Sunday, 22 September 2024

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்

 


எந்த திட்டமானாலும் 

எனக்கான உரிமையானாலும் 

நீள்சதுர டப்பாவில் 

அடர் ஊதா மையில் பெருவிரல் அழுத்தி 

சொல்லும் இடத்தில் அச்சுப்பதிக்கவேண்டும் 

சில நேரங்களில் அதற்கும் வாய்ப்பற்று 

என் விரலைப் பிடித்து 

எதிரில் நிற்பவர் 

அவர் விரும்பும் இடத்தில் 

முன்னும் பின்னுமாக உருட்டி 

விரலை அச்செடுப்பார்கள் 

அது விரல் அச்சல்ல 

என் அறியாமையின் மேல் 

விழுந்து கிடந்த 

அவல அடையாளம் கல்லாமையினால் பூத்திருந்த கண்ணீர்ப் படிமங்கள் 


என் வாழ்க்கைக்கு,

நீங்கள் சொல்லும் அறிவுரை.

என் வயலுக்கும், 

நீங்கள் சொல்லும் உரம். 

என் வயிற்றுக்குக் கூட, 

நீங்கள் கைகாட்டும் அரிசி.

எல்லாம் கிடைத்தது,

என் விருப்பம் தான் 

எங்கும் இல்லாமல் போனது.


கீறல் என்று எழுதி 

என் பெயரை 

என் கைநாட்டுக்குப் பின் 

யாரோ ஒருவர் எழுதிக் கொள்ள எப்படிச் சம்மதித்தது மனது?

யாரோ ஒருவரின் குரலில் 

தன்மானம் கூசச் செய்யாமல் 

எப்படி என் காதுகள் கேட்டன செய்தித்தாளின் வரிகளை புத்தகத்தின் வரிகளை அழைப்பிதழ்களின் வரிகளை...?


புதிய பாரத எழுத்தறிவு திட்ட அழைப்பு

வெட்கம் பூக்கப் பூக்கத்தான் 

களம் செல்ல எத்தனித்தேன் 

தயக்கம் அழுத்த அழுத்தத்தான் வேண்டாம் எனத் தயங்கியும் நின்றேன் 

காலம் போன கடைசியில் என்ற பரிகாசம் கேட்க கேட்கத்தான் கொஞ்சம் பம்மிக் கொள்ளவும் செய்தேன் 


வாழ்வின் அந்திமக்காலத்திற்குள் முடிந்தளவு 

என்னை நான் எழுத படிக்க 

உங்களை நான் எழுத படிக்க 

இதை விட்டால் வேறு கதி என்ன...?


மெல்ல மெல்ல அறியாமைப் படிகளைக் கடந்தேன் தன்னார்வலர்களும் 

கல்வித்துறைப் பெருமக்களும் கத்தியின்றி இரத்தம் இன்றி புத்தியில் செய்த பெரும் புரட்சி 

சீரியதோர் சிகிச்சை

கல்விக்கண்ணைத் திறந்து வைத்தது


புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கரங்களை 

இன்னும் ஆதுரமாகப் பற்றிக் கொண்டேன் 


வாசிக்க வாசிக்க 

உணர உணர 

கல்வி சுகம் 

கடல் சுகம் 

வானம் சுகம் 

பூமி சுகம் 

இயற்கை சுகம் 

ஆறறிவு சுகம் 

மனிதம் சுகம் 


இரு கண்ணின் ஒளியுடன் 

இன்று மூன்றாவது கண்ணும் 

பிறந்து விட்டது 

எதிர்ப்படும் 

எல்லோரிடமும் சொல்கிறேன் உலகைப் படிக்க 

உன்னைப் படிக்க 

முதலில் படி 

படிக்கும் வயதில் படி


பாதைகள் திறக்கும் 

வாழ்வு சிறக்கும் 


வாய்ப்பிற்கு நன்றி 


இப்படிக்கு 

நேற்று வரை ஏய் பெருசு 

என்று அழைக்கப்பட்ட 

அமரர் கதிர்வேல் மகன் 

திரு. கா. பெரியசாமி.

இளமையிலேயே கற்று இருந்தால் இன்னும் கெத்தாகச் சொல்லி இருக்கலாம் 

இப்படிக்கு 

உயர்திரு கா. பெரியசாமி 

மாவட்ட ஆட்சியர் என்று கூட...


///புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட மண்டல அளவிலான போட்டியில் "வாசிக்க" எழுதிச் செல்லப்பட்ட கவிதை வரிகள். கற்போரும் கற்பிப்போரும் ஆர்வ மிகுதியால் மேடையை ஆக்கிரமிக்க, அவர்களுக்கு வழிவிட்டு... இந்த வரிகள் இந்தப் பக்கத்தில்...///


பெ.விஜயராஜ் காந்தி

@ யாழ் தண்விகா

பெரியகுளம்.


❣️

Saturday, 17 August 2024

அறிவே கடவுள் - வைரமுத்து

 


அறிவே கடவுள்


வைரமுத்து


NCBH வெளியீடு


35 ரூ 40 பக்கங்கள்


08.08.2017ஆம் தேதி ஈரோடு புத்தகத் திருவிழாவில் வைரமுத்து அவர்கள் ஆற்றிய உரை. மிகச் சமீபமாக பெரியகுளத்தில் தென்கரை நூற்றாண்டு நூலக விழாவில் கலந்துகொண்டு நூலக மலரை வெளியிட்டுப் பேசினார். இதற்கும் சில மாதங்களுக்கு முன்னர் தேனி புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்டு பேசினார். தெளிந்த நீரோட்டம் போல அங்கும் இங்கும் திசை மாறும் போக்கில்லாமல் அமைந்த பேச்சு. அதே போன்றதொரு உரை தான் 2017லிலும். அவரின் ஒவ்வொரு பேச்சும் இது போலத்தான் இருக்கும் என்பதை ஒப்பிட்டு உணரக் கிடைத்த வாய்ப்பு.


மிக எளிமையான சொற்கள். புரிந்து கொள்ளக்கூடிய வகையிலமைந்த மிக எளிய கதைகள். மிக அழகான தமிழ். ஒரு பேச்சு, கேட்பவரையும் படிப்பவரையும் சென்று சேர இதைவிட வேறு வகையில் பேசிவிட முடியாது. பெரும் குரலெடுத்து கத்துவது, உணர்வுகளைத் தூண்டுவது, பிறரைக் காயப்படுத்துவது என எந்தத் தொனியும் இல்லை. தலைப்பிற்கு, சமூகத்திற்கு நியாயம் செய்யும் பேச்சு. அறிவே கடவுள் என்ற நூலிலும் பேச்சை எழுத்தாக்கியதை வாசிக்கும்போது அதைக் காணலாம்.


கடவுள் உள்ள இடத்தில் அறிவுக்கு வேலை இருக்காது. அறிவினுள்ள இடத்தில் கடவுளுக்கு வேலை இருக்காது. அறிவு வினாக்களை உண்டு பண்ணும். அறிவு வினாக்களுக்கு பதிலைக் கொணரக் கொணர அங்கிருக்கும் கடவுள் பின்னால் நகர்ந்து செல்வார். அறிவுதான் கடவுள் என்பதைச் சொல்கிறது நூல். 


கலைஞரிடம் ஒருமுறை யார் பெரிய தயாரிப்பாளர் என்ற கேள்வி சில தயாரிப்பாளர்களின் பெயர்களைச் சொல்லி முன்வைக்கப்பட்டது. அவர் சொல்கிறார் மனிதன்தான் உலகில் மிகப்பெரிய தயாரிப்பாளர். ஏன் என்றதற்கு பதில் " அவன்தானே கடவுளையே தயாரித்தான்". வியக்க வைக்கும் பதில். புத்தக வாசிப்பையும், கேட்கும் தன்மையையும் அதிகரிக்க இது போன்ற பேச்சும் உதாரணங்கள் எவ்வளவு அவசியம். இதை பலரிடம் காணவும் முடியாது. சில நிமிடங்களிலேயே அங்கும் இங்கும் திரும்பி கூட்டத்தினரை வேடிக்கை பார்க்க வைத்து விடும் பல பெரிய பேச்சாளர்கள் பேச்சு. எம் தேனி மண் தந்த கவிஞரின் பேச்சு அவ்வகைப்பட்டதல்ல என்பதில் எங்களுக்கு பெரும் மகிழ்வு.


