Sunday, 24 July 2022

பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு

 



பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு

புலியூர் முருகேசன்
தோழர் புலியூர்

சிறுகதைத் தொகுப்பு

ஆம்பிரம் பதிப்பகம்

விலை ரூ 150/= பக்கங்கள் 206

மொத்தம் 13 சிறுகதைகள். வாழ்க்கையிலிருந்தே இந்தக் கதைகள். கதைகள் என்பதை விட வலிகளை உண்டுபண்ணும் காட்சிகள் ஒவ்வொரு கதையிலும். பல கதைகளில் என்னைப் பொருத்திக்கொண்டு வாசித்தேன். கண்ணீர் மல்கச் செய்தன, துரோகங்களைக் காட்சிப்படுத்தின, அரசியல் கதை சொல்லியது, திருநங்கை குறித்த கதை என ஒவ்வொன்றும் சிறப்பு.

சங்கர் சங்கர் சங்கர் சங்கர் சங்கர் மற்றும் இன்னுமொரு சங்கர் முதல் கதை. கடன் கேட்டுச் செல்லும் ஒருவனை இந்தச் சமூகம் எப்படி எல்லாம் வதைக்கிறது, அவனை தனக்கு எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறது என்பதைக் கூறுகிறது. நானும் பல சங்கர் பார்த்திருக்கிறேன். சங்கர் என்ற பெயரைப் பொருத்தித் திரியும் பலர் எனக்கும் நண்பர்களாக இருக்கிறார்கள். சொல்லி வைத்தாற்போல் தற்போது என்னிடம் பணம் இல்லை என்று கூறுவார்கள். தன்மானத்தை, மானம், ரோஷத்தை அடகு வைத்து அவர்களிடம் கூனிக் குறுகி நிற்கும்போது அவர்களின் பதில் எவ்வளவுக்கெவ்வளவு விட்டேத்தியாக இருக்கும் என்பதை இவ்வளவு தெளிவாக இதற்கு முன்னர் நான் வாசித்த கதைகளில் கண்டதில்லை. கடன் கேட்பவர்களை விட கடன் கொடுப்பவர்கள், கடன் கொடுக்க இழுத்த்டிப்பவர்கள் தங்கள் முகத்தைக் காண இந்தக் கதையை அவசியம் வாசிக்கலாம். 

செவப்புக்காய் வாயூறும் கதை தனித்துவம். ஊரே பெரும் களவாணித்தனம் செய்யும் சூழலில்,  அன்றாடங்காய்ச்சிக்கு மட்டும் பசி பூக்க அவர்கள் செய்யும் சிறு தவறுக்கும் பெறும் தண்டனை அளிக்கும் இந்த சமூகத்தின் மேல் காறித் துப்புகிறது கதை. கேரளா மது அடித்துக் கொல்லப்பட்டது நினைவுக்கு வந்துபோனது.

வட்டாரத்துக் கோடி கதை கண்ணீர் வரவழைத்தது. அன்பிற்காக இந்த உலகம் இயங்குதலை அழகாக, வலியோடு காட்சிப்படுத்தியுள்ளது. நாடார், பள்ளர் இரு சமூகத்தைச் சார்ந்த நண்பர்கள், அவர்கள் நட்பாக மாறிய கதை. அய்யாவுக்கும் ஆண்டிக்கும் பூத்த நட்பு இறப்பு வரை நீடிக்கிறது. அய்யாவு வீட்டில் அய்யாவு சாப்பிட்ட கும்பாவில் ஆண்டி உண்ணுவதும் ஆண்டி வீட்டில் பன்றிக்கறியை அய்யாவு உண்ணுவதும், தனது சமூகத்தால் ஆண்டி தூண்டிவிடப்பட்டு சிலம்பாட்டத்தில் அய்யாவுவை வெறி கொண்டு தாக்கும்போது அதை நட்பிற்காக நாசூக்காகக் கையாண்டு இறுதியில் இருவரும் கட்டி அணைத்துக்கொள்வது என்று கதை நட்பு பேசுகிறது. வறுமை அவர்களின் குடும்பத்தைச் சினம் கொண்டு தாக்கியபோதும் நீளும் நட்புக் காட்சிப்படுத்தல் அருமை.

வெயிற்கால மழைப்பூச்சி, பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு ஆகிய கதைகள் சங்கர மட கொலை, புலி பிரபாகரனின் இளவல் பாலச்சந்திரன் கொலை  குறித்துப் புனைவாகப் பேசுவது போல அதன் பின்னால் உள்ள அரசியல் பேசுகிறது.

சிங்கம் புராஜெக்ட் கதை பணம் வாங்கி கல்வியை விற்கும் நிறுவனங்களைச் சாடுகிறது. பகடியாகவும் அதே சமயம் மக்களை ஏமாற்றும் மாய வித்தைக்காரன் போலவும் இந்த நிறுவனங்கள் செயல்படுகிறது என்பதை தோலுரித்துக் காட்டுகிறது.

