#இறந்த_நகரத்தைப்_பார்க்க_வந்தவன்
கவிதைத் தொகுப்பு
மேகவண்ணன் புதியதடம்
கருப்புப் பிரதிகள் வெளியீடு
பக்கங்கள் 86
விலை ரூ.90
தோழர் அம்பிகா குமரன் எழுதிய என்னிலிருந்து... கவிதைத் தொகுப்பின் வாசிப்பனுபவப் பகிர்வில் தோழர் மேகவண்ணனைச் சந்தித்து அவரை முகநூலில் தொடர்வதாகவும் அவரின் பதிவுகள் பல சிறப்பாக அதிர்வூட்டும் வண்ணம் இருப்பதாகவும் தெரிவித்தேன். அதிர்வூட்டும் வண்ணம் ஒன்றும் நான் எழுதவில்லையே என்றார். உங்களுக்கு அது இயல்பாக இருக்கலாம். எனக்கு அது போல தோன்றியது. வித்தியாசமாகவும் அரசியல் குறித்து நேரடி விமர்சனமாகவும் எனக்குத் தோன்றியது என்று கூறிவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டு திரும்பினேன். அவர் வடபுதுப்பட்டியிலிருந்து தேனி நோக்கி பயணமானார். நான், அருண் இருவரும் பெரியகுளம் நோக்கிப் பயணமானோம். தொடர்ந்து வந்த கார் என்னருகில் வர அதில் வந்த மேகவண்ணன் தோழர் தன்னுடைய நூலைக் கொடுத்து படித்துவிட்டு கருத்துகளைச் சொல்லுங்கள் என்றார். என் கைகளில் ஒப்படைக்க வந்த அந்த உள்ளத்திற்கு எண்ணிக்கையிலடங்கா பேரன்பு. ரொம்ப நன்றி தோழர் கண்டிப்பாக பேசுவோம் தோழர் என்று கூறிவிட்டு வந்தேன். அவர் வாகனம் திரும்ப தேனி நோக்கிச் செல்லத் தொடங்கியது. பேருந்திலேயே வாசிக்கத் தொடங்கிவிட்டேன். உடனே எழுத நேரம் கிட்டவில்லை ஒவ்வொரு பக்கமும் கவிதை அம்புகள். மனதை ஊடுருவும் சொற்கள். சிலாகிக்க ஒன்றா இரண்டா... தொகுப்பையே கொண்டாடலாம்.
நான் வாசித்த வரையில் எனக்குப் பிடித்த கவிதைத்தொகுப்புகளாக EMS கலைவாணன் தோழர் எழுதிய ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள், செங்கவின் தோழர் எழுதிய களையெடுப்பின் இசைக் குறிப்புகள் ஆகிய இரண்டைக் குறிப்பிடுவேன். இப்போது அந்த வரிசையில் நான் ரசித்த தொகுப்பு இறந்த நகரத்தைப் பார்க்க வந்தவன்.
பூடகம், படிமம், உவமம், உவமேயம் போன்ற எதற்கும் வேலையில்லை. புரியும் வண்ணம் எல்லாக் கவிதைகளும். ஒரு சராசரி வாசிப்பாளனுக்கும் கவிதை போய்ச் சேரவேண்டும். அதுவே கவிதையின் வெற்றி. அதனை இத்தொகுப்பு அருமையாகச் செய்திருக்கிறது. அதீத மன இறுக்கங்களிலிருந்து தற்காலிகமாவது வெளியேறும் வழியாகவே கவிதையை எழுத முற்படுகிறேன் என்கிறார் தோழர். தன்னரசியல், பொது அரசியல் இரண்டிலும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளன கவிதைகள்.
சமகால அரசியலில் அவ்வப்போது அடிபட்டுக்கொண்டே இருக்கிறது CCTV. அதை மையப்படுத்தியது தான் முதல் கவிதை.
“பச்சிளம் குழந்தையொன்றை
அதன் தாய் பாலித்தீன் கவரில் சுற்றி
ஆற்றில் எறிந்ததை
ஒரு கேமரா பார்த்துக்கொண்டு
இருந்திருக்கிறது...
