Thursday, 7 July 2022

ரொம்ப நாளைக்குப் பின்னால...


ரொம்ப நாளைக்குப் பின்னால...


💜

ரொம்ப நேரம் பேசியாச்சு 

ஆனாலும் ஏதோ ஒன்னு மிஸ் ஆனது மாதிரி இருக்கு 

என்னனு தெரியலையே 

எருமை எருமை 

இன்னமும் நீ முத்தமே கொடுக்கல 

கேட்காம குடுக்க மாட்டியா

குடுடா...


💜

ஹேர் கட் பண்றது இல்ல 

தாடி சேவ் பண்றது இல்ல 

எனக்கென்னன்னு  பங்கரையா திரியுறது 

வீட்டுல நான் ஒரு பேய் இருக்கிறது பத்தாதா...


💜

காலம் முழுக்க நீ என்ன பாத்துப்பன்னு நம்பிக்கை இருக்கு 

அதுக்காக இப்படியே பாத்துட்டே இருக்காத

ஒன் அளவுக்கு எனக்கு கவிதை எழுத தெரியாது 

இப்படி கண்ணிமைக்காம பார்க்கத் தெரியாது

ஆனா நிறைய லவ் பண்ண தெரியும்...


💜

எனக்கு சேலை நல்லா இருக்கா 

சுடிதார் நல்லா இருக்கா எனக் கேட்டா ரெண்டும் தான் நல்லா இருக்கு எனச் சொல்லுவ 

எதுல கூடுதல் அழகு 

அப்படின்னு கேட்டா உன் முகத்துல தான்னு சொல்லுவ

எதுக்கு வில்லங்கம் 

மாமா நல்லா இருக்கேனா இந்த டிரஸ்ல...


💜

நிறைய நிறைய ஆசை. தியேட்டருக்கு போகணும். ஹோட்டலுக்கு போகணும். பைக்ல போனா போகணும். கைகோர்த்து  நடந்திட்டே நிலாவ ரசிக்கணும். உனக்கு சமைச்சு என் கையால் ஊட்டி விடணும். உன் கையால பூ வச்சிக்கிடணும். உன் கையால தாலி கட்டிக்கிடணும். அவ்வளவுதான்.


💜

உங்களைவிட நான்தான் நிறைய லவ் பண்றேன். நான்தான் ஃபீல் பண்றேன். நான் தான் அழறேன். நீங்க எப்பவும் போல தான் இருக்கீங்க. என்ன நீங்க என்ன மாதிரி நிறைய லவ் பண்ணா நான் ஏன் ஃபீல் பண்ணப் போறேன்? நான் ஏன் அழப் போறேன்? லவ் பண்ணு மாமா இன்னும் நிறைய...


💜

வர வர போன் போட்டா எடுக்கிறது இல்ல. நான் தான் உன் பின்னால லூசு மாதிரி திரியுறேன். ஏன்டா என்னை பைத்தியமா ஆக்குன...


💜

இங்க என்னால வாழ முடியாது. மனசே சரியில்ல.  சீக்கிரம் என்னை வந்து கூட்டிட்டுப் போ. இல்லன்னா நாளைக்கு காலைல வீட்டு வாசல்ல வந்து நிப்பேன். உனக்குத்தான் அசிங்கம். உனக்காக வாழுற இந்த தேவதைய எதுக்குடா இப்படி தனியா வரவிட்ட, போய் கூட்டிட்டு வர வேண்டியது தானடான்னு ஊரே உன்னைத்தான் கெடாவும்.


💜

தோள்ல சாஞ்சுக்கிட்டு கதை கேட்டுட்டே டிராவல் பண்ணனும். அதுக்காகவாவது கதைகள் நிறையப் படி. கவிதைகள் வேணாம். என்னைப் பத்தி தான் எதையாவது சொல்லுவ. நீ சொல்லச் சொல்ல வெட்கம் வந்து உன்னை கட்டிப் பிடிச்சுக்கும். தூக்கம் போயிடும்.


