Sunday, 8 February 2026

வாய்தாவில் இருக்கும் பதினைந்து இலட்சம்

 வாய்தாவிலிருக்கும் பதினைந்து இலட்சம்

கவிதைத் தொகுப்பு

கோபி சேகுவேரா 

படைப்பு பதிப்பகம்

பக்கங்கள் 84

விலை ரூ. 100


கவிதைகள் என்ன செய்துவிடும்...? சம்பவங்கள் செய்யும்.


நம்மைப் போல் ஒருவனைக் கண்டால் ஆரத் தழுவிக்கொள்ளும் மனம் எல்லோருக்கும் வாய்த்ததே. இத்தொகுப்பைப் படிக்கப்படிக்க அதே எண்ணம் தான் எனது மனதிலும் வந்து சேர்ந்தது. மக்களுக்கு எதிரான நிலையெடுக்கும் சனாதன அரசைக் கண்டிக்க எழுத்தை ஆயுதமாக்கியிருக்கிறார் கவிஞர். தமிழ், தமிழர், தமிழ் தேசியம் என்று கூறிக்கொண்டே பொய்யையும் புரட்டையும் பேசி சாதிய மனப்பான்மையில் பெருமிதம் கொள்ளும் ஒரு கும்பலை வளர்த்தெடுக்கும் நாம் தம்பி குழுவை புரட்டி எடுத்திருக்கிறார். மக்கள், வாழ்க்கை, காதல் குறித்த கவிதைகளும் தொகுப்பில் கிடைக்கின்றன. மேலாக இசைஞானி இளையராஜாவின் பெயர் ஐந்து கவிதைகளுக்கும் மேல் இடம்பெறுகிறது. ஆக ஆரத் தழுவிக்கொள்ள ஒரு கவிஞன், கவிதைத்தொகுப்பு என்று மனதாரச் சொல்லுவேன். 


அட்டைப்படம் தொடங்கி ஆரவாரம். புரட்சியாக பூவாக நம்மை வசீகரிக்கிறது சொற்களும் கருவும் கவிதையும். அட்டைப்பட வடிவமைப்பாளர் ஜெ.கோ.புவன் அவர்களுக்கு பேரன்பு. பெரும்பாலும் அரசியல் இல்லை என என்னுரையில் சொல்லியிருக்கும் கவிஞரின் அரசியல் தொகுப்பெங்கும் மிளிர்கிறது. ஒவ்வொரு புதிய திட்டம் தொடங்கும்பொழுதும் புதிய இந்தியா தொடங்குகிறது என்ற கூச்சல். வந்தே பாரத் ரயிலுக்கும் அப்படியே. அதன் முன்பக்கம் மாடு முட்டி சேதமாகிறது. வேறொரு ரயில் எஞ்சினால் இழுத்துச் செல்லப்படுகிறது. நாம் வேடிக்கை பார்க்கிறோம் பழைய இந்தியர்களாகவே. 

“வந்தே பாரத் ரயிலோடு

ஐநூறாவது புதிய இந்தியா வந்துகொண்டிருக்கும்

இந்த ரயில் பாதையில்தான்

உயர்ந்த விலைவாசிக்காக

வழியற்ற வாழ்வுக்காக 

தலைவைத்துக் கிடக்கிறார்கள்

ஐநூறாவது புதிய இந்தியாவின்

பழைய மற்றும் புதிய இந்தியர்கள்” 

வெற்றுப் பம்மாத்துக்களை மட்டும் ரயில் போல நீளமாக மக்களிடம் காட்டிக்கொண்டிருக்கும் அரசுக்கு இந்தக் கவிதை. 


ரஃபேல் ஊழல் என்பதிலிருந்து தகிடுதத்தங்கள் செய்து தப்பித்து வந்தாலும் ரஃபேல் வாட்ச் என்பதும் அதன் பில்லும் பேசுபொருளானது மலையால். தொடர்ந்து பேசுவது அனைத்தும் பொய் என்று மாறிய சமயம் இன்னும் நேரடியாக மக்களிடம் சென்று அந்தப் பொய்களைச் சொல்ல யாத்ரா முடிவாகிறது. செல்லும் இடமெல்லாம் கூட்டப்பட்ட கூட்டம். அண்ணா மன்னிப்பு என்றொரு பொய் ஒரு இடத்தில். வீரசிவாஜி வந்து போன கோவில் என்று ஒரு பொய் ஒரு இடத்தில் என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரும் யாத்ரா குறித்த கவிதை ஒன்று. ஊடகப் பதிவுகளில் மலை குறித்த பதிவுக்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல் என்று கமெண்ட் செய்யும் சனாதன எதிர்ப்பாளர்கள் வழியில் இந்தக் கவிதைக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று தலைப்பு. மிரட்டி விட்டுருக்காப்டி மனுஷன்.

“கொஞ்ச தூரமாவது நிடந்து செல்

சொம்பு கொடுத்து கூட்டத்தைக் கூடாதே

வெறுப்புப் பிரச்சாரம் செய்

தேவைப்பட்டால் ராணுவம், ராம ராஜ்ஜியம்

இந்து, சந்து என ஏதாவது உளறி வை.

எங்கு பார்த்தாலும் 

பிரியாணி ஆண்டாவை 

கண்டுகொள்ளாமல் கடந்து போ.

இரட்டைத் தலைமையிடம்

பிடுங்கிய இலைகளை

ஆட்டுக்குட்டிக்கு உண்ணக்கொடு”

எனச் செல்லும் கவிதை சமகாலத்தின் கண்ணாடி. கோமாளித்தன அரசியலைக் கண்முன் நிறுத்தும் கவிதை, அவர்களுக்கெதிரான தீப்பந்தத்தையும் நம் கைகளில் தந்துசெல்கிறது.