(அடுத்த வரியில் மீண்டும் சொல்கிறார் வெறுமனே பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்திருக்கிறது... அந்தக் கேமரா ஏதாவது செய்திருக்கவேண்டும் என்ற ஆதங்கம் தோன்ற அந்த வரி. அந்த ஆதங்கம் தாய் குறித்தா, குழந்தை குறித்தா, எறியச் செய்த சூழல் குறித்தா... நாம் தான் யோசிக்கவேண்டும்)
மனிதர்கள் ஈசல் போல
கேமராக்களின் முன்பாக இறந்து வீழ்கிறார்கள்.
மஞ்சளாடை அணிந்த ரைபிள் மேன்கள்
வேனின் மீதமர்ந்து குறிபார்த்துச் சுடுவதையும்
இதேபோல் ஒரு கேமரா பார்த்தது
காதல் மனைவியோடு கடைவீதிக்கு வந்தவனை
கண்ணிமைக்கும் நேரத்தில் சாய்த்ததை
ஒரு கேமரா பார்த்துக்கொண்டிருந்தது
வெறுமனே
தற்கொலையை தற்கேமராவில் பதிவு செய்பவள்
கால்கள் நிராதரவில் துடிக்க
ஒரு கேமரா ஆட்டோ மோடில் பதிவுசெய்துகொள்கிறது...
...
எல்லாம் கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது
கேமரா சாட்சியாக”
தூத்துக்குடி, சங்கர் கொலை கண்ணுக்கு முன்னே வருகிறது. அப்படியே எதனால் சிசிடிவி வேலை செய்யாமல் போனது சுவாதி கொலை நிகழ்ந்த இடத்தில், ராம்குமார் வயரைக் கடித்து தற்கொலைக்கு முயற்சித்ததாகக் கூறும் இடத்தில், அப்போலோவில்... என்ற அரசியல் கேள்விகளையும் தோற்றுவித்துவிடுகிறது வரிகள்.
இவ்வளவு நாளும் யோசித்ததேயில்லை.
“எல்லா வீடுகளிலும்
கடவுளுடைய அறையைவிட
சிறிய அறை ஏதுமில்லை”
அட ஆமால்ல என நினைக்க வைக்கும் வரிகள், எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது கடவுள் என்பவன் இல்லை. இருந்தாலும் அந்த சிறிய அறை போதும். அவனுக்கு இவ்வளவுதான் இடம் ஒதுக்க முடியும் என்று மனிதர்களின் அகம் காட்டும் வரிகள் இது.
இரண்டு ஆண் கவிகள் என்ற கவிதை, கவிகள் இருவரின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. அவர்களின் உலகமே வேறு. அவர்கள் யாராலும் திருத்தப்பட இயலா அரிய ஜீவராசிகள் என்பவர் காதலியில்லாத ஆண் கவிஞன் புரண்டு படுக்கும் எடைக்கு உலகமே அழிந்துவிடும்...” என்கிறார். உலகம் அழிய விடலாமா ஆண் கவிஞர்களே... காதலித்த பின்னர் கவிதை எழுதத் தொடங்குங்கள். உலகத்தை உய்விக்க வேண்டுமல்லவா என்று பகடி செய்கிறார்.
காட்சிகளைக் கவிதைப் பதிவாக்கும் லாவகம் பல கவிதைகளில்.
“கோடை தாளாமல் ஒரு வளர்ந்த செடியில்
கழித்த பொழுதை மறக்க முடியாது.
போலவே
நெடிய பேருந்து நிலையத்தில்
விற்பதற்குத் தண்ணீர்ப் பாட்டில்களும்
அருந்துவதற்கு பானை நீரும்
குவளையும் வைத்திருந்த
ஒற்றைக் கடைக்காரனையும்
அவன் சிரித்த முகத்தையும்...”
அரசியலில் உழலும் மனிதனிடம் எஞ்சிக் கிடக்கும் மனிதத்தை மறக்காமல் கவிதையாக்கியிருக்கிறார். அந்த ஒற்றைக் கடைக்காரன் போன்றோரை மட்டுமே உலகம் தக்கவைத்துக்கொண்டால் எவ்வளவு அழகாக இருக்கும்…?
