கைரதி 377
சிறுகதைத் தொகுப்பு
மு. ஆனந்தன்
பாரதி புத்தகாலயம்
120 பக்கங்கள்
120 ரூபாய்
திருநர்கள் குறித்த மலிவான பொதுப்புத்தியில் பளாரென அறையும் தொகுப்பு
எங்கோ ஒரு பேருந்திலோ, ஏதோ ஒரு கடையிலோ கைகளைத் தட்டி காசு கேட்கும் திருநர்களைப் பார்க்கும்போது, அவர்கள் குறித்த பொதுப்புத்தியைக் கடந்து அவர்களையும் நம்மைப் போலான சக மனுஷி என்பதை உணர்ந்து செயல்பட்டோமாயின் அதுவே இத்தொகுப்பைப் படிக்கும் வாசகர்கள் தம்மை படித்தவர் என்று பெருமை கொள்வதற்கும், இத்தொகுப்பைப் படைத்த மு.ஆனந்தன் தோழருக்கும், தொகுப்பிற்கும் சிறப்பு சேர்க்கும் முதல் படியாக இருக்கும். மொத்தம் 11 சிறுகதைகள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கூறை மைய்யப்படுத்தி எழுதப்பட்ட கதைகள். முக்கியமானதாகவும் சிறப்பான ஒன்றாகவும் தொகுப்பில் குறிப்பிடப்படவேண்டிய ஒன்றாக அனைத்துக் கதைகளிலும் திருநங்கையரைக் குறிப்பிட கைரதி என்ற பொதுப்பெயர்.
உடல் ரீதியில் உண்டாகும் மாற்றத்திற்கு தன்னைத் தயார்படுத்தத் தொடங்கும்போதே சுற்றியுள்ள உறவுகளால் புறக்கணிக்கும் சூழல் திருநங்கையருக்கு உண்டாகிறது. அவர்களை இந்த சமூகம், அதிலும் அதிகார சமூகமாக தன்னை வரிந்துகட்டிக்கொண்டிருக்கும் காவல்துறை படுத்தும்பாடு ஓலையக்கா லாக்கப், 377ஆம் பிரிவின் கீழ் கைரதி என்ற இரு கதைகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜெய்பீம் திரைப்படத்தில் காவல்துறை கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கண்முன் நிழலாடுகிறது. மேலும் அதையும் தாண்டிய வன்புணர்வு என்பதையும் வாசிக்கும்போது உயிரைக் குலுக்குகிறது. ஓலையக்கா லாக்கப் கதையின் தொடர்ச்சியாகவே 377ஆம் பிரிவின் கீழ் கைரதி என்ற கதையைப் பார்க்கிறேன். செய்வதெல்லாம் செய்துவிட்டு பாதிக்கப்பட்டவனையே குற்றவாளியாக மாற்றும் வித்தை காவல்துறைக்குத் தெரியாததா என்ன? “இப்போதும் கால்களை அகட்டி வைத்துத்தான் நின்றிருந்தாள். கூட்டி வைத்தால் வலி புடுங்கி எடுக்கும். அவள் காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆறிவருகிறது என்றாலும் கக்கூஸ் போகும்போது சுண்டி இழுக்கும் உயிர் போகிற வலி மட்டும் இன்னும் மாறவில்லை” என்ற வரிகளை வாசிக்கும்போது நமக்கும் அந்த வலியானது கடத்தப்படுவதைப் போலுள்ளது.
பல உயர் பதவிகளுக்கு திருநங்கையர் இன்று வரத்தொடங்கிவிட்டனர். ஆனாலும் வேலைக்கான விண்ணப்பத்தில் மூன்றாம் பாலினம் என்ற சொல்லைப் புகுத்த பட்ட போராட்டங்களை இதரர்கள் கதை மூலம் உணரலாம். உதிரிப் பொருட்கள் போலான சொல்லில் இதரர்கள். தொகுப்பு குறித்து எழுத்தாளர் அழகிய பெரியவன் கூறியதைப் போல பல புதிய சாளரங்களைத் திறந்துவிட்டுள்ளது இத்தொகுப்பு. இடைப்பாலினம், இருனர், திருனர், பாலிலி பற்றி அறியவேண்டிய அவசியத்தையும் தொகுப்பு உணர்த்துகிறது. ஒவ்வொன்றுக்கும் போராட வேண்டுமா என்றால் ஆம் என்பதாகவே இருக்கிறது திருநங்கையர் சந்திக்கும் சவால்கள். தொகுப்பின் மற்றொரு முக்கியத்துவமாக நினைப்பது இந்து, இசுலாம், கிறித்துவக் குடும்பங்களில் உதிக்கும் திருநங்கை கைரதி கதாபாத்திரம். என்னைச் சொல்லவில்லை, உன்னைச் சொல்லவில்லை என்றெல்லாம் வந்துவிடும் என்ற பயத்தால் அல்ல. அவர்கள் உண்டாவது குரோமோஸோம்களின் மாறுபாட்டால். அது எவ்விடத்தும் தோன்றும் என்பதை உணர்த்தவிரும்புவதால்.
