Saturday, 14 February 2026

நிறத்தைத் தாண்டிய நேசம் #ச.மாடசாமி

 


நிறத்தைத் தாண்டிய நேசம்

To Sir with Love வாசிப்பனுபவம்

ச.மாடசாமி

வாசல் பதிப்பகம், மதுரை

பக்கங்கள் 104

விலை ரூ.150


 பிரைத்வைட் கயானா தீவைச் சேர்ந்த கருப்பு இனத்தவர். பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த பகுதி. பிரிட்டனை வியந்து பார்க்கும் பிரைத்வைட், இங்கிலாந்துக்கு வந்தபிறகு அதன் இன்னொரு முகத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இங்கிலாந்து ராணுவத்தில் இணைந்து பணி செய்கிறார். அப்போது அவரின் நிறம் யாருக்கும் பெரிதாகப் படவில்லை. இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் பிரைத்வைட் பணி இழக்கிறார். பல பகுதிகளில் வேலை தேடுகிறார். செல்லும் வேலைக்கெல்லாம் இவரின் நிறம் காரணமாக புறக்கணிக்கப் படுகிறார். முன்பின் தெரியாத நண்பர் ஒருவரின் உரையாடலின்போது லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள கிரீன்ஸ்லேடு பகுதியில் ஆசிரியர் வேலை காலியாக இருப்பது அறிந்து அங்கு செல்கிறார். அப்பகுதி வறுமையில் உழலும் வெள்ளை மனிதர்கள் வசிக்கும் பிரிட்டனின் சேரிப்பகுதி. அங்கு பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் வெள்ளை இனத்தவர். மாணவர்கள் சுதந்திரமான முறையில் கல்வி கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருபவராக தலைமையாசிரியர் புளோரியன் இருக்கிறார். அங்கு பணிபுரியும் வெஸ்டன் என்ற ஆண் ஆசிரியர் எந்த முயற்சி என்றாலும் அதை ஏற்காதவர். எதையும் கிண்டலாக அணுகக்கூடியவர். பிரைத்வைட்டிற்கு முன்னர் ஹெக்மேன் என்பவர் ஆசிரியராக வந்து மானவர்களின் செயல்களைத் தாக்குப்பிடிக்காமல் ஓடியவர். பெண் ஆசிரியர்களிடத்தில் கொஞ்சம் தோழமை உணர்வு இருப்பது கண்டு அவர்களிடம் மாணவர்களின் முன்னேற்றத்திற்குத் தேவையான ஆலோசனைகள் பெறுகிறார். கொஞ்சம் தடுமாறினாலும் பின்னர் தொடர் முயற்சியின் பலனாக மாணவர்களை நல்வழிப்படுத்தும் பணியில் வெற்றி பெறுகிறார். கில்லியன் என்ற ஆசிரியருடன் காதல் பிறக்கிறது. அவள் வெள்ளை இனத்தவள். பிரைத்வைட் கருப்பினர் என்ற வேறுபாடு இவர்களுக்கிடையில் இல்லையெனினும் கில்லியனின் தந்தை வாயிலாக பிரிவு ஏற்படுகிறது. கடைசியில் திருமணம் முடிந்ததா என்பதை வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம். கலப்புத் திருமணம் முடிந்த ஒரு தம்பதியரின் மகன் சீயல்ஸ் அப்பள்ளியில் படிக்கிறான். வெள்ளை இனத்தைச் சேர்ந்த அவன் தாய் இறக்கிறாள். அந்த இறப்பிற்கு செல்லவேண்டும் என  பள்ளிக் குழந்தைகளுக்கு விருப்பம். ஆனால் பெரியோர்கள் திட்டுவார்கள் என்பதால் செல்வதற்கு மறுக்கிறார்கள். பிரைத்வைட், தான் கற்பித்த அனைத்தும் வீண். இவ்வளவு நாள் நடத்திய விவாதம் அனைத்தும் வீண். இவர்களும் பெரியவர்கள் போல் இன துவேசத்தை தூக்கிச் சுமக்க விரும்பும் நபர்கள் தான் என்ற முடிவிற்கு வருகிறார். பமீலா எனும் மாணவி மட்டும் வருவதற்கு சம்மதிக்கிறாள். சக மாணவிகள், மாணவர்கள் யாருக்கும் பெரியவர்களை எதிர்த்து இறப்பு வீட்டிற்கு வரும் துணிச்சலில்லை. மறுநாள் சீயல்ஸ் வீட்டை பிரைத்வைட் நெருங்கியபோது அங்கு வகுப்பு மாணவர்கள் அனைவரும் திரண்டு நிற்பது கண்டு பிரைத்வைட்டிற்கு கண்களில் கண்ணீர். இன்று பள்ளியில் நடைபெறும் பெரும்பாலான பிரச்சனைகள் 1940 ஆம் ஆண்டில் பிரைத்வைட் தன்னுடைய 28 வயதில் பள்ளி ஆசிரியராகப் பணியேற்க செல்லும்போதே இருந்துள்ளது. பாலியல் பிரச்சனைகள், இனத் துவேஷம், சக ஆசிரியருடன் காதல், பிரைத்வைட் வகுப்பில் படிக்கும் மாணவி அவரின்மேல் கொண்ட அன்பு, அதனால் உண்டாகும் சந்தேகங்கள், சக ஆசிரியர்கள் ஒத்துழைக்காமை என பல பிரச்சனைகள். ஆனால் அத்தனையையும் கடந்து சாதித்த மனிதனாக பிரைத்வைட் இருக்கிறார். போராட்டம், உருக்கம், தோல்வி, காதல், வெற்றி என பல உணர்வுகளின் கலவையாக இருக்கிறது பிரைத்வைட் வாழ்க்கை. வழக்கம்போல தன்னுடைய இயல்பான எழுத்தால் வாசிக்கத் தூண்டுகிறார் தோழர் ச.மாடசாமி. ஆசிரியர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல். தம்மைத் தாம் ஊக்குவித்துக்கொள்ள இது போன்ற நூல் நிச்சயம் கைகொடுக்கும் என்பது திண்ணம்.


யாழ் தண்விகா

No comments:

Post a Comment