Friday, 23 December 2022

புளிக்கும் வெயில் #ராம்போ_குமார்


புளிக்கும் வெயில்

ராம்போ குமார்

Rambo Kumar 

வேரல் புக்ஸ்

96 பக்கங்கள் 

100 ரூபாய்


ஒரு நாயகன் உருவாகிறான்...

(சிஸ்டம் சரியாகிவிட்டது தல)

எந்த உலகத்தில் என்றும் தொக்கி நிற்கும் கேள்விக்கு கவிதை உலகத்தில் என்று பதில் அளிக்கலாம். தோழர் ராம்போ குமார் தன்னுடைய தனித்துவமிக்க நடிப்பால், பேச்சால் மனம் கவர்ந்தவர். இப்போது கவிதையிலும். தொகுப்பின் முதல் கவிதையை அதற்கு அச்சாரமாகக் கூறலாம்.

“என்னிடம் ஒரு ஆழ்ந்த கல்லறைக்குண்டான

சிறு அமைதி இருந்தது

காற்றின் காமம் பசி தீர்க்கும்

புல்லாங்குழலின் சில துளைகள்

பருக முடியா ஆதி நிலத்தின் வழிந்த ஈரத்தின் மிச்சம் 

பழைய சொற்களின் புழுக்கம் கொஞ்சம்

குகை இருட்டின் முகம் 

ஒன்றுகூட இருந்ததாய் ஞாபகம்

அத்தனையும் நழுவிக்கொண்டிருக்கிறது

முதல் மாத சம்பளம் எண்ணிக்கொண்டிருக்கும்

எனது விரல்களின் வழியே..” எனத் தொடங்கும் கவிதையின் சொற்களில் கருவைக் காண்பதா... இவ்வளவு நாள் கண்ட கவியின் புதிய முகத்தைக் காண்பதா... சந்தோஷ மிரட்சி. 


ஒரு கவிதையில் 

“பசி ஒன்றும் பெரிய வலியில்லை

அதனூடே தோன்றும்

கவிதைதான்...” கொஞ்சம் நீள்கிறது முற்றுப்பெறாமல். கவிஞனின் பசியா? பசியை எழுதப் போகும் கவிதையின் தீவிரமா? என்ற கேள்வியின் முன்னாள் எனக்கென்னமோ பசியை எழுதும் கவிதையின் ஆத்திரம் மிகு சொற்களின் தீச்சுவாலை அதிகமாக இருக்கும்போல் உணரமுடிகிறது. இன்னொரு கவிதையில்

“முன்னிரவு காமத்தைப் 

பின்னிரவுக்கு 

ஒத்தி வைக்கிறது

ஒரு நல்ல கவிதை” என்னும்போது கவிதை என்ன செய்யும் என்ற கேள்விக்குப் பதில் கிடைத்துவிடுகிறது. மேலும் கவிதை காமத்தை ஒத்தி வைக்கிறதாகக் கூறும் தன்மையிலிருந்து கவிதை எதையும் செய்யும் என்பதையும் அழகாகக் கூறிவிடுகிறது.


“அப்பத்தாவுக்குத் தங்கமுத்து மாரியம்மன்

தாத்தாவுக்குச் சுடலைசாமி

எங்க ஆச்சிக்கு முப்பிடாதி அம்மன்...

மேலத்தெரு மாமாவுக்குக் கருப்பண்ணசாமி

அத்தைக்குக்கூடச் செல்லத்தம்மன்னு கேள்வி...

கொடைக்குக்கொடை

கூட்டத்திற்குள்ளேயே ஆடிக்கொண்டிருக்கும்

சாமி கொண்டாடிகள்,

இதுவரை 

சன்னதம் சொன்னதேயில்லை தனிமையில்”

கிராமத்துச் சாமிகளின் அருளேறி ஆடும் மனிதர்கள் கண்முன்னே வருகிறார்கள். அவர்களின் ஆங்காரக் கூச்சல் காதுகளில் ஒலிக்கத் தொடங்குகிறது. திருவிழாக்கூட்டம் கிறங்க வைக்கிறது. ஊரே அருள் வந்து நிற்க, நாக்கைக் கடித்து அரிவாள் ஏறும் ஆண்கள், இருக்கும் இடம் தெரியாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் பெண்கள் மேல் அருள் வந்து ஆடும் சாமிகள் குறித்து திருவிழா கடந்தபின் நினைக்க என்ன இருக்கும்? அதனைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார் கவிஞர். “இதுவரை சன்னதம் சொன்னதேயில்லை தனிமையில்...” சாமி கொண்டாடிகளிடம் கேட்கவேண்டும்தான்.


கொஞ்சம் கொஞ்சம் அன்பைக் கொஞ்சும் கவிதைகள் நட்சத்திரங்கள் போல ஆங்காங்கே மின்னிக்கொண்டிருக்கின்றன. யாரந்த யாழினி என்ற கேள்விக்குப் பின்னால் ஓடத் தொடங்குகிறது வாசிக்கும் பார்வை.

“உன்னை அகம் தள்ளியபின்

புறவெளியில் 

எதைத்தேடப்போகிறேன் யாழினி”

“வலது ஆரிக்களிலும்

இடது ஆரிக்களிலும்

சமமாக நின்றுதொலை 

யாழினி

அவ்வப்போது சரிந்து விடுகிறதென்

இதயம்” 

“இன்னும் வேகமாக

வீசியெறி உன் சொற்களை

நான் இன்னுமொரு 

கவிதை செய்யவேண்டும்”

கவிதை ஊரில் காதல் வழிச் சாலையிலும் சிறப்பானதொரு பயணம் மேற்கொள்ள வாழ்த்துகள்...


“ஒரு பச்சிலையின் 

கணம் தாங்கும் கிளைகளுக்கு

ஒரு சருகின் கணம் 

தாங்க முடிவதில்லை”

வாசிக்க வாசிக்க தந்த காட்சி முடியவில்லை. சருகு என்பது அத்தனை சாதாரணமானதாக இருக்க முடியாது. அதன் கணம் குறித்து எழுந்த கேள்விகளுக்குள் பச்சிலை வாழ்ந்த வாழ்க்கையை உணர்த்தும் வரிகள் அபாரமான வெளிப்பாடு.


எல்லாவற்றிலும் நேரம் காலம் பார்த்து செயல்படும் அச்சம்பத்து என்னும் ஊரைச் சேர்ந்த மாமா பற்றிய கவிதை...

...

“அச்சம்பத்து விபத்தில்

மாமா இறந்துபோன அன்று,

நாட்காட்டியில் அவரின்

விருச்சிக ராசிக்கு

நம்பிக்கை என்றுதான் இருந்தது...” காலம் என்னென்ன மாய வித்தைகள் செய்யும் என்பதை காலம் மட்டுமே அறியும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஈடுபாடு, ஒரு வழி. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேடமிட்டுத் திரிக்கிறோம். ஆனால் அந்திமக் காலமாகட்டும், உயிர் போகும் தருணமாகட்டும், மனிதன் மகிழ்வோடு இந்த உலகைத் துறக்கத் தயாராகிவிடுகிறானா என்றாள் இல்லை. காலம் நமது அபிலாசைகளையெல்லாம் பூர்த்தி செய்து வைக்கிறதா என்றால் இல்லை. அக்கணம், நாமெல்லாம் சாதாரண மனிதர்கள் மட்டுமே என்பதை உணர்த்தும் கவிதை.


“இரு நீலங்களுக்கு மத்தியில் 

பறந்துவந்த பறவையொன்று

என் ஜன்னலில் வந்தமர்கிறது

அதன்மேனியில்

தாய்மண் வாசத்தை

நுகரத் தெரிந்த 

அந்தப் பெயர் தெரியா பறவை 

மிச்சமிருக்கும் தன் நிலத்தை

எனக்குக் கடத்துகிறது

தன் கண்களின் வழி”

கவிஞன் என்பவனின் பார்வை உன்னதப்படும் இடம் என்பது உலகின் எல்லாவுயிர்களிடத்தில் காட்டும் இடம் மட்டுமே. அவனின் ஆக்ரோசமும் மனிதம் சார்ந்திருக்கும். மௌனமும் மனிதம் சார்ந்திருக்கும். அன்பு அவன் இயல்பாகயிருக்கும். பெயர் தெரியாத அந்தப் பறவையின் வலியைக் கண்கள் வழியாகக் காணும் ராம்போ குமார் என்னும் தோழர்-கவிஞர் இயல்பாகவே சமூகப் பார்வையுடன் பயணிப்பவர். அதனை அச்சு வடிவில், கவிதை உருவில் வெளிக்கொணர்ந்துள்ளார். சொல்ல இன்னும் பல கவிதைகளுண்டு. வாசியுங்கள். பன்முகத் திறன் கொண்ட தோழர் ராம்போ குமார் இன்னும் பல உயரங்கள் கவிதை உலகிலும் தொட வாழ்த்துகிறேன்.