அக்பர் - பீர்பால் இருவரிடம் வரும் புலவன் முன்வைக்கும் கேள்விக்கு பீர்பால் அளிக்கும் பதில்கள் கண நேர அறிவுச் செயல்பாட்டிற்கு அவ்வளவு பொருத்தம். அறிவையும் பயன்படுத்த வேண்டும். அதே சமயம் எதிராளியை அவர் தம் தவறு உணரச் செய்ய வேண்டும். இரண்டையும் செய்கிறது சில உதாரணங்கள். பாரதியார் 11 வயதில் புலவர் பட்டம் பெற்றதைத் தாங்கவியலாத காந்திமதி நாதன் என்பவர் பாரதி சின்னப்பயல் என்னும் ஈற்றடி வருமாறு ஒரு பாடல் பாடச் சொல்கிறார். பாரதியை அவர் வாயாலேயே சின்னப்பயல் என ஒத்துக்கொள்ள, சொல்ல வைக்க செய்யும் செயல். பாரதி கேள்வி கேட்டவரையே பாடலின் உள்ளிழுத்து அவரை மூக்குடை பட வைப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய புலமைத் தன்மையையும் வெளிக்காட்டிய பாடல் நினைவில் வந்து போனது.


பெர்முடா முக்கோணம், கடலில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள், விக்கிரமாதித்தன் கதை என பல உதாரணங்கள் வாயிலாக சொல்லும் கருத்துகள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை. முக்கியமாக கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள். மூன்றாம் உலகப்போர் என்பது கவிஞர் எழுதிய நூல். அதில் ஒரு பறவையின் வெற்றி எதில் இருக்கிறது என்ற கேள்வி எழுப்பி இருப்பேன். அடையும் இலக்கா? பறக்கும் வேகத்திலா? எந்தக் கூட்டத்தோடு பறக்கிறது என்பதிலா? எதிலும் இல்லை. மொத்த வானத்தையும் மறக்கடித்து தன்னை மட்டும் கவனிக்கச் செய்யும் வித்தையில் தந்திரத்தில் இருக்கிறது என்று பதில் சொல்லியிருக்கிறேன். அது போல கோடி கோடி மக்கள் வாழும் உலகில் நீங்கள் கவனிக்கப்பட இந்த யுகம் அறிவை முன் வைக்கிறது. ஆக, நீங்கள் அறிவை நோக்கி பயணம் செய்யுங்கள் என்ற வார்த்தை எவ்வளவு நேர்த்தி...


இன்னும் நிறைய தகவல்களுடன் கூடிய அருமையான புத்தகம்.

வாசியுங்கள். 

வாழ்த்துகள் கவிஞருக்கு.


யாழ் தண்விகா 


❣️


Friday, 26 July 2024

குழந்தைமையைக் காவு கேட்கும் பள்ளிக்கூடம்




குழந்தைமையைக் காவு கேட்கும் பள்ளிக்கூடம்

எதை நோக்கிக் கல்வித்துறை செல்கிறது என்றே தெரியவில்லை. பள்ளியையும், பயிலும் குழந்தைச் செல்வங்களையும் விரட்டி விரட்டி அடிக்கத் தொடங்கிவிட்டது அரசின் கொடுங்கரங்கள். புதிய கல்விக் கொள்கை / தேசிய கல்விக் கொள்கை இதெல்லாம் இல்லை என்று சொல்லிக்கொண்டே என்னென்ன வகையில் குழந்தைகளை கொடுமை செய்யலாம் என்றெல்லாம் பயிற்சி எடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட வினா போல இருக்கிறது மூன்றாம் வகுப்பிற்கு இணைய வழித் தேர்வில் கொடுக்கப்பட்ட வளரறி மதிப்பீடு வினாத்தாள். ஒரு பானை சோற்றுக்கான ஒரு உதாரணம் மட்டும். என்னது மூன்றாம் வகுப்பிற்கா? வாயைப் பிளக்காதீர்கள். ஒன்றாம் வகுப்பிலிருந்து தொடங்கிவிடுகிறது அந்தத் தேர்வுகள். 

என்ன கவலை பெற்றோருக்கு? அவர்கள் உயர்தர கல்வியைப் பெற பள்ளியில் சேர்ந்து இருக்கிறார்கள். அதைக் கற்றுக் கொடுப்பது தானே ஆசிரியர் கடமை? ஆமாம். கற்றுக் கொடுப்பது தான் கடமை. அதையும் வழிகாட்டும் வகையில். திணிப்பதை கல்வி என்று சொல்வது அநியாயம் அல்லவா? அதையல்லவா இந்த சமூகம் எதிர்பார்க்கிறது...! சரி. சொல்லிக் கொடுத்துவிடலாம் என்றால் கற்பிக்கும் பணி மட்டும்தான் ஆசிரியருக்கு இன்றைய காலகட்டத்தில் அரசு வழங்குகிறதா? காலை முதல் மாலை வரை மட்டுமல்ல. விடுமுறையிலும் எப்படியெல்லாம் ஆசிரியர்களுக்கு வேலை தரலாம் என்பதைச் சொல்ல ஒரு குழுவே இருக்கும்போல. எண்ணும் எழுத்தும் திட்டம் வந்தபிறகு இன்னும் கொடூரம். ஒருபுறம் ஆசிரியர் கையேடு. மாணவனிடம் பயிற்சி நூல். மேலும் பொதுவாக பாடநூல். மூன்றின் நடுவில் நின்று தலையைச் சுழல விடுவது எவ்வளவு பெரிய பராக்கிரமம் தெரிந்த ஆசிரியராலும் இயலாத காரியம். கடந்த வாரம் பள்ளியில் வைத்த மூன்றாம் வகுப்பு தேர்வு வினாக்கள். 

Class 3 Mathematics Chitra M
(985987629790) 

SKIP TO NEXT STUDENT 

Q 1
Q1(0)
மூலை விட்டங்கள் கொண்ட இரு பரிமாண வடிவங்களைத் தேர்ந்தெடு
O சதுரம் & செவ்வகம்
O செவ்வகம் & வட்டம்
O முக்கோணம் & வட்டம்
O சதுரம் O வட்டம்

Q1(1)
மூலை விட்டங்கள் இல்லாத இரு பரிமாண வடிவங்களைத் தேர்ந்தெடு
சதுரம் & செவ்வகம்
செவ்வகம் & வட்டம்
முக்கோணம் & வட்டம்
சதுரம் & வட்டம்

Q2
Q2(0)
கொடுக்கப்பட்டுள்ள முப்பரிமாண உருவத்தில் உள்ள முகங்கள், விளிம்புகள் மற்றும் முனைகளின் எண்ணிக்கையைக் கூறுக
(கனச்செவ்வக வடிவம்)
8 முகங்கள் 12 விளிம்புகள் மற்றும் 6 முனைகள்
6 முகங்கள் 12 விளிம்புகள் மற்றும் 8 முனைகள்
12 முகங்கள் 8 விளிம்புகள் மற்றும் 6 முனைகள்
1 முகம் 0 விளிம்புகள் மற்றும் 0 முனைகள்

Q2(1)
விளிம்புகள் மற்றும் முனைகள் அற்ற, ஒரு வளைதள முகம் மட்டும் கொண்ட முப்பரிமாண உருவம் எது?
கன சதுரம்
கன செவ்வகம்
கோளம்
கூம்பு

வாசித்து யோசித்து சரியான பதில் சொல்லும் அனைவரும் இது குழந்தைகளுக்கு ஏற்றதா என்பதைச் சொல்லுங்கள். பதில் அளிக்கத் தவறும் நபர்கள் நாமே இவ்வளவு திணறும்போது குழந்தைகள் என்ன செய்வார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். எளிமையான வினாக்கள் கேட்கலாம்.  அதை விடுத்து ஒரே கேள்விக்குள் மூன்று, நான்கு கேள்விகள் வைப்பது எதற்காக? இது அனைத்து வகைக் குழந்தைகளுக்கும் சரியானதாக எப்படி இருக்கும்? குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் தேர்வு அனைவரும் முடிக்காவிட்டால் எந்தப் பள்ளி முடிக்கவில்லை என்றும் ஒரு சில வகுப்புகள் தேர்வுகள் முடித்து சில வகுப்புகள் தேர்வு முடிக்காவிட்டால் அந்தந்த வகுப்பைக் குறிப்பிட்டு தலைமை ஆசிரியர் குழுவில் தகவல் வரும். அலைபேசியில் அழைப்பு வரும் விரைவாக முடிக்கச் சொல்லி. எங்கே செல்லும் இந்த பாதை என்று தெரியாத நிலையில் கற்பித்தலைத் திறம்படச் செய்ய இயலாத நிலையில்  கற்பித்தலோடு தொடர்பு இல்லாத ஆயிரமாயிரம் வேலைகளுக்கு மத்தியில் செல்கிறது பள்ளியில் கடக்கும் காலங்கள்.

