Thursday, 29 January 2026

மதிக்குட்டி #வேல்முருகன்

 


மதிக்குட்டி 

வேல் முருகன் 

பக்கங்கள் 130

விலை 150

Vetrimozhi Veliyeetagam 


கவிஞருக்கு இது நான்காவது தொகுப்பு. பேரன்பின் நன்றிகள் & என்னுரை என இரண்டு இடங்களில் என்னுடைய பெயர் நன்றி கவிஞரே.


தொட்டிலில் தூங்கும் குழந்தையை பார்த்து எவ்வளவு சேட்டை செய்கிறாள் என்று நினைப்பதுண்டு. நல்ல அறிவான குழந்தையாக வருவாள் என்று எண்ணுவதுண்டு. ரொம்ப வினையம் புடிச்ச குழந்தையாக இருக்கிறாளே என்று வேதனைப்படுவதுண்டு. இந்த குழந்தைக்காக நாம் வாழ வேண்டும், இந்த குழந்தையின் ஆசையினை நாம் நிறைவேற்றித் தரும் அளவு வளர வேண்டும், இந்த குழந்தையின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்று தொலைநோக்குப் பார்வையில் சிந்திப்பதுண்டு. இதுபோல் குழந்தைகளை மட்டும் தான் உறங்கும் பொழுது பார்த்து, எல்லை கடந்து ஆச்சரியப்படுதல், வேதனைப்படுவது உண்டு. 


மதிக்குட்டி கவிதைத் தொகுப்பில் குழந்தையின் உலகம் பற்றி அழகாக கூறுகிறார் கவிஞர் வேல்முருகன். குழந்தையின் மேலான அன்பைப் பற்றி கூறும் பொழுது அதைப்போல / அதைவிட மேலாக நம்முடைய குழந்தைகளையும் நாம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வளரும். நாம் பார்த்த பார்வை வேறு. வேல்முருகன் அவர்கள் பார்த்த பார்வை வேறு என்று கூறும் அளவிற்கு எண்ணற்ற கோணங்களில் குழந்தையை பார்த்திருக்கிறார், ரசித்திருக்கிறார், அதை கவிதைகளில் கொண்டு வந்திருக்கிறார். 


"தொட்டிலில் 

இருபுறமும் 

கால்களை தொங்கப் போட்டு

அமர்ந்து 

விழுந்து விடக்கூடாது என்று

இடுப்புடன் சேர்த்து 

கட்டப்பட்ட துண்டின் துணையோடு

தலையை 

ஒரு புறம் நீட்டி 

கால்களின் உந்துதலால் புன்னகையோடு ஆடுகிறாள். 

நம்பி ஆடலாம் மகளே 

அது அம்மாவின் சேலை 

அது அப்பாவின் துண்டு"

முதல் கவிதை இது. நம்பி ஆடலாம் மகளே / அது அம்மாவின் சேலை / அது அப்பாவின் துண்டு - என்ற வரியில் சேலையும் துண்டும் உனக்குத் தரும் பூரண பாதுகாப்பு என்று கூறுகிறார் கவிஞர். உடலுக்குள் உணர்வுக்குள் சில்லிப்பு தட்டும் வரி அது.


குழந்தையிடம் இன்று நாளை நேற்று என்பதற்கு மூன்று காலங்களையும் ஒன்றாக மாற்றி கூறும் லாவகம் இருக்கிறது. அது எதுவும் புரியாத லாவகம். அந்த ஒரு லாவகத்திற்குள் நாமும் மாட்டிக்கொள்ள ஏங்குவோம். மனிதர்களாக உருமாறத் தொடங்கிய பொழுது அனுபவிக்கும் துன்பங்களுக்குள், மீளப் பெறத் துடிக்கும் இன்பங்களுக்குள் இந்த இன்று நேற்று நாளை என்னும் லாவகம் கைக்கு எட்டாமல் போகும். அந்தப் பிரச்சனை குழந்தைகளுக்கு இல்லை.

"மதிக்குட்டி 

எப்போ வந்தீங்க 

என்ற கேள்விக்கு 

நாளைக்குத்தான் வந்தேன் என்ற

உன் பதிலில் 

எதிர்காலம் திகைத்து 

இறந்த காலம் அதிர்ந்து 

நிகழ்காலம் ஸ்தம்பித்தது. 

ஒரு வாக்கியத்தில் 

காலத்தை மாற்றி வைக்கும் சக்தி உன்னிடம் தான் இருந்தது மகளே"

என்ற கவிதையில் காலத்தை ஸ்தம்பிக்க வைக்கக்கூடிய வல்லமை வாய்ந்தவளாக குழந்தைதான் இருக்கிறாள் என்பது புலனாகிறது. 


பல நேரங்களில் குழந்தை தான் நம்மை பாதுகாப்பாக வைத்திருப்பதாக எண்ணுவோம். அதற்கு நாம் ராசி என்ற பெயர் சூட்டிக் கொள்வோம். குழந்தையின் அன்பிற்குள் நாம் வாழ்வதன் பொருள் அதுவாகத்தான் இருக்கும். அதை 

"பாதுகாப்பாய் 

வைத்துக் கொள் 

என்னை. 

சுட்டு விரலை 

இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் 

உன் பிஞ்சு விரல்களுக்குள்"

என்ற வரிகளில் நுட்பமாய் சொல்லிச் விடுகிறார் கவிஞர். 

யார் சுட்டுவிரலை யார் பற்றி இருப்பது என்பதை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்க்கும் பொழுது அன்பின் நிமித்தமாய் குழந்தையின் இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் பிஞ்சு விரல்களால் பாதுகாப்பாக என்னை வைத்துக் கொள் என்பதாக இருக்கிறது. வித்தியாசமான கோணம்.


கவிஞரின் நாத்திகப் பார்வை குழந்தைக் கவிதையையும் விட்டு வைக்கவில்லை. அது இன்னும் குழந்தைக்குள் சென்று சேரவில்லை என்பது மகிழ்வா துயரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

"ஏதும் அறியாத குழந்தை 

தூக்கத்தில் சிரிக்கையில் 

கடவுள் கிச்சுகிச்சு மூட்டுகிறார்

என்கிறார்கள்.

அழுகையில் 

கிள்ளி வைக்கிறார் 

என்கிறார்கள். 

அவன் 

ஒரு விளையாட்டுக்காரப்பயல்.

தூங்குகையில் மட்டும் வந்து

போய்விடுகிறான். 

