ஓவியங்கள் வழியும் தூரிகை
கவிதைகள்
ச.ப்ரியா
Sa Priya
பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெளியீடு
தெரிந்தோ தெரியாமலோ கவிதை எழுதுபவர்கள் கவிதைக்கு ஒரு விளக்கத்தைச் சொல்லி விடுகிறார்கள். இது கவிஞர் ச.ப்ரியா அவர்களின் விளக்கம். “ஒரு சம்பவத்தையோ, ஒரு காட்சியையோ அல்லது ஒரு உணர்வையோ கடந்து செல்கையில் எனது உடல் அதன் போக்கில் நகர்ந்தாலும், மனம், ஒரு புள்ளியில் ஸ்தம்பித்து நிற்க நேர்கையிலெல்லாம், எனக்கான கவிதைகள் பிரவாகமெடுக்கின்றன”. கவிஞனின் மனம் என்பதே கவிதை மனம் தானே.
வாசிப்புச் சுவை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியானது. அது புரிதல், உள்வாங்குதல், உணர்வுகள், அனுபவம் எனப் பல கூறுகளைக் கொண்டிருக்கும். நூலில் நூலகப் புத்தகங்கள் என்றொரு கவிதை. புத்தகத்தில் உள்ள யாரோ ஒருத்தியின் தலைமுடி, யாரோ ஒருவரின் நகத்துண்டு, குழந்தையின் நகக் கிறுக்கல்... என்பதைக் காட்சிப்படுத்திய கவிஞர்
“எனக்குப் பிறகு
இந்தப் புத்தகத்தைப் புழங்குபவர்களால்
என் அடையாளங்கள் காணப்படும்
என்பது சாத்தியமற்றது
புத்தகப் பக்கங்களில் விழுந்த
கண்ணீர்த்துளிகள் உலர்ந்துவிடும்
இன்னும் சற்று நேரத்தில்” என்பதாக முடிக்கிறார். நூலின் சாதனை என்பது அதுதானே. நினைவுகளைக் கிளற வேண்டும். மகிழ்வைத் தரவேண்டும், வலியைக் கொடுக்கவேண்டும். அதுதான் எழுத்தின் வலிமையாக இருக்க முடியும் என்கிறார்.
சொல்லொன்று செயலொன்று, இதுதான் பெரும்பாலான மனிதர்கள். நெகிழியைப் பயன்படுத்தக்கூடாது. அது இந்த மண்ணை, மக்களை, விலங்குகளை, நீர் ஆதாரங்களை, நீர் வாழ் உயிர்களை, காற்றை மாசுபடுத்தி கேடு விளைவிக்கும் என்கிறோம். அதை உணரும் பக்குவமும் நம் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் நெகிழியை நாம் முற்றாக ஒழித்து விட்டோமா... அல்லது கட்டாயம் என்ற இடத்தில் மட்டும் தான் பயன்படுத்துகிறோமா என்றால் இல்லை என்றுதானே கூறவேண்டிய இடத்தில் இருக்கிறோம். அதை ஒரு கவிதையில் இவ்வாறு சாடுகிறார்.
“கூண்டுப் பறவைகள்
குடுவை மீன்கள்
போன்சாய் மரங்கள்
இவைகள் எதுவுமற்றதாக உங்கள் வீடு
இருக்கும் பட்சத்தில் மட்டுமே
கூரைக்கு மேல் அமர்ந்துகொண்டு
நீங்கள் பறத்தல் குறித்து
சிந்திக்க முடியும்”
தொட்டிச் செடிகள் என்ற தலைப்பு ஆகப் பொருத்தம்.
தலைப்புக் கவிதை ,
கடவுள் என்ற கற்பிதம்
ஓர் ஓவியனாக
இருந்திருக்கக் கூடும்...
எனத்தொடங்கி
ஜாக்கிரதை என முடிகிறது.
