உதட்டின் கீழ்
கிளை போல் என் கைகளை விரிக்கிறேன்
அதில் உன் வார்த்தை மூட்டையை அவிழ்த்து விடு" என்ற கவிதையை வாசிக்கும்போது இயல்பாகவே கைகள் விரிகிறது பிடித்த நபரின் இதழின் கீழ்ப்புறம்...

அழைப்பற்ற வீடு என்ற ஒரு கவிதை தன்னுடைய வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரின் நிலை குறித்தும் வாழ்வாதாரம் குறித்தும் வறுமை குறித்தும் உள்ளதை உள்ளபடி காட்சிப்படுத்திச் சென்று கொண்டிருக்கக்கூடிய இந்த கவிதை கடைசியாக உங்களை நான் என் வீட்டிற்கு அழைக்க வில்லை என்பதற்கு காரணம் கூறுவது போல் முடிகிறது எல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியும் எல்லாம் நீங்கள் பார்த்தவுடன் நீங்கள் எங்கள் மேல் காட்டும் கழிவிரக்கத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது இந்த காலம் எங்களுக்கு சபிக்கப்பட்ட ஒரு வாழ்வு வழங்கியிருக்கிறது என்பது போல் நீங்கள் பரிகாசம் செய்வீர்களா அறிவுரை கூறுவீர்களா தெரியாது ஆனால் அந்த கழிவிரக்கத்தை அந்த பரிதாபத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது நாங்கள் எல்லாவற்றையும் கடக்க பிறந்தவர்கள் நீங்கள் எங்களை நோக்கி பரிகாசம் செய்யும் அந்த பரிதாபத்தை ஒருபோதும் நாங்கள் விரும்புவதில்லை ஆதலால் தான் நான் உங்களை என் வீட்டிற்கு அழைப்பதில்லை என்ற சொற்களோடு அந்த கவிதை முடிந்திருக்கும். அற்புதம் தோழரே.

திரு. செயராமன் என்கிற அப்பாவாகிய புறா மேய்ப்பன் என்றொரு இருபக்க கவிதை ஒரு தந்தையை நாம் எவ்வாறு புரிந்து வைத்திருப்போம். அந்தப் புரிதல் சரியா தவறா என்பது புரிய எவ்வளவு காலம் ஆகும். நாம் நினைத்த நினைப்பு சரி என்று மட்டுமே முழுதும் உணர்ந்து இருக்கிறோமா. நம் நினைப்பு தவறு என்று அறிவதற்கு ஒரு காலமெனும் பூத்து விடுகிறதா. இந்தக் கவிதையில் அதற்கான விடை ஒன்று இருக்கிறது பெயர் என்ற அடையாளம்
அப்பா என்ற அடையாளம்
புறா மேய்ப்பன் என்ற அடையாளம்
இந்த மூன்று அடையாளத்தின் பின்னே  அவருடைய மனிதத்தை
தன் மகன் வாங்கி வந்த புறாவை பாதுகாக்கும் அடையாளத்தை
தன்மகன் வாங்கி வந்த புறா என்பதற்காக அதன் மேல் காட்டும் அன்பை அந்த புறாவை தன் மகனாக பாவிக்கக் கூடிய அந்த அடையாளத்தை அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளார்...