விழித்த பின்னும் சரி 

வளர்ந்த பின்னும் சரி

எங்கே தொலைந்து போகிறான்"

இந்த கவிதையைப் படிக்கும் பொழுது, குழந்தை முழித்திருக்கும் பொழுது கடவுள் எங்கே செல்கிறான்? என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வந்து போகும். கிச்சுகிச்சு மூட்டுவதும் கிள்ளி வைப்பதும் கடவுள் செயல் அல்ல. அது ஒரு இயல்பான செயல். குழந்தை காணும் கனவு என்று புரிந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார் கவிஞர்.


என்னுரையில் உள்ள கவிஞரின் ஏக்கத்தைத் தணிக்க ஒரு கவிதை...

தொகுப்பில் உள்ள கவிஞரின் கவிதைதான்.

"உன் அண்ணன் தான் 

நான் பெத்த புள்ள 

நீயி என் புள்ள இல்ல 

போ.


போம்மா 

நானு அப்பா புள்ள

ஏம்ப்பா நீதானப்பா என்ன பெத்த"


கவிதைத் தொகுப்பெங்கும் மதிக்குட்டியின் தொகுப்பாக இருக்கிறது. ஆங்காங்கே உள்ள Poondi Jeyaraj திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் தோழரின் ஓவியம் மதிக்குட்டியைக் காணும் அழகு. வெற்றிமொழி வெளியீட்டகம் சார்பில் நல்ல கட்டமைப்பு.


பயணம் தொடர்க. வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


💝

Friday, 23 January 2026

சபலப் பயணி


ஆண்டிபட்டியில் ஒரு மணி நேரமாக காத்துக் கொண்டிருந்தாள் ராணி. திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள சென்று திரும்பி இருந்தாள். இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்தவள் என்று அவளை கூறவே முடியாது. கூடவே மணப்பெண் தோழி என்று கூறுவதை விட மணப்பெண் போலவே காட்சியளித்தாள் அவள். பேருந்து நிலையத்தில் பல கண்கள் அவளையே நோட்டமிட்டுக் கொண்டு இருந்தன. ஆனாலும் பேருந்துதான் வந்தபாட்டைக் காணோம். ஏதாவது பக்கத்து ஊரில் திருவிழா என்றால் பேருந்து விடமாட்டார்கள். ஏதாவது பஸ்ல ரிப்பேர் என்றால் பேருந்து விடமாட்டார்கள். ஏதாவது கட்சி மாநாடு என்றால் பேருந்து விடமாட்டார்கள். ராணி பொறுமையை இழந்து விட்டாள். அதன்பின் சும்மா இருக்கவேமாட்டாள். வாயில் வந்ததெல்லாம் சொல்லித் திட்டுவாள். 

"சனியன் புடிச்சவய்ங்க பஸ் நேரத்துக்கு வந்தே தொலையாது" 

"வெளங்காம போறவய்ங்க" 

"நாசமா போறவய்ங்க"

"எங்க போய் தொலைஞ்சாய்ங்களோ"

என்று கங்கு கணக்கில்லாமல் வார்த்தைகள் வந்து விழுந்து கொண்டிருந்தன. அந்த நேரம் பேருந்து நிறுத்தத்தில் "என்ன மதினி போகலாமா?" என்று குரல் கேட்க, குரல் வந்த திசையில் திரும்பினால்

"என்ன பூமி, என்ன இந்த பக்கம்? வரவா நான்?" என்று கேட்டுக்கொண்டே பைக்கில் ஏறி உட்கார்ந்தாள் ராணி.

"அணைக்கரப்பட்டிக்கு ஒரு விசேஷத்துக்கு வந்தேன். இந்த பக்கம் வந்தோம்னா ஒரு பஸ் கூட கிடைக்க மாட்டேங்குது. நீ என்னா இந்த பக்கம்?" என்று அவள் கேட்க,


"டாஸ்மாக் கடையில் இன்னைக்கு நான் லீவு போட்டு பிள்ளையார் சத்திரம் போயிட்டு திரும்புகிறேன்" என்று அவன் கூறினான்


பைக் போய்க்கொண்டு இருந்தது. அவளுக்கு தன்னுடைய கணவனின் ஞாபகம் வந்தது. ஒழுங்கா அடங்கி ஒடுங்கி வேலை வெட்டிக்குப் போயிட்டு வீட்டுல இருந்தா இன்னைக்கு நான் இரண்டு பிள்ளைகளோட நல்லா இருந்திருப்பேன். வீட்டில் பொண்டாட்டி குத்துக்கல் கணக்கா இருக்கிறா, இந்த லட்சணத்தில் இன்னொருத்திய பாத்துகிட்டு திரிஞ்சா எப்படி இருக்கும்? 


மனசு கேட்காம, "நீ போ சாமி, போ. இந்த ஊர்ல இருக்க வேணாம். போ. நான் வந்து உன்ன பாத்துக்குறேன். அந்த ஊர்ல நீ நல்ல வேலை செஞ்சு, உன் அளவுக்கு சம்பாதிச்சு இருந்துக்க. அது கூடப் போதும்" என்று அவள் தன்னுடைய கணவனிடம் கடைசியாகச் சொன்னதை மனதில் நினைத்துக் கொண்டே வந்தாள்.


மெல்ல தலைமுடி பறக்க, காற்று மோதும் திசையில் தலையை பைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டே வந்தாள். பூமி பைக்கின் முன்புறம் பார்த்து ஓட்ட, இவளும் அவன் பின்னால் இருந்து முன் பாதையை பார்த்தபடியே பயணம் செய்தாள். ஆனால் பூமியின் பயணம் நேராக இருந்தாலும் அடிக்கடி கண்ணாடியில் ராணியை பார்ப்பதும் பார்க்காத விதமாகத் தொடர்ந்து வந்தான். இவளுக்கு "ஏன் இவன் இப்படி பார்க்கிறான்? என்ற ஒரு எண்ணம். "என்ன பூமி, என்னைக்கும் பார்க்காத உலகத்த பாக்குற. பாதையை பார்த்து ஓட்டு. கீழே விழுந்து பல்லக் காமிச்சிராத" என்று முகத்தை கடிந்து வைத்துக் கொண்டு முன்புறம் பார்த்தவள் உட்கார்ந்த திசையிலேயே பார்வையை திருப்பிக் கொண்டாள்.


மீண்டும் ஓர் எண்ணம், தன் கணவன் கூட இருந்தால் இதுயெல்லாம் நடக்குமா. கூனோ, குருடோ வீட்டுல அவன் இருந்திருந்தால் யாரு சாவுகாசமும் இல்லாமல் இருந்திருப்பேன். சொந்தக்காரனாய் இருந்தாலும் இப்படி எவனோ ஒருவனுடன் பைக்ல வரும் சூழல் வந்திருக்குமா? கண்கள் ஓரத்தில் மெல்ல ஒரு துளி கண்ணீர் வந்தது.