பள்ளியில் குழந்தைகளிடம் நடந்த உரையாடலில் ஒருநாள் ஒவ்வொருவரிடமும் வருங்காலத்தில் என்ன வேலைக்குச் செல்ல ஆசை? என்ற வினாவை முன்வைத்தபோது வழக்கம்போல டாக்டர், என்ஜினீயர், டீச்சர், டிரைவர், கலெக்டர் என்றெல்லாம் போய்க் கொண்டிருக்கிறது பதில்கள். ஒருத்தி எழுந்து சொன்னாள். "நான் நெத்துப் பெறக்க போவேன் சார்" நெத்துப் பெறக்கவா? அப்படின்னா என்ற கேள்வியை மீண்டும் கேட்கிறேன் அவளிடம். அதே பதில் தான் வந்தது. ஒலக நெத்து என்பது காய்ந்த இலவங்காய். அதுதான் பார்க்கப்போகும் வேலை என்று அவள் சொல்கிறாள் என்றால் பள்ளியில் கற்கும் கல்வியைக் கடந்து அவள் வீட்டில் உள்ள சூழல்தான் அவளை அப்படிச் சொல்ல வைத்திருக்கும். கற்றலின் இலக்கு என்ன என்று தெரியாத வயதாக இருக்கும்.  அடுத்து அப்பா என்ன வேலை பார்க்கிறார் என்ற கேள்விக்கு சீட்டு வெள்ளாட (அதை ஒரு வேலையென்றும், முழுநாளும் அந்த வேலையை மட்டுமே செய்து வருகிறார் என்று அவள் மனதில் நினைத்திருக்கிறாள்)சார் என்றாள். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு என்ன வழி சொல்லும் இந்த வினாத்திட்டம்? விரட்டி அடிக்கும். மன உளைச்சலை அளிக்கும். மாணவர்களுக்காக ஆசிரியரே எல்லாம் செய்து விடும் நேர விரயத்தை மேற்கொள்ளும். கற்பித்தல் நேரத்தை கபளிகரம் செய்யும். நட்பு வட்டாரத்தில் விசாரித்த வரையில் தொடக்கப்பள்ளியில் வரும் இந்த மாதிரியான ஆன்லைன் வினாக்கள் அறவே நீக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. குழந்தைகளை வருங்கால வேலைக்கான எந்திரமாக மாற்றும் முன்னர் அவர்களின் குழந்தைத் தன்மையைக் குலைக்காத கல்வியே தற்கால அவசியத் தேவை.

பெ.விஜயராஜ் காந்தி

❣️

பூபாளம் இசைக்கும்...

 

பூபாளம் இசைக்கும்...


காலையில் பேங்க்கு போயிட்டு மட்ட மத்தியானத்துல பைக்ல ஸ்கூலுக்குப் போறப்ப திடீர்னு மேக மழை நானாக... தோகை மயில் நீயாக... தித்திக்கும் இதழ் முத்தங்கள் என்ற வரிகள் என்னையறியாமல் இதழ்களில் ஒட்டிக்கொண்டு விடுபட மறுத்துவிட்டது. எவ்வளவு அருமையான கற்பனை. மென்மையான ராகம்... இசை... ராஜாவே... வாழ்க நீங்க.


இதோ இப்போ மீண்டும் கேட்கிறேன் அவ்வரிகளை. ஆனால் நான் பாடியது தப்பு. நமக்கு வரியா முக்கியம்... ராகம். ராகத்தை மென்னு துப்பாத வரிகள். அப்படித்தான் பாடிருப்பேன் போல.


பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே...

அதிகமில்லை இரண்டே வரிகள் தான் பல்லவி. சோனியா அகர்வால் காதல் கொண்டேன் படத்துல தனுஷ் தலையை ஆட்டி பாட்டு கேட்க வைப்பாங்க, தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன் பாட்டுல. ஆனா இந்தப் பாட்டு கேட்கும்போதே நம்மளையும் சேந்து பாட வைக்கும். அப்படிப்பட்ட பாடலுக்கெல்லாம் என்ன ராகம்னு கேட்டா இளையராஜா இராகம்னு சொல்லிடலாம்.


பாட்டோட ரெண்டு சரணத்தின் நிறைவிலும் (கடேசிலன்னு சொல்லப்படாது. ஏன்னா அது நிறைவான வரிகள்).

"மேக மழை நீராட தோகை மயில் வாராதோ

தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது

னன னன னன னன னா னன னன னன னன னா...


நாளும் இனி சங்கீதம் ஆடும் இவள் பூந்தேகம்

அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்

னன னன னன னன னா னன னன னன னன னா..."


பாடிப் பார்த்தாச்சா? சரி. இப்போ வாசிச்சுப் பாருங்க. யார் பாட்டை எழுதிருப்பாங்கன்னு பாத்தா வாலி, வைரமுத்து, சிதம்பரநாதன், கங்கை அமரன், முத்துலிங்கம் அப்படின்னு பலப்பல பெருந்தலைகள். யாரா இருந்தாலும் மனுசன் காதலிலும் காமத்திலும் ஊறித் தெளைச்சிருப்பாப்டின்னு உறுதியாச் சொல்லிடலாம். ஜேசுதாசும் உமா ரமணனும் பாடும்போது இசையிலும் வரியிலும் கரைஞ்சிருப்பாங்க. 


"மேகமழை நீராட தோகை மயில் வாராதோ..."

வருமா வராதா என்ற எதிர்பார்ப்பு. மழை என்பது காதலின் உச்ச எதிர்பார்ப்பில் பூப்பது. கருமேகம் கூடிப் பெய்யும் மழை. மனம் ரெண்டும் சேர்ந்து கூத்தாடும் திருவிழா. அதற்கான எதிர்பார்ப்பு நிறைவேறும்போது தித்திக்கும் இதழ் முத்தங்கள்... ம்ம். அடுத்து படிப்படியாச் சொல்லணும்னா 

சென்சார் கத்தியைப் போடும். கேக்குறவங்க முகம் சுழிப்பாங்க. அங்கதான் இசைத் தலைவர் தன்னோட வேலையக் காட்டுகிறார். எப்படி? அத நாம மனசுக்குள்ள நெனச்சுக்கிடணும் ( வெளக்கு வச்ச நேரத்துல தந்தானன்னா... மறஞ்சு நின்னு பாக்கயில தனனா னன்னா...) பல்லாயிரம் பல்லாயிரம் இசை சம்மந்தமான இடத்துல என்னா மனுசன்யா இவர் என்று நினைக்க வைக்க இவரால்தான் முடியும்.


"நாளும் இனி சங்கீதம் ஆடும் இவள் பூந்தேகம்"

சங்கீதம் என்பது துள்ளல். வாழ்வின் துவக்கம். நீளும் மகிழ்ச்சி. அது நடக்கும்போது ஆடும் இவள் "பூந்தேகம்..." இந்த இடத்துல பூந்தேகம் என்ற சொல்லை ஒவ்வொரு ஆணின் சார்பாக கவிஞர் சொல்வதாக நெனச்சுக்கங்க பெண்களே. (சரி. ஆணின் "வீரத்"தேகம் சங்கீதத்தால் ஆடாதா என்ற கேள்வியை ஓரமாகத் தூக்கிப் போடவும்) சங்கீதத்தில் ஆடும் தேகம் செல்லும் பயணம் எப்படிப்பட்டது என்பதைச் சொல்லணும்ல. அதை அடுத்த வரியில் சொல்லிருப்பார்...

"அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்" அதையும் சொல்லாம நம்மை நினைக்க வைக்கும் வித்தை...

"னன னன னன னன னா னன னன னன னன னா..." எனப் பயணிக்க வைக்கும். சும்மா ஒண்ணுமில்ல காதல்ங்றது... கட்டிப்பிடிக்குறதுங்றது... உடல் ஒத்து ஒரு விசயம் நடந்துச்சுன்னா அங்க நிச்சயம் பூபாளம் இசைக்கும். கொஞ்சம் நல்லா அந்த இசைய அனுபவிக்க பாட்டைக் கேட்டபடி... அல்லது கேட்டுவிட்டு காதலையும் காமத்தையும் நல்லபடியா நடத்துங்க.  ராஜாவின் இசையும் கவிஞரின் வரியும் கேஜேஜே உமா ரமணன் குரலும் உங்களை மீட்டும்...


(படத்தில் சுலோச்சனா வைக்குற மாதிரி இன்னைக்கெல்லாம் ஏன் பூ வைக்குறதில்லன்னு நேராப் பாக்கும்போது கேக்கணும். யாரு கிட்ட... யாரு கிட்டயோ...)


