❣️
என் வனத்துப் பச்சையம் நீ.
❣️
கர்த்தர் பிடிக்கும் உனக்கு.
ஆதலால்
உனக்குள் என்னை
நான் அறைந்து கொண்டேன்.
❣️
நீ பேசப்பேச
இந்தவானம்
மேகமசைத்துச் சிலிர்க்கிறது.
❣️
நாளொருமேனியும்
பொழுதொரு வண்ணமுமாக
மெருகேறுகிறது உன்அழகு.
வைத்த கண் மாறாமல்
கன்னத்தில் கைவைத்து
வேடிக்கை பார்க்கிறது காதல்.
❣️
உன் காலடியில் தொடங்கி
கண்களில் முடிகிறது
என் அபிசேகம்.
❣️
மிச்சமிருக்கும் வாழ்வையும்
வாழ்ந்து தீர்க்கவே
இச்சுவாசம்.
உன்னோடு வாழ்ந்தால்
தீர்வதா இவ்வாழ்வு...!?
❣️
ஒரு வனாந்தரத்தின்
மரங்களினிடை புகுந்து வரும்
வெளிச்சம் போல
நாம் வாழ
இப்பிரிவிருளினிடையே
ஒரு வரம் வந்து சேராதா
நம் காதல் கரங்களில்...
❣️
உன்னைக் கரம்பிடித்தேன்
வாழ்தலுக்கு உயிர் கிடைத்தது
❣️
என்னிலென்ன எறிந்தாயோ தெரியாது
சுற்றிப்படர்ந்த அலைகளில்
மின்னுகிறது
உன் முகம்
❣️
ஆண்டுகள் கடக்கக்கடக்க
வைரம் பாய்ந்த மரம் உருவாகிறது.
நாம் காதல்பாய்ந்த ஜீவன்கள்.
வாழமாட்டோமா
வாழ்வின் எல்லைவரை.
❣️
தொடுகிறேன்
கவிதையாக
சிலையாக
ஓவியமாக
சிறுகதையாக
இசையாக
நாவலாக
நடனமாக
...
ஏதேனும்
ஒன்றாகி விடுகிறாய்.
மாறாமல் நீயாயிரு
காதல் பேசவேண்டும்.
❣️
உன் திசையில்
எனக்கான வானவில்
❣️
உன்னழகு
என்னைப் பைத்தியமாக்கவும்தானா?
❣️
நீ பேசுவாய்
நான் மிதப்பேன்
❣️
என் கவிதைகளின்
பாடுபொருள் நீ
❣️
உன்னிலிருந்து
உதிரும் அழகுகளை எழுத்தாக்கிக்
கவிதை என்கிறேன்.
கவி நீதான்.
நானில்லை...!
யாழ் தண்விகா
No comments:
Post a Comment