Sunday, 18 June 2023

இருட்டு எனக்குப் பிடிக்கும் - ரமேஷ் வைத்யா


இருட்டு எனக்குப் பிடிக்கும்


சிறார் நாவல்


ரமேஷ் வைத்யா


நீலவால்குருவி வெளியீடு


அருகே அமர்ந்து தோளில் கைபோட்டு பேசும் ஒரு மனிதன் போல மேடைப் பேச்சே இருக்கும் தோழர் ரமேஷ் வைத்யாவிற்கு. தேனியில் Visagan Theni தோழர் நடத்திய பல மேடை நிகழ்வுகளில் அவரின் பேச்சினைக் கேட்டிருக்கிறேன். உலக தகவல்களை, கவிதைகளை, சினிமாவை அவர் கையாளும் லாவகம் அவ்வளவு அழகாக இருக்கும். எதையும் ஏனோ தானோவென்று அணுகாமல் உயிர்ப்புத் தன்மையுடன் பேசும் வல்லவன். அவர் எழுதி நான் வாசிக்கும் முதல் நூல் இது.


தினமலர் பட்டம் இணைப்பில் வெளிவந்த தொடர் நூலாகி இருக்கிறது. கதை என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது நம் வாழ்க்கையை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் அறிவுக் கருவி என்கிற புரிதலோடு எழுதிய கதை என்கிறார் தோழர். ஊர் சுற்றல் என்றாலே குழந்தைகளுக்குக் குதூகலம் பிறந்துவிடும். அப்படி ஊர் சுற்ற மேகமலைக்குக் கிளம்பும் சுட்டீஸ் கண்ணன், ரவி, ராகினி, குமார், ஷீலு, ஜோ, மற்றும் வாகன ஓட்டுநர். சென்று நன்றாகச் சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பும் மாலை நேரத்தில் மழை பொழியத் தொடங்குகிறது. ஜோ ஒரு பக்கம் சென்று விடுகிறான். மற்ற அனைவரும் காரில் ஏறுகின்றனர். கார் வேகமாகச் செல்கிறது. திடீரென மரம் குறுக்கே விழுந்து கிடக்கும் மரம் கண்டு வாகனத்தை நிறுத்துகிறார் ஓட்டுநர். பின்னால் பாறைகளும் மண்ணும் சரிந்து பின்னால் போகவும் வழியற்ற சூழல். அப்போதுதான் ஷீலுவும் வாகனத்தில் இல்லாததைப் பார்க்கின்றனர். இரவு நேரம். ஜோ, ஷீலு என்ன ஆனார்கள்? வாகனத்தில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்? இதுதான் நாவலின் சாராம்சம். 


காடு பற்றி தோழர் நாவலில் ஓரிடத்தில் சொல்கிறார், எவ்வளவுதான் சொன்னாலும் காட்டின் அழகு வார்த்தையில் வராது. நேரில் பார்க்கையில் காட்டின் அழகில் வார்த்தை வராது. எவ்வளவு அருமையான வரிகள்...! நாவலில் காடு, கரடி, பறவைகள், மேகங்கள், மலைகள், குரங்குகள், வனவாசி, வன அலுவலர்கள் எல்லாம். 


இக்காலக் குழந்தைகளின் பொழுதுபோக்கு என்பது தொலைக்காட்கி, அலைபேசி என்று முடிந்து விடுகிறது. ஆனால் அவர்கள் அறியவேண்டிய அனைத்தும் அதிலேயே இருப்பதாகக் கருதினால் அவர்களின் வாழ்வு ஒரு கருவியின் வாழ்வாகவே அமைந்துவிடும். அதை மாற்ற கதை முயல்கிறது. காட்டின் தேவை பற்றி சொல்லாமல் சொல்கிறது. மலைவளம் பற்றிக் கூறுகிறது. அங்குள்ள சூழல் பற்றிச் சொல்கிறது. காட்டில் தனியாக வரும் யானையின் குணம் பற்றி அறிய வைக்கிறது. வன மக்களின் குணாதிசியம் கூறுகிறது. விலங்குகளின் உதவும் குணம், விலங்குகளின் குழந்தைப்பாசம், ஆபத்தான நேரத்தில் வன அலுவர்களை தொடர்பு கொள்ளவேண்டிய அவசியம் பற்றிச் சொல்கிறது. எல்லாம் குழந்தைகளின் மொழியில், குழந்தைகள் உணரும் வகையில். 


என்னுரையில் வைத்யா தோழர் கேட்டுக்கொண்டதைப்போல, “படித்துவிட்டு, படிக்கச் செய்துவிட்டு, இது உங்கள் குழந்தைகளுக்கு எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருந்தது என்று தெரியப்படுத்தினால் மகிழ்வேன்” நானும் இதை என் குழந்தைகளுக்கும் (வீட்டில்/பள்ளி திறந்த பின் பள்ளியில்)  கொடுத்து வாசிக்க வைத்து அவர்கள் அனுபவம் கேட்கவேண்டும். காரணம் காடு. அதை அழித்து வருகிறது மனித சமூகம். காட்டைப் பேணுவதை குழந்தைகளில் இருந்து தொடங்கவேண்டும். அதற்கு இந்த நாவல் தொடக்கமாக இருக்கவேண்டும். இருக்கும். 


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா

 

Sunday, 29 January 2023

சீமையில் இல்லாத புத்தகம் #தேனி சுந்தர்


 










சீமையில் இல்லாத புத்தகம்

தேனி சுந்தர்

பாரதி புத்தகாலயம்

112 பக்கங்கள்

100 ரூபாய்


குழந்தைமையில் தூளி கட்டிக்கொண்ட உலகம்


தோழர் Visagan Theni  தன்னுடைய முகநூலில் பகிர்ந்திருந்த ஒரு கவிதையைப் பார்த்தேன், சீமையில் இல்லாத புத்தகம் என்ற புத்தகத்திற்கு வாசிப்பனுபவம் தயார் செய்ய எத்தனிக்கும்போது. மகேஷ் சிபி எழுதிய அக்கவிதை பின்வருமாறு.

“மின்கம்பியில் வரிசையாய் குருவிகள்

கவிதை வேண்டுமென்பவர்கள்

ஒருமுறை கை தட்டுங்கள்”.

 எவ்வளவு எவ்வளவு கற்பனைகளை, கதவுகளை, காட்சியை மனதிற்குள் கொண்டுவந்தது தெரியுமா இவ்வரிகள். இதே காலகட்டத்தில்தான் மதுரையைச் சேர்ந்த பெற்றோர் இருவர், தன்னுடைய 4 வயது குழந்தையைப் பள்ளியில் சேர்த்துவிட்டு அவனைக் கண்டித்து வளர்க்க, படிக்க வைக்க  4 அடி பிரம்புக் கம்பு ஒன்றைப் பள்ளி ஆசிரியரிடம் கொடுத்து அதனைப் புகைப்படமாக எடுத்து ஊடகங்களில் பகிர்ந்து வருவதும். இருவர் அன்பில் ஒருவராக வாழ்தல் வாழ்க்கை. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்றெல்லாம் அன்பை மையப்படுத்தி வாழ்ந்த வாழ்வைச் சுக்குநூறாக்கும் விதமாக 4 வயது மகனும் 4 அடி பிரம்புக் கம்பும் என்ற வார்த்தைகள் என்னுடைய மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. இங்கே சைக்கோத்தனத்தில் ஒருமித்த கருத்துடன் குழந்தையை அடிக்க பிரம்புக்கம்பு என்ற ஆயுதம். எப்படி அந்தக் குழந்தை வீட்டில் வசிக்கப்போகிறதோ என்ற அச்சம் தான் மீண்டும் மீண்டும் மேலெழுகிறது. இப்போதெல்லாம் அடியாத பிள்ளை படியாது, ஆடுற மாட்ட ஆடித்தான் கறக்கணும், பாடுற மாட்ட பாடித்தான் கறக்கணும், முருங்கைக்காய ஒடிச்சு வளக்கணும் பிள்ளைகள அடிச்சு வளக்கணும் என்பது போன்ற பழமொழிகளுக்கு வரவேற்பு அதிகம்.

