Thursday, 19 February 2026

மிட்டாய் பசி #ஆத்மார்த்தி

 

மிட்டாய் பசி


நாவல்


ஆத்மார்த்தி

Aathmaarthi RS தோழர்


பக்கம் : 184

விலை: 180

வெளிவந்த ஆண்டு: டிசம்பர் 2020


மன்னிப்பை வழங்கிய கடவுளின் வாதைகள்


 “பல சமயங்களில் காலம் கேள்வி கேட்கிறது. ஆனால் பதில்கள் இருப்பதில்லை. இது கால வினோதம். யாருமே எழுதாத மாபெரும் கதை. அடுத்தடுத்த அத்தியாயங்களில் மட்டும் யாராவது வருவதும் கதையைக் கலைத்துச் செல்வதுமான கோமாளித்தனம்”


 

 வாழ்க்கை என்பது இன்னதுதான் என்று யாராலும் அனுமானமாகச் சொல்லப்படாத புதிரான ஒன்றாகவே எப்போதும் இருக்கிறது. நாவலில் வரும் பாத்திரங்கள் இயல்பு நிரம்பியவையாக இருக்கின்றன. களங்கள் அன்னியப்படாமல் இருப்பதால் நாவலோடு ஒன்றிப் பயணிக்க முடிகிறது. மதுரை, சென்னை, மும்பை, டெல்லி எனக் கதை பயணிக்கும் இடங்களிலெல்லாம் கதை நாயகனான ஆனந்த் சாதாரணமான ஒருவனாக, தனக்கென பிம்பம் ஒன்றைத் தூக்கிச் சுமந்து செல்லாதவனாக இருக்கிறான் என்பதுதான் கதையின் தனித்துவம்.


 அழகியல் நுட்பத்தோடும், காட்சிப்படுத்தலின் உச்சத்திலும் கதை நகர்கிறது என்று ஓரிடத்திலும் சொல்ல இயலாமல் வாழ்வின் கூறுகளை, வாழ்வின் வலிகளை எவ்விடத்தும் குறைத்துவிடாது செல்லும் ஒரு யாத்திரை. முடிந்துவிட்டதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கவும் வாழ்வின் ஆழத்திலிருந்தே நாம் யோசிக்க வேண்டியதிருக்கிறது.


 செல்லம்மா, தாய் மற்றும் தந்தை இல்லாமல் பாட்டியோடு வசித்து வருபவள். மில் வேலைக்குச் சென்று வருகிறாள். மாரீஸ்வரன் என்ற மார்ஸ் கந்து, சீட்டுப் பணம் வசூலிப்பவன். மார்ஸ், செல்லம்மா இருவருக்கும் உள்ள ஈர்ப்பு திருமணத்தில் முடிகிறது. திருமணத்தின் பின்னே மார்ஸ்க்கு ஜெகதாம்பா என்ற ஜெகாவோடு உள்ள உறவு தெரிய வருகிறது. அதிலிருந்தே கணவன் மேல் பிடித்தம் இல்லா ஒரு வாழ்வை வாழ்கிறாள் செல்லம்மா. ஒரு வருடத்தில் ஆனந்த் பிறக்கிறான். கணவன் மேலிருந்த ஒரு வெறுப்பால் ஆனந்தை கொஞ்சவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் அல்லாடுகிறாள் செல்லம்மா. ஆனந்திற்கு 6 வயது ஆனபொழுது மார்ஸ் கட்டிடச்சுவர் மேலே விழுந்து இறந்துவிடுகிறான். இந்த பொல்லாத வாழ்க்கைக்கா இந்தப் பாடு என்று நொந்து போகிறாள் செல்லம்மா.


 மார்ஸ் உடன் பிறந்த திலகா கணவன் குடியாகக் குடித்து இறந்து விடுகிறான். அவளும் செல்லம்மா வீட்டில் ஆனந்தைப் பார்த்துக்கொண்டே அங்கேயே தங்கி விடுகிறாள். பள்ளிப் படிப்புக் காலத்திலேயே சின்னச் சின்ன சச்சரவுகள் ஆனந்த்தால் பள்ளியில் நடக்கிறது. ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாற்றம். அங்கு ராஜூ என்னும் மாணவனுக்கும் ஆனந்திற்கும் சண்டை. இந்தக் கால கட்டத்தில்தான் செல்லம்மா தணிகாசலம் என்பவரைக் கட்டிக்கொண்டு மும்பைக்குச் செல்கிறாள். படிப்பில் நல்ல முன்னேற்றம் கண்டாலும் சில இடங்களில் அருள் ஜெபத்துரை வாத்தியாருக்கும் ஆனந்திற்கும் இடையே சில கசப்பான சம்பவங்கள் நடக்கின்றன. ஒருமுறை அருள் ஜெபத்துரை வாத்தியாரும் ராஜூவும் நடந்து செல்லும்போது ராம்பிரபு என்ற மாணவன் கல்லைக் கொண்டு எறிகிறான். அந்தக் கல்லின் குறி வாத்தியாருக்கு. தன்னை அடித்தார், திட்டினார் என்பதற்காக. ஆனால் அந்தக் கல் ராஜூவின் மேலே பட்டு அவன் உயிரிழக்கிறான். அந்தப் பொழுது அங்கு முகம் காட்டும் ஆனந்த் குற்றவாளியாக்கப்படுகிறான். எந்த சூழலிலும் அவன் தன்னை நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவன் தான் கொலை செய்யவில்லை என்பதை மட்டுமே திரும்பத் திரும்பக் கூறுகிறான். ஆனால் அவன் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு கூர்நோக்கு மையத்திற்கு அனுப்பப்படுகிறான். 