சற்று பைக் இடது புறமாக திரும்பி உள்ளே செல்ல தொடங்கியது. "என்ன வண்டி இந்த பக்கம் போகுது?" என்ற உடன் பூமி "ஒரு சின்ன வேலை பார்த்துட்டு போவோம்" என்றான். "என்ன சின்ன வேலை? வண்டியை வீட்டுக்கு விடு. வேலை கெடக்கு. பிள்ளைக வந்து இருக்கும்" என்றாள் ராணி. "மதினி, ரொம்ப நாள் எனக்கு ஒரு ஆசை. உன்னோட நான் வாழனும். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. நீ சரின்னு சொன்னேன்டா பயணியர் மாளிகையில போயி தங்கிட்டு நைட்டு நம்ம வீட்டுக்கு கிளம்பிப் போய்விடலாம். ஒன்னும் பயக்க வேணாம். அங்க இருக்கவங்க எல்லாம் எனக்கு தெரிஞ்சவங்க தான். அங்க ஒரு முறை மட்டும் வா. என்ன சொல்ற? உன்னிடம் நான் கேட்கிறதை விட, நீ வருவ என்ற நம்பிக்கை இருக்கு. இப்ப நாம அங்க தான் போறோம்" என்று கூறிக் கொண்டே பைக்கை வேகமாக ஓட்டினான்.


அவள் கோபத்தின் உச்சிக்குச் சென்று, "இப்ப பைக்க நிறுத்த முடியுமா? முடியாதா?" என்றவுடன் அவன் வண்டியை நிறுத்தினான். பின்னால் திரும்பி பார்த்தான். "ப்ளீஸ், ஒரு தடவை. என்ன ராணி இப்படி பண்ற. எனக்கு உன் மேல எவ்வளவு ஆசை இருக்கு தெரியுமா? நீயும் எத்தனை காலத்துக்கு இப்படியே இருப்ப?" என்று அவன் கெஞ்சும் தொனியில் கேட்டவுடன் பைக்கில் இருந்து இறங்கினாள்.


"யாருன்னு நெனச்சு இப்படி பேசிகிட்டு இருக்க. நீ நினைக்கிற ஆள் கிடையாது. நானும் அந்த கிராமத்தில் தான் இருக்கிறேன். இதை நான் வெளியில் சொன்னாலும் என்னதான் கேவலமா நினைப்பாங்க. உன்னை மாதிரி பலர நான் கடந்து வந்துட்டேன். தங்கம் மாதிரி ரெண்டு புள்ளைங்க இருக்குடா எனக்கு. இப்படியே நீ போயிரு. நான் ஒரு ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு போயிடுவேன்" என்று பின்னால் திரும்பாமல் வேகம் வேகமாக நடந்து செல்ல தொடங்கினாள் ராணி.

Sunday, 18 January 2026

மனசைக் கீறி முளைத்தாய் #மு.முருகேஷ்


மனசைக் கீறி முளைத்தாய்...

கவிஞர் முருகேஷ் மு


வெளிச்சம் வெளியீடு


ஒரு காதல் கதையும்

பல காதல் கவிதைகளும்...


காதலைச் சொல்ல ஓர் ஆகச் சிறந்த வழி கவிதை. காதல் கதை சொல்லவும் அவ்வழியே பொருத்தம் என நினைத்து நீள் கவிதை வாயிலாக நண்பரின் காதலை கூறியிருக்கிறார் கவிஞர். பார்க்காமல் உயிரெங்கும் பரவிய காதல், சொல்லாமல் கொள்ளாமல் பிரிந்து சென்றால் அதன் வலி எப்படியிருக்கும் என்பதை வலிச் சொற்களால் பதிவு செய்திருக்கிறார். தவறும் சந்திப்புகள், குறும்புகள், கனவுகள் என நடைபோடுகிறது காதல். இடையிடையே கவிதைகளும்.


மெதுவாக நட

உன் பாதங்களுக்குக் கீழ்

என் இதயம் - எனும்போது

தானாகவே நம் கண்களும் 

பூமி பார்த்துச் செல்கிறது.


வேதத்தை காதலாக்கியிருக்கிறார் கவிஞர். வேதம் என்பதும் அன்பைப் போதிப்பது தானே.


காதலைச் செய்

பலனை எதிர்பாராதே.


ஒரு கன்னத்தில்

முத்தமிட்டால்

மறு கன்னத்தையும் காட்டு


உனக்கு முன்னால்

என் காதல் செல்லும்


எம்மதமும்

சம்மதம் தான்

காதலுக்கு...

என காதலைப் பொதுமைப்படுத்தியிருக்கிறார் கவிஞர்.


அரசுப் பேருந்து, தனியார்ப் பேருந்தும் கவிதைத் தேராகிவிடுகிறது காதலில்.

அரசுப் பேருந்தைப் போல்

காலியாக இருந்த

என் மனசை

ஒரு நொடிக்குள்

தனியார்ப் பேருந்தைப் போல்

நிறைத்துக்கொண்டு

சென்றவள் நீ

என்கிறார்.


காதல் ஆத்திச் சூடி

அருமையான வார்ப்பு.


அன்பே உயிர்

ஆசை விதையிடு

இதயம் கண்டுணர்

ஈரம் கசி

உள்ளம் உணர்

ஊசி நூலாகுக

எண்ணுக புதுமை

ஏறெடுத்து முகம் காண்

ஐயம் விலக்கு

ஒழிக சாதி

ஓருயிராகுக

ஒளவியம் களை.


ஒழிக சாதி என்பதில் முற்போக்கும் காதலுக்கான தடை சாதி... அது ஒழியவேண்டும் என்பதும் வெளிப்படை. நீளும் ஆத்திச் சூடி இன்னும் சிறப்பு.


வாழ்த்துகள் தோழர். 

Sunday, 14 December 2025

இது என்ன மாயம்... இரவாக நீ... நிலவாக நான்...


 #இது_என்ன_மாயம் #திரைப்படம்


#இரவாக_நீ 

#நிலவாக_நான்...என்ற பாடல்


மழை மனதிற்குள் மெல்ல மெல்ல இறங்கி உயிரின் வேர்கள் பரவும் திசை அனைத்தையும் தொட்டு தொட்டு தொட்டு மெல்ல நிலமெங்கும் படர... பரவ... உயிர்ப்பிக்கிறதா அல்லது மயக்கமடையச் செய்கிறதா என எண்ணக் கூடிய அளவிற்கு ஒரு சுகந்தம் அளிப்பதுபோல்...


