Monday, 1 December 2025

காதலின் பின் கதவு - பழநி பாரதி

 


காதலின் பின் கதவு

Palani Bharathi

கவிதைத் தொகுப்பு...


 நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு கவிதைத் தொகுப்பை வாசித்தேன். தலைப்பே ஒரு வசீகரத்திற்குள் அழைத்துச் சென்றது முதல் காரணம். கவிக்கோ அப்துல் ரகுமான் முன் கதவு வழியாக அணிந்துரை அளித்திருக்கிறார். 


காதல் கவிதைகள் தொகுப்பு என்றெண்ணி ஆர்வம் மேலிடப்புகுந்தேன் தொகுப்பிற்குள். அதற்கேற்ப உற்சாகம் தூண்ட முதல் கவிதையும்...

"தண்டவாளத்தில்

தலை சாய்த்துப் பூத்திருக்கும்

ஒற்றைப்பூ

என் காதல்


நீ நடந்து வருகிறாயா

ரயிலில் வருகிறாயா?"

எப்போதோ காதல் படிக்கட்டுகள் என்ற நூலில் படித்த கவிதை. இதயத்தை விட்டு இன்றளவும் மறையாதிருந்த கவிதை . ஒரு மனிதனின் காதல் ஏற்கப்படுமா ஏற்கப்படாதா என்பதை உணர்தல் நிமித்தமாக எழுதப்பட்ட கவிதை. சிறப்பு. தொகுப்பின் உள் செல்கிறேன். 


ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு பரிமாணத்தில் மிளிர்கிறது . மலையேற்றம் கவிதை வர்ணனை அழகு.


"உடைந்த 

வளையல் துண்டுகளையாவது 

கொடுத்துவிட்டுப் 

போ


கலைடாஸ்கோப்பில்

உன்னைப்

பார்த்துக்கொண்டிருப்பேன்"


முதல் கவிதை போலவே இதுவும் காதலில் மூழ்கிக் கிடக்கும் மனதின் கவிதை...


மழைக் குரல் கவிதையில் காதல் மழை.  அவள் இல்லாத நேரத்தில் பொழியும் மழை. அது உண்டுபண்ணும் வலியை ஒப்பிட்ட விதம் அத்தனை அழகு அதே நேரத்தில் வலியும் ...


இன்று

நீ இல்லாமல்

விட்டு விட்டு

விடாமல் பொழியும்

இந்த மழையில்

ஒரு மண் குடிசைவாசியாக

மறுகிக் கொண்டிருக்கிறது

காதல்


அதைக் கடக்கும் அடுத்த பத்தியில்

அரசியல் நுழைக்கிறார் கவிஞர் ... ஆனால் அந்த ரசனை வேறொரு உச்சத்தில் .. 

"வெள்ளப் பிரதேசத்தை

ஹெலிகாப்டரில் பார்வையிடும்

பிரதமர் மாதிரி

கண்ணாடி ஜன்னலுக்குப்

பின்னாலிருந்தாவது

கை நீட்டித் தொடு

இந்த மழையை"

என்கிறார் கவிஞர். ஒரு காட்சியை கண்முன் வர வைத்து ஏங்குதலை நிகழ்த்தும் அற்புதம் இது. 

 


உறைந்த நதி என்னும் கவிதையில்

"எந்த நிழலிலும் 

உன் ஆறுதல் இல்லை

எந்த வாழ்த்திலும்

உன் குரல் இல்லை" என்ற வரிகள் உரைக்கும் தலைப்பிற்கான நியாயத்தை .


நீ இல்லாத போது தலைப்பில் 3 கவிதைகள். 

ஒவ்வொன்றிலும்

ஒவ்வொரு ரசனைக்கான கூறுகள்...

"நீ வராத வெறுமையில்

பூங்காவின் காவலாளிக்கு

ஒரு புன்னகையைக் கூட

திருப்பித் தராமல் 

இன்று நான் வெளியேறியது

எத்தனை உறுத்தலானது"

ஒருமுறை காதலிக்காக பூ வாங்கிச் செல்கிறேன். அவள் வரவியலா சூழல் திடீரென. சந்திக்கும் நட்பு அத்தனையிடமும் மெளனம் மட்டுமே பேச்சாக எனக்கு. கவிதையில் உள்ளது போலென்றால் காவலர் போல் எத்தனை மனங்களுக்கு நான் அந்நியமாக இருந்திருப்பேன் என்ற உறுத்தல் தோன்றுகிறது இப்போது...


இப்படிக் கடக்கும் காதல் கவிதைகள் சட்டென வேறு பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது.


உலகம் பயணிக்கும் பாதை, பெண் குறித்த கவிதைகள், நடிகைக்கு, நகைக்கு, தாத்தாவுக்கு ஒரு கவிதை என நீள்கிறது.


செடி மகள் என்ற கவிதையில்

"செடியை வளர்ப்பது 

சுலபமாக இருக்கிறது

பூக்களைப்

பத்திரப்படுத்துவதுதான்

எப்படியென்று தெரியவில்லை" ...

வன்புணர்வு குறித்த வலி உயிரெங்கும் பரவுகிறது வரிகள் வாயிலாக ...


இரத்தத்தின் நிறம் பச்சை என்ற கவிதையில்

தாயாக, மனைவியாக, குழந்தையாக என உயிர் உறவுகளை ஒப்பிட்டு மரத்தின் உச்ச குணத்தினை அழகுறக் கூறியுள்ளார். 


ரயிலில் வந்த 3 வது கவிதை.

"எங்கு இறங்குவாள் 

என்று தெரியாது

எதிரில் உட்கார்ந்திருந்தாள்


அவளிடம் கொஞ்சம்

தண்ணீர் கேட்க நினைத்து

கேட்காமலேயே

கண்ணயர்ந்துவிட்டேன்


விழித்தபோது

அவள் இல்லை

இருந்தது

ஒரு தண்ணீர் பாட்டில்"

எத்தனை பரவசம் அளித்திருக்கும் அந்த கணம். தாகம் தோற்றுவிக்கிறது ரயிலில் கிடக்கும் அந்தத் தண்ணீர் பாட்டில் ...