யாழ் தண்விகா

 

Sunday, 4 December 2022

ரோலக்ஸ் வாட்ச்


ரோலக்ஸ் வாட்ச்

நாவல்

சரவணன் சந்திரன்

உயிர்மை பதிப்பகம்

பக்கம் 160

விலை 150

மார்ச் 2016 பதிப்பு


நட்பு காதல் கொலை குரூரம் இயல்புத்தனம் துரோகம் என எல்லாம் உண்டு இந்நாவலில். கதாசிரியர் தான் நாயகன். வலிந்து திணிக்கப்படாத பாதை வழியே கதை நகர்கிறது. என்ன கதை என்பது சுவாரஸ்யம். ஒவ்வொரு பகுதியும் ஒரு சிறுகதைதான். எங்கிருந்தும் தொடங்கலாம். சரவணன் மற்றும் கதை கூறுபவன், அவன் தோழி, தோழியின் தோழி, ஜோதிடர் சுந்தர் எனச் சில பாத்திரங்கள் முக்கியமானவை. பிற எல்லாம் வந்து போகின்றன. எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் இருக்கிறது. சரவணன், கதை சொல்பவனுக்கு வாழ்வில் பல உதவிகள் செய்பவன். செய்தவன். ஆனால் கதை சொல்பவனுக்கு ஒரு தனி உலகம். காலமெல்லாம் சரவணனின் கையைப் பிடித்து நடக்க தன்னால் இயலாது என்னும் உறுதி கொண்டவன். அவனிடம் அதனை நேராகச் சொல்லும் தைரியம் அற்றவன். கோழை என்றில்லை. அது கதாசிரியன் சுபாவம். இவர்களுக்கு ஒரு நண்பர் குழாம். அதில் ஒருத்தி திவ்யா. அவளோடு அன்பு காதல் காமம் எல்லாம். அவள் திருமணம் முடித்தவள். அவளோடு ஒரு வாழ்க்கை. வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்கள் செல்ல சில தகிடுதத்தங்கள் செய்து கதை சொல்பவன் மேலே வருகிறான். வெளிநாடு செல்கிறான். தனியாக அறை எடுக்கிறான். அங்கு பெண்களோடு உல்லாசித்துத் திரிகிறான். பணம் சேர்க்கிறான். ஒரு மனிதனுக்கான கூறுகள் இப்படி இருப்பதில்லையே என நினைக்கும்போது மனிதன் என்பவன் இப்படியும் இருக்கிறான் எனச் சொல்ல, இப்படித்தான் இருக்கிறான் எனச் சொல்ல பல பாதைகளை கதை வழியே சொல்கிறார் நாவலாசிரியர். கதை சொல்லுதலில் இப்படியும் ஓர் உத்தி எனக் காண்பித்து உள்ளார். டயரி எழுதுவது போலுள்ளது என்று கூறி ஒதுக்கி விடாத வண்ணம் எழுத்து நடை அமைந்துள்ளது சிறப்பு. பிடித்தது எனச் சொல்ல நான் கண்ட மனிதரில் கதாசிரியன் போன்ற நபர்களைக் கண்டுள்ளதும் காரணமாக இருக்கலாம். மனிதன் செய்யும் பண அரசியல் எப்படியெல்லாம் இருக்கும் என்றெல்லாம் ஆங்காங்கே வருகிறது. கதையும் முடிச்சும் இதுதான் எனச் சொல்ல வாய்ப்பில்லை. வாசித்தால் தான் அதை உணர முடியும் எனச் சொல்லும் நாவல். வாசிக்கலாம் தாராளமாக.


யாழ் தண்விகா 


#நூல்_வாசிப்பனுபவம்_2022


❣️

 

Wednesday, 23 November 2022

கமலி #சி_மோகன்

 


கமலி
நாவல்
சி.மோகன்
பக்கம் 144
விலை ரூ.150/=

ரகு கமலி இருவரும் கணவன் மனைவி. கமலியின் அப்பா, கமலியின் ஜாதகத்தை ஆய்ந்து அறிந்து கண்டறிந்த மாப்பிள்ளை ரகு. இவர்களுக்கு நந்திதா என்ற பெண். இவர்களின் வாழ்வில் புதிதாக நுழைகிறார் கண்ணன். கொஞ்சம் கொஞ்சமாக கமலியின் மனதில் பதியத் தொடங்குகிறார் நல்ல மனிதராக, ரசனைக்குரியவராக, படிப்பாளியாக, வார்த்தைகளில் வசியம் செய்பவராக, கமலியின் மனம் கவர்ந்தவராக... கமலியின் எண்ணத்தில் உண்டான மாற்றத்தை கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்குகிறான் ரகு. ஒரு சில கட்டத்திற்குப் பின்னர் கண்ணனுடன் உள்ள தொடர்பு முற்றிலுமாக தடைபடுகிறது ரகுவின் கட்டளையின் பேரில். ஆனாலும் கமலி கண்ணன் இடையே உள்ள காதலுக்கும் காமத்திற்கும் முற்றுப்புள்ளி இல்லாமல் தங்கு தடையின்றி அது தொடர்கிறது. இடையில் கமலியின் அப்பா இறந்துபோகிறார். அம்மாவிற்கு உடல் நலமில்லாமல் போய்விடுகிறது. அம்மாவைக் கவனிக்க சென்னைக்கு கமலி புறப்படுகிறாள். செல்லும் வழியில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. கண்ணனும் கமலியும் ஒரே பேருந்தில், படுக்கும் வசதியுள்ள இருக்கையில். கமலி எப்படி கண்ணனுடன் இந்த வாழ்வை வாழ்கிறாள்? ரகு கண்ணனுடன் பேசினானா, நந்திதாவுக்கு ஒரு தம்பிப் பாப்பாவோ தங்கச்சிப் பாப்பாவோ கிடைத்ததா என்பதை அறிய வாசிக்கவேண்டும் இந்த நாவலை. சரியோ தவறோ என்ற ஊசலாட்டம் கமலியின் எண்ணத்தில் புகவில்லை. அவள் மெல்ல கண்ணனின் வசியத்திற்குள் சிக்குகிறாள். கண்ணனும் நல்ல மனிதர். ஒரு இடத்திலும் கமலியின் பாத்திரமோ கண்ணனின் பாத்திரமோ குற்ற உணர்ச்சி என்று காலம் காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கும் விடயத்தில் சிக்குவதாகக் கதையில் சொல்லாமல், ரகுவிடம் தோன்றும் மனக் கிலேசத்தை எப்படி கச்சிதமாக கமலி தீர்க்கிறாள், கமலியும் கண்ணனும் இந்த வாழ்க்கையை எவ்வளவு கவனமாகக் கடத்துகிறார்கள் என்பதை கிளர்ச்சியைத் தூண்டும் மொழிநடையில் படைத்துள்ளார் நூலாசிரியர். முக்கியமாக கதையின் இறுதி.

