கீர்
கவிதைத்தொகுப்பு
பாலு இராமச்சந்திரன்
சோனை வெளியீடு
64 பக்கங்கள்
50 ரூபாய்
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், எண்டப்புளியைச் சேர்ந்த கவிஞர். நல்ல நண்பர். எப்போதும் புன்னகையினை முகத்தில் தவழவிட்டுள்ள மனிதர். தான் நேசித்த இயற்கையை, மனிதர்களை, நிகழ்வுகளைக் கவிதையில் கொண்டுவந்திருக்கிறார். புதுக்கவிதை வடிவில் தான் சொல்ல வந்ததை வாசிப்பவர்களுக்குச் சொல்லியிருக்கிறார்.
அன்றும் இன்றும் என்ற தலைப்பிலான கவிதை, கடந்த காலத்திற்கும் நவீன காலத்திற்கும் உள்ள வேறுபாடுகளைப் பட்டியலிடுகிறது.
“அன்றைய மாந்தன் ஏய்த்துப் பிழைத்தல்
ஈனத் தொழில் என வாழ்ந்திட்டான்
இன்றைய மாந்தன் எதையும் செய்யும்
இழிகுணம் தன்னில் வீழ்ந்திட்டான்.
அன்றைய உலகம் அமைதியும் வளமும்
அரும்பிடச் செழித்து இயங்கியது
இன்றைய உலகம் பித்தம் பிடித்தவர்
ஆள்கையில் நித்தமும் அழிக்கிறது” போன்ற வரிகளால் கடந்த காலம் குறித்துப் பெருமிதம் கொள்ளச் செய்யும் வரிகளால் கவிதையால் வடித்துள்ளார்.
முடியாதது எதுவுமில்லை என்ற கவிதை சோம்பலில் தவிக்கும் மனிதனுக்கு உத்வேகம் ஊட்டும் வரிகளால் நிரம்பியிருக்கிறது. ஓரிறைவன் ஓர் குலம் என்ற தலைப்பிலான கவிதை தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை எனலாம்.
“ஓரிறைவன் ஓர் குலமென
ஊரிலுலோர் ஒருவரேனும்
ஒருசொல் கூறியதை
ஒருபோதும் கேட்டதில்லை...
ஊருக்கொரு கோயில் குளம்
தெருவுக்கொரு சாதிப்பலகை
இல்லமொரு காணொலியென
முடுக்குவிக்கும் காரணிகளைப்
பாங்குடனே செய்துவிட்டு
மானிடற்குத் தேவையான
பகுத்தறிவை உருவாக்கும்
நூலகத்தை மறந்திட்டோமே” என்ற வரிகளில் கவிஞர் விரும்பும் உலகினைக் காண இயலும். இதுவே மனிதரிடம் பொதுப்புத்தியாக நிறைந்திருத்தல் காலத்தின் கட்டாயம். அறிவை விட இந்த மானுட சமூகத்திற்குப் பெரிதொன்றும் இல்லையே...
தழும்பு என்ற கவிதை வருத்தத்தை மனதில் கொண்டுவருகிறது.
“சுமந்த இடத்தின் தழும்புகளின் காயங்கள்
சுமையாகவே இருந்துகொண்டு இயங்குகிறது
இறக்கி வைக்கக் காலம் வரவில்லை
மரத்துப்போய்க் கிடக்கிறது
காலமும் மனமும்”
தழும்புகளின் காயங்கள் என்ற சொல்லில் கடந்து வந்துவிட்டாலும் வலியைத் தரக்கூடிய நிகழ்வின் வேதனை எட்டிப்பார்க்கிறது. சுவை நிறமிகள் என்ற கவிதை துரித உணவின் தீமையைச் சுட்டிக்காட்டுகிறது. தவிப்பு கவிதை ஊருக்காக கூரை வீட்டை மாற்றி மச்சுவீடு காட்டிய மனிதனின் வலியைப் படம்பிடிக்கிறது. மஞ்சள் பை அதிகாலை குடிகாரக் கணவனால் அல்லலுற்று பிறந்த ஊர் திரும்பும் பெண்ணின் வலியை உணர்த்துகிறது.
கொண்டாம்மாள் கவிதை ஒரு கிராமத்துத் தாயின் வாழ்வைப் பேசுகிறது. எளிமையான வரிகளில் வலிமையான கரு.
“கைமாற்று வாங்கியதைத் தந்திடுவாள்
சேய்க்கு மட்டும் பதுக்கிடுவாள்
தன்வயிற்று உணவைக் கழித்து
தண்ணீர் கொண்டு நிரப்பிடுவாள்
கட்டியவர் கெட்டியில்லை –எனினும்
கட்டிலுக்கு மட்டுமவர் கெட்டி
குடித்த மதுப்புட்டி அத்துணைக்கும்
கொண்டாம்மாதான் பணப்பெட்டி”
எதுகை மோனையில் ஒவ்வொரு வரியையும் கடந்தாலும் அதற்குள் இருக்கும் வாழ்க்கை கண்ணீரை வரவழைக்கிறது. பெண்களின் வலியைப் பேசுகிறது. கறித்துண்டு கவிதையும் ஒரு துன்பியல் நிறைந்த வாழ்வைப் பேசும் கவிதை தான். எளிமையால் வசீகரம் செய்யும் வார்த்தைகள் நிரம்பிய கவிதைகள். இன்னும் இன்னும் படைப்புகள் மூலம் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடிக்க வாழ்த்துகள் தோழர்.
யாழ் தண்விகா

No comments:
Post a Comment