அவள் நாம சங்கீர்த்தனம்
லார்க் பாஸ்கரன் Lark Bhaskaran
கடல் பதிப்பகம்
விலை ரூ.100
76 பக்கங்கள்
தண்டவாளத்தை விட்டுத் தடம் புரளாமல் பயணிக்கும் ரயிலினைப் போல ஒரு பயணம். காதல் பயணம். காதலையும் காதலியையும் கொண்டாடிக்கொள்ள ஒரு தொகுப்பு. காதலிடமும் காதலியிடமும் மன்றாடித் திளைத்தலை சொற்களாக்கிக் காண்பித்திருக்கும் தொகுப்பு. ஒவ்வொரு சொல்லும் காதல், ஒவ்வொரு பத்தியும் காதல், ஒரு தொகுப்பு முழுக்கக் காதல்.
தீர்வதல்ல காதல். காதலி பிரிந்து சென்றாலும் காதல் இல்லை என்றாகிவிடுமா? உனக்குப் பரிசளித்த காதலின் பரிசுத்தம் உணர். என்னைக் காப்பாற்று. என் தவறுகளைச் சரியாக்குகிறேன். தொடங்குவோம் முதலிலிருந்து... என்ற வரிகள் சாதாரணமானதா? இல்லை. அது இறைஞ்சுதல். காதலை அப்படிப் பெறுதல் சரியா? ஆம். சரியானது தான். காரணம் காதலி உண்மை. அவள் பேசிய காதல் உண்மை. அந்தக் காலங்கள் உண்மை. அதை மீட்கொணரவே இக்கவிதைகள்.
காதலில் புதைதல் என்பது அசாதாரணமானது. கவிஞர் அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார். நம்மையும் இத்தொகுப்பை வாசிக்க வைப்பதன் மூலம், அந்தப் புதைதல் என்னும் அசாதாரணத்தில் இலகுவாகத் தள்ளி விட்டிருக்கிறார். பிடித்த கவிதைகளைச் சொல்லி அது உணர்வினுள்ளுள் உண்டாக்கிய மாற்றங்களைக் கூற வழியில்லை. ஒவ்வொன்றும் வலி. ஒவ்வொன்றும் காதல். வலி கடக்க காதலொன்றே வழி.
காதல் கடலின் சில துளிகள்...
ஒரு கப் தேனீர் கொடு
உற்சாகமாக்கு
தொடு
விளையாடு
புன்னகைத்துக் கொள்
நீ நானாக இருப்பதும் சாத்தியமே...
பைத்திய போதையைத் தந்தவள் நீ
ஆறுதல் பித்தும் எட்டவில்லை
என் வலிகளில் கொஞ்சம்
ஆஸ்பிரின் செலுத்து
தூங்கும் நேரமாவது அதிகரிக்கட்டும்.
அன்பின் விரதத்தை முடித்து வைக்க
நான் என்ன செய்யவேண்டும்
உனக்காக பத்திய சாவை ஏற்றுக்கொள்ளவா...
நீ இல்லாத வாழ்வை
யோசிக்க முடியவில்லை
தயவுசெய்து அணைத்துக்கொள் என்னை...
நீங்களும் வாசியுங்கள். காதல் கடல் பருகலாம்.
வாழ்த்துகள் தோழர் லார்க் பாஸ்கரன்.

No comments:
Post a Comment