 கூர் நோக்கு மையத்தில் தயாளன் என்ற கொலைக் குற்றம் செய்தவன் ஆனந்திற்கு அறிமுகம் ஆகிறான். அவன் தன் தாய் இறப்பிற்குக் காரணமானவனை கொலை செய்து அவ்விடம் வந்தவன். வெளியில் வந்தவுடன் ஆனந்த், ராம்பிரபுவைக் கொல்ல உதவுவதாக தயாளன் கூறுகிறான். வெளியில் வந்தவுடன் தயாளன், ஆனந்த் சந்தித்துக்கொள்கின்றனர். திட்டம் தீட்டுகின்றனர். ஆனால் தயாளன் நாய் கடித்து உயிர் விட வேண்டிவருகிறது. விரக்தியின் உச்சத்திற்குப்போகிறான் ஆனந்த்.


 ராம்பிரபுவைக் கொல்லலாமா வேண்டாமா என்ற மன ஊசலாட்டம் ஒருபுறம் இருக்க, கேரளா செல்கிறான். அங்கு அனு என்பவளோடு உறவு கிடைக்கிறது. ஆனால் அவள் தலைமையில் இயங்கும் பாலியல் நிலையத்தில் நடக்கும் விஷயங்கள் உடன்படாமல் வெளியே வந்து விடுகிறான். மும்பை வேலைக்குச் செல்கிறான். அங்கு ஒரு பெண்ணோடு காதல் வருகிறது. அவளுக்கு வேறொருவன் திருமணம் முடிக்க காத்திருப்பதாகச் சொல்ல இன்னும் ரணமாக வாழ்க்கை மாறுகிறது. இடையில் அவனுக்கு இழுப்பு நோய் இருப்பதும் அவன் வேலை செய்த இடத்திற்குத் தெரிய வர மன வேதனை அடைகிறான். அங்கு தன்னுடைய தாய் செல்லம்மாவைப் பார்க்கிறான். வேறு சில பெண்களோடு, முகம் தெரியாத ஆணோடு. என்னடா வாழ்க்கை இது என்று அங்கலாய்க்கிறான். அங்கிருந்து வெளியேறி டெல்லி செல்கிறான். இக்கால கட்டத்திலும் மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள் ஆனந்திற்கு.


 டெல்லியில் ஒரு ஹோட்டலில் தன்னுடைய பணியைத் தொடங்குகிறான். அங்குதான் ராஜூவைக் கல்லைக் கொண்டு எறிந்த ராம்பிரபுவைப் பார்க்கிறான். ஆனால் அவ்விடத்தை விட்டுக் கடந்து அவனை எப்படி கொல்லலாம் என்று யோசிக்கிறான். ராம்பிரபுவும் ஆனந்தைக் கண்டுவிடுகிறான். அவ்விடத்தில் என்ன நடந்தது என்பதை நாவலின் இறுதியில் வாசித்தறியலாம்.


நாவல் இயங்குக் காலமும் மனிதர்களும்

 

 பாசாங்கு இல்லாத மனிதர்கள் என்பது நாவலில் எங்கும் உணரலாம். கதையின் சுவாரசியம் கூட்ட எவ்வித சமரசமும் நாவலாசிரியர் செய்துகொள்ளவில்லை. பள்ளிக்கூடம், சினிமா தியேட்டர், வானொலி என எண்பதுகளைக் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் விவரணைகள் நாவலெங்கும். ஒவ்வொரு இடத்திலும் வாழ்க்கை, ஆனந்தை வைத்துச் சூதாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. மீண்டும் மீண்டும் தோற்கிறான். பல்வேறு குழப்பங்கள். காலத்தின் முன்னால் தான் யாருக்காக வாழ்கிறோம் என்பது அவனுக்குப் புரியவில்லை. வாழ்தலின் முழுமையை அறியாமலேயே வாழ்ந்துகொண்டே செல்கிறான். கண்ணீரும் புலம்பலும் அவன் உடன் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தயாளன் இருந்தால் அவன் வாழ்க்கை வேறு மாதிரி மாறியிருக்கும். செல்லம்மா இருந்திருந்தால் மாறியிருக்கும். அனு இருந்தால் மாறியிருக்கும். கல்யாண் பேக்கரியில் உள்ளவளோடு காதல் நிறைவேறியிருந்தால் மாறியிருக்கும். ராம்பிரபுவைக் காணாமல் இருந்திருந்தால் அவன் வாழ்வு மாறியிருக்கும் என்றெல்லாம் யோசிக்க வைத்துவிடுகிறது நாவல். நிறைவுப் பகுதியில் தன்னை, தன் மனதை வெளிக்காட்ட ஆனந்த் பேசும்போதும் அவனுள் உள்ள மனிதன் யார் என்பதை உணர்த்துகிறானா? அல்லது அவனின் இயல்பு அவ்வ்ளவுதானா? அவன் வாழ்ந்த வாழ்வின் வெறுமை அவனுக்குள் அள்ளிப் போட்ட போராட்ட மனநிலையைக் காவு வாங்கிவிட்டதா? என்று வாசகர்களைத் திகைக்க வைத்தாலும் மிட்டாய் பசி வாழ்வின் அபத்தத்தைக் கூறும் ஒரு முழுமையான நாவல் என்பதை உறுதியாகக் கூறலாம்.


யாழ் தண்விகா

No comments:

Post a Comment