யாழ் தண்விகா 


❣️

Wednesday, 24 July 2024

கல்வியினாலாய பயனென்கொல்...? கலகல வகுப்பறை சிவா

 


கல்வியினாலாய பயனென்கொல்...?

சிவா கலகலவகுப்பறை 


பாரதி புத்தகாலயம் 


ரூபாய் 50


48 பக்கங்கள்.


தலைப்புக்கேற்ற கட்டுரைகள் அனைத்தும்.

ஒவ்வொரு கட்டுரையிலும் தன்னுடைய ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். போட்டி தரும் வெற்றியும் வருத்தமும் பற்றிய முதல் கட்டுரை மாணவர்களுக்கு மட்டுமல்ல. அவர்களை எப்போதும் வெற்றி நோக்கி மட்டுமே பயணிக்க வைக்கத் துடிக்கும் பள்ளிக்கும், பெற்றோருக்கும் தான். 


ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய மூன்று நூல்கள் என நூலாசிரியர் பதிவு செய்துள்ளவை

பகல் கனவு

டோட்டோசான் 

மற்றும் 

எனக்குரிய இடம் எங்கே...?

மூன்று நூல்களையும் நான் வாசித்துள்ளேன் என்பது மகிழ்வே.


குழந்தைகள் என்ன கற்கிறார்கள்?

குழந்தைகளை மெல்ல மலரும் குழந்தைகள் மற்றும் நன்கு கற்பவர்கள் எனப் பாகுபடுத்தும் கல்விமுறையைக் கேள்வி கேட்கிறது.


குழந்தைகளின் நூறு மொழிகள் ரெஜ்ஜியோ எமிலியா கல்விமுறையில் நிகழும் ஆக்கப்பூர்வ மாற்றங்களை குறு வரலாறாக கண்முன் நிறுத்துகிறது.


சாப்பிடும் குழந்தைக்குத் தருவதில்தானே சந்தோசமிருக்கு? குழந்தையைக் கொண்டாட என்ன செய்யவேண்டும் என வழிகாட்டுகிறது.


தீவிரமான கல்வி குறித்த கட்டுரைக்குள் எங்க தாத்தாவிடம் ஒரு யானை இருந்தது மற்றும் மறக்கவே மறக்காத கதை இரண்டும் முறையே தாய்மொழி கற்பிப்பதில் உள்ள அபத்தத்தையும் குழந்தைகளின் இயல்பில் சுதந்திரத்தில் மகிழ்வில் நாம் எவ்வளவு தடையாக (நல்லது செய்கிறோம் என நினைத்துக்கொண்டு) இருக்கிறோம் என்பதை கதை வழியாகச் சொல்கிறது. மறக்கவே மறக்காத கதை... அற்புதம்.


தனியார் பள்ளி என்ற பிம்பம் அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் எப்படி வந்தது? அது சரியா? அது எப்படி களையப்பட வேண்டும் என்பதை தனியார் பள்ளிக்கு நிகராக என்ற கட்டுரை பேசுகிறது. பிச்சை புகினும் கற்கை நன்றே...  என்ற வார்த்தைக்கேற்ப தன்னுடைய குழந்தைகளுக்காக பாடுபடும் பெற்றோர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களை நெஞ்சில் நிறுத்தினால் போதும் வளரிளம் பருவத்தினர் படிப்பில் கவனம் செலுத்துவர். ஆனால் அது எங்கே நடக்கிறது? வாசிப்புப் பழக்கம் குறித்த கட்டுரையின் நிறைவில் சொன்ன "வாசிக்கும் ஆசிரியராலேயே வாசிப்பை வளர்த்தெடுக்க முடியும்" என்ற கூற்று நிச்சய நிதர்சனம்.


குதிரைப் பந்தயம் கூட ஓடும் குதிரையின்மேல் தான் பந்தயம் கட்டி விளையாடுவார்கள். குழந்தைகள் / மாணவர்கள் அப்படிப்பட்ட குதிரைகளா? நீட், ஐடி உள்ளிட்ட துறைகளுக்கு தன்னுடைய குழந்தைகள் மேல் தங்கள் ஆசை மூட்டைகளை வைத்து ஓடு ஓடு என்று விரட்டத் தொடங்கிவிட்டது சமூகம். அவர்களின் ஆசைகளை அறிய முயல்வதில்லை.  ஒரு சில துறைகளே முன்னிலைப்படுத்தப்படுவதால் நிகழும் மோசமான சூழல் இது. 


பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் பணியிடைப் பயிற்சி, கருத்தாளர்கள், கியூ ஆர் கோட் உள்ளிட்ட பதட்டங்கள் யாவும் அந்தத் துறையில் உள்ளவர்களுக்குத்தான் தெரியும். மேலிடம் சொல்லிவிட்டது. நிறைவேற்ற வேண்டும் என்ற சவாலை முன்வைத்து ஆசிரியர் சமூகமும் செல்கிறது. எங்கே செல்லும் இந்தப் பாதை? என்று கேட்கத் தொடங்கிவிட்டது மனது. ஆனால் எப்போது இதற்கு விடிவுகாலம் என்பது தெரியவில்லை.


வாசிப்பும் கலந்துரையாடலும் தான் ஆசிரியப்பணி சிறக்க முக்கியக் காரணிகள்.  அதைநோக்கிய பயணம் என்பதுதான் இப்போதைய கட்டாயம்.


வாசிக்க வேண்டிய நூல்.


வாழ்த்துகள் கலகல வகுப்பறை சிவா தோழர்.


பெ.விஜயராஜ் காந்தி

❣️

Saturday, 22 June 2024

அஜித் AV -இரா. எட்வின்

 


அஜீத் AV


கட்டுரைகள்


இரா எட்வின்


வெற்றிமொழி வெளியீட்டகம்


பக்கங்கள் 72, விலை ரூ 70/=


முகநூல் பதிவுகள் நூலாக மாறியிருக்கிறது. சமூகத்தின் ஜன்னல் போல இந்த நூலினைக் காணலாம். பெரும்பாலான பள்ளிக்குழந்தைகள் குறித்த பதிவுகள். தோழர் பள்ளியில் பணிபுரிவதால் இருக்கலாம். சிறு சலனத்தையாவது மனதில் ஏற்படுத்திவிடுகிறது பதிவுகள் ஒவ்வொன்றும். மொத்தம் 42 பதிவுகள். அத்தனையும் அருமை. 


“விதைகளை மென்று தின்னும் பழக்கமில்லாதவை என்பது கூட ஒரு காரணமாயிருக்கலாம். 

மரங்கள் பறவைகளை நேசிப்பதற்கு”. வாசித்தவுடன் கடந்துவிட்டேன். ஏதோ ஒன்றினை சரியாக வாசிக்காமல் கடந்துவிட்டோமோ என மீண்டும் வாசிக்கிறேன். ஆம். இரு வார்த்தைகளையும். முக்கியமாக இரண்டாம் வரியை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். 

இங்கு பறவை என்பதோ, மனிதர்கள் என்பதோ, விலங்குகள் என்பதோ உயிருள்ளவை என்று கருதிக் கொள்கிறோம். ஆனால் மரம் இங்கு நிர்ணயிக்கிறது யாரை நேசிப்பது என்று. மரங்கள், பறவைகளை நேசிப்பதற்குக் காரணம் விதைகளை மென்று நொறுக்காமல் விழுங்குவதால் என்கிறார் தோழர். இவ்வுலகம் நீள்வதற்கான கண்ணி என்பது இது போன்ற பதிவுகளில் இருக்கிறது. இதன் மீதான அல்லது இது போன்ற பார்வைகள் பரவலாக்கப்படுதல் காலத்தேவை.


வேலூரில் இறந்து போன தலித் ஒருவரின் சடலம் கொண்டுசெல்லப்படும் பாதை மறிக்கப்பட, சடலம் பாலத்தில் இருந்து கயிறு மூலம் கீழே இறக்கப்பட்டு அங்கிருந்து மீண்டும் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. இப்போதெல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா... என்பவர்களின் கண்களுக்கு இப்படி சம்பவம் ஒரு அசிங்கமாகவே தெரியாது. தெரிந்தாலும் தெரியாதது போல் காட்டிக்கொள்வார்கள். இன்னொரு பதிவில் மாட்டுக்கறி பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் தலித்துகளும், இஸ்லாமிய மக்களும் என்ற தகவலைக் காண முடிகிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்ற சொலவடை மாறவேண்டும் என்பது ஆசையாக இருக்கிறது. பார்ப்போம்.