"நான் யோசித்துக் கொண்டிருப்பேன்

தடயங்களற்றுப்

பறக்கும் சுகத்தை" என்கிறார் கவிஞர் ...

தொகுப்பானது உலகில் தடம் பதித்து ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனாலும் சம காலத்திற்கும் பொருந்தும் பொருண்மையால் இது கவிஞர் பழநி பாரதி அவர்களின் தடயம் என இன்னும் பறைசாற்றிக் கொண்டிருப்பதே போதும் கவிதைக்கான வெற்றியெனக் கூற...


வாழ்த்துகள் கவியே...


யாழ் தண்விகா

Saturday, 15 November 2025

நிலா காயுது - பாடல்

 


காமத்தின்போதான பாடல் எப்படி இருக்கவேண்டும் என்று இளையராஜா என்ற மகான் இசை வழியே பல படங்களில் பாடம் எடுத்துள்ளார். அதில் ஒன்றுதான் சகலகலா வல்லவன் என்ற படம். முறையே அப்பாடல்கள்

நிலாக் காயுது நேரம் நல்ல நேரம்...

நேத்து ராத்திரி எம்மா...

இதை உணர்வுப் பூர்வமாக உணர அந்தப் பாடல்களைக் கேளுங்கள். 


இரவின் கூர்மை என்பது காமத்திற்கு எப்படி உகந்ததாக இருக்கும் என்பதை இசையில் இவர்போல உணர்த்தியவர் யாருமில்லை என்றே சொல்லலாம். மலேசியா வாசதேவனின் குரல் ஜானகியின் குரலில் குழைந்து உருகியிருப்பதும் கேட்கக் கிடைத்த அபூர்வம். இன்று இது போல சூழல்கள் படங்களில் இடம்பெறவில்லை என்பது உண்மை. இருந்தாலும் ராஜாவின் காமம் சார்ந்த பாடல்கள் போல அவை இருக்காது என்பதும் உண்மை. மாசி மாசம் ஆளான பொண்ணு இசையை எடுத்தும், நிலாக்காயுது பாடலில் வருகிற இடையிசை மற்றும் குரல் ராகத்தை (தண்ணி கேட்டியே புள்ள... என்பதற்கு முன் வரும்... குரல்களும் இசையும்... முடிவில் ச்சீய்...) எடுத்தும், கட்டிப்பிடி கட்டிப் பிடிடா பாடலுக்குப் பயன்படுத்தி  குஷி படத்தில் தேனிசைத் தென்றல் தேவா வெற்றி கண்டிருப்பார். இன்றும் என்றும் நிலவைக் குறித்து பல பாடல்கள் வந்து போனாலும் இடையில்/குறுக்கே வந்து மென் புன்னகையை வன்மமாகச் சிரித்து வைத்துப் போகும் இந்தப் பாடல். ஆம் இதுவும் நிலாப் பாடல் தான். காமத் தனிமை.

https://youtu.be/sxh8JP4obiU


❣️

Sunday, 9 November 2025

பெறுநர், தேவதை, வானவில் வீதி - 143 #துளசி வேந்தன்


பெறுநர், தேவதை, வானவில் வீதி – 143

துளசி வேந்தன் 

படைப்பு பதிப்பகம்

விலை : 100

பக்கங்கள் : 116


காதலாகிப் போன கவிஞனின் கவிதைகள்...


நாடி, நரம்பு, எலும்பு, தசை அத்தனையிலும் காதலால் ஆன மனிதரால் தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும் என்றெண்ணும் வகைக் கவிதைகள். தபூ சங்கரை வாசிக்கும்போது உண்டான வியப்பையும் கடந்து நிற்க வைத்துவிட்டன கவிதைகள். பதிப்பாளரும் கவிஞருமான Mohamed Ali Jinna தோழர் அவர்கள் தன்னுடைய பதிப்புரையில் ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராகப் பணி புரிவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனக்கென்னமோ காதல் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறாரோ என்று தோன்றுகிறது. கவிஞர், தன்னுடைய நூலை மனைவிகளையும் காதலிகளையும் தேவதைகளாய் கொண்டாடித் தீர்க்கும் மொத்த ஆடவர் உலகத்திற்கும் சமர்ப்பணம் செய்துள்ளார். அது, மனைவிகளையும் காதலிகளையும் “தேவைதைகளாய்” கொண்டாடித் தீர்க்கும் மொத்த ஆடவர் உலகத்திற்கும் சமர்ப்பணம் என்று உள்ளது. பிழையாக இதைக் கருத முடியவில்லை. மனைவியோ காதலியோ இல்லாமல் அது ஒரு வாழ்வா... காதலுக்கும் காதலிக்கவும் அவர்கள் இல்லாமல் எப்படி... இவை போன்ற கவிதைகளை உடனிருந்து ரசிக்கக் கிடைத்த மனைவிகள், காதலிகள் கொடுத்து வைத்தவர்கள். மனித வாழ்வு சுபிட்சம் பெறத் “தேவை” தேவதைகள்...!


தபூவின் கவிதை ஒன்று...

“பல நூற்றாண்டுகள் ஆகுமாமே

ஒரு வைரம் உருவாக

நீ மட்டும் எப்படி

பத்தே மாதத்தில் உருவானாய்” தேவதைகளின் தேவதை விகடனில் வெளிவந்த காலத்தில் படித்தவுடன் சிலிர்த்த காலம் அது. கவிஞர் துளசி வேந்தன் தொகுப்பின் முதல் கவிதையாக கீழ்க்கண்ட கவிதையை வைத்துள்ளார்.

“நீ சிசேரியன்

செய்துதான் பிறந்தாயாமே?

என்ன செய்வது,


வெட்டித்தானே 

எடுக்கவேண்டும் வைரத்தை!” மிரண்டுட்டேன் கவிஞரே. சிசேரியனை இப்படியெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா... காதலி கொடுத்து வைத்தவர். (காதலியின் அம்மா ஓரமாக நின்று தனக்கு செய்யப்பட்ட சிசேரியனையும் சிசேரியனுக்கான காரணத்தையும் மருமகன் எழுதிய கவிதையை வைத்து (மகளுக்காக) ரசித்துக்கொள்ளவும்!)