எப்பொழுது என்ன மாதிரியான விலை உயர்வு, வரி உயர்வு வரும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதை அரசின் நடவடிக்கைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். நூறாவது பொய்பொழிவு என்ற தலைப்பிலான கவிதையில் 

“முதலாவது மன் கி பாத் நிகழ்ந்தபோது

சமையல் எரிவாயு விலை பற்றி 

உங்களுக்கும் சொல்லத்தான் கேட்டுக்கொண்டிருந்தேன்.

ஒரு ரகசியம் சொல்கிறேன்

இன்று நூறாவது மன் கி பாத்

அப்போது விலை 410 ரூபாய்

இப்போது விலை 1100 ரூபாய்” சமகால அரசியலையும், அரசியல் போகும் பாதையையும், மக்கள் அதனால் படப்போகும் இன்னல்களையும் இவ்வரிகளை வாசிக்கும் யாவரும் உய்த்துணரக்கூடும்.


அணிந்துரையில் தோழர் Vijayakumar Gurusamy கவிஜி சொன்னது போல, பல கவிதைகள் வாசிக்கும்போது இதழ்களில் புன்னகை பூக்கக்கூடும். அவை அரசியல் சார்ந்து இருப்பது அவலம் தான். அந்த அரசியலைச் சுமந்துகொண்டுதான் நாமும் இந்த மண்ணில் வாழ்கிறோம். வாடுகிறோம். அரோமா பேக்கரியில் உட்கார்ந்துகொண்டு வேட்பாளர்களின் கூச்சலைக் கேட்டுப் பொங்குகிறார். அப்படி என்னதான் வேட்பாளர்கள் சொல்லிவிட்டார்கள்...

“மல்லிகை மலர்ந்தே தீரும்”

“நமது சின்னம் தேக்கு விவசாயி”

“நமது மம்மியின் சின்னம்”

“ஆக, இது டாடியின் சின்னம்”

“இது தக்காளிப்பழ சீசன், உங்கள் ஓட்டு தக்காளிக்கே”

அரசியல்வாதிகளுக்கு என்று தீரப்போகிறதோ இந்த கூச்சல் மோகம்?


ஊடகத்தினர் முன்னால், பொதுக்கூட்டத்தில், தனி நேர்காணலில் என எங்கு பார்த்தாலும் கொஞ்சம்கூட கூச்சப்படாமல் பொய்களை அவிழ்த்துவிடுவதற்குத் தனித்திறமை வேண்டும் என முதலில் நினைப்பேன். ஆனால் அதற்கு அவர்கள் அசிங்கப்படவேண்டும். நாம் அதனைக் கண்டு காறி உமிழ வேண்டும். குறைந்தபட்சம் எழுத்தாளனாக இருப்பவன் தனது கவிதைகளிலேனும். கவிஞர் பாராட்டுக்குரியவர். அவர் தன்னுடைய எழுத்தை முட்டாள்தனத்திற்கு எதிராக கொம்பு சீவி விட்டிருக்கிறார். ஆமை ஓட்டுப் படகு, ஏகே 74, ஆமைக்கறி, உடைத்த கறி இட்லி, பன்றி அடித்தல், வந்தேறி அடையாளம், சாத்தானின் பிள்ளைகள், படித்த பட்டதாரிகள் ஆடு மாடு மேய்க்க, குடிப்பெருமை பேச, இடையிடையே தமிழ்த் தேசியம், அத்தனையையும் பொங்குதமிழில் பேசி புக்காகாகா என பகடி செய்து வயிறு வளர்க்கும் தலைவனென்று சொல்லிக்கொள்ளும் ஒருவரை கவிதையில் பந்தாடியிருக்கிறார் கவிஞர். 


சேலம் ராஜா எழுதிய கவிதை ஒன்றில் 

“அழகான கோபுரத்தில் தொடங்கி

அம்பேத்கார் சிலையோடு முடிகிறது 

எங்கள் ஊர்” என சாதியச் சமூக ஊர்ச் சித்திரத்தை சொல்லியிருப்பார். கவிஞர் கோபி சேகுவேரா கூறும் ஊர்ச் சித்திரம் இப்படியாக இருக்கிறது...

“உடைபட்ட எலும்போடும்

அறுபட்ட கழுத்தோடும்

சேரியில் வாழும் 

காந்திக்கும்

நேருவுக்கும்

ஊர்த்தெருக்களில்

புத்தகம் ஏந்திக்கொண்டு

ஒரு அம்பேத்கர் கூட துணைக்கு இல்லை”.


புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்ததை, நம்மிடம் தொடர்பில்லாத ஒருவர் நம்மை அறிய நம் பெயர், அடுத்து ஊர்ப் பெயர், தெருப்பெயர் எல்லாம் கேட்டு நம்மை என்ன சாதி என அறிய முற்படுவதை கவிதையாக மாற்றி வைத்துள்ளார் கவிஞர். 


அறிமுகப் பிணக்கு கவிதை காதல் துயரை கண்ணீரால் எழுதியிருக்கிறது. அதிலும் அந்த கடைசி வரிகள்...