ஜேட்லீக்கு எழுதிய இரங்கல் பதிவு. இறந்துவிட்டால் அவரைப் பற்றி அவதூறு பேசக்கூடாது. விமர்சனம் செய்யக்கூடாது என்றெல்லாம் சொல்லிக்கொள்வது இப்போது வாடிக்கையாகிவிட்டது. எது சரி, எது தவறு என்பதை காலத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம் வந்தால் பேசித்தானே ஆகவேண்டும்? ஆனால் இங்கு என்ன நடக்கிறது? தனக்குச் சாதகமான பேச்சென்றால் ஆமாம் சாமி என்பதும், சாதகமற்ற பேச்சு என்னும்போது இறந்தவரைப் பற்றி பேசுவது அநாகரிகம், அது தவறு என்று பேசத் தொடங்குவது வாடிக்கையாகிவிட்டது. இடி அமீனைப் பற்றிக்கூட, ஹிட்லரைப் பற்றிக்கூட எதுவும் பேசக்கூடாது என்று சொன்னாலும் சொல்வார்கள். ஆனால் இங்கு தோழர் சகோதரி ஆசிபா இறந்தபோது ஜேட்லீ என்ன சொன்னார் என்பதைக் கூறுகிறார். இன்னொரு கேள்வி கேட்கிறார், 56 வயதான தனக்கு அச்சிறுமி பேத்தியாகத் தெரியும்போது 67 வயதாகும் அவருக்கு அச்சிறுமி பேத்தியாகப் படவில்லையா... என்பதை மேற்கோளிட்டுக் காட்டுகிறார். முக்கியமாக பதிவின் இறுதியில் “உங்கள் சித்தாந்தம் அழிவதைப் பார்க்காமல் போய்விட்டீர்கள். போய்வாருங்கள் அன்பிற்குரிய ஜேட்லீ” என்கிறார் தோழர். இறந்த பின்னாலும் கேள்விகள் தொடரும் என்ற பயமிருந்தால் வாழும் வாழ்க்கையை அர்த்தப்படியாக வாழவேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அதற்காகவாவது இறந்தவரின் சரி/ தவறுகளைப் பேசலாம், தவறில்லை என்று தோழர் உணர்த்தியிருக்கிறார் நேரடியாக.


துப்புரவுத் தொழிலாளியை சிறப்பு அழைப்பாளராக வைத்து நிகழ்வுகள் நடத்துவது மகிழ்வை அளிக்கிறது என்றாலும் அது இயல்பான ஒன்றில்லாமல் பதிவதற்கான தேவை இருக்கிறது என்ற சூழலில் அதை நினைத்து வருந்துகிறேன் என்கிறார் தோழர். முதல் அலை கொரோனோவின்போது துப்புரவுத் தொழிலாளிகளுக்கான உணவுப் பொட்டலங்கள் குப்பை வண்டியில் வரவழைத்துத் தரப்பட்டன என்ற செய்தியும் இக்காலத்தில் தான். துப்புரவுப் பணியின்போது அவர்களுக்கென வழங்கப்படவேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமலேயே அவர்கள் பணி செய்ய தூண்டப்படுவதும் இக்காலத்தில் தான். சொல்லவேண்டியதைச் சொல்லிக்கொண்டே இருப்போம். சமூகம் திருந்தும்வரை தனது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்கிறார். மனிதர்கள் எல்லோரும் மனிதர்களாக மாறவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. எப்போது மாறுவோம்...


பள்ளி குறித்த அனைத்துப் பதிவுகளும் சுவாரசியம் மட்டுமின்றி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பாடமும் நடத்துகிறது. அரசியல், பள்ளி, சமூகம் என தான் பயணிக்கும் பாதைகளில் கண்டு மகிழ்ந்த, வலி உணர்ந்த, வரப்போகும் ஆபத்து கண்டு பதைத்த பக்கங்களை முகநூலில் கொண்டுவந்திருக்கிறார். இப்போது புத்தகமாக. 


அனுபவங்கள் இன்னும் இன்னும் புத்தகங்களாகப் பெருகட்டும்.

சமூகம் பயன்பெறட்டும்.

வாழ்த்துகள் தோழர்.

யாழ் தண்விகா

Monday, 15 April 2024

ஆடு ஜீவிதம் - நாவல்

 


ஆடு ஜீவிதம்
பென்யாமின்
தமிழில் விலாசினி
எதிர் வெளியீடு
216 பக்கங்கள்
300 ரூபாய்

வெளிநாட்டிற்கு /கல்ஃப்/ வேலைக்குச் செல்லும் நஜீப், ஹக்கீம் இருவரின் துயரங்களும் தான் நாவல்.   வாழ்வின் பல்வேறு சிக்கல்களுக்கு நடுவில் வெளிநாடு செல்ல பணம் திரட்டி கிளம்புகிறான் நஜீப். உடன் ஹக்கீம். வெளிநாட்டில் இறங்கிய பின் அவர்களை அழைத்துச் செல்ல யாருமில்லை. நீண்ட நேர காத்திருப்பிற்குப் பின்னர் ஒருவன் வந்து பாடாவதியான ஒரு வாகனத்தில் அழைத்துச் செல்கிறான். கனவுகள் உடையும் வண்ணம் செல்லும் பாதை. பாலைவனத்தில் முதலில் ஓரிடத்தில் இறக்கி விடப்படுகிறான் ஹக்கீம். அடுத்து நஜீப். அவ்விடங்களில் ஆடு மேய்ப்பது இவர்கள் வேலை. அந்த வேலை எப்படி அவர்களின் வாழ்வை பாடாய்ப் படுத்தியது என்பதை வாசிக்கும்போது நேரடியாக அனுபவிப்பது போல உணர முடிகிறது. மூன்றாண்டுகளுக்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறி தப்பிக்க ஒரு வாய்ப்பு. அவர்கள் தப்பித்தார்களா? அதற்கான பாதை எளிதில் அமைந்ததா என்பதை நாவல் பேசுகிறது. உண்மையில் இப்படிப் பயணம் சென்ற ஒருவரின் கதை கேட்டு பென்யாமின், ஒரு சுயசரிதையைப் போல எழுதியுள்ளார். மொழிபெயர்ப்பு நாவல் என்பது ஒரு அயற்ச்சியையும் உண்டுபண்ணவில்லை. சிறப்பாகவே இருந்தது. வெளிநாட்டு வேலை என்பது இப்படியும் இருக்கும் என்ற அச்சத்தைத் தருகிற வகையில் நாவல். நஜீப் அனுபவித்த கொடுமைகள், வெளிநாட்டு வேலை என்றாலே யோசிக்க வைக்கும். இனி இதுதான் வாழ்வு. இதனை இப்படித்தான் கடந்தாக வேண்டும் என்ற சூழலில் அந்த வாழ்க்கைக்குள் தன்னை உட்படுத்திக்கொண்டு சகித்தும் கடந்தும் வாழும் நஜீப் எல்லாவற்றிற்கும் அல்லாவை துணைக்கு வைத்துக்கொள்கிறான். ஒரு கட்டத்தில் நாவல் இஸ்லாமியப் பிரச்சாரம் போலவும் எனக்குத் தோன்றிவிட்டது. ஹக்கீம் உடன் வந்த இப்ராஹிம் கதிரி பாலைவனம் கடக்க உதவிய பின்னர் மறைந்து விடுகிறான். அவனை அல்லா என்கிறான் நஜீப். அடுத்து ஒரு வாகனப் பயணம். வாகனத்தை நிறுத்தியவரை அல்லா உருவில் காண்கிறான் நஜீப். தான் படும் அவஸ்தைகள் யாவற்றிற்கும் அல்லா காரணம் என்கிறான். கிடைக்கும் ஒருசில நல்லவற்றிற்கும் அல்லா காரணம் என நம்புகிறான். இப்ராஹிம் கதிரி அல்லா என்றால் ஹக்கீம் பாவம் எனத் தோன்றவில்லையா? எனக் கேள்வி எழாமல் இல்லை. ஆட்டுக் கொட்டம், பாலைவனம், முரட்டு மனிதன், அர்பாப், காவல் நிலையம் எல்லாம் ஒரு புதிய காட்சியை அறிமுகப்படுத்துகிறது. ஒரு புதிய அனுபவத்தைத் தருகிறது. உறவுகளைத் துறந்த ஒரு வாழ்வை வாழ பணிக்கப்பட்ட மனிதனின் கதை இது. வாசிக்கலாம். 