“உன் அரை மணி நேர அலங்காரம்

நான் அரை நொடியில் 

கலைக்கத்தானே...” 

என்கிறது ஒரு கவிதை.

கொஞ்சம் பொறுமையும் கொஞ்சும் கால அவகாச நீட்டிப்பும் காதல் கேட்கிறது கவிஞரே. செவி மடுக்கவும்.


காவல் நிலையமா? காதல் நிலையமா? குழப்பம் தந்துவிட்டது ஒரு கவிதை. ஆனால் விழும் அடி ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று உயிரைக் கேட்க வைக்கிறது. 

“விசாரணை என்று

காதல் நிலையம் அழைத்துவந்து


வெட்கத்தால் அடிக்கிறாய் நீ!”

வலிக்குமா என்ன வெட்க அடிகள்...!


மச்சம் என்றால் என்ன? என்பதற்கு விளக்கம் தருகிறது ஒரு கவிதை. மச்சமே விழித்துப் பார்க்கும் கணம் அது.

“உன் அழகில்

பிரம்மன் மெய்மறந்த 

இடமெல்லாம்,


“மச்சங்கள்”.


தொகுப்பெங்கும் துணுக்குகள் போலிருக்கும் ஒவ்வொன்றும் கூட மின்மினிகளாய் கவிதை வாசம் பரப்புகிறது.

“ஆயுள் சந்தா கட்டி

படிக்கவேண்டிய இதழ்

உன்னுடையது”

“அடிக்கும் பறை நானுனக்கு

அதிர்வுகள் நீயெனக்கு”

“குழந்தை போல

பேசுமுனக்கு

முப்பத்தி இரண்டும் 

பால் பற்கள்”

“உன் நிழலுக்கு

நெத்திச் சுட்டியாய்,

உதிர்ந்த பூவொன்று...” (22 & 28 இரு பக்கங்களில் உள்ளது)


மதங்கள் நிறைய இருந்தாலும் மும்மதம் மட்டுமே பிரதானமாக சொல்லக் கேட்டிருக்கிறோம். தொகுப்பில் மூன்று மதம் சார்ந்த கவிதைகள் சொல்லி, காதலின் மதச் சார்பின்மையைக் காட்டுகிறார் கவிஞர். காணும் காட்சி யாவும் காதல் என்றால் மதமும் காதலாதல் சரிதான்.

“அய்யர் உன் தலையில்

சடாரி வைக்கும்போது

அனிச்சையாய் குனிகிறார்

பெருமாள்”

(சடாரி என்றால் பெருமாளின் திருப்பாதமாகப் பாவித்து தலையில் வைக்கப்படும் கிரீடமாம். கூகுள் சொன்ன தகவல். இன்னைக்குத்தான் தெரியும்)

“நீ சொல்லும்

ஸ்தோத்திரங்கள்


சிலுவையில் அறையுண்ட

இயேசுவுக்கு ஒத்தடங்கள்”


உசைன் பாய்

சாம்பிராணி தூவி

தூபமிட்டுப் போவது போலவே

நீயுன் வெட்கத்தைத் தூவி

காதலிட்டுப் போகிறாய்...”

சநாதனத்திற்கு எதிராக, எல்லா மதத்தையும் சமமாகப் பாவித்து காதலிட்ட கவிதைகள் படைத்திட்ட கவிஞருக்கு வாழ்த்துகள்...


ஒன்றிரண்டு கவிதைகள் ஒரே சாயலில் இருக்கிறது கவிஞரே.

“புயலுக்குப் பெயர் சூட்டும்

வழக்கத்தைக் கண்டுபிடித்தது

உன் அப்பன் தான்...”

“நான் மட்டும் 

வானிலை ஆய்வுத்துறையில்

இருந்திருந்தால்

உன் செல்லப் பெயர்களைத்தான்

புயல்களுக்குச் சூட்டிக் கொண்டிருப்பேன்...”

(போலவே 28 ம் பக்க பிள்ளையார் கவிதையும் 110 ம் பக்க கண்ணாடிக் கவிதையும்...) கூறியது கூறல் ஒரு குற்றம் என்பார்கள். காதலில், காதல் கவிதைகளில் குற்றம் காண்பது தவறு என்றாலும் சொல்லி வைக்கிறேன்.


அறிவியலைக் காட்சிப்படுத்துவது போல பல கவிதைகள். கற்பனை எண்ணத்தை ஓடவிட்டு காதலை ரசிக்க வைக்கிறது வரிகள்.

“இரவும் 

மழையும்

சன்னலும்

மின்னலும்

உன் முகமும்

ஒரே நேர்கோட்டில்

சந்திக்கிற நிகழ்வுதான்

எனக்குக் காதல் கிரகணம்”

எப்படியெல்லாம் மனுஷன் யோசிக்கிறார் என யோசிக்க வைக்கிறார் கவிஞர். இப்படித்தான் போகிற போக்கில் பெரும் ஏக்கமொன்றையும் கவிதையாக்கி வைத்திருக்கிறார் கவிஞர்.

கனவில் கூட 

கதவடைத்துக்கொண்டுதான்,

ஆடை மாற்றுகிறாய்

நீ...”


காதலில் நனைந்து, மூழ்கி, திளைத்து, அதற்குள்ளேயே மூர்ச்சையாக்குவதுபோல கவிதைகள். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பது போல காண்பவை யாவும் காதலாகவே தெரிவது கவிஞருக்கு கிடைத்த வரம்தான். அட, ஆமால்ல… அடடா... ப்ச் என்னா மனுஷன்யா... கவிஞன்யா... என்று வாசிக்கும்போது நம்மை உச்சரிக்க வைத்த சொற்கள் அனைத்தும் கவிஞருக்கான மகுடங்கள். அவை எப்போதும் கவிஞருக்குக் கிடைக்கும். கவிஞரின் பார்வைக்கு பேரன்பு.