💜

உங்க கூட கூரை வீட்டில் வாழ்வதும் வரம் மாமா. என்னைப் பார்க்க எப்படி வருவீங்க. என்னை எங்கெங்க கூட்டிட்டுப் போவீங்க. எனக்கு வெயில் சேராது மாமா. கார்ல போவோம் ரொம்பத் தூரம். I'm waiting மாமா...


யாழ் தண்விகா

 

Sunday, 3 July 2022

என் சில்மிசமும் உன் வெட்கமும்...


❣️

உன் கோலம்

என் வாசல்


உன் பார்வை

என் வானம்


உன் காதல்

என் பூமி


உன் தரிசனம்

என் வீதி


உன் பூரணம்

என் முத்தம்


உன் குழந்தைமை

என் பேரன்பு


உன் வெட்கம்

என் சில்மிசம்


உன் தேடல்

என் கவிதை


உன் உயிர்

என் உடல்


உன் நடனம்

என் இதயம்


உயிர்ப்போடு எப்போதும்

வாழ்ந்துவிடுவோம்

நாம்...


❣️

நீ பார்

நான் உயிர் வாழ

அது கூட போதும்...


❣️

பாராத 

பேசாத நொடியெல்லாம்

வாழாத நேரமே...


❣️

நீ ஆடிய ஊஞ்சலில்

நம் நினைவை வைத்து

ஊஞ்சலாட்டுகிறேன்

நினைவிற்கு அவ்வளவு மகிழ்ச்சி...


❣️

நீ பேசும்போது உயிர்பூத்து

பேசாதபோது 

உயிரணைத்து வைத்துக்கொள்ளும்

காதல் ஜீவன் நான்...


❣️

தேனுண்ட வண்டின் மயக்கக்

கண்களில் விழுந்தேன்

எழவில்லை

எழ இயலவில்லை

எழுவதற்கான அவசியமில்லை


எப்போதும் 

மயக்கம் சூடியிருக்கும்

கண்கள் உனது.


❣️

உள்ளங்கைகளைப் பார்க்கிறேன்

எப்போதோ உன் கரம் பற்றியிருந்த நினைவு

வந்து போகிறது


கன்னங்களில் வைத்துக் கொள்கிறேன் கைகளை

உன் ஸ்பரிச வாசம்...


❣️

என்னடி சின்னச் சின்ன விசயத்துக்கெல்லாம் கோவிக்குற

வரவர என்மேல் உனக்குக் காதல் என்பதே இல்லை


யோவ்

கோவப்பட்டா சமாதானம் பண்ணமுடியாதா

முத்தம் தரக்கூடாதா

கட்டிப்பிடிக்கக் கூடாதா

காதலை பிறகெப்படி வளர்ப்பதாம்...


Mmm சரி கோவிச்சுக்கோ

படிப்படியாக ஆரம்பிக்கலாம்...


❣️

உன் நினைவுச் சுழியின்

ஆழம் சென்றுவிட்டேன்...

சுழல் நிற்கும்வரை

உன் நினைவோடு சுற்றிக்கொள்கிறேன்...


❣️

உன் I Love U ஒவ்வொன்றும்

ஒரு ஜென்மத்திற்கான

சுவாசமளிக்கும்


❣️

I Love U என்பேன்

I Love U so much என்பாய்


இருவருக்கும்

I Love U என்னும் வார்த்தை முத்தமளித்து கௌரவிக்கும்


❣️

I Love U என்பதை

முதன்முறை உன்னிடம் உதிர்த்தபோதே அறிவேன்

அது எனக்கான 

வாழ்வைக் கண்டறிந்து

என்னை ஒப்படைக்கும் வழியென்று


❣️

காதல் அளித்தாய்

மிளிர்கிறது வாழ்வு.


❣️

உன் கையில்

சிறு பொம்மையென்றாலும்

சருகென்றாலும்

நானென்றாலும்

வாழ்வேன் உயிர்ப்புடன்.


❣️

தீராத காதல் நதி

என்னுள் பாய்கிறது உன்னால்.

நீயும் நானும் பயணிக்கிறோம்

வாழ்வை நீராட்டியபடி...


