Wednesday, 20 January 2021

108 காதல் கவிதைகள் #ஆத்மார்த்தி

 108 காதல் கவிதைகள்

#ஆத்மார்த்தி


வதனம் வெளியீடு


குட்டிக் குட்டி கவிதைகளாக 108.

காதல் ஒரு போதும் திகட்டாது. அதற்கு தொடக்கம் மட்டுமே. முடிவு இல்லை. நீள் பயணத்துடன் அதனை ஒப்பிடலாம். இலக்கில்லாத வானம் அதற்கு. அங்கு நதி, மழை, கடல், வனம், கவிதை, நட்சத்திரம் எல்லாம் உண்டு. உங்களுக்கு என்ன தேவையோ அதை அடையலாம். கண்கள் மூடி கண்ட தேவதையை கண் திறந்து காணலாம். காதல் ஒரு தவம். வரம். தேடல். ஊற்று. நிசப்தம். எல்லாம் தான். இந்த நூல் இளையராஜாவின் how to name it இசைத் தொகுப்பிற்கு சமர்ப்பணம் செய்துள்ளார் தோழர். எப்படி பெயரிடுவது காதலுக்கும் இசைக்கும்... 


ஊடல், கூடல் எல்லாம் உண்டு இதனில். எதுவாக இருந்தாலும் கொண்டாடுகிறது கவிதை.

எனக்குப் பிடித்தவை எதுவும்

உனக்குப் பிடித்தவற்றுடன்

ஒத்துப்போகவே இல்லை

என்கிற ஒன்று

ஒத்துப்போகிறது

நமக்குள்...

என்பது ஊடலா கூடலா...!


ஆச்சர்யம் நிறைந்தது காதல். எதிர்பாராத ஒன்று. எப்போது எப்படி யாரால் எங்கிருந்து... இதோ பாருங்களேன்...

உன் மீது

எனக்கு

எந்த ஆச்சர்யமுமில்லை

என் 

ஆச்சர்யமெல்லாம்

உன்னைப் 

பின்தொடரும்

என் மீது தான்...


ஆலயம் புனிதம். அங்கு கடவுள் , பிரார்த்தனை மட்டும் தான். இது காதலர்களுக்குமா... காதல் எங்கும் தொடரும். கோவிலிலும்.

கோயில் பிரகாரத்தில்

வரிசையாய்

சிற்பங்களை

ரசித்துக்கொண்டே

நகர்ந்தாய்.

உன்னை

ரசிப்பதற்காக

வரிசையாய்

வந்துகொண்டிருந்தன

சிற்பங்கள்.

காதலிக்கும் அனைவருக்கும் காதலியின் அழகு பிரமாண்டம் தான். யார் தேவதையாக இருந்தாலென்ன சிற்பமாக இருந்தாலென்ன... காதலிக்குப் பின்னால் தான். 


கிராஃபிக்ஸ் என்ற கவிதை சிறுவயது குரூப் போட்டோவை அளித்து தன்னை கண்டுபிடிக்கச் சொல்லும் காதலி, அவளிடம் கண்டுபிடித்ததை கூறாமல் அவள் அருகில் அமர்ந்திருந்த ஒருவனைத் தூக்கிவிட்டு சின்ன வயதில் உள்ள தன்னை உட்கார வைக்கிறார் கவிஞர். சுயநலம் தான். அது காதலுக்கானது. காதலிக்கானது. வாழ்வுக்கானது.


காதலை தன் கோணத்தில் மட்டும் காணாமல் காதலியையும் பேசவிட்டு ரசித்திருக்கிறார் கவிஞர். பேரம் என்றொரு கவிதை. கடையில் பேரம் பேசும்போது கேட்பதைக் கொடுக்கச் சொல்கிறாள் காதலி. மறுக்கிறான் காதலன். அப்படியே கொடுக்கவா முடியும் என்கிறான். அவள் அமைதியாக சொல்கிறாள்

"நீ கேட்டதை

அப்படியே தானே 

கொடுத்தேன்" இந்த வரிகள் வாசிக்கும்போது

 அவரவர் காதலியின் முகம் கண்முன் வந்து போகும். நாம் கேட்டதும் அவள் அளித்ததும் நினைவுக்கு வந்து உயிரை சில்மிசம் செய்து சிரிக்க வைக்கும். ரசிக்க வைக்கும்.


இன்னும் பலப்பல கவிதைகள்.

முத்தக் கவிதை ஒன்று.

"முத்தமிடவா என்றேன்

கைகளை நீட்டினாய்

கையா நான் கேட்டது

என்றேன்

கண்மூடி

இதழ்கள் காட்டினாய்"


பிரிவுக் கவிதை ஒன்று.

"நீ இல்லாமல்

எப்படி வாழவேண்டும்

என்று அறிவுரைகள்

அள்ளி வழங்கிச் சென்றாய்

அதெல்லாம் இருக்கட்டுமடி

முதலில் 

தூங்குவதற்கு மட்டும்

ஒரு வழி சொல்"


இப்படி இப்படியாக 108 கவிதைகள். பாரதி கிருஷ்ணகுமார் தோழர் வழங்கிய அற்புத அணிந்துரையுடன். அதில் அவர் கூறியுள்ள "பாரதி எழுதினான், "கல்லாய்ப் பிறந்தால் காந்தக் கல்லாய்ப் பிற; செடியாய்ப் பிறந்தால் தொட்டால் சிணுங்கிச் செடியாய்ப் பிற. மனிதனானால் காதல் செய்..." என்பதோடு நிறைவு செய்யலாம் இவ்வாசிப்பு அனுபவத்தை.


காதலில் வாழ

வாசிக்கலாம்.


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா



Wednesday, 12 August 2020

#சிலேட்டுக்குச்சி_சக. முத்துக்ண்ணன்

 #சிலேட்டுக்குச்சி 

கட்டுரைத்தொகுப்பு 

#சக_முத்துக்கண்ணன் 


பாரதி புத்தகாலயம் வெளியீடு

விலை ரூ 110/-


Muthukannan Muthukannan


பள்ளியில் பயின்ற காலத்திலிருந்து பள்ளியில் பணியாற்றும் காலம் வரை தான் வாழ்ந்த வாழ்க்கையில் பல பக்கங்களை நம் கண்முன் படர்த்தி வைத்திருக்கிறார் ஆசிரியர். அரசுப் பள்ளி ஆசிரியர் என்றாலே இளக்காரம் தான். ஆனால் அரசுப் பள்ளிக்கு வரும் குழந்தைகள் என்ன மனநிலையில் வருவார்கள்? அவர்களின் வாழ்க்கைச் சூழல் எப்படி இருக்கும்? அவர்களுக்கான கல்வி எத்தகையதாக நாம் அளிக்க வேண்டும்? அக்குழந்தைகளின் பெற்றோர்கள் இடத்தில் நாம் என்ன வகையான உறவு நிலையைப் பேண வேண்டும்? அக்குழந்தைகளை நாம் எவ்வாறு கையாள வேண்டும்? அக்குழந்தைகளுக்கு என்ன விதமான கல்வி பிடிக்கும்? என்பதையெல்லாம் தன்னுடைய கட்டுரையில் கதைகளை கூறுவதைப் போல அழகாக எடுத்து வைத்திருக்கிறார் ஆசிரியர். கட்டுரைகளைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு கட்டுரையும் ஒரு அனுபவத்தைச் சொல்லுகிறது. ஒவ்வொரு கட்டுரையும் ஏதோ ஒரு இடத்தில் மனதைக் காயம் செய்கிறது. அரசுப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளைக் கூறுவதுபோல பல அனுபவங்கள் எழுத்துக்களில் கொட்டிக்கிடக்கிறது. எழுத்தாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் அணிந்துரை அழகு.