“தற்செயலின் கதவுகளை உடைத்து

நிரூபிக்க என்னிடம் என்ன இருக்கிறது

எப்போதோ கிசுகிசுக்கப்பட்ட

நம் பெயர்களைத் தவிர”


நினைவு மாதிரிகள், பண்டிகை உள்ளிட்ட சில கவிதைகள் பீஃப் பிரியாணியை, வருவலை, குழம்பை, சத்துக்களை சொல்லும் கணம் நாவினில் எச்சிலூற வைக்கிறது. நாம் தம்பியாக உயர்வது எப்படி என்பதை தமிழ்த்தேசியம் என்ற கவிதை பாடமெடுக்கிறது. இசைஞானி இளையராஜா பற்றிப் பேசும் சில கவிதைகள் அவரின் இசைபோல உள்ளுள் பரவுகிறது சுகமாக. 

வெ....கு....தூ....ர....ம் என்ற கவிதை

கண்ணம்மா காதலென்னும் கவிதை சொல்லடி பாடலைப் பாடி கவிதையைமனதோடு அணைத்துக்கொள்ளும் வேலையைச் செய்கிறது... ஒரு பாடலின் சொற்களை எப்படியெல்லாம் இணைத்து பிரித்து ராகமாக்கலாம் என்ற வித்தை கற்றவர் அவர்... 

“வெண்ணிலவின் ஒளி

கனலாய்

கொதிக்குதடி...

எண்ணம்

நிலை இல்லாமல்

தவிக்குதடி...

எப்போது வேண்டுமானாலும் இசைஞானி இப்படிச் சொக்கும்படி ஏதாவது செய்துகொண்டிருப்பார்....” கவிதைக்குள்ளும் ராஜாவின் இசைபோல சொற்கள்.


சொல்லித் தீரா கவிதைகள் இன்னும் பல தொகுப்பிற்குள். வாசிக்க வாசிக்க சுவாரஸ்யம். அரசியல், தனிமனித வாழ்க்கை, காதல் என பலரசங்கள். ரசித்து வாசிக்கலாம். ரசித்து மகிழலாம். ரசித்து மயங்கலாம். நல்லதொரு சமூக, அரசியல் கவிதைத் தொகுப்பிற்கு வாய்ப்பு நல்கிய படைப்பு குழுமம் Mohamed Ali Jinna தோழருக்கு பேரன்பு.


கவிஞரை வாழ்த்த கவிஞரின் வரியை கவிஞருக்கே சொல்லக்கூடாதா என்ன...

“என்னுடன் நீ மிஞ்சியிருக்க இந்த வாழ்வு போதாது”


வாழ்த்துகள் கவிஞரே.


யாழ் தண்விகா

சூழ்நிலை #பேரறிஞர் அண்ணா

 சூழ்நிலை


பேரறிஞர் அண்ணா


திராவிடர் கழக வெளியீடு


நன்கொடை : 15


பக்கங்கள் : 56


9.2.52 ல் சென்னையில் பள்ளியொன்றில் நடந்த முத்தமிழ் விழாவில் அண்ணா அவர்கள் பேசிய உரை. கடந்த காலம் என்பது பழங்காலம் இல்லை. புராண காலம் தான் பழங்காலம். நவீன வாழ்க்கைக்கு ஏற்ப ஒவ்வொன்றும் மாறுகிறது. அந்த மாற்றத்துக்கு ஏற்ப தன்னையும், தான் வாழும் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளும் நபர்கள் புராணங்கள் குறித்து மட்டும் சொன்னால் அவை தரம் மிகுந்தவை. அவற்றை மாற்றினால் தரம் கெட்டுவிடும். கேடு விளைந்துவிடும் என்று பயமுறுத்துவது குறித்து பல உதாரணங்கள் மூலம் பேசியிருக்கிறார். 


காட்டுமிராண்டித்தனமான வாழ்வை வாழ்ந்த மனிதன் பிற உயிரினங்களிடம் இல்லாத பகுத்தறிவைப் பெற்றதே வாழ்வின் வளர்ச்சிக்கு காரணம். ஆனாலும் இங்கு ஏழ்மை இன்னும் நிலைத்திருக்க என்ன காரணம்? ஏதோ நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். நம்மால் ஆவது என்ன? எல்லாம் விதிப்படிதான் நடக்கும். கொடுத்து வைத்தவன் வாழ்கிறான், கொடுத்து வைக்காதவன் வறுமையில் புரண்டு வாடி நெளிகிறான். புண்ணியம் செய்தவனப்பா, நன்றாக வாழ்கிறான், அனுபவிக்கிறான் என்றெல்லாம் சொல்லி கடவுள் மேல் காரணத்தைச் சொல்லக் கற்றுக்கொடுத்த கூட்டத்தை அம்பலப்படுத்துகிறார்.


இயல், இசை, நாடகத்தை முக்கனிகளோடு ஒப்பிடும் லாவகம் அழகு. அறிவுக்கு அப்பாற்பட்ட இலக்கியங்கள், அப்பாலேயே நிற்கட்டும். மனிதனது அறிவுக்கு வேலை தரும் அறிவு இலக்கியங்களே தேவை என்ற நிலை நிச்சயம் வந்தே தீரும். உறுதி என்று அவர் ஆற்றிய போர்ப்பரணி சிறப்பு. "தரம்" குறைந்துவிடும். "தரம்" கெட்டுவிடும் என்று எதற்கெடுத்தாலும் பேசுவது, குறிப்பிடுவது ஏன்? எதற்காக இந்தப் பீதி, பயம் எல்லாம்? என்ற வினா சனாதனத்திற்கு ஆதரவாக கிளம்பும் படைகளுக்கும் பொருந்தும் வினாவாக இருக்கிறது. காரைக்காலம்மையார், கண்ணப்பர் இவர்களுக்கு ஒரு நீதி, சம்பந்தருக்கு ஒரு நீதி... இது தவறில்லையா என்று வினவுகிறார். திருவிளையாடற்புராண கதை ஒன்று என குலத்திற்கு ஒரு நீதி வழங்கும் புராணப் புரட்டுகளை அண்ணா அவர்கள் எடுத்துக்காட்டுகிறார். இன்றும் நாட்டைச் சூழ்ந்திருக்கும் மதம் குறித்த கட்டுகளை உடைக்க அன்றே குரலுயர்த்திய அண்ணா சனாதனத்தை ஆதரிக்கும் நபர்களுக்கு தீப்பிழம்புபோல இருப்பதற்குக் காரணம் இது போன்ற பேச்சும் நூல்களும் தான் பெரும்காரணம் எனலாம். 