“சிவாஜிகணேசன் நடிக்குமளவு

இல்லையென்றாலும்

ஓரளவு காதலிக்கத் தெரியும் உன்னை” என்கிறார் கவிஞர். ஓரளவில்லை. மிகச் சிறப்பாகவே காதலிக்கிறீர்கள். இலக்கிய உலகிலும், சமூகத்திலும் காதல் பரவ, காதலைக் கொண்டாட கவிதைகள் படைத்துக் கொண்டேயிருங்கள். அட்டைப்படம் சிறப்பு. வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

Thursday, 23 October 2025

நீ துளையிட்ட எனது புல்லாங்குழல் - ஜின்னா அஸ்மி

 

நீ துளையிட்ட எனது புல்லாங்குழல்

ஜின்னா அஸ்மி

Mohamed Ali Jinna 

படைப்பு பதிப்பகம்

பக்கங்கள் : 114

விலை : 120


கண்ணீரிலும் காதலிலும் கரைந்த கவிதைகள்


 காதலாகக் கசிந்துருகுபவரின் கஸல் கவிதைகள், நீ துளையிட்ட எனது புல்லாங்குழல். இசையாக ராகமாக கவிதையாக கண்ணீராக கடவுளாக வலியாக காதலாக ஒவ்வொரு கவிதையும் தன் முகம் காட்டுகிறது. தொடர்ந்து காதலை தான் படைப்பாக்குவதோடு, காதலை கவிதையாக்கும் பல கவிஞர்களையும் ஊக்குவிக்கும் ஜின்னா அஸ்மி தோழரின் கவிதைகளை கடவுள் மறந்த கடவுச் சொல் தொகுப்பிலேயே ருசித்திருக்கிறேன். இத்தொகுப்பு அதன் தொடர்ச்சி நிலை.


 என்னுரையில், காதலில் வெற்றி என்பது தோல்வி. தோல்வி என்பது வெற்றி என்றும் நான் கஸலை நினைக்கிறேன் கஸலாகிறேன் என்கிறார் கவிஞர். கவிதைகளில் அடிநாதமாக இவ்வரிகளே அமைந்திருக்கிறது. கவிக்கோ எழுதிய மொழிபெயர்ப்புக் கவிதை ஒன்று. எப்போதும் மனதிற்குள் இருந்து உருத்திக்கொண்டே இருக்கும் வரிகள் அவை. 

“நீயும் நானும் சேரக்கூடாது என்றுதான்

ஒவ்வொரு முறையும் வேண்டுகிறேன்.

ஏனென்றால் என் பிரார்த்தனைகள்

ஒருபோதும் நிறைவேறுவதில்லை”

எதுவும் நடக்காத விரக்தியிலும் இணை உயிர் தேடும் ஒரு காதல் மனம் இப்படியெல்லாம் பாடுமா என்று வியக்க வைத்த வரிகள் இவை. போலவே பல கவிதைகள் இன்மையைப் போற்றி ஞானம் தேடும் தன்மையுடையதாக தொகுப்பில் காணக் கிடைக்கின்றன. மெல்லப் பயணித்து வேகம் கூடிச் செல்லும் திரைப்படம் போல கவிதைகளும் தன்னுடைய வலியை கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி வேகம் கூட்டுகின்றன தொகுப்பின் இறுதி செல்லச் செல்ல.


“வாசலுக்கும் 

வருகைக்கும்

எந்தச் சம்மந்தமுமில்லை

காதலென்பது காற்றைப் போல”

எங்கும் காதல் வியாபித்திருக்கும். அது இதயத்தின் உள்ளே வர கதவு திறந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காதல் இது போன்ற சூழல் இல்லாமலே காற்றைப்போல எங்கும் நிறைந்திருக்கும். காதல் என்பது அன்பைச் சூடிக்கொண்டிருக்கும் அனைவருக்குள்ளும் நிறைந்திருக்கும் இறை. அதை வணங்கினால் போதாதா இறை வரம் பெற என்றுணர்த்தும் வரிகள் இவை.


“இந்தக் கணம் 

ஒரு நிச்சயமற்ற பொழுதாகிவிட

காதல் ஒன்று போதும்”

காதல், ஒரு மாயம் நிகழ்த்தும் கடவுள். அது எப்பொழுதும் ஒரே போன்றதொரு சுகம் தராதெனினும் அது தரும் சுகமனைத்தும் வலியாக இருந்தாலும் துயராகயிருந்தாலும் சுகமே. மயக்கம் தரும். விழிப்பு தரும். விஷம் தரும். உலகை மறக்க வைக்கும். இதோ இப்போது வாழும் வாழ்வை நிச்ச்சயமற்ற ஒன்றாக்க காதல் போதும் என்கிறார் கவிஞர். நிச்சயமற்ற ஒன்று என்பதில் எதை நிரப்பிக்கொள்வது என்பது அவரவர் காதல் சூழல் பொறுத்தது.


 காதலை பல நேரங்களில் ஒரு மிகப்பெரும் வக்கிரமமாக பார்த்திருக்கிறேன். அது மன்றாடுதலை ஏளனம் செய்வதை உணர்ந்திருக்கிறேன். தன்னிலை தொலைத்து சரணாகதி அடைதலை தூக்கி எறிவதை அனுபவித்திருக்கிறேன். ஆனாலும் காதலைத் தொடர்ந்திருக்கிறேன் என்பது எதனை நோக்கிய பயணம்? அது மனதை வாழவைத்தல். கண்ணீரை வாழ வைத்தல். காதலை வாழவைத்தல். இந்தக் கவிதையில் கவிஞர், கண்ணீருக்கு என்ன பெயர் சூட்டுகிறார் பாருங்கள்...