ஆசிரியர் அடித்ததால் மனோஜ் என்ற மாணவனுக்கு சொல்லக் கூடாத இடத்தில் வலி அதிகரித்ததாக கூறுகிறான். படிக்கவில்லை என்பதற்காக அடித்தது இப்படி ஆகும் என்று ஆசிரியர் நினைத்திருக்க மாட்டார். பள்ளியில் நடந்த சம்பவம் வீட்டில், மறுநாள் பயிற்சிக்கு செல்லும் இடத்தில் மனதின் நிம்மதியைக் கலைத்த படியே இருக்க,  சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவன் எப்படி இருக்கிறான் எனக் கேட்கும் ஆசிரியரின் மனநிலையில் அவர் அடித்தது தவறா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அந்தக் காயம் அந்த மாணவனை விட்டுச்செல்லும் வரை ஒரு தாயாக தந்தையாக ஆசிரியர் காட்டும் கரிசனம் ஒவ்வொரு ஆசிரியருக்கும் இருக்க வேண்டும். பள்ளியில் ஓடி விளையாடும் ஒரு சிறுவன் தவறி விழுந்தான் என்றாலும் அதனை வீட்டிற்குத் தெரியப்படுத்தும் பொழுது அதைக் கேள்விப்பட்டு ஓடிவரும் பெற்றோர் தன்னுடைய கோபத்தை முதலில் காட்டுமிடம் ஆசிரியர்தான். ஆனால் காயம் பட்ட குழந்தையிடம் அந்த நேரத்தில் ரத்தம் வழியும் இடம் எதுவானாலும் அவ்விடத்தைக் கழுவி மேலும் ரத்தம் வடிந்துகொண்டிருப்பின் உடனே மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று காயத்தின் மேல் கட்டுப் போட வைத்து ஊசியினை போடச்செய்து மாத்திரையை வாங்கிக் கொடுத்து தேநீரின் உதவியுடன் அதை குடிக்கச் செய்து பெற்றோர்கள் வந்தவுடன் அவர்களிடம் நிலவரத்தைச் சொல்லி அந்தக் குழந்தையை ஒப்படைக்கும் வரை  ஓர் ஆசிரியர் அனுபவிக்கும் அவஸ்தை ஒரு தந்தைக்கும் மேலானது தாய்க்கும் மேலானது. ஆனால் இங்கு மனோஜ் வேறுபட்டு வேறு மாதிரி பயமுறுத்துகிறான். பாவம்டா வாத்தியார்...


ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு பள்ளியிலும் பட்டப்பெயர்கள் மாணவர்கள் சூட்டி இருப்பார்கள். அரசனுக்கு பட்டங்களை சூடுவதைப் போல இது இல்லை. ஒவ்வொரு ஆசிரியரின் உருவத்தைப் பொறுத்து, அவருடைய பாடம் நடத்தும் தன்மையைப் பொறுத்து, அவரின் குணத்தைப் பொறுத்து, அவர் அளிக்கும் தண்டனையைப் பொறுத்து இந்த பட்டப்பெயர்கள் ஆசிரியர்களுக்கு மாறுபடும். அதனைக் குறித்தும் ஒரு கட்டுரை இருக்கிறது அதற்குள் தேடிப் பாருங்கள். உங்களுக்கான பட்டப் பெயரும் கூட ஒளிந்திருக்கலாம்.


பன்னீர் சார் கொஞ்சம் நாசூக்கானவர். ராமரய்யா குழந்தையாக மனநிலையில் வகுப்பு எடுப்பவர். அவரிடம் அன்பு காட்டும் குழந்தைகளாக நாம் மாறுவதா அல்லது ராமரய்யாவாக மாறுவதா... ராமரய்யாவின் நண்பராக, சக ஆசிரியராக முருகன் சார். இருவருக்கும் இடையில் உள்ள நட்பு - அந்த நட்பு வகுப்பறைக்குள் எப்படி இருக்கிறது, அந்த நட்பால் அந்த வகுப்பு எப்படி கலகலப்பாக மாறுகிறது, அவர்கள் குழந்தைகளிடம் எப்படிப் பழகுகிறார்கள் அந்த அன்னியோன்யம் எத்தனை குழந்தைகளுக்குக் கிடைத்துவிடும்... 


டீச்சர் ஒண்ணுக்கு என்ற கட்டுரையில் வரும் "அந்த வகுப்பில் இருந்து டீச்சர்ஸ் பாத்ரூம் வரையிலான தூரம் என்பது தேச அவமானத்தின் நீளம்" என்ற வார்த்தை வெறும் வார்த்தை மட்டுமல்ல, அது அரசுப்பள்ளியில், தனியார் பள்ளிகளில் இந்தக் காலமும் பல இடங்களில் நடந்து வரும் கழிப்பறை இல்லாத அவலம் சுட்டப்படும் இடம்.


டியூசன் எடுக்கும் சாந்தி அக்கா ஒவ்வொரு ஊரிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடம் மாணவர்கள் காட்டும் அன்பு இன்னும் கொஞ்சம் நெருக்கமானது. ஆசிரியரின் வாசிப்பு அனுபவம் எந்த அளவிற்கு அதிகம் இருந்தால் ஒரு வகுப்பறையை அழகாகக் கொண்டு செல்லலாம் என்பதற்கு நூலாசிரியர் அவர்களின் பிரபஞ்சன், வண்ணதாசன் உள்ளிட்ட ஆளுமைகளின் கதைகளை வாசித்து அவற்றை மாணவர்களிடமும் கொண்டு செல்லுதலும் சிறப்பான ஒரு வழிகாட்டலாகக் கொள்ளலாம். 


ஒவ்வொரு குழந்தைகளுக்கும் குழந்தைப் பருவத்தில், உள்ள ஆசை என்பது பெற்றோர்களால் திணிக்கப்படாத பொழுது உள்ள ஆசை நிச்சயமாக எதிர்காலத்தில் அவர்கள் கூறுவதைக் காட்டிலும் வேறு மாதிரியாகத்தான் இருக்கும். அதை ஒரு கட்டுரை அலசுகிறது. 


யானை என்ற கட்டுரையில் முற்போக்கு இருக்கிறது, பக்தி இருக்கிறது, எல்லாவற்றிற்கும் மேலாக மத நல்லிணக்கம் இருக்கிறது. முடிப்பு அருமை பல கட்டுரைகள் போல இதிலும்.

வீட்டுப்பாடம் என்ற தண்டனை யதார்த்த கட்டுரை. குடிகாரத் தந்தைகளால் சீரழியும் குழந்தைகள் பாடு பரிதாபம்.


முழு ஆண்டுத் தேர்வு முடிந்தவுடன் ஒவ்வொரு மாணவனும் ஒரு காலத்தில் அதனை ஒரு கொண்டாட்ட காலமாக வாழ்ந்திருப்பான். நேரத்திற்கு உணவு இல்லை என்ற போதிலும், வீட்டில் அம்மா அப்பா இருவரும் வேலைக்குச் சென்ற பொழுதிலும், வெயில் வாட்டி எடுக்கும் பொழுதிலும், பக்கத்து வீட்டு நண்பர்கள் ஊருக்குச் சென்ற பொழுதிலும், திருவிழாக்கள் வரும் அந்த காலகட்டத்தில் கடன் வாங்கித் துணிகளை உடுத்தும் பொழுதிலும் இருந்த சந்தோசம் இன்று கோடை விடுமுறைகளில் தனித் திறனை வளர்ப்பதற்காக வகுப்புகளை உருவாக்கி வைத்திருப்பவர்களிடம் குழந்தைகளை தள்ளிவிடும் மனப்போக்கு வளர்ந்து வருகிறது. கொரோனா காலத்தில் உயிர் குறித்த பயம் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருந்தாலும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பணம் பறிக்கும் வேலையும், குழந்தைகளை அலைபேசியின் முன்னால் அமர வைக்கும் போக்கும் அதிகரித்து வருவது கண்கூடு. கடைசிக் கட்டுரையான அவன விட்ருங்க பாஸ் என்ற கட்டுரையில் கடைசிப்பத்தி "கோடை அழகாகத் தெரியும். ஏனெனில் அவர்களைப் பொறுத்த மட்டிலும் இதுதான் நிழல் மாதம்" இதுதான் மாணவன். ஆயிரம் பொருள் பொதிந்த வார்த்தைகள்.


