ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்...
ப.நடராஜன் பாரதிதாஸ்
ஆதி பதிப்பகம்
பக்கங்கள் 96
விலை: ரூ 100
பேரக் கேட்டவுடனே சும்மா அதிருதில்ல என்பது போல் தொகுப்பின் தலைப்பே ஒரு கதாநாயகத் தன்மை அளித்துவிடுகிறது. கவிஞருக்கு வாழ்த்துகள்.
கவிஞர் EMS கலைவாணன் எழுதிய ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் தொகுப்பிற்குப் பின்னர் நாவிதர்களின் வாழ்க்கைப்பாட்டைக் கூறும் மற்றுமொரு கவிதைத் தொகுப்பு. சிறப்பாக அமைந்திருக்கிறது. இப்போதெல்லாம் ஒவ்வொரு கவிஞரும், ஒவ்வொரு கவிதையிலும் பூடகமாக சில விஷயங்களை உள்ளே வைத்து இருப்பார்கள் என நினைத்து அதை வாசித்து பொருளைப் புரிந்துகொள்ளும் முன்னர் தாவு தீர்ந்துவிடும் நவீன காலச் சூழலில் இதுதான் கவிதை. இதுதான் அது வெளிப்படுத்தும் கருத்து என்பதை வெட்டு ஒன்னு துண்டு இரண்டாக தொகுப்பில் வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர்.
பொதுவாக தொகுப்பை விமர்சனம் செய்யவோ மதிப்புரை செய்யவோ தொகுப்பிலிருந்து ஓரிரு கவிதைகளை மேற்கோள் காட்டுவது வழக்கம். இத்தொகுப்பைப் பொறுத்தவரை பெரும்பான்மைக் கவிதைகள் மேற்கோளாக எடுத்துக் கூறப்பட வேண்டியதாக அமைந்திருப்பது சிறப்பு. ஊரின் வரலாற்றைக் கூறி வளர்த்த பாட்டியிடம் நாவிதர்களுக்கான வரலாறை அறிய நினைக்கும்போது செத்துப் போனதால் அந்தப் பணியை தான் மேற்கொண்டிருப்பதாகக் கூறி தன்னுடைய முதல் கவிதையைத் தொடங்குகிறார். மனிதனை மனிதன் எப்போது மதிக்கவில்லையோ அப்போதே இங்கு பிளவுகளும் உண்டாகிவிட்டது. அதற்கு இனக்குழு, சாதி, மதம், பொருளாதாரம் எனப் பல காரணங்கள் இருக்கிறது. இருக்கிற எல்லாச் சாதியிலும் ஒவ்வொரு பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நாடகத்தில் துரியோதனன் பாத்திரத்தை ஏற்று நடிப்பவர்
“அண்டம் நடுநடுங்க ஆகாசம் கிடுகிடுங்க
கஜபலம் புஜபலம் பொருந்திய
என்னைப் பார்க்கின்ற தருணத்திலே
என் நாமதேயம் என்னவென்று தெரியுமாடா
அடேய்! காவலா” என்கிறார்.
அதற்கு கட்டியக்காரன் வேடம் தரித்த உள்ளூர் கோபால்,
“ஏன் தெரியாது
ஊடு ஊதா போயி செரச்சி
ஊருசோறு எடுத்துத் திங்கற
எங்க ஊரு அம்பட்டன்னு
நல்லாவே தெரியுமுங்க” என்றவுடன்
கூட்டமே கொள்ளென்று சிரித்தது.
“அன்றிலிருந்து வேசம் கட்டுவதே இல்லை அய்யா” என்று கவிதையை முடிக்கிறார் கவிஞர். சாதியின் எகத்தாளத்தை இவ்வளவு நேர்மையாகப் பதிவு செய்வது அரிது. ஆனால் அதனைச் செய்திருக்கிறார் கவிஞர்.
சுயசாதிப் பகடி பல கவிதைகளில் நர்த்தனம் ஆடுகிறது. ஊரில் யார் வீட்டில் இழவு விழுந்தாலும் ஊர் பண்டிதர் பழனி சாங்கியம் செய்தால் செத்தவன் சொர்க்கத்துக்குப் போவான் என நினைக்கும் ஊரில்
“அவர் செத்த அன்னிக்கு
நாலு ஊரு நாவிதனும்
கோமணம் போறது தெரியாம குடிச்சிட்டு
நாலு ஊரு சாங்கியம் சடங்குகளையும் செய்து
நாசகோசம் செய்தார்கள்.
அய்யா கடைசில
சொர்க்கம் போனாரா
நரகம் போனாரான்னு தெரியல’’ என முடிகிறது கவிதை. நாங்க ஆண்ட சாதி, அப்படி இப்படி என்று பறைசாற்றும் வேளையில் (மருத்துவர் என்றும் நாவிதர் என்றும் அழைக்கப்படும் சமூகம் அப்படிச் சொல்லுவதற்கும் உண்மைக் காரணங்களை அடுக்கும் கவிதைகளும் உண்டு) ஒரு இறப்பின் வாயிலாக இன்றைய தலைமுறை குடிக்குள் சிக்கிக் கிடப்பதைக் காட்சிப்படுத்தியுள்ளார் கவிஞர்.
