ஊரடங்கு உயிரடங்கு
ஏகாதசி
சமம் பதிப்பகம்
பக்கங்கள் 66
விலை ரூ.70
கொலை மேகம் சூழ்ந்திருந்த காலம்...
ஊரடங்கு காலத்து அரசியல் பேச துணிச்சல் வேண்டும். அதுவும் நேரடியாக சொல்லுமளவு என்றால் இன்னும் துணிச்சல் வேண்டும். காரணம் அநீதிக்கு ஆதரவு சக்திகள் பெருகிக்கொண்டிருக்கும் காலம் இது. அவ்வகையில் இத்தொகுப்பு கொரோனோ காலத்து அரசியலைப் பேசுகிறது. கவிஞர் இரா.பூபாலன் எழுதிய தீ நுண்மி காலம் கவிதைத் தொகுப்பிற்குப் பின்னர் நான் வாசித்த கொரோனோ காலக் கவிதைகள் இவை.
அவ்வளவு வேகமாகக் கடந்துசெல்ல நாம் மகிழ்வையா கடந்தோம்? துயர் நாட்கள் கொரோனோ காலம் என்பவை. கொரோனோ என்பது நோயே அல்ல என்று ஒருபுறம். கொரோனோ நோய் என்பது உயிர்க்கொல்லி என்பது ஒருபுறம். வரும், ஆனா போயிடும் என்று ஒருபுறம் என பீதியில் ஒரு நோய் வைத்திருந்தது என்றால் அது கொரோனோ காலம் தான். எப்படா மருந்தைக் கண்டுபிடிப்பார்கள் என்று காத்திருந்து காத்திருந்து ஏறக்குறைய எல்லாம் முடிவுக்கு வரும் சூழலில் தடுப்பூசி வந்தது. ஆபத்பாந்தவன் தடுப்பூசி என்று சொல்லிக்கொண்டிருந்த சமயத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் கொரோனோ வந்தது. தடுப்பூசி, மருந்து, மாத்திரை, முகக்கவசம் என எல்லாவற்றிலும் உலகக் கைங்கர்யம் இருந்ததாகச் சொல்லப்பட்ட காலகட்டம். இவற்றிற்குள் நடக்கும் கூத்தினை தோழர் உமர்ஃபாரூக் எழுதிய கோடிக்கால் பூதம் என்ற நாவலில் காணலாம். பதட்டப்படுத்தியே, பயமுறுத்தியே ஒரு மனிதனுக்கு மருத்துவத் தேவையைக் கட்டாயமாக்கும் கண்கட்டு வித்தையை இந்தக் காலத்தில் தான் கண்ணாரக் காண நேர்ந்தது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல அமைந்ததுதான் ஒன்றிய மாநில அரசுகளின் நகைச்சுவைத்தனமான நடவடிக்கைகள். இவற்றைக் காட்சிப்படுத்துவது தான் ஓர் எழுத்தாளனின் கடமை. அதைச் செவ்வனே தன்னுடைய கவிதைகளில் கொண்டுவந்துள்ளார் தோழர் ஏகாதசி.
ஒலி அலர்ஜி மற்றும் ஒளி அலர்ஜி உடையது கொரோனோ என்பது உலக அறிவியல் அறிஞர்களுக்கு முன்பே இங்கு ஒரு நபருக்குத் தெரிந்து அதனை நாடே செயல்படுத்தச் சொன்னார். அதனை நாடும் செயல்படுத்தியது. அது என்னவென்று தெரியுமா... எவ்வளவு பகடி பாருங்களேன்... கவிதையைப் படியுங்களேன்.
கொரோனோவுக்குப்
பாரதப் பிரதமர்
மோடி கண்டுபிடித்த
இரண்டு மருந்துகளின்
பெயர்களைக் கீழ்க்காண்க.
கைதட்டல் 250 mg
விளக்கு ஏற்றுதல் 500 mg.
தான் யாருக்காக பாடுபடுகிறேன் என்பதைச் சொல்லிவிடுதல் அரசியல். அதுவும் ஒடுக்கப்படும் பக்கம் நின்று பேசுதல் என்பதற்கு துணிச்சல் வேண்டும். தன்னுடைய நிலைப்பாட்டை, தான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் கொள்கைகளையும் எடுத்துச் செல்பவராக தோழர் இருக்கிறார் என்பதை இக்கவிதைகளை வாசிக்கும்போது உணர முடிகிறது. ஊரே சிங்கிள் சோர்ஸ் என்று கதை வளர்க்க ஒரு கூட்டம் திட்டமிட்டு மீண்டும் மீண்டும் பேசியது. தமிழகத்தில் தலைமைச் செயலாளர் கூட மீண்டும் மீண்டும் கூறினார். அவர்கள் இல்லாவிட்டால் அங்கு கூடாவிட்டால் இங்கு கொரோனோ வந்திருக்கவே செய்யாது என்ற தகவல் கட்டவிழ்க்கப்பட்டு ஓடிய போது கவிஞர் இது யாரால் விளைந்தது என்று கூறுகிறார். ஆம் அந்தக் கதை வலதால் வந்தது என்பதைக் கூறும் அதே சமயம் அதை முறியடிக்க இடதால் முடியும் என்கிறார். கவிதை இது.