சம காலத்தில் பரவலாக காணக் கிடைக்கும் கதை
 இன்றைய உலகில் இல்லாத ஒன்றினை நாவல் எடுத்துரைப்பதாக கூறிவிட இயலாது. பரவலாக தினம்தோறும் பத்திரிக்கைகளில், ஊடகங்களில் இடம்பெறும் ஒரு செய்தியாக இந்த முறை மீறிய, முறை தவறிய காதலைச் சொல்லலாம். கூடுதலாக ஒரு தகவலாகச் சொல்ல வேண்டுமெனில் ஊர் அறிய, உலகம் அறிய முடித்த திருமணத்தைக் காட்டிலும் இது போன்ற காதலும், காமமும் வீரியமாக, கொலைக்கும் அஞ்சாத ஒன்றாக மாறிக் கொண்டிருப்பதை நடக்கும் சம்பவங்கள் மூலம் அறியலாம். குன்றத்தூர் என்ற ஊரில் பிரியாணி கொண்டு வந்து கொடுக்கும் உணவகப் பணியாளர் மீது அபிராமி என்ற பெண்ணிற்கு ஏற்பட்ட ஈர்ப்பு, தனக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற சம்பவத்தை இதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம். 
 திடீர் என்று உள்ளுக்குள் உண்டாகும் மனமாற்றம் தான் இது போன்ற பிரச்சனைகளுக்குக் காரணம் என்று கூறிவிட இயலாது. ஒவ்வொரு பெண்ணின் மனதின் உள்ளே இருக்கும் அபிலாசைகளைப் புரிந்து, அதற்கேற்ப இங்கு வாழ்க்கைத்துணை கிடைப்பதில்லை. சொத்துக்களைப் பாதுகாக்க, சமூகம், சாதி, மதம் இவற்றைக் காக்கும் எண்ணம் இவையெல்லாம் அகமணத் திருமண ஏற்பாட்டில் இருக்கிறது. அதற்காக இவற்றில் எல்லா திருமணங்களும் மகிழ்வில்லாமல் இருப்பதாகக் கூறல் தவறாகிவிடும். மனதின் அடி ஆழத்தில் கிடக்கும் ஆசைகள் மேலெழும்போது தவறுக்கான காரணங்கள் பூக்கிறது. சந்தர்ப்பம் அமையும்போது தவறுகள் செயல் வடிவம் பெறுகிறது. தவறுகளை மறைக்க இயலா வண்ணம் போகும்போது குற்றம் வெளிப்படுகிறது. எல்லாம் புரிந்து, காதல் மணம் புரியும் தம்பதியர் கூட இதுபோன்ற சல்லாபங்களில் ஈடுபடும்போது மனித மனதின் ஆசை தான் என்ன என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடிவதில்லை.

கமலி – கண்ணன் – ரகு
 ரசனையின் மறுவடிவம் கமலி. படிப்பு ஆர்வம் மிக்கவள். மந்திரங்கள், ஸ்லோகங்கள், பக்திப் பாடல்கள் அறிந்தவள். ஆங்கில இலக்கியம் முதுகலையில் முடித்தவள். அயல் நாட்டு வர்த்தக நிறுவனத்தில் ரிசப்சனிஸ்டாக பணி புரிந்தவள். ரகுவை பெற்றோர் பார்த்து மணம் முடித்து வைக்கின்றனர். திருமணம் முடிந்து ஆறாம் வருடம் நந்திதா பிறக்கிறாள். கமலி தன்னுடைய 37வது வயதில் கண்ணனுடன் காதல் வயப்படுகிறாள். எதற்காகவும் கண்ணனை இழந்துவிடக்கூடாது என்று என்னும் அளவு காதல். இத்தனைக்கும் ஆரம்ப கட்டத்தில் அதிகமாக தொலைபேசியில் மட்டுமே வளர்ந்த காதல். ரகு மீது எந்தப் புகாரும் இல்லாத ஒருத்திதான் கமலி. ஆனாலும் அவளால் கண்ணனைத் தவிர்க்க இயலவில்லை. ரகுவிற்கும் கண்ணனுக்கும் மனக் கசப்பு வந்தபோதும் அவனுடனான உறவை கமலி முறித்துக்கொள்ளவே இல்லை. வீட்டிற்குள் சந்தேகம் பூத்த போதும் ரகுவை காமத்தால், அன்பால், ஸ்பரிசம் தீண்டும் பேச்சால் கட்டிப் போட்டு கவனித்துக்கொண்டாள் கமலி. அதே சமயம் இதுபோன்ற சூழலை கண்ணனிடம் பகிர்ந்துகொள்கிறாள் கமலி. கண்ணனோடு ரகு மீண்டும் பேசும் சூழல் உருவாக வேண்டும் என எதிர்பார்க்கிறாள் கமலி. அந்தச் சூழல் அமைகிறது. தனக்கு கண்ணனால் ஒரு குழந்தை வேண்டும் என்ற அதீத ஆசை ஏற்படுகிறது. அந்த ஆசைக்காக கமலியும் கண்ணனும் தீட்டிய திட்டங்கள் எல்லாம் அறிவியல். அந்த ஆசை நிறைவேறுகிறதா? ரகுவின் நிலை என்ன? ஒரு முக்கோணக் கதை தான். ஆபாசம் பூத்தூவிக் கிடக்கிறது தான் நாவலில். ஆனாலும் கத்தி மேல் நடக்கும் பயணத்தை, முறையாக இல்லாத ஒன்றை வாசிக்க வைத்து வெற்றிப் பயணமாக்கிவிடுகிறார் நாவலாசிரியர்.

நாவலிலிருந்து...
கண்ணன், காதலை மிகச் சாதாரணமாக எவ்விதத் தயக்கமுமின்றிச்  சொன்னபோது, கமலி விதிர்விதிர்த்துத்தான் போனாள். அவள் உடலும் மனமும் படபடத்து நடுங்கியது. ஆனால் அந்தப் படபடப்பில் பயமில்லை. மாறாக, பரவசமிருந்தது. அன்று இரவு வெகுநேரம் தூக்கம் பிடிக்காமல் மனம் ஏதோ ஒரு கிறக்கத்தில் கிறுகிறுத்துக் கொண்டிருந்தது.

பதிப்பக விபரம்:
புலம் வெளியீடு
178, F, அனுதீப் அபார்ட்மெண்ட்ஸ்,
3வது பிரதான சாலை,
நடேசன் நகர், 
சென்னை – 600092
தொலைபேசி : 9840603499
Email: pulam2017@gmail.com

யாழ் தண்விகா


கோடிக்கால் பூதம் #அ_உமர்_பாரூக்

 


கோடிக்கால் பூதம்

நாவல்

அ. உமர் பாரூக் 
தோழர் Acu Healer Umar Farook 

பக்கம்: 128
விலை: 150

தீ நுண்மிக்காலமும் உயிர்க் கொள்ளையும்
 
 அங்கிங்கெனாதபடி உலகெங்கும் அச்சுறுத்தலுக்கு ஆளான ஒரு காலம் என்றால் சமகாலத்தில் காணும் கொரோனோ காலம் தான். இப்போது வரை உலக நாடுகள், மக்களை ஊரடங்கு, முகக் கவசம், சமூக இடைவெளி மட்டுமே காக்க முடியும் என்பதைக் கூறி வருகிறது. இதற்கிடையில் முதல் அலை, இரண்டாம் அலை கடந்துவிட்டது. மூன்றாம் அலை மற்றும் அடுத்து வரக்கூடிய கொரோனோவின் பாதிப்பு இதற்கு முன்பு வந்த அலையை விட மிகத் தீவிரமாக இருக்கும் என்ற கணிப்பையும் கூறி மக்களை அச்சத்திலேயே வைத்திருக்கிறது. கொரோனோவை விட பெரிய நோயாக அரசின் அறிவிப்பும் அச்சுறுத்தலும் இருக்கிறது. அதற்குச் சாதகமாக நோயிலிருந்து குணமாகும் அதிகமான மனிதர்களை விட நோய்க்கு ஆளாகும் குறைவான நபர்களை மட்டுமே பெரிதுபடுத்தியும், இறப்புகளைக் கூறி பதட்டத்தையும் உண்டுபண்ணும் வண்ணம் ஊடகங்களில் செய்திகளை வெளியிட வைத்து வருகிறது. எளிதில் குணமாக்கும் நோய் என்று யாராவது சொன்னால்கூட அவர்களுக்கு எதிராக அதிகார பலத்தைப் பயன்படுத்தும் வன்மமும் இந்தக் காலகட்டத்தில் நிகழ்வதைக் காண முடிகிறது. மருத்துவத்தில் சிறப்பான கட்டமைப்பை ஏற்படுத்தி அல்லது ஏற்கனவே இருக்கக்கூடிய மருத்துவ வசதியால் மிக எளிதாகக் கடக்க வேண்டிய நோயை, வெற்றிகரமாக இரண்டாம் வருடத்தில் எனக் கூறும் வண்ணம் நகர்த்தி வருகிறது அரசு வல்லாதிக்கம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இக்கொடும் காலம் குறித்த சிறு துளி தான் கோடிக்கால் பூதம் என்னும் இந்த நாவல்.

கதைச் சுருக்கம்.