 இந்த இடத்தில்தான் மேற்சொன்ன கவிதையைப் பார்க்கிறேன் நான். மின்கம்பியில் வரிசையாய் குருவிகள் என்பதனை பள்ளிக்கூடத்தில் வரிசை வரிசையாய் குழந்தைகள் எனப் பொருள் கொள்ளலாம். கவிதை வேண்டுமென்பவர்கள் ஒருமுறை கை தட்டுங்கள் என்பதற்கு மாணவர்களின் திறன் அறியவேண்டுமென்பவர்கள் ஒருமுறை மெதுவாகக் கை தட்டுங்கள் என்பதே பொருளாக இருக்கவேண்டும் என்று நான் பார்க்கிறேன். மெதுவாகக் கைதட்டுதல் என்பது ஆசிரியர்கள். மெதுவாகக் கை தட்டுதல் என்பதற்குப் பதிலாக ஓங்கி என்றிருக்கலாம். ஒரு வெடிகுண்டை வெடிக்கச் செய்யலாம். ஆனால் குழந்தைகளின் மனநிலை என்னாவது? குழந்தைகளின் மனம், மகிழ்வில் சிறகடித்துப் பறக்கும்போது எல்லாம் சிறப்பாகும், கல்வி, கலை எதுவாயினும். இதனையே நான் கவிதையில் காண்கிறேன். சீமையில் இல்லாத புத்தகம் தொகுப்பைப் பொருத்தமட்டிலும் இங்கு பறவைகளாக டார்வின், புகழ்மதி, கீர்த்தி இருக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது  வரிசையாகவோ, கலைத்துப்போட்டோ அமர்கிறார்கள்.  அவர்களுக்கென யாரும் கை தட்டவில்லை. அவர்களாக பறக்கிறார்கள். இதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் கலைஞனாக மட்டும் தோழர் தேனி சுந்தர் இருக்கிறார். அதை தனது நூலில் பதிவு செய்திருக்கிறார். அவ்வளவும் அவ்வளவு சுவாரசியத்தைத் தூண்டும் வண்ணம் அமைந்திருக்கிறது. 

மீண்டும் அக்கவிதையை வாசியுங்கள்.

“மின்கம்பியில் வரிசையாய் குருவிகள்

கவிதை வேண்டுமென்பவர்கள்

ஒருமுறை கை தட்டுங்கள்”

-மகேஷ் சிபி


 சீமையில் இல்லாத புத்தகம், முழுக்க குழந்தைமையைக் கொண்டாடும் புத்தகம். கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்குத் தெரியும், ‘ஊர்ல இல்லாத அருவமா பிள்ளையப் பெத்து வச்சிருக்கா, என்னமோ சீமையில இல்லாத பிள்ள மாதிரி இப்படி கொஞ்சிட்டிருக்கா, இதெல்லாம் எங்க போயி முடியப்போகுதோ”  என்றெல்லாம் ஒரு தரப்பு அங்கலாய்ப்பதையும் அதைக் கண்டுகொள்ளாமல் தாயானவள் குழந்தையைக் கொஞ்சுவதையும் பார்த்திருக்கலாம்.  தாயானவள் கொஞ்சும் சீமையிலில்லாத குழந்தை போல, நாம் கொண்டாடக் கிடைத்த சீமையில் இல்லாத புத்தகம் இது. இது குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்க்கு மட்டுமல்ல, குழந்தைகள் பெற்று பேரன், பேத்தி பார்த்தவர்களும் படிக்கலாம். பதின் பருவத்தினரும் படிக்கலாம். குழந்தையைக் கொஞ்சும் யாவரும் படிக்கலாம் என்பது இந்நூலிற்கான சிறப்பம்சம். வளரும் சமுதாயம் இது போன்ற நூல்களைப் படிக்கும்போது குழந்தைகளின்மேலான வன்முறை என்பது தவிர்க்கப்படும், தடுக்கப்படும் என்பது திண்ணம். 

 பள்ளியில் குழந்தைகளிடம் அந்தந்தப் பருவத்திருக்குரிய பாடப் புத்தகங்களைக் கொடுத்தவுடன் செய்யும் செயல் என்ன தெரியுமா? புத்தகத்தில் முதலில் அவங்கவங்க பேர எழுதுங்க என்று  ஏற்கனவே சொல்லியிருப்பார் ஆசிரியர். அந்த பணியை முடித்தவுடன் குழந்தைகள் ஒவ்வொரு பக்கமாக எடுத்து படங்களைப் பார்த்து முடித்துவிடுவார்கள். புத்தகத்தையே படித்து முடித்த அயர்ச்சி தோன்ற புத்தகத்தை மூடி வைத்துவிடுவார்கள்.  இதனைப் போன்றதொரு பதிவை கீழ்க்கண்டவாறு பதிவு செய்திருப்பார் தோழர்.

“அறுபது பக்க புத்தகத்த

அஞ்சே நிமிசத்துல 

படிக்க முடியுமா?


புகழ்மதி படிச்சுட்டாங்க


ஒவ்வொரு பக்கமா புரட்டுவாங்க

படம் இருக்கும்

பக்கத்த மட்டும் பாப்பாங்க


இது அம்மா

இது அண்ணன்


இது அக்கா

இது அப்பா


இது போனு

இது வீடு


இது டி‌வி

இது மரம்


இது போனு

இது குருவி

இது கண்ணாடி

இது காரு

இது பாட்டில் தண்ணீ


நான் படிச்சு முடிச்சிட்டேன்ப்பா

இன்னொரு தடவ படிக்கவா?

புகழ்மதியின் இந்தக் கேள்விக்கு போதும் படிச்சது என்றால் இன்னும் நாம் குழந்தைமையை ரசிக்கத் தொடங்கவில்லை என்று பொருள். தோழரின் பதில் என்ன தெரியுமா?

ம்‌ம்... சூப்பர் பாப்பா.

குழந்தைமையைக் கொண்டாடும் ஒருவரின் பதில் இப்படித்தான் இருக்கும். குழந்தைமை இன்னும் சிறக்க விரும்பும் ஒருவரின் பதிலும் இப்படித்தான் இருக்கும். இந்த பதிலுக்காக தோழருக்கு நானும் சொல்லிக்கொள்கிறேன் “சூப்பர் தோழர்....” 


 அங்கொன்றும் இங்கொன்றுமாக குறித்து வைத்துக்கொண்டு கொண்டாட இத்தொகுப்பல்ல. அங்கிங்கெனாதபடி எல்லாம் சிறப்பாக அமையப்பெற்ற ஒரு குழந்தைமையைக் கொண்டாடும் தொகுப்பாக இப்புத்தகம். குழந்தைகளின் ஏக்கம் தீர்க்கும் தகப்பன் தான் கடவுள். இயலாத ஒன்றைச் சொல்லும் குழந்தையிடம் சொல்லிப் புரியவைக்கும் தகப்பன் கடவுளுக்கும் கடவுள். ஒரு குழந்தை தன்னுடைய அப்பாவிடம் தன்னைத் தூக்கச் சொல்கிறாள். அப்பா அமர்ந்தவாறே ம் என்கிறார். குழந்தை எந்திரிச்சு நிண்டு தூக்குப்பா என்கிறாள். தூக்கியவுடன் மேலே தூக்கிப் போடுப்பா என்கிறாள். அதனையும் செய்தாயிற்று. முத்தம் கொடுப்பா என்று கேட்கிறாள். அதனையும் செய்தாயிற்று. கடைசியாக இனிமேல் நீயும் அம்மாவும் என்னய மட்டுந்தான் தூக்கணும் என்கிறாள். அதற்கும் சரி பாப்பா என்று அப்பா சொல்கிறார். இதையெல்லாம் எதற்காக குழந்தை சொல்கிறாள் என்றால் ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கு. அதனால்தான் குழந்தை இதனை ஒரு ப்ரோட்டோகால் போல செய்யச் சொல்லி கடைசியாக இனிமே நீயும் அம்மாவும் என்னைய மட்டுந்தான் தூக்கணும் என்று கட்டளையும் விதிக்கிறாள். இதைப் புரிந்த அப்பா, சம்பந்தப்பட்ட பாப்பாவுக்கு நாளைக்கு இருக்கு பதிலடி என்று முடிக்கிறார்.

“யாரோ ஒரு அப்பா

யாரோ ஒரு பாப்பா

கொஞ்சல் நடந்திருக்கணும்

இல்ல கிண்டல் நடந்திருக்கணும்

அதான் இந்த ரியாக்சன்.

எங்க அப்பாவுந்தான் என்னய தூக்குச்சு

 தூக்கிப்போட்டுப் புடிச்சுச்சு

எங்க அப்பாவுந்தான்

எனக்கு முத்தங்கொடுத்துச்சு

எங்க அப்பாவுந்தான் ஏங்கூட வெளையாடுனாரு” என்று பாப்பா மறுநாள் சம்பந்தப்பட்ட பாப்பாவிடம் சொல்வாள் என்றால், இது தோழரின் பாப்பாவிற்கு இன்னும் தேவை. குழந்தையை இன்னும் அதிகமாக தூக்கணும், தூக்கிப் போட்டுப் பிடிக்கணும், முத்தம் கொடுக்கணும் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆதலால் தோழர் இதனையும் செய்யுங்கள். குழந்தைகளோடு பயணித்து அவர்கள் மொழியில் தொகுப்புமேல் தொகுப்பை அவர்கள் மொழியிலேயே கொண்டுவந்து சிறப்பித்தாலும் குழந்தையின் ஏக்கம் இக்குறிப்பில் எப்படி இருக்கிறது பாருங்கள்.