அவசியம் வாசியுங்கள்.


யாழ் தண்விகா 


❣️

நான் உன்னைக் காதலிக்கிறேன்

 நான் உன்னைக் 

         காதலிக்கிறேன்...

-----------------------------------------


- யாழ் தண்விகா 

- கவிதை நூல்

விலை - ரூ.66


 தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் பிறந்த கவிஞருக்கு இது நான்காவது நூல்.


" எத்தனை விழிகள் தின்றாலும் தீர்ந்து போகாத நிலா " என்கிற வரிகளில் பொதிந்திருக்கும் உண்மையைப் போலவே அனைவரின் அகத்தில் தோன்றும் காதல் அதீத அழகாகவே வெளி வருகிறது. வார்த்தைகளின் வழியே வாசிப்பவனுக்கும் பூச்சொரிகிறது, மழை நின்ற பின்பும் காற்று வீசுகிற போதெல்லாம் இதமாய் தூரிவிடும் மரக்கிளைகளைப் போல சில்லிடச் செய்கிறது கவிதைகள் ஒவ்வொன்றும்.


" நீ பதித்த கால் தடத்தில் 

   பூச்செடி நட்டு வைத்தேன்

   காதல் பூக்கிறது .."


-வாசிக்கும் நம் கண்களும் காதல் பூத்துக் கிடக்கும் வனத்தினில் கால் பதிக்கிறது.


" உனது ஊரில் மழை என்றாய் 

   எனது ஊருக்கு நீ வரும்போது 

   நானும் சொல்வேன் 

   எனது ஊரில் மழையென்று "


- அடடா காதலின் கர்ப்ப கிரகத்தில் தான் எத்தனை கவிதை குழந்தைகள் சூல் கொள்கின்றன. பார்வைகள் பற்றிக்கொள்கிற போதெல்லாம் கவிதைப் பிள்ளைகள் பிறந்து கொண்டே இருக்கின்றன.


 " அழகால் வதைக்காதே என்றால் 

   நீ என்ன செய்வாய் ...


   தப்பிக்கதான் 

   நான் கவிதை எழுத கற்றேன் "


-சில நொடிகள் சிறைப்படுவதும் சில நொடிகள் தப்பிப்பதுமான போராட்டம் தான் காதலில் கூட,


" என் அனைத்து கவிதைகளும் 

   உன்னை பற்றி தான் பேசுகின்றன

   என்றாலும் 

   உன்னை போல் 

   அழகாய் பேசி விடுவதில்லை அவை.."


- என்கிறது ஒரு கவிதை எத்தனை முறை தான் கைகாட்டி காட்டிக்கொடுக்கிறீர்கள் உங்கள் காதலை . ஆனாலும் சலிக்கவில்லை வாசிக்கும் எங்களுக்கும் வானவில்லின் வண்ணங்களைப் போல கண்களுக்குள் ஒட்டிக் கொள்கிறது .

 பொதுவான கற்பிதங்களை காதல்தான் உடைத்தெறிகிறது சமூகத்திலும் தனிமனித வாழ்விலும். காதல் எவ்வளவு மெல்லியது ஆனாலும் உடைக்கும் பொழுது அது பேருளி.


" தேவதை 

   வெள்ளை உடையில் மட்டுமே 

   வருவாள் என்ற கட்டமைப்பை 

   உடைத்தவள் நீ "


-என்கிறது கற்பிதமுடைத்த கவிதை ஒன்று.


" புடவை மட்டுமே எனக்கு 

   பிடித்த உடை 

   என்கிறாய்...

    

   என்னிடம் 

   சிபாரிசுக்கடிதம் கேட்கின்றன 

   பிற உடைகள் "


-இன்னும் இன்னும் படிக்கச் சொல்லி சிபாரிசு செய்து கொண்டே இருக்கிறது இந்நூலில் இருக்கும் ஒவ்வொரு கவிதைகளும்.


" உன்னை 

  கட்டிக்கொண்டு இருப்பதை 

  நீ புடவை என்பாய் 

  நான் புண்ணியம் என்பேன் "


- ஒரே ஒரு மழைதான் அவரவர் நனைகிறபோது ஏற்படும் ஜில்லிடலைப் போல, ஒரே ஒரு காதல் தான் எத்தனை எத்தனை வர்ணஜாலங்களை மனதளவில் தோன்ற வைக்கிறது.


" நான் உன்னை 

   காதலிப்பதற்காக வாழ்கிறேன் ..


   வாழ்வதற்காக 

   உன்னை காதலிக்கிறேன் "


-காதல் மலர்ந்த இதயத்தின் ஆன்மாவிலிருந்து உதிரும் பூக்களாய் ஒவ்வொரு கவிதையும் அவரவர் மனதின் காதலை திறக்கவும் வைக்கிறது_ மரணிக்கவும் வைக்கிறது. என் கவிதைகளை வாசிக்கப் போவதாக சொல்லி பெரியகுளத்திற்கு அழைத்தீர்கள், ஆனால் கவிதையின் காதலனை பார்த்துவிட்டு கைநிறைய காதல் புத்தகங்களோடு வீடு திரும்பியிருக்கிறேன் . வாசிக்க வாய்ப்பளித்த கவிஞனுக்கு நன்றி.  