உளவியல் ரீதியாக மாணவனை அணுகும் வித்தையைக் கட்டுரைத் தொகுப்பு என்ற பெயரில் சிறு சிறு சம்பவங்களைச் சிறுகதை போல அழகாக, உயிரில் பதியும் வண்ணம் எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர் சக.முத்துக்கண்ணன். வாசியுங்கள் நான் சொன்னதை விட பலப்பல வாசிப்பனுபவம் கிட்டும் உங்களுக்கும்.


நானும் ஓர் ஆசிரியர் என்ற முறையில், தேனி மாவட்டம் என்ற முறையிலும் தோள்களில் கை போட்டு மகிழ்வைத் தெரியப்படுத்திக்கொள்கிறேன் நிறைய நிறைய...


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா

Thursday, 23 July 2020

வருச நாட்டு ஜமீன் கதை #வட_வீர_பொன்னையா

புத்தகம்:     வருச நாட்டு ஜமீன் கதை
ஆசிரியர்:   வடவீர பொன்னையா
பதிப்பகம்:  விகடன் பிரசுரம்

மூன்று தலைமுறைகளை இந்த நூல் பேசுகிறது. ஆண்டி வேலப்ப நாயக்கர், அவருடைய தம்பி இளைய ஆண்டி வேலப்ப நாயக்கர் இருவரின் காலகட்டத்தில் கதை தொடங்குகிறது. இளைய ஆண்டி வேலப்ப நாயக்கர் மூன்று திருமணம் முடித்த பின்பு நான்காவதாக ஆண் வாரிசுக்காக வெள்ளையம்மா என்பவரை திருமணம் முடிக்கிறார். அவருக்கு பிறந்த மகன்தான் திருமலை ராமகிருஷ்ண சாமியப்ப நாயக்கர். மக்களிடம் இருந்து வரக்கூடிய வரிப்பணம், தானியங்கள், விலங்குகள் இப்படி பல வரும்படிகளை வைத்துக்கொண்டு ஜமீனுக்கு உரிய பலான வேலைகளையெல்லாம் செய்துவருகிறார்.  இடையில் பளியன் சித்தன் என்பவனோடு நட்பு ஏற்படுகிறது. அந்த நட்பின் மூலமாக பல்வேறு சித்துவேலைகளை கற்றுக் கொள்கிறார்  ஆண்டி வேலப்ப நாயக்கர். ஒரு கட்டத்தில் பளியன் சித்தன் வேலப்ப  நாயக்கரிடம் பள்ளிகளுக்கும் ஜமீனில் பளியர் இனத்திற்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும். அவர்களையும் ஜமீனுக்கு இணையான பணிகளில் அமர்த்தவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறான். இதைக் கேட்ட வேலப்ப நாயக்கர் சித்தனை வேல் கொண்டு  எய்தி கொன்றுவிடுகிறார். இறப்பதற்கு முன் சித்தன், உன் ஜமீனுக்கான ஆண் வாரிசு பிறப்பதற்கு முன்பு நீ இறந்து விடுவாய். அதுபோலவே அது காலம் முழுவதும் தொடரும். ஆண் வாரிசுகள் பார்ப்பதற்கு முன்பே தகப்பன் உயிர் இருக்காது என்று சாபம் விடுகிறான். அதுபோலவே சாமியப்ப நாயக்கரைப் பார்க்காமலேயே வேலப்ப நாயக்கரின் உயிர் பிரிகிறது.  சிறு வயதில் அரியணை ஜமீனாக வரமுடியாது என்பதால் வெள்ளைத்தாயம்மா பொறுப்பில் ஜமீன் வருகிறது. சாமியப்ப நாயக்கர் சென்னையில் படிக்க செல்கிறார். சென்னையிலிருந்து திரும்பி வரும்பொழுது ஜனகம் என்ற நாட்டியக்காரி உடன் திரும்பி வருகிறார். அவள் வெள்ளைக்கார துரையுடன் செல்ல வேண்டியவள். அவளின் அழகில் மயங்கி இழுத்து வருகிறார் சாமியப்ப நாயக்கர்.  நீண்ட காலம் ஜனகத்துடன் காதல், காம வாசம் தொடர்கிறது. அவளுக்காக அனைத்து வசதிகளுடன் மாளிகை ஒன்றும் கட்டித் தருகிறார். பொன்னும் பொருளும் அள்ளி இறைக்கிறார். அத்தனையும் மக்கள் பணம். இச்சூழலில் சாதியிலிருந்து வேலுத்தாயம்மாள் என்ற பெண்ணை கட்டி வைக்கிறார்கள். வேலுத்தாயம்மாளை கட்டிய பின்னரும் சாமியப்ப நாயக்கரின் பெண் வாசம் நிற்கவில்லை. செல்லும் இடங்களில் எல்லாம் பெண் பித்து பிடித்துத் திரிகிறார். இது தெரிந்த  வேலுத்தாயம்மாள் ஜனகத்தை ஆள் வைத்து கொன்றுவிடுகிறார். எவ்வளவு சொல்லியும் சாமியப்ப நாயக்கர் கேட்காததால் தெப்பம்பட்டி சென்றுவிடுகிறார் வேலுத்தாயம்மாள். ராஜமாணிக்கம் முதல் பெண்ணாக பிறக்கிறார், பிரச்சினை இல்லை. மனம் திருந்தி வந்த சாமியப்ப நாயக்கருடன் கூடல் நடக்க, இரண்டாவதாக ஒரு ஆண் பிறக்கிறது. அந்த ஆண் குழந்தையைப் பார்க்கும் முன்னரே சாமியப்ப நாயக்கர் மறைந்துவிடுகிறார். சாமியப்ப நாயக்கர் மக்களிடமிருந்து வாங்கிய வரிப்பணம் முறையாக வெள்ளையர்களுக்கு கப்பமாக செல்லாததால் கண்டமனூர் ஜமீன் ஏலம் போகிறது, கொஞ்ச பகுதிகளைத் தவிர்த்து அனைத்தையும் எட்டயபுரம் ஜமீன் ஏலத்திற்கு எடுத்துக்கொள்கிறார். எல்லாம் பறிபோன நிலையிலும் ஆட்டம் மட்டும் அடங்கவில்லை சாமியப்ப நாயக்கருக்கு. ஜமீனை மீட்க உதவி செய்வதாக திருவாங்கூர் ராஜா சொல்ல அவரைப் பார்க்க குமுளி வழியாகச் செல்லும்போது நெஞ்சு வலி வந்து பாளையம் ராவுத்தர் வீடு வர அங்குதான் உயிர் பிரிகிறது சாமியப்ப நாயக்கருக்கு. அவர் இறந்த இந்தச் சூழலில் பிறந்த கதிர்வேல் சாமி பாண்டியன் என்ற மைனர் பாண்டியன் சென்னைக்கு சென்று படிக்கும் சூழல் வந்தபோதிலும் அங்கு வேண்டாமென்று வேலு தாயம்மாள் மறுத்துவிடுகிறார்.  மைனர் பாண்டியன் தன்னுடைய தந்தையைப் போலவே பெண் பித்து பிடித்து திரிகிறார். முறையான படிப்பும் இல்லை சேவகர்கள் பலரை வைத்துக்கொண்டு அடாவடியில் ஈடுபடுகிறார். பித்தனின் வாக்கு பலித்துக் கொண்டு வருவதை நம்ப மறுக்கிறார். எத்தனையோ பெண்களிடம் சல்லாபம் செய்த மைனர் பாண்டியன் ஒரு கட்டத்தில் 13 வயதான வேலம்மா என்பவரை தூக்கி சென்று திருமணம் முடிக்கிறார். முடித்த போதிலும் வழக்கம்போல் அடாவடி தொடர்கிறது. பெண் சகவாசம் தொடருகிறது. ஜமீன் ஒருபக்கம் வெள்ளையர்களுக்கு கப்பம் கட்டாமல் மூழ்கிக் கொண்டிருக்கிறது இன்னொரு பக்கம் சுதந்திரப்போராட்டம் நடந்து கொண்டிருக்க மக்கள் ஜமீனில் இருந்து விடுபடும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசி காலத்தில் உடல்நிலை சரியில்லாமல் சித்தன் வாழ்ந்த அதே குகையில் வாழத் தொடங்கிய மைனர் பாண்டியன் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் கூழைக் குடித்து நாட்களைக் கடத்துகிறார். அப்படியே அவருடைய வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது. அடக்கம் செய்வதற்கு கூட சொந்த நிலம் இல்லாத ஒரு ஜமீனாக மைனர் பாண்டியன் கடைசியில் இறக்கிறார்.
        ஜம்புலிபுத்தூர் கோவிலில் பெண்களை கோவிலுக்கு பொட்டுக்கட்டி விட, அந்தப் பெண்களை ஜமீன் ஏகபோகமாக அனுபவித்தல், வயசுக்கு வந்த பெண்களை காத்துக் கருப்பு அண்டக்கூடாது என்று அரண்மனைக்கு கொண்டு வந்து விட அவர்களை அனுபவித்தல், விரும்பும் பெண்களை சேவகக்காரர்கள் துணையோடு தூக்கி வந்து அனுபவித்தல், பிறரின் சொத்துக்களை அடித்துப் பிடுங்குதல், தாம் தூம் செலவு, சாதகம் செய்யும் பிறருக்கு ஊரைத் தானமாக வழங்குதல், வெள்ளைக்காரன் கண்களை மறைத்து பல திருட்டுத் தனங்களைச் செய்தல், பெண்களை போகப் பொருளாகப் பார்த்தல், சொத்துக்களை பாதுகாக்க பெண்களை ஜமீன் பொறுப்பில் அமர வைத்தல் வரலாறெங்கும் உள்ள அவலங்களை மண்ணின் மொழியோடு வட வீர பொன்னையா கூறியுள்ளார். வாசிக்க வாசிக்க அந்தக் காலத்திற்குள் பயணிக்கும் எண்ணம் பீறிடுகிறது. இன்னொன்றையும் சொல்லவேண்டும்.