அவலம் என்பது கவிதை முழுக்க அவலம் தான்.
கடனில் தத்தளிக்கும் தகப்பனொருவனின்
டீக்கடை ஓட்டுக் கூரையில்
பனை மரம் சரிவது...
உறவுகளை விலகி வந்த காதலர்கள்
கொலை வெறியுடன் தமக்குள் சண்டையிடுவது...
ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றவன்
அகாலத்தில் இறப்பது...
நீள்கிறது இப்படி. எதனாலும் மீட்ட இயலாத கையறு நிலையில் கிடக்கும் சூழல் தான் அவலம். வரிகள் வாசிக்க வாசிக்க அவலம் நம் உடலுக்குள்ளும் உயிருக்குள்ளும் பாய்கிறது.
ஒரு யானைக்கால் வியாதிக்காரனின் பழைய காலமும் தற்காலமும் அவனுக்கான வாழ்க்கைச் சூழலும் சொல்லும் கவிதையை வாசித்தால் மனம் கனக்கிறது. யானைக்கால்காரனைப் போல மெல்ல பூமி அழுந்த பயணிக்கும் கால்கள் நமக்கும் வாய்த்துவிடுகிறது. “அவன் போகவேண்டும். விடுங்கள். அவனுக்காக பிள்ளைகள் காத்திருக்கிறார்கள்”. அவன் குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்க யானைக்கால் தடையில்லை. ஆனால் அவன் குழந்தைகளுக்காக வாழ எத்தனை தடையளிக்கும் அந்த யானைக்கால்...
ஒரு பின் மதியத்தில் என்ற கவிதை பின் மதியத்திற்கான சூழலைக் காட்டுகிறது. அவரவர்க்கு அவரவர் வேலை. அவரவர் அவரவர் வலியை அனுபவிக்கிறார்கள். அவரவர் இன்பத்தோடு கடக்கிறார்கள். அவரவர் மதியம் அவரவர்க்கான மதியமாக இருக்கிறது.
‘பின் மதியம் இரவின் அமைதிக்காக தன்னை ஒத்திகை செய்து கொள்கிறது”
“யாரோ கலவிக்கான ஆயத்தத்தில் இறங்குகிறார்கள்”
“உணவகங்களில் பாத்திரம் கழுவச் சென்ற பெண்ணுக்கு வேலை அப்போதுதான் தொடங்கியது”
“நடை சாத்தப்பட்ட கோயிலின் பிரகாரத்தில் உண்ட மயக்கத்திலும் தூக்கம் வராத யானை தன் காட்டை நினைத்துக்கொள்கிறது”
ஒரு பின் மதியம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது...
ராம்குமார் சுவாதி வரும் கவிதை, அநியாயமாகக் கொல்லப்பட்ட கதையின் தொடர்ச்சி இனி இப்படியும் வரும் என்பதை எச்சரித்துக் காட்டுகிறது.
சங் பரிவாரங்களின் கொட்டம், 56 இஞ்ச் மார்பளவு மனிதர், குஜராத் குறித்த கவிதைகள் எல்லாம் நேரடித் தாக்குதல் எனலாம்.
“உயிரோடு எரிப்பது
உங்களுக்குத்தான்
கை வந்த கலை
நந்தனை
ராஜீவ் கோஸ்வாமியை
கோத்ராவில் ஓடிய ரயிலை
பெஸ்ட் பேக்கரியை
ஒரிசா பாதிரி குடும்பத்தையை
...
...
…
எனவே
எனவே
உயிரோடு எரிவதென்று முடிவெடுத்துவிட்டால்
தயைசெய்து
நீங்களே
பற்றவைத்துக்கொள்ளுங்கள்”
கொளுத்துவது என முடிவெடுத்துவிட்டால் அதென்ன பிறரைக் கொளுத்துவது? நீங்களே கொளுத்திக்கொள்ளுங்கள். எங்களை எதற்காகக் கொளுத்துகிறீர்கள்? எங்களைக் கொளுத்த நீங்கள் யார்? என்ற கேள்வியை எழுப்புகின்றன இந்த ஆக்ரோச வரிகள்.