 டேவிட் சர்ச்சில் மதபோதகர். மைக்கேல் அவன் நண்பன். கொரோனோ கால கட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவில் உள்ள சர்ச்சுக்குச் செல்ல மைக்கேலின் உதவியை நாடுகிறான். தன்னுடைய இ-சேவை மையத்திலிருந்து பாஸ் தயார் செய்து கொடுக்கிறான் மைக்கேல். ஆனால் அங்கு நிலைமை சரியில்லை என்பதால் டேவிட் கேரளா செல்ல இயலாமல் போய் விடுகிறது. குமார் தற்காலிக ஊழியராக மருத்துவமனையில் பணிபுரிபவன். டேவிட் மற்றும் மைக்கேலுக்கு நண்பன். இவர்களின் ஆசிரியர் தங்கம். அவர் தன்னுடைய பணிக் காலத்தை முடித்துவிட்டு தனிமனிதனாக மேன்சன் ஒன்றில் வாடகைக்கு ஒரு அறை எடுத்து வசித்து வருகிறார். அவரிடம் அவ்வப்போது சென்று உரையாடிவிட்டு வருவது மைக்கேலின் வழக்கம். டேவிட்டிற்கு வீடு, எப்போதாவது மைக்கேலின் கடை அல்லது சர்ச். குமாருக்கு தன்னுடைய மருத்துவமனை லேப்பில் பரிசோதனை செய்யும் பணி. கொரோனோ காலத்தின் பரிசோதனை அவலங்களை, மருத்துவ அவலங்களை குமார் கண்டு வேதனைப்படுகிறான். தன்னுடைய அப்பாவின் டைப் ரைட்டிங் நிலையத்தை இ சேவை மையமாக மாற்றி அதன் மூலம் வரும் வருமானத்தில் தன்னுடைய குடும்பத்தை மிக எளிமையான முறையில் நடத்தி வருபவன் மைக்கேல். மனைவி மற்றும் ஒரு குழந்தை. இந்தச் சூழலில் மைக்கேலுக்கு காய்ச்சல் வருகிறது. குணமாக வேண்டிய காய்ச்சல். ஆனால் அவன் கேட்ட தகவல்கள், பார்த்த தகவல்களால் மிகவும் பயப்படுகிறான். அரசு மருத்துவமனை, ஆக்ஸிஜன் சிலிண்டர், தனியார் மருத்துவமனை, அவசர சிகிச்சைப் பிரிவு என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தன்னைத்தானே பலிகடா ஆக்கத் துணியும் வண்ணம் அவன் மனநிலை மாறுகிறது. கொரோனோ காலத்தை அவன் எப்படியாக எதிர்கொண்டான், அவனைச் சுற்றியிருந்த சூழல் அவன் மீண்டெழ உதவியதா என்பது தான் கதை.

கதை மாந்தர்கள்

 மிகக் குறைந்த அளவிலான பாத்திரங்களே நாவலில். மைக்கேல், அவனுடைய தந்தை ஆசீர்வாதம், மைக்கேலின் மனைவி ஜான்சி, மகன் ரியோ, சர்ச் போதகர் டேவிட், மருத்துவமனை ஆய்வுக்கூட பரிசோதகர் குமார், குட்டை வாத்தியார் என்ற தங்கம் வாத்தியார், மைக்கேலின் மாமனார் பீட்டர், டாக்டர்கள் சுந்தரம், ராஜா. இவர்கள்தான் பிரதான பாத்திரங்களாக நாவலில் வருகிறார்கள். ஒவ்வொருவர் குறித்தும் உள்ள தகவல்கள் மிகைப்படுத்தப்படாதவையாகவும் கதையோடு சேர்ந்து போவது போலவும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது நாவலை வாசிப்பதில் சுணக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

மைக்கேலின் மன மாற்றமும் பயத்தில் வீழ்ந்த தைரியமும்...
 ஆசீர்வாதம் காலம் டைப் ரைட்டர் காலம், அவரை நோக்கி வரும் வாடிக்கையாளர்கள் காலத்தை பின்னோக்கி பயணிக்க வைக்கிறது. தொடர்ந்து வரும் கால மாறுதல்கள் பிரவுசிங் சென்டர் என்ற நிலையைக் கொண்டு வருகிறது. அதுவும் காலப் போக்கில் இ சேவை மையம் என்ற நிலையை எட்டுகிறது. அந்த வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டும் எளிய மனிதன் மைக்கேல். எல்லோரிடமும் மனம் விட்டுப் பேசுபவன். அவனின் சொற்கள் யாரையும் காயம் செய்யாதவை. இணைய சேவைகளுக்காக அரசுத் துறைகள் சார்ந்த பலர் வந்து செல்லும் இடமாக அவன் மையம் திகழ்ந்தது. இந்தக் காலகட்டத்தில் தான் கொரோனோ இரண்டாம் அலை வருகிறது. இயல்பாக அரசின் அறிவுறுத்தல் காரணமாக மாஸ்க், கைகளை சானிடைசர் மூலமாக கழுவுதல், சமூக இடைவெளி இவற்றைக் கடைபிடிக்கிறான் மைக்கேல். கொரோனோ தீவிரமாகப் பரவத் தொடங்கியபின்னர் தன்னுடைய மனைவியான ஜான்சியைக் கூட கடைகளுக்கு வெளியில் அனுப்பாமல் பார்த்துக் கொள்கிறான். குமார் மூலமாக மருத்துவம் தொடர்பான தகவல்களைக் கேட்டும் வைத்திருப்பவன். சாதாரணமாக அவனுக்கு வந்த தலைவலி மனச் சஞ்சலங்களை உருவாக்கிவிடுகிறது. ஒவ்வொரு நாளும் தலைவலி, அடுத்து காய்ச்சல் எனத் தொடர்ந்தாலும் மருத்துவ நண்பர்கள் மூலமாக அதற்கு மருந்துகள் எடுத்துக்கொள்கிறான். காய்ச்சலும் சரியாகிறது. ஆனாலும் ஊடகங்கள் தரும் தகவல்களால் தனது உடல்நிலை குறித்த சந்தேகத்தால் மருத்துவமனையில் மூக்கின் வழியாக சளி எடுத்துப் பரிசோதனை செய்கிறான். நெகட்டிவ் வருகிறது. அடுத்து தொண்டையில் சளி எடுத்துப் பரிசோதனை செய்கிறான். அதுவும் நெகட்டிவ் வருகிறது. ஆனாலும் அரசின் கொரோனோ குறித்த அச்சுறுத்தல் காரணமாக அரசு மருத்துவமனையில் கொரோனோ நோயாளியாக சேர்கிறான். உறக்கத்தின்போது எந்தவித மூச்சுத் திணறல் இல்லாமல் உறங்குபவன் விழிக்கும்போது பல எண்ணங்கள் அலைபாய மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுவதாக உணர்கிறான். நர்சிடம் வலிய ஆக்ஸிஜன் சிலிண்டர் கேட்டு தனக்கு பயன்படுத்துகிறான். சுகர் பரிசோதனை செய்துகொள்கிறான். கை விரல்களில் ஆக்ஸி மீட்டர் மாட்டி ஆக்ஸிஜன் லெவலை அடிக்கடி பரிசோதித்துக் கொள்கிறான். அவன் வீடு வந்த பின்னரும் அவனுக்கு மனம் நிலைகொள்ளவில்லை. தனக்கு அருகில் இருந்த பெட்டில் அவன் வயதொத்த மனிதன், புகை மற்றும் சிகரெட் பழக்கம் உள்ளவன் சேர்க்கப்பட்டு இறந்து விடுகிறான். நெருங்கிய உறவுகளில், நட்பு வட்டத்தில் உள்ள யாரும் பாதிக்கப்படக்கூடாது என எண்ணினாலும் பாளையத்தைச் சேர்ந்த நண்பன் ஒருவன் இறந்து விடுகிறான். இவையெல்லாம் மனதை அலைக்கழிக்கச் செய்கிறது மைக்கேலை. கூடவே இருந்து மனைவி ஜான்சி பார்த்துக்கொண்டாலும் மைக்கேலுக்கு தனக்கு கொரோனோ இருக்கிறது என்ற எண்ணமே முழுவதுமாக இருப்பதால் மதுரைக்கு தனியார் மருத்துவமனைக்குச் சென்று பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வந்து அங்கும் செல்கிறான் மனைவியோடு. உடல்நலத்திற்கு ஒன்றுமில்லை என்ற சூழலிலும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வந்தாலும் திடீரென்று மூச்சுத் திணறல் வந்தால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் விடுதியில் மனைவியுடன் தங்குகிறான். மீண்டும் மூச்சுத் திணறல். அதே தனியார் மருத்துவமனைக்குச் சென்றாலும் அங்கு அனுமதியில்லாமல் வேறு மருத்துவமனை. அங்கு சிகிச்சை. கடைசியில் அவனை பீட்டர், மற்றும் ஜான்சி காப்பாற்றினார்களா... தங்கம் வாத்தியார் செய்த உதவி என்ன... குமார் என்ன செய்தான்... என நிறைவடைகிறது நாவல். 