எப்பொழுதெல்லாம் மழையில் நனைய வேண்டுமோ அப்பொழுதெல்லாம் நான் இரவாக நீ நிலவாக நான் என்று பாடலுக்குள் குடிபுகுந்து கொள்கிறேன். வேறு மாதிரியாக கூறுவது என்றால் இப்பொழுது எல்லாம் பெரும்பாலும் இந்தப் பாடல் தரும் மழையில் நனைந்து கொண்டு தான் இருக்கிறேன் ஒரு நூறு முறைக்கு மேல் இந்தப் பாடலை கேட்டிருப்பேன்... நனைந்திருப்பேன்...


சாரலுக்கு அடுத்த நிலை. மழைக்கு முந்தைய நிலை... அப்படிப்பட்ட ஒரு பதத்தில்தான் பாடல் தொடங்குகிறது...

உள்ளிருந்து வரும் பெண் குரலில்


"இரவாக நீ 

நிலவாக நான்..."

என ஒலிக்கத் தொடங்கும் பாடல் வரிகளை அடுத்து அப்பெண் குரலை கொஞ்சமும் இம்சை செய்யாமல் ஆண்குரல் அடுத்து தொடங்குகிறது 


"தொலையும் நொடி கிடைத்தேனடி இதுதானோ காதல் அறிந்தேனடி... 

கரை நீ பெண்ணே 

உன்னைத் தீண்டும் அலையாய் நானே ஓ... நுரையாகி நெஞ்சம் துடிக்க..."

விளிம்பில் நின்று வாழ்வைப் பார்க்கும் ஒருவனுக்கு காதல் பரிசு கிடைத்தால் எப்படியிருக்கும் என்பதை பாடல் வரிகளைப் பாடி பார்த்தால் மட்டுமே உணர முடியும்...


கொஞ்சம் இசை கசிகிறது வரிகள் ஏதுமில்லாமல். மீண்டும் பல்லவி வரிகள்.

தொடரும் இசை முதல் சரணத்தின் பாடல் வரிகளைக் கொண்டு வருகிறது....


காதலன் பாடுகிறான்...

"விழி தொட்டதா 

விரல் தொட்டதா 

எனது ஆண்மை தீண்டி 

பெண்மை பூ பூத்ததா..."

ஒரு பார்வை 

பார்த்தவுடன் காதல் 

அந்த காதலைத் தாண்டி கூடல் என்பதை மிகவும் நளினமாக இந்த மூன்று வரிகளுக்குள் அடக்கி இருக்கிற வித்தையை என்னவென்று சொல்வது...

அடடா...


காதலி பாடுகிறாள்...

"அனல் சுட்டதா 

குளிர் விட்டதா 

அடடா என் நாணம் 

இன்று விடை பெற்றதா..."

இந்த மூன்று வரிகளையும் மேற்சொன்ன மூன்று வரிகளையும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வைத்துப் பார்த்தால் இன்னும் ஒரு கவித்துவத்தை உணர முடியும்.


விழி தொட்டதா அனல் சுட்டதா 

விழி தொட்டதால் அந்தப்பார்வை அனல் போல் சுட்டதா 


விரல் தொட்டதா

குளிர் விட்டதா

விரல் தொட்டதால் உடம்பில் படர்ந்திருந்த குளிர் விட்டு விட்டதா

என்று பொருள் கொள்ளலாம்..


எனது ஆண்மை தீண்டி பெண்மை பூ பூத்ததா 

அடடா என் நாணம் இன்று விடை பெற்றதா 

ஒரு பெண்மையை பெண்மை நிலையிலிருந்து வெளிக்கொணரக்கூடிய ஒரு தருணமாக ஒரு ஆகச்சிறந்த காமம் அமையும். அந்தச் சூழலை இந்த வரிகளில் பார்க்கமுடியும் எனது ஆண்மை தீண்டி பெண்மை பூ பூத்ததா என்ற அவனின் கேள்விக்கு அடடா என் நாணம் இன்று விடை பெற்றது என்று இவள் கூறுவதாக பொருத்திப் பார்க்கலாம்...


காதலன் பாடுகிறான் 

"நீ நான் மட்டும் 

வாழ்கின்ற உலகம் போதும் 

உன் தோள் சாயும் இடம் போதுமே..."

பல பாடல்களில் நாம் கேட்டிருப்போம் ஒரு தனி உலகம் அதில் நாம் மட்டும் சுதந்திரமாக காதலை வாழ்வை அனுபவிப்போம் என்று பொருள்படக்கூடிய வரிகள் இருக்கும். ஆனால் இந்த வரிகளில் காதலன் என்ன கூறுகிறான் என்று உற்று நோக்கினால் உனக்கும் எனக்குமான ஒரு தனி உலகம் என்பது முதல்வரி 

ஆனால் அடுத்த வரியில் உன் தோள் சாயும் இடம் போதுமே...

ஒரு உலகம் முழுவதையும் வாங்கிக் கொண்டாலும் உன் தோள் சாயும் இடம் போதுமே என்று கூறும்பொழுது அந்தத் தோள் தரக்கூடிய ஒரு சுகந்தம் வேறு எங்கும் கிடையாது. அந்த உலகத்தில் எங்கும் இல்லாத ஒரு சுகம் அவளின் தோளில் இருக்கிறது. ஆக அது காமத்திற்கு அப்பாற்பட்ட ஒரு காதல். அந்தக் காதல் மட்டுமே இந்த வரிகளை தரமுடியும்.


காதலி பாடுகிறாள் 

"உன் பேர் சொல்லி 

சிலிர்க்கின்ற இன்பம் போதும்

இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்... ஒன்றோடு ஒன்றாய் கலக்க 

என்னுயிரே காதோரம் காதல் உரைக்க..."

இந்த வரிகளை ஒரு பெண் பாடுவது போல் பாடலில் வருகிறது. ஆனால் இந்த வரியைக் கேட்கும் பொழுது ஒரு ஆணாக நானும் அந்த வரிகளை உச்சரித்து பார்க்கிறேன். உன் பேர் சொல்லி சிலிர்க்கின்ற இன்பம் போதும் என்னும் பொழுது அவரவர் மனதில் நிறைந்து இருக்கக்கூடிய அந்தக் காதலியின் பெயரை உச்சரிக்கக் கூடிய ஒரு கட்டளையை இந்த வரிகள் பிறப்பிக்கிறது என்று நான் உணர்ந்தேன். நானும் அவள் பெயரை உச்சரித்து பார்த்தேன் அவ்வளவு அற்புதமாக அந்த வரிகள் இருபாலினருக்கும் பொருந்துவதாக அமைந்திருக்கிறது. 

