Friday, 13 February 2026

கருப்பும் காவியும் #சுப.வீரபாண்டியன்

 



கருப்பும் காவியும்

சுப.வீரபாண்டியன்

கருஞ்சட்டைப் பதிப்பகம்

விலை ரூ.110

பக்கங்கள் 120


சமகாலத் தேவை கருப்பு


நாடெங்கும் பாசிச சக்திகளின் ஆதிக்கம் வளர்ந்துவரும் சூழலில் கருப்பும் காவியும் என்ற நூலானது வாசிப்பிற்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதில் ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் உள்ள மோதலுக்கான மூல காரணம், ஆரியம் எப்படியெல்லாம் இண்டு இடுக்குகளில் தன்னுடைய வேர்களைப் பதிக்கிறது, அது களையப்படவேண்டியதன் கட்டாயத்தை பல்வேறு தரவுகள் மூலம் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். ஒரு நூற்றாண்டு அரசியலை எளிமையாக வாசித்தறியலாம். மண்டைக்காடு, மீனாட்சிபுரம் உள்ளிட்ட கலவரங்கள் மூலம் இங்கு கால் பதிக்க சமயம் பார்த்திருந்த மதத் தீவிரவாதம் நீர்த்துப் போவதற்கு தமிழகத்தில் பரவிக் காணப்படும் கருப்பு சித்தாந்தம் தான் காரணம். இங்கு ஒரு சிக்கல் இருக்கிறது. தான் ஓர் ஆத்திகன் என்று சொல்லும் துணிச்சல் உள்ளவர்களைப் பார்க்க முடிகிறது. ஆனால் நாத்திகன் என்று சொல்லும் நபர்களை விரல்விட்டு எண்ணும் நிலையில்தான் இருக்கிறோம். அதற்குக் காரணம் ஒன்று. ஆத்திக ஆதரவாளர்கள் என்ற கூட்டத்தினை சனாதனத்தை வளர்க்க விரும்பும் தலைமை உருவாக்கும். அதனை மூலதனமாக்கி மக்களை முட்டாளாக்கி தனக்கான பலன்களை அறுவடை செய்யத் தொடங்குகிறது சனாதனத் தலைமை. தன்னுடைய தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுவருகிறோம் என்பதைக்கூட அறியாதபடி தன்னுடைய செயல்திட்டங்களைச் செயல்படுத்த அடிமைக்கூட்டத்தை  உருவாக்குகிறது. இரண்டு. நாத்திகத்தை ஊன்றிச் சொல்வதற்கும், வருணாசிரமத்தை இங்கு திணிக்க ஆத்திகம் என்ற பெயரில் நடைபெறும் ஆபத்தான அரசியலையும் பேசுவதற்கு ஆத்திக ஆதரவிற்கு மேல் காரணங்கள் இருப்பினும் அதனைச் சொல்வதற்கான தரவுகளை அறியாமல் இருப்பது தான். இந்நூல் தரவுகள் பலவற்றை எடுத்துச் சொல்கிறது. ஆரம்ப நிலை வாசகர்களுக்கு இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் எளிதில் சென்று சேரும். திராவிடத்தைப் பரப்பவும் துணை நிற்கும். டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்து மதம் சார்பாக கூறியுள்ள கருத்துக்கள், பசு பாதுகாப்பு அமைப்பிடம் சுவாமி விவேகானந்தர் பேசிய உரையாடல் உள்ளிட்ட தகவல்கள் முக்கியமானவை.


வாசிக்கவேண்டிய நூல்.


யாழ் தண்விகா

No comments:

Post a Comment