 மொத்தம் 15 பாகங்களாக நாவல். 10வது பாகத்திலிருந்து நாவல் வேகமெடுக்கத் தொடங்குகிறது. கொரோனோ கால கவனம் என்பதை வீட்டில் உள்ள ஜான்சி, ரியோ எளிதாக எடுத்துக்கொள்ள, மைக்கேல் மிகக் கவனமாகவே இருக்க விழைகிறான். மரணம் பற்றிய பயம் அவனுக்குள் வெளியுலகம் பற்றிய ஊடக தகவல்களால் மெல்ல மெல்ல ஊடுருவுகிறது. கொரோனோவால் இறந்த நோயாளிகளை புதைக்கும் விதம் அச்சுறுத்தலுக்கு ஆளாக்குகிறது. “மரணம் பற்றிய அச்சுறுத்தல் ஏற்படும்போதெல்லாம் கடவுள் மீது நம்பிக்கை கூடுவதையும், இப்படியான மனிதர்களின் இறப்பைப் பார்க்கும்போது அது தானாகவே குறைந்து விடுவதாகவும் அவனுக்குத் தோன்றியது” இப்படியாக மரண பயம் மைக்கேலுக்குள் செல்லத் தொடங்குகிறது.
 கொரோனோவால் பாதிக்கப்பட்ட பின்னர் எப்போதும் தனது புகைப்படத்தை வாட்ஸ்அப் ப்ரோபைலில் வைத்திருக்கும் மைக்கேல், இயேசுவின் படத்தை மாற்றுகிறான். அதைக் கண்டு மைக்கேலின் மனைவியும் அவனைப் பற்றிய சரியான எண்ணத்தைக் கணிக்கிறாள். “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” என்ற வரிகள் ஜான்சிக்குள் வேறு மாதிரியாக ஓடியது. “பயத்தின் ஆரம்பமே கர்த்தரின் மேலான விசுவாசத்தின் ஆரம்பம்” என்று அவள் நினைப்பது சரியாக அமைகிறது.
 அளவுக்கு மீறிய அறிவு குழப்பத்தை உண்டுபண்ணுவது போல மைக்கேலின் பாத்திரப்படைப்பு அமைந்திருக்கிறது. புரிதலற்ற தீவிரம் மூட நம்பிக்கையை உண்டாக்கும் அதே கணம் பயத்துடன் கூடிய அறிவு என்பது எதையும் நம்பாமல் குழப்பத்தை உண்டுபண்ணி தனக்குத் தானே குழி வெட்டிக்கொள்வது போலவும் மைக்கேல் பாத்திரம் உள்ளது. மிகவும் பயந்த டேவிட் கூட கேரளாவிற்குச் சென்றுவிடுகிறான். பல ஆய்வுகளை கண்கூடாகக் காணும் குமார் இயல்பாக இருக்கிறான். ஆனால் பயம் ஊரு மனிதனை என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு மைக்கேல் பாத்திரம் ஒரு உதாரணம்.

சமகால அரசியலைப் பேசும் நாவல் 

 புனைவு, திருப்பம், மர்மம் என்றெல்லாம் இல்லாமல் சம காலத்தில் நாம் காணும் மனிதர்கள், கொரோனோ குறித்து உலக வல்லாதிக்கம் உண்டாக்கிய பீதி, அரசு அதற்கு செவி சாய்த்த அரசியல் என உள்ளதை உள்ளபடியே பதிவு செய்திருக்கிறது நாவல். ஒன்றிய அரசு தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு வழங்கிவிட்டு இங்குள்ள மக்களுக்கு வழங்க வழியில்லாமல் தவித்தது, ஊட்டச்சத்தை அதிகரிக்க கொண்டைக்கடலை அனைத்துத் குடும்பதாரர்களுக்கும் வழங்கப்படும் எனச் சொன்னது, கை தட்டச் சொன்னது, விளக்கேற்றச் சொன்னது, தேர்தல் பிரச்சாரம், திடீர் ஊரடங்கு அறிவித்ததால் மக்களை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடக்கவைத்தது எனப் பேசுவதென்றால் பல கருத்துக்களைப் பேச வாய்ப்புள்ள ஒரு நாவல் தான். கொத்துக் கொத்தாக மனித உயிர்களை ஒரே குழிக்குள் போடுவதும், படுக்கை வசதியில்லை என்பதால் அவசர ஊர்தியினுள் அல்லாடும் நோயாளிகளும், அடுத்தடுத்த படுக்கையில் நோயாளிகள் இறப்பும், அதைக் கண்டு உயிர்வாழப் படபடக்கும் நோயாளிகளும் என இந்த தீ நுண்மிக்காலம் அளித்த அனுபவங்கள் ஒவ்வொன்றும் பயத்தை உண்டுபண்ணச் செய்பவை. ஆனாலும் ஒரு சராசரி மனிதனின் வாழ்வைச் சூறையாடும் அச்சுறுத்தலும் அதற்கு தன்னை ஒப்புக் கொடுக்கும் சூழலையும் இயல்பாகப் பதிவு செய்துள்ளது நாவல் என்பதை மனதார ஒப்புக்கொள்ளலாம்.

பதிப்பக விபரம்:

Discovery Publications
No.9, Plot, 1080 A,
Rohini Flats,
Munusamy Salai,
K.K. Nagar West,
Chennai -600 078
Mobile: +91 99404 46650

யாழ் தண்விகா


ரூஹ் #லஷ்மி சரவணக்குமார்

 

#ரூஹ் 

ஏழையிடமிருந்து அவனுடைய ரட்சகனுக்கு...


நாவல்


லஷ்மி சரவணகுமார்


 வாழ்வின் பாதை யாராலும் நிர்ணயிக்க முடியாத ஒன்று. பூரணத்துவம் நோக்கியே இங்கு பெரும்பான்மை பயணம். ஆனால் நினைப்பது நடக்கிறதா என்பது அவரவர் மனத்தை அறிந்தால் மட்டுமே உணர இயலும். ரூஹ் என்பதற்கு ஆன்மா அல்லது உயிர் என்று பொருள். ஆன்மா எந்தக் கணம் எதை நோக்கிப் பிரயாணிக்கும்? ஆன்மா என்பதை உணரும் கணம் எது? ஆன்மாவைத் தேட வலிகள் முக்கியமா? அதீத இன்பம் முக்கியமா? விடையை சிற்சில பாத்திரங்கள் மூலம் தன்னுடைய நாவலில் கூறியிருக்கிறார் நாவலாசிரியர் லஷ்மி சரவணகுமார்.