 வீட்டில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடக்கும் ஊடலைத் தீர்க்கும் ஒரு துருப்புச்சீட்டாக குழந்தைகள் பல வீடுகளில் இருப்பார்கள். சொல்லி அதன்மூலம் அடுத்தடுத்த வேலைகள் நடக்கும். அப்படியான ஒரு குறிப்பு. டார்வின், புகழ்மதி இருவரும் செய்யும் சேட்டைகள் பொறுக்காமல் அம்மா, இப்படியே சேட்டை பண்ணிட்டு இருந்தா உங்கள விட்டுப்புட்டு நான் அம்மாச்சி வீட்டுக்குப் போயிடுவேன், ஹாஸ்டலுக்குப் போயிடுவேன், ஆபீஸ்லயே இருந்துக்கிறேன் என்று சொல்கிறார். எல்லாவற்றுக்கும் புகழ்மதி போவக்கூடாது என்று சொல்லி தனதன்பை வெளிக்காட்டுகிறாள். இடையில் புகுந்த  அப்பா, அம்மா போகும்போது பாப்பா தான் டிப்பன எடுத்து நல்லாக் கழுவி சாப்பாடு போட்டுக் கொடுக்குமாம், அப்புறம் டிரஸ் எல்லாம் எடுத்து பையில வச்சு அம்மா கிட்ட கொடுக்குமாம் என்றவுடன், புகழ்மதி ‌ம்‌ம் சரிப்பா. எப்பம்மா போவ சொல்லும்மா எப்பம்மா போவ என சுட்டி மாற்றி கேட்கத் தொடங்கிவிடுகிறாள். இந்த கணத்தை உணராத குடும்பம் இருக்குமா என்ன... இதற்குப் பின் தலைவி பார்க்கும் பார்வையும் தலைவன் பார்க்கும் பார்வையும் முட்டிக்கொள்ளும் இடத்தில் பூக்கும் கூடலுக்கு குழந்தைகளின் நிரத்தைச் சூடி அழகு பார்க்கலாம்.  எந்த இடத்திலும் கூடுதலான வார்த்தைகளைச் சேர்க்காமல் குழந்தைகளை அவர்களின் இயல்பில் காட்சிப்ப்டுத்தியிருப்பதில் முழுதாகத் தேர்ச்சி பெற்றிருக்கிறார் தோழர்.

 அறிவியலைக் குழந்தைகள் கற்றுக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதும், பதிலைப் பெறுவதும் ஒரு கலை தான். அப்படியான குறிப்புகள் நாய்க்கும் அறிவு இருக்கு என்ற பதிலை டார்வின் கண்டுபிடிப்பது. செத்துப்போன பூச்சி எப்படிப்பா வந்து மனுசனைத் திங்கும் என்று கேள்வி கேட்பது. குழந்தைகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தப்பிக்கும் அப்பாவையும் பல பக்கங்களில் காணலாம். அதற்குக் காரணம் பதில் தெரியவில்லை என்பதால் அல்ல. குழந்தைகளுக்கு புரியும் காலம் வரவில்லை, வரட்டும் என்ற தெளிவு அப்பாவிடம் இருப்பதால் தான்.

 சிறு வயதில் தெருக்குழாயில் பெண்கள் உதிர்க்கும் வசவுச்சொற்கள் காதில் விழாதவாறு கதவு, ஜன்னல்களை அடைத்து டேப் ரெக்கார்டரில் பாடலை எனது தாயார் ஒலிக்கவிடுவார். அந்தக் காலம் மலையேறிவிட்டது. இன்று தொலைக்காட்சி, சினிமா, அலைபேசி என எல்லாம் வீட்டுக்குள் குப்பைகளைக் கொண்டுவந்து  கொட்டத் தொடங்கிவிட்டது. கதாநாயகன், கதாநாயகி நெருக்கமாக வரும் காட்சியை மாற்றத் துடிக்கும் அப்பாவிற்கு வேலை வைக்காமல் அந்த இடம் வரும்போது டார்வின் ரிமோட்டில் வேறு சேனலுக்குத் தாவுகிறான். நம்மைக் கடந்து அவர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் குறிப்பு அது.

 பதிலளிக்காமல் தப்பிப்பது தவறல்ல. அந்த இடத்தில் தப்பிக்கும் நுணுக்கம் கைவருதல் ஒரு கலைதான். ஆனால் தவறான ஒன்றைச் சொல்லி கடத்தல் என்பது சரியாக இருக்காது. அப்படித்தான் ஒரு குழந்தை பதின்ம வயதை அடைவதை ஒட்டிச் செய்யும் சடங்கு நிகழ்வுக்கு டார்வினும், புகழ்மதியும் செல்கிறார்கள். அங்கு புகழ்மதி எதற்காக மஞ்சத் தண்ணி ஊற்றுகிறார்கள் என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்புகிறாள்.  ஒருகட்டத்தில் டிரஸ்லயே ஆய் இருந்திட்டா மஞ்சத்தண்ணி ஊத்துவாங்களா? என்ற கேள்வியைக் கேட்கிறாள். யாரோ நமக்கு முன்னாடி சிக்கி, தப்பிச்சிருக்காங்க என்று அக்குறிப்பை முடிக்கிறார் தோழர். அந்த யாரோவிற்கு வன்மையான கண்டனங்கள். இதுதான் குழந்தைகளிடம் பதிலளிக்கும் முறையா அன்பரே எனக் கேட்கவேண்டும்.

 கையால் துவைப்பதே துவைப்பு மற்றெல்லாம்

 வாஷிங்மெஷின்கணக்கில் வரவு வைக்கப்படும் என்றொரு புதுக்குறள் எனக்குத் தோன்ற ஒரு குறிப்பு இருக்கிறது தொகுப்பில். ஏய் எப்புர்ரா என்று கேட்டு வைரல் ஆன தம்பி போல இங்கு டார்வின் யுட்யூப் ஆரம்பித்து கேள்விகேட்கிறான். எங்களைப்போல சட்டை இல்லாமல் பெண்கள் வெளியில் போக முடியுமா என்ற கேள்வி ஒருவனால் கேட்கப்பட்டது. இத்தொகுப்பில் இது போலவே அவர்களுக்கு வேர்க்காதா? என்ற கேள்வியை  தான் சார்ந்தோருக்கென டார்வின் கேட்கிறான்.  பாலின சுதந்திரம் என்பதை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.  இதுபோல தொகுப்பில் விடுபட்ட அனைத்தும்  முக்கியக் குறிப்புகள் என்பதால் சீமையில் இல்லாத புத்தகம் என்பதைக் குழந்தைமையைக் கொண்டாடும் முக்கியப் புத்தகமாக எல்லோருக்கும் பரிந்துரை செய்யலாம்.  செய்கிறேன்.


வாழ்த்துகள் தேனி சுந்தர் தோழர்.


யாழ் தண்விகா

Saturday, 24 December 2022

கீழ் வெண்மணி தியாகிகள் தினம்

 







#கீழ்வெண்மணி


கீழ் வெண்மணி

வானம் பார்த்த பூமியல்ல

வளம் பார்க்கும் பூமி


நிலம் யாவும் பண்ணையார்களிடம்...

உழைப்பு யாவும் தொழிலாளர்களிடம்...


உழைப்பை உறிஞ்சிக்குடிக்கும்

ஆதிக்கக்கூட்டம்

உழைத்தே ஒடுங்கிக்கிடக்கும்

ஏழ்மைக்கூட்டம்...


கட்டளைக்கு கீழ்ப்படிந்தால்

வாழ்வதற்கு உயிர் இருக்கும்

எதிர்த்துப் பேசினால்

கூலிக்காரனுக்கு

சாணிப்பால் சவுக்கடி கிடைக்கும்...


உலகப் பொதுப் பிரச்சனை பசி.

இங்கும் தலை விரித்தாடியது.

பசித்தவனெல்லாம் 

ஒன்று கூடுகிறான்

செங்கொடியின் கீழ்

தொழிலாளர் வர்க்கம் என்ற பெயரில்.


சும்மாயிருக்குமா முதலாளி வர்க்கம்

நெல் உற்பத்தியாளர்கள் சங்கம்

என்ற பெயரில்

ஒன்று கூடுகிறார்கள்

மஞ்சள் கொடியின் கீழ்.


அதிகமில்லை கேட்டது...

அரைப்படி நெல் தான்

கூடுதலாக கேட்டது

தொழிலாளர் வர்க்கம்.