         இப்படிப் பட்டவர்களின் செயல்களைத்தான் அப்படியே தொடர ஆண்ட பரம்பரை என்று சொல்லி கொண்டாடி வருகிறதோ பல கூட்டம், அக்காலம் போல இப்பவும் சொத்துக்களை களவாடுதல், பெண்களை வன்புணர்வு செய்தல் போன்ற செயல்களைச் செய்ய நினைக்கிறதோ என்ற எண்ணமும் மேலிடாமல் இல்லை.

வாழ்த்துகள் வட வீர பொன்னையா தோழர்.

யாழ் தண்விகா

Saturday, 18 July 2020

குறி அறுத்தேன் #திருநங்கை_கல்கி

குறி அறுத்தேன் -திருநங்கை கல்கி
----------------------------------------------------
தாமரைக்குளம் எனது ஊர். பத்தாண்டுகளுக்கு முன்பு இருக்கும். வ.உ.சிதம்பரனார் சிலை அருகிருக்கும் பகுதியில் பலமுறை அந்த திருநங்கையைப் பார்த்திருக்கிறேன். நல்ல ஒப்பனையுடன் வேலைக்குச் செல்லும் அலுவலக பெண் போல பல காலைகளில். அவளும் மனுசிதான் என்பதைத் தாண்டி அவள்மேல் விழும் சக மனிதர்களின் கிண்டலையும் கேட்டுத்தான் வளர்ந்தேன். நாட்களின் திசைகளில் பயணித்த வாழ்வில் ஓர் காலை தினசரி நாளிதழில் படித்து அறிகிறேன். பல வருடங்களாக அந்த திருநங்கையுடன் பழகிய ஒருவன், விரைவில்,அவனுக்கு திருமணம் நடக்கப்போவதாகவும் அதனால் அத்திருநங்கையுடன் தனக்கு இதுவரையிலும் உள்ள உறவை இனி தொடரப்போவதில்லை எனவும் அவன் முடிவெடுக்கிறான். அத்திருநங்கை அவனிடம் கெஞ்சுகிறாள், தன்னால் இயன்றவரை அவனோடு வாழத் துடிப்பதையும் அந்த்த துடிப்பு இறப்பு வரையும் தொடரும் என்று உத்திரவாதமும் தருகிறாள். ஆனால் திருநங்கையுடன் வாழ்ந்தால் சமூகம் தன்னைக் கேவலமாக நினைக்கும் , வீட்டில் திருமணத்திற்கு கட்டாயப்படுத்துகிறார்கள், "ஒரு பெண்ணோடு" தனக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள் பெற்றோர் என்று கூறி மறுதலிக்கிறான் அவளை..திருநங்கையாக மாறியவர்களுக்கும் கற்பு இருக்கும் என்பதை அறியாத அவனின் வார்த்தைகள் ரணமாகக் குத்துகிறது அவளை. வாழ்ந்த வாழ்வின் அம்மணப் பக்கங்கள் அத்திருநங்கையை உடல் கூசச் செய்கிறது. ஆத்திரம் மேலேற அத்திருநங்கை அவனின் ஆண்மைத் திமிரினை திருகிப்போடுகிறாள் கொலையென. அதுவும் அத்திருநங்கையும் அவனும் தனித்திருந்த ஒரு விடுதியில் நிகழ்கிறது.

மேற்சொன்ன நிகழ்வின் உக்கிரம் வழியாகவே "குறி அறுத்தேன்"நூலினைப் பார்த்தேன். படித்தேன்.

பெண் என்பவள்
இதுவே இதுதான்
என்றால்
பெண்ணில்லை நான்.
ஏதோ ஒன்று
-அந்த ஏதோ ஒன்றிற்குள் என்னன்னென்னவெல்லாம் இருக்கின்றன... அது அதீத அன்பாக காமமாக சீறும் காளியாக... சுயம் குறித்த ஒற்றை அழகான அபார அபாயச் சொல் ஏதோ ஒன்று.

முத்தம் என்றொரு
புதுக்கவிதையை
என் இதழ்களில் எழுதவும்
கவ்விய இதழ்களில்
கலந்துவிட்ட மூச்சோடு
காவியம் பாடவும்
கவிதைக்காதலன்
வேண்டும் எனக்கு...
-மானுடம் நோக்கி கல்கியால் வரையப்பட்டுள்ள காதல் மடல்தான் இது. இது தனித்தலைய பணிக்கப்பட்டுள்ள திருநங்கைச் சமூகத்தின் ஒருமித்த அன்பு குறித்த எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம்....

அது எப்படி
சாதி வெறிக்கு
காமம் மட்டும்
விதிவிலக்காகிறது...
-என்ற வரிகள் இயலாமையில் பூக்கும்
வார்த்தையாக தோன்றும் அதே கணம்...

மதம் துறந்து
சாதி துறந்து
மறுக்கப்பட்டவர்கள்
ஒன்றுகூடி
வாழும் வாழ்க்கையை
வாழ முடியுமா உங்களால்...?
-எனும்போது மனிதத்தை நிமிரச் செய்யாமல்
சாதி என்னும் "ஆண்மையை தொங்கவிட்டுத் திரியும்" கூட்டத்தின்மேல் துப்பிய தீக்கனலாக மாறி நிற்கின்றன
கல்கியின் வரிகள்...

சமூகத்தால் இன்றுவரை புறக்கணிக்கப்பட்டவர்களாக
வாழும் திருநங்கைகளின் வாழ்வு, காதல், காமம் அவர்களுள் ஓடும் சமூகம் என எளிமையான மொழியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு வலுவான பதிவாக இக்கவிதைகள்... 

தொடரட்டும் கல்கியின் களப்பணி
கலைப்பணி...

அன்பு மற்றும் தோழமையுடன்...

-யாழ் தண்விகா.