கவிதைக்கான மெனக்கெடல்கள் அதிகமில்லை. ஆனாலும் ஒவ்வொரு கவிதையிலும் ஒரு படிமம் இருக்கிறது. அந்த காட்சி என்பது புரியாத ஒன்றாக இல்லை. அனைத்தும் நாம் பார்க்காத ஒரு வாழ்க்கை, பார்த்த ஒரு வாழ்க்கை எதுவாயினும் அந்த வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே அமைத்திருப்பது இந்த தொகுப்பின் ஒரு ஆகச்சிறந்த சிறப்பாகவே கருதலாம். இன்னும் பல கவிதைகளை கூறலாம் என்றாலும் அது விமர்சனம் என்பதைத் தாண்டிய ஒரு அலுப்பூட்டும் செயலாக மாறி விடக்கூடும் என்பதால் கடைசியாக சகமி என்ற ஒரு கவிதை...
கரம் பிடி
பாதை செய்
அரவணை
அழுது உலர்
அதட்டிடு
அடங்கமறு
தோள் சாய்
துயில் கொள்
மடி கொடு
தவிக்க வை
தேடித் தொலை
தொலைந்து பிற
ஆதுரம்  கேள்
பாகுபாடு களை
சேர்ந்து பயணி
நெருங்கி வா
தூரம் தா
மழை பொழி
என் மேலேறி
எனக்குக் கை கொடு
நாட்கள் சிறியது
பயணிப்போம் வா
என் சகமி"
ஒவ்வொரு வரியிலும் காதல் கையளித்திருக்கும் சொற்கள். கவிஞரோடு ஒரு தோழியாகவும் பயணிக்கலாம். ஒரு தோழனாகவும் பயணிக்கலாம். தோழரோடு ஒரு தோழனாக நானும் பயணிக்கிறேன். கவிதைகளின் சொற்கள் போல. மேலும் மேலும் மேலும் எழுதுங்கள் தோழர். நீங்கள் காணும் உலகம் உண்மையானது அந்த உண்மையை உலகம் விரிவாக அறிந்து கொள்ளட்டும் உங்கள் கவிதைகளின் வாயிலாக...
வாழ்த்துகள் தோழர்...

வெளியீடு:
இடையன் இடைச்சி நூலகம்,. ஈரோடு - 9841208152

கிடைக்கும் இடம்:
வெற்றி மொழி வெளியீட்டகம்
திண்டுக்கல்
9715168794

கவிஞர் சேலம் ராஜா 9159919739

Monday, 16 September 2019

கற்பனைக் கடவுள் #நாச்சியாள் சுகந்தி

தோழர் நந்தன் ஸ்ரீதரன் எழுதிய நந்தலாலா சிறுகதைத் தொகுப்பிற்குப் பின் வாசித்த தொகுப்பு #கற்பனைக்கடவுள். தோழர் நாச்சியாள் சுகந்தி எழுதியது. மொத்தம் 11 கதைகள். கதைக்களம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஆனால் கதைகள் யாவிலும் மனிதம்தான். அப்பாவின் காதலி, மற்றும் வயிற்றுப்பிள்ளை கதைகள் கண்ணில் நீரை வரவழைத்துவிட்டது. புரியாது பூசணிக்கா கதை குறித்தும் பாயும் ஒளி நீயெனக்கு கதை குறித்தும் ஏற்கனவே பதிவிட்டேன். கொஞ்சம் ஜுஸும் ஒரு உடலும்... ஒரு பெண்ணை வக்கிரத்திற்கு படிய வைக்க இந்த சமூகம் என்ன செய்கிறது என்பதை வெகு இயல்பாக வலியாக கூறியுள்ளார். அவனதிகாரம் என்ற கதை ஆம்பளையின் அதிகாரம் ஆம்பளை என்ற தினவைக் காட்டுகிறதாக இருக்கிறது எனினும் அதற்காக வீட்டை விட்டு வெளியேறும் பெண்ணைக் கூறியிருப்பினும் இறுதியில் புருஷன் தன்னை விட்டுட்டு வேறொருத்தியை கூட்டிட்டுப்போனாலும் அவனைப் பிரிந்து தன் மூன்று குழந்தைகளையும் படிக்க வைத்து உத்தியோகம் பார்க்க வைத்த பழனியம்மாள் குறித்துக் கூறி கணவன் இல்லாமலும் வாழும் வைராக்கியத்தை கிழவி மூலம் உணர்த்துகிறார் தோழர். அறுத்துக்கட்டினவ கதை தன் தலைமுறைக்கான நிலத்தை பிடுங்க நினைப்பவர்களிடம் புருஷன் என்பவன் அருகில் இல்லை என்பதை சுட்டிக்காட்டி மிரட்டும் கும்பலிடம் நேரடியாகச் சென்று தன் வீட்டிலிருந்து எடுத்து வந்துள்ள அருவா இது. வெட்டுறதுன்னா இப்பவே இங்கயே வெட்டுங்க என்று செல்லம்மாள் கூறுவதும் தினம் தினம் பயந்து பயந்து சாவதை விட ஒருநாள் அந்த சாவைச் சந்தித்தே விட்டால் என்ன? என்ற ஆதித்திமிர் அவள் கண்களில் ஜொலித்தது
அந்த ஜோதிக்கு முன்னால் அவனால் உறுதியாக நிற்கக்கூட முடியவில்லை என்று முடிப்பதிலிருந்து பெண் என்பவள் கொண்டிருக்கும் வீரம் அத்தனை சாதாரணமானது அல்ல என்றுரைக்கிறார் தோழர். மயக்கம் கதை வேறு ஒரு கோணம். கற்பனைக்கடவுள் எதிர்பார்ப்பை கடைசிவரை இழுத்துச் செல்லும் கதை. பசியை வெல்லும் வயிறு மலைக்காடுகளில் வாழும் மக்களின் வாழ்வியலை பசியோடும் வலியோடும் பகிர்ந்துள்ளது. பதில் இல்லாத கேள்விகள் கதை பல கேள்விகளை மனதில் தோற்றுவித்துவிடுகிறது. நாம் பார்க்கும் பல நிகழ்வுகளை சாதாரணமாக கடந்து விடுகிறோம். எந்தவித எதிர்பார்ப்புமின்றி அல்லது பல எதிர்பார்ப்புகளுடன் வாழ்வை நகர்த்திக்கொண்டு போய் விடுகிறோம். ஆனால் ஒவ்வொன்றின் முடிவில் ஒரு முடிச்சு இருக்கிறது. அந்த முடிச்சை நம் கண்முன்னால் அவிழ்த்துக்காட்டுகிறார் தோழர் நாச்சியாள் சுகந்தி. வாழ்வின் சுவாரஸ்யங்களும் அசுவாரஸ்யங்களும் நிறைந்திருக்கும் இந்த கதைகள் சமூகத்தைப் புரட்டிப்போடும் என்று கூறவில்லை. தான் பார்த்த மனிதர்களின் வாழ்வின் மூலம் நாம் வாழும் சமூகத்தை மனிதத்தோடு அணுகும் முறையை எடுத்துக்கூறியுள்ளார் தோழர் நாச்சியாள் சுகந்தி.
வாழ்த்துகள் தோழர்.

