Sunday, 8 February 2026

டாஃபி #பாரத் தமிழ்

 டாஃபி 

சிறுகதைகள் 

பாரத் தமிழ் 

Bharath Thamizh 

வம்சி வெளியீடு

168 பக்கங்கள்

200 ரூபாய்


ஆணவக் கொலைகளின் காலமாக இன்று நேற்று அல்ல பன்னெடுங்காலமாகவே நேரடியாகவும் மறைமுகமாகவும் எண்ணற்ற கொலைகளைக் கண்டு விட்டது தமிழ்நாடு. சாதியின் ஊற்று என்று கூறக்கூடிய அளவுக்கு எங்கெங்கும் வியாபித்து இருக்கிறது சாதி. இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா என்று கூறிக்கொண்டே எல்லாம் ஜாதியின் அடிப்படையிலேயே நடக்கிறது. முன்னர் நடந்தவற்றை விட இப்பொழுது ஜாதியின் கோரமுகம் வேறு வடிவில் ஒடுக்கப்பட்ட மக்களை தீண்டி வருகிறது. இதனை பாரத் தமிழ் தன்னுடைய டாஃபி சிறுகதைத் தொகுப்பு மூலமாக நமக்கு கையளித்திருக்கிறார். பலருக்கு தொகுப்பில் உள்ள கதைகள் அயற்சியைத் தரலாம். ஆனால் உண்மை முகம் என்று ஒன்று இருக்கிறது. அது தொகுப்பில் கூறப்பட்ட கதைகள் போலவே தான் இருக்கிறது. உண்மைக்கு மிக அருகில் அல்ல உண்மையாகவே கதைகள் இருக்கின்றன.


முதல் கதையில் நாகராஜன் வேம்பா திருமணம் முடிகிறது. ஒரு மாதம் மட்டும் இருந்துவிட்டு அவன் ஓடி விடுகிறான். ஊரை விட்டு ஓடியவனுக்கு திருமணம் மனைவி மக்கள் என்று ஆகிறது. 60 வயதுக்கு மேல் தன்னுடைய ஊருக்கு வருகிறான். நாகராஜனுக்கு உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இந்த ஊர் பிரவேசம். இந்த நிலையில் அவன் இறந்தும் போகிறான். ஒருவர் மாற்றி ஒருவர் வேம்பாவை நாகராஜன் இறப்பிற்கு வருமாறு கூறுகின்றனர். ஆனால் அவளுக்கும் துளியும் விருப்பமில்லை. தனது ஒரு மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு ஒண்டிக்கட்டையாக வாழ்ந்து வருகிறாள். நாகராஜன் அரசியலில் நல்ல முன்னேற்றம் கண்டு வந்த சமயம் அவனால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டவன் வேலாயுதம். படிப்படியாக அரசியலில் ஏறுமுகமாகிறது வேலாயுதத்திற்கு. அவனுக்கு பதவி எல்லாம் தேடி வருகிறது. அதற்கு ஒரு முக்கிய காரணம் வேலாயுதம் என்பவன் ஒடுக்கப்பட்ட ஜாதி அல்ல. நாகராஜ் ஒடுக்கப்பட்ட ஜாதி. இந்த ஒரு காரணம் போதாதா? நாகராஜன் தனிப்பட்ட வாழ்க்கையில் வேம்பாவை விட்டுவிட்டுப் போனாலும் அவனுக்கு அரசியலில் பின்னடைவு. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவன், மணிக்கணக்கில் பேசக்கூடியவன் என்ற திறமைகள் இருந்தாலும் வேலாயுதத்திற்கு கிடைத்த ஒரு முன்னேற்றம் ஏன் அவனுக்கு கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. இது பரவலாக தமிழகத்தில் நடக்கும் அரசியல் தான். ஒடுக்கப்பட்டவனை போஸ்டர் ஒட்டுவதற்கு, கொடி பிடிப்பதற்கு என்று பயன்படுத்தும் சூழல் இன்னும் இருந்து வருகிறது. ஊரில் பிரசிடெண்ட் மூலமாக வேம்பாவிற்கு ஒரு வீடு வருகிறது. அந்த வீட்டில் தான் வேம்பாய் இருக்கிறாள். எதையும் எதிர்பாராமல் அந்த வீடு கட்டித் தந்ததால் பிரசிடெண்ட் சொன்னதற்கு இணங்க இறப்பு வீட்டிற்கு போய் வருகிறாள். மற்றபடி நாகராஜன் மேல் இவளுக்கு துளியும் பாசமில்லை என்று கதை முடிகிறது. கதையில் ஒடுக்கப்பட்டவர் என்றும் அரசியலில் நல்ல இடத்திற்கு வர முடியாது என்பதை சொல்லி விடுகிறார் பாரத் தமிழ்.