பெயர் உச்சரிக்கும் அந்த சுகந்தம் என்பது இறந்தாலும் மீண்டும் பிழைப்பதற்கான ஒரு அசாத்தியத்தை சாத்தியப்படுத்துவதாக ஒரு மெட்டு இந்த வரிகளில் காணக்கிடைக்கும். முக்கியமாக இந்தப் பாடலில் வரக்கூடிய என்னுயிரே என்ற ஒரு  சொல் மீண்டும் மீண்டும் மீண்டும் உயிரை ஒரு பாடு படுத்தவே செய்யும். அத்தனை அற்புதமாக அத்தனை இலாவகமாக உயிரை தாலாட்டக்கூடிய ஒரு உணர்வை தரக்கூடிய சொல்லாக அது அமைந்திருக்கிறது.


சரணம் இரண்டில் அவன் பாடுகிறான் "மழை என்பதா 

வெயில் என்பதா 

பெண்ணே உன் பேரன்பை 

நான் புயல் என்பதா..."

 ஒரு பெண்ணின் காதலை எதனுடன் ஒப்பிடுவது 

அதனை கொட்டும் மழை என்று சொல்வதா 

நனைக்கும் மழை என்று சொல்வதா

நனையத் தூண்டும் மழை என்று சொல்வதா 


சுடும் வெயில் என்று சொல்வதா 

இதமாக இருக்கும்  வெயில் என்று சொல்வதா 

ஒரு பயிருக்கு தேவையான அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான வெயில் என்று சொல்வதா 


இத்தனையையும் கேட்டு விட்டு கடைசியாக மீண்டும் ஒரு கேள்வியை முன் வைக்கிறான் 

பெண்ணே உன் பேரன்பை 

நான் புயல் என்பதா 

இந்த மழைக்கும் வெயிலுக்கும் அப்பாற்பட்ட ஒரு பார்வையாக பேரன்பை புயல் என்று நான் கூறி கொள்ளட்டுமா அப்படி புயல் என்றால் அது சாத்தியப்படுமா... 

சில புயல்கள் மண்ணிற்கு மழையைத் தருவிக்கும் 

அந்த மழை மண்ணை வாழவைக்கும்

மண்ணிற்கு தேவையான ஒரு புயலாக இருக்கும் ஆதலால் அந்தப் பேரன்பை புயலோடு ஒப்பிட்டு கேட்கிறான் என்று நாம் நினைத்துக் கொள்வோம்


அடுத்து காதலி பாடுகிறாள் 

"மெய் என்பதா 

பொய் என்பதா 

மெய்யான பொய் தான் இங்கே 

மெய் ஆனதா..."

இந்தக்காதல் என்பது சாத்தியப்படும் பொழுது எல்லாம் வசந்தம் பெறும். எல்லாம் இனிதே நிறைவேறிவிட்டது என்ற எண்ணத்தில் அந்த கனவு வாழ்க்கையை வாழ தொடங்கியதால் இதனை மெய் என்று கூறுவதா 

அல்லது ஒரு கனவு கண்ட வாழ்க்கையை நனவில் அடையத் தொடங்கி விட்டால் அந்த நனவு வாழ்க்கையின் கனவு போலத் தோன்றும் என்பதால் பொய் என்பதா என்று கேள்வியை முன்வைக்கிறான் காதலன்.  இது மெய்யும் இல்லை பொய்யும் இல்லை இரண்டுக்கும் நடுவில் ஆனது என்பதை மனதில் கொண்டு இவள் மெய்யான பொய் தான் இங்கே மெய் ஆனதா என்கிறாள். நன்றாக யோசித்து பார்த்தோமென்றால் ஒரு காதலை அனுபவிக்க மட்டுமே முடியும்.  அது நினைவெனினும் வாழ்ந்து கொண்டிருக்க முடியும்.  ஆக மெய்யான பொய் ஆம் நினைவு என்பதைப்போல இந்த காதலும் மெய்யான பொய் போல நனவு போன்ற கனவு போல கனவு போன்ற நனவு போல அத்தனை அழகானது.


காதலன் பாடுகிறான் 

"அடியே பெண்ணே 

அறியாத பிள்ளை நானே 

தாய் போல் என்னை 

நீ தாங்க வா..."  என்று.

சரணம் ஒன்றில் 

நீ நான் மட்டும் 

வாழ்கின்ற உலகம் போதும் 

உன் தோள் சாயும் இடம் போதுமே

என்றவன் தான் இங்கு 

அடியே பெண்ணே 

அறியாத பிள்ளை நானே 

தாய் போல் என்னை 

நீ தாங்க வா... 

என்கிறான்.


ஒரு தாய் தன்னுடைய தோளில் தன்னுடைய இடுப்பில் தன்னுடைய மடியில் போட்டு தன் குழந்தையைத் தாங்கிக் கொள்வதைப் போல காதலன் தன்னுடைய காதலியை, தாய் போல் என்னை நீ தாங்க வா என்று அழைக்கிறான். வரிகளோடு நாம் பயணிக்க இந்த மெட்டு இன்பத்துடன் கூடிய எளிமையைக் கொண்டுள்ளது. 


காதலன் கேட்டுவிட்டால் காதலி செய்து தராமல் போய் விடுவாளா... ஆகையால் அவனுடைய ஆசையை அவளும் நிறைவேற்றுவதற்கு தயாராகிறாள்... பின்வரும் வரிகள் வாயிலாக...

"மடி மேல் அன்பே 

பொன் ஊஞ்சல் நானும் செய்தே

தாலாட்ட உன்னை அழைப்பேன்..."

இந்த வரிகள் ஒவ்வொன்றும் கற்பனைக்கு எட்டாத ஒரு உலகத்தை கண் முன்னே நிறுத்தும். கற்பனையான வரிகள். ஆனால் அந்த கற்பனையில் வாழ்ந்து பார்க்க தூண்டும் வரிகள்.


தொடர்ந்து 

"ஒன்றோடு ஒன்றாய் கலக்க 

என் உயிரே 

காதோரம் காதல் உரைக்க...

இரவாக நீ  இரவாக நீ

நிலவாக நான் நிலவாக நான்...

உறவாடும் நேரம் சுகம் தானடா..."

என பாடல் நிறைவு பெறுகிறது.


மறைந்த நா.முத்துக்குமார் பாடல் வரிகள். இசை ஜி வி பிரகாஷ் குமார்.