 முன்னூறு வருடங்களுக்கு முந்தைய காலத்து ரகசிய மரப்பேழை 

காலச் சுழற்சியின் விளைமாக பேரையூரில் வாழும் ஜோதிலிங்கத்தின் தந்தை விட்டல் ராவ் கைகளில் கிடைக்கிறது. விட்டல் ராவ் தோல்பாவை கூத்துக் கலைஞர். ஐம்பதுகளைத் தொட்ட வயது. தன்னைத் தொடர்ந்து தன்னுடைய மகன் ஜோதிலிங்கம் அந்த கலையைத் தொடர்வான் என நினைத்தால் அவனுக்கு பெண் நளினம் வாய்த்திருக்கிறது. பெண் குரல். பலராலும் இகழ்ச்சிக்கு உள்ளாகிறான். நண்பர்களுடன் கிட்டிப்புல் விளையாடும்போது கில்லி கண்ணில் தாக்கி வீக்கமும் வலியும் உண்டாகிறது. மருத்துவமனை சென்றும் சரியாகாத நிலையில் ராபியா என்ற பெண் பள்ளிவாசல் பக்கம் மந்திரிப்பதாகக் கேள்விப்பட்டு ஜோதிலிங்கத்தை அழைத்துச் செல்கிறாள் அவள் தாய் ரத்னா. ஒரு சில நாட்களில் கண்கள் குணமாகிறது. அக்கா என்று அன்பைப் பொழியும் ஜோதிலிங்கத்தை ராபியாவிற்கும் பிடித்துப் போகிறது. ராபியா திருமானமானவள். கணவன் அன்வர். இரு குழந்தைகள். பால்ய வயதின் தடுமாற்றத்தால் ராபியாவை தவறான கண்ணோட்டத்துடன் ஜோதிலிங்கம் பார்க்கிறான். குற்ற உணர்வால் தவிக்கவும் செய்கிறான். தனது உடன்பிறந்த தங்கை தேவியையும் அதே எண்ணத்தில் பார்க்க, தேவி ராபியாவிடம் சென்று முறையிடுகிறாள். ராபியா அவனைக் கண்டிப்பதற்காக வரச் சொன்ன தருணத்திலும் மனநிலை பாதித்த ஒரு பெண்ணை காமத்துடன் பார்க்க, வெறுத்து ஒதுக்குகிறாள் ராபியா. தனது தவறுணர்ந்து, குற்ற உணர்வால் வெறுத்து வெளியூருக்கு வேலைக்குச் சென்று விடுகிறான் ஜோதிலிங்கம். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் ராபியா கடிதம் கண்ட பின்னர் ஊருக்கு வருகிறான். ராபியாவைச் சந்தித்து அவளுக்கும் குழந்தைகளுக்கும் தான் வாங்கி வந்த பொருட்களைக் கொடுத்துவிட்டுப் பேசிக் கொண்டிருக்கும்பொழுது ராபியாவின் வீட்டிற்கு கடன்காரன் வந்து சத்தம் போடுகிறான். யார் நன்றாக இருக்கவேண்டும் என வாழ்நாள் முழுதும் கனவு கண்டானோ அந்த உறவின் வீட்டிற்கு இப்படி ஒரு நிலையா என நிலைகுலைந்து போகிறான் ஜோதிலிங்கம். இந்தச் சூழலில் திருப்பூருக்கு வேலைக்குச் சென்ற ஜோதிலிங்கத்தின் தங்கை தேவி அங்கேயே நைஜீரியர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு வருகிறாள். தந்தைக்கு முதுமை காரணமாக இயலாத சூழலில் உள்ளூரில் வேலை செய்யத் தொடங்குகிறான். மாரியம்மன் கோவிலுக்கு தீச்சட்டி எடுக்கிறான். குழப்பங்கள் பலவற்றிலிருந்து  தன்னை மாற்றிக் கொள்ள எவ்வளவோ முயற்சி செய்கிறான். தன்னால் ராபியாவின் குடும்பத்திற்கு என்ன செய்ய இயலும் என்றெல்லாம் யோசிக்கிறான். கடனால் குடிக்கு அடிமையான ராபியாவின் கணவர்  அன்வர் ஒரு கட்டத்தில் திருந்தி கடன்காரர்களை நேராகச் சந்தித்து வெகு விரைவில் தன்னுடைய கடன்களை திருப்பி அளிப்பதாக உறுதி அளிக்கிறான். 

 ஜோதிலிங்கம் பல தலைமுறைகளாக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் மரப்பேழையை எடுத்து அதில் உள்ள பொருள் மூலமாக அன்வரின் கடன்களை முடிப்பதற்கு அன்வரோடு இணைந்து முயற்சிக்கிறான். அந்த முடிவு அவர்களுக்கு சாதகமாக அமைந்ததா? அன்வர் ராபியா வாழ்க்கை அடுத்த கட்டம் வளர்ச்சிப் பாதையை எட்டியதா? அதன் பின் ஜோதிலிங்கம் என்னவானான்? எனபதே  நாவலின் கதை.


நாவல் குறித்து லஷ்மி சரவணக்குமார்

 தனிப்பட்ட வாழ்வில் எதிர்கொண்ட தோல்விகளால் தற்கொலை எண்ணங்களில் உழன்று, மாதக்கணக்கில் உறங்க முடியாமல் தவித்து, கடுமையான மன உளைச்சல்களால் மன நல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்ட சமயம் சில நண்பர்களால் பாதுகாக்கப்பட்டு வந்த  நிலையில் இயக்குனர் வசந்தபாலன் கடப்பாவிலிலுள்ள அமீன் பீர் தர்காவுக்கு லஷ்மி சரவணகுமாரை அழைத்துச் செல்கிறார். அங்கும், அஜ்மீரிலும், ஏர்வாடியிலும் கேட்ட, பார்த்த, உணர்ந்த பலவும் தான் ரூஹ் எழுதுவதற்கான துவக்கப்புள்ளி என்கிறார் நாவலாசிரியர்.


பாத்திரப் படைப்பு:

தேவதையின் குணம் ராபியாவிற்கு.

 தீமை செய்பவனுக்கும் நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணம் படைத்தவள். பத்து வயதிலேயே குர்ரானை முழுவதும் ஓதும் திறன் பெற்றவள். தன்னுடைய திருமணம் ஆடம்பரமாக நடத்த அன்வர் குடும்பம் முற்படும் சமயம் கூட எதற்காக இவ்வளவு செலவு செய்யவேண்டும் என ஆதங்கப் படும் எண்ணம். மனிதர்களின் காயங்களை தனது வேண்டுதலால் குணம் செய்பவள். ஜோதிலிங்கம் கண்ணில் காயத்துடன் வரும்போது தம்பி என்று அன்பைப் பொழிந்தவள். அவனின் தவறான பார்வையைத் திருத்திவிட முயற்சித்தவள். அன்வரின் ஹோட்டல் தொடங்கவேண்டும் என்ற ஆசையால் கடனாளி ஆன போதும் எல்லையில்லா அன்பைத் தனது கணவனுக்குப் பரிசளித்தவள். எல்லையில்லா, நிபந்தனையற்ற அன்பை தனக்குள் எப்போதும் கொண்டிருப்பவள்


உணர்ச்சிகளின் நீரில் மிதப்பவன் ஜோதிலிங்கம்

 தனக்குள் எழும் பெண் தன்மையை கட்டுப்படுத்திக்கொண்டு சராசரி ஆணாக வாழ எத்தனித்தாலும் அதனை வாழ இயலாமல் வாழும் பாத்திரம் ஜோதிலிங்கம். கண்ணில் காயம் என்ற சூழலில் சந்திக்கும் ராபியாவை அன்போடு அக்கா என்று விளித்தவன். காலப்போக்கில் உள்ளூரக் கிடக்கும் உணர்வுகள் மேலெழ ராபியாவை, தேவியை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து குற்ற உணர்ச்சிக்கு ஆளானவன். தன்னுடைய தவறுகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிக்கொண்டே இருப்பவன். அன்வரின் கடன்களை அடைக்கவேண்டும். ராபியாவின் வாழ்க்கை சிறக்கவேண்டும் என்ற எண்ணத்தை கடைசிவரை கொண்டிருப்பவன். காலத்தின் கைகளில் தன்னை ஒப்படைத்து ஜோதிலிங்கம் என்ற மனிதனைத் தூக்கித் தூர எறிந்தவன்.


தவறுகளில் இருந்து பாடம் கற்பவன் அன்வர்

 ஹோட்டல் பணியை உடன் பிறந்த ஒரு அண்ணனிடம், இரும்புத் தொழிலை இன்னொரு அண்ணனிடம் இருந்து கற்றவன். அதிக பாரம் இல்லாமல் அடுத்த கட்டம் நோக்கி முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணம் உடையவன். சிறப்பாக இண்டீரியர் பணியைச் செய்துகொண்டிருக்கும் காலத்தில் கூடுதலாக ஹோட்டல் தொழிலையும் பார்க்க ஆசைப்பட்டு கடன் வாங்குகிறான் அன்வர். அந்த பணத்தை தொழில் பங்குதாரரிடம் கொடுக்க அவன் ஏமாற்றிவிடுகிறான். கடனிலிருந்து மீள படாத பாடு படுகிறான். மாறாத சூழலால் குடிக்கிறான். தீராத மது மயக்கத்திலும் தன்னுடைய மனைவியை ஒருவன் தரக்குறைவாக பேசும்போது அவனிடம் சண்டையிடுபவன். திருந்தி வாழ முற்படுபவன்.