யாழ் தண்விகா 

❣️


Sunday, 31 March 2024

எழுத்துலகம் – அகமும் புறமும் அ.ம.அங்கவை யாழிசை


எழுத்துலகம் – அகமும் புறமும்

அ.ம.அங்கவை யாழிசை

யாப்பு வெளியீடு

72 பக்கங்கள்

70 ரூபாய்


 ஊற்று நீர், மணல் நனைத்து நனைத்து நதியெனப் பயணிக்கத் தொடங்கும் தருணம்... எவ்வளவு அற்புதமானது..! போலான ஒரு பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் அங்கவை யாழிசை. கொடியசைத்துத் தொடங்கி வைத்திருக்கிறார் தோழர் ஏர் மகாராசன் . தோழர், ஏற்கனவே எழுதி இணைய இதழ்களில் வெளிவந்துள்ள வாசிப்பனுபவக் கட்டுரைகளைத் தொகுத்து தொகுப்பாக்கி உள்ளார். அச்சு உலகில் முதல் பயணம். பேரன்பு வாழ்த்துகள். 


 6 நூல் குறித்த 6 கட்டுரைகள். வறீதையா, தமிழ்மகன், தீபச்செல்வன், ஜெயமோகன், சோ.தர்மன் மற்றும் முத்துநாகு ஆகியோரின் நூல்கள் குறித்தவை. வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய கையறு நதி நூல் மனப்பிறழ்வு அடைந்த மகளுக்கும் தந்தைக்குமிடையே உள்ள அரவணைப்பு குறித்துப் பேசுகிறது. மனப்பிறழ்வு அடைந்த பெண்ணாக தன்னை நினைத்துக்கொள்ளும் அளவுக்கு நூல் தனக்குள் உண்டாக்கிய பாதிப்புகள் குறித்து வாசிப்பு அனுபவத்தை முன்வைத்துள்ளார். நிறைவைத் தரும் எழுத்து. இன்னும் கொஞ்சம் நூல் குறித்து எழுதியிருக்கலாமோ என எண்ண வைக்கிறது. “மனம் மாயம் செய்யும் கருவி. நம்மால் செய்ய முடிந்தவையும் செய்ய முடியாதவையும் நம் மனம் நிர்ணயிப்பது தான். மனதை ஆளவும் கற்றுக்கொள்ள வேண்டும். அடக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று உளவியலாளர் போல எழுத்தைப் பேச வைத்திருக்கிறார் நூலாசிரியர். 


 தமிழ்மகன் எழுதிய படைவீடு நூல் ஆட்சி அதிகாரத்தை இழந்த கடைசி தமிழ்ப் பேரரசன் சம்புவராயன், மகன் ஏகாம்பரநாதன், அவரது மகன் மல்லிநாதர் ராசா நாராயணர் ஆட்சிக் காலம் பற்றிப் பேசுகிறது. விஜயநகரப் பேரரசு தமிழ் மண்ணில் காலூன்ற காஞ்சி பிராமணர்களின் போதிப்பான சாதிக்கொரு புராணம் எந்தளவுக்கு எடுபட்டு தமிழ்ப் பேரரசைத் தூக்கி எறிய உதவியது என்பதைச் சுருக்கமாகக் கூறியுள்ளார். சாதிப் பிரிவுகளையும், சாதி வன்மங்களையும் இப்போதுதான் பிறந்த சிக்கல் என்று எண்ணிக்கொண்டிருந்ததாக தோழர் குறிப்பிட்டுள்ளார். வர்ணாசிரமம் இங்கு எப்போது வந்தது என்பதைக் கணக்கிட்டாலே அதற்கு விடை கிடைத்துவிடும். நூலாசிரியரின் தந்தையும் தோழருமான ஏர் மகாராசன் மாணவர்கள் குறித்து சில மாதங்களுக்கு முன் வெளிவந்த கட்டுரை நூலில் சொன்னவாறு தாழ்த்தப்பட்ட சாதி, உயர்த்தப்பட்ட சாதி என்ற சொல்லை தாழ்ந்த சாதி, உயர்த்த சாதி என்று சொல்ல வைத்ததன் பின்னணியில் இருந்தும் சாதியின் ஆதியைத் தேடிக் கண்டடையலாம்.


 தீபச்செல்வன் எழுதிய நடுகல் குறித்த வாசிப்பனுபவம் ஈழத்தை, அதன் வலிகளை, கண்ணீர்க் கதையை, வீரம் செறிந்த போர்க்களக் காட்சிகளை, விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை, பல்வேறு நாடுகளின் துரோகங்களை கண்முன் கொண்டு வந்துவிட்டது. ஒரு துயர் கனவு போல நினைவைவிட்டு அகற்றிவிட்டு இன்று அவரவர் வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். மீளாய்வு செய்வதற்குக் கூட அவசியமற்ற ஒரு நிகழ்வாக ஈழப்போர் பெரும்பான்மையோருக்கு அமைந்துவிட்டது ஒருபுறம். அதை மறக்கடிக்கும் ஊடகம் ஒருபுறம். மண்ணையும் மக்களையும் உரிமைகளையும் மீட்டெடுக்க நிகழ்ந்த போரை அசாதாரணமாகக் கடந்துவிட முடியாது. அந்தப் பணியை, நடுகல் செய்கிறது. வீர மரணம் அடைந்துவிட்ட மகனின் புகைப்படம் கூட கையில் இல்லாமல் அவனின் நினைவுகளை மட்டுமே நடுகல்லாகச் சுமக்கும் தாய் பற்றிய நூல் என்கிறார் நூலாசிரியர். நூலை வாசிக்கத் தூண்டும் கட்டுரை.


 ஜெயமோகனின் புறப்பாடு குறித்த கட்டுரை. அவருடைய எழுத்தைச் சிலாகித்துப் பேசுகிறார் நூலாசிரியர். அவர் குறிப்பிடும் ஒப்புமைகள் சிலவற்றையும் கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார். ஓரிடத்தில், “இந்தப் பயணம் முழுக்க ஒரு இடத்தில் கூட, ஒரு பொருளின்மீது கூட அலட்சியம் இல்லை. அங்கு உள்ள அனைத்துமே தனக்குத் தகவல்தான் என்று எடுத்துக்கொண்டார் போலும்” என்பது உட்பட. சென்னையில் ஒரு சேரியில் அவர் தங்கும்போது வருகின்ற சம்பவங்கள் பீதி ஊட்டுகின்றன என்று கூறியுள்ள நூலாசிரியர், இதை இப்படியே வைத்திருக்கும் அதிகார மையம் குறித்து ஜெயமோகன் போன்றவர்கள் பேசாமலிருப்பதையும் சக மனிதன் குறித்து, எழுத்தாளர்கள் குறித்து, சமூகம் குறித்து இவ்வுலகின் அனைவருக்கும் மேலான ஓரிடத்தில் நின்று பேசும் அவருடைய வார்த்தைகளை கூர்ந்து நோக்கத் தொடங்கினால் அவர் யாரெனப் புரியும். புறப்பாடு வாசிக்கும்போது ஜெயமோகனின் பிம்பம் மீண்டும் மீண்டும் வந்து தொலைக்கிறது. இதற்கு நூலாசிரியர் என்ன செய்ய முடியும்...


 சோ.தர்மனின் சூல், விவசாயம், அது சார்ந்த மக்கள், யாரிடம் அது இருந்தது, அது எப்படியெல்லாம் அதிகாரத்தின் கைகளில் சென்று சேர்ந்தது என்பது போன்ற பல்வேறு புதிய தகவல்களைத் தருகிறது என்பது மறுக்கவியலாத உண்மை. மாடுகளைக் கொன்று மாமிசம் உண்டவன், ஒரு கால்நடையைப் போலவே நடக்க நேரிடும், ஊர்க் கண்மாயை விரோதம் காரணமாக உடைப்பவன் பிள்ளை ஊமையாகப் பிறக்கும் இப்படிப் பல நம்பிக்கைகள் உண்மையில் அப்படியே நடந்திருக்கின்றன என்கிறார் நூலாசிரியர். நல்ல விசயத்தைப் பாதுகாக்க, எதையாவது சொல்லிப் பயம்காட்டி வைத்திருப்பது என்பது நடந்திருக்கும். அதற்காக எல்லாவற்றையும் நல்லது என்பதை நம்புவதும் தவறு. பயம் காட்டுவதும் தவறு. மாட்டுக்கறி தின்ன இறந்த மாடுகளை மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என்பது போல உள்ளது நூலாசிரியர் கருத்து. மாடுகளைக் கொன்று சாப்பிடுபவன் ஒரு கால்நடையைப் போலவே நடப்பான் என்பதை எப்படி அறுதியிட்டுக் கூறுகிறார் எனத் தெரியவில்லை. கண்மாய் வைத்து அரசியலாடும் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் யாருமிங்கே ஊமையாகப் பிறக்கவில்லை என்பதையும் நாம் பார்க்கவேண்டும். இதில் பாதிக்கப்படும் மக்கள் அதிகாரம் அற்றவர்கள் மட்டுமே. இது சமகாலத்தில் அரசியல்வாதியைக் கண்டுகொள்ளாமல் கடந்துவிடவேண்டும் என்பதற்காகப் பயன்படுத்திய உத்திபோல இருப்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். விவசாயம் உரியவர்களிடம் போய் சேராததால் இங்கு உழைப்பவனிடம் ஒன்றுமில்லாமலும், பண்ணையிடம் எல்லாம் கூடுதலாக நிறைந்திருப்பதையும் இன்றும் காண்கிறோம். அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் இங்கு விவசாயத்தினை துச்சமாக நினைத்துத்தான் தொடங்குகிறது. அதன்பலனை வருங்காலம் எப்படித் தாங்குமோ தெரியவில்லை. சூல் வாசிக்க வேண்டிய நூல்.