❣️

என் பெருமிதம்

நீ.


❣️

உன் மேலான பசி

அடங்குவதேயில்லை

நீ அருகிலிருப்பினும்

பிரிந்திருப்பினும்...


❣️

நம் சந்திப்பின் பின்

அவரவர் இருப்பிடம் திரும்புகிறோம்

என் தோளில் உன் சாயலையும்

உன் மடியில் என் சாயலையும்

சுமந்தபடி...


❣️

தேர்ச் சக்கரங்கள்

கடவுள் சென்ற பாதையை


உன் பாதணிகள்

தேவதை சென்ற வீதியை


அடையாளம் காண...


❣️

பெரு மழையொன்று

தூவானமாகப் பெய்து

தனதிருப்பை மூர்ச்சையாக்குவதற்கு

எத்தனிக்கும்.


ஒருகாலமும்

காதல் அச்சூழலை

விரும்புவதில்லை.

காதல்

காதலாக வாழும்

வீழ்ந்த போதிலும்.


❣️


பேரருள் வழங்கும்

உன் காதலால்

என் கடவுளானாய் நீ.


போதும்.

வாழ்வு சுபிட்சம்.


யாழ் தண்விகா


 

Saturday, 2 July 2022

ப்பா... என்னைப் பிடிக்கும்ல...


 ❣️

உயிரைக்

கொள்ளையிடும் அழகு நீ

❣️

உன்னோடு பயணித்த இடங்களை

தனித்து விட்டுவிட மனமில்லை

நினைவில் பயணிக்கிறோம்

மீண்டும் நாம்

❣️

கொஞ்சத் தூண்டும்

பப்ளி கன்னங்கள்

முத்தம் கன்னத்திலா

தலையணையிலா

என்ற சந்தேகம் தூண்டும்

❣️

உன் வாசத்தைச் சூடிக்கொண்ட

மரம் நான்

❣️

பேரழகி நீ

உன்மேல் 

பெரும் பித்தனாக நான்

❣️

என் சாம்ராஜ்யம் நீ தான்

அங்கு அடிமை என்பதும்

அருந்தவப் பயன்

❣️

கை வைத்துப் பார்க்கிறேன்

இரு மார்பின் மத்தியிலும்

உன் குரலில் பேசுகிறது 

என் இதயம்.

❣️

உன்னால் நாம் பார்க்கப்படுதல்

என் வரம்.

நீ பார்க்கவேண்டும் என்பது

என் தவம்.

❣️

என்னைத் திட்டணும்

என்னை இன்னும் இன்னும் கொஞ்சணும் 

என்பதற்காகவே கேட்பேன்

ப்பா...

என்னைப் பிடிக்கும்ல...


❤️


யாழ் தண்விகா


கர்த்தர் பிடிக்கும் உனக்கு...


❣️
என் வனத்துப் பச்சையம் நீ.

❣️
கர்த்தர் பிடிக்கும் உனக்கு.
ஆதலால்
உனக்குள் என்னை 
நான் அறைந்து கொண்டேன்.

❣️
நீ பேசப்பேச
இந்தவானம்
மேகமசைத்துச் சிலிர்க்கிறது.

❣️
நாளொருமேனியும்
பொழுதொரு வண்ணமுமாக
மெருகேறுகிறது உன்அழகு.
வைத்த கண் மாறாமல்
கன்னத்தில் கைவைத்து
வேடிக்கை பார்க்கிறது காதல்.

❣️
உன் காலடியில் தொடங்கி
கண்களில் முடிகிறது
என் அபிசேகம்.

❣️
மிச்சமிருக்கும் வாழ்வையும்
வாழ்ந்து தீர்க்கவே
இச்சுவாசம்.

உன்னோடு வாழ்ந்தால்
தீர்வதா இவ்வாழ்வு...!?

❣️
ஒரு வனாந்தரத்தின்
மரங்களினிடை புகுந்து வரும்
வெளிச்சம் போல
நாம் வாழ 
இப்பிரிவிருளினிடையே
ஒரு வரம் வந்து சேராதா
நம் காதல் கரங்களில்...