எதிரில் நின்று

கைகட்டி நிற்பவன்

எதிர்த்துக் கேள்வி கேட்பதா

ஆடித்தான் போனது

அதிகாரக்கூட்டம்...


நீயில்லையென்றால்

அடிமைகள் கிடைக்காமல்

போய்விடுவார்களா என்ன?

கொக்கரித்துக்கொண்டே

வெளியூரில் இருந்து

ஆட்களை அழைத்து

விவசாயத்தில் ஈடுபடுத்த

முயற்சி செய்தது

மேல்மட்டம்.

போராட்டம் என்பது

புதிதா என்ன

நித்தம் நித்தம்

பசியோடு போராடுபவர்களுக்கு...

வயலில் இறங்கி

வெளியூர் ஆட்களை

மறுத்து நின்றது, விரட்டி நின்றது

தொழிலாளர் கூட்டம்...


எங்கும் எதிர்ப்பு

பண்ணையார்களுக்கு.

சமரசம் பேசினார்கள்

தொழிலாளர்களிடம்.

செங்கொடி இறக்கு

மஞ்சள்கொடி ஏற்று

அரைப்படி நெல் கூலி

அதிகம் தருகிறோம்

என்று விலைசொல்லி

வலை போட்டனர் பண்ணையார்கள்...


செங்கொடி எமது மூச்சு

செங்கொடி எமது வாழ்வு

செங்கொடி எமது உயிர்.

செங்கொடி இறங்காது.

வேண்டுமானால்

மஞ்சள் கொடியை நீயிறக்கிக்கொள்.

உழைக்கும் வர்க்கம்

உறுதியாய் நின்றது.

பண்ணையார் கூட்டம்

பதை பதைத்துப் போனது...


ஒன்றிரண்டு பண்ணையார்கள்

ஊரை ஆள

உழைக்கும் மக்களின் வீட்டை

செங்கொடி ஆண்டது...


அடங்கமறுத்த மக்களை

அழித்தொழிக்க

பண்ணையார் தரப்பு

கோபாலகிருஷ்ண நாயுடு

தலைமையின் கீழ்

வெறிகொண்ட கழுகாய்

வேட்டையாடும் நாயாய்

வீடு வீடாக அடியாட்களுடன்

விரட்டியது...


உயிரைக் கையில் பிடித்து

ஓடியது உழைக்கும் கூட்டம்.

ஒற்றை இலக்காக

கண்முன் நின்றது

ராமய்யாவின் குடிசை.

அக்குடிசை தான்

கூலிக்காரன் 

சொந்தமாக வைத்திருந்த

ஒற்றை நிலம்...


விரட்டிய ஆதிக்கம்

பெரும்பாலான பெண்கள் குழந்தைகள்

குடிசையின் உள்ளிருக்க

வெளியே தாழ் போட்டது.

வேய்ந்த குடிசை 

உயிர்கள் குடித்து கொல்ல

பெட்ரோல் ஊற்றியது

உயிர்கள் வெந்து எரிவதை

வேடிக்கைபார்த்தது...

எங்களை எதிர்த்தால் இதுதான் கதி 

என்று எச்சரித்தது...


அது மரண ஓலமல்ல

உழைக்கும் மக்களின் கலகக் குரல்...


அக்கொடூரம் நிகழ்ந்து

50வைத்து ஆண்டுகளுக்கு

மேலாகிவிட்டது


அன்று பண்ணையார்கள்

மட்டும்தான்...

இன்று ஆட்சியதிகாரமே

பண்ணையார்கள் மனநிலையில்

இருக்கிறது...


முதலாளி தொழிலாளி

வேறுபாடு கலைய

ராமய்யாவின் குடிசைபோல 

சொந்தக்குடிசை அடைய

வீட்டில் எரியும் தீ

நம் வயிற்றுப் பசியை அணைக்க...

அநீதிகளின் கும்மாளம் குடை சாய...

சாதி சமய இன்னல்கள் மறைய

பொதுவுடைமைச் சித்தாந்தம்

எங்கும் பரவ...


மார்க்சியத்தை உயர்த்திப் பிடிப்போம்

செங்கொடியை வீடுதோறும்

ஏற்றி வளர்வோம்...


யாழ் தண்விகா

Friday, 23 December 2022

புளிக்கும் வெயில் #ராம்போ_குமார்


புளிக்கும் வெயில்

ராம்போ குமார்

Rambo Kumar 

வேரல் புக்ஸ்

96 பக்கங்கள் 

100 ரூபாய்


ஒரு நாயகன் உருவாகிறான்...

(சிஸ்டம் சரியாகிவிட்டது தல)

எந்த உலகத்தில் என்றும் தொக்கி நிற்கும் கேள்விக்கு கவிதை உலகத்தில் என்று பதில் அளிக்கலாம். தோழர் ராம்போ குமார் தன்னுடைய தனித்துவமிக்க நடிப்பால், பேச்சால் மனம் கவர்ந்தவர். இப்போது கவிதையிலும். தொகுப்பின் முதல் கவிதையை அதற்கு அச்சாரமாகக் கூறலாம்.

“என்னிடம் ஒரு ஆழ்ந்த கல்லறைக்குண்டான

சிறு அமைதி இருந்தது

காற்றின் காமம் பசி தீர்க்கும்

புல்லாங்குழலின் சில துளைகள்

பருக முடியா ஆதி நிலத்தின் வழிந்த ஈரத்தின் மிச்சம் 

பழைய சொற்களின் புழுக்கம் கொஞ்சம்

குகை இருட்டின் முகம் 

ஒன்றுகூட இருந்ததாய் ஞாபகம்

அத்தனையும் நழுவிக்கொண்டிருக்கிறது

முதல் மாத சம்பளம் எண்ணிக்கொண்டிருக்கும்

எனது விரல்களின் வழியே..” எனத் தொடங்கும் கவிதையின் சொற்களில் கருவைக் காண்பதா... இவ்வளவு நாள் கண்ட கவியின் புதிய முகத்தைக் காண்பதா... சந்தோஷ மிரட்சி. 


ஒரு கவிதையில் 

“பசி ஒன்றும் பெரிய வலியில்லை

அதனூடே தோன்றும்

கவிதைதான்...” கொஞ்சம் நீள்கிறது முற்றுப்பெறாமல். கவிஞனின் பசியா? பசியை எழுதப் போகும் கவிதையின் தீவிரமா? என்ற கேள்வியின் முன்னாள் எனக்கென்னமோ பசியை எழுதும் கவிதையின் ஆத்திரம் மிகு சொற்களின் தீச்சுவாலை அதிகமாக இருக்கும்போல் உணரமுடிகிறது. இன்னொரு கவிதையில்

“முன்னிரவு காமத்தைப் 

பின்னிரவுக்கு 

ஒத்தி வைக்கிறது

ஒரு நல்ல கவிதை” என்னும்போது கவிதை என்ன செய்யும் என்ற கேள்விக்குப் பதில் கிடைத்துவிடுகிறது. மேலும் கவிதை காமத்தை ஒத்தி வைக்கிறதாகக் கூறும் தன்மையிலிருந்து கவிதை எதையும் செய்யும் என்பதையும் அழகாகக் கூறிவிடுகிறது.


“அப்பத்தாவுக்குத் தங்கமுத்து மாரியம்மன்

தாத்தாவுக்குச் சுடலைசாமி

எங்க ஆச்சிக்கு முப்பிடாதி அம்மன்...

மேலத்தெரு மாமாவுக்குக் கருப்பண்ணசாமி

அத்தைக்குக்கூடச் செல்லத்தம்மன்னு கேள்வி...

கொடைக்குக்கொடை

கூட்டத்திற்குள்ளேயே ஆடிக்கொண்டிருக்கும்

சாமி கொண்டாடிகள்,

இதுவரை 

சன்னதம் சொன்னதேயில்லை தனிமையில்”

கிராமத்துச் சாமிகளின் அருளேறி ஆடும் மனிதர்கள் கண்முன்னே வருகிறார்கள். அவர்களின் ஆங்காரக் கூச்சல் காதுகளில் ஒலிக்கத் தொடங்குகிறது. திருவிழாக்கூட்டம் கிறங்க வைக்கிறது. ஊரே அருள் வந்து நிற்க, நாக்கைக் கடித்து அரிவாள் ஏறும் ஆண்கள், இருக்கும் இடம் தெரியாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் பெண்கள் மேல் அருள் வந்து ஆடும் சாமிகள் குறித்து திருவிழா கடந்தபின் நினைக்க என்ன இருக்கும்? அதனைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார் கவிஞர். “இதுவரை சன்னதம் சொன்னதேயில்லை தனிமையில்...” சாமி கொண்டாடிகளிடம் கேட்கவேண்டும்தான்.