திருநங்கையருக்கான உதவித்தொகை பெறுவதற்கு அவர்கள் என்னென்ன இன்னல்களை அனுபவிக்கவேண்டும் என்பதை ஜாட்ளா கதை உணர்த்துகிறது. தாலுகா அலுவலகம் ஒருபுறம் அலைக்கழிக்க, மருத்துவமனையில் சோதனை எலியாக, காட்சிப்படுத்தப்படும் பொருளாக பயிற்சி மருத்துவர்களிடம் மாட்டிக்கொண்டு அல்லாடும் திருநங்கையரின் வலிகளை இதுநாள்வரை நான் புரியாமலிருந்திருக்கிறேன் என்பதும் சக மனித ஜீவனை உணராத குற்ற உணர்ச்சிக்கு உட்பட்டதாகத்தான் எண்ணுகிறேன்.
அழகன் என்ற போர்க்குதிரை ஓர் அழகான காதல்கதை. திருநங்கையரை, அவர்கள் காதலைக் கொண்டாட வாய்ப்பளிக்கும் கதை. நஸ்ரியா ஒரு வேசக்காரி கதை ஆணாக தன்னைக் கருதிக்கொள்ளும் நஸ்ரியா அடையும் வேலை, அதற்கு தன்னைத் தயார்படுத்தும் இடம், அதற்கு ஒத்துழைக்கும் தோழமையின் வீடு என சிறப்பாக்குகிறது. இலா கதை ஆணாகவும் பெண்ணாகவும் மாறும் உடலைக் கொண்ட உயிரொன்றின் வாழ்க்கையைப் பேசுகிறது. நினைத்துப் பார்த்தால் ஓருடலுக்குக்கூட முழுமையான வாழ்வை நாம் வாழ்ந்துவிடுகிறோமென்றால் இல்லை தான். அவ்விடத்திலிருந்து கூட திருநங்கையரின் வாழ்வை நாம் நோக்கும் அணுக்கமிருந்தால் போதும். அவர்களுக்கான கதவுகளை நாம் திறந்துவிட்டிருக்கிறோம் என்று மகிழ்ந்து கொள்ளலாம். கூடுதலாய் ஒரு நாப்கின் கதை திருநங்கை தனக்குள் முகிழ்க்கும் பெண் தன்மையை உள்ளூர உணர்ந்து அதற்கான பொருத்தப்பாடுகள் தனக்கு இருந்தால் எப்படியிருக்கும் என்ற வேட்கையைத் தூண்டுகிறது. அதற்கு ஆதரவளிக்கும் கரமாக பூர்வீகா கதாபாத்திரம். சிறப்பான வார்ப்பு. அடையாளங்களின் அவஸ்தை என்பது அத்தியாவசியமான ஒரு கதை. ஆணுக்கும், பெண்ணுக்கும், ஊனமுற்றோருக்கும் கழிப்பறை பார்த்திருக்கிறோம். திருனர்களுக்கு அதற்கான சாத்தியத்தை உருவாக்கும் கட்டாயம் அரசுக்கு இருக்கிறது என்பதை உணர்த்தும் கதை.
கொரோனோ காலத்தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அமலுக்கு வந்தபின் கடைகளில் காசு கேட்கும் திருநங்கைகள் விரட்டிப் பிடிக்கப்பட்டு காவல்நிலையத்திற்குக் கொண்டுவரப்படுகிறார்கள். அங்கிருந்த காவல் ஆய்வாளர் விமலா அவர்களின் பூர்வகாலங்களைப் பற்றி வினாவெழுப்புகிறார். அதிலிருந்து கிளைத்தெழும் வாழ்க்கை வரலாற்றில் ஒரு கைரதி தன்னை ஒரு மருத்துவர் என்கிறாள். அவளுக்கான வாழ்வைத் தர குடும்பத்திற்கு மனமில்லை. ஒரு ஆண் பெண்ணாக மாறித் திரிவதா? அவள் மருத்துவரே ஆனாலும் குடும்ப கௌரவத்திற்கு அது இழுக்கு என்று கூறும் குடும்பத்திலிருந்து வெளியேறுகிறாள் கைரதி. அவளுக்கான வாழ்வை மீள அளிக்கும் கதை. இதனை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது என்று கதையாசிரியர் கூறுகிறார். இதுபோன்ற அதிகாரிகள், வழிகாட்டுதல்கள் உள்ளவிடங்களில் திருநங்கைகளின் வாழ்வு மேம்படும். ஆனால் இதுபோன்ற அதிகாரிகள் என்னும் வரத்திற்குக் காத்திருப்பதைவிட அதனை அவர்களின் உரிமையாகக் கருதி அரசே அவர்களுக்கான வாழ்வாதாரங்களை முன்னெடுக்கும் சூழலில் திருநங்கைகளின் வாழ்வு இன்னும் சிறப்புறும். மாத்தாராணி கிளினிக் போன்ற கதைகள் சமூகத்தின் தேவை. பாவசங்கீர்த்தனம் கதை போங்கடா உங்க மதமும் சட்டங்களும் என்பதுபோல.
கதைகள் அத்தனையும் திருனர்களைப் பற்றியவை. தோழர் மு.ஆனந்தன் அவர்களின் மெனக்கெடல், தேடல் கதைகளில் வெளிப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு புதிய பாதையைத் திறந்து வைத்துள்ளது இத்தொகுப்பு. தொகுப்பு உண்டான நோக்கம் நிறைவேற வாசிக்கும் அனைவரும் திருனர்களைப் புரிவோம். அவர்களுக்கு உண்டான மதிப்பை வழங்குவோம்.
வாழ்த்துகள் தோழர்.
யாழ் தண்விகா

No comments:
Post a Comment