இறப்பிற்கு முன்னான உன்னுடைய கடைசி ஆசை என்னவென்று கேட்டு நிறைவேற்றக்கூடிய சந்தர்ப்பம் ஒன்று அமைந்தால் 

என் முதல் ஆசையாக என்னுடைய காதலியின் மடியில் அவளைப் பார்த்துக் கொண்டே என் உயிர் பிரிய வேண்டும். அல்லது இப்படி பாடலொன்றில் அவளோடு வாழ்ந்து கொண்டு இந்த உயிர் மறைய வேண்டும் என்றுதான் வேண்டுவேன். 


நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு பாடலை நூறு முறை அளவிற்கு கேட்டு இருக்கிறேன் என்றால் அது இந்தப்பாடல் தான். வாய்ப்பு இருந்தால் கண்களை மூடிக்கொண்டு இந்தப் பாடலை ஒலிக்கவிட்டு நீங்களும் கேளுங்கள். மன்னிக்க நீங்களும் வாழுங்கள் உங்களுக்கு பிடித்தமான காதலியோடு அந்த கற்பனை உலகத்தில் நீங்கள் வாழலாம். அதி அற்புதம் காணலாம்.


யாழ் தண்விகா

Monday, 1 December 2025

காதலின் பின் கதவு - பழநி பாரதி

 


காதலின் பின் கதவு

Palani Bharathi

கவிதைத் தொகுப்பு...


 நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு கவிதைத் தொகுப்பை வாசித்தேன். தலைப்பே ஒரு வசீகரத்திற்குள் அழைத்துச் சென்றது முதல் காரணம். கவிக்கோ அப்துல் ரகுமான் முன் கதவு வழியாக அணிந்துரை அளித்திருக்கிறார். 


காதல் கவிதைகள் தொகுப்பு என்றெண்ணி ஆர்வம் மேலிடப்புகுந்தேன் தொகுப்பிற்குள். அதற்கேற்ப உற்சாகம் தூண்ட முதல் கவிதையும்...

"தண்டவாளத்தில்

தலை சாய்த்துப் பூத்திருக்கும்

ஒற்றைப்பூ

என் காதல்


நீ நடந்து வருகிறாயா

ரயிலில் வருகிறாயா?"

எப்போதோ காதல் படிக்கட்டுகள் என்ற நூலில் படித்த கவிதை. இதயத்தை விட்டு இன்றளவும் மறையாதிருந்த கவிதை . ஒரு மனிதனின் காதல் ஏற்கப்படுமா ஏற்கப்படாதா என்பதை உணர்தல் நிமித்தமாக எழுதப்பட்ட கவிதை. சிறப்பு. தொகுப்பின் உள் செல்கிறேன். 


ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு பரிமாணத்தில் மிளிர்கிறது . மலையேற்றம் கவிதை வர்ணனை அழகு.


"உடைந்த 

வளையல் துண்டுகளையாவது 

கொடுத்துவிட்டுப் 

போ


கலைடாஸ்கோப்பில்

உன்னைப்

பார்த்துக்கொண்டிருப்பேன்"


முதல் கவிதை போலவே இதுவும் காதலில் மூழ்கிக் கிடக்கும் மனதின் கவிதை...


மழைக் குரல் கவிதையில் காதல் மழை.  அவள் இல்லாத நேரத்தில் பொழியும் மழை. அது உண்டுபண்ணும் வலியை ஒப்பிட்ட விதம் அத்தனை அழகு அதே நேரத்தில் வலியும் ...


இன்று

நீ இல்லாமல்

விட்டு விட்டு

விடாமல் பொழியும்

இந்த மழையில்

ஒரு மண் குடிசைவாசியாக

மறுகிக் கொண்டிருக்கிறது

காதல்


அதைக் கடக்கும் அடுத்த பத்தியில்

அரசியல் நுழைக்கிறார் கவிஞர் ... ஆனால் அந்த ரசனை வேறொரு உச்சத்தில் .. 

"வெள்ளப் பிரதேசத்தை

ஹெலிகாப்டரில் பார்வையிடும்

பிரதமர் மாதிரி

கண்ணாடி ஜன்னலுக்குப்

பின்னாலிருந்தாவது

கை நீட்டித் தொடு

இந்த மழையை"

என்கிறார் கவிஞர். ஒரு காட்சியை கண்முன் வர வைத்து ஏங்குதலை நிகழ்த்தும் அற்புதம் இது. 

 


உறைந்த நதி என்னும் கவிதையில்

"எந்த நிழலிலும் 

உன் ஆறுதல் இல்லை

எந்த வாழ்த்திலும்

உன் குரல் இல்லை" என்ற வரிகள் உரைக்கும் தலைப்பிற்கான நியாயத்தை .


நீ இல்லாத போது தலைப்பில் 3 கவிதைகள். 

ஒவ்வொன்றிலும்

ஒவ்வொரு ரசனைக்கான கூறுகள்...

"நீ வராத வெறுமையில்

பூங்காவின் காவலாளிக்கு

ஒரு புன்னகையைக் கூட

திருப்பித் தராமல் 

இன்று நான் வெளியேறியது

எத்தனை உறுத்தலானது"

ஒருமுறை காதலிக்காக பூ வாங்கிச் செல்கிறேன். அவள் வரவியலா சூழல் திடீரென. சந்திக்கும் நட்பு அத்தனையிடமும் மெளனம் மட்டுமே பேச்சாக எனக்கு. கவிதையில் உள்ளது போலென்றால் காவலர் போல் எத்தனை மனங்களுக்கு நான் அந்நியமாக இருந்திருப்பேன் என்ற உறுத்தல் தோன்றுகிறது இப்போது...


இப்படிக் கடக்கும் காதல் கவிதைகள் சட்டென வேறு பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது.


உலகம் பயணிக்கும் பாதை, பெண் குறித்த கவிதைகள், நடிகைக்கு, நகைக்கு, தாத்தாவுக்கு ஒரு கவிதை என நீள்கிறது.


செடி மகள் என்ற கவிதையில்

"செடியை வளர்ப்பது 

சுலபமாக இருக்கிறது

பூக்களைப்

பத்திரப்படுத்துவதுதான்

எப்படியென்று தெரியவில்லை" ...

வன்புணர்வு குறித்த வலி உயிரெங்கும் பரவுகிறது வரிகள் வாயிலாக ...


இரத்தத்தின் நிறம் பச்சை என்ற கவிதையில்

தாயாக, மனைவியாக, குழந்தையாக என உயிர் உறவுகளை ஒப்பிட்டு மரத்தின் உச்ச குணத்தினை அழகுறக் கூறியுள்ளார். 


ரயிலில் வந்த 3 வது கவிதை.

