உதிரிலைகளில் மீந்த பச்சையம்
புகழேந்தி பழ
மௌவல் பதிப்பகம்
பக்கம் 96
விலை 130 ரூபாய்
"சார்"
ஒரு விரல் தூக்கியபடி
எழுந்தான்.
அனுப்பினேன்.
"சார்"
உடனே மற்றொருவன்.
அதட்டினேன்.
நொடிகள் நகர
உள்ளேயே ஈரம்.
வகுப்பு முழுவதும் நாற்றமடித்தது
என் அதிகாரம்...
என்ற ஒரே ஒரு கவிதையால் கொண்டாடப்பட்டவர். வேறு கவிதைத் தொகுப்புகள் எதையும் வாசித்தது இல்லை. முதன்முதலாக
வாசிக்கிறேன் உதிரிலைகளில் மீந்த பச்சையம்.
முதுமைப் பருவம் என்பதை ஒவ்வொருவர் எட்டி விடுவது இன்று ஆச்சரியமாக இருக்கிறது. முதுமைப் பருவம் தொட்டுவிட்டவர், வாழ்க்கையை வென்று விட்டவராவார் போல. முதுமைப்பருவ வாழ்க்கைக்குள் காதல் என்பது எதுவரை? முதுமைப் பருவத்தின் காமம் என்பது எதுவரை? முதுமை பருவத்தில் சொந்த பந்தம் எதுவரை? முதுமைப் பருவ வாழ்க்கையின் தேடல் என்ன? முதுமைப் பருவத்தின் ஏக்கம் என்ன? இவை அனைத்தையும் உதிரிலைகளில் மீந்த பச்சையம் என்ற கவிதை தொகுப்பின் மூலம் அழகுறக் கொண்டு வந்திருக்கிறார் கவிஞர் பழ.புகழேந்தி.
நடுத்தர வாழ்க்கை முடிந்த பின் முதுமைப் பருவம் தோன்றும். மெல்ல மெல்ல மெல்ல முதுமைப் பருவம் பற்றிய எண்ணத்தில் மூழ்கும் பொழுது லேசாக ஒரு மயக்கம் தோன்றும். இந்த மயக்கம், நோய் மயக்கம் அல்ல. நமக்கு வயதாகிவிட்டது என்ற எண்ணம் தோன்றுல்லவா? அது. அந்த முதுமைப் பருவம் தோன்றிய பின்பு சூழலே வித்தியாசமாகப்படும். அந்தச் சூழலில் குடியிருக்கும் வீட்டை சுருக்கிக் கொள்வோம். பல அறைகள் இருந்தாலும் புழக்கம் என்பது மிக குறைவாக போய்விடும். தனிமை என்பது மிகப் பிடிக்கும் முன்பெல்லாம். ஆனால் முதுமையில் தனிமை ஒரு மனிதனை கொன்று விடும். வயதான தம்பதியினர் வாழும் வாழ்க்கையில் தனக்கு ஒரு காய்ச்சல் என்றால் பார்ப்பதற்கு, தனக்கு முடியவில்லை என்றால் அதை பேசுவதற்கு, தன் பேச்சை கவனமுடன் கரிசனத்துடன் கேட்பதற்கு, தன்மேல் அன்பு செலுத்துவதற்கு என்று ஒருவருக்கொருவர் இருந்தால் அந்த வாழ்க்கை சிறப்பாகவே அமையும்.
முதுமை நெருங்கி வர, சொந்த பந்தம் தன் வேலைகளைப் பார்த்துக் கிளம்ப உள்ள சூழ்நிலையில் முதியவர்கள் வாழும் வீடு இது போன்று தான் காட்சி தரும்.
"பரந்த வீடொன்று
நமதாய் இருந்தது
முன்னொரு காலத்தில்.
நமக்கென்று
ஒரே ஓர் அறையும்
ஒற்றைக் கட்டிலும்
இப்போது.
இதுவும் சுருங்கிப் போகும்
நாளை நிச்சயமாய்.