பண்பாட்டுச் சொல்லாடல்களில் காட்டுமிராண்டித்தனமும் நாகரிகமும் #இ.முத்தையா



காட்டுமிராண்டித்தனம் நாகரிகம் இரண்டும் எப்படி மனிதர்களின் வழிபாட்டில், பண்பாட்டில் சொல்லாடல்களாக உருவாக்கப்பட்டு திணிக்கப்பட்டன, அவற்றிற்கு வரலாறு எவ்விதத்தில் பயன்படுத்தப்பட்டது, ஐரோப்பிய காலனி ஆட்சியாளர்களால் அவை எவ்வாறு கையாளப்பட்டன, தீ மிதித்தல், பறவைக்காவடி, குழி மாற்றுச் சடங்கு, கோவில்களில் உயிர்ப்பலி தடை இதன் பின்னால் உள்ள அரசியல் பற்றிப் பேசுகிறது இந்நூல். சைவ சாமி நல்ல சாமி, அசைவ சாமி கெட்ட சாமி என்று பழக்கப்படுத்தப்பட முனையும் இந்துத்துவ அரசியலின் முகத்தையும் கூறியுள்ளது. ஜல்லிக்கட்டு குறிப்பிட்ட ஒரு சில சாதிக்கான விளையாட்டு என்பது போலான தகவல் இடம்பெற்றுள்ளது. அதை எப்படி தமிழர்களின் வீர விளையாட்டு என்றும் தமிழ்ப் பண்பாட்டின் மரபுத் தொடர்ச்சியாகவும் கருத முடியும் என்று தெரியவில்லை. கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, விசிக தலைவர் திருமா, ஆர்.நல்லகண்ணு, சு.வெங்கடேசன், எஸ்வி.ராஜதுரை, தமிழ் தேசியவாதி ராசேந்திர சோழன், கி.வீரமணி ஆகியோரின் கருத்துக்கள் அங்கங்கே இடம்பெற்றுள்ளன. வாசிக்க வேண்டிய நூல்...
வாழ்த்துகள் தோழர்
#இ_முத்தையா