❣️
உன்னைக் கரம்பிடித்தேன்
வாழ்தலுக்கு உயிர் கிடைத்தது

❣️
என்னிலென்ன எறிந்தாயோ தெரியாது
சுற்றிப்படர்ந்த அலைகளில்
மின்னுகிறது
உன் முகம்

❣️
ஆண்டுகள் கடக்கக்கடக்க
வைரம் பாய்ந்த மரம் உருவாகிறது.
நாம் காதல்பாய்ந்த ஜீவன்கள்.
வாழமாட்டோமா
வாழ்வின் எல்லைவரை.

❣️
தொடுகிறேன்
கவிதையாக
சிலையாக
ஓவியமாக
சிறுகதையாக
இசையாக
நாவலாக
நடனமாக
...
ஏதேனும்
ஒன்றாகி விடுகிறாய்.

மாறாமல் நீயாயிரு
காதல் பேசவேண்டும்.

❣️
உன் திசையில்
எனக்கான வானவில்

❣️
உன்னழகு
என்னைப் பைத்தியமாக்கவும்தானா?

❣️
நீ பேசுவாய்
நான் மிதப்பேன்

❣️
என் கவிதைகளின்
பாடுபொருள் நீ

❣️
உன்னிலிருந்து 
உதிரும் அழகுகளை எழுத்தாக்கிக்
கவிதை என்கிறேன்.
கவி நீதான்.
நானில்லை...!

யாழ் தண்விகா

 

உயிரில் முத்தமிடு...



💝
இது வேறு மாதிரியான மழை
இது வேறு மாதிரியான சாரல்
இது வேறு மாதிரியான காற்று
இது வேறு மாதிரியான குளிர்
இது வேறு மாதிரியான நெருக்கம்
இது வேறு மாதிரியான அணைப்பு
இது வேறு மாதிரியான நெருப்பு
இது வேறு மாதிரியான மீள்தல்...

இன்னும் தூறல்
நிறைவுறுவதாக இல்லை...

💝
ஒரு நெருக்கத்தை
முழுதும் அறியும் முன்னரே
வந்து விழும் பிரிவு
உடைத்து விடுகிறது உயிரை...

💝
பிறவிகள் தோறும் 
உன் காதல் வேண்டாம் 
அதில் நம்பிக்கையில்லை
உன்னைக் காணும் பொழுதெல்லாம்
பிறவிகள் எடுத்துக்கொள்கிறேன்...

💝
உன் வாசனையை
என்னுள் நிரப்பு

உயிர் மணமற்றுக் கிடக்கிறது...

💝
விரிந்து கிடக்கும்
வானமாகிப் போகிறோம் நாம்
நம்முள் கிடக்கிறது
சூரியனும்
நிலவும்
நட்சத்திரங்களும்...

💝
மழை
மண்ணைக் குளிக்க வைத்தல் போல
என்னை குளிக்க வைத்தாய்
சொட்டுச் சொட்டாக...

💝
உனக்கு நினைவிருக்கிறதா
நான் உறங்கும் முன்
எனக்கு நீ முத்தமிடுவது...

இப்போது
உயிருக்கு முத்தமிடு

அது நிரந்தரமாக
கண்ணுறங்கக் காத்திருக்கிறது...

💝
சிக்கிமுக்கிக் கல் உரசல் 
நெருப்பைக் கொண்டு வரும் என்றால்

நம் இதழ் உரசலில் பூப்பது
என்னவாக இருக்கும்...

💝
அதீதங்களின்
மனித அசல்
நீ...

💝
ஒன்று நன்றாய் அறிவேன்...
உன் காதல் இல்லாவிட்டால்
நானெல்லாம் 
நடைபிணம் என்பதன்
அருஞ்சொற்பொருளாயிருப்பேன்...

💝
செத்துவிடத் தோணும்
கணங்களனைத்தும்
உன் நினைவு
கை பிடித்து இழுத்து வந்து
காதலால் அறைகிறது
உடலெங்கும்...