 " மரணம் என்று 

   ஒன்று உண்டெனில் ,

   அது உன்னால் வேண்டும் 

   அல்லது ,

   உன்னுடன் வேண்டும் "


-என பதின் பருவத்திலொருவன், கண்களும் இதயமும் பனிக்கச் சொன்ன வரிகளை ஞாபகப்படுத்தியதற்கு மீண்டும் ஒரு நன்றி.


-பா.மகாலட்சுமி-

Saturday, 7 February 2026

உய்யடா உய்யடா உய்... #இசை

 

உய்யடா உய்யடா உய்!


கட்டுரை நூல்


காலச்சுவடு வெளியீடு

ரூ. 125


இசை


நீண்ட நாட்களுக்குப் பின் வாசித்த கட்டுரை நூல். கட்டுரை வாசிக்க ரொம்ப பொறுமை வேணும், கொஞ்சம் அறிவாளியா இருக்கணும் அப்படி இப்படின்னு இதுக்கு முன்னால பலர் சொல்லியும் எனக்குள்ள நானா அதை உண்மைன்னு நம்பியும் இருந்திருக்கிறேன். அதுக்குத் தகுந்த மாதிரி பல கட்டுரையும் இருந்திருக்கு. ஆனால் இந்தக் கட்டுரைத் தொகுப்பு வாசிக்க வாசிக்க உய்யடா உய்யடா உய்! என்று சத்தமிட்டு விசிலடித்து உஸ்... கவனிக்கணும் எவ்வளவு முக்கியமான விசயம் இது என்று மௌனம் காத்து... இப்படி பல கோணங்களில் ரசிக்க வைத்தது.


எழுத்தாளர் சுகுமாரன்

நகலிசைக் கலைஞன் ஜான் சுந்தர்

காமத்துப்பால்

கவிஞர் மனுஷ்யபுத்திரன்

பொன்மொழிகள்

எழுத்தாளர் வண்ணதாசன்

அன்பு செய்தல்

இயக்குநர் மிஷ்கின்

மகாகவி பாரதி

குறித்த கட்டுரைகள். ஒவ்வொன்றிலும் பிறர் பார்வை, தன் பார்வை, உள்ளது கூறல், விடுபட்டவை கூறல், பகடி எனப் பயணம் செய்யும் கட்டுரை ஓரிடத்திலும் அலுப்புத் தட்டவில்லை என்பதும் மேற்சொன்ன தலைப்புகள் அத்தனையிலும் நாம் அறியாத ஒரு புதிய செய்தியாவது இருக்கும் என்று கூறும் வண்ணம் சிறப்பான தொகுப்பாக அமைந்திருக்கிறது.


வாசிக்க வேண்டிய கட்டுரைகள்.


வாழ்த்துகள் தோழர்.

Thursday, 29 January 2026

மதிக்குட்டி #வேல்முருகன்

 


மதிக்குட்டி 

வேல் முருகன் 

பக்கங்கள் 130

விலை 150

Vetrimozhi Veliyeetagam 


கவிஞருக்கு இது நான்காவது தொகுப்பு. பேரன்பின் நன்றிகள் & என்னுரை என இரண்டு இடங்களில் என்னுடைய பெயர் நன்றி கவிஞரே.


தொட்டிலில் தூங்கும் குழந்தையை பார்த்து எவ்வளவு சேட்டை செய்கிறாள் என்று நினைப்பதுண்டு. நல்ல அறிவான குழந்தையாக வருவாள் என்று எண்ணுவதுண்டு. ரொம்ப வினையம் புடிச்ச குழந்தையாக இருக்கிறாளே என்று வேதனைப்படுவதுண்டு. இந்த குழந்தைக்காக நாம் வாழ வேண்டும், இந்த குழந்தையின் ஆசையினை நாம் நிறைவேற்றித் தரும் அளவு வளர வேண்டும், இந்த குழந்தையின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்று தொலைநோக்குப் பார்வையில் சிந்திப்பதுண்டு. இதுபோல் குழந்தைகளை மட்டும் தான் உறங்கும் பொழுது பார்த்து, எல்லை கடந்து ஆச்சரியப்படுதல், வேதனைப்படுவது உண்டு. 


மதிக்குட்டி கவிதைத் தொகுப்பில் குழந்தையின் உலகம் பற்றி அழகாக கூறுகிறார் கவிஞர் வேல்முருகன். குழந்தையின் மேலான அன்பைப் பற்றி கூறும் பொழுது அதைப்போல / அதைவிட மேலாக நம்முடைய குழந்தைகளையும் நாம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வளரும். நாம் பார்த்த பார்வை வேறு. வேல்முருகன் அவர்கள் பார்த்த பார்வை வேறு என்று கூறும் அளவிற்கு எண்ணற்ற கோணங்களில் குழந்தையை பார்த்திருக்கிறார், ரசித்திருக்கிறார், அதை கவிதைகளில் கொண்டு வந்திருக்கிறார். 


"தொட்டிலில் 

இருபுறமும் 

கால்களை தொங்கப் போட்டு

அமர்ந்து 

விழுந்து விடக்கூடாது என்று

இடுப்புடன் சேர்த்து 

கட்டப்பட்ட துண்டின் துணையோடு

தலையை 

ஒரு புறம் நீட்டி 

கால்களின் உந்துதலால் புன்னகையோடு ஆடுகிறாள். 