 முத்துநாகு எழுதிய சுளுந்தீ நூல் குறித்த வாசிப்பனுபவம், தனது துறை சார்ந்திருப்பதால் நூலாசிரியர் பேரார்வத்துடன் எழுதியது போலிருக்கிறது. கதைச் சுருக்கத்தையும் அருமையாகக் கூறித் தொடங்குகிறார். எவ்விதம் தனது துறையில் இந்நூல் உதவுகிறது என்பதையும் கூறுகிறார். தமிழரின் மருத்துவப் பண்பாட்டியலை விவரிக்கும் வரலாற்றுக் கதை என்ற தலைப்பு பொருத்தமே. சித்த மருத்துவத் துறையில் பயின்று வரும் நூலாசிரியருக்கு தகுந்த சமயத்தில் இந்நூல் கிடைத்ததை சித்தர்கள் அருளால் தான் கிடைத்தது என்று நூலாசிரியர் கூறுவதை எப்படி ஏற்பது எனத் தெரியவில்லை. இருந்தபோதிலும் சுளுந்தீ என்பது வாசிக்க வேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை.


 நூலின் பக்கங்கள் மற்றும் விலையையும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மொழிநடை அருமையாகக் கூடி வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள். அரசியல், முற்போக்கு இரண்டின் போதாமை பல இடங்களில் தெரிகிறது. இதைக் குற்றமாகக் கருதாமல் ஆலோசனை என்ற அளவில் எடுத்துக்கொள்ள தோழரிடம் கேட்டுக்கொள்கிறேன். எழுத்தோடு எந்நேரமும் உறவாடிக் களித்திருக்கும் தந்தையின் கரம் பற்றுங்கள். அதேசமயம் உங்கள் வழியில் பயணம் செய்யுங்கள். சிறப்பான தொடக்கம். வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

என் காட்டில் அடைமழை - ராஜிலா ரிஜ்வான்


என் காட்டில் அடைமழை

ராஜிலா ரிஜ்வான் 

வேரல் பதிப்பகம்

90 பக்கங்கள்

120 ரூபாய்


 உலகில் சலிக்காதது எது என்று கேட்டால் அது காதல் மட்டும்தான் என்பேன். அதுதான் மழையின் ஒவ்வொரு துளியையும் ரசிக்க வைக்கும். அதுதான் பூவின் ஒவ்வொரு இதழ்களையும் தொட்டு ரசிக்க வைக்கும். நட்சத்திரங்களை எண்ணி வானத்திடமே சொல்லி சரியா எனக் கேட்க வைக்கும். உறங்கும் நேரம் விழிக்க வைக்கும். விழிக்கும் நேரம் உறங்க வைக்கும். கனவு காண வைக்கும். முட்டாள்தனத்தில் மூழ்கவைக்கும். கற்பனையைக் கவிதையாக்கும். இருவருக்கு மட்டுமான உலகம் உருவாக்க வைக்கும். ஓரிணை இறக்கையில் இருவரையும் பறக்கவைக்கும். என் காட்டில் அடைமழை தொகுப்பை வாசிக்கும்போது இவை அத்தனையையும் உயரலாம்.. ஹைக்கூ கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ள தோழர் ராஜிலா காதல் கவிதைத் தொகுப்பை எழுதி அதனை ரிஜ்வான் தோழருக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். தொகுப்பு, ஒட்டுமொத்த காதலர்களும் தங்களுக்கு எழுதியது என நினைத்துக்கொள்வதையும் சமர்ப்பணம் என்றுதானே எடுத்துக்கொள்ள முடியும்... எடுத்துக்கொள்ளட்டும். அது காதலின் வெற்றி. தொகுப்பின் வெற்றி. வாழ்த்துகள் தோழர்.


 திரைப்பட இயக்குநரும் பாடலாசிரியருமான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் அணிந்துரை வழங்கியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் டைட்டில் சாங் கதையை சுருக்கமாகச் சொல்லி படத்திற்கு உள்ளே இழுத்துச் செல்வது போல அணிந்துரையும் அழகாக நம்மை தொகுப்பின் உள்ளே இழுத்துச் செல்கிறது. 

“வீடு முழுவதும் தனிமை

நீயில்லாத வீட்டில் 

எதைச் சாப்பிடுவது

எப்பொழுது தூங்குவது

எப்படிச் சிரிப்பது


இதை எழுதிக் கொண்டிருக்கும் 

இந்நேரத்தில் தோளில் ஆறுதலாய்

கை போடுகிறது


சுவரில் தொங்கும் உன் சட்டை”

கண்ணுறங்கும் நேரத்தில் திடீரென விழித்துப் பார்க்கும் குழந்தை அருகில் தாய் இல்லையென்றால் என்ன அழுகை அழும்... எதையெதையோ காட்டி ஏமாற்றினாலும் அதற்கு தாயின் தேவை, அவளின் அருகாமை எது குறித்தும் எந்தப் புரிதலும் இல்லாத வயதிலும் அந்த இடத்திலிருந்து பூக்கும் அழுகைக்கு என்ன பதில் இருக்கும் ஆறுதல் சொல்பவர்களுக்கு... குழந்தையைப் பொறுத்தமட்டில் தாய் இல்லாத அந்த இடத்தின் தனிமை போலான உணர்வு மட்டுமே. இக்கவிதையில் காதலன் இல்லாத இடத்தின் தனிமை என்பது காதலிக்கு. எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் காதலன் (அருகில் இல்லையென்றாலே அது தொலை தூரம் தானே) அவளின் தனிமையைப் போக்க வேண்டும். என்ன செய்வது இத்துயரைக் களைய... அவன் உடுத்திய சுவரில் தொங்கும் சட்டை ஆறுதலாகத் தோளில் கைபோடுகிறது என்ற சித்திரம் கற்பனை என்றபோதிலும் நம் தோளில் விழும்\விழுந்த கையை நாம் இறுக்கமாகப் பற்றிக்கொள்ள எத்தனிக்கிறோமே அதுதான் காதல். அதுவும் தனிமையின்போது வந்து விழும் கைகள் எத்தனை தேவை என்பதை வரிகள் உணர்த்துகின்றன. 


“முன்பைவிட என் கவிதைகளில்

அதிகம் காதல்ரசம் சொட்டுவதாகக்

கூறிக்கொள்கிறார்கள்.

அவர்களுக்குத் தெரியாது

நாம் தற்சமயம் பிரிந்திருப்பது”

பிரிவென்பது காதல் கூட்டும். இக்கவிதையும் அதைத்தான் சொல்கிறது. காதலின் ஒவ்வொரு நொடியையும் ரசிக்கக் கற்ற ஒருவனுக்கு பிரிவின் ஒவ்வொரு நொடியின் வலியும் புரியும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலரைக் கொண்டாடும் நாம் நம்மைச் சுற்றிப் பூத்திருக்கும் எத்தனை மரங்களை பார்த்துக் கொண்டாடியிருக்கிறோம்... காதல் என்பது நொடிதோறும் பூத்துக்கொண்டிருக்கும் ஒரு ரகசியம். அதன் சூட்சுமம் உணர்ந்தவர்களுக்கு மட்டும்தான் சேர்தல் பிரிதல் இரண்டின் வலியும் புரியும்.


 வாங்கியதை மீண்டும் கொடுத்து ஈடு கட்டிக் கொள்ளுதல் என்பது ஒரு காதலின் வேலையல்ல. கொடுப்பதும் வாங்குவதும் இயல்பாக அதனதன் போக்கில் நடக்கும் ஒரு வித்தை. 

“கொடுத்தது 

திரும்பக் கிடைத்துவிடுகிறது

வட்டியுடன்

உன்னிடமிருந்து மட்டும்.

