Thursday, 19 February 2026

ஆரஞ்சு வண்ணங்களாக நீளும் பாதை #ஜெ.நிஷாந்தினி

 ஆரஞ்சு வண்ணங்களாக நீளும் பாதை

ஜெ.நிஷாந்தினி 


வாதைகள் சுமந்திருக்கும் மரக் கனிகள்


வினோதப் பறவையின் கடற்கரை என்ற முதலாம் தொகுப்பிற்குப் பின்னர் கவிஞர் எழுதிய இரண்டாவது தொகுப்பு இது. கவிதைக்கான தலைப்பு ஒவ்வொன்றும் கவிதையாக இருக்கின்றன. கவிதைத் தொகுப்பிற்கான தலைப்பாக இருக்கின்றன.


வெளியிலிருந்து பார்க்கும் வரை வீடு என்பது ஒரு சொல். கதவு திறந்து உள் சென்று புழங்கு தன்மை அடையும்போதுதான் வீடு என்ற சொல்லை உணரமுடியும். போலவே கவிதைத் தொகுப்பின் உள்சென்று வாசிக்கும்போது ஆரஞ்சு வண்ணங்களாக நீளும் பாதையின் சாலையில் பூத்திருக்கும் கனிகளையும், மலர்களையும், உதிரும் இலைகளையும் வாடிய மரங்களையும் பச்சையத்தின் மிதப்பில் அசையும் இயற்கையையும் இன்னும் பலவற்றையும் காண முடிகிறது.


அன்பைச் சுக்குநூறாக்கும் வழிகளை அனாயசமாக பலர் கைக்கொண்டிருக்கிறார்கள். அதனை வசந்தங்களை உண்டாக்கும் இசை என்னும் தலைப்பிலான கவிதையில்,

“பெரும் கலவரங்கள் வேண்டாம்

சில நொடி அச்சுறுத்தல் போதும் 

பதட்டங்களை உண்டு பண்ண


மரணத்தை அரங்கேற்ற வேண்டாம்

சிறு துரோகம் போதும்

உயிர் பிரியும் அவஸ்தையைத் தந்துவிட்டுப் போக”

என்று கூறிச் செல்பவர் கவிதையின் நிறைவில் 

“ஆனாலும்

பிரியத்தின் இசையை மீட்டி 

நுரைத்துத் ததும்பும்

அன்பின் வாசனையை உணர்த்தினாலே போதும்

இறுகத் தழுவிக் கொள்ளலாம்

வறண்டு கிடக்கும் வாழ்வை”

என்று கூறுகிறார். நிறை அன்போடு வாழ்வைக் கடத்துதல் எவ்வளவு அலாதியானது என்னும் பேருண்மையை மிக எளிமையாகக் கூறியுள்ளார்.


நான்கு வழிச்சாலை என்னும் பேரச்சத்தை பச்சையமற்றுப் போன பாழ்நிலம் என்ற தலைப்பிலான கவிதையில் கூறியுள்ளார். வாசிக்க வாசிக்க இந்தச் சாலையில் பயணிப்பது என்பது எத்தைகைய குற்ற உணர்வைக் கொடுக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

“பயணத்தின்போதெல்லாம்

திசைகளோடு பின் தொடர்ந்தபடியிருந்த

பருத்த மரங்கள் பெயர்ந்து கிடக்கின்றன


அகலப்படுத்தப்பட்ட சாலைகள்

யார் யாருக்காகவோ

வழி புரண்டு நகர்கின்றன


தீர்ந்து போன கனிகளையெண்ணி

நம்பிக்கையோடு 

தூரங்களைக் கடக்கின்றன பறவைகள்


நீரற்ற ஓடைகள் யாரும் அறிய முடியாதபடிக்கு

தடயமற்று விளையாட்டு மைதானமாய்க் 

காட்சியளிக்கின்றன


மரங்களற்ற வெளியெங்கும்

புழுதி பறக்கக் கலைத்து 

வெக்கையில் மூழ்குகிறார்கள் மனிதர்கள்


தூரத்தில்

நீர்த் திவலைகளுக்காய்

துக்கித்துக் கிடக்கிறது

பச்சையமற்ற பாழ்நிலம்”

என்ற வரிகள் மரங்களை அழித்து நான்கு வழிச் சாலைகள் போடுவதன் அவலத்தை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றன. நான்கு வழிச் சாலைக்கு முன்னால், பின்னால் என்ற பிம்பத்தைக் கவிதை வரிகளில் காணலாம். அரசியலை நேரடியாகக் கூறாமல் பூடகமாக முன்வைக்கிறது வரிகள்.


துயரத்தைத் தின்ற முகங்கள் என்னும் கவிதை கார்பரேட் வணிகத்திற்கு எதிரான கலகக்குரல். புரட்சி வேண்டும் எனப் பேசிக்கொண்டே கார்ப்பரேட் வணிகத்தை ஆதரித்து சிறு விவசாயிகளைப் புறக்கணிக்கும் மனிதர்களைச் சாடியுள்ளது கவிதை. அழியும் விவசாயத்திற்கு சாமரம் வீசுபவர்களுக்கு சவுக்கடி இந்தக் கவிதை. 

“வெள்ளமாய் வியர்த்துக் கொட்ட

நடுங்கும் கைகளால்

நுங்கினைப் பைகளில் நிரப்புகிறாள்.


நைந்த மலரென சுருங்கி

கறுத்திருக்கும் முகத்தில்

நட்சத்திரப் பிரகாசத்தோடுபூக்களைக் கோர்த்து முழம் போடுகிறாள்


மண்ணின் வாசனையோடு

கொந்தளிக்கும் பசியைக் கரைக்க

கட்டுக்கீரை விற்க அல்லாடுகிறாள்


பறிபோன சந்தோசங்களையெண்ணி

தீராத தனிமையோடு

உணவிற்காய்க் கையேந்தி நிற்கிறாள்


நீட்டியபடியிருக்கும் கைகளை

அநாயசமாக நிராகரித்து

உள் நுழைகிறோம்

குளிரூட்டப்பட்ட நவீன அங்காடிக்குள்...”

இப்போது மீண்டும் தலைப்பைப் பார்த்தால் துயரத்தைத் தின்ற முகங்கள் யாருடையவை என்றறியமுடியும். 

பல நேரங்களில் அம்முகத்திற்குள் நம்மையும் காண இயலும் என்பது எவ்வளவு பெரிய துயரம்...!


வாழ்க்கை என்பது நாம் நினைப்பது மாதிரியான வரம்போலதான ஒன்றாக இருக்கிறதா என்ன... எவ்வளவு வலிகள், ஆற்றாமைகள்....

“எத்தனை சாகசங்களை 

நிகழ்த்த வேண்டியதாயிருக்கிறது

வாழ்க்கையை வாழ்ந்தாக


இறைத்து இறைத்து ஊற்றினாலும்

ஊறிக் கொண்டேயிருக்கின்றன

அரவமற்று துக்கங்களும் வலிகளும்...

...

...

...

இருந்தும்

அரும்பென முகிழ்த்தபடியிருக்கும்

கனவுகள் அலங்கரித்தபடியிருக்கின்றன 

பிரபஞ்சத்தை”

கனவு என்பது வேறென்ன? என்றோ ஒருநாள் நிறைவேறிவிடாதா என்றெண்ணும் ஏக்கம் தானே... அதனைத் தன்னுடைய வரிகளில் எளிமையாகக் காட்சிப்படுத்தியுள்ளார் கவிஞர்.


சமீபகாலமாக பேசாததைப் பேசத் துணியும் எழுத்துகள் கூடி வருகின்றன. பெண் எழுத்துகள் என்னும் பார்வை பெரும் ஆர்வத்தை உண்டுபண்ணுகிறது. கற்பு, மாத விடாய் சுழற்சி, பெண்ணடிமைத்தனம், என பெண் கவிஞர்கள் தங்கள் பங்களிப்பை தொகுப்புகளில் வளர்க்கவே செய்துள்ளனர். உதிரத்தில் வழியும் பரிசுத்தம் என்னும் தலைப்பிலான கவிதையில்....

“மூன்று நாட்களாகப் படர்ந்து கசிந்த 

உதிரத்தில் நனைந்து நிமிர்கையில்

என்னுடல் தீண்டிய இடமெல்லாம்

துடைத்தும் துவைத்தும் பரிசுத்தமாக்க வற்புறுத்துகிறாய்.


ஆனால் நான் வெகு பிரமாதமாய்ச் 

சமைத்ததைத் தின்று தீர்த்த

உன் வயிற்றை என்ன செய்வதாய் உத்தேசம்


பிள்ளைப் பேற்றைக் கொண்டாடி சிலாகித்து

உணக்களித்த பேரின்ப விருந்தினைத் தீட்டென

உண்ண மறுக்கின்றாய்

நீயும் தாயென்பதை மறந்ததில்...


கொப்பளித்த குருதியில்

சிசுவை முத்தமிட்ட 

உன் உதட்டை எந்தத் தீயில் வாட்டப்போகிறாய்


அந்த நொடிப்பொழுதில் உயிர் கிழித்த வலியுணர

உனக்கொரு வேண்டுதலை

முன் வைக்கிறேன்

இது மாதிரியான சந்தர்ப்பங்களில்

முதுகுகாட்டித் தூரமாய்ப் போய்விடு”

வருடத்திற்கு ஒருமுறை வரும் மகளிர்தினம், அன்னையர் தினம் இதுபோன்ற நாட்களில் ஆண்கள், குறுந்தகவலாக வாழ்த்துகளை மட்டும் பதிவிட்ட பின் அதே சமையல்கட்டு, அதே வீட்டு வேலை, குடும்பத்திற்காக உழைத்தல் என்பதில் தான் பெண்களைத் தள்ளி விடப் பார்க்கின்றனர். அவர்களுக்கு மாதவிடாய் என்பது தீட்டு. அக்காலங்களில் பெண்களை வீடுகளுக்குள்ளேயே ஓரம்கட்டி வைக்கின்றனர். விஞ்ஞானம், தொழில் நுட்பம் என வளர்ந்த கால கட்டத்திலும் இது போன்ற அபத்தங்களும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதனைத்தான் இக்கவிதையில் பதியனிட்டுள்ளார் கவிஞர்.


இன்னும் பல கவிதைகள் தன்னுடைய சொற்களால் மிளிர்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக. ஒரு கவிதையில் பெரும் புரட்சி ஒன்றையும் பிறிதொன்றில் சாந்தம் பூசிய கவிதை ஒன்றையும் எழுதியிருக்கிறார் என்று சொல்லிவிடாத வண்ணம் நதியின் நீரோட்டம் போல தன் கவிதை வரிகளைப் படைத்துள்ளார் கவிஞர். ஆற்றாமையின் வலிகள் கொடூரமானது. அதனை இவர் கவிதைகள் சிறப்பாகவே வெளிக்கொணர்ந்துள்ளது.


வாழ்த்துகள் கவிஞர் ஜெ.நிஷாந்தினி


பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெளியீடு. பக்கங்கள் 96. விலை ரூ.70/-

No comments:

Post a Comment