"எங்கு இறங்குவாள் 

என்று தெரியாது

எதிரில் உட்கார்ந்திருந்தாள்


அவளிடம் கொஞ்சம்

தண்ணீர் கேட்க நினைத்து

கேட்காமலேயே

கண்ணயர்ந்துவிட்டேன்


விழித்தபோது

அவள் இல்லை

இருந்தது

ஒரு தண்ணீர் பாட்டில்"

எத்தனை பரவசம் அளித்திருக்கும் அந்த கணம். தாகம் தோற்றுவிக்கிறது ரயிலில் கிடக்கும் அந்தத் தண்ணீர் பாட்டில் ...


"நான் யோசித்துக் கொண்டிருப்பேன்

தடயங்களற்றுப்

பறக்கும் சுகத்தை" என்கிறார் கவிஞர் ...

தொகுப்பானது உலகில் தடம் பதித்து ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனாலும் சம காலத்திற்கும் பொருந்தும் பொருண்மையால் இது கவிஞர் பழநி பாரதி அவர்களின் தடயம் என இன்னும் பறைசாற்றிக் கொண்டிருப்பதே போதும் கவிதைக்கான வெற்றியெனக் கூற...


வாழ்த்துகள் கவியே...


யாழ் தண்விகா

Saturday, 15 November 2025

நிலா காயுது - பாடல்

 


காமத்தின்போதான பாடல் எப்படி இருக்கவேண்டும் என்று இளையராஜா என்ற மகான் இசை வழியே பல படங்களில் பாடம் எடுத்துள்ளார். அதில் ஒன்றுதான் சகலகலா வல்லவன் என்ற படம். முறையே அப்பாடல்கள்

நிலாக் காயுது நேரம் நல்ல நேரம்...

நேத்து ராத்திரி எம்மா...

இதை உணர்வுப் பூர்வமாக உணர அந்தப் பாடல்களைக் கேளுங்கள். 


இரவின் கூர்மை என்பது காமத்திற்கு எப்படி உகந்ததாக இருக்கும் என்பதை இசையில் இவர்போல உணர்த்தியவர் யாருமில்லை என்றே சொல்லலாம். மலேசியா வாசதேவனின் குரல் ஜானகியின் குரலில் குழைந்து உருகியிருப்பதும் கேட்கக் கிடைத்த அபூர்வம். இன்று இது போல சூழல்கள் படங்களில் இடம்பெறவில்லை என்பது உண்மை. இருந்தாலும் ராஜாவின் காமம் சார்ந்த பாடல்கள் போல அவை இருக்காது என்பதும் உண்மை. மாசி மாசம் ஆளான பொண்ணு இசையை எடுத்தும், நிலாக்காயுது பாடலில் வருகிற இடையிசை மற்றும் குரல் ராகத்தை (தண்ணி கேட்டியே புள்ள... என்பதற்கு முன் வரும்... குரல்களும் இசையும்... முடிவில் ச்சீய்...) எடுத்தும், கட்டிப்பிடி கட்டிப் பிடிடா பாடலுக்குப் பயன்படுத்தி  குஷி படத்தில் தேனிசைத் தென்றல் தேவா வெற்றி கண்டிருப்பார். இன்றும் என்றும் நிலவைக் குறித்து பல பாடல்கள் வந்து போனாலும் இடையில்/குறுக்கே வந்து மென் புன்னகையை வன்மமாகச் சிரித்து வைத்துப் போகும் இந்தப் பாடல். ஆம் இதுவும் நிலாப் பாடல் தான். காமத் தனிமை.

https://youtu.be/sxh8JP4obiU


❣️

Sunday, 9 November 2025

பெறுநர், தேவதை, வானவில் வீதி - 143 #துளசி வேந்தன்


பெறுநர், தேவதை, வானவில் வீதி – 143

துளசி வேந்தன் 

படைப்பு பதிப்பகம்

விலை : 100

பக்கங்கள் : 116


காதலாகிப் போன கவிஞனின் கவிதைகள்...


நாடி, நரம்பு, எலும்பு, தசை அத்தனையிலும் காதலால் ஆன மனிதரால் தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும் என்றெண்ணும் வகைக் கவிதைகள். தபூ சங்கரை வாசிக்கும்போது உண்டான வியப்பையும் கடந்து நிற்க வைத்துவிட்டன கவிதைகள். பதிப்பாளரும் கவிஞருமான Mohamed Ali Jinna தோழர் அவர்கள் தன்னுடைய பதிப்புரையில் ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராகப் பணி புரிவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனக்கென்னமோ காதல் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறாரோ என்று தோன்றுகிறது. கவிஞர், தன்னுடைய நூலை மனைவிகளையும் காதலிகளையும் தேவதைகளாய் கொண்டாடித் தீர்க்கும் மொத்த ஆடவர் உலகத்திற்கும் சமர்ப்பணம் செய்துள்ளார். அது, மனைவிகளையும் காதலிகளையும் “தேவைதைகளாய்” கொண்டாடித் தீர்க்கும் மொத்த ஆடவர் உலகத்திற்கும் சமர்ப்பணம் என்று உள்ளது. பிழையாக இதைக் கருத முடியவில்லை. மனைவியோ காதலியோ இல்லாமல் அது ஒரு வாழ்வா... காதலுக்கும் காதலிக்கவும் அவர்கள் இல்லாமல் எப்படி... இவை போன்ற கவிதைகளை உடனிருந்து ரசிக்கக் கிடைத்த மனைவிகள், காதலிகள் கொடுத்து வைத்தவர்கள். மனித வாழ்வு சுபிட்சம் பெறத் “தேவை” தேவதைகள்...!


தபூவின் கவிதை ஒன்று...

“பல நூற்றாண்டுகள் ஆகுமாமே

ஒரு வைரம் உருவாக

நீ மட்டும் எப்படி

பத்தே மாதத்தில் உருவானாய்” தேவதைகளின் தேவதை விகடனில் வெளிவந்த காலத்தில் படித்தவுடன் சிலிர்த்த காலம் அது. கவிஞர் துளசி வேந்தன் தொகுப்பின் முதல் கவிதையாக கீழ்க்கண்ட கவிதையை வைத்துள்ளார்.

“நீ சிசேரியன்

செய்துதான் பிறந்தாயாமே?

என்ன செய்வது,


வெட்டித்தானே 

எடுக்கவேண்டும் வைரத்தை!” மிரண்டுட்டேன் கவிஞரே. சிசேரியனை இப்படியெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா... காதலி கொடுத்து வைத்தவர். (காதலியின் அம்மா ஓரமாக நின்று தனக்கு செய்யப்பட்ட சிசேரியனையும் சிசேரியனுக்கான காரணத்தையும் மருமகன் எழுதிய கவிதையை வைத்து (மகளுக்காக) ரசித்துக்கொள்ளவும்!)


