💝
இது வேறு மாதிரியான மழை
இது வேறு மாதிரியான சாரல்
இது வேறு மாதிரியான காற்று
இது வேறு மாதிரியான குளிர்
இது வேறு மாதிரியான நெருக்கம்
இது வேறு மாதிரியான அணைப்பு
இது வேறு மாதிரியான நெருப்பு
இது வேறு மாதிரியான மீள்தல்...
இன்னும் தூறல்
நிறைவுறுவதாக இல்லை...
💝
ஒரு நெருக்கத்தை
முழுதும் அறியும் முன்னரே
வந்து விழும் பிரிவு
உடைத்து விடுகிறது உயிரை...
💝
பிறவிகள் தோறும்
உன் காதல் வேண்டாம்
அதில் நம்பிக்கையில்லை
உன்னைக் காணும் பொழுதெல்லாம்
பிறவிகள் எடுத்துக்கொள்கிறேன்...
💝
உன் வாசனையை
என்னுள் நிரப்பு
உயிர் மணமற்றுக் கிடக்கிறது...
💝
விரிந்து கிடக்கும்
வானமாகிப் போகிறோம் நாம்
நம்முள் கிடக்கிறது
சூரியனும்
நிலவும்
நட்சத்திரங்களும்...
💝
மழை
மண்ணைக் குளிக்க வைத்தல் போல
என்னை குளிக்க வைத்தாய்
சொட்டுச் சொட்டாக...
💝
உனக்கு நினைவிருக்கிறதா
நான் உறங்கும் முன்
எனக்கு நீ முத்தமிடுவது...
இப்போது
உயிருக்கு முத்தமிடு
அது நிரந்தரமாக
கண்ணுறங்கக் காத்திருக்கிறது...
💝
சிக்கிமுக்கிக் கல் உரசல்
நெருப்பைக் கொண்டு வரும் என்றால்
நம் இதழ் உரசலில் பூப்பது
என்னவாக இருக்கும்...
💝
அதீதங்களின்
மனித அசல்
நீ...
💝
ஒன்று நன்றாய் அறிவேன்...
உன் காதல் இல்லாவிட்டால்
நானெல்லாம்
நடைபிணம் என்பதன்
அருஞ்சொற்பொருளாயிருப்பேன்...
💝
செத்துவிடத் தோணும்
கணங்களனைத்தும்
உன் நினைவு
கை பிடித்து இழுத்து வந்து
காதலால் அறைகிறது
உடலெங்கும்...
💝
பூக்களின் தேசத்து
தலைமை மலர் நீ...
பூக்களைத் தொடாதீர்கள்
என்ற பதாகையைத்
தாங்கியிருக்கும்
சிறு குச்சி நான்...
💝
என்றும் உன்னைத் தவிர்த்து
என்னைத் தனியாக
நினைத்துப் பார்க்கமாட்டேன்
நான் செத்தாலும்
அதுதான் நிஜம்...
நான் செத்தாலும்
அதை நீ நம்பமாட்டாய்
அதுவும் நிஜம்...
💝
இந்த வாழ்வு தெளிந்த நீரோடை
என்று சொல்லிக்கொண்டிருந்த
காலங்கள்தான்
காதல் வந்த பிறகு
சுழற்றியடிக்கும் வெள்ளமென
இந்த வாழ்வை மாற்றியமைத்தது
அதில் எந்த இடம் எனக்கு
என எனக்கே தெரியாமல்
ஒரு சருகென
என்னைத் தூக்கியெறியவும் செய்தது...
💝
இந்தக் கவிதை
எழுதும்போது
நீ என் அருகில் இல்லை
நான் உன் அருகில் இல்லை
அதனால்தான்
நினைவுகளின் காயங்கள்
இதனை எழுதிக்கொண்டிருக்கிறது...
யாழ் தண்விகா
No comments:
Post a Comment