“நான் 

கண்ணீரைப் பிரசவிக்கிறேன்

நீ 

“காதல்” எனப் பெயர் சூட்டுகிறாய்”


 அனுபவங்களே கவிதைகளாகின்றன பலருக்கு. அது பார்ப்பதாக, கேட்பதாக, அனுபவித்தலாக என எப்படியும் அமையலாம். உலகின் ஏதோ ஒரு மூலையில் உருவாக்கப்படும் மீம்ஸ் பார்த்து நாம் சிரிப்பது போல, அட ஆமாப்பா என்பது போல. உணர்வு என்பது உலகப் பொது. அதிலும் காதல் தரும் உணர்வுகள் அவ்வளவு இயல்பாக காதலர்களுக்குப் பொருந்திப் போகும். காதலில் ஓர் ஆணின் சொல்லோ, பெண்ணின் சொல்லோ உண்டாக்கும் வலி இரு தரப்பிற்கும் பொதுவானதாக இருக்கும். அன்பின் கண்களுக்கு அதன் வலி புரியும். வெறுமனே வேடிக்கை பார்க்கும் கண்களுக்கு ஒன்றும் புரியாது. சிறுபிள்ளைத்தனமாக இருக்கும். கத்தியால் குத்தினால் மட்டும்தான் காயமா? தழும்பு இருந்தால்தான் காயமா? இதோ கவிஞர் கூறுகிறார்.

“உன் காதல் வார்த்தைகள்

எப்போதும் காயங்களாக இருந்ததில்லை

ஆனால் வலி நிறைந்தவை”


 “பெண்மனசு ஆழமென்று ஆம்பளைக்குத் தெரியும் அது பொம்பளைக்கும் தெரியும் அந்த ஆழத்திலே என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும்...” என்றொரு பாடல் உண்டு. பெண் ஒரு ஆணை என்ன செய்கிறாள் எப்படி வழி நடத்துகிறாள் எவ்வாறான அன்பை வழங்குகிறாள் வழங்கத் தலைப்படுகிறாள் என்பதை எப்போதும் உணர முடியாது. சரணாகதி என்ற ஒன்றை செய்தபிறகும் அவளின் விருப்பம் சார்ந்த விசயங்களைத் தான் அரங்கேற்றுவாள். அது நாம் விரும்பியதாக இருக்கலாம். துயரானதாக இருக்கலாம். நாம் நிர்ணயித்து வைத்திருந்த எல்லைக்கும் மேலாக பறந்து விரிந்திருக்கலாம். எல்லாம் உணரும்போது பெண் என்பவளை, காதல் என்பதை வைத்த கண் மாறாது அதிசயிக்கும் சூழல் வாய்க்கும். அந்தச் சூழல் மகிழ்வின் உச்சமாக கிடைக்கப்பெறும் காதலிணை கொடுத்து வைத்தவர்கள் தான்.

“உனக்குள்ளே நான் மிதந்துகொண்டிருந்தாலும்

உன் ஆழம் பற்றி அறியமுடியாத

ஒரு தக்கையைப் போலவே வைத்திருக்கிறாய்

என்னை...”


 கண்ணீர் வெளிச்சம் என்பது எவ்வளவு ஆற்றாமைகள் நிறைந்தது. அதுதான் நான் உனக்கு அளிக்கும் பரிசு. அதில் நீ என்னைக் காண்பாய். அது உன்னை மேலும் ஒளியாய் மாற்றும். அதற்கு உனதருகில் வாழும் வரம் கிட்டிவிடும். கண்ணீர் தனது பாவத்தை, நீ பெற்றுக்கொண்டதால் கழுவிக்கொள்ளும். கண்ணீர் வெறும் நீர்மப் பொருள் அல்ல. அது காதல். விருப்பம் இல்லை என்றால் சொல்லிவிடு என்று முடியவேண்டிய கவிதையை “வெளிச்சம் வேண்டாமெனில் ஊதி அணைத்துவிடு” என்கிறார் கவிஞர். “அவள் பெறாமல் போவது வெளிச்சம். எனக்கு வாழ்வு” என்பதான பொருளில் காதல் வெளிச்சம்!

“என் அழுகையை ஏற்றுக்கொள்

அது உனது சன்னதியில் என் கண்கள் ஏற்றும் தீபம்

வெளிச்சம் வேண்டாமெனில் 

ஊதி அணைத்துவிடு


 காதலிடும் கட்டளைகள் பல சமயம் அபத்தமாக இருக்கும். ஆனாலும் அபத்தத்தையும் ஏற்கும் வேண்டுதலைக் கைக்கொண்டிருக்கும் மனம் என்ன செய்யும்? ஏற்று தன்னை வருத்தியபடி மீண்டும் துளிர்க்கும் காதலுக்காக காத்திருக்கும். இது காதலிடும் சாபம். காதல் தந்த சாபம் என்பதால் கைகளில் பெருமையோடு ஏந்திக்கொள்ளும் நம்முயிர். 

“இது என்ன சாபம்

வாசம் வேண்டாம் என்றால்தான்

பூவுக்கான வரம் கொடுப்பேன் என்பது”


“உன் கூண்டுக்காகவே 

உருவாக்கப்பட்ட பறவை நான்

ஏன் வானம் வரைந்து வேடிக்கை காட்டுகிறாய்” (55)

“என் இறகுகளைக் கொய்து

கூடு கட்டுகிறேன்

இப்பொழுது 

வானத்தைக் காட்டி விளையாடுகிறாய்” (22)


“நான் விசமாக இருந்தாலென்ன...

நீ மகுடி ஊதியதும்

நான் ஆடத்தானே செய்கிறேன்

ஒரு பாம்பைப் போல” (31)

“நான் இசையைக் கேட்டேன்

நீ மகுடி ஊதுகிறாய்

நான் இப்போது 

எதற்காக ஆடுகிறேன் எனத் தெரியவில்லை” (71)

மேற்சொன்ன ஈரிரு கவிதைகளும் பொருண்மையில் வேறுபட்டிருப்பினும் சொல்லாடல் ஒன்றாகவே தெரிவதால் படித்த கவிதையைப் படிப்பது போலொரு தோற்றத்தைத் தருகிறது. இணையில் ஒன்றை தொகுப்பில் இல்லாமல் செய்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அவற்றில் என்மனதிற்குப் பிடித்தவையாக கீழ்க்கண்டவற்றைச் சொல்லலாம்.