“உன் அரை மணி நேர அலங்காரம்

நான் அரை நொடியில் 

கலைக்கத்தானே...” 

என்கிறது ஒரு கவிதை.

கொஞ்சம் பொறுமையும் கொஞ்சும் கால அவகாச நீட்டிப்பும் காதல் கேட்கிறது கவிஞரே. செவி மடுக்கவும்.


காவல் நிலையமா? காதல் நிலையமா? குழப்பம் தந்துவிட்டது ஒரு கவிதை. ஆனால் விழும் அடி ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று உயிரைக் கேட்க வைக்கிறது. 

“விசாரணை என்று

காதல் நிலையம் அழைத்துவந்து


வெட்கத்தால் அடிக்கிறாய் நீ!”

வலிக்குமா என்ன வெட்க அடிகள்...!


மச்சம் என்றால் என்ன? என்பதற்கு விளக்கம் தருகிறது ஒரு கவிதை. மச்சமே விழித்துப் பார்க்கும் கணம் அது.

“உன் அழகில்

பிரம்மன் மெய்மறந்த 

இடமெல்லாம்,


“மச்சங்கள்”.


தொகுப்பெங்கும் துணுக்குகள் போலிருக்கும் ஒவ்வொன்றும் கூட மின்மினிகளாய் கவிதை வாசம் பரப்புகிறது.

“ஆயுள் சந்தா கட்டி

படிக்கவேண்டிய இதழ்

உன்னுடையது”

“அடிக்கும் பறை நானுனக்கு

அதிர்வுகள் நீயெனக்கு”

“குழந்தை போல

பேசுமுனக்கு

முப்பத்தி இரண்டும் 

பால் பற்கள்”

“உன் நிழலுக்கு

நெத்திச் சுட்டியாய்,

உதிர்ந்த பூவொன்று...” (22 & 28 இரு பக்கங்களில் உள்ளது)


மதங்கள் நிறைய இருந்தாலும் மும்மதம் மட்டுமே பிரதானமாக சொல்லக் கேட்டிருக்கிறோம். தொகுப்பில் மூன்று மதம் சார்ந்த கவிதைகள் சொல்லி, காதலின் மதச் சார்பின்மையைக் காட்டுகிறார் கவிஞர். காணும் காட்சி யாவும் காதல் என்றால் மதமும் காதலாதல் சரிதான்.

“அய்யர் உன் தலையில்

சடாரி வைக்கும்போது

அனிச்சையாய் குனிகிறார்

பெருமாள்”

(சடாரி என்றால் பெருமாளின் திருப்பாதமாகப் பாவித்து தலையில் வைக்கப்படும் கிரீடமாம். கூகுள் சொன்ன தகவல். இன்னைக்குத்தான் தெரியும்)

“நீ சொல்லும்

ஸ்தோத்திரங்கள்


சிலுவையில் அறையுண்ட

இயேசுவுக்கு ஒத்தடங்கள்”


உசைன் பாய்

சாம்பிராணி தூவி

தூபமிட்டுப் போவது போலவே

நீயுன் வெட்கத்தைத் தூவி

காதலிட்டுப் போகிறாய்...”

சநாதனத்திற்கு எதிராக, எல்லா மதத்தையும் சமமாகப் பாவித்து காதலிட்ட கவிதைகள் படைத்திட்ட கவிஞருக்கு வாழ்த்துகள்...


ஒன்றிரண்டு கவிதைகள் ஒரே சாயலில் இருக்கிறது கவிஞரே.

“புயலுக்குப் பெயர் சூட்டும்

வழக்கத்தைக் கண்டுபிடித்தது

உன் அப்பன் தான்...”

“நான் மட்டும் 

வானிலை ஆய்வுத்துறையில்

இருந்திருந்தால்

உன் செல்லப் பெயர்களைத்தான்

புயல்களுக்குச் சூட்டிக் கொண்டிருப்பேன்...”

(போலவே 28 ம் பக்க பிள்ளையார் கவிதையும் 110 ம் பக்க கண்ணாடிக் கவிதையும்...) கூறியது கூறல் ஒரு குற்றம் என்பார்கள். காதலில், காதல் கவிதைகளில் குற்றம் காண்பது தவறு என்றாலும் சொல்லி வைக்கிறேன்.


அறிவியலைக் காட்சிப்படுத்துவது போல பல கவிதைகள். கற்பனை எண்ணத்தை ஓடவிட்டு காதலை ரசிக்க வைக்கிறது வரிகள்.

“இரவும் 

மழையும்

சன்னலும்

மின்னலும்

உன் முகமும்

ஒரே நேர்கோட்டில்

சந்திக்கிற நிகழ்வுதான்

எனக்குக் காதல் கிரகணம்”

எப்படியெல்லாம் மனுஷன் யோசிக்கிறார் என யோசிக்க வைக்கிறார் கவிஞர். இப்படித்தான் போகிற போக்கில் பெரும் ஏக்கமொன்றையும் கவிதையாக்கி வைத்திருக்கிறார் கவிஞர்.

கனவில் கூட 

கதவடைத்துக்கொண்டுதான்,

ஆடை மாற்றுகிறாய்

நீ...”


காதலில் நனைந்து, மூழ்கி, திளைத்து, அதற்குள்ளேயே மூர்ச்சையாக்குவதுபோல கவிதைகள். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பது போல காண்பவை யாவும் காதலாகவே தெரிவது கவிஞருக்கு கிடைத்த வரம்தான். அட, ஆமால்ல… அடடா... ப்ச் என்னா மனுஷன்யா... கவிஞன்யா... என்று வாசிக்கும்போது நம்மை உச்சரிக்க வைத்த சொற்கள் அனைத்தும் கவிஞருக்கான மகுடங்கள். அவை எப்போதும் கவிஞருக்குக் கிடைக்கும். கவிஞரின் பார்வைக்கு பேரன்பு.

“சிவாஜிகணேசன் நடிக்குமளவு

இல்லையென்றாலும்

ஓரளவு காதலிக்கத் தெரியும் உன்னை” என்கிறார் கவிஞர். ஓரளவில்லை. மிகச் சிறப்பாகவே காதலிக்கிறீர்கள். இலக்கிய உலகிலும், சமூகத்திலும் காதல் பரவ, காதலைக் கொண்டாட கவிதைகள் படைத்துக் கொண்டேயிருங்கள். அட்டைப்படம் சிறப்பு. வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️