நம்பி ஆடலாம் மகளே 

அது அம்மாவின் சேலை 

அது அப்பாவின் துண்டு"

முதல் கவிதை இது. நம்பி ஆடலாம் மகளே / அது அம்மாவின் சேலை / அது அப்பாவின் துண்டு - என்ற வரியில் சேலையும் துண்டும் உனக்குத் தரும் பூரண பாதுகாப்பு என்று கூறுகிறார் கவிஞர். உடலுக்குள் உணர்வுக்குள் சில்லிப்பு தட்டும் வரி அது.


குழந்தையிடம் இன்று நாளை நேற்று என்பதற்கு மூன்று காலங்களையும் ஒன்றாக மாற்றி கூறும் லாவகம் இருக்கிறது. அது எதுவும் புரியாத லாவகம். அந்த ஒரு லாவகத்திற்குள் நாமும் மாட்டிக்கொள்ள ஏங்குவோம். மனிதர்களாக உருமாறத் தொடங்கிய பொழுது அனுபவிக்கும் துன்பங்களுக்குள், மீளப் பெறத் துடிக்கும் இன்பங்களுக்குள் இந்த இன்று நேற்று நாளை என்னும் லாவகம் கைக்கு எட்டாமல் போகும். அந்தப் பிரச்சனை குழந்தைகளுக்கு இல்லை.

"மதிக்குட்டி 

எப்போ வந்தீங்க 

என்ற கேள்விக்கு 

நாளைக்குத்தான் வந்தேன் என்ற

உன் பதிலில் 

எதிர்காலம் திகைத்து 

இறந்த காலம் அதிர்ந்து 

நிகழ்காலம் ஸ்தம்பித்தது. 

ஒரு வாக்கியத்தில் 

காலத்தை மாற்றி வைக்கும் சக்தி உன்னிடம் தான் இருந்தது மகளே"

என்ற கவிதையில் காலத்தை ஸ்தம்பிக்க வைக்கக்கூடிய வல்லமை வாய்ந்தவளாக குழந்தைதான் இருக்கிறாள் என்பது புலனாகிறது. 


பல நேரங்களில் குழந்தை தான் நம்மை பாதுகாப்பாக வைத்திருப்பதாக எண்ணுவோம். அதற்கு நாம் ராசி என்ற பெயர் சூட்டிக் கொள்வோம். குழந்தையின் அன்பிற்குள் நாம் வாழ்வதன் பொருள் அதுவாகத்தான் இருக்கும். அதை 

"பாதுகாப்பாய் 

வைத்துக் கொள் 

என்னை. 

சுட்டு விரலை 

இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் 

உன் பிஞ்சு விரல்களுக்குள்"

என்ற வரிகளில் நுட்பமாய் சொல்லிச் விடுகிறார் கவிஞர். 

யார் சுட்டுவிரலை யார் பற்றி இருப்பது என்பதை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்க்கும் பொழுது அன்பின் நிமித்தமாய் குழந்தையின் இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் பிஞ்சு விரல்களால் பாதுகாப்பாக என்னை வைத்துக் கொள் என்பதாக இருக்கிறது. வித்தியாசமான கோணம்.


கவிஞரின் நாத்திகப் பார்வை குழந்தைக் கவிதையையும் விட்டு வைக்கவில்லை. அது இன்னும் குழந்தைக்குள் சென்று சேரவில்லை என்பது மகிழ்வா துயரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

"ஏதும் அறியாத குழந்தை 

தூக்கத்தில் சிரிக்கையில் 

கடவுள் கிச்சுகிச்சு மூட்டுகிறார்

என்கிறார்கள்.

அழுகையில் 

கிள்ளி வைக்கிறார் 

என்கிறார்கள். 

அவன் 

ஒரு விளையாட்டுக்காரப்பயல்.

தூங்குகையில் மட்டும் வந்து

போய்விடுகிறான். 

விழித்த பின்னும் சரி 

வளர்ந்த பின்னும் சரி

எங்கே தொலைந்து போகிறான்"

இந்த கவிதையைப் படிக்கும் பொழுது, குழந்தை முழித்திருக்கும் பொழுது கடவுள் எங்கே செல்கிறான்? என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வந்து போகும். கிச்சுகிச்சு மூட்டுவதும் கிள்ளி வைப்பதும் கடவுள் செயல் அல்ல. அது ஒரு இயல்பான செயல். குழந்தை காணும் கனவு என்று புரிந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார் கவிஞர்.


என்னுரையில் உள்ள கவிஞரின் ஏக்கத்தைத் தணிக்க ஒரு கவிதை...

தொகுப்பில் உள்ள கவிஞரின் கவிதைதான்.

"உன் அண்ணன் தான் 

நான் பெத்த புள்ள 

நீயி என் புள்ள இல்ல 

போ.


போம்மா 

நானு அப்பா புள்ள

ஏம்ப்பா நீதானப்பா என்ன பெத்த"


கவிதைத் தொகுப்பெங்கும் மதிக்குட்டியின் தொகுப்பாக இருக்கிறது. ஆங்காங்கே உள்ள Poondi Jeyaraj திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் தோழரின் ஓவியம் மதிக்குட்டியைக் காணும் அழகு. வெற்றிமொழி வெளியீட்டகம் சார்பில் நல்ல கட்டமைப்பு.