கொஞ்சம் கொஞ்சம் அன்பைக் கொஞ்சும் கவிதைகள் நட்சத்திரங்கள் போல ஆங்காங்கே மின்னிக்கொண்டிருக்கின்றன. யாரந்த யாழினி என்ற கேள்விக்குப் பின்னால் ஓடத் தொடங்குகிறது வாசிக்கும் பார்வை.

“உன்னை அகம் தள்ளியபின்

புறவெளியில் 

எதைத்தேடப்போகிறேன் யாழினி”

“வலது ஆரிக்களிலும்

இடது ஆரிக்களிலும்

சமமாக நின்றுதொலை 

யாழினி

அவ்வப்போது சரிந்து விடுகிறதென்

இதயம்” 

“இன்னும் வேகமாக

வீசியெறி உன் சொற்களை

நான் இன்னுமொரு 

கவிதை செய்யவேண்டும்”

கவிதை ஊரில் காதல் வழிச் சாலையிலும் சிறப்பானதொரு பயணம் மேற்கொள்ள வாழ்த்துகள்...


“ஒரு பச்சிலையின் 

கணம் தாங்கும் கிளைகளுக்கு

ஒரு சருகின் கணம் 

தாங்க முடிவதில்லை”

வாசிக்க வாசிக்க தந்த காட்சி முடியவில்லை. சருகு என்பது அத்தனை சாதாரணமானதாக இருக்க முடியாது. அதன் கணம் குறித்து எழுந்த கேள்விகளுக்குள் பச்சிலை வாழ்ந்த வாழ்க்கையை உணர்த்தும் வரிகள் அபாரமான வெளிப்பாடு.


எல்லாவற்றிலும் நேரம் காலம் பார்த்து செயல்படும் அச்சம்பத்து என்னும் ஊரைச் சேர்ந்த மாமா பற்றிய கவிதை...

...

“அச்சம்பத்து விபத்தில்

மாமா இறந்துபோன அன்று,

நாட்காட்டியில் அவரின்

விருச்சிக ராசிக்கு

நம்பிக்கை என்றுதான் இருந்தது...” காலம் என்னென்ன மாய வித்தைகள் செய்யும் என்பதை காலம் மட்டுமே அறியும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஈடுபாடு, ஒரு வழி. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேடமிட்டுத் திரிக்கிறோம். ஆனால் அந்திமக் காலமாகட்டும், உயிர் போகும் தருணமாகட்டும், மனிதன் மகிழ்வோடு இந்த உலகைத் துறக்கத் தயாராகிவிடுகிறானா என்றாள் இல்லை. காலம் நமது அபிலாசைகளையெல்லாம் பூர்த்தி செய்து வைக்கிறதா என்றால் இல்லை. அக்கணம், நாமெல்லாம் சாதாரண மனிதர்கள் மட்டுமே என்பதை உணர்த்தும் கவிதை.


“இரு நீலங்களுக்கு மத்தியில் 

பறந்துவந்த பறவையொன்று

என் ஜன்னலில் வந்தமர்கிறது

அதன்மேனியில்

தாய்மண் வாசத்தை

நுகரத் தெரிந்த 

அந்தப் பெயர் தெரியா பறவை 

மிச்சமிருக்கும் தன் நிலத்தை

எனக்குக் கடத்துகிறது

தன் கண்களின் வழி”

கவிஞன் என்பவனின் பார்வை உன்னதப்படும் இடம் என்பது உலகின் எல்லாவுயிர்களிடத்தில் காட்டும் இடம் மட்டுமே. அவனின் ஆக்ரோசமும் மனிதம் சார்ந்திருக்கும். மௌனமும் மனிதம் சார்ந்திருக்கும். அன்பு அவன் இயல்பாகயிருக்கும். பெயர் தெரியாத அந்தப் பறவையின் வலியைக் கண்கள் வழியாகக் காணும் ராம்போ குமார் என்னும் தோழர்-கவிஞர் இயல்பாகவே சமூகப் பார்வையுடன் பயணிப்பவர். அதனை அச்சு வடிவில், கவிதை உருவில் வெளிக்கொணர்ந்துள்ளார். சொல்ல இன்னும் பல கவிதைகளுண்டு. வாசியுங்கள். பன்முகத் திறன் கொண்ட தோழர் ராம்போ குமார் இன்னும் பல உயரங்கள் கவிதை உலகிலும் தொட வாழ்த்துகிறேன்.


யாழ் தண்விகா

 

Sunday, 4 December 2022

ரோலக்ஸ் வாட்ச்


ரோலக்ஸ் வாட்ச்

நாவல்

சரவணன் சந்திரன்

உயிர்மை பதிப்பகம்

பக்கம் 160

விலை 150

மார்ச் 2016 பதிப்பு


நட்பு காதல் கொலை குரூரம் இயல்புத்தனம் துரோகம் என எல்லாம் உண்டு இந்நாவலில். கதாசிரியர் தான் நாயகன். வலிந்து திணிக்கப்படாத பாதை வழியே கதை நகர்கிறது. என்ன கதை என்பது சுவாரஸ்யம். ஒவ்வொரு பகுதியும் ஒரு சிறுகதைதான். எங்கிருந்தும் தொடங்கலாம். சரவணன் மற்றும் கதை கூறுபவன், அவன் தோழி, தோழியின் தோழி, ஜோதிடர் சுந்தர் எனச் சில பாத்திரங்கள் முக்கியமானவை. பிற எல்லாம் வந்து போகின்றன. எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் இருக்கிறது. சரவணன், கதை சொல்பவனுக்கு வாழ்வில் பல உதவிகள் செய்பவன். செய்தவன். ஆனால் கதை சொல்பவனுக்கு ஒரு தனி உலகம். காலமெல்லாம் சரவணனின் கையைப் பிடித்து நடக்க தன்னால் இயலாது என்னும் உறுதி கொண்டவன். அவனிடம் அதனை நேராகச் சொல்லும் தைரியம் அற்றவன். கோழை என்றில்லை. அது கதாசிரியன் சுபாவம். இவர்களுக்கு ஒரு நண்பர் குழாம். அதில் ஒருத்தி திவ்யா. அவளோடு அன்பு காதல் காமம் எல்லாம். அவள் திருமணம் முடித்தவள். அவளோடு ஒரு வாழ்க்கை. வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்கள் செல்ல சில தகிடுதத்தங்கள் செய்து கதை சொல்பவன் மேலே வருகிறான். வெளிநாடு செல்கிறான். தனியாக அறை எடுக்கிறான். அங்கு பெண்களோடு உல்லாசித்துத் திரிகிறான். பணம் சேர்க்கிறான். ஒரு மனிதனுக்கான கூறுகள் இப்படி இருப்பதில்லையே என நினைக்கும்போது மனிதன் என்பவன் இப்படியும் இருக்கிறான் எனச் சொல்ல, இப்படித்தான் இருக்கிறான் எனச் சொல்ல பல பாதைகளை கதை வழியே சொல்கிறார் நாவலாசிரியர். கதை சொல்லுதலில் இப்படியும் ஓர் உத்தி எனக் காண்பித்து உள்ளார். டயரி எழுதுவது போலுள்ளது என்று கூறி ஒதுக்கி விடாத வண்ணம் எழுத்து நடை அமைந்துள்ளது சிறப்பு. பிடித்தது எனச் சொல்ல நான் கண்ட மனிதரில் கதாசிரியன் போன்ற நபர்களைக் கண்டுள்ளதும் காரணமாக இருக்கலாம். மனிதன் செய்யும் பண அரசியல் எப்படியெல்லாம் இருக்கும் என்றெல்லாம் ஆங்காங்கே வருகிறது. கதையும் முடிச்சும் இதுதான் எனச் சொல்ல வாய்ப்பில்லை. வாசித்தால் தான் அதை உணர முடியும் எனச் சொல்லும் நாவல். வாசிக்கலாம் தாராளமாக.