Friday, 17 July 2020

ஓசை புதையும் வெளி #தி_பரமேசுவரி

ஓசை புதையும் வெளி
#கவிதைத்தொகுப்பு
#தி_பரமேசுவரி

கால நதி சில பெரும் வெள்ளோட்டத்தையும் சில பாலையையும் சிலபல இயல்பான பயணத்தையும் எப்போதும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒரு சிறு சருகு காற்றிலோ நீரிலோ நிலத்திலோ அலைவுறும் தருணத்தில் சருகின் உள்ளோடும் வாழ்வின் நிலையற்ற தன்மையானது எத்தகைய துயர்களைக் கொண்டிருக்கும்... அதன் வலிகளை இயல்பின் மொழிகளில் எடுத்தாளும் தீட்சண்யம் கவிஞனின் மொழிகளில் படர்ந்து கிளைத்திருக்கிறது. அத்தகைய கிளைத்தலுக்குரிய மொழி லாவகம் உடைய கவிஞராக #ஓசைபுதையும்வெளி கவிதைத்தொகுப்பின் ஆசிரியர் #தி_பரமேசுவரி அவர்களை கூறலாம்...

இயல்புக்கு அப்பாற்பட்ட எதையும் புனைவென்று கூறி பக்கங்களைக் கடத்தும் உத்திகளற்று நம் வாழ்வின் யதார்த்தங்களை கவிதைகளில் பதிவிட்டுள்ளார் கவிஞர்...

சிறகுகள் கோதும் சாளரம் என்று தலைப்பிட்ட கவிதை.
"மேலும் தீட்டிக் கூராக்குகிறது
சிறிய மூக்கை
தொட்டி நீரில் அமிழ்த்திக்
கோதுகிறது சிறகுகளை
தானியங்களைக் கொத்தியும்
நீர் குடித்தும் பறந்தும்
விழுந்தும் அணைத்தும்
செய்யும் சில்மிஷங்கள்
குஞ்சுப் பறவையின் சேட்டைகளைச்
செல்லமாய்க் கண்டிக்கும் தாய்ப்பறவை

சன்னலில் பதித்த முகத்தில்
பதியும் கோடுகள்

வலிக்க வலிக்க
ரசித்துக்கொண்டிருக்கிறாள்..."

ஒரு பறவையின் வாழ்வு, அதன் பறத்தலும் பறத்தல் நிமித்தமுமான வாழ்வின் கணங்களின் கூறொன்றை பார்க்கும் ஒரு பெண்ணின் ஏக்கங்கள் கவிதை வரிகளில் முகத்தில் பதியும் கோடுகளாக்கப்பட்டிருன்றன விடுதலைக்கான வலியின் வார்த்தைகள் இவை.

துரோகத்தின் பாஷை நேரடியாக நம்மை அணுகும்போது சிலிர்த்ததிரும் உடலின் வலிகளை உதிர ஓவியமாக்கியிருக்கிறார் கவிஞர்.
"ஆதரவு தேடித்
தோள் சாய்கிறேன்
அடி வயிற்றில்
கத்தி செருகுகிறாய்
சிதறும் துளிகள் கொண்டு
தீட்டுகிறேன் உன் ஓவியம்..."

எத்தனை வரையறைகள் கொடுத்தாலும்  காதலுக்கான வரையறை அவரவர் பார்வையில் ஆகச் சிறந்த பொறுத்தமாகவே அமைந்து விடுகிறது. இது கவிஞரின் விளக்கம்...
"காயமுற்று விழுந்த புறாவின்
சிறகு தடவி
பயம் தணித்து
வலிக்காமல் தலை திருகும்
உன் மென்மைக்கும்
காதல் என்றுதான் பெயர்"

இயல்பாக கடந்து செல்ல வேண்டிய ஒன்றாக நாம் நினைப்பவற்றையும் கவிஞரின் பார்வையில் கண்ணாடி மதிலில் பதிவிடுகிறார் இப்படியாக...
"கண்ணாடிச் சில்லுகள்
பதிக்கப்பட்ட மதில்களில்
சிறிதும் சேதாரமின்றி
நகர்கிறது நத்தை
மௌனத்தின் இடைவெளிகளை
இட்டு நிரப்பியபடி"
இந்த மௌனத்தின் இடைவெளிகள் என்பதில் இட்டு நிரப்பவேண்டிவைகள் என என்னென்ன நாம் வைத்திருக்கிறோம் என்பதை நம் மனம் ஒன்றே அறியும்.

ஓசை புதையும் வெளி என்ற தலைப்பிலான கவிதை.
"உரக்கப் பேசுவதாய்க்
கோபப்பட்டாய்
மிகுந்த ஓசையுடன் காரியமாற்றுவதாய்க்
குற்றம் சாட்டினாய்
புணர்ச்சியில் கூட முனகல்கள்
தெருவெங்கும் இறைவதாய்
எரிச்சல்பட்டாய்
வெடிக்கும் என் ஆர்ப்பரிப்புகள்
உனக்குள்
வெந்நீர்க் கொப்புளங்களையே
உருவாக்கின எப்போதும்
மெல்ல அடங்கிய என் சப்தங்கள்
புதைக்கப்பட்டன உன் வெளியில்"
ஒரு காதலாலோ நட்பாலோ தன்னை தொலைக்கும் உறவின் வலியோ இன்பமோ என்பது சொல்லி மாளாதது. தன்னைத் தொலைத்தல் என்பதைத் தொடர்ந்து நிகழும் விருப்பத்திற்கு அப்பாற்பட்ட கொடுமைகள், அதனாலான வேதனைகள் ஆகியனவற்றை அனுபவித்தும் அதனை இயல்பாக்கிக்கொள்ளும்
ஜீவனின் வெளி இது.

நகர மயமாதல், சந்தேகம், வாழ்வு, சுயம், கலவி, இன்னும் பல தலைப்புகள் மற்றும்  சில ஹைக்கூ கவிதைகள் என நிரம்பிக்கிடக்கிறது தொகுப்பு. வாசித்தறிவோம் கவிஞரின் ஓசை புதைந்திருக்கும் கவிதை வெளியை...

வாழ்த்துகள் #கவிஞர்தி_பரமேசுவரி

#யாழ்தண்விகா

Wednesday, 3 June 2020

தேர் சுமக்கும் நிலம் #யாழ் தண்விகா

❣️
1
உன்னைப் பார்த்து விட்டுத்
திரும்பும் போதெல்லாம்
கவிதைகளால்
நிரம்பி இருப்பேன்

❣️
2
சில இரவுகள்
சில பகல்கள்
இந்த ஆயுளுக்கும் போதும்
என்பதாகிவிட்ட வாழ்வு
காதலால் அமைந்ததும் சுகமே...

❣️
3
பனிக்காலை
கொன்றைப் பூக்களின் நிறத்தில்
உன் முகத்து மஞ்சள்

❣️
4
அறைக்குள் இருந்து
வெளியில் வருவாய்

கருவறைக்குள் இருந்து
கடவுள் வருவது போலிருக்கும்

❣️
5
பயணத்தில்
வியர்வை ஒட்டிக் கிடக்கும்
நம் ஸ்பரிசத்தில்
மிதந்தது காதலா காமமா

❣️
6
உன்னை கண்ட தினத்தில்
நீ சூடி இருந்த
புடவையின் வண்ணத்தில்
எப்போதும் என் கனவுகள்

❣️
7
பிரிவின்போதான
இரவில் ஒலிக்கும்
பல்லிச் சத்தம்
உன் முத்தத்தை
நினைவுபடுத்தும்

கூடுதலின் போதான
உன் முத்தச் சத்தம்
கடல் அலையை
நினைவு படுத்தும்

❣️
8
மனசு தடுமாறும்
வரியை நீ பாடும் பொழுது
கொடியிலே மல்லிகைப்பூ
வைத்தகண் மாறாது
பார்க்கும்

❣️
9
தேர் சுமக்கும்
நிலமாகிப் போகிறேன்
உன்னைச் சுமக்கும் போது

❣️
10
முதன் முதலில்
நான் வாங்கித் தந்து
நீ சூடிய மலர் மல்லிகை

உன்னால் நான்
சூடிக்கொண்ட மலர்
நீ

❣️
11
உன் காதல் தான்
எப்போதும்
நான் வாழ...

❣️
12
என்னால்
சிரிக்கிறாய்
சிரித்தாய்
சிரிப்பாய்
பூ என்பதன்
குணம் அது தானே...