முத்தமில்லை என்று சொன்னால்

நம்பவா போகிறீர்கள்...”

காதலைப் பொறுத்தவரை சேமிப்புக்கு அதிக வட்டி தரும் தனியார் வங்கி போலத்தான். வட்டியுடன் திரும்பக் கிடப்பது முத்தம் மட்டுமில்லை என்பதும் வாழ்ந்த, வாழும் காதலர்களுக்குப் புரியும். காதலில் வாழ்பவர்களுக்கும் புரியும். 


 தனது இணையரை சிறப்பாகக் கவனிக்க நினைத்து மொக்கைச் செயல்களைச் செய்யும் பலர் இருக்கிறார்கள். அதற்காக அதனைப் புறம் தள்ளிவிடுமா மனம்... அதற்குள்ளும் ஆனந்தம் கண்டு ஆர்ப்பரிக்கும் காதல். சிறப்பான கவனிப்பு உள்ளபடியே சிறப்பாக அமைந்தால் அப்போது நமக்கு நாமே “நான் கொடுத்து வைத்தவள் / ன்” என்று உள்ளுக்குள் சொல்லிக் கொள்வோமே... அப்பேரதிசயம் பூக்கும். மிக மிக இயல்பான கவிதைதான். மிக மிக எளிய சூழல் தான். மல்லிகைப்பூ காலம் காலமாக வெள்ளை நிறத்தில்தான் பூக்கிறது. அதற்கு வண்ணமடித்துப் பார்ப்பதில்லை நாம். அதன் இயல்பில் வைத்தே நாம் மணம் நுகர்கிறோம்.. அதுவும் நிறம் மாற்றாமல் நம்மை ஈர்க்கிறது. இக்கவிதையும் அப்படித்தான்.

“வழக்கத்தைவிட

சுவை கொஞ்சம் கூடுதலாக உள்ளதாக

வீட்டில் சொல்கிறார்கள்.

அவர்களுக்குத் தெரியாது

இன்று உனக்காகச் சமைத்தேன்”


 கவிப் பேரரசு வைரமுத்து சொல்லும் காதலித்துப் பார் உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும். உலகம் அர்த்தப்படும். உனக்கும் கவிதை வரும்... என நீளும் வரும் வரிகளை மூன்று வரிகளில் ஹைக்கூவாக மாற்றித் தந்திருக்கிறார் தோழர் ராஜிலா. தன்னுடைய இணையர் ஊடலுக்காகவோ பகடிக்காகவோ அல்லது சோதிப்பதற்காகவோ “காதல் என்ன செய்யும்” எனக் கேட்கிறார். காதல் மனம் படைத்தவர்கள், அதில் மூழ்கித் திளைத்தவர்கள் என்ன இப்படிக் கேட்டுட்டீங்க என்பதை தோழர், “ஐயோ” எனச் சுருக்கி, அது ஒரு மாயம் செய்யும் செயல். அதன் வீரியம் அதனை உணர்பவர்களுக்கு விளங்கும். வெறுமனே அதனைப் பார்த்துவிட்டு நீங்குபவர்களுக்கு அதன் முழு சக்தி புரியாது, தெரியாது. அதனை அறிய காதலித்துப்பார் என்பதை, “எல்லாமே செய்யும்ப்பா. காதலித்துப்பார்” என்னும்போது அதன்மீது ஒரு தெய்வாம்சத்தன்மை வந்துவிடுகிறது. காதல் எதைத்தான் செய்யாமல் விடுகிறது... எல்லாம் செய்யும். அக்கவிதை,

“காதல் என்ன செய்யும்


ஐயோ

எல்லாமே செய்யும்ப்பா

காதலித்துப்பார்”.


 காதலில் தன்னைக் கரைத்தல், ஒப்புக் கொடுத்தல், சரணாகதி அடைதலைப்போல் பூரணத்துவம் எதுவும் இருப்பதில்லை. அதற்கு சண்டையும் ஒன்றுதான். சமாதானமும் ஒன்றுதான். இதோ இந்தக் கவிதையை வாசிக்கும்போது காதலை யாசிக்கும் வனம், மழையில் மட்டுமல்ல, வெயிலிலும் தன் பச்சையத்தால் தன்னைச் சுற்றிய பிரபஞ்சத்தை அழக்கூட்டவே செய்யும் என்பதைக் காட்டுகிறது.

“அத்தனைப் பூக்களையும்

நீயே எடுத்துக்கொள்


நான் பூரிக்க

உன்னிடமிருந்து 

ஒரு முள் போதும்”


 வெண்ணிலா கபடிக்குழு என்னும் திரைப்படத்தில் பரோட்டா உண்ணும் போட்டியில் கலந்துகொள்ளும் திரைக் கலைஞர் சூரி, போட்டி நடத்துபவனின் கள்ள ஆட்டத்தில் கலங்கியும், தனது நேர்மையான உண்ணுதலுக்குப் பங்கம் வந்துவிடக்கூடாது என்றும் நடத்தும் நேர்மைப் போராட்டம் இங்கு முத்தத்திற்காக நடக்கிறது. 

“எல்லாக் கோட்டையும் 

அழித்துவிட்டு 

முதலிலிருந்து வா


முதல் முத்தத்தில் துவங்கி

மீண்டும் காதலித்துத் தொலைவோம்”

முத்தமோ, காதலோ காதலர்களுக்கு இடையில் நிகழும்போது அதற்கு எல்லைக்கோடு வைத்துக்கொண்டா இயங்குகிறது... இவையெல்லாம் காதல் வளர்வதற்கான காற்றல்லவா...! 


 யெம்மா ஏய் கேட்டுச்சா... நீயும்தான் இருக்கியே, ஒருநாள் ஒருபொழுதாவது இப்படியெல்லாம் சொல்லிருக்கியா... என தன்னோட காதலிகிட்ட கேட்டுப் பெறவேண்டிய நிலையில்தான் ஆண்கள் இருக்கிறார்கள், “நீ என் ஆண் தேவதை” என்பது போலான வார்த்தையை. காதல் பற்றாக்குறையா... கவிதை பற்றாக்குறையா... “இதெல்லாம் மனசுக்குள் இருக்கு. சொல்லித்தான் தெரியணுமா” என்ற மன நிலையா... ஆண்களின் குணம் கண்டு வெதும்பிப்போய் “சொல்லிட்டாலும் கிளுகிளுன்னு இருக்கும்” என்ற நினைப்பா... தெரியவில்லை. ஆண்களும் மனுசாள் தானே. அவர்களும் தனதிணையர் புகழ்தலை விரும்புவார்கள் தானே...

“தேவதை எனும் சொல்லின்

அத்தனை அம்சமும்

உனக்கும் பொருந்திப் போகிறது


நீ என் ஆண் தேவதை”


 காதல் குறித்து எழுதுவதென்றால், பேசுவதென்றால் அது முடிவிலியாக நீண்டுகொண்டே செல்லும். காதலின் ஆயுள் என்பது பூமி பிறந்த காலம் முதல் தொடங்குகிறது. காதலைப்போல் இப்பூமியை வாழவைக்கும் ஆகச்சிறந்த செயல் ஏதுமில்லை. 

“நீ முறைக்கிறாய்

நானும் முறைக்கிறேன்


நீ சிரிக்கிறாய்

நானும் சிரிக்கிறேன்


நீ அழுகிறாய்

நான் உன்னை அணைக்கிறேன்”

முதல் நான்கு வரிகள் உலகப் பொது உணர்வு. கடைசி இருவரிகள் காதல் பொது. முன்னது ஊடல். பின்னது ஆறுதல். தேற்றுதல். காப்பாற்றுதல். அரவணைத்தல். எல்லாவற்றுக்கும் மேலாக நானிருக்கிறேன் என்று சொல்லும் அணைத்தலின் மூலம் ஆசீர்வதித்தல்.


 தொகுப்பெங்கும் காதல். இவை மட்டும் தான் பிடித்த நட்சத்திரம் என்று நிலவோ வானமோ என்றாவது சொல்லியிருக்கிறதா... எல்லாம் காதல் பேசுபவை. எல்லாம் காதலர்கள் பேசுபவை. எல்லாம் காதலுக்காகப் பேசுபவை. காதலைக் கொண்டாட வாய்த்த மனம் உலகை நேசிக்கத் தொடங்கும். இவை உலகை நேசிப்பதற்கான சொற்கள். வார்த்தைகள். இன்னும் பல தொகுப்புகள் காதல் / Mohamed Rizwan தோழர்/ புகழ் பாடவும் கவிஞர் தோழரின் மனம் உதிர்க்கட்டும். காதல் சிறக்கட்டும். 

வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️