💝
பூக்களின் தேசத்து
தலைமை மலர் நீ...

பூக்களைத் தொடாதீர்கள்
என்ற பதாகையைத்
தாங்கியிருக்கும்
சிறு குச்சி நான்...

💝
என்றும் உன்னைத் தவிர்த்து
என்னைத் தனியாக
நினைத்துப் பார்க்கமாட்டேன்

நான் செத்தாலும்
அதுதான் நிஜம்...

நான் செத்தாலும் 
அதை நீ நம்பமாட்டாய்

அதுவும் நிஜம்...

💝
இந்த வாழ்வு தெளிந்த நீரோடை
என்று சொல்லிக்கொண்டிருந்த
காலங்கள்தான்
காதல் வந்த பிறகு
சுழற்றியடிக்கும் வெள்ளமென
இந்த வாழ்வை மாற்றியமைத்தது
அதில் எந்த இடம் எனக்கு
என எனக்கே தெரியாமல்
ஒரு சருகென 
என்னைத் தூக்கியெறியவும் செய்தது...

💝
இந்தக் கவிதை 
எழுதும்போது
நீ என் அருகில் இல்லை
நான் உன் அருகில் இல்லை
அதனால்தான்
நினைவுகளின் காயங்கள்
இதனை எழுதிக்கொண்டிருக்கிறது...

யாழ் தண்விகா

 




எல்லாம் நீதான்...


 

💜

தீராத காதலில்

தீராத போதை

நாம்...


💜

எல்லாம் பேசுகிறோம்

காதல் இன்னும்

மீதமிருக்கிறது


💜

முதல் சந்திப்பு

முதல் புன்னகை

முதலில் பார்த்த புடவை நிறம்

முதலில் பேசிய வார்த்தை

முதல் அன்பளிப்பு

முதல் ஸ்பரிசத் தீண்டல்

முதல் பிரிவு


மீண்டும் 

அடுத்த சந்திப்பு...

மீண்டும் 

அடுத்த பிரிவு...


அதே காதல்...


💜

பேசிக்கொண்டே இருப்பாய்

எது நீ

எது காதல்

எது காமம்

எது கவிதை...


என்னமோ செய்.

அனைத்தும் அழகு.


💜

முத்தம் கேட்டால்

அள்ளிக்கொள்ள

கைகள் நீட்டும்

தேவதை நீ...


💜

கடந்து செல்வாய்

என் உயிரை 

உன்னோடு

அனுப்பி விடுவேன்...


நான் வைத்து 

என்ன செய்யப் போகிறேன்...


💜

நமக்கான கதவு

நமக்கான தனிமை

நமக்கான நாம்


காதல் தேர்வின் வெற்றியைக்

காமம் கொண்டாடக் கொடுத்தல்

இதம்.


💜

என் காத்திருப்பினைத்

துவம்சம் செய்யும்

வல்லமையுடன்

தாமதமாக நீ வருவதற்கான

காதல் காரணம் 

உன்னிடம் இருக்கத்தான் செய்கிறது...


💜

கருப்பு நிறத்திலும்

பூக்கள் அழகாகத்தான் இருக்கும்

என்றுணர்த்தினாய்

கருப்பு நிறப் புடவையில்

காட்சி தந்த தினம்...


💜

காதல் மின்மினிப் பூச்சி

காம மின்னல்

இரண்டும் நீதான்.


யாழ் தண்விகா

காற்று சிலிர்க்க காதலிப்போம்...!

 


❣️

மழைக் காற்று அலாதி சுகம்

வா

நாமுள்ள இடத்தின் மழையாவோம்

காற்று சிலிர்க்கட்டும்


❣️

கண்கள் எரிச்சலாக இருக்கிறது

உறக்கமின்மையெல்லாம் இல்லை

உன்னைக் கண்கள் உண்டு

நாளாகிவிட்டது


❣️

காதலின் வேர் இப்படியா

பிரிவின் கணங்கள் எங்கும் 

நீண்டு நீண்டு

உயிரைத் துளைத்துக்கொண்டே செல்லும்?


யாழ் தண்விகா