❣️
13
கனவு போலான
வாழ்க்கை
வாழ்ந்ததும்
வாழப் போவதும்

❣️
14
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
பாடலை இப்போதும் நாம்
பாடிக் கொண்டிருக்கிறோம்
முடியாத அந்தக் காலம் தொட்டு

❣️
15
பேரன்பின்
பெருநிலம்
நீ

❣️
16
உன் முத்தச் சுவையின் போது
நீயாக என்னை
எழுப்பினால் தான் உண்டு...

❣️
17
உன்னை நீயே
செதுக்கி வைத்திருக்கிறாய்
அழகளவுகளில்...

❣️
18
உன் மௌனத்திலும்
அழகு தானியங்கள்
சிதறிக்கிடக்கும்

❣️
19
உன் கோபத்தின் போது
உன்னைப் பார்த்துச் சிரிப்பது
உனக்குக்கோபம் வரவில்லை என்பதை உணர்த்துவதற்காக மட்டுமே...

❣️
20
என்னை அழ வைத்திருக்கிறாய்
உன்னால் அழாமல்
உனக்காக அழாமல்
யாருக்காக அழப் போகிறேன்

❣️
21
நெடிய பயணம் உன்னோடு வாய்த்திருக்கிறது
இந்த வாழ்வில்
அதுபோன்ற பயணம்
கைகாட்டி மரங்களாக நின்று
இன்று பூத்தூவுகிறது

❣️
22
குட்டச்சி
குண்டாத்தி என்பதெல்லாம்
என்னைவிடக்
குட்டையாக இருக்கிறாய்
குண்டாக இருக்கிறாய்
என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காக மட்டுமல்ல
அதுதான் உனக்கு அழகு
என்பதை உணர்த்துவதற்காகவும் தான்

❣️
23
எழுதத் தெரிகிறது என்பது மகிழ்ச்சிகரமானதாக
மாறக் காரணம்
உன்னை எழுதுவதால்...

❣️
24
ஒரு குழந்தையாக
என்னைத் தாங்கிக் கொள்
உன் குரலை தாலாட்டாகக் கேட்டு உறங்கவேண்டும்

❣️
25
உன் பாதங்களில்
முத்தமிட்டுருக்கிறேன்
உன் பாதங்களால்
ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்
முன்னது தவம்
பின்னது வரம்

❣️
26
உன் கைச் சமையலில்
காதல் வாசனை

❣️
27
நீ உணவு ஊட்டுகிறாயா
உன்னை ஊட்டுகிறாயா
என்ற குழப்பம்
எப்போதும் உண்டு

❣️
28
காமத்தின் போதான ஒன்றை
நினைவு படுத்திய ஒரு தருணம்
நீங்க ரொம்ப மோசம் என்றாய் நீயா-நானா என்றேன்
உன் புன்னகையில்
அப்படி ஒரு வெட்கம்

❣️
29
பரதேசி என்று ஒருமுறை
திட்டிருக்கிறாய்
இப்போதுவரை அந்தப் பட்டமும் மிகப்பிடித்தம் எனக்கு

❣️
30
அழகை உச்சமாகும் வேலையை
உன் காலணியும் தான் செய்கிறது
ஹீல்ஸ் வாயிலாக...

❣️
31
உன் மடியில் தலைசாய்த்து இருக்கிறேன்
தோள் தட்டிக் கொடுப்பாய்
உறக்கம் வராது
அது
உயிரினைத் தட்டிக்கொடுக்கும்
சுகந்தம்

❣️
32
எந்த ஒரு பதட்டமும் இன்றி
நம் கூடல் அரங்கேறிய பொழுது
அறியும்
நமக்குள் பாய்ந்திருக்கும்
காதலின் வல்லமை
எவ்வளவு ஆதுரமானது என்று...

❣️
33
பேசப்பேச கேட்டுக்கொண்டிருப்பேன்
இத மட்டும் கேளுங்க என்று சொல்லிவிட்டு
நீயே, கேட்டுத்தான் ஆகணும்
என்றும் சொல்வாய்
அதையும் கேட்டுக் கொண்டுதான் இருப்பேன்

❣️
34
பெரும் ஆசை எல்லாம்
ஒன்றே ஒன்றுதான்
அது நீ மட்டும் தான்

❣️
35
பார்க்காத நேரம் எல்லாம் பார்த்து
பார்க்கும் நேரம் இன்னமும் பார்த்து
எனக்குள் நீ ஊடுருவினாயா
என்னை உனக்குள் ஊடுருவச் செய்தாயா

❣️
36
என் ஆடையை நீ உடுத்தி என்னைப்போல் பேசிக் காட்டுவாய் அவ்வளவு அசலாக இருக்கும்
ஆனால் உண்மையில் அப்போது
உன் வெட்கம்
எனக்கு வரவே இல்லை

❣️
37
நான் தூங்க போறேன்

நீ தூங்கு போ

இல்ல போகல

ஏன்

உங்க கண்ணு என்னை கேக்குது

ம் எங்க கேட்குது

ஆமா கேட்குது எனக்குத் தெரியும்
நாம தூங்காம இரவைத் தூங்க வைக்கலாம் சரியா

என்ற கண் மொழி பயின்றவள் நீ...

❣️
38
கைகள் கோர்த்து
காலாற பேசிக்கொண்டே
பகலில் நாம் நடக்கும் வாய்ப்பு இருப்பின்
அது இரவாக மாறி விட்டால் நன்றாக இருக்கும்

நீ இரவில்தான் அப்படி நடந்து போக விருப்பப்பட்டாய்...

❣️
39
கட்டிப் பிடித்துக் கொள்வாய்
விட்டு விலகிக் கொல்வாய்

❣️
40
என் நிலத்தில்
துளிர்க்கும்
பூ
நீ

❣️
41
எந்த உடையும் உனக்கு பொருத்தமாயிருக்கும்
இல்லை இல்லை
எந்த உடைக்கும்
உன்னோடு
பொருத்தம் இருக்கும்

❣️
42
முத்தம் கொடுக்கத் தெரியாது சொல்லிக்கொடுங்க
என்பாய்
தொலைவில் இருக்கும் போது

அருகில் வரும்போது
நீ முத்தம் கேட்க
நான் புள்ளி வைப்பேன்
நீ தொடர்ந்து கொண்டே இருப்பாய்

வேடிக்கை பார்ப்பேன் நான்
வெட்கப்பட்டுச் சிரிக்கும் காதல்...

❣️
43
இதழ் வரி எல்லாம் கவிதைதான்
உன் எச்சில் தடவியோ
என் எச்சில் தடவியோ
வாசிக்கும்போது
காமக் கவிதையாகி விடுகின்றன
அவை

❣️
44
தலை திரும்பும் திசையெல்லாம்
திரும்பும் கரகக் கிளி போல
நீ வாசம் செய்யும் திசையெல்லாம்
திரும்பிப் பார்க்கிறேன் நான்...

❣️
45
எறும்பு ஊறக் கல்லும் தேயும்
நான் ஊற நீ மின்னுகிறாய்

❣️
46
நீயும் நானும் மட்டுமான
உலகமாகிவிடுகிறது
உன்னோடு நானிருப்பது...

❣️
47
நிலவின் துணைக்கோள்
ஆகிவிடுவேன் நான்
உன்னுடனான பயணத்தில்

❣️
48
நீ அணிந்த பொழுதுதான்
எவ்வளவு ஆரவாரச் சத்தம்
இந்தக் கண்ணாடி வளையலுக்கு...

❣️
49
எப்போதும் உன்னோடு வாழவேண்டும்
என்பதற்கு
உன்னோடு நான்
வாழ்ந்த வாழ்க்கை
வாழும் வாழ்க்கை
வாழ வேண்டிய வாழ்க்கை
எல்லாமும் தான் காரணம்...