காலமெல்லாம் அடிமைப்படுத்தி வைத்திருந்த ஒருவனின் தலைமுறை அவனைப்போலவே இருக்கவேண்டும் என்று சட்டமா என்ன? அப்படி அடிமைப்படுத்தி வைக்க அவன்மேல் வைக்கப்பட்ட புனித பிம்பங்கள்தான் எத்தனை எத்தனை? தொடர்ச்சியாக பல பாராட்டுகளைச் சொல்லிக்கொண்டு வரும் கவிஞர் இறுதியாக
“அடிச்சாலும் வாங்கிக்குவான்
புடிச்சாலும் தாங்கிக்குவான்
ஆந்தாந்து பேசிக்கொண்டார்கள்
அய்யாவின் சாவிற்குப் பிறகு
இப்படிப்பட்ட நாவிதனைத்தான்
தேடிக்கொண்டிருக்கிறது
எங்க ஊர்”
எப்படிய்யா கிடப்பான் இக்காலத்தில். கிடைக்கமாட்டான். கிடைக்கவேண்டிய கட்டாயமும் இல்லை என்றுணர்த்துகிறது வரிகள்.
எல்லா ஊரிலும் சுடுகாட்டில் குழி தோண்டுவது, கொள்ளிச் சட்டி உடைச்சு விடுவது, இறந்தவனின் வாரிசுக்கு மொட்டை எடுப்பது போன்ற பலரை நடத்தும் விதமும் அவர்களுக்கு கேட்கும் பணத்தைக் கொடுக்காமல் மிகச் சொற்பமான தொகையைக் கொடுப்பதும் சுடுகாடு வரை போய்வரும் நபர்களுக்கு நன்றாகவே தெரியும். அதை
“கட்டளைக்காசு ஏத்திக் கொடுங்கன்னா
கட்டளைக்காசுக்கு கள்ளநோட்டுதான்டா அடிக்கணும்
என்றார்கள் ஊர்க்காரர்கள்.
பதினோராம்நாள்
கல்தொரையில்
அய்யர் கேட்கும்போதெல்லாம்
கேட்டா கேட்ட காசு
அம்பது நூறுயென அவுத்து அவுத்து கொடுத்தார்கள்.
ஊர்ல கள்ளநோட்டு
அடிக்க ஆரம்பிச்சிட்டாங்கபோல” என்கிறார். ஆள் பார்த்து பட்டுவாடா செய்யப்படும் பணத்தைப் பற்றியும் அங்கு நாவிதர்களைப் படுத்தும்பாட்டையும் உள்ளது உள்ளபடியே கூறியுள்ளார் கவிஞர்.
ஊர்க்காரங்களுக்கு முடிவெட்ட ஆள் வேணும் என்பதற்காக சொல்லும் பசப்பு வார்த்தைகளை நம்பக்கூடாது என்பதை மகனுக்குக் கூறுகிறார் ஒரு தந்தை இப்படியாக.
“நீதான் வெட்டணும்
நீயேதான் மீசை வைக்கணும்
உங்கப்பனைவிட நீயே சூப்பர் டக்கருன்னு
பிஞ்சு மனசுல நஞ்ச விதைப்பார்கள்
நம்பிடாதே மகனே
பதினைந்து வயதில்
என்னை படிப்பை இழக்கச் செய்தது
இதே உசுப்புதான்
இதே பசப்புதான்...”
32வது கவிதையில் முதல் பத்தியில் சனாதன நபர்களைப் பற்றிக் கூறுவது போலவும் இரண்டாம் பத்தியில் கம்யூனிஸ்ட் நபர்களைப் பற்றிக் கூறுவது முரணாக இருப்பதாகப் படுகிறது. ஒரு ஆறையே ஆட்டையப் போட்ட அரசியல்வாதியைப் பற்றிய கவிதை அபாரம். இப்படிப் பல கவிதைகள். சமகால அரசியலையும் உள்வாங்கிப் பேசும் கவிதைகள்.
வாழ்த்துகள் தோழர் ப.நடராஜன் பாரதிதாஸ்.
மீண்டும் ஒரு கவிதை...
“நாங்கள் பேசாத
அரசியல் இல்லை
எங்களைப் பேசும்
அரசியல் தானில்லை
டீக்கடை வச்சா
முதல்வராக முடியுது
பிரதமராக முடியுது
சவரக்கட வச்சவனுக்கு
சாகரவரைக்கும்
ஒரு வார்டு மெம்பருக்குக் கூட
வக்கில்லையோ”
ஜனநாயகத்தின்மேல் கல்லெறியத் தேவையற்ற ஒரு சூழலை எந்தச் சமூகமும் பெறவேண்டும். அதற்கு, எல்லாம் எல்லா மக்களுக்கும் கிடைக்கவேண்டும். அதுவரை தோன்றட்டும் இது போன்ற புரட்சிக் கவிதைகள்.
யாழ் தண்விகா
No comments:
Post a Comment