அப்போது
தனித்தனியாய்ப் படுத்திருப்போம் என்பதுதான் வேதனையாக இருக்கிறது"
கடைசியில் ஒரு வரி "தனித்தனியாய்ப் படுத்திருப்போம் என்பதுதான் வேதனையாக இருக்கிறது" என்பதில் தூக்கம் என்பது இருவருக்கும் ஒரே நேரம் வருமா? பல சிந்தனைகள் காரணமாக தூக்கம் வராமல் போகும் இந்த காலம் கொடுமையான காலம். ஒருவர் உறக்கத்தை ஒருவர் கெடுத்து விடாமல் இருப்பதற்காகவும் தனியாய் படுக்க தோன்றும். மேலும் தனித்தனியாய் என்ன காரணத்திற்காக படுப்போம் என்பதும் கேள்விதான். அந்தக் கேள்வி அன்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் வயதான தம்பதியினர் தங்களை நோக்கி கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.
"காமம் விடைபெற்றுப் போன
அதே வாசலில் தான் நுழைந்தது
அதனோடு சேர்ந்து வெளியேறிய காதல்.
'எங்கே போனாய்?' என்றதற்கு
'வழியனுப்ப' என்றது.
அணைத்துக் கொண்டேன்.
அப்போது
உன்னாலும் எழ முடிந்தது சட்டென்று
அதற்காகவே"
காதல் உள்ள இடம் எப்பொழுதும் சந்தோஷத்தை தரும். அந்த இடத்தில் காமம் இருந்தால் பேரின்பத்தைக் கொண்டு வரும். காமத்தை வழி அனுப்பி வைத்தபின் மீள வரும் காதல் ஆறுதல்படுத்துவது. அந்த காதல் தான் எந்த வயதிலும் நிரந்தரமானது.
திருமணம் முடித்து வரும் மரியாதையான சொற்கள் முதுமைப் பருவம் வரை நீளக்கூடும். சில செல்ல பெயர்கள் முதுமைக் காலத்திலும் நீண்டு வரும். எப்படியோ மரியாதையான சொற்கள் வந்துவிடும் என்று வைத்துக் கொண்டாலும் இந்தாத்தா, ஏய் என்ற செல்லப் பெயர்களைத் தொடர்ந்து அம்மா என்ற செல்லப் பெயர் மரியாதையின் உச்சம் எனலாம். ஆனால் அந்தப் பேரும் காலப்போக்கில் கரைந்து இருமலை வைத்து வந்துவிட்டார் / அவர் எதையோ சொல்ல நினைக்கிறார் / அவருக்கு பசி எடுத்து விட்டது / அவருக்கு தூங்குவதற்கு பாய் விரித்து விட வேண்டும் என்பதை உணரும் காலம் வந்துவிட்டதை என்னவென்று சொல்வது...
"ஒருவரை ஒருவர்
அழைத்துக் கொள்ள
தொடங்கியிருந்த போது
ஆளுக்கொரு செல்லப்பெயரிருந்தது
நமக்குள்.
பின் மரியாதை கூட்டி
நீ என்னை அழைக்கத் தொடங்கியிருந்த காலத்தில்
' அம்மா ' என்று கூப்பிடத் தொடங்கியிருந்தேன் உன்னை. இப்போது
இருமல் மட்டும் போதுமானதாய் இருக்கிறது
நம்மை நாம் அழைத்துக் கொள்ள"
ஓரிருவர் மட்டும் உள்ள அறையில் வார்த்தைகள் கூட எவ்வாறு மாறிவிடுகிறது?
அலாரம் தேவை. அலாரம் இல்லாவிட்டால் என்னால் எழ முடியாது என்பது ஒரு காலம். அடுத்து நேரத்திற்கு எழுந்து விடுவேன். அதெல்லாம் அலாரம் தேவையில்லை என்ற காலமும் போய், நேரம் முன்னரோ, பின்னரோ எழுவது என்பதும் போய் சற்று தாமதமாக எழுந்தாலே மூக்கில் விரல் வைத்துப் பார்ப்பது என்பது கொடுமையான காலம் தான். இரவில் நடந்த ஒன்று கூடல் தாமதமாக எழ வைக்கும். அதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் கடந்து வந்திருப்போம். ஆனால் முதுமை காலத்தில் யாரோ ஒருவர் எழுந்தபின் மற்றொருவர் எழத் தாமதமான பொழுது மூக்கில் விரல் வைத்துப் பார்ப்பதை எப்படி தவிர்ப்பது?
