Sunday, 8 February 2026

யமுனா என்றொரு வனம் #ஆண்டன் பெனி

 யமுனா என்றொரு வனம்

கவிதைத் தொகுப்பு

ஆண்டன் பெனி 

படைப்பு பதிப்பகம்

விலை : ரூ.100

பக்கங்கள் : 122


முத்தங்களால் நெய்யப்பட்ட கவிதைகள்


காதலையும் காதல் கவிதைகளையும் வெறுமனே காதல் தானே என்று கடப்பது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதை காதலில் திளைப்பவர்கள் உணர்வார்கள். காதல் என்பது பேரன்பை உணர்த்தும் உச்ச நிலை. காதல் என்பது பகுத்தறியும் உயிர்கள் கொண்டாடவேண்டிய பெருந்திருவிழா. காதல் சமூகத்தை அன்பின் பாதையில் மேலெழச் செய்யும் பெருந்தவம். அதனை செவ்வனே செய்திருக்கிறார் கவிஞர் ஆண்டன் பெனி. 


‘என் ரயில் பயணங்களிலெல்லாம்

ஜன்னலுக்கு வெளியே

உனக்கொரு இருக்கை 

கிடைத்துவிடுகிறது”

வாசிக்கும்போதே நான் ரயிலில் பயணிப்பவனாகவும் என் அன்பிற்குரியவள் நடைமேடை இருக்கையில் அமர்ந்திருப்பது போலவும் வருகின்ற எண்ணத்தை எது எனக்குள் தோற்றுவித்திருக்கும்? கவிதையின் தாக்கம் அதுவே. 


கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே... இந்த வரிகளை காதலிக்கும் நாத்திகனும் பாடித் துயரடைவான் எனில் காதல் தரும் வலி எவ்வளவு வன்மம் நிறைந்தது...? தான் காதலிக்கும் பெண்ணிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார் கவிஞர். அந்த கோரிக்கை இந்த வாழ்வை வாழ்ந்து கடக்க வைக்கும் வேண்டுதல். இதற்கு மேல் வேறென்ன வேண்டும் என்று மனதை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒரு சிறு பேராசை. 

“உன் கண்படும் தொலைவில்

இருக்கிறேன்

சற்றே பார்வையால் 

என்னைத் தொட்டுக்கொள்

போதும்”

காதலின் அதிக பட்ச எதிர்பார்ப்பு. இது நிறைவேறும்பட்சத்தில் அடுத்துத் தோன்றும் கவலையை அடுத்து எப்படி சரிக்கட்டுவது என காதல் பார்த்துக்கொள்ளும்.


காடு, வனம் வேறுபாடு கூறு என்று கேள்வியை இனி யாராவது எழுப்பினால் அதற்குப் பதிலாக இந்த கவிதையை முன்வைக்கலாம்.

“சிந்தாமல் சிதறாமல்

முத்தமிடு

சிந்திய முத்தம் காடாகும்

சிதறிய முத்தம் வனமாகும்...”


முத்தம் என்பது எதைச் சாதிக்கும்? முத்தத்தின் பயன் என்ன? முத்தம் இல்லாவிட்டால் என்ன நிகழும்? என்பன போன்ற பல கேள்விகள் எழுபவர்களுக்கு இத்தொகுப்பைப் பரிசளிக்கலாம். முத்தத்தின் ஈரமா... காதலின் ஈரமா... கவிஞரின் ஈர மனதா... ஏதோ ஒன்று தொகுப்பெங்கும் விரவிக்கிடக்கிறது. முத்த முனைவர் என பட்டம் கொடுத்துவிடலாம் போல... பல்வேறு ஆராய்ச்சிகள்? அனுபவங்கள்? அல்லது கற்பனைகள்...! முத்தத்துளிகளில் மூன்று...

முத்தங்களைப் பதித்து

முத்தங்களைச் சுவைத்து

முத்தங்களைக் குடித்து

முத்தத்திலே இளைப்பாறவேண்டும்


மீசை முடி வருடியதும்

கனிந்து விடுகின்றன

இதழ்கள்


முத்தம் சிற்றின்பம்

முத்தத்தில் உதடு கடித்தல்

பேரின்பம்


விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே... என்பது கவிஞருக்கு 

“மனதினுள் 

ஒற்றைப் பூவாக நுழைகிறாள் யமுனா

இனி அவளின்

மகரந்தக் கால் தடங்களிலெல்லாம்

பூப்பூக்கும்...” 

யமுனாவின் வரவு தொடங்கிய வாழ்க்கையை ஒரு பூந்தோட்டமாக மாற்றிக்கொண்டு வாழும் கவிஞரின் கவிதைகளில் வாசிப்பவரை வசீகரிக்கும் காதல் மிதக்கிறது. குஷி படத்தில் இடைவேளை வரும் காட்சியில் கதாநாயகனும் கதாநாயகியும் இடைக் காட்சியால் மல்லுக்கட்டிக் கொள்வார்கள். கதாநாயகி அறியாத கணம் என்றால் பிரச்சனையல்ல. அதற்காகக் காத்திருக்கும் கவிஞர் அக்கணத்தை பதிவு செய்கிறார் இப்படியாக.

“ஆடையாகட்டும்

அருகில் வீசும் காற்றாகட்டும்

தேர்வு செய்வதில் 

நேர்த்தியானவள் யமுனா.

அவளின்

ஒரு கவனக்குறைவு நேரத்திற்காகக்

காத்திருக்கிறேன்”

அதீதக் காதலில் தேடல் அதீதமாக இருத்தல்தானே முறை...


மழையும் குடையும் இரட்டைக் குழந்தைகள். குடையின் மேல் பட்டுத் தெறிக்கும் மழைத் துளிகளை கவிஞர் காணும் பார்வையில், காதலியைக் காண மெல்லிறங்கும் கண்களை நாம் கண்டுணர முடியும். ரசனையான பார்வை.

“குடைக்குள் 

உன்னைப் பத்திரப்படுத்துவதை

வழக்கமாகக் கொண்டிருக்கிறாய்

குடையின் மேலெங்கும்

என் கண்களின் தடங்கள்”


“யமுனா ஒரு மாயநதி

என் பாத வழிகளில் மட்டுமே காணக் கிடைக்கிறாள்”

நதியின் நீளமும் பயணத்தின் நீளமும் காதலால் மிளிரட்டும். கவிதையென சிறக்கட்டும்.


நிறைவாய் ஒரு (கவிதைப்)பற்றுதல்...

“நெற்றியில் வழுக்கிய என் உதடுகள்

உன் உதடுகள் தாங்கியதால்

உயிர்பெற்றது...”


இலக்கியச் சாரல் தாஹிர் பாட்சா, முனைவர் ஸ்ரீதர் இருவரின் அணிந்துரைகளும், இயக்குனரும் எழுத்தாளருமான பிருந்தா சாரதி அவர்களின் வாழ்த்துரையும் நூலாராய்ச்சி நடத்தியிருக்கின்றன. 


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

No comments:

Post a Comment