யாழ் தண்விகா 


#நூல்_வாசிப்பனுபவம்_2022


❣️

 

Wednesday, 23 November 2022

கமலி #சி_மோகன்

 


கமலி
நாவல்
சி.மோகன்
பக்கம் 144
விலை ரூ.150/=

ரகு கமலி இருவரும் கணவன் மனைவி. கமலியின் அப்பா, கமலியின் ஜாதகத்தை ஆய்ந்து அறிந்து கண்டறிந்த மாப்பிள்ளை ரகு. இவர்களுக்கு நந்திதா என்ற பெண். இவர்களின் வாழ்வில் புதிதாக நுழைகிறார் கண்ணன். கொஞ்சம் கொஞ்சமாக கமலியின் மனதில் பதியத் தொடங்குகிறார் நல்ல மனிதராக, ரசனைக்குரியவராக, படிப்பாளியாக, வார்த்தைகளில் வசியம் செய்பவராக, கமலியின் மனம் கவர்ந்தவராக... கமலியின் எண்ணத்தில் உண்டான மாற்றத்தை கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்குகிறான் ரகு. ஒரு சில கட்டத்திற்குப் பின்னர் கண்ணனுடன் உள்ள தொடர்பு முற்றிலுமாக தடைபடுகிறது ரகுவின் கட்டளையின் பேரில். ஆனாலும் கமலி கண்ணன் இடையே உள்ள காதலுக்கும் காமத்திற்கும் முற்றுப்புள்ளி இல்லாமல் தங்கு தடையின்றி அது தொடர்கிறது. இடையில் கமலியின் அப்பா இறந்துபோகிறார். அம்மாவிற்கு உடல் நலமில்லாமல் போய்விடுகிறது. அம்மாவைக் கவனிக்க சென்னைக்கு கமலி புறப்படுகிறாள். செல்லும் வழியில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. கண்ணனும் கமலியும் ஒரே பேருந்தில், படுக்கும் வசதியுள்ள இருக்கையில். கமலி எப்படி கண்ணனுடன் இந்த வாழ்வை வாழ்கிறாள்? ரகு கண்ணனுடன் பேசினானா, நந்திதாவுக்கு ஒரு தம்பிப் பாப்பாவோ தங்கச்சிப் பாப்பாவோ கிடைத்ததா என்பதை அறிய வாசிக்கவேண்டும் இந்த நாவலை. சரியோ தவறோ என்ற ஊசலாட்டம் கமலியின் எண்ணத்தில் புகவில்லை. அவள் மெல்ல கண்ணனின் வசியத்திற்குள் சிக்குகிறாள். கண்ணனும் நல்ல மனிதர். ஒரு இடத்திலும் கமலியின் பாத்திரமோ கண்ணனின் பாத்திரமோ குற்ற உணர்ச்சி என்று காலம் காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கும் விடயத்தில் சிக்குவதாகக் கதையில் சொல்லாமல், ரகுவிடம் தோன்றும் மனக் கிலேசத்தை எப்படி கச்சிதமாக கமலி தீர்க்கிறாள், கமலியும் கண்ணனும் இந்த வாழ்க்கையை எவ்வளவு கவனமாகக் கடத்துகிறார்கள் என்பதை கிளர்ச்சியைத் தூண்டும் மொழிநடையில் படைத்துள்ளார் நூலாசிரியர். முக்கியமாக கதையின் இறுதி.

சம காலத்தில் பரவலாக காணக் கிடைக்கும் கதை
 இன்றைய உலகில் இல்லாத ஒன்றினை நாவல் எடுத்துரைப்பதாக கூறிவிட இயலாது. பரவலாக தினம்தோறும் பத்திரிக்கைகளில், ஊடகங்களில் இடம்பெறும் ஒரு செய்தியாக இந்த முறை மீறிய, முறை தவறிய காதலைச் சொல்லலாம். கூடுதலாக ஒரு தகவலாகச் சொல்ல வேண்டுமெனில் ஊர் அறிய, உலகம் அறிய முடித்த திருமணத்தைக் காட்டிலும் இது போன்ற காதலும், காமமும் வீரியமாக, கொலைக்கும் அஞ்சாத ஒன்றாக மாறிக் கொண்டிருப்பதை நடக்கும் சம்பவங்கள் மூலம் அறியலாம். குன்றத்தூர் என்ற ஊரில் பிரியாணி கொண்டு வந்து கொடுக்கும் உணவகப் பணியாளர் மீது அபிராமி என்ற பெண்ணிற்கு ஏற்பட்ட ஈர்ப்பு, தனக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற சம்பவத்தை இதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம். 
 திடீர் என்று உள்ளுக்குள் உண்டாகும் மனமாற்றம் தான் இது போன்ற பிரச்சனைகளுக்குக் காரணம் என்று கூறிவிட இயலாது. ஒவ்வொரு பெண்ணின் மனதின் உள்ளே இருக்கும் அபிலாசைகளைப் புரிந்து, அதற்கேற்ப இங்கு வாழ்க்கைத்துணை கிடைப்பதில்லை. சொத்துக்களைப் பாதுகாக்க, சமூகம், சாதி, மதம் இவற்றைக் காக்கும் எண்ணம் இவையெல்லாம் அகமணத் திருமண ஏற்பாட்டில் இருக்கிறது. அதற்காக இவற்றில் எல்லா திருமணங்களும் மகிழ்வில்லாமல் இருப்பதாகக் கூறல் தவறாகிவிடும். மனதின் அடி ஆழத்தில் கிடக்கும் ஆசைகள் மேலெழும்போது தவறுக்கான காரணங்கள் பூக்கிறது. சந்தர்ப்பம் அமையும்போது தவறுகள் செயல் வடிவம் பெறுகிறது. தவறுகளை மறைக்க இயலா வண்ணம் போகும்போது குற்றம் வெளிப்படுகிறது. எல்லாம் புரிந்து, காதல் மணம் புரியும் தம்பதியர் கூட இதுபோன்ற சல்லாபங்களில் ஈடுபடும்போது மனித மனதின் ஆசை தான் என்ன என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடிவதில்லை.

கமலி – கண்ணன் – ரகு
 ரசனையின் மறுவடிவம் கமலி. படிப்பு ஆர்வம் மிக்கவள். மந்திரங்கள், ஸ்லோகங்கள், பக்திப் பாடல்கள் அறிந்தவள். ஆங்கில இலக்கியம் முதுகலையில் முடித்தவள். அயல் நாட்டு வர்த்தக நிறுவனத்தில் ரிசப்சனிஸ்டாக பணி புரிந்தவள். ரகுவை பெற்றோர் பார்த்து மணம் முடித்து வைக்கின்றனர். திருமணம் முடிந்து ஆறாம் வருடம் நந்திதா பிறக்கிறாள். கமலி தன்னுடைய 37வது வயதில் கண்ணனுடன் காதல் வயப்படுகிறாள். எதற்காகவும் கண்ணனை இழந்துவிடக்கூடாது என்று என்னும் அளவு காதல். இத்தனைக்கும் ஆரம்ப கட்டத்தில் அதிகமாக தொலைபேசியில் மட்டுமே வளர்ந்த காதல். ரகு மீது எந்தப் புகாரும் இல்லாத ஒருத்திதான் கமலி. ஆனாலும் அவளால் கண்ணனைத் தவிர்க்க இயலவில்லை. ரகுவிற்கும் கண்ணனுக்கும் மனக் கசப்பு வந்தபோதும் அவனுடனான உறவை கமலி முறித்துக்கொள்ளவே இல்லை. வீட்டிற்குள் சந்தேகம் பூத்த போதும் ரகுவை காமத்தால், அன்பால், ஸ்பரிசம் தீண்டும் பேச்சால் கட்டிப் போட்டு கவனித்துக்கொண்டாள் கமலி. அதே சமயம் இதுபோன்ற சூழலை கண்ணனிடம் பகிர்ந்துகொள்கிறாள் கமலி. கண்ணனோடு ரகு மீண்டும் பேசும் சூழல் உருவாக வேண்டும் என எதிர்பார்க்கிறாள் கமலி. அந்தச் சூழல் அமைகிறது. தனக்கு கண்ணனால் ஒரு குழந்தை வேண்டும் என்ற அதீத ஆசை ஏற்படுகிறது. அந்த ஆசைக்காக கமலியும் கண்ணனும் தீட்டிய திட்டங்கள் எல்லாம் அறிவியல். அந்த ஆசை நிறைவேறுகிறதா? ரகுவின் நிலை என்ன? ஒரு முக்கோணக் கதை தான். ஆபாசம் பூத்தூவிக் கிடக்கிறது தான் நாவலில். ஆனாலும் கத்தி மேல் நடக்கும் பயணத்தை, முறையாக இல்லாத ஒன்றை வாசிக்க வைத்து வெற்றிப் பயணமாக்கிவிடுகிறார் நாவலாசிரியர்.

நாவலிலிருந்து...
கண்ணன், காதலை மிகச் சாதாரணமாக எவ்விதத் தயக்கமுமின்றிச்  சொன்னபோது, கமலி விதிர்விதிர்த்துத்தான் போனாள். அவள் உடலும் மனமும் படபடத்து நடுங்கியது. ஆனால் அந்தப் படபடப்பில் பயமில்லை. மாறாக, பரவசமிருந்தது. அன்று இரவு வெகுநேரம் தூக்கம் பிடிக்காமல் மனம் ஏதோ ஒரு கிறக்கத்தில் கிறுகிறுத்துக் கொண்டிருந்தது.