“என் இறகுகளைக் கொய்து

கூடு கட்டுகிறேன்

இப்பொழுது 

வானத்தைக் காட்டி விளையாடுகிறாய்” 

“நான் விசமாக இருந்தாலென்ன...

நீ மகுடி ஊதியதும்

நான் ஆடத்தானே செய்கிறேன்

ஒரு பாம்பைப் போல”

தொகுப்பெங்கும் மைய இழையாகப் பரவிக்கிடக்கும் காதலின் வலி சொல்லும் அடர்த்தி இக்கவிதைகளிலிருக்கிறது.


தொகுப்பின் தலைப்பையொட்டிய இக்கவிதை,

“வெட்டு 

துளையிடு

மூங்கிலாகப் பிறந்த என்னை

உன் உதட்டருகில் வைத்து

ஒருமுறையாவது இசைத்துவிடு”

இன்முறைக்குத் தூபமிடும் வன்முறைக் கவிதை. ஆமாம், ஒருமுறையாவது உன் உதட்டருகில் வைத்து இசைத்துவிடு என்று கெஞ்சுகிறது. மூங்கில் மரம் இசையாகவேண்டும். உன் உதடுகள் வழியாக காற்று மூங்கிலில் ஊடுருவி இசையை காதல் உருவாக்கவேண்டும். நீ துளையிட்ட எனது புல்லாங்குழல் என்பது அலாதி சுகமல்லவா!


நிறைவாக...

“உன் சாயலில்தான்

காதலும் மரணமும் இருக்கிறது

உன்னைத் தேடி வரத்தானே செய்வேன்”

கவிஞரின் கவிதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தேடி வருவேன். அந்தக் காதல் மனம் தரும் கவிதையில் நான் காதலைக் காண்கிறேன். கடவுளைக் காண்கிறேன். என்னைக் காண்கிறேன்.


கஸல் வழியில் காதல் வேள்வி...

வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

Saturday, 18 October 2025

நான் மீண்டும் திரும்புகிறேன் - ஷக்தி

 


"இருண்ட காலக் கதைகள்" தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதை. கொரானோ காலக் கொடூரம் பற்றியது. முதலாளி கொள்ளை லாபம் அடிக்கப் பார்க்கிறான், தொழிலாளி நேரம் காலம் தெரியாமல் உழைக்க நிர்பந்திக்கப் படுகிறான். இதற்கு மத்தியில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட பெண், அவள் கணவன், மாமனார் என்று ஓடும் கதை. கொரோனா வந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபின் தனது மனைவியைக் காணத் துடிக்கும் கணவனின் வலி, மனைவிக்கும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் கொரோனா இருக்குமோ என்ற பதட்டம் கதைக்கு வலு சேர்க்கிறது. கொரோனோ கால அரசியல், போலீஸ் இவற்றையெல்லாம் மீண்டும் படிக்கும்போது எவ்வளவு துயர் மிகுந்த காலங்களைக் கடந்து வந்திருக்கிறோம் என்று உணர முடிகிறது. கதையில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. வாழ்த்துகள் தோழர்.


❣️

இருள் எனப்படுவது யாதெனில்... ஏகாதசி

 


இருள் எனப்படுவது யாதெனில்...

ஏகாதசி Kavi Ekadasi Ekadasi 

படைப்பு பதிப்பகம்

பக்கங்கள் : 128

விலை : 120


இருட்டில் ஒளிரும் தரிசனம்


தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்...? இந்தப் பாடல் வரிகள் உருவாக்கிய நிஜத்தின் முன்னால் மற்றுமொரு நிஜத்தைப் பார்க்கிறேன். அது தண்ணீரின் வலி என்ற ஒன்றாக ஏன் இருக்கக்கூடாது என்பதே. இருளில் அழும் மனிதர்கள், இரவின் மர்மம், இருளின் குணாம்சம் என பல தகவல்களை அறிந்திருப்போம். இருளைக் கிழித்து, இருளில் கவிதையெழுதி, இருள் தாள்களைக் கசக்கித் தூக்கியெறிந்து, இருளுக்குள் அவற்றைக் கண்டடையுங்கள் என்றால் இதென்ன அபத்த இருள் என்ற எண்ணம் தோன்ற வாய்ப்பாகுதல் இயல்பு. எனினும் அது போன்றதொரு சிலிர்ப்புண்டாக்கும் இருளை தான் கண்ட ஐந்து நாள் இருளின் வாயிலாக கண்டடைந்திருக்கிறார் அதைக் கவிதையில் கொண்டு வந்திருக்கிறார் கவிஞர் ஏகாதசி. 


100 இருள். ஒவ்வொன்றுக்கும் எத்தனை கண்கள் இருக்கும் என்பது முடிவிலி. எப்போதோ எழுதிய வரிகள் “இரவுக்கு ஆயிரம் கண்கள்” என்பது. அது நட்சத்திரம் மட்டுமா? கண்கள் என்பது ஏன் கண்களாகவே இருக்கக்கூடாது? தொகுப்பில் என்னை உலுக்கிய கவிதை இந்தக் கேள்வியை இப்போதுவரை எனக்குள் எழுப்பிக்கொண்டே இருக்கிறது. 

“எங்காவது செல்லும்போது

விளக்கை அணைத்து 

வீடு பூட்டுகிறீர்கள்

யாரும் அறிந்திருக்கவில்லை

உள்ளே இருட்டிருப்பதை...” 

பூட்டிய வீடுதான் என்றபோதும் வெளியில் நாம் வந்தபின், கதவு திறக்காமல் நம்மை நாம் உள்ளே அனுப்பி எல்லாம் சரியாக பூட்டியாகிவிட்டதா? மூடி வைத்துவிட்டோமா? என வேவு பார்க்கும் வேலையையும் நாம்தானே செய்கிறோம்! கவிஞரின் கேள்வியில் நங்கூரமிட்டு அமர்ந்திருப்பது இருள் என்னும் மாயப் பிசாசு.