இடைப்பட்ட வரிகளை யோசித்தறியலாம். அல்லது வாசித்தறியலாம். இப்பேரிடர் காலம் என்பது பூமியை மீண்டும் அழித்து வரையும் கடவுள் என்னும் ஓவியனின் நிலையிலிருந்து நாம் பார்க்கலாம். பிளாஸ்டோ பாரிசில் உருவாக்கிய புத்தர், கிருஷ்ணர், ஏசு சிலைகள் விற்கும் ஒரு குடும்பத்தின் சூழல், அங்கு கடவுள் என்ன செய்கிறார் என்ற குறியீடு அருமை. எல்லா காட்சிகளையும் பார்த்துக்கொண்டு கடவுள் சும்மா இருக்கிறார் என்று நாம் கூறிக்கொண்டு இருக்கிறோம். ஒரு போதும் அவர் தான் பார்க்கவில்லை, நீதான் பார்ப்பதாக நினைத்துக்கொள்கிறாய் என்று கூறப் போவதில்லை. அதுவரை கடவுளைத் தூக்கிச் சுமந்துகொண்டிருப்போம்.
கண்முன்னே நாம் வாழும் காலத்தில் நடந்த ஈழப் போர் அறிவோம். போரின் துயர் என்றால் எப்படி இருக்கும் என்பதை ஈவு இரக்கமற்ற கொலைகள், கற்பழிப்புகள், குண்டு வெடிப்புகள், காயங்கள் இவற்றை ஊடகங்கள் வெளிச்சமிட்டன. உலக நாடுகள், பெரிய பெரிய அமைப்புகள் கூட வேடிக்கை பார்த்தன. அது வலி. அங்கு அன்பு என்பதற்கு வேலையில்லை. செஞ்சோலைக் குழந்தைகள் கொல்லப்பட்டனர். குழந்தைகள் கொல்லப்பட்டபோதும் எதுவுமங்கு மாறிடவில்லை. சாவுகள் மூலம் அமைதி நடந்தது.
“போர்நிறுத்தம் செய்யப்பட்ட பகுதியில்
தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமி
தன்னுடன் பாதுகாப்பாக
வைத்துக்கொண்டிருந்தாள்
அவளது பொம்மை ஒன்றையும்.
சற்று நேரத்தில் சூழ்ச்சி என்னும்
ஆயுதத்திலிருந்து
தெறித்துத் துளைத்தது மரணம்.
தன்னைப் போலவே மாறிவிட்ட அவளை
வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது
அவளது அன்பிற்குரிய பொம்மை”.
எனக்கென்னவோ அச்சிறுமி வைத்திருந்த பொம்மை அவளது அம்மா அல்லது அப்பா அல்லது அவளின் உடன் பிறந்த சகோதரனோ சகோதரியின் பிணமான பொம்மையாக மனதில் வந்து போனது. போரின் வலி கொடூரமானது. அது பாவம் புண்ணியம் பார்க்காது. வெற்றி ஒன்றிற்கென எதையும் செய்யும். அதை உணர்த்தும் கவிதை.
இன்னொரு கவிதையில் காட்டை அழித்து மனை விற்பனை செய்வது குறித்துக் கூறும்போது
“இறுதியாக மனை வாங்குபவர்களுக்குக்
காட்டைக் கொன்று புதைத்த
இடத்தின் தலைமாட்டில் நட்டுவைக்க
மரக்கன்று ஒன்றை
இலவசமாகத் தருகிறான்” என்கிறார் கவிஞர். வனம் அழித்து வீடு என்பதே இங்கு சுடுகாடு போலத்தான். அங்கு மரக்கன்று என்பது இழந்து போன வாழ்வின் அஸ்தி தான். கருத்து சொல்கிறேன் என்றில்லாமல் அதை கவிதையாக்கும் உத்தி வாயிலாக உரைக்கும் தன்மை கவிஞருக்கு நன்றாகவே வருகிறது.
அம்மாவிற்கு, அப்பாவிற்கு, திருநங்கைக்கு, ரோஹித் வெமூலாவிற்கு, முறிந்து போன காதலுக்கு, பார்வையிழந்தவன் விற்கும் பத்திக்கு, சமூகத்திற்கு, அழிந்து வரும் இயற்கைக்கு எனத் தன் கவிதைக் கரங்களை எல்லாத் தளங்களிலும் பரப்பியுள்ளார்.
ஓவியங்கள் வழியும் தூரிகை
கவிதைகளில் ஒளிர்கிறார் கவிஞர்.
வாழ்த்துகள் தோழர்.
யாழ் தண்விகா

No comments:
Post a Comment