செவலை நாயின் முதுகில் வெயில் மச்சம்
கவிதைத் தொகுப்பு
ஏகாதசி Kavi Ekadasi
வாசக சாலை வெளியீடு
90 பக்கங்கள்
120 ரூபாய்
பனித்துளி முதல் ஆகாயம் வரை பாயும் கவிதைகள்
திரைத்துறையிலும் இலக்கியத் துறையிலும் தடம் பதித்துவரும் ஏகாதசி தோழரின் கவிதைத் தொகுப்பு. கவிஞனுக்கான நுணுக்கப் பார்வையை கவிதைகளில் படரவிட்டுள்ளார். எளிய மனிதர்களின் வலி பதிவான வரிகளைப் படிக்கும்போது நமக்குள்ளும் வலி உண்டாவதைத் தடுக்க இயலவில்லை.
“வீடு குளம் ஆனது
குளிரிலும் பசியிலும்
நடுக்கமுற்று நிற்கும்
குடிசைவாசியின் கால்விரல்களை
தின்னுகின்றன விரால் மீன்கள்...”
“தம்பியை
இடுப்பில் வைத்துக்கொள்ள ஒரு கை
பிச்சைத் தட்டேந்த மறு கை
இன்னொரு கைக்கு
எங்கே போவாள் சிறுமி
அவிழ்ந்த முடி கட்ட”
இதுபோன்ற பல கவிதைகளில் வறுமையை சொற்களாக்கியவர்,
“உச்சி வெயிலில்
பேனா விற்றுக்கொண்டிருந்த சிறுமி
தன் வலக்கை விரல்கொண்டு
வழித்தெறிந்த
ஒற்றை வியர்வைத்துளி
சூரியனை உடைத்தது” என்ற கவிதையின் மூலம் வறுமையானது அதிகாரத்தை நோக்கிப் பாயும்போது அது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதைக் கூறுகிறார். அச்சொற்கள் கூரை வீடுகள் பின்னொரு காலத்தில் விடியல் காணும் தன்மையையும் தந்துவிடுகிறது.
நீர்த்துளியை, பனித்துளியைப் பாடாத கவிஞர்கள் இருப்பார்களா என்றால் இல்லை. தோழரின் நீர்த்துளிப் பார்வை என்பது குளிர்ச்சியானது அல்ல. அந்தப் நீர்த்துளி என்பது ஒரு போர்க்குரலாக மாற்றம் பெறும் தன்மையுடையதாக அமைவதைக் காணும்போது இனி நீர்த்துளியை நாம் தொட்டுப் பார்க்கக்கூட விரல் அஞ்சும் எனலாம். அக்கவிதை,
“சாதுவானதென
நீ நினைத்துடைக்கும்
ஒரு நீர்த்துளி
உன் எதிர்ப்பைத் தின்றே
இனப்பெருக்கம் செய்கின்றன
ஒன்றைப் பலவாய்...”.
ஒரு சில கவிதைகள் தத்துவம் சொல்வது போலிருக்கின்றன. ஒரு சில கவிதைகள் மிக இயல்பாய் இருக்கின்றன. காதல் கவிதைகள் என்பதைத் தேட வேண்டியதிருக்கிறது. அதற்காக தனியே தொகுப்புகள் வெளியிடுவதால் இத்தொகுப்பில் வேண்டாம் என தோழர் நினைத்துவிட்டார் போல. ஒரு சில கவிதைகள் நகைச்சுவையாய்ச் செல்கின்றன.
“மது அருந்தியவர்களால் தான் முடியும்
உலகத்திலேயே அதிக நேரம்
நாய்களோடு உரை நிகழ்த்த...”
“மழை
ஒல்லியாகத்தான் பெய்கிறது
குளத்தில் விழுந்தவுடன்
குண்டாகி விடுகிறது”
“மது குடித்திருக்கும் பாட்டிலோ
ஸ்டெடியாக நிற்க
மட்டையாகிக் கிடக்கிறது
காலி பாட்டில்”
“தலையில் அடித்து
இரண்டாக உடைத்தாலும்
அத்தனை பற்களையும் காட்டிச்
சிரிக்கிறது தேங்காய்”
இது போன்று காண்பவற்றைப் பகடியாக மாற்றும் கவிதைகளும் பல.
கவிஞனின் வாழ்க்கை கற்பனையில் பெரும்பாலும் கிடந்து உழலும். புரட்சிக்காரனின் உணர்வுகள் தெறிப்புகளாக சொற்களில் வந்து விழும். கவிதைக்காரனின் மனது எளியவர்களுக்காக குரல் கொடுக்கும். இளகிய சொற்களை எடுத்தாளும் என சொல்லிக்கொண்டே போகலாம். தோழரின் ஒரு கவிதையில்
“சோளக்காட்டு வரப்பில் உட்கார்ந்தபடி
விடுதியில் தங்கிப் படிக்கும்
கடைசித் தம்பியை
நினைத்துக்கொண்டிருந்தேன்.
திடீரென குருவி விரட்ட
சற்று தூரம் வந்துவிட்டேன்
பாவம் தம்பி தனிமையில் இருப்பான்
அருகில் பாழும் கிணறு வேறு” என்கிறார். நினைவில் வந்த தம்பியை விட்டு விட்டு குருவியை விரட்டும் கவிஞர், அந்தத் தம்பியை எந்த இடத்திலிருந்து பிரிந்து வந்தாரோ அந்த இடத்துக்கே மீண்டும் சென்று பார்க்கும் தன்மையில் சிறப்பாகுகிறது. அவன் பாவம். தனிமையில் இருப்பான். அருகில் பாழும் கிணறு வேறு என்ற சொற்கள் வெற்றுச் சொற்களாக இல்லாமல் நம்மை அந்த இடத்துக்கே அழைத்துச் செல்கிறது. நம்மையும் கவிஞர் சொல்லும் தம்பிக்காக பரிதாபப்பட வைக்கிறது. சிறப்பு தோழர். கவிதைத் தொகுப்பின் உள்ளெங்கும் கற்பனையின் யதார்த்தத்தின் உச்சம் தொடும் பல கவிதைகள்.
நிறைவாக, ஆச்சர்யப் பார்வை தோழருக்கு நிறைய என்பதை பல கவிதைகளை வாசிக்கும்போது உணர முடிகிறது. ரொம்பவும் வியந்து வாசித்த கவிதை...
“ஒரு குளத்து நீரையை
புறங்கையில்
அள்ளி வைத்திருக்கிறது
தாமரை இலை”
இன்னும் பல கவிதைகள் படைக்க, கவியுலகில் உச்சம் தொட வாழ்த்துகிறேன் தோழர். வாசிக்கக் காத்திருக்கிறேன் தோழர்.

No comments:
Post a Comment