பயணம் தொடர்க. வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


💝

Friday, 23 January 2026

சபலப் பயணி


ஆண்டிபட்டியில் ஒரு மணி நேரமாக காத்துக் கொண்டிருந்தாள் ராணி. திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள சென்று திரும்பி இருந்தாள். இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்தவள் என்று அவளை கூறவே முடியாது. கூடவே மணப்பெண் தோழி என்று கூறுவதை விட மணப்பெண் போலவே காட்சியளித்தாள் அவள். பேருந்து நிலையத்தில் பல கண்கள் அவளையே நோட்டமிட்டுக் கொண்டு இருந்தன. ஆனாலும் பேருந்துதான் வந்தபாட்டைக் காணோம். ஏதாவது பக்கத்து ஊரில் திருவிழா என்றால் பேருந்து விடமாட்டார்கள். ஏதாவது பஸ்ல ரிப்பேர் என்றால் பேருந்து விடமாட்டார்கள். ஏதாவது கட்சி மாநாடு என்றால் பேருந்து விடமாட்டார்கள். ராணி பொறுமையை இழந்து விட்டாள். அதன்பின் சும்மா இருக்கவேமாட்டாள். வாயில் வந்ததெல்லாம் சொல்லித் திட்டுவாள். 

"சனியன் புடிச்சவய்ங்க பஸ் நேரத்துக்கு வந்தே தொலையாது" 

"வெளங்காம போறவய்ங்க" 

"நாசமா போறவய்ங்க"

"எங்க போய் தொலைஞ்சாய்ங்களோ"

என்று கங்கு கணக்கில்லாமல் வார்த்தைகள் வந்து விழுந்து கொண்டிருந்தன. அந்த நேரம் பேருந்து நிறுத்தத்தில் "என்ன மதினி போகலாமா?" என்று குரல் கேட்க, குரல் வந்த திசையில் திரும்பினால்

"என்ன பூமி, என்ன இந்த பக்கம்? வரவா நான்?" என்று கேட்டுக்கொண்டே பைக்கில் ஏறி உட்கார்ந்தாள் ராணி.

"அணைக்கரப்பட்டிக்கு ஒரு விசேஷத்துக்கு வந்தேன். இந்த பக்கம் வந்தோம்னா ஒரு பஸ் கூட கிடைக்க மாட்டேங்குது. நீ என்னா இந்த பக்கம்?" என்று அவள் கேட்க,


"டாஸ்மாக் கடையில் இன்னைக்கு நான் லீவு போட்டு பிள்ளையார் சத்திரம் போயிட்டு திரும்புகிறேன்" என்று அவன் கூறினான்


பைக் போய்க்கொண்டு இருந்தது. அவளுக்கு தன்னுடைய கணவனின் ஞாபகம் வந்தது. ஒழுங்கா அடங்கி ஒடுங்கி வேலை வெட்டிக்குப் போயிட்டு வீட்டுல இருந்தா இன்னைக்கு நான் இரண்டு பிள்ளைகளோட நல்லா இருந்திருப்பேன். வீட்டில் பொண்டாட்டி குத்துக்கல் கணக்கா இருக்கிறா, இந்த லட்சணத்தில் இன்னொருத்திய பாத்துகிட்டு திரிஞ்சா எப்படி இருக்கும்? 


மனசு கேட்காம, "நீ போ சாமி, போ. இந்த ஊர்ல இருக்க வேணாம். போ. நான் வந்து உன்ன பாத்துக்குறேன். அந்த ஊர்ல நீ நல்ல வேலை செஞ்சு, உன் அளவுக்கு சம்பாதிச்சு இருந்துக்க. அது கூடப் போதும்" என்று அவள் தன்னுடைய கணவனிடம் கடைசியாகச் சொன்னதை மனதில் நினைத்துக் கொண்டே வந்தாள்.


மெல்ல தலைமுடி பறக்க, காற்று மோதும் திசையில் தலையை பைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டே வந்தாள். பூமி பைக்கின் முன்புறம் பார்த்து ஓட்ட, இவளும் அவன் பின்னால் இருந்து முன் பாதையை பார்த்தபடியே பயணம் செய்தாள். ஆனால் பூமியின் பயணம் நேராக இருந்தாலும் அடிக்கடி கண்ணாடியில் ராணியை பார்ப்பதும் பார்க்காத விதமாகத் தொடர்ந்து வந்தான். இவளுக்கு "ஏன் இவன் இப்படி பார்க்கிறான்? என்ற ஒரு எண்ணம். "என்ன பூமி, என்னைக்கும் பார்க்காத உலகத்த பாக்குற. பாதையை பார்த்து ஓட்டு. கீழே விழுந்து பல்லக் காமிச்சிராத" என்று முகத்தை கடிந்து வைத்துக் கொண்டு முன்புறம் பார்த்தவள் உட்கார்ந்த திசையிலேயே பார்வையை திருப்பிக் கொண்டாள்.


மீண்டும் ஓர் எண்ணம், தன் கணவன் கூட இருந்தால் இதுயெல்லாம் நடக்குமா. கூனோ, குருடோ வீட்டுல அவன் இருந்திருந்தால் யாரு சாவுகாசமும் இல்லாமல் இருந்திருப்பேன். சொந்தக்காரனாய் இருந்தாலும் இப்படி எவனோ ஒருவனுடன் பைக்ல வரும் சூழல் வந்திருக்குமா? கண்கள் ஓரத்தில் மெல்ல ஒரு துளி கண்ணீர் வந்தது.