இளம் யுவதி கவிதை, பணியிடத்தில் சுதந்திரம் பறிக்கப்படும் ஒரு பெண் மாலை நேரத்தில் தனக்கான சுவாசத்தைப் பெறும்போது அடையும் ஆத்ம திருப்தியைப் படையலிட்டுள்ளது.
கொஞ்சம் காதல், கொஞ்சம் குரூரம் எனவும் கவிதைகள்.
உயிரழுத்தும் கவிதை...
1
“ஒரு மூங்கில் கழியில்
எட்டுமுழ வேட்டியில்
இருபுறமும் சுருக்கிட்டு
ஊஞ்சல் போலாக்கி கிடத்தப்பட்ட
சிறுவனின் சடலம்
பெரியவர்களின் உடலை விட
பாரமாக இருக்கிறது”
2
முன் பின்
தற்கொலை செய்திராதவர்கள
எப்படி
உடல் தாங்குக் கயிற்றளவை
சரியாகத் தேர்கிறார்கள்?
சமந்தா, லதா, சிவாஜி குறித்த கவிதைகளில் அவர்கள் தொகுப்பாசிரியருக்குக் கட்டுப்பட்டு நடிப்பவர்களாக இருக்கிறார்கள். அழகு பூக்கிறது அங்கும்.
கவிதை ஒவ்வொன்றும் ஒரு சுகம் அளிக்கிறது. தேர்ந்த சொற்கள். வலிய திணிக்கப்படாத காட்சிகள். எளிமை. நேரடியாக சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லுதல் என சிறப்பாக இருக்கிறது. இரவு என்ற தலைப்பிலான கவிதையில் மூன்றாம் பத்தி வேற லெவல்.
நிறைவாக ஒரு கவிதை.
#முத்த_சாபம்
சின்ன ஊர். அங்கு காதலர்கள். அவர்களுக்கு காதலின் சூட்சுமங்கள் தெரியும். அவர்களுக்கும் ஆசை இருக்கும். அருகருகே அமர, தோளில் சாய, மடிமீது படுக்க, சில்மிஷம் செய்ய… ஆனால் பார்க்கும் விழிகள் மீறி எதுவும் செய்ய இயலாத நிலை. இந்த நிலையைக் கண்டு வெட்கித்துப் போனவன் சபிக்கிறான் இந்த சமூகத்தை.
“சிறுநகரத்தில் ஒவ்வொருவனுக்கும்
இடாத முத்தங்களின் வலியுண்டு”
அப்படி என்றால் இந்த மக்கள் என்ன செய்ய வேண்டும்? கண்டும் காணாமல் போய்விட வேண்டுமா... அதனை ஆசீர்வதிக்க வேண்டுமா... அவர்களின் காதலை எப்படிக் கொண்டாட வாய்ப்பளிக்கவேண்டும்... கண்களைத் தாழ்த்து. அது இந்த சமூகம் இப்படியான சங்கடங்களை காதலர்க்கு அளித்துவிட்டதே என்பதற்கான மன்னிப்பாக இருக்கலாம். வருத்தத்தைப் பதிவு செய்வதாக இருக்கலாம். அது அவர்களை ஆராதிப்பதாக இருக்கலாம். அது அக்காதலர்களின் முத்தத்திற்கு இசைக்கும் ஆத்ம இசையாக இருக்கலாம். கவிஞர் சொல்கிறார் இவை அத்தனையையும் ஒரு வார்த்தையில்.
“நண்பகலில் மர நிழலில்
ஒரு அவசர முத்தத்தைக் கடக்கும்
நீங்கள் கண்களைத் தாழ்த்துவதே
காதலுக்கு மரியாதை”
கொண்டாடப்படவேண்டிய கவிதைகள்.
கொண்டாடப்படவேண்டிய கவிஞர்.
பெரு மகிழ்வும் வாழ்த்துகளும் தோழர்.
யாழ் தண்விகா

No comments:
Post a Comment