இருட்டை வைத்து ஒருசில விளையாட்டுகளையும் நகைப்பாக நம்முன் எடுத்துவைக்கிறார் கவிஞர். வாசிக்கும்போதே நமது கால்களும் இருட்டை மிதிக்காமல் செல்லும் லாவகத்தைக் கற்றுவிடுகிறது. 

“காலடியில் கிடக்கும்

இருட்டையெல்லாம் மிதித்து விடாமல்

தாண்டித் தாண்டிச் செல்கிறான்

ஒரு குடிகாரன்”  

வெறும் குடிகாரன் மட்டும் என்று எடுத்துக்கொள்வதா? மனித மனங்களில் எப்போதும் தனக்கே தனக்கேயான ஒரு பாதுகாப்பு உணர்வு தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும். அது வாழ்தலின் நிமித்தம் நமக்குள் நாம் தோற்றுவித்துக்கொள்வது. அதனை நாமிங்கு குடிகாரனில் புகுந்துகொள்வதன் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.


என்னுரையில் கவிஞர் சொல்கிறார், “இருட்டை நம் அன்பிற்குரிய ஒன்றென பழகியிருந்திருந்தால் மரணம் என்கிற ஒன்றுகூட நம் அஞ்சறைப் பெட்டிக்குள் இருந்திருக்கும் என்று என்னுரையில் கவிஞர் குறிப்பிடுவதை ஒவ்வொரு கவிதையையும் வாசிக்கும்போது உணரமுடியும். 

“நெடுஞ்சாலையில் போற வார

லாரிகளுக்கு கைபோட்டபடி

நின்றிருப்பவளின் இருட்டு நேரத்திற்கு

சோறு என்று பொருள்” 

என்ற கவிதையில் உள்ள மூன்றாம் வரி அவளின் முக்காலத்தையும் உணர்த்துவது. அதை இருள் என்றுமட்டும் கடந்துவிட முடியுமா? அது அவளின் வாழ்வு. அதனை நீட்டி முழக்கிச் சொல்லாமல் சோறு என்று பொருள் என்று முடித்துவைப்பதிலிருக்கிறது கவிஞரின் சொல்லாட்சி. வெளிச்சத்தை மட்டும் நேசிப்பவர்களுக்கும், கோடிட்டுக் காட்டுபவர்களுக்கும் பிறிதொரு கவிதையில் இருட்டின் தேவை குறித்து நான்கு வரிகளில் நச்சென்று கூறுகிறார் கவிஞர்,

“பிளாட்பாரவாசிகள்

உண்பதற்கும் மலம் கழிப்பதற்கும்

மற்றும் புணர்வதற்கும்

ஒரே சுவர் இருட்டு”

இருட்டு என்பது இங்கு அரசியல், பொருளாதாரம், சமூகம் எல்லாமுமாகத்தான் இந்தக் கவிதையிலிருக்கிறது.


ஒவ்வொரு இருளும் பார்க்கும் கோணத்தில் பரவசப்படுத்திவிடுகிறது. மூடியிருக்கும் அறைக்குள் வரும் வெளிச்சத்தை உணராதோர் யார்? அது கவிஞரின் பார்வைக்கு அகதியாகத் தெரிவது ஆச்சர்யம். அகதியும் இங்கு வெளிச்ச அகதியாகத் தெரிவது பேராச்சர்யம். அவர்களை அகதியாக, நிர்க்கதியாக இப்படி நிற்கவைத்து, இந்த நிலைக்குக் காரணமாக கையாலாகாத நிலையில் இருந்து இப்போது குடியுரிமை வழங்கினால் எல்லாம் சரியாகிவிடுமா? ஆகவேதான் இந்த வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிடுகிறது... “குடியுரிமை வழங்குகின்றது இருள்...”

“வெளியிலிருந்து வரும்

வெளிச்ச அகதிகளுக்கெல்லாம்

குடியுரிமை வழங்குகின்றது

இருள்”


சிறுவனின் சிறுநீர் இரவு, உச்சி வெயில் நிழல், நாய்களின் இரவு, கரும்பலகை இருட்டு, சேவல் உண்ணும் வெளிச்சம் என நீளும் இரவும், இருளும் பல வெளிச்சக் கீற்றுக்களை நமக்குள் உண்டுபண்ணுகின்றன. பார்க்கத் தவறிய அவற்றை இருள் எனப்படுவது யாதெனில் என்ற தலைப்பில் 100 கவிதைப் பார்வையை அளித்திருக்கிறார் கவிஞர் ஏகாதசி. கவிதை வழியாக ஓர் ஆய்வுரையை வழங்கியிருக்கிறார் மா.காளிதாஸ் தோழர். கவிதையை இப்படியெல்லாம் ஆராயமுடியுமா என்றெண்ணும் வண்ணம் அணிந்துரை. அருமை. “புற அழகைப் புகழ்வதைவிட அக அழகை ஆராதிப்பதே ஆன்ம தரிசனம். அப்படியெனில் அகம் என்பது அழகிய இருளின் ஞான வெளிச்சம்” என பதிப்புரையில் வழக்க முத்திரை பதிக்கிறார் பதிப்பாளரும் கவிஞருமான Mohamed Ali Jinna தோழர். அட்டைப்படம் அடடா...!

நிறைவாக,

“ஓர் அழகிய கண்ணையோ

ஓர் அழகியின் கண்ணையோ

வரைந்துவிட முடியாது

இருட்டு வண்ணம் கொஞ்சம்

எடுத்துக்கொள்ளாமல்”

காதலுக்கான, காதலிக்கான இருட்டு எப்போதும் வெளிச்சம்தான். மேற்சொன்ன கவிதையைப் போல.

எழுத்துப்பணி தொடரட்டும்.