பதிப்பக விபரம்:
புலம் வெளியீடு
178, F, அனுதீப் அபார்ட்மெண்ட்ஸ்,
3வது பிரதான சாலை,
நடேசன் நகர், 
சென்னை – 600092
தொலைபேசி : 9840603499
Email: pulam2017@gmail.com

யாழ் தண்விகா


கோடிக்கால் பூதம் #அ_உமர்_பாரூக்

 


கோடிக்கால் பூதம்

நாவல்

அ. உமர் பாரூக் 
தோழர் Acu Healer Umar Farook 

பக்கம்: 128
விலை: 150

தீ நுண்மிக்காலமும் உயிர்க் கொள்ளையும்
 
 அங்கிங்கெனாதபடி உலகெங்கும் அச்சுறுத்தலுக்கு ஆளான ஒரு காலம் என்றால் சமகாலத்தில் காணும் கொரோனோ காலம் தான். இப்போது வரை உலக நாடுகள், மக்களை ஊரடங்கு, முகக் கவசம், சமூக இடைவெளி மட்டுமே காக்க முடியும் என்பதைக் கூறி வருகிறது. இதற்கிடையில் முதல் அலை, இரண்டாம் அலை கடந்துவிட்டது. மூன்றாம் அலை மற்றும் அடுத்து வரக்கூடிய கொரோனோவின் பாதிப்பு இதற்கு முன்பு வந்த அலையை விட மிகத் தீவிரமாக இருக்கும் என்ற கணிப்பையும் கூறி மக்களை அச்சத்திலேயே வைத்திருக்கிறது. கொரோனோவை விட பெரிய நோயாக அரசின் அறிவிப்பும் அச்சுறுத்தலும் இருக்கிறது. அதற்குச் சாதகமாக நோயிலிருந்து குணமாகும் அதிகமான மனிதர்களை விட நோய்க்கு ஆளாகும் குறைவான நபர்களை மட்டுமே பெரிதுபடுத்தியும், இறப்புகளைக் கூறி பதட்டத்தையும் உண்டுபண்ணும் வண்ணம் ஊடகங்களில் செய்திகளை வெளியிட வைத்து வருகிறது. எளிதில் குணமாக்கும் நோய் என்று யாராவது சொன்னால்கூட அவர்களுக்கு எதிராக அதிகார பலத்தைப் பயன்படுத்தும் வன்மமும் இந்தக் காலகட்டத்தில் நிகழ்வதைக் காண முடிகிறது. மருத்துவத்தில் சிறப்பான கட்டமைப்பை ஏற்படுத்தி அல்லது ஏற்கனவே இருக்கக்கூடிய மருத்துவ வசதியால் மிக எளிதாகக் கடக்க வேண்டிய நோயை, வெற்றிகரமாக இரண்டாம் வருடத்தில் எனக் கூறும் வண்ணம் நகர்த்தி வருகிறது அரசு வல்லாதிக்கம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இக்கொடும் காலம் குறித்த சிறு துளி தான் கோடிக்கால் பூதம் என்னும் இந்த நாவல்.

கதைச் சுருக்கம்.

 டேவிட் சர்ச்சில் மதபோதகர். மைக்கேல் அவன் நண்பன். கொரோனோ கால கட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவில் உள்ள சர்ச்சுக்குச் செல்ல மைக்கேலின் உதவியை நாடுகிறான். தன்னுடைய இ-சேவை மையத்திலிருந்து பாஸ் தயார் செய்து கொடுக்கிறான் மைக்கேல். ஆனால் அங்கு நிலைமை சரியில்லை என்பதால் டேவிட் கேரளா செல்ல இயலாமல் போய் விடுகிறது. குமார் தற்காலிக ஊழியராக மருத்துவமனையில் பணிபுரிபவன். டேவிட் மற்றும் மைக்கேலுக்கு நண்பன். இவர்களின் ஆசிரியர் தங்கம். அவர் தன்னுடைய பணிக் காலத்தை முடித்துவிட்டு தனிமனிதனாக மேன்சன் ஒன்றில் வாடகைக்கு ஒரு அறை எடுத்து வசித்து வருகிறார். அவரிடம் அவ்வப்போது சென்று உரையாடிவிட்டு வருவது மைக்கேலின் வழக்கம். டேவிட்டிற்கு வீடு, எப்போதாவது மைக்கேலின் கடை அல்லது சர்ச். குமாருக்கு தன்னுடைய மருத்துவமனை லேப்பில் பரிசோதனை செய்யும் பணி. கொரோனோ காலத்தின் பரிசோதனை அவலங்களை, மருத்துவ அவலங்களை குமார் கண்டு வேதனைப்படுகிறான். தன்னுடைய அப்பாவின் டைப் ரைட்டிங் நிலையத்தை இ சேவை மையமாக மாற்றி அதன் மூலம் வரும் வருமானத்தில் தன்னுடைய குடும்பத்தை மிக எளிமையான முறையில் நடத்தி வருபவன் மைக்கேல். மனைவி மற்றும் ஒரு குழந்தை. இந்தச் சூழலில் மைக்கேலுக்கு காய்ச்சல் வருகிறது. குணமாக வேண்டிய காய்ச்சல். ஆனால் அவன் கேட்ட தகவல்கள், பார்த்த தகவல்களால் மிகவும் பயப்படுகிறான். அரசு மருத்துவமனை, ஆக்ஸிஜன் சிலிண்டர், தனியார் மருத்துவமனை, அவசர சிகிச்சைப் பிரிவு என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தன்னைத்தானே பலிகடா ஆக்கத் துணியும் வண்ணம் அவன் மனநிலை மாறுகிறது. கொரோனோ காலத்தை அவன் எப்படியாக எதிர்கொண்டான், அவனைச் சுற்றியிருந்த சூழல் அவன் மீண்டெழ உதவியதா என்பது தான் கதை.

கதை மாந்தர்கள்

 மிகக் குறைந்த அளவிலான பாத்திரங்களே நாவலில். மைக்கேல், அவனுடைய தந்தை ஆசீர்வாதம், மைக்கேலின் மனைவி ஜான்சி, மகன் ரியோ, சர்ச் போதகர் டேவிட், மருத்துவமனை ஆய்வுக்கூட பரிசோதகர் குமார், குட்டை வாத்தியார் என்ற தங்கம் வாத்தியார், மைக்கேலின் மாமனார் பீட்டர், டாக்டர்கள் சுந்தரம், ராஜா. இவர்கள்தான் பிரதான பாத்திரங்களாக நாவலில் வருகிறார்கள். ஒவ்வொருவர் குறித்தும் உள்ள தகவல்கள் மிகைப்படுத்தப்படாதவையாகவும் கதையோடு சேர்ந்து போவது போலவும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது நாவலை வாசிப்பதில் சுணக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

