அயர்லாந்தின் அட்லாண்டிக் கரையிலிருந்து...
தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு
வெற்றிமொழி வெளியீட்டகம்
Vetrimozhi Veliyeetagam
120 பக்கங்கள்
166 ரூபாய்
இயற்கைத் தாயின் மடியில் தவழும் கவிஞனின் கவிதைகள்
தந்தையில் தொடங்கி தாய், ஆசிரியர், தாரம், மகள், உடன்பிறப்பு, நட்பு என யாரால் உயிர் தழைக்குமோ அவர்களுக்கெலாம் வாழ்த்துப்பா வாசித்திருக்கிறார் கவிதையாக. வாழ்க்கை வரன்(ம்) என்ற கவிதையில்,
“வினாத்தாள் பார்த்த வினாடியில்
விடைகளனைத்தும்
மறந்துபோன மாணவனின்
மனநிலையில் நான்
உன்முகம் பார்த்த முதல்நாளில்...
மூளைத் திசுவின்
எண்ணற்ற நியூரான்களின்
எண்ணக் குறியீடுகள்
இதயத்தை அடைந்தும்
தொண்டையைத் தாண்டி
சங்கேதக் குறியீடுகள்
வெளிவரா விந்தை...
வினாக்கள் கடந்து
விடைகளைத் தெரிந்து தெளிய
உன் முகக்குறியீடுகளும்
வினாக்குறிகளே!
வாரம் கடந்துவந்த
தேர்வு முடிவு தினம்
நம் மணப்பந்தத்தின் அச்சாரம்!
காதல் வாழ்வை கவிதையாக்கி வைத்திருக்கிறார் கவிஞர். வாசிக்க வாசிக்க வாசகனுக்கு தன்னுடைய காதலை நினைவுபடுத்தும் வண்ணம் எழுத்து நடை அற்புதமாக கவிஞருக்குக் கைகூடியிருக்கிறது. தமிழுக்குத் தூரமில்லை என்ற தலைப்பின் கீழ் வரும் கவிதைகள் அனைத்தும் தமிழுக்குச் சூட்டும் பாமாலை என்றால் மிகையாகாது. அனைத்திலும் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது.
அறிவியலைக் கோர்த்து எழுதியிருக்கும் கவிதைகள் சிலிர்ப்பை உண்டுபண்ணிவிட்டது மட்டுமில்லாமல் இயற்கையின் அதியற்புதங்களையும் கண்முன்னே நிறுத்திவிட்டது.
“உயரப் பறந்த பறவையிடம்
தோற்றுப் போனது
புவியீர்ப்பு விசை”
“வண்ணத்துப்பூச்சியின்
காதலுக்காகக் காத்திருக்கின்றன
தும்பைப் பூக்கள்”
“பறக்கும் சூரிய சக்தி
விளக்குப் பொறிகளாய்
மின்மினிப் பூச்சிகள்.
அதற்குள் அறிவியல் வைத்தவர் யாரோ”
ஒவ்வொரு கவிதையும் அறிவியலை கேள்விகேட்டுப் புரியவைக்கும்வகையில் உள்ளது.
“தடாகம் முழுதும் மீன்கள்
கரையில் ஏக்கத்துடன்
பூனைக்குட்டி”
ஒரு காட்சி விரிதல் அவ்வளவு அற்புதமாக ஹைக்கூவாய் புனையப்பட்டுள்ளது. தடாகம் என்பது என்ன. அதில் நிறைந்திருப்பது என்ன? கரையில் ஏக்கத்துடன் காத்திருப்பது என்ன? எதற்கான காத்திருப்பு அது? இவ்வரிகளை எவ்வெவ்வற்றுடன் பொருத்திப் பார்க்கவேண்டும் என்பதில் கவிதையின் நுட்பம் புரிகிறது. சொற்களின் சிக்கனம் தெரிகிறது. உதிரும் சருகு என்பது வாழ்வின் எதார்த்தத்தைச் சொல்கிறது.
“மரத்தின் நிழல்
உதிர்ந்த சிறகு
காற்றின் திசையில்
படபடத்துப் பறந்தது.
பார்த்த பச்சை இலைக்கோ
பரிகாசச் சிரிப்பு.
இன்னொரு நாள் – தானும்
உலர்ந்து உதிர்வேன் என உணராமல்...”
மனித வாழ்வு நிலையற்றது. அதனை உணராமல் வெளிவரும் சிறு அசைவும் நமக்கு பெரிய படிப்பினையைக் கொடுத்துவிடும் என்பதை உணராமல் செயல்படுகின்றோம் என்பதை உணர்த்துகிறது இக்கவிதை. மழைக் கவிதை என்றால் நனைந்துவிடுதல் சுகம்தானே. அப்படித்தான் மழைக்கவிதைக்குள் நனைந்தேன்.
“சூல் கொண்ட மேகத்தின் தாகம்கண்டு
மோகம்கொண்டது
குளிர்காற்று.
பிறந்தது மழை”
அருமை அருமை என்று சொல்லிக்கொண்டே கொண்டாடலாம் இக்கவிதையை.
மீன் முட்டை என்ற தலைப்பிலான கவிதை காட்டும் காட்சி நம்மையும் குழந்தையாகவே மாறிக் காணச் செய்கிறது. இனிமேல் கூழாங்கற்களைப் பார்க்கும்போதெல்லாம் இப்படித்தான் நாமும் நினைக்கத் தோன்றுமோ என்றென்னும் வகையிலான அக்கவிதை...
“ஆர்ப்பரித்தபடி ஓடிய
அழகிய நீரோடை
அதனுள் அலைந்து நீந்திய
ஆறாலும் கெழுத்தியும்
அடிப்புறத்தில் கூழாங்கற்கள்
ஆச்சர்யம் பொங்கி வழிய
அதைப்பார்த்து ரசித்தது
அழகுக்குழந்தையொன்று
மீன்களிட்ட முட்டையெனவே...”
கவிதைத்தொகுப்பின் தலைப்பிலான கவிதை ஒரு நாளில் அவ்வப்போது மாறிக்கொண்டேயிருக்கும் காலநிலை குறித்துப் பேசுகிறது. இடம்பெயர்தல் கவிதை எப்போதும் பொருந்திப்போகும் என்பது மனதிற்கு உவப்பானதாக இருக்கமுடியாது என்று தோன்றுகிறது. மின்னுவதெல்லாம் பொன்னல்ல கவிதை பொன்னாய் மின்னும் இயற்கையைக் கொஞ்சுகிறது.
ஒரு விவசாயியின் விண்ணப்பம் மற்றும் மழைக்கால ராத்திரியில் இரண்டும் வாழ்வைப் பேசும் கவிதைகள். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கிராமத்துக் கவிதையின் சாயலில் உறவாடுகிறது. கொண்டாட இதுபோல் இன்னும் பலப்பல கவிதைகள். கவிஞரின் பார்வை சமூகம் குறித்து இன்னும் நிறையப் பேசத்தொடங்கும்போது பல உயரங்களைத் தொடுவார் என்பது திண்ணம்.
தொகுப்பில் இடம்பெற்ற ஓவியங்கள் தனித்துவம்.
மீண்டும் ஒருநாள் காற்று வீசும்
பறவையும் மீண்டும் எழும்பிப் பறக்கும்...
வாழ்த்துகள் தோழர்.
யாழ் தண்விகா

No comments:
Post a Comment