சற்று பைக் இடது புறமாக திரும்பி உள்ளே செல்ல தொடங்கியது. "என்ன வண்டி இந்த பக்கம் போகுது?" என்ற உடன் பூமி "ஒரு சின்ன வேலை பார்த்துட்டு போவோம்" என்றான். "என்ன சின்ன வேலை? வண்டியை வீட்டுக்கு விடு. வேலை கெடக்கு. பிள்ளைக வந்து இருக்கும்" என்றாள் ராணி. "மதினி, ரொம்ப நாள் எனக்கு ஒரு ஆசை. உன்னோட நான் வாழனும். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. நீ சரின்னு சொன்னேன்டா பயணியர் மாளிகையில போயி தங்கிட்டு நைட்டு நம்ம வீட்டுக்கு கிளம்பிப் போய்விடலாம். ஒன்னும் பயக்க வேணாம். அங்க இருக்கவங்க எல்லாம் எனக்கு தெரிஞ்சவங்க தான். அங்க ஒரு முறை மட்டும் வா. என்ன சொல்ற? உன்னிடம் நான் கேட்கிறதை விட, நீ வருவ என்ற நம்பிக்கை இருக்கு. இப்ப நாம அங்க தான் போறோம்" என்று கூறிக் கொண்டே பைக்கை வேகமாக ஓட்டினான்.


அவள் கோபத்தின் உச்சிக்குச் சென்று, "இப்ப பைக்க நிறுத்த முடியுமா? முடியாதா?" என்றவுடன் அவன் வண்டியை நிறுத்தினான். பின்னால் திரும்பி பார்த்தான். "ப்ளீஸ், ஒரு தடவை. என்ன ராணி இப்படி பண்ற. எனக்கு உன் மேல எவ்வளவு ஆசை இருக்கு தெரியுமா? நீயும் எத்தனை காலத்துக்கு இப்படியே இருப்ப?" என்று அவன் கெஞ்சும் தொனியில் கேட்டவுடன் பைக்கில் இருந்து இறங்கினாள்.


"யாருன்னு நெனச்சு இப்படி பேசிகிட்டு இருக்க. நீ நினைக்கிற ஆள் கிடையாது. நானும் அந்த கிராமத்தில் தான் இருக்கிறேன். இதை நான் வெளியில் சொன்னாலும் என்னதான் கேவலமா நினைப்பாங்க. உன்னை மாதிரி பலர நான் கடந்து வந்துட்டேன். தங்கம் மாதிரி ரெண்டு புள்ளைங்க இருக்குடா எனக்கு. இப்படியே நீ போயிரு. நான் ஒரு ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு போயிடுவேன்" என்று பின்னால் திரும்பாமல் வேகம் வேகமாக நடந்து செல்ல தொடங்கினாள் ராணி.

Sunday, 18 January 2026

மனசைக் கீறி முளைத்தாய் #மு.முருகேஷ்


மனசைக் கீறி முளைத்தாய்...

கவிஞர் முருகேஷ் மு


வெளிச்சம் வெளியீடு


ஒரு காதல் கதையும்

பல காதல் கவிதைகளும்...


காதலைச் சொல்ல ஓர் ஆகச் சிறந்த வழி கவிதை. காதல் கதை சொல்லவும் அவ்வழியே பொருத்தம் என நினைத்து நீள் கவிதை வாயிலாக நண்பரின் காதலை கூறியிருக்கிறார் கவிஞர். பார்க்காமல் உயிரெங்கும் பரவிய காதல், சொல்லாமல் கொள்ளாமல் பிரிந்து சென்றால் அதன் வலி எப்படியிருக்கும் என்பதை வலிச் சொற்களால் பதிவு செய்திருக்கிறார். தவறும் சந்திப்புகள், குறும்புகள், கனவுகள் என நடைபோடுகிறது காதல். இடையிடையே கவிதைகளும்.


மெதுவாக நட

உன் பாதங்களுக்குக் கீழ்

என் இதயம் - எனும்போது

தானாகவே நம் கண்களும் 

பூமி பார்த்துச் செல்கிறது.


வேதத்தை காதலாக்கியிருக்கிறார் கவிஞர். வேதம் என்பதும் அன்பைப் போதிப்பது தானே.


காதலைச் செய்

பலனை எதிர்பாராதே.


ஒரு கன்னத்தில்

முத்தமிட்டால்

மறு கன்னத்தையும் காட்டு


உனக்கு முன்னால்

என் காதல் செல்லும்


எம்மதமும்

சம்மதம் தான்

காதலுக்கு...

என காதலைப் பொதுமைப்படுத்தியிருக்கிறார் கவிஞர்.


அரசுப் பேருந்து, தனியார்ப் பேருந்தும் கவிதைத் தேராகிவிடுகிறது காதலில்.

அரசுப் பேருந்தைப் போல்

காலியாக இருந்த

என் மனசை

ஒரு நொடிக்குள்

தனியார்ப் பேருந்தைப் போல்

நிறைத்துக்கொண்டு

சென்றவள் நீ

என்கிறார்.


காதல் ஆத்திச் சூடி

அருமையான வார்ப்பு.


அன்பே உயிர்

ஆசை விதையிடு

இதயம் கண்டுணர்

ஈரம் கசி

உள்ளம் உணர்

ஊசி நூலாகுக

எண்ணுக புதுமை

ஏறெடுத்து முகம் காண்

ஐயம் விலக்கு

ஒழிக சாதி

ஓருயிராகுக

ஒளவியம் களை.


ஒழிக சாதி என்பதில் முற்போக்கும் காதலுக்கான தடை சாதி... அது ஒழியவேண்டும் என்பதும் வெளிப்படை. நீளும் ஆத்திச் சூடி இன்னும் சிறப்பு.


வாழ்த்துகள் தோழர்.