❣️
50
என் மேல் அடித்துக்கொள்ளும்
வாசனைத் திரவியத்தில்
உன் வாசம்

❣️
51
அவரவர் வேலைகளில் மூழ்கியிருப்போம்
எப்போதாவது நீ என்னைப் பார்க்கத் திரும்புவாய்
நான் உன்னைப் பார்ப்பேன்

நான் உன்னைப் பார்க்கத் திரும்புவேன்
நீ என்னைப் பார்ப்பாய்

அதுவும் நமது வேலைதான்

❣️
52
அளவுக்கதிகமான கோபம்
நீ கொண்ட நாளில்தான்
முதல் முத்தம்
நமக்குள் வாய்த்தது

❣️
53
அனைத்து உறவும்
எனக்கு நீதான்
என்பாய்

அத்தனை உறவின் அன்பும்
எனக்கு நீதான்...

❣️
54
பேசித் தீராத
காதல் நமது

❣️
55
இப்போதுவரை
ஒரு சேய்போல
காதலைக் காத்துவருகிறேன்
தாயின் நிலையில் நின்று...
போதுமா குழந்தையே...

❣️
56
பிரியும் போதெல்லாம்
கண்ணீர் விடுவாய்
பிரிந்து வந்தபின்
எனது முறை

❣️
57
பால்யத்தில் உன்னுடன் இல்லை
என்பதை ஈடுகட்டவே
இரவெல்லாம் உன் நினைவுகளோடு
உறவாடுகிறேன்

❣️
58
உன் நெற்றியில்
முத்தமிட்டுத் திரும்பிய நாளில்
பூமி பார்த்துச் சிரித்தது
எனதிதழில்
குங்குமமும் மஞ்சளும்...

❣️
59
உனக்காக நான் எழுதிய கவிதைகள்
நீ வாசித்தபின் மின்னுகிறது
நட்சத்திரங்களாக...

❣️
60
உயரப் பறக்கும் பட்டம் நாம்
இதயம் பிடித்திருக்கும் நூல் காதல்...

❣️
61
கரை வந்தவுடன் காணாமல் போகும்
அலையாகத் தான்
உன்னைக் காணும் போது
நான் காணாமல் ஆவதும்...

❣️
62
உன் மடி மீது துயில்தல் போல
உயிர் மடிதல்
சவுந்தர்ய வாழ்வின் கடைசி வரம்
இப்படி அமைந்தால் எப்படி இருக்கும்...

❣️
63
நெருங்கி நீ வரவர
உயிரினிடைத்தூரம் இல்லாமல் போகும்
மாயம் போக்கும்
நம்மில்

❣️
64
என் வீட்டு ஜன்னலின்
பார்வைக்கு எட்டும் தூரத்தில்
உன் வீடு
யார் சொன்னது தொலைவு என்று
தொலைவு என்பது தொலைவு அல்ல

❣️
65
ஓ...
அடடா...
ப்பா...
அதிகம் உன்னால் உச்சரிக்கப்பட்ட
குட்டிச் சொற்கவிதைகள்
இவை...

❣️
66
கண்ணாடிமுன் நின்று கொண்டிருக்கும் பொழுது

என்ன செய்கிறாய்
என்றேன்

கலைந்து இருக்கும் அழகைச்
சரி செய்கிறேன்
என்றாய்

கலைந்து இருப்பதும் அழகு
என்றேன்

ஆளும் பிள்ளையும் என்று சொல்லிக்கொண்டே என் கண்களை மூடுகிறாய் கைகளால்...

❣️
67
எதை எதையோ பேசிக் கொண்டிருப்போம்
ஐ லவ் யூ எனும் வார்த்தையைச்
சட்டென இருவரும் ஒரே சமயத்தில் உதிர்த்துக் கொள்வோம்
ஹே ஜாலி ஜாலி எனக் காதல்
கை தட்டிக் கொள்ளும்

❣️
68
நட்சத்திரப் பொருத்தம்
நாம் பார்த்துக் கொண்டதில்லை
மச்சப்பொருத்தம்
பார்த்திருக்கிறோம்

❣️
69
உதிரும் இலை
காற்றில் தவழும் அழகு
காண்கிறேன்
உன் ஸ்பரிசம் தொடும் பொழுது
நீ
கண் மூடும் அழகில்

❣️
70
காதல் பாடலைப் பாடும் பொழுதும்
ஒரு குழந்தையின் குரலில் தான் இருக்கிறது
உன் அன்பு...

❣️
71
எப்படியும் பேசி விடுவோம்
ஒவ்வொரு நாளும்
உயிராலோ
நினைவாலோ

❣️
72
காட்டன் புடவைகளை
விரும்பிக் கட்டுவாய்
கொடுத்து வைத்த வியர்வை

❣️
73
தேவதை
வெள்ளை உடையில் மட்டும் வருவாள்
என்ற கட்டமைப்பை
உடைத்தவள் நீ

❣️
74
நமக்குள் ஒளிந்திருக்கும் வாழ்வு
வாழ்வில் ஒளிந்திருக்கும் நாம்
ஆனால் எல்லாம் உண்மை

❣️
75
மூன்று நாள் வலி என்பாய்
முத்தங்கள் அளிப்பேன்
தென்றலாய் நாட்கள் கடந்த சுகம் சொல்வாய்
முத்தங்கள் பிறவிப் பயன் அடையும் இப்படியும்

❣️
76
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு விதமாக
என்னைப் பிறப்பிக்கிறாய்

❣️
77
உன்னோடு பழகும்
அதிகாலைத் தேநீருக்கு
நீ சோம்பல் உதிர்க்கும் அழகு...

❣️
78
காதுகளின் ஓரமாக
கழுத்தின் மேல் புறத்திலிருந்து கீழ்ப்புறமாக
மூச்சுக்காற்று பரவப்பரவ
கண்கள் மூடி
சுவாசம் நிறுத்தி
இதழ் சுளித்து
கழுத்து சிலிர்த்து நின்றவள்
டக்கெனத் திரும்பி
முத்தமிட்டாய்
எல்லாம் நானும் செய்தேன்
கண்கள் மூடி
சுவாசம் நிறுத்தி
இதழ் சுளித்து
கழுத்து சிலிர்த்து...

❣️
79
ஜன்னலோர இருக்கையை
நீயே வைத்துக்கொள்
உன்னைத் தழுவி வரும் காற்றின் சுவாசத்தால் இன்னும் கொஞ்சநாள் ஆயுள் கூடும் எனக்கு

அப்போ நான்...

முத்தத்தின் போது பகிர்வோம்
ஆயுள்
உனக்கும் எனக்கும் சமம் என சுவாசத்தின் மூலமாக

❣️
80
தோள் சாயும் போதும்
மடி சாயும் போதும்
உறங்கிவிட வேண்டும்
அதற்கான திளைத்த காதலின் பின்னான வாழ்வு
எப்போது வரும் நமக்கு

❣️
81
என் கவிதைகள்
உன்னில் நான் பறித்தவையா
என்னில் நீ உதிர்த்தவையா...

❣️
82
ஒரு தனிமைக் கூடலுக்கான நாளில் எனக்காகச் சமைத்து
நெடுநேரம் கழித்து
தாமதமாக வந்தாய்

லூசா நீ
கடையில கூட வாங்கி சாப்பிட்டு இருக்கலாம் இல்ல
இன்னும் எவ்ளோ நேரம் என்னோடு இருப்ப
என்றேன்

இன்னொரு நாளில் நாம் சந்திக்கவே மாட்டோமா என்ன
வாங்க சாப்பிடுங்க
என்றபடியே
பரிமாறத் தொடங்கிய
காதல்காரி நீ

❣️
83
வாழ
வாழ
வாழ
காதலிக்கிறேன்
காதலித்தேன்
காதலிப்பேன்

❣️
84
பெரும் போதை நீ
எப்போதும் மயக்கம் உன்னால்...

❣️
85
எல்லாக் கண்களும் ஒரு திசையை நோக்க
காதலர்களின் கண்கள்
காதல் நோக்கும்
பேரன்பு வாய்த்தல் வரம்

❣️
86
பசியைச் சந்திக்கும்
சவால் போலானது
உன்னைப் பார்க்காது
நீளும் நாட்கள்...