பாதி எரியூட்டப்பட்ட பாடலை மதுக்கோப்பையில் பருகுபவன் ஸ்வர்ணலதா பாடல்களை வியக்கும் தருணங்களைக் கூறிச் செல்கிறது ஒருபக்கம். மறுபக்கம் ஒரு எல் ஐ சி பாலிசி எடுக்க ஏஜெண்ட் படும் அவஸ்தையைப் பற்றிப் பேசுகிறது. கதையில் சொல்வது போல நிறுவனத்தில் உள்ளவர்கள் தனக்குப் பிடித்தவர்களிடம் சொல்லி தெரிந்தவர்களை தொடர்புகொள்ளச் செய்வது, தனக்குப் பிடித்த உறவுக்காரர்கள், சாதிக்காரர்களுக்கு கமிஷன் கிடைக்க வழி செய்வது, அரசுப்பணி செய்யும் ஒருவர் தன்னுடைய இணையரை ஏஜெண்ட் ஆக்கி அவர்களுக்கு உழைப்பது, முழுநேரப் பணியாக குடும்பத்தில் ஒருவர் ஏஜெண்ட் ஆகப் பணி செய்யும்போது அவர்களின் வாழ்வில் மண்ணள்ளிக் கொட்ட மேற்சொன்னவர்கள் போதாதா... 

ஐ சி ஐ சி ஐ வங்கிக்கு தினமும் வந்து திரும்புபவள் கதை ஊரில் மறக்கப்பட்ட நீலவேணி அக்காக்கள் பற்றிய கதை. பைத்தியம் என்று ஏறக்கட்டும் சமூகம் அவர்களின் பின்னால் உள்ள வலியை என்றாவது தேடியிருக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லவேண்டும். இக்கதை அதைத் தேடியிருக்கிறது. கட்டிக்கொடுத்த இடத்தில் நிகழும் பாலியல் வன்முறை, அதனால் தீக்குளிக்கும் பெண், மாமனாரின் பாலியல் வக்கிரம் எனப் பேசுகிறது. கடைசியாக, கால மாற்றத்தில் பேருந்து நிலையம் இருந்த இடம் வங்கியாக மாற்றப்படும்போது இந்தச் சமூகத்தால் பைத்தியம் என்று கூறப்படுபவள் மேலும் எப்படி வஞ்சிக்கப் படுகிறாள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. 

நான் ஏன் மிகை அலங்காரம் செய்துகொள்கிறேன் கதை திருநங்கையாக உருமாறிய ஒருத்தியின் குடும்பத்தில் தந்தையானவன் சுப்பிரமணி என்ற பெயருடைய அவளுக்குச் செய்யும் பாலியல் கொடுமை பற்றியும், மூக்குத்தி காசி கதை திருநங்கை சந்திக்கும் பாலியல் வன்கொடுமை, அவற்றிற்கான எட்டப்படாத தீர்வு, எள்ளி நகையாடும் சமூகம் பற்றிப் பேசுகிறது.

குறிச் சிலம்பாட்டம் கதை நவீன உலகின் இயந்திரத் தனமான அலுவலக வேலைகள் அதற்காக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் குறித்துப் பேசுகிறது. யாகக் குண்டத்தில் பால் ஊற்றி எரிக்கப்பட்ட நைலான் கொசுவலை கதையும், நிலத்தின் அடியிலும் வனங்கள் பரவக்கூடும் என்ற இரு கதைகளும் நட்புத் துரோகம் குறித்துப் பேசுகிறது. அதிலும் நிலத்தின் அடியிலும் வனங்கள் பரவக்கூடும் என்ற கதை துரோகத்தின் உச்சம். எப்படிப்பட்ட சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை அறிய இக்கதை உதவும்.

ஒவ்வொரு கதை குறித்த சிறு குறிப்பாக வேண்டுமானால் இவை இருக்கலாம். ஆனால் கதை வாசிக்கும்போது அந்த வலியை நாம் அனுபவிப்பதுபோல மொழி நடை அமைந்திருக்கிறது. வாழ்க்கையைப் பதிவு செய்யும் கலையை நூலாசிரியர் அறிந்திருக்கிறார் என்று கூறுவதைவிட வறுமையை, மனிதம் விரும்பாத இந்த உலகின் முகத்தை, திருநங்கைகள் சந்திக்கும் பாடுகளை, ஒவ்வொரு மனிதனின் மறுமுகத்தை அதன் அதன் வலியை அவரவர் சொற்களில் பதிவுசெய்திருக்கிறார் தோழர். 

வாசிக்கவேண்டிய தொகுப்பு.
வாழ்த்துகள் தோழர்.

யாழ் தண்விகா


No comments:

Post a Comment