மதம் சார்ந்த நாவலா? மனிதம் சார்ந்த நாவலா?

 இரண்டும் இருந்தாலும் இந்நாவல் பேசும் தன்மையிலிருந்து வாழ்வின் அதீதத்தை யாராலும் யூகிக்க முடியாது என்பதை உணர்த்தும் நாவல் என்று கூறலாம். அன்வரின் தந்தை காலம் முதல், அவர்களின் வீடு, தெருக்கள், அவர்கள் பார்க்கும் தொழில்கள், இஸ்லாம் மக்களது விழாக்கால  நடைமுறைகள் என விரிவாக நாவலில் கதையையொட்டியே கூறப்பட்டுள்ளது. ஜோதிலிங்கத்தின் உடல் ரீதியிலான பிரச்சனைகள், அவனின் பாலுணர்வு, தோல்பாவைத் தொழில், விட்டல் ராவ் பரம்பரையின் கூத்து வரலாறு இன்னொருபுறம் கூறப்பட்டுள்ளது.  இயல்பான மனிதர்களின் பாடுகள் சொல்லில் அடங்காது. அவர்களின் உணர்ச்சிகளில் போலித்தனம் இருக்காது. எந்த உணர்ச்சியையும் கட்டி வைக்கத் தெரியாதவர்கள். அதனை பாசாங்கு அற்ற மொழியில் காட்சிப்படுத்தியுள்ளார் நாவலாசிரியர். 

வாழ்வற்ற வாழ்வை இறையிடம் பொருத்திக் கொள்பவர்களின் துயர் நிலம்

 முன்னூறு வருடங்களுக்கு முன்னர் அரேபியாவில் இருந்து பயணத்தைத் தொடங்கும் கப்பல், அது கொள்ளையடிக்கப்படும் இடம், அதன் கடலோடி அகமது ஒரு கண்ணியில். ராபியா அன்வர் தம்பதியரின் வாழ்க்கை ஒரு கண்ணியில். ஜோதிலிங்கத்தின் வாழ்க்கை வேறொரு கண்ணியில். இம்மூன்றும் முற்றுப்பெறும் இடம் ஏர்வாடி. நல்லவர்களின் வாழ்வைத் தீர்மானிக்க என எதுவும் இருக்கிறதா என்ன? கடலோடி அகமது தன்னுடைய பணியை நிறைவு செய்துவிட்டு வாழும் சூழலில்தான் இந்துஸ்தானப் பகுதிகளுக்கு ஞானிகளையும், துறவிகளையும் கப்பலில் ஏற்றிக்கொண்டு பயணிக்கிறான். அதனை அல்லாவின் கட்டளையாக ஏற்றுக்கொள்கிறான். அந்தக் கப்பல் கொள்ளையடிக்கப்படுகிறது. கனோஜி ஆங்ரே தலைமையிலான மராத்தியப் படை கொள்ளையடிக்கிறது. கொள்ளையடித்த பொருட்களில் ஒரு பொருளை மட்டும் தந்துவிடக் கேட்டும் ஆங்ரே மறுத்துவிடுகிறான். அந்தப் பொருளால் அமைதியை நாடும் ஞானி மனநிலைக்கு ஆங்ரே மாறிவிடுகிறான். அந்தப் பொருளைத் தேடி அலையும் அகமது கடலில் மறைகிறான். அன்வரின் துயர் போக்க உதவட்டும் என்று நினைக்கிறான் ஜோதிலிங்கம். அன்வரின் வாழ்வு சூன்யமாகிறது. அன்வரை ஏமாற்றியவன் நல்வாழ்க்கைக்குள் தன்னை திணித்துக் கொள்கிறான். தேவதையின் அன்பைப் பரிசளிக்கும் நிலையில் உள்ளவள் சாபமிடுகிறாள். நல்லது நடக்கட்டும் என்று நினைப்பவன் தன் இல்லின்பம் துறந்து கடவுளுக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிறான். இங்கு வாழ்வென்பது என்ன? நல்லவர்களுக்கு இங்கு எதுவும் யாராலும் நடப்பதல்ல. அவரவர் மனத்தை எதற்காவது ஒப்புக் கொடுத்துவிட்டு அதில் மட்டும் கவனக் குவிப்பைச் செலுத்திக்கொள்ளவேண்டும். அதனால் பூக்கும் நல்லது கெட்டதுக்கு அவரவரை பொறுப்பாக்கும் சாபம் தான் வாழ்க்கை. சராசரி மனிதர்களின்  வாழ்வின் மையத்தின் வழியாக  பயணிக்கும் இக்கதை மீள் வாசிப்பில் துயர் கூட்டவே செய்கிறது. கண்ணெதிரே துயர் மிகு வாழ்வைக் கண்டும் உதவுவதற்குக் கையாலாகாத மனநிலையில் நாம்  தவிப்பதுபோன்றதான உணர்வைத் தோற்றுவிக்கிறது நாவல்.


ரூஹ் நாவல்

முதல் பதிப்பு 2020

எழுத்து

Zero Degree Publishing

No.55(7), R Block, 6 th Avenue,

Anna Nagar,

Chennai 600 040.

Website: www.zerodegreepublishing.com

E Mail : zerodegreepublishing@gmail.com

Phone : 98400 65000


யாழ் தண்விகா

Friday, 21 October 2022

ஒரு வீடு ஒரு தொழில் ஒரு கிழவன்

 

ஒரு வீடு ஒரு தொழில் ஒரு கிழவன்


சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதான தோரணை

வாயில் எப்போதும் சிகரெட் புகைந்துகொண்டிருக்கும்

இரவு பகல் 

மழை வெயில் பனி

எல்லாக் காலமும் வேலைக் காலம்

நோகாமல் நொங்கு தின்பது போலில்லை

நுட்பம் தெரிந்திருக்க வேண்டும்

முக்கியமாக வீட்டார் ஒத்துக்கொள்ளவேண்டும்

சொந்த வீட்டை ஒதுக்கித் தள்ளுங்கள்

பக்கத்துவீட்டுக்காரன் ஒத்துக்கொள்ளவேண்டும்

பகையாளியாக என்றும் மாறிவிடக்கூடாது

இதயத்திற்கு தான் பிணமில்லை என்றுணர்த்த

மெயின் வீதிக்குச் செல்லாமல் 

கொஞ்சநேர நடை வீடுகளுக்கு இடையேயே நடப்பார்

முத்துச் சந்தின் பக்கத்திலேயே வீடு

போலீஸ் அது இது என்றால் தப்பித்து ஓடவேண்டும்

பெரும்பாலும் அதற்கு வாய்ப்பு வந்ததே இல்லை

ஒருநாளும் சத்தம் அதிகம் வந்ததேயில்லை அவ்வீட்டில்

கஸ்டமர்கள் கேட்கும் சரக்கு இருக்கும்

இல்லையென்றாலும் வேறொன்றை வாங்கிக்கொள்ளும்

கஸ்டமர்கள் வரம்தானே.

போதை தான் அங்கு கதாநாயகன்.

எதிலிருந்து வந்தால் என்ன?

எப்படிச் சரக்கு வருகிறது என்பது

தெரியவே தெரியாது

தீர்வது பற்றிச் சொல்லிவிடலாம்

பெரும்பாலும் நாற்பது கடந்தவர்கள்தான் 

நிரந்தர கஸ்டமர்கள்

அதிலும் பலர் நடந்தும் சைக்கிளிலும் வருவார்கள்

சரக்கை வாங்கி இடுப்பில் சொருகிக் கொள்வார்கள்

கிளம்பி விடுவார்கள்

விற்பவரின் சொந்தமென யாரையும் வீட்டிற்குள் பார்த்ததில்லை

எம்ஜியார் பாடல்கள் மிகப்பிடித்தம் விற்பவருக்கு.

சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே...

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை...

அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்... போன்ற பாடல்கள்

சுற்று வீட்டின் காதுகளை அடைக்குமாறு மாலை ஏழு மணிக்கு மேல் ஒலிக்கத் தொடங்கும். 

விக்கிறது சாராயம். இதுல தத்துவப் பாட்டு வேற 

என்ற முணுமுணுப்பு எழுந்து அடங்கும்.