❣️
87
நட்சத்திரப் பெருங்கூட்டத்தினிடை நிலவு
இளஞ் செம்பருத்தி நிறத்தில் இருந்தது
நம் முதல்நாள் சந்திப்பு குறித்து இப்படித்தான் சொல்ல முடியும்

❣️
88
உன்னை நினைத்திருக்கிறேன் என்பதுதான்
முக்காலத்திற்கும்

❣️
89
யார் நதி
யார் கரை
மையமாக நின்று
பேசிக் கொண்டிருக்கிறது
காதல்

❣️
90
என் உலர்ந்த கனவுகளின் மேல் பனியாய் உதிர்ந்தாய்
சிலிர்த்துதித்தேன்
உனக்கே உனக்காக...

❣️
91
தாயின்
கதகதப்பான சிறகுகளுள் நிற்கும்
சிறு குஞ்சுகள் போல
என் கரங்களுள் நீ நின்றாய்
உனக்கான காதலாக நான் எப்படி இருக்கவேண்டும்
என அப்போது உணர்ந்தேன்

❣️
92
ஒரு தேநீர் அருந்தலாமா என
நான் உன்னைக் கேட்க நினைக்கும் நேரம்
நீ என்னைக் கேட்பாய்
அதே கேள்வியை
இது போதாதா
நாம் காதலுக்கு விசுவாசமானவர்கள் என்று உணர்த்த

❣️
93
மலைகள்
கடல்கள்
நாடுகள்
கடந்து நிகழும் சந்திப்பு
நாடுகள்
கடல்கள்
மலைகள்
கடந்து படிப்படியாக நிகழும் பிரிவு

❣️
94
எப்போது வாழ்வோம்
எப்போது சாவோம்
என்ற கேள்விகளின் ஊடே தான்
காதல் வாழ்கிறது
மகிழ்ந்தபடி

❣️
95
சட்டென அறுந்து போகும்
நரம்பிசைக் கருவியின் இழையாய் வெறுமையின் உச்சத்தில்
தனித்தலையும் என் நாட்களின்
ஒரு துளிக் கண்ணீர்
உன் பிரிவால் நான் படும்
துயர் சொல்லும்

❣️
96
உனக்கான நானாக என்னை மாற்ற
ஏதேதோ மாயம் செய்கிறாய்
செய்துகொள்
பிடித்திருக்கும் இவ்வாழ்வு
நீ தந்தது

❣️
97
என் காயங்களின் போது
மீண்டெழும் உன் நினைவில் இருந்து முத்தங்கள் எடுத்துப் பூசிக் கொள்வேன்
எல்லாம் சுபம்...

❣️
98
என் உயிரின் ஈரத்தில்
எப்போதும்
உன் காதல் படகு
மிதக்கும்...

❣️
99
இப்படியே இந்தப் பிரிவிருள் தொடர்ந்தாலும்
உன் நினைவு வெளிச்சமாகக் கொண்டு செல்லும்
சாகும் கடைசி துளியிலும்
உனது எதிரில் என்னை...

❣️
100
நீ அளிக்கும் மரணமும்
எனக்கான காதல் பரிசு தான்...

யாழ் தண்விகா


Friday, 29 May 2020

வகுப்பறை வாழ்க்கை #யாழ் தண்விகா

#வகுப்பறை_வாழ்க்கை

அடைக்கப்பட்டிருக்கும் பள்ளியில்
என் வகுப்பறைக் கரும்பலகையில் எழுதிக் கொண்டிருக்கிறேன்
பேசிக்கொண்டே சொல்லிக்கொண்டே
எழுதுகிறார்கள் என் குழந்தைகள்

இன்று ரொம்பவும்தான் திட்டிவிட்டேன்
என் பிள்ளைகளை
ரொம்ப செல்லம் கொடுக்கிறேன்
வீட்டுப்பாடம் செய்யாவிட்டால் சூழல் கேட்கிறேன்
நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அறிவுரை சொல்லி கல்வியின் பெருமையைச் சொல்கிறேன்
எப்போதும் விளையாட்டுப் புத்தி
கொஞ்சமும் பணிவு இல்லை
பணிவு கிடக்கட்டும்
ஓர் ஒழுக்கம் என்பது இல்லை
ஒரு சின்ன இடைவெளி என்றாலும்
சுற்றிக் குழுமி நின்று ஒரே சத்தம்
பாட தொடர்பான ஒரு வேலையும் அவர்கள் செய்வதில்லை
இன்று ரொம்பவும் தான் திட்டிவிட்டேன்

மௌனம் குடியிருக்கிறது
கரும்பலகையின் பக்கமிருந்து
திரும்பி குழந்தைகளைப் பார்க்கிறேன்
காணவில்லை அவர்கள்
அறைக்குள் எல்லா இடங்களிலும் தேடுகிறேன்
பீரோவில் பக்கவாட்டில் அடியில் மேசையின் அடியில்
புத்தகப் பைகளின் அடியில் அதனுள்
இப்படி எங்கும் தேடுகிறேன் அவர்களை
காணவில்லை
தேடலின் முடிவில்
என்னையும் காணவில்லை

குழந்தைகள் அடிக்கடி கிறுக்கிய சுவற்றில்
வண்ணங்கள் குறைகிறது
சாக்பீஸ்களின் துகள்கள்
கல்லறையின் மேல்விழும் பூக்களாக
உதிர்கிறது
வகுப்பறையின் இருள்
என்னவோ போலிருக்கிறது
உறங்கிக் கொண்டிருக்கும் மாரியப்பனின் தலையில் கொட்டிவிட்டு
அமைதியாக எதுவும் தெரியாதது போல் அமர்ந்திருக்கும்
சொக்கலிங்கம் நன்றாக படிப்பவன்
அவனை அழைக்கிறேன் எதிர்க்குரலில்லை
உள்ளே வரலாமா ஐயா குரலை அளிப்பவனான கருப்பசாமிக்கு
ம் ம் வாடா
என்கிறேன் குரல் வந்த திசையில் கருப்பசாமி இல்லை
வாய் மட்டும் அசைகிறது எனக்கும்
காலையில் உண்ணாமல்
வழிபாட்டுக் கூட்டத்தில் மயங்கி விழுந்த
ஹரிணி இப்போது பலத்த அரட்டை அடிக்கிறாள்
குச்சியைக் காட்டி அடி விழும் என்பதுபோல் பாவனை செய்கிறேன்
சிரிப்பவள் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறாள்
எப்போதும் என்னைப் பார்த்து குமரியைப் போல பேசும் விஷ்ணுப்ரியா சத்தமில்லாமல் அமர்ந்திருக்கிறாள்
ஏனென்று கேட்கிறேன்
சொல்லமுடியாது சார் இன்னிக்கு நீங்க எதுக்கு இவ்ளோ கோவமா இருக்கீங்க என்று கேட்டுவிட்டு ஓடுகிறாள்
ஒவ்வொருத்தனையும் குறை சொல்லும் நித்தீஸ் இப்போதும் பல குறைகளோடு வந்து நிற்கிறான்
எதுவும் கேட்கவில்லை
சார் இனி உங்களைத் திட்டல
நாளை முதல் நல்லா படிப்பீங்க தான
வீட்டுப் பாடம் சரியா எழுதிட்டு படிச்சிட்டு வருவீங்களா என்று கேட்கிறேன்
சரிங்க சார் என்று கட்டிடம் சிலிர்க்கும் அளவு குரலும் மின்னும் என் பிள்ளைகளும்...

உள்ளொலிக்கும் எங்கள் குரல்களையும்
கரும்பலகையையும்
உள்ளே திரியும் எங்கள் கடந்த கால வாழ்க்கையையும்
எப்படியாவது எங்கள் கைகளில் கொண்டு வந்து தாருங்கள்
வகுப்பறையைச் சுற்றிலும் நின்று நானும் என் பிள்ளைகளும்
கதறுகிறோம்
அல்லது
அறைக்குள் எப்போதும் எரியும் விளக்கொன்றை ஏற்றியாவது வையுங்கள்
நாங்கள் உள்ளேயே கற்றலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்...

யாழ் தண்விகா