டாஃபி, நாய்க்குட்டியின் செல்லம்மா, ரயிலைக் கொல்ல காத்திருக்கும் நாய்கள் என்று மூன்று கதைகள் வருகின்றன. மூன்று கதையும் நாய்களை மையப்படுத்தியவை. ஆனாலும் இந்த மூன்று கதைகளில் டாஃபி என்ற கதை வித்தியாச அதிர்ச்சி. "போன வாரம் பொன்னி மேய்க்கிற மாடு வாழைத்தோட்டத்தில் இறங்கிடிச்சுன்னு 'பறத் தேவிடியாளே, நீ மாடு மேய்க்க வா நாம் பயிறு வச்சு கீறன்?' ன்னு எட்டி உதைச்சு கீழே தள்னானே அந்த நாராயண மோலியாரு. அவனை ஏன் இவன் ஒண்ணுமே பண்ணல" இந்த வார்த்தைகளை ஒரு நாய் நினைத்துப் பார்க்கிறது. தன் பொண்டாட்டியை கடித்ததற்காக விரட்டி விரட்டி கொலை செய்யும் அளவிற்கு துணிந்தவன் மேலே சொன்ன சம்பவத்திற்காக கிஞ்சித்தும் கவலைப்படவில்லையே ஏன்? என்ற கேள்வியை முன்வைக்கிறது.


கேள்விகள் தீர்ந்தவன் என்ற கதை. நல்ல பணியில் இருக்கிறாள் மனைவி. கணவன் மனைவியை விட பல மடங்கு சம்பளத்தில் கீழ் வேலை பார்க்கிறான். ஆனால் மாமனார் மாமியார் வீட்டில் இருக்கக்கூடிய அவள், அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும். அந்த வீட்டில் இரண்டு பேர் கணவனின் அண்ணன் இரண்டு பேர் அவர்களுடைய குடும்பம் இருக்கிறது. ஒரே கழிப்பறை. தனியாக போய் இருக்கலாம் என்றாலும் அதற்கு ஒத்துழைக்கும் மறுக்கும் கணவன். இப்படிப்பட்ட சூழலில் தான் வேலைக்கு செல்வதில்லை என்று முடிவு எடுக்கிறார் அந்த வேலைக்கு செல்லவில்லை என்று முடிவு எடுத்தபின் என்ன செய்கிறான் கணவன் என்பது கதை. ஆனால் அதே சமயம் பெண்ணின் சம்பாத்தியம் தேவையில்லை என்று நினைக்கக் கூடிய 'ரிதன்யா ' மாதிரியான மனைவிமார்களின் நிலையை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. அப்படியே 'அவங்களவங்க ' என்ற கதைக்கு வந்தால், நிலைமையே வேறு. மாமனார் மாமியார் வீட்டில் வசித்து வரும் ஒரு மனைவி குழந்தையைப் பார்க்க வேண்டும். கணவனை கவனிக்க வேண்டும். மாமனார் மாமியாரை கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால் தன்னுடைய தகப்பனையோ தாயையோ போய் சந்திக்க அனுப்பி வாங்க வேண்டும். என்றாவது ஒருநாள் தன்னுடைய வீட்டிற்கு செல்ல வேண்டும். அப்பாவுக்கு திடீரென உடல் சரியில்லை என்பதால் ஊருக்குச் செல்ல வேண்டும். பேருந்தில் பயணம். மகளை பள்ளியிலிருந்து வீடு அழைத்து வர வேண்டும். அதை கணவனிடம் தெரிவிக்க வேண்டும். அந்த சூழ்நிலையில் செல்லில் பணம் இல்லை. செல்லுக்கு ஈசி பண்ண வேண்டும் என்றால் கணவன் தான் பண்ணி விட வேண்டும். அந்த நேரம் பார்த்து கணவன் செல்லில் அழைக்கிறான். தகவலைச் சொல்லி விடுகிறாள். தனக்கு செல்லில் பணம் இல்லை. பணம் போட்டு விட சொல்லுகிறாள். தனது தந்தை குறித்து கேட்க வேண்டும். சகோதரி இடம் தகவல் கேட்கலாம் என்றால் கணவன் ஈசி பண்ணி விடவில்லை. பேருந்தில் கேட்கலாம் என்றால் யாரிடம் கேட்பது? ஒரு முரட்டு மனிதன் இருக்கிறான். அவன் அருகில் மற்றொருவன். அந்த மற்றொருவனிடம் செல் கேட்க, தூங்கியவன் எழவில்லை. கடைசியாக கொஞ்சம் முரட்டு மனிதனாக தெரிந்தவன் செல்லை தருகிறான். தங்கையிடம் அப்பாவின் உடல்நலம் குறித்து கேட்டுவிட்டு செல்லை கொடுத்து விடுகிறாள். அந்த முரட்டு மனிதன் செல்லில் தங்கையின் நம்பரை அழிக்காமல் கொடுத்துவிட்டாள். அவன் என்ன பண்ணுவானோ ஏது பண்ணுவானோ என்ற எண்ணத்தில் பதட்டமாக இருக்கிறது அவளுக்கு. சிறிது நேரத்தில் அவன் இவள் கண் பார்க்க நம்பரை டெலிட் பண்ணுகிறான். அப்பொழுதுதான் அவளுக்கு நிம்மதி. இதுபோல பேருந்தில் பாட்டிக்கு உதவி செய்கிறான். இன்னொருவருக்கு பேருந்து நிறுத்தத்தை சொல்லுகிறான். கடைசியாக அவனுடைய நிறுத்தம் வந்தவுடன் இறங்குகிறான். அந்த நிறுத்தம் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் ஊர். அந்த ஊரில் வேறு யாரும் குடியிருப்பது இல்லை. தனது வீட்டில் இருக்கும் தன்னுடைய கணவனையும், அந்த நிறுத்தத்தில் இறங்கிய ஒடுக்கப்பட்ட மனிதனின் குணத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறாள். ஒடுக்கப்பட்ட மனிதர்களிடத்தில் இருக்கும் நல்ல குணத்தையும் மேல் தட்டு வர்க்கம் என்று அழைக்கப்படுபவர்களிடத்தில் உள்ள கீழ்த்தரமான குணங்களையும் சீர்தூக்கிப் பார்த்து கொள்கிறாள். இவர்கள் எல்லாம் இப்படித்தான், இவர்களுக்கு நல்ல பழக்கமே இருக்காது, இவர்கள் இப்படி வாழ்க்கை வாழ்பவர்கள் என்று கீழ்த்தரமாக பேசும் நிலையில் தான் ஒடுக்கப்பட்ட மக்களை வைத்திருப்பதை காண்கிறோம். கடைசி ஒரு பாராவில் பல கதைகளில் டுவிஸ்ட் வைத்திருக்கிறார் பாரத் தமிழ்.