மைக்கேலின் மன மாற்றமும் பயத்தில் வீழ்ந்த தைரியமும்...
 ஆசீர்வாதம் காலம் டைப் ரைட்டர் காலம், அவரை நோக்கி வரும் வாடிக்கையாளர்கள் காலத்தை பின்னோக்கி பயணிக்க வைக்கிறது. தொடர்ந்து வரும் கால மாறுதல்கள் பிரவுசிங் சென்டர் என்ற நிலையைக் கொண்டு வருகிறது. அதுவும் காலப் போக்கில் இ சேவை மையம் என்ற நிலையை எட்டுகிறது. அந்த வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டும் எளிய மனிதன் மைக்கேல். எல்லோரிடமும் மனம் விட்டுப் பேசுபவன். அவனின் சொற்கள் யாரையும் காயம் செய்யாதவை. இணைய சேவைகளுக்காக அரசுத் துறைகள் சார்ந்த பலர் வந்து செல்லும் இடமாக அவன் மையம் திகழ்ந்தது. இந்தக் காலகட்டத்தில் தான் கொரோனோ இரண்டாம் அலை வருகிறது. இயல்பாக அரசின் அறிவுறுத்தல் காரணமாக மாஸ்க், கைகளை சானிடைசர் மூலமாக கழுவுதல், சமூக இடைவெளி இவற்றைக் கடைபிடிக்கிறான் மைக்கேல். கொரோனோ தீவிரமாகப் பரவத் தொடங்கியபின்னர் தன்னுடைய மனைவியான ஜான்சியைக் கூட கடைகளுக்கு வெளியில் அனுப்பாமல் பார்த்துக் கொள்கிறான். குமார் மூலமாக மருத்துவம் தொடர்பான தகவல்களைக் கேட்டும் வைத்திருப்பவன். சாதாரணமாக அவனுக்கு வந்த தலைவலி மனச் சஞ்சலங்களை உருவாக்கிவிடுகிறது. ஒவ்வொரு நாளும் தலைவலி, அடுத்து காய்ச்சல் எனத் தொடர்ந்தாலும் மருத்துவ நண்பர்கள் மூலமாக அதற்கு மருந்துகள் எடுத்துக்கொள்கிறான். காய்ச்சலும் சரியாகிறது. ஆனாலும் ஊடகங்கள் தரும் தகவல்களால் தனது உடல்நிலை குறித்த சந்தேகத்தால் மருத்துவமனையில் மூக்கின் வழியாக சளி எடுத்துப் பரிசோதனை செய்கிறான். நெகட்டிவ் வருகிறது. அடுத்து தொண்டையில் சளி எடுத்துப் பரிசோதனை செய்கிறான். அதுவும் நெகட்டிவ் வருகிறது. ஆனாலும் அரசின் கொரோனோ குறித்த அச்சுறுத்தல் காரணமாக அரசு மருத்துவமனையில் கொரோனோ நோயாளியாக சேர்கிறான். உறக்கத்தின்போது எந்தவித மூச்சுத் திணறல் இல்லாமல் உறங்குபவன் விழிக்கும்போது பல எண்ணங்கள் அலைபாய மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுவதாக உணர்கிறான். நர்சிடம் வலிய ஆக்ஸிஜன் சிலிண்டர் கேட்டு தனக்கு பயன்படுத்துகிறான். சுகர் பரிசோதனை செய்துகொள்கிறான். கை விரல்களில் ஆக்ஸி மீட்டர் மாட்டி ஆக்ஸிஜன் லெவலை அடிக்கடி பரிசோதித்துக் கொள்கிறான். அவன் வீடு வந்த பின்னரும் அவனுக்கு மனம் நிலைகொள்ளவில்லை. தனக்கு அருகில் இருந்த பெட்டில் அவன் வயதொத்த மனிதன், புகை மற்றும் சிகரெட் பழக்கம் உள்ளவன் சேர்க்கப்பட்டு இறந்து விடுகிறான். நெருங்கிய உறவுகளில், நட்பு வட்டத்தில் உள்ள யாரும் பாதிக்கப்படக்கூடாது என எண்ணினாலும் பாளையத்தைச் சேர்ந்த நண்பன் ஒருவன் இறந்து விடுகிறான். இவையெல்லாம் மனதை அலைக்கழிக்கச் செய்கிறது மைக்கேலை. கூடவே இருந்து மனைவி ஜான்சி பார்த்துக்கொண்டாலும் மைக்கேலுக்கு தனக்கு கொரோனோ இருக்கிறது என்ற எண்ணமே முழுவதுமாக இருப்பதால் மதுரைக்கு தனியார் மருத்துவமனைக்குச் சென்று பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வந்து அங்கும் செல்கிறான் மனைவியோடு. உடல்நலத்திற்கு ஒன்றுமில்லை என்ற சூழலிலும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வந்தாலும் திடீரென்று மூச்சுத் திணறல் வந்தால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் விடுதியில் மனைவியுடன் தங்குகிறான். மீண்டும் மூச்சுத் திணறல். அதே தனியார் மருத்துவமனைக்குச் சென்றாலும் அங்கு அனுமதியில்லாமல் வேறு மருத்துவமனை. அங்கு சிகிச்சை. கடைசியில் அவனை பீட்டர், மற்றும் ஜான்சி காப்பாற்றினார்களா... தங்கம் வாத்தியார் செய்த உதவி என்ன... குமார் என்ன செய்தான்... என நிறைவடைகிறது நாவல். 

 மொத்தம் 15 பாகங்களாக நாவல். 10வது பாகத்திலிருந்து நாவல் வேகமெடுக்கத் தொடங்குகிறது. கொரோனோ கால கவனம் என்பதை வீட்டில் உள்ள ஜான்சி, ரியோ எளிதாக எடுத்துக்கொள்ள, மைக்கேல் மிகக் கவனமாகவே இருக்க விழைகிறான். மரணம் பற்றிய பயம் அவனுக்குள் வெளியுலகம் பற்றிய ஊடக தகவல்களால் மெல்ல மெல்ல ஊடுருவுகிறது. கொரோனோவால் இறந்த நோயாளிகளை புதைக்கும் விதம் அச்சுறுத்தலுக்கு ஆளாக்குகிறது. “மரணம் பற்றிய அச்சுறுத்தல் ஏற்படும்போதெல்லாம் கடவுள் மீது நம்பிக்கை கூடுவதையும், இப்படியான மனிதர்களின் இறப்பைப் பார்க்கும்போது அது தானாகவே குறைந்து விடுவதாகவும் அவனுக்குத் தோன்றியது” இப்படியாக மரண பயம் மைக்கேலுக்குள் செல்லத் தொடங்குகிறது.
 கொரோனோவால் பாதிக்கப்பட்ட பின்னர் எப்போதும் தனது புகைப்படத்தை வாட்ஸ்அப் ப்ரோபைலில் வைத்திருக்கும் மைக்கேல், இயேசுவின் படத்தை மாற்றுகிறான். அதைக் கண்டு மைக்கேலின் மனைவியும் அவனைப் பற்றிய சரியான எண்ணத்தைக் கணிக்கிறாள். “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” என்ற வரிகள் ஜான்சிக்குள் வேறு மாதிரியாக ஓடியது. “பயத்தின் ஆரம்பமே கர்த்தரின் மேலான விசுவாசத்தின் ஆரம்பம்” என்று அவள் நினைப்பது சரியாக அமைகிறது.
 அளவுக்கு மீறிய அறிவு குழப்பத்தை உண்டுபண்ணுவது போல மைக்கேலின் பாத்திரப்படைப்பு அமைந்திருக்கிறது. புரிதலற்ற தீவிரம் மூட நம்பிக்கையை உண்டாக்கும் அதே கணம் பயத்துடன் கூடிய அறிவு என்பது எதையும் நம்பாமல் குழப்பத்தை உண்டுபண்ணி தனக்குத் தானே குழி வெட்டிக்கொள்வது போலவும் மைக்கேல் பாத்திரம் உள்ளது. மிகவும் பயந்த டேவிட் கூட கேரளாவிற்குச் சென்றுவிடுகிறான். பல ஆய்வுகளை கண்கூடாகக் காணும் குமார் இயல்பாக இருக்கிறான். ஆனால் பயம் ஊரு மனிதனை என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு மைக்கேல் பாத்திரம் ஒரு உதாரணம்.

சமகால அரசியலைப் பேசும் நாவல் 

 புனைவு, திருப்பம், மர்மம் என்றெல்லாம் இல்லாமல் சம காலத்தில் நாம் காணும் மனிதர்கள், கொரோனோ குறித்து உலக வல்லாதிக்கம் உண்டாக்கிய பீதி, அரசு அதற்கு செவி சாய்த்த அரசியல் என உள்ளதை உள்ளபடியே பதிவு செய்திருக்கிறது நாவல். ஒன்றிய அரசு தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு வழங்கிவிட்டு இங்குள்ள மக்களுக்கு வழங்க வழியில்லாமல் தவித்தது, ஊட்டச்சத்தை அதிகரிக்க கொண்டைக்கடலை அனைத்துத் குடும்பதாரர்களுக்கும் வழங்கப்படும் எனச் சொன்னது, கை தட்டச் சொன்னது, விளக்கேற்றச் சொன்னது, தேர்தல் பிரச்சாரம், திடீர் ஊரடங்கு அறிவித்ததால் மக்களை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடக்கவைத்தது எனப் பேசுவதென்றால் பல கருத்துக்களைப் பேச வாய்ப்புள்ள ஒரு நாவல் தான். கொத்துக் கொத்தாக மனித உயிர்களை ஒரே குழிக்குள் போடுவதும், படுக்கை வசதியில்லை என்பதால் அவசர ஊர்தியினுள் அல்லாடும் நோயாளிகளும், அடுத்தடுத்த படுக்கையில் நோயாளிகள் இறப்பும், அதைக் கண்டு உயிர்வாழப் படபடக்கும் நோயாளிகளும் என இந்த தீ நுண்மிக்காலம் அளித்த அனுபவங்கள் ஒவ்வொன்றும் பயத்தை உண்டுபண்ணச் செய்பவை. ஆனாலும் ஒரு சராசரி மனிதனின் வாழ்வைச் சூறையாடும் அச்சுறுத்தலும் அதற்கு தன்னை ஒப்புக் கொடுக்கும் சூழலையும் இயல்பாகப் பதிவு செய்துள்ளது நாவல் என்பதை மனதார ஒப்புக்கொள்ளலாம்.

பதிப்பக விபரம்:

Discovery Publications
No.9, Plot, 1080 A,
Rohini Flats,
Munusamy Salai,
K.K. Nagar West,
Chennai -600 078
Mobile: +91 99404 46650

யாழ் தண்விகா