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

Friday, 3 October 2025

நீ காதல் நான் கஸல்


நீ காதல் நான் கஸல்


தி.கலையரசி

Kalaiarasi Thirunavukkarasu 


கவிதைகள்


படைப்பு குழுமம் வெளியீடு

விலை : 120

பக்கங்கள் : 130


காதல் மீது உள்ள காதலால் நான் தொடர்ந்து எழுத முயற்சி செய்ததன் வெளிப்பாடாக வந்திருக்கிறது இக்கவிதைத் தொகுப்பு என என்னுரையில் கூறுகிறார் கவிஞர். போதாதா தொகுப்பில் என்ன இருக்கும் என்று அறிய. காதல் என்பது பரிசுத்தம். ஞானம். மகிழ்ச்சி. துயரம். தேடல். மயக்கம். இன்னும் என்னென்னமோ பொருளுக்குப் பொருந்தும் உன்னதம்.


வாசிக்கும் ஒவ்வொருவரும் தன் காதலோடு, மனதோடு பொருத்திப் பார்க்கத் தூண்டும் கவிதைகள். சொல்லாடலின் சிறப்பாக கவிதைகள் அத்தனையும் மிளிர்கின்றன. எளிய மொழியில் வலிய காதல். அழுத்தமான கவிதை நயம்.

"நீரை விலகாது ஈரம்

நெருப்பை விலகாது வெப்பம்

நான் உன் நீர்

நீ என் வெப்பம்".

யாதுமாகி நின்றாய் என்று சொல்லிக் கடத்தலை சொல்லில் கடக்கும் வித்தை கவிதை. அதனை இக்கவிதை நன்றாகவே செய்கிறது.


எனக்கு நீதான் வேண்டும். நீதான் எல்லாம். நீயில்லாத வாழ்க்கையை என்னால் கற்பனை கூட செய்ய முடியாது இப்படியெல்லாம் சொல்லிக்கொள்ளும் காதலின் அவஸ்தையை காதல் எப்படிச் சொல்லும்? அது எப்படி கவிதையாக அமையும்?

"நீ கடல்

நான் அலை

என்னை நீ கரையேற்றினாலும்

நான் உன்னிடம் தான் 

திரும்புவேன்".

கடல், அலையை தன்னிலிருந்து வெளியேற்ற நினைக்கிறது என்பதைச் சுட்டும் கரையேற்றினாலும் என்ற சொல்லுக்குள்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்... என்ன இருந்தாலும் நான் உன்னிடம் தான் திரும்புவேன் என்பது அர்த்தத்திற்கும் மேலான அன்பு.


காதல் சுழிக்குள் மாட்டுவது சூழலா? திணித்தலா? எதுவானாலும் அங்கு எதுவும் திட்டமிடப் படுவதுபோல் நடப்பதில்லை. அது ஒரு மகிழ்ச்சிப் பிரவாகம். அங்கு இன்பமும் துன்பமும் பேராழியின் ஆழமென நீளும். குறையும். அது தரும் மயக்கம் என்பதை உயிர் வேண்டிப் பெறும். இந்தக் கவிதை அவ்வாறான மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். துயராகவும் இருக்கலாம். எது என்பது இங்கு அவசியமில்லை. அதைத் துய்ப்பது மட்டுமே இக்கவிதை.

"எப்போதும் காதலில்

நீந்திக்கொண்டே இருக்கிறேன்

கரையே

தென்படாமல் இரு".

கடலில் மிதந்தபடி

கண்கள் ஒருமுறை இல்லாத கரை தேடும் சூழலை உண்டுபண்ணச் செய்திடும் வல்லமை சொற்களில்.


மென் சோகம், ஓரளவு சோகமா? இல்லை. சோகத்தில் ஏது கொஞ்சம், நிறைய? வலி என்பது வலி தான். அப்படிக் கவிதைகள் தொகுப்பில் நிறைய. 

"காதலும் பிரிவும்

தராசுத் தட்டுகளில் அமரும்போது

உயிரின் முள் தள்ளாடுகிறது".

ஒரு பக்கம் காதல், மறு பக்கம் பிரிவு. இரண்டும் தராசுத் தட்டுகளில் இருக்கும்போது காதல் கீழ்நோக்கி இழுக்க வேண்டும். அல்லது பிரிவு கீழ் நோக்கி இழுக்க வேண்டும். எது மகிழ்வானது? எது துயரானது? இரண்டும் எப்படி சமமாக, முன்னே பின்னே ஆடி தன்னைச் சமப்படுத்திக்கொள்ள முடியும்? வாசிக்கும் நாம் அந்த உணர்வைப் பெறுவது, கவிதை நமக்குள் செய்யும் மாயம். 


கண்ணீர், காதல், பிரிவு, கடல், மழை இவைகள் போன்று நாம் தரிசித்த பொருண்மைகளை  வைத்துக்கொண்டு காதலைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார். நாம் காதலிலும் கவிதைகளிலும் மூழ்கிக்கொண்டே இருக்கிறோம்.

"உன் கடலில் கலந்துவிட்ட

நீர்த்துளி நான்.

ஆவியாய் கரையும் விதியை

நீதான் எழுதவேண்டும்".

கவிதை, கவிஞரால் தன்னை எழுதிக்கொண்டுவிட்டது.  வாசிப்பவர்களுக்கு, ஆவியாய் கரையும் விதியை ஆகிருதியாய் உள்ளவர் எழுதுவார். அந்த ஆகிருதி என்பவர் நமக்குள் காதலாக மூழ்கிக் கிடப்பவர் தான். ஆவியாக மாறுவதா? கரைந்தே கிடப்பதா? கடலே ஆவியாவதா? காதலை சாட்சியாக வைத்து யோசித்துக் கிடப்போம்.


கடலுக்குள் சில முத்துகள், கண்ணீர்த்துளியின் சிறு அணுக்கள், மகிழ்வின் ஒற்றைச் சிறு சீனிக் கட்டி போலத்தான் நான் சொன்னவை. வாசியுங்கள். காதலின் உயரம் அடையலாம்.


கஸல் கவி Mohamed Ali Jinna தோழரின் பதிப்புரை, ந.சிவநேசன் தோழரின் அணிந்துரை, கோ. பாரதிமோகன் தோழரின் வாழ்த்துரை நூலாய்வைச் செய்திருக்கிறது தொடக்கத்திலேயே. அருமை.


வாழ்த்துகள் தோழர் தி.கலையரசி


யாழ் தண்விகா 


❣️