பூக்களின் காயங்கள் #பூர்ணா

#பூக்களின்_காயங்கள் கவிதைத்தொகுப்பு
எப்போது பார்த்தாலும் இளகிய மனதுடன், புன்னகையுடன், எளிதில் உச்சரிக்கவியலாத சில கவிஞர்களின் நூலை வாசிப்பதற்காகப் பரிந்துரைக்கும் தோழர் பூர்ணா ஏசுதாஸ்ன் ஹைக்கூ கவிதைத்தொகுப்பு #பூக்களின்_காயங்கள்
இவரின் உரையில் 'வலி, படைப்பாளியைப் புடம் போடுகிறது, படைப்பாளி வலியைப் புடம் போடுகிறான்" என்கிறார். ஆம் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் வலியினால் பிறந்தவை. அவை மகிழ்வோ... துயரோ...

குழந்தை அழுகிறது
கஞ்சி காய்ச்சுவான் தந்தை
சுவரொட்டிகள் ஒட்ட...
எப்போதோ கேட்ட கவிதை இது. அதை மீண்டும் நினைவுபடுத்தியது
தோழரின்...

சிறுவன்
பசியோடு வேலை செய்கிறான்
உணவகத்தில்...
வாழ்வு எனப்படுவது கைகளின் முன்னால் காணப்படும் வரங்களை கைக்கெட்டாமல் வைக்கும்போது எப்படி மகிழ்வாயிருக்கும்... அதனை வெளிக்கொணரும் வரிகளிவை.
●பிரிந்து போன பறவையை
காற்றில் தேடுகிறது
உதிர்ந்த இறகு...
எளிய சொற்கள். நட்போடு காதலோடு வாழ்வோடு எதனோடும் தொடரும் அல்லது தோன்றும் பிரிதலோடு கூடிய வலியை அற்புதக் கவிதையாக்கியுள்ளார் தோழர்.
கவிதை என்பதோ மகிழ்ச்சி என்பதோ துயர் என்பதோ எதிலிருந்து பிறக்கிறது... அதற்கு ஆதி என்ன... இதற்கான விடையாக இந்தக்கவிதை இருக்கிறது...
●மூங்கிலில் கிழிபட்ட காற்றைத்தான்
இசைகளாக்குகிறது
புல்லாங்குழல்...
இயல்பில் பூத்திருக்கும் வரிகளில் எத்தனை நுணுக்கமான பார்வை...
கிராமம், வயல், இயற்கையோடு பொருந்திய வாழ்வுமுறைகள் அத்தனையையும் தொலைத்துவிட்டுத் திரியும் மனித முகங்களில் ஓங்கி அறையும் கவிதை வரிகள்...
● கட்டித் தொங்கவிடப்பட்ட
தொட்டிச் செடிகள்
ஊசலாடுகிறது நிலம்...
●காய்ந்து கிடக்கும் குளம்
எங்கே போயிருக்கும்
தவளைகள்
●மாடத்தில் கூடு
எங்கே
மரம்...
●மின்விசிறி சுழல
அசைந்தன
பிளாஸ்டிக் இலைகள்...
மனித மாண்பினை வெளிக்கொணரும் கவிதைகளும் ஏராளம் இதில்...
முகநூல் தோழர் Kumar Shaw பதிவு ஒன்றை எப்போதும் மனதில் அசைபோட்டிருப்பேன். இவ்வுலகின் கடைசி வெள்ளைக்காண்டாமிருகம் இறந்தபோது இவ்வுலகில் உரையாட மகிழ்ந்துகொள்ள யாருமே இல்லாதபோது தோன்றும் உயிர்வலியை அந்த காண்டாமிருகத்திற்கு வாய்த்ததுபோல் உள்ள சூழலில்தான் நம்மால் உணரமுடியும் என்பார்...
அதே வலியை பூர்ணா தோழரும் தனது கவிதையில் கூறியுள்ளார்
●யாருமற்ற பூமியில்
நீ மட்டும் இருப்பதாய் நினைத்துப்பார்
யாரோ ஒருவரையும் பிடிக்கும்...
ஒவ்வொரு ஹைக்கூவும் ஒவ்வொரு வண்ணத்தில் மின்னுகின்றன
அதன் நிறங்கள் சொல்லும் வலியை வாசிக்கும்போது உணரலாம் இன்னும் இன்னும்...
வாழ்த்துகள் தோழர் #பூர்ணா