“வலது” காலை எடுத்துவைத்து
வந்த கொரோனோ அழிய
வேறு வழியே இல்லை
நம்
“இடது” கை ஓங்கினால் ஒழிய...
கோபம் தலைதூக்கும்போது ஆக்ரோஷம் வந்துவிழும். அதற்கு யோசிக்கத் தெரியாது. போலவே கிண்டல் வந்தும் விழும். அந்தக் கிண்டல் முழுதும் உணர்ந்து பூக்கும் கிண்டலாக இருக்கும். ஊரடங்கில் வீட்டில் அடைந்து கிடக்கும் குடும்பங்கள் பசியால் அல்லாடும்போது இங்குள்ள அரசுகள் செய்த கூத்துக்கள் சொல்லி மாளாதவை. அதனை பின்வரும் கவிதையில் பட்டவர்த்தனமாகவே கவிஞர் எடுத்துவைத்துள்ளார்.
“ஏழைகளுக்கு
புவா போடுறான்னா
ஆஸ்பத்திரி மேல
பூவா போடுறான்”
இவனை என்ன பண்ணலாம், இவனையெல்லாம் உக்கார வச்சவனச் சொல்லணும் என்பது தொக்கி நிற்கும் வரிகள். இப்படிப்பட்ட பகடி வரிகளால் அரசைச் சாடும் கவிஞர், சில இடங்களில் நேரடியாகத் தன்னுடைய தாக்குதலை நிகழ்த்துகிறார்.
“புலம் பெயர் தொழிலாளர்களின்
சுடும் கால்தடமே
எங்கள் தேசத்தின்
வரைபடம் இனி” என்கிறார். பாதம் வெடித்து, ரத்தம் கசியக் கசிய கைக்குழந்தைகளைத் தூக்கிக்கொண்டும் முதியோர்களைச் சுமந்துகொண்டும் பசியோடும் பட்டினியோடும் கிலோமீட்டர் கணக்கில் நடந்து உயிரை மாய்த்துக்கொண்ட அவலம் கண்முன் வந்துபோகிறது. கொரோனோவை விட பெரும்பெரும் கொடுமைகள் அரசால் அனுபவித்தோம். ஆக, கொரோனோ காலம் என்பது அவலங்கள் நிறைந்த காலமாக இருந்ததை அறியலாம்.
கொரோனோ காலத்தில் நடந்த அவலங்களைத் தொகுப்பாக்கியுள்ளார். மாநில அரசோ, மத்திய அரசோ எந்த அரசும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பதைப் போல நடந்து கொண்டதை தன்னுடைய கவிதைகள் ஒவ்வொன்றிலும் வாசிப்பாளனுக்கு முன்வைக்கிறார்.
"கொரோனோவே
நெஞ்சுவலி வந்து
செத்தாலொழிய
அதை நமது அரசாங்கம்
அழித்துவிடும் என்பதெல்லாம்
வடிகட்டிய பொய்” என்கிறார் கவிஞர். உண்மைதான். எத்தனையோ இடர்பாடுகள் கடந்தே ஒவ்வொரு நாளையும் கடந்தோம். ஆனால் காலப்போக்கில் கொரோனோவே காலாவதி ஆனபின்னும் கூட அதனைக் கைவிடாத அரசைச் சாடுகிறார். கொரோனோவை வைத்து மூட நம்பிக்கையை ஒழிக்கும் வித்தையையும் கையாண்டுள்ளார் கவிஞர்.
“நோய்த் தொற்றாளர்களைத்
தனிமைப்படுத்துகிறோம்
என்னதான் செய்வது
சாதி மதத் தொற்றாளர்களை”
“கடவுள் ஒரு போலி டாக்டர்
கண்டுபிடித்துப் பூட்டிவிட்டீர்கள்
கோயில்களுக்கு
பகுத்தறிவுப் பாடம் கற்பித்தமைக்கு
நன்றி கொரோனோ...
கொரோனோ காலத்தைக் காட்டும் கவிதைத்தொகுப்பு. அரசின் கையாலாகாத்தனத்தையும் மக்களின் நிலையையும் முற்போக்கின் வழிநின்று அலசி ஆராய்ந்திருக்கிறார். மென்மேலும் தொடரட்டும் கவிஞரின் கவிதை. வாழ்த்துகள்.
யாழ் தண்விகா

No comments:
Post a Comment