ஆனாலும் நேரடியாக யாரும் கேட்டு சண்டை பிடிப்பதில்லை.

அதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.

விடிந்தும் திறக்காத கதவைத் தட்டி 

எட்டிப்பார்த்த முதல் குடிகாரன்தான்

கிழவன் இறந்துகிடந்ததை முதலில் பார்த்தவன்.

பக்கத்து வீட்டுக்காரர்களைக் கூப்பிட்டும்

யாரும் வீட்டிற்குள் வரவில்லை

குடிகாரன்தான் கிழவன் பக்கத்தில் சென்று

மேலும் கீழுமாக ஏறி இறங்கிக் கிடந்த கிழவனின் 

கைலியைச் சரி செய்தான்

பாயில் நேராகப் படுக்க வைத்தான்

தலையணையைத் தலைக்கு அண்டக் கொடுத்தான்

கிழவன் எப்போதும் சரக்கெடுத்துத் தரும் இடத்தில்

தனக்கான சரக்கை முதன்முதலாக 

அவனே எடுத்துக்கொண்டான்

கிழவனின் தலைமாட்டில் சரக்குக்கான பணத்தை

எண்ணி வைத்தான்

காலைத் தொட்டுக் கும்பிட்டுக்கொண்டான்

வீட்டின் வெளியில் வேடிக்கை பார்ப்பவர்களிடம்

ஏழு மணிக்கெல்லாம் சரக்கு அடிக்கலைன்னா 

எனக்கு உடம்பெல்லாம் நடுக்கம் கொடுத்திடும்

செத்துடலாம்போல இருக்கும்

போனவுடனே வந்துடுறேன் 

ஏதும் உதவின்னா பண்ணுறேன் என்று சொல்லிக்கொண்டே சென்றுகொண்டிருந்தான்

கிழவனின் ரெகுலர் கஸ்டமர் 

எவனோ ஒருவனிடமிருந்து ரோஜாப்பூ மாலையொன்று 

பாடையில் போகும்போது

நிச்சயமாகக் கிழவனின் கழுத்தில் கிடக்குமென்று 

நம்பிக்கை பிறந்துவிட்டது இப்போது.

யாருக்கு?

கிழவனுக்கு.

எப்படி இறந்தவனுக்கு நம்பிக்கை பிறக்கும்?

இறந்தவனுக்கு உள்ளே போய்ப் பார். தெரியும்…


யாழ் தண்விகா

Friday, 16 September 2022

சமூக நீதி நாள் விழா 17.09.2022


அன்பிற்கினிய தோழமைகளுக்கு, 
வணக்கம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், பெரியகுளம் கிளை முன்னெடுத்த சமூக நீதி நாள் கவிதைப் போட்டி, மற்றும் ஓவியப் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் பேரன்பு. சனாதனம் துளிர்க்கும்போதெல்லாம் அதனை தீவிரமாக எதிர்த்து எப்போதும் களமாடும் மண் தமிழகம். அதற்காக பல தலைவர்கள் நம் மண்ணிலிருந்து போராடி வந்திருக்கிறார்கள். அத்தலைவர்களில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்கு சிறப்பிடம் உண்டு. அத்தலைவரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அறிவிக்கப்பட்ட போட்டிக்கு கவிதைப் பிரிவுக்கு நாற்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளும், ஓவியப் பிரிவுக்கு எண்பதுக்கும் மேற்பட்ட ஓவியங்களும் வந்திருந்தன. எதிர்பார்ப்பைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை சற்றுக் குறைவுதான் என்றாலும் இவ்விழா மிகக் குறுகிய காலத் திட்டமிடல் என்பதையும் கருத்தில் கொள்வோமாயின் இந்த எண்ணிக்கை என்பது மிகப் பெரியது. மிகச் சிறப்பாக தங்களது படைப்புகளை ஒவ்வொருவரும் அனுப்பியிருந்தாலும், போட்டி என்பதன் காரணமாக ஒவ்வொரு கவிதையையும், ஒவ்வொரு ஓவியத்தையும் மிகக் கவனமாகப் பரிசீலித்து பெரியகுளம் கிளை தேர்வுக் குழுவினரால் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. வெற்றி பெற்ற அனைவருக்கும் பெரியகுளம் கிளையின் சார்பாக வாழ்த்துகள். வெற்றி பெற்றவர்களுக்கு 17.09.2022, சனிக்கிழமை காலை 10 மணிக்கு பெரியகுளம் வடகரை, அரண்மனைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராமானுஜர் கூடத்தில் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் பெரியாரின் வழி செல்லும் முற்போக்குச் சான்றோர்களை பெருமைப்படுத்தும் விதமாக நிகழ்வில் இந்த வருடத்திற்கான பகுத்தறிவுச் சுடர் விருது தோழர் மு.அன்புக்கரசன், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் அவர்களுக்கு வழங்கப் படுகிறது. தந்தை பெரியாரை கொண்டாடும் விதமாக, பகுத்தறிவுச் சுடர் விருது பெறும் தோழரைப் பெருமைப்படுத்தும் விதமாக, போட்டிகளில் வெற்றிபெற்ற, பங்கேற்ற அனைவரையும் பாராட்டும் விதமாகவும் அனைவரும் நிகழ்வில் குறிப்பிட்ட நேரத்திற்குக் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்புறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து இன்னும் பல நிகழ்வுகளில் இணைந்து செயல்படுவோம். வெற்றி பெற்றோர் விபரம் கீழ்வருமாறு.

#கவிதைப் போட்டி 
#18 வயதிற்கு உட்பட்டோர் பிரிவு

முதல் பரிசு 
லக்சனா
இரண்டாம் பரிசு 
உமேஷ்
மூன்றாம் பரிசு
பாவனா ஸ்ரீ

சிறப்புப் பரிசுகள்
அனுஸ்ரீ
கனிஷ்கா
தீபதர்ஷினி
கோ.அருணா
க.அக்சயா
N.தர்ஷினி
ரா.கோகிலா ஸ்ரீ
நவ குமாரன்
 
#கவிதைப் போட்டி
#18 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவு

முதல் பரிசு 
ராஜிலா ரிஜ்வான்
இரண்டாம் பரிசு
கம்பம் பிரபஞ்சன்
மூன்றாம் பரிசு
ஹேமலதா, நாக நந்தினி

#சிறப்புப் பரிசுகள்
துர்கா தேவி
அமிர்தா தமிழரசன்
பூர்ணிமா கணநாதன்
வைகை சுரேஷ்
கோ. பாலகிருஷ்ணன்
வசந்ததீபன்
முத்துச் செல்வம்
பாலமுரளி
உதயா
நாக பிரபு
லட்சுமி குமரேசன்
செல்ல முருகேசன்
அஞ்சு மகி
வைகை மகன்
க.போ. சுருளியாண்டவர்

#ஓவியப் போட்டி 
#18 வயதிற்கு உட்பட்டோர் பிரிவு
முதல் பரிசு
கௌசல்யா 
இரண்டாம் பரிசு
வசந்த வேல்
மூன்றாம் பரிசு
யுவராஜா

சிறப்புப் பரிசுகள்
நதியா
கிஷோர்
அமிழ்தினி
பாண்டீஸ்வரபிரசாத்
ஹரீஷ்
அர்ச்சனா
சிவக்கார்த்திகா
வர்ஷா
தர்ஷினி
ச.சூர்யா

#ஓவியப் போட்டி
#18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவு

முதல் பரிசு
மு.தமிழ்மணி
இரண்டாம் பரிசு
பிரவீன்குமார்
ஜா.மேக்டலீன்
மூன்றாம் பரிசு
முத்துப்பாண்டி

சிறப்புப் பரிசுகள்
த.புனிதா 
தேனி கண்ஸ்
தாழை அரசன்
போஜனா
ஜெகதீஸ்வரன்
கீர்த்தனா

விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் பெறும் அனைத்துத் தோழர்களுக்கும் வாழ்த்துகள். போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். முற்போக்கு உணர்வாளர்களே, கலைஞர்களே, கவிஞர்களே, வாருங்கள். நிகழ்வில் சந்திப்போம்.

தோழமையுடன்
கு.தினேஷ் பாபு
கிளைச் செயலாளர்
யாழ் தண்விகா
கிளைத் தலைவர்
இரா.சுந்தர்ராஜன்
கிளைப் பொருளாளர்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
பெரியகுளம் கிளை