96 #சி.சரவண கார்த்திகேயன்



96
தனிப்பெருங்காதல்...
96 திரைப்படம் குறித்து
96 கோணங்களில்
96 கருத்துகள்.
ஒரு காதல் திரைப்படத்தில்
ஒரு காதலை
ஓர் இயக்குனர் அணுகியுள்ள விதம் குறித்து ஓர் ஆய்வாளரின் பார்வையில் அதே சமயம் ஒரு கைதேர்ந்த ரசிகனாக சிலாகித்து எழுதப்பட்டுள்ள நூல்.
ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளுடன் புதிய வாழ்வைத் தொடங்கி ஆவலுடன் கூடல் நிகழ்த்தி அதன்பின் அவள் கர்ப்பமான தகவல் உறுதிப்படுத்தப்பட்ட நாள் முதல் அவள் குழந்தையை பெறும் நாள் வரை உன்னிப்பாக கவனித்து வரும் ஒரு கணவனாலும்கூட எந்த நாள் எந்த நேரம் என்ன காரணம் எங்கே சென்றோம் எதற்காக சென்றோம் என்ன பிரச்சனை என கேட்கும்போது சில தகவல்களை மறந்திருக்கக்கூடும்.
96 வேறொருவரின் குழந்தை.
அதன் மேலான காதல்.
திரைப்பட நேரம்
இடைவேளை
இசை
ஒளிப்பதிவு
பாத்திரங்கள்
வசனங்கள்
எதற்காக இந்த காட்சி முக்கியத்துவம் பெறுகிறது
உமா கார்த்திக் எழுதிய பாடல்கள் என்ன
அதில் ரசனைக்குரிய வரி என்ன
இந்த படம் எதற்காக மற்ற படங்களிலிருந்து வித்தியாசப்படுகிறது
இளையராஜா பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ள விதம்
எதற்காக யமுனையாற்றிலே பாடலை ஜானு பாடவில்லை
விளக்கற்ற இருளில் அவள் அப்பாடலை பாட பா. ரா சொல்லும் காரணம் அதன் சிறப்பு
Blue jay படத்துக்கும் 96க்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை
96 கதைத்திருட்டா
அந்த ஜானு ராம் தனித்திருக்கும் இரவில் ஏன் கலவி நடந்திருக்கக்கூடாது
அப்படி நடந்திருந்தால் இப்படி இப்படம் கொண்டாடப்பட்டிருக்குமா
96 ஒரு thriller படம். ஏன்...
இப்படி 96 தகவல்கள்.
ஒவ்வொன்றையும் நூலாசிரியர் பார்த்திருக்கும் கோணம் அலாதியானது.
அத்தனையிலும் படர்ந்திருக்கும் ஜானு ராம் 96க்குள் நம்மை மீண்டும் அழைத்துச் செல்கிறார்கள்...
96திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டாடிய அனைவரும் மீண்டும் அந்த குதூகலம் அனுபவிக்க வாசிக்க வேண்டிய நூல்.
ஒரு திரைப்படம் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் எப்படியெல்லாம் பார்க்கப்படும் என்பதற்காகவும் இந்நூலை வாசிக்கலாம் திரைப்பட ஆர்வம் உடையோர்.
192 பக்கம் நூல்
முன், பின் அட்டை சேர்த்து 196 பக்கம்.
அதிலும் ஒரு 96...
தேன் சுவை மிக்கது.
துளி தேனும் சுவை மிக்கது.
இந்நூலின் 96துளியும் சுவை மிக்கது.
வாழ்த்துகள் தோழர்
Saravanakarthikeyan Chinnadurai