 

வழக்கத்திற்கு மாறாக என்ற கதையில் ஆய்வுக்குச் செல்லும் இடத்தில் பிரசிடென்ட் ஆக ஒரு ஒடுக்கப்பட்டவன் இருக்கிறான். துணை பிரசிடென்ட் ஆக ஒரு மேல்த்தட்டு இனத்தைச் சார்ந்தவன் இருக்கிறான். ராஜா என்று பெயர் வைக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன் எந்த நிலைமையில் இருக்கிறான்? அன்பில் ராஜ் என்று பெயர் வைக்கப்பட்ட துணை பிரசிடெண்ட் என்ன குணத்தில் இருக்கிறான்? மிகவும் வருத்தப்பட வைக்கிறது. இந்த சமூகத்தின் நிலையை அப்பட்டமாக காட்சிப்படுத்தக் கூடிய கதை இது.  


 

என்ன ஆளுங்க நீங்க என்ற கதை, வர்தா புயலில் தப்பித்த மரமாய் என்ற கதை இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. மேல் ஜாதி என்று கருதி கொள்பவர்கள் தன் வீட்டிற்கு வருபவரை என்ன ஜாதி என்று கண்டுபிடிப்பதற்காக அவர்கள் செய்யும் பிரயதனங்கள் ஒவ்வொன்றும் கேவலமாக இருக்கிறது. ஆனால் ஒரு ஒடுக்கப்பட்டவன் வீட்டில் அப்படி நடப்பது இல்லை. அவர்கள் பார்ப்பது மனிதர்களை மனிதர்களாக மட்டுமே. 


அவள் பெயர் தமிழ், நினைவில் இருந்த பெரியம்மா ஊரு, கடிதம், ஆகாஷ் என்னும் மனித பறவை, நிறம் மாறும் பேருந்து என்று பல கதைகள் தொகுப்பில் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு சம்பவத்தை பேசுகின்றன. அந்த சிறு சம்பவ மும் பூதாரமாக்கிக் காட்டவில்லை. இச்சமூகத்தில் காணப்படும் அவலத்தை தோலுரித்துக் காட்டுகிறது. பாரத் தமிழ் அதைத்தான் சொல்ல விரும்பி இருக்கிறார். அதை சிறுகதையாக பதிவு செய்யவும் செய்திருக்கிறார். மனசாட்சி உள்ளவர்களுக்கு இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையும் மென்னியை பிடித்து உலுக்கவே செய்யும். உலுக்க வேண்டும்


வாழ்த்துகள் தோழர்.

No comments:

Post a Comment