"இரவில் நிகழ்ந்த ஒன்றுகூடல்
சற்றுத் தாமதமாய்
எழ வைக்கும் உன்னை
அவ்வப்போது.
அப்போதெல்லாம்
உன் தலைகோதி விட்டபடி
எழுவேன்.
இன்றோ
நீ எழத் தாமதித்தால்
மூக்கருகில் விரல் வைத்துப் பார்க்கிறேன்.
பிறகே மீள்கிறது என்ற
என் சுவாசம்"
காலம் தான் எவ்வளவு கொடூரமானது என்று நினைக்கச் செய்யும் தருணம் அது.
காலங்கள் செல்லச் செல்ல மனிதனை நோய் நொடியில் இருந்து காப்பாற்றி வாழ வைப்பது மாத்திரைகள் தான். அந்த மாத்திரைகளை கூட நேரத்துக்கு சாப்பிட்டாயா என்றுதான் கேட்போம். சாப்பிடுவது கூட அதன் பின்னர் தான் என்று கேட்கப் பழகி இருப்போம். இதை
"சாப்பிட்டாயா?"
என நாம் கேட்டுக் கொள்வதெல்லாம் மாத்திரைகளைத்தான்" என்கிறார் கவிஞர். தம் உடன் வரும் சக பயணியாக, நட்பாக, உயிராக, அன்பாக வரக்கூடிய ஜீவனின் உயிரை பாதுகாக்கும் உத்தியல்லவா இது. மாத்திரைகளுடன் வாழ்க்கை என்பது இல்லாதவர்கள், வாழ்க்கையில் கொடுப்பினை பெற்றவர்கள்.
எம்ஜிஆர் ரசிகர் என்பதற்காக எம்ஜிஆரை மட்டும் தான் பார்க்க முடியுமா? மஞ்சுளாவைப் பார்க்க கூடாதா? என்னடா இது காலக்கொடுமை என்றால் ஆமாம் பார்க்கக் கூடாது என்பது கூட ஒரு ஊடல் நிமித்தம் வரக்கூடிய கோபம் தான்.
"இத்தனை ஆண்டுகள் கழித்து
மஞ்சுளாவின் பாடல் ஒன்றை
தொலைக்காட்சியில் பார்க்கையில்
கோபித்துக் கொள்கிறாய் "எம்ஜிஆரின் ரசிகன் என்றால்
எம்ஜிஆரைத் தானே ரசிக்க வேண்டும்?"
செத்துப்போன
காதலர்கள் எல்லாம்
வாழ்கிறார்கள்.
நாம்
வாழ்ந்து முடித்த காதலர்கள்
"வா... செத்துப் போவோம்"
என்று முடித்திருக்கிறார் கவிஞர். ஆனால் வா செத்துப் போவோம் என்று அழைப்பது "வாழும் காதல்" என்று ஆனந்த கும்மியடித்துச் சொல்வது போல் இருக்கிறது. முதியவர்கள் எல்லோருக்கும் கவிதைக்குள் இடம் பெறும் வாழ்க்கை அமைந்து விடாது. கடைசி நேரம் வரையில் உழைத்துக் கொண்டு இருக்கும் எத்தனையோ முதியவர்கள் இருக்கிறார்கள். அவர்களாக வாழ்தல் என்பது கொடுப்பினை அற்றவர்களின் வாழ்க்கை. அந்த வாழ்க்கை நமக்கு வேண்டாம். முதுமைப் பருவம் - அடுத்து மரணம் தானே. எல்லாம் தெரிந்த பின்னர் அதை நினைவு வரக்கூட வலிமை இல்லை. ஆதலால் மரணம் தொடர்பான கவிதைகளை விட்டு விட்டேன். மற்றபடி வரவேற்கத் தகுந்த, சுவாரஸ்யமான கவிதைகளும் நிரம்ப உள்ள கவிதை புத்தகம்.
புத்தகம் அனுப்பிய தோழர் Minmini Vimala அவர்களுக்கு பேரன்பும் நன்றியும்...
வாழ்த்துக்கள் தோழர்.
No comments:
Post a Comment