போன்சாய் மரங்களுக்கு நீர் வார்ப்பவள்
செ. கார்த்திகா
பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெளியீடு
பக்கங்கள் 72
விலை ரூ.90
இறகென இருத்தல் தொகுப்பிற்குப் பின்னான இரண்டாவது தொகுப்பு தோழர் கார்த்திகாவிற்கு. ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் விளையாட்டு வீரன் கொண்டாடப்படுவான். போலவே கார்த்திகா அவர்களின் கவிதைத் தொகுப்பு இரண்டும் இரண்டு ஆட்டம் தான். இரண்டும் சிறப்பாக கொண்டாடப்படவேண்டியவை. ஒவ்வொரு கவிதையும் கொண்டாடப்படுவதற்கான பலப்பல காரணங்களை உள்ளடக்கியவை என்பது கூடுதல் சிறப்பு.
குருவி தலையில் பனங்காய் என்பார்களே அப்படி மிகக் கனமான பொருண்மையைக்கொண்ட தோழர் கார்த்திகாவின் கவிதைகள் இத்தொகுப்பிலும் நிறைய இடம்பெற்றுள்ளது. முதல் கவிதையின் சாரம், திருமணம் முடித்த தம்பதியினரிடம் முன்வைக்கப்படும் கேள்விதான். ஏதும் விசேசமில்லையா என்ற கேள்வியை எதிர்கொள்ள திருமணம் முடித்து குழந்தைக்காக காத்திருப்பவர்கள் யாரும் விரும்புவதில்லை தான். ஆனால் அதைக் கேட்க எல்லோரும் விரும்புகிறார்கள். எதிர்மறை பதிலைக் கைக்கொண்டவள் என்ன செய்வாள்? அவளுக்கென்ன இப்படிப்பட்ட கேள்விகளை எதிர்கொள்ள ஆசையா? இருக்காதுதானே? அவளுக்குள் உண்டாகும் ஏக்கங்கள், ஏமாற்றங்கள் எல்லாம் கொஞ்சமல்ல. அதைக் கவிதையில் கொண்டுவருகிறார் இவ்வாறு.
“ஏதும் விசேசமா?
எப்போதும் ஒலிக்கும் ஒரே கேள்விக்கு
வெவ்வேறு பதில்களை உருவாக்குவதே
வாடிக்கையான அவளுக்கு
குளியலறைத் தரையில்
நீரோடு போகிற
தீட்டுத்துளியின் நகர்தலும்
ஒரு குழந்தை தவழ்வதையே
நினைவூட்டுகிறது”
கவிதையின் முடிவிலுள்ள இரு வரிகளும் கண்முன்னே கைவிட்டுப் போகும் குழந்தையை காட்சியாக விரியச் செய்கின்றன.
காலத்தின் கைகளில் அகப்பட்ட பொம்மைகள் நாம். காலத்தின் வீரியம் என்பது திட்டமிடப்படாத சில செயல்கள் அரங்கேறும்போது புரிகிறது. அப்படிக் கவிதைகளாக 20, 21 ஆகிய பக்கங்களில். உப்புமா என்பது விருப்பமற்ற உணவு என்பது பொதுப்புத்தியில் ஏற்றிவைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. ஆனால் அதனை ஏற்கும் பொழுது என்பது எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை
“நேரமில்லை
அதீத அசதி
வேலை மிகுதி
ஏதாவது ஒரு காரணத்தில்தான்
இரவு உணவாக
உப்புமா ஒருமனதாகத்
தேர்ந்தெடுக்கப்படுகிறது” வாசித்தலின் பின்னர் உப்புமாவை ஏற்கும் பக்குவம் மனதிற்குள் பூக்கத் தொடங்குகிறது. உப்புமா செய்யும் நபரின் மனநிலைக்குள், அவரின் உடலுக்குள் நாமும் புகுந்து கொண்டு உப்புமாவை நேசிக்கும் மனநிலைக்கு வந்துவிடுகிறோம்.
“உறவினர் குழந்தையின்
எதிர்பாரா துர்மரணத்திற்குப் பின்
இரண்டாவது குழந்தை
பெற்றுக்கொள்வதென
முடிவாகிறது” பாடம் என்பது நம்மிலிருந்து கற்றுக்கொள்வது, பிறரிடமிருந்து கற்றுக்கொள்வது என்று இருக்கிறது. இக்கவிதையின் பாடம், ஒரு பதட்டத்தில் பிறக்கிறது. எதிர்பாராத துர்மரணம் என்பது நிலைகுலையச் செய்துவிடும். அது உண்டாக்கும் எண்ணம் தான் இக்கவிதை.
திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் எழுதிய கவிதையொன்றில், ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம் இரண்டு குடம் தண்ணி ஊத்தி இரண்டு பூ பூத்துச்சாம் என்று விளையாடிய சிறுமியை அவளுடைய தாயார் அழைக்கிறாள். இந்தச் சிறுமியும் அம்மாவின் பேச்சைக் கேட்டு விரைகிறாள். பூங்கா அமைக்கும் பணி பாதியிலேயே நின்று போனது என்று முடியும் அக்கவிதை. அது போலவே தோழர் கார்த்திகா,
“விடுமுறைக்கு வந்திருந்த பவனிக்குட்டி
ஒருகுடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்துச்சாம்
என தூக்கத்தில் உளறிய இரவொன்றில்
அறையெங்கும் பூக்களானது
பள்ளித் திறப்பிற்குப்பின்
எத்தனை குடம் தண்ணீர் ஊற்றியும்
ஒரு பூ கூட இங்கு பூப்பதேயில்லை” என்கிறார். குழந்தைமையைத் தொலைக்க வைக்கும் வன்மத்தில் இன்றைய பள்ளிக்கல்வி இருக்கிறது என்பதை உணர்த்துகிறது கவிதை.
ஆம்பளை அழக்கூடாது என்று சொல்லி வைத்திருக்கும் சமூகம் இது. பெண்களுக்கு அழும் சுதந்திரம் கூட மறுக்கப்படும் இடங்கள் உண்டு. சில இடங்களில் அழுபவரை ஆசை தீர அழச் சொல்லுதலும் உண்டு. அழுகை என்பது வலியை நீராக்கி மன பாரம் குறைத்தல்தானே தவிர வேறென்ன?
“அழுமூஞ்சியென
யாரையும் அடையாளப்படுத்தாதீர்கள்.
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
பெருங்குரலெடுத்து அழும் வாய்ப்பு”
இக்கவிதைக்குப் பின்னர் அழுதலின்மீது பெரும் ஆர்வமமே வந்துவிட்டது. தொகுப்பெங்கும் இப்படிப் பல கவிதைகள். அகச்சிக்கல்கள் குறித்து பேசுகின்றன. மனதிற்கு நெருக்கான இக்கவிதைகளை எல்லோரும் வாசியுங்கள். கொண்டாடுங்கள்.
வாழ்த்துகள் தோழர்
